பார்பரா குரூக்கர் கவிதைகள்

1. இயல்பு வாழ்க்கை

அந்நாளில் எதுவுமே நடக்கவில்லை

பள்ளிக்குச் சென்ற பிள்ளைகளின்

புத்தகங்களும் கையுறைகளும்

நண்பகலுணவும் நினைவினில்.

காலையில் தரையின்

ஒளிக்கட்டங்களில்

அடுக்கும் விளையாட்டினை

ஆடினோம் குழந்தையும் நானும்.

குட்டித்தூக்கம் நண்பகலுணவோடு

ஒட்டிக்கொண்டு வந்தது.

சமையலறை நிலைப்பேழையைத்

தூய்மையாக்கினேன்.

ஒருபோதும் முடிக்கவே

முடியாத வேலை அது.

சூரியவொளியின் வட்டத்தில்

அமர்ந்து இஞ்சித்தேநீர்

குடித்தேன்.

சிதறிக்கிடந்த உணவுத்

துணுக்களுக்காக அங்கே

பறவைகள் முண்டியடித்துக்

கொண்டிருந்தன.

முள்ளம்பன்றியின் மேலிருந்து

தன் அழகிய  மணிக்கொண்டையை

நீட்டிக்கொண்டிருந்தது ஒரு பறவை.

வாணலியில் வறுபடுகின்றது

ஒரு கோழி .

குழந்தைகள் வந்துவிட்டனர்.

அவர்களின் கதைமொழியின்

முணுமுணுப்பு காற்றில் மிதக்கிறது.

கட்டைவிரலைச் சீவாமல்

கேரட்டையும்

உருளைக்கிழங்கையும்

தோல்சீவிவிட்டேன்.

உங்கள் மகிழுந்தின்

உருளிவார்களின் ஓசையினை

ஒன்றாக நாங்கள் கேட்கிறோம்.

அப்பத்திற்கு முன் அருள்.

உணவுக்கான நிலைப்பலகையில்

உரையாடல்களில் உண்மை இருந்தது.

குத்தல் பேச்சுகளும்

பிணக்குகளும் இல்லை.

அங்கிருந்தே பிள்ளைகளின்

வீட்டுப்பாடத்திற்குள்

சறுக்கி விழுகின்றோம்.

மெதுநாற்காலியின்

ஓரங்களிலும் மேடுகளிலும்

பொம்மை மகிழுந்தினை

உருட்டி விளையாடுகின்றது

குழந்தை.

வரவேற்பு மேடையில்

சாய்ந்துகொண்டே நாம்

நீண்டதொரு முத்தத்தைத்

திருடுகின்றோம்.

பாலாடையும் குளம்பியும்

சுவைக்கின்றோம்.

வறுத்தகோழி இப்போது

எலும்பும்தோலுமாய்

ஆகியிருந்தது.

வெண்ணிறக் காற்புள்ளியாய்

இருந்தது நிலா.

இதெல்லாம் கொடுங்குளிரின்

ஒருநாளாக அருளப்பட்டிருந்தது. 

ஆண்டின் கடுங்குளிர்

மூட்டுகள் அந்நாளில்

தம்மைத்தாமே

அவிழ்த்துக்கொண்டன

எதிர்பாராத பரிசொன்றை

அவிழ்ப்பதைப்போல.

உடுக்கள் ஒளிரத்தொடங்கின.

தமக்காக அக்குளிர்கால இரவில்

பணித்துக்கொண்டன.

2. பறவைக்காரனின் வாழ்க்கைப்பட்டியல்.

கடந்த இலையுதிர்க்காலத்தில்

பருந்துமலையின் பாறைகளில்

மணிக்கணக்கில் அமர்ந்திருந்தோம்

கரும்பாறைக் குன்றுகளிலிருந்து

மேலெழும்பும்  குறும்பருந்துக்

கூட்டத்தின் அகன்றுவிரிந்த

இறக்கைகளைப் பார்ப்பதற்காக. 

ஆக்சிபிட்டர்ஸ் புட்டியோஸ்

இராப்டர்ஸ் எனப் பருந்துகளை

இனம் பார்த்து அறிந்தோம்.

கைகளைத் தொடுவதே

இறக்கையின் தொடுதலாய்

உணர்ந்தோம்.

