அப்பா கோழி

‘பாழாப் போன இந்த நாள் ஏன்தான் வந்து தொலைக்குதோ?’ சுகந்தியின் மனம் வெறுப்பின் ஆக்கிரமிப்பில் இருந்தது. ஆதவனுக்கு ‘வாட்சப்பில்’ அனுப்பிய குறுஞ்செய்திகள் அனைத்தும் ஒற்றை ‘டிக்கிலேயே’ நின்றிருந்தன. கைப்பேசியிலிருந்து சத்தம் வரும்போதெல்லாம் மகனிடமிருந்துதானோ எனப் பதைபதைப்புடன் எடுத்துப் பார்த்தாள். அவனை வெளியில் போகவிடக் கூடாது என்ற முடிவுடன்தான் வேலைக்கு விடுப்பு எடுத்திருந்தாள். ‘சொன்னா மட்டும் கேட்டுடவா போறான்?’ என்ற எண்ணமும் ஒரு பக்கம் இருந்ததுதான்.

‘ஓ லெவல்’ தேர்வை முடித்ததிலிருந்தே மிகவும் தாமதமாகப் படுக்கையைவிட்டு எழுபவன், அன்று சீக்கிரமாக எழுந்து வந்தான். ‘வேலைக்குப் போகலியா?’ கேள்வி பார்வையில் இருந்தது.

“இந்த டிசம்பருக்குள்ள கிளியர் பண்ண வேண்டிய லீவு நிறைய இருக்குல்ல,  அதான் லீவு போட்டுட்டேன். நீயும் சும்மாதான் இருக்கே. எங்கேயாவது வாரம், பத்து நாள்னு போயிட்டு வரலாம்னா கேக்கவும் மாட்டேங்கிற?”

தன்னிடம் அவள் பேசவில்லை என்பதைப்போல அடுப்பங்கரை மேடைமேலிருந்த ரொட்டியையும் ‘நட்டுலாவையும்’ எடுத்துக்கொண்டு அறைக்குச் செல்பவனை வேதனையோடு பார்த்தாள். வேலை முடிந்து வருகிறவளுக்காகக் காத்திருந்து ஓயாமல் கதை பேசுபவனுக்காக மனம் ஏங்கியது. அவனோ, தன் மனத்தைப்போலவே அறைக் கதவையும் மூடிக்கொண்டான்.

‘நாலு வருசத்துக்கு முன்னல்லாம், எப்ப பள்ளிக்கூட லீவு வரும், எங்கேயாவது போகலாம்னு துடிச்சவன்தான்’ நினைவு மேலிட நகர்ந்தாள். ‘எல்லாமே இப்படிக்கூட மாறுமா?’ கேள்வியும் அவளைத் தொடர்ந்தது.

அடுப்பங்கரைக்குள் நுழைந்துவிட்டாலே ஆரவாரமாகிற வானொலி ‘ஒலி 96.8’ அமைதி காத்தது. உலை கொதிப்பதையே பார்த்துக்கொண்டிருந்தவளை நோக்கிச் சன்னலில் அமர்ந்திருந்த மைனா ஒன்று குரல் கொடுத்தது. களைந்து வைத்திருந்த அரிசியை உலையில் போட்டாள். தண்ணீருக்குள் மூழ்கியிருந்த இறால் ஐஸின் பிடியிலிருந்து விலகவில்லை. அலசி வைத்திருந்த ‘கங்கோங்’ கீரையை எடுத்து வெட்டினாள். வேலைக்குப் போகிற நாட்களில் விரைவாக முடிந்துவிடுகிற சமையல், நேரத்தை விழுங்கிக்கொண்டிருந்தது.

மகன் விரும்பிச் சாப்பிடும் ‘ஊடான் சம்பாலையும்’ ‘பிளாச்சான் சாஸ்’ சேர்த்துச் செய்த ‘கங்கோங்’ கீரையையும் மேசையில் கொண்டுவந்து வைத்துவிட்டு அறைக் கதவைத் தட்டியபோதுதான் அவன் வீட்டில் இல்லாததே தெரிந்தது.

‘எப்ப போனான்? எங்க போனான்? இவன்கூடவே இருக்கணும்னு லீவு போட்டேன். ஏதாவது ஏடாகூடமாப் பண்ணிடுவானோ?’ இனம்புரியா அச்சம் ஆட்கொண்டது.  

துணிமணிகள் புத்தகங்களென அறையெங்கும் பொருட்கள் இரைந்து கிடந்தன. ஒருவிதமான வாடை முகத்தைச் சுளிக்க வைத்தது. திரைச்சீலைகளை விலக்கி சன்னல்களைத் திறந்துவிட்டுக் காற்றாடியைச் சுழலவிட்டாள். பிளாஸ்டிக் குவளையில் மீந்திருந்த சுவைபானத்திலிருந்துதான் வாடை வந்தது. ‘இதைக்கூட எடுத்து வீசாமலிருக்கிறானே’ என்ற எண்ணத்துடன் எடுத்தாள்.

“என் ரூம்ல எதையும் தொடாதீங்கன்னு சொன்னா புரியாதா?” கர்ஜனை மண்டையில் அடிப்பதுபோல நினைவுக்கு வந்தது. பார்வையைச் சன்னலுக்கு வெளியே அனுப்பினாள். கருமை படிந்திருந்த வானத்தில் மின்னல் கோலமிட, இடி பூமிக்கு வந்துவிடுவேன் என மிரட்டியது.

‘இவனது அப்பா பிரிந்து சென்ற நாளன்றும் வானம் இப்படித்தானே இருந்தது!’ எண்ணம் மின்னல் கீற்றாய் மனத்தில் வெட்டியது. ‘ஆதவா… நீயும் ஏன்டா இப்படிச் சோதிக்கிறே?’ அச்சத்தில் இதயம் தடதடக்க கைபேசியில் மகனை அழைத்துப் பார்த்தாள். பதிலில்லை.

போன வருடம், இதே நாளில் நடந்த சம்பவத்தை மறக்க முடியுமா? சாப்பாட்டுக் கடையில் ஒருவர் தவறுதலாக ஆதவனின் சட்டையில் உணவைச் சிந்திவிட்டார். உடனே அவர் மன்னிப்புக் கேட்டும் அவன் விடுவதாயில்லை.

சட்டென நடந்த சம்பவத்தைக் கிரகித்துக்கொள்ள அவளுக்குச் சில நிமிடங்கள் பிடித்தன. அவரிடம் வருத்தம் தெரிவித்து அவனை அங்கிருந்து அழைத்து வருவதற்குள் போதும் போதுமென்றானது.

“எதுக்கு அவங்கிட்டல்லாம் மன்னிப்புக் கேக்கணும்? ஓடிப் போனானே… அந்தாள் வயசுதான இவனுக்கு இருக்கும்? அப்படியே கழுத்தை நெரிச்சிக் கொன்னிருக்கணும்!”

பொது இடம் என்ற எண்ணம்கூட இல்லாமல் கையை ஓங்கிவிட்டாள். “விட்டுட்டுப் போனவனைக் கேக்க துப்பில்ல… என்ன அடிக்க வர்றியா?” உறுமினான்.

‘தன் மகனா இப்படிப் பேசுறான்?’

அப்படியே அவனைப் பார்த்துக்கொண்டு நின்றாள்.

‘இன்னிக்கு என்னாகுமோ? ஆதவா… வந்துடுப்பா…!’

‘தந்தை பிரிந்து சென்ற நாளில் அவரைப் பழி வாங்குவதாய் நினைத்து யாரோ ஒருவரை ஒரு பதின்ம வயது பையன் கொன்ற செய்தி ஏன்தான் என் கண்ணில் பட்டதோ? சே… இந்தக் கெட்ட செய்திங்க மட்டும் மனசுல அட்டையைப்போல ஒட்டிக்குதே!’

‘நானே நடந்தவற்றைப் பிள்ளையிடம் சொல்லியிருந்தால் இவ்வளவு பெரிய காயமாகி இருக்காதே!’

“ம்மா… நான்தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட் தெரியுமா?” தொடக்கநிலை ஐந்தின் முடிவுகள் வந்தபோது ஆர்ப்பாட்டத்துடன் வந்த மகன் மனத்தில் வந்து நின்றான்.

‘ம்… பள்ளியிலேயே முதலிடத்தில் வந்தவன் அடுத்தாண்டே எல்லாவற்றையும் கோட்டைவிட்டானே…!’

தொடக்கநிலை ஆறை முடித்த பிறகு, எல்லாவற்றையும் பக்குவமாய் எடுத்துச் சொல்லிக்கொள்ளலாம் என்றிருந்ததை உறவுக்காரர் ஒருவர் துவம்சமாக்கினார். தொடக்கநிலை இறுதியாண்டுத் தேர்வில் அவன் எடுத்திருந்த மதிப்பெண்ணுக்கு, எதிர்பார்த்திருந்த உயர்நிலைப் பள்ளிப் பக்கம்கூடப் போக முடியாது. ‘அதையும் அவன் ஒரு பொருட்டா எடுத்துக்கலயே!’ நெஞ்சில் வலி பரவியது.

நாலு வருசம், உயர்நிலைப் பள்ளியை முடிப்பதற்குள் எத்தனை ஆசிரியர்களிடம் தலைகுனிந்து நின்றிருப்பாள்? வேலையிடத்தில் ‘சீனியர் மேனேஜர்’ பொறுப்பிலிருப்பவள் வீட்டில் மகனைக் கவனிக்க முடியாமல் போனதை நினைத்து நொந்தாள்.

“ஆதவனுக்கு அடிக்கடி ‘டிடென்ஷன்’ கொடுக்கிறாங்களாமே. இப்படிப்பட்ட பசங்கதான் பின்னாடி போதை, ‘கேங்’னு கிளம்பிடுவானுங்க. பணத்த எப்ப வேணா சம்பாதிச்சிக்கலாம். புள்ள வாழ்வு வருமா?” அவனது வகுப்புத் தோழனின் அம்மா போனடித்துக் கேட்டது நினைவுக்கு வந்தது.

‘என் மகனைப்பற்றி எனக்குத் தெரியாதா…?’ உள்ளுக்குள் தோன்றினாலும் அவரது அக்கறைக்கு நன்றி சொன்னாள். ‘இதற்கெல்லாம் காரணகர்த்தா எங்கோ இருக்கிறான்’ என்ற நினைப்பு வந்தவுடன் மனம் கசந்தது. சன்னலுக்கு அருகில் மாட்டியிருந்த நாட்காட்டியில் தாள்கள் படபடத்தன.

‘எங்கே இருக்கிறேன்னாவது சொல்லேண்டா’ தவிப்போடு போனை பார்த்தாள். ‘கூட்டாளிங்க யாருன்னு தெரிஞ்சாக்கூட விசாரிச்சுப் பார்க்கலாம்!’ தாங்கவியலாத வருத்தத்தில் தலை பாரமானது. ‘இந்த ஒற்றைத் தலைவலி வந்தால் உயிர எடுத்துடுமே!’ கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள். காரிடாரின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த செம்பருத்திச் செடிகளும் அவளைப்போலவே வாடியிருந்தன.

அடுப்பங்கரையில் வாளியிலிருந்த அரிசி, காய்கறிகள் கழுவிய தண்ணீரைக் கலக்கிவிட்டு எடுத்துச் சென்று ஊற்றினாள்.

ல்யாணமான புதிதில் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கக் கணவனுடன் போனபோது பூந்தொட்டிகளைத்தான் முதலில் வாங்கினாள். “வீட்டுக்கு முதல்ல உயிர் கொடுக்கணும்” என்று சொன்னவளை வித்தியாசமாகப் பார்த்தான். அன்று மல்லிகை, ரோஜாச் செடியுடன் ஒரு கறிவேப்பிலைச் செடியும் வீட்டுக்கு வந்தன. வாங்கி வந்திருந்த மண்ணைத் தொட்டி ஒன்றில் கொட்டி, கொத்தமல்லி விதைகளைத் தூவிக்கொண்டிருந்தபோது கடுகடுத்த முகத்துடன் கணவன் எதிரில் வந்து நின்றான். “இந்த ‘வீக்கென்ட்ல’ வீட்டு வேலைங்கள முடிச்சிடணும்னு பார்த்தா வெட்டி வேலய செஞ்சிட்டிருக்கே?” சொற்கள் காரிடாரில் சிதறின.

“ஏன் இப்படிச் சத்தம் போடுறீங்க?”

“செடி வச்சா கொசு வரும். அப்புறம் அதுக்கு வேற தண்டம் கட்ட வேண்டி வரும். இதெல்லாம் தேவையா?”

“நல்லா பராமரிச்சா அதெல்லாம் ஒண்ணும் வராதுங்க. எதுக்கு இதுக்குப் போய் இவ்ளோ கோபப்படறீங்கன்னுதான் புரியல…”

“ஒரு புண்ணியமும் இல்லாத இதுக்குக் கைக்காச செலவு பண்றதுமில்லாம நேரத்தையும் உழைப்பையும் வேற போடணுமா?”

‘ஐந்தாண்டுகள் காதலித்தபோது இவை எப்படிக் கண்ணுக்கே வராமல் போயின?’ மனத்தில் வெறுப்பு வேர்விடத் தொடங்கியது.

சில மாதங்களுக்குப் பிறகு அளவிலா மகிழ்ச்சியில் அவள் திளைத்திருந்த அன்று….

“இது வேணாம்!”

“என்ன சொல்றீங்க?”

“இது வேணாம்!!” முன்பு சொன்னதையே அழுத்திச் சொன்னான்.

“ஏன் வேணாம்?”

“எனக்குன்னு ஆசை இருக்கு. ஆயிரம் கனவு இருக்கு. அதெல்லாம் புரிஞ்சுக்காம நீ சொல்றதைத்தான் நான் கேக்கணும்னு எதிர்பார்த்தா எப்படி?” அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கிறோம் என்ற எண்ணம் துளிகூட அவனிடம் இல்லை.

“எதுக்கு இப்படிக் கத்துறீங்க? அப்படியென்ன பெருசா நான் எதிர்பார்த்தேன்?”

“இதோ இப்ப அடம்பிடிக்கிறியே… இது பெருசில்லையா பின்ன?”

“வேணாம்னா நீங்க முன்னாடியே சொல்லியிருக்கணும்.”

“இப்ப மட்டும் என்ன கெட்டுப்போச்சி?”

“புரிஞ்சிதான் பேசுறீங்களா?”

“எல்லாம் புரிஞ்சதாலதான் சொல்றேன்.”

“நீங்க சொல்றத என்னால ஏத்துக்க முடியாது…!”

“அடுத்த மாசம்தான் ரெண்டு பேருக்கும் லீவு கிடைச்சதுன்னு ஹனிமூனுக்கு யூரோப் போகப் பிளான் பண்ணியிருக்கோம். இப்ப முடியுமா சொல்லு?”

“யூரோப் எங்கே போயிடப் போகுது? பிள்ளை கொஞ்சம் வளந்த பிறகு சேர்ந்து போயிட்டாப் போச்சி.” 

“அது ஹனிமூனா? சொல்லு… அது ஹனிமூனா?”

“எங்க, எப்ப போனாலும் நம்ம மனசு சந்தோசமாயிருந்தாதான் எதையும் அனுபவிக்க முடியும்கிறத புரிஞ்சிக்குங்க.”

“நீ முதல்ல புரிஞ்சிக்க. இப்பவே விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கு. அதனாலதான் வேணாம்னு சொல்றேன். எதுக்கு இப்படிப் பிடிவாதம் பண்றே?”

“இது பிடிவாதமா? என்னைப் பாத்துச் சொல்லுங்க?”

“எனக்கு உன் மூஞ்ச பாக்கவே புடிக்கல.”

இறகுகளைப்போலச் சொற்கள் பறந்தன. ஆனால் அவற்றின் பளு நினைத்துக்கூடப் பார்க்க முடியாததாக இருந்தது.  

‘அன்றோடு நிம்மதியையும் சேர்த்து எடுத்துச் சென்றுவிட்டானே!’

‘நான் சொல்ல சொல்ல கேக்காம இதான் பெருசுன்னு சொன்னாயே. உனக்கு நல்லா வேணும்…’ அவன் கைகொட்டிச் சிரிப்பதுபோலத் தோன்றியது.

“இருந்தாலும