நீயும் சென்றுவிட்டாய்.

இதயம் இடம் பெயர்ந்தது.

அனைத்து உள்ளுணர்வுகளுக்கும்

எதிராக நான்குவழிச்சாலையில்

வடக்குநோக்கி வண்டியை ஓட்டினேன்.

இதோ இங்கே

இந்த இறக்கும் ஆண்டில்

இழப்புகளை அளப்பதற்காய்

நான் விடப்பட்டிருக்கின்றேன்.

இழப்பின் வலியுறுத்தல் அது.

தொலைவிலிருந்து நான்

பார்த்துக் கொண்டிருக்கிறேன்

பருந்துகளுக்காக.

3. புயலுக்குப்பின்

வானத்தை அலசி நீரைப்போலத்

தூய்மையாக்குகிறது காற்று.

இத்தூய புத்தொளியில்

சோளம் மெருகேற்றப்படுகிறது.

சீனப்பச்சைக்கற்கள் (ஜேட்)

செதுக்கப்படுகின்றன

பெரில் இலைகளின்

நீலப்பச்சை நிறமி

கோதுமை வயல்களின்

பொன்னிறம்

அடிக்கப்பட்ட தாதுக்களின்

கோடுகள்

கோடையின் விளிம்பில் நாங்கள்

பெரிய கண்ணாடிக்கண்ணின்

கீழ் நிற்கின்றோம்.

எங்கள் காலடியின்கீழ்

குளிர்காலத்தின் எலும்புகள்.

மீண்டும் கழுவப்படுகின்றன

இந்த ஓங்கியொலிக்கும்

பேரொளியில்.

4. புகழ் பாடல்

நவம்பரில் பிற்பகுதியில்

வரும் ஒளியினைப்

போற்றுங்கள்.

அம்மெல்லிய கதிரொளி

எலும்புகளுக்குள்

ஆழமாக ஊடுருவும்.

ஓக் மரங்களில்

கரைகின்ற காக்கைகளைப்

போற்றுங்கள்.

அவர்கள் இரவினில்

ஆடை அணிந்திருந்தாலும்

ஒருபோதும் மனப்பிறழ்வு

நிலையை அடைவதில்லை.

அங்கே எஞ்சியிருக்கும்

சிலவற்றைப் போற்றுங்கள்

எருக்கம்பூக்கள் உமி

காய்கனிகளின் ஓடுகள்

மரங்களின் தோற்றக்

கட்டமைப்பு

உலர்ந்த களைகளின்

புல்வெளி இவற்றைப்

போற்றுங்கள்.

வெண்ணிற பொன்னிற

மஞ்சரிப்பூக்கள் காசினி

கோடையின் எச்சங்கள்.

இன்னும் விரிசல்விழாத

நீலவானத்தைப் போற்றுங்கள்.

புங்கங்கொட்டைகளின் பின்னால்

நழுவிச்செல்கின்ற

சூரியவொளியைப் போற்றுங்கள்.

புற்களின்மேல் படர்ந்திருக்கும்

இலைகளின் போர்வையைப்

போற்றுங்கள்.

கருஞ்சிவப்பு ஓக் மரம்

இனிப்புப்பிசின் மரம்

சீனப்பனை மரம்

என்னதான் இருள் கூடினாலும்

பித்துநிலைகொண்ட எம்

உலகத்தைப் போற்றுங்கள்

இதுவே எங்களிடம் உள்ளது

அது ஒருபோதும்

போதாது எமக்கு.           

5. துக்கம்

உள்நுழைந்து மறுகரை

நீங்கள் ஏறும்வரையிலும்

ஓடிக்கொண்டிருக்கும்

நதி அது.

ஆனால் நான் இங்கே

நடுவில் மாட்டிக்கொண்டேன்

என் கால்களைச்சுற்றிச் சென்று

தட்டையான பாறைகளின்மேல்

கீழ்நோக்கிப்பாய்கின்றது நீர்.

என் கால்களைத் தூக்கவோ

நகர்த்தவோ இயலவில்லை.

மேலோட்டமான எனது

துக்கத்தோடு நான்

இங்கேயே இருக்கப்போகிறேன்.

வெறிகொண்ட குழந்தையைப்போல

அதை வளர்த்து கைகளிலிட்டு

ஆட்டுவேன்

அது வளர்வதை

பள்ளிக்குச் செல்வதை

திருமணம் புரிவதை

நான் விரும்பவில்லை.

அது எனக்கானது மட்டுமே.

ஆம்.

அக்டோபரின் சூரியவொளி

அதன் மஞ்சள்நிறத்தால்

என்னைப் போர்த்துகிறது

பொன்னிற முந்திரிச்சாற்றினைப்போல

காற்று இனிக்கிறது

 அரத்திப்பழங்களும்

முந்திரிப்பழங்களும்

வாதுமைக்கொட்டைகளும் 

மறுபக்கம் உள்ளன

சூரியனால் பாறைகள்

வெம்மையாய் இருக்கின்றன.

நான் இங்குதான்

இருக்கப்போகின்றேன்

வளரும் குளிரினால்

தோலின் ஒவ்வோர்

அங்குலமும் மரத்துப்போகின்றது

என்னால் கடக்கவியலாது.

பிறகு நீங்கள் மெய்யாகவே

போய்விடுவீர்கள்.

6.  வாக்குறுதி

இந்தநாள் ஒரு திறந்த

பாதையாக நீள்கிறது

உங்கள்முன்.

சாளரங்களை உருட்டுங்கள்.

விரைவாய்ச்செல்லும்

மகிழுந்தினைப்போன்ற

வாழ்க்கையில் நீங்கள்

காலடியெடுத்து வையுங்கள்.

தொழிற்பூங்காக்களில்கூட

மரங்கள் வெண்ணிறப்பூக்களால்

மூடப்பட்டிருக்கும்

மணமக்களைப்போலப்

பண்டிகைகள்.

நன்கு துவைத்த

சட்டை உங்கள் கைகளில்

தழுவுவதைப்போல

காற்று மென்மையாயிருக்கும்.

நம்பவேமுடியாத அளவு

புல் பச்சையாய்

மாறிவிட்டது

நாளை மீண்டும்

உலகம் தொடங்கும்

மீண்டுமொரு

புதிய தொடக்கம்.

நீலவானமானது

நீள்கிறது தனது

ஒளிக்கூடாரத்தை

அசைக்கின்றது

மினுக்கும் மஞ்சள் பூக்களால்

புல்வெளியில் கையளவு

பொன்னிற மாற்றம்.

பார்பரா குரூக்கர்  பென்சில்வேனியாவின் போகெல்ஸ்வில்லியைச் சேர்ந்த ஒரு கவிஞர், நியூயார்க்கில் 1945 இல் பார்பரா  பிறந்தார்.  குழந்தைப் பருவத்திலேயே, பார்பரா ஓர் ஆர்வமுள்ள நூல் சுவைஞராகவும்  குறிப்பேடுகளில் கதைகளை எழுதுவதையும் விளக்குவதையும் விரும்பினார். உயர்நிலைப் பள்ளியில், அவர் தனது பள்ளிச் செய்தித்தாளின் எழுத்தாளராகவும் ஆசிரியராகவும் இருந்தார்.  ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 1970களில்  அவர் கவிதைகள் எழுதத் தொடங்கினார். பார்பரா முதலில் கவிஞர் டயான் வகோஸ்கி கவிதைகளால்  ஈர்க்கப்பட்டார்.வட பென்சில்வேனியாவில் உள்ள மான்ஸ்ஃபீல்ட் பல்கலைக்கழகம் (முன்னர் மான்ஸ்ஃபீல்ட் மாநிலக் கல்லூரி) வெளியிட்ட தி ஈகிளில் வகோஸ்கியின் கவிதைகளைப் பார்பரா கண்டுபிடித்தார். 

வகோஸ்கியின் கவிதைகள் அவரது தொடக்ககால படைப்புகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறும் பார்பரா – குடும்பம், பிறப்பு,காதல் மற்றும் இழப்பு பற்றி எழுதியிருக்கிறார். மொத்தமாக எட்டுநூல்களை இவர் எழுதியிருக்கிறார். ஓர் எழுத்தாளராக இருப்பது வாழ்க்கைப் பயணத்தை மகிழ்வாக்குகிறது என்று சொன்ன பார்பரா ஏறத்தாழ 600 கவிதைகள் எழுதியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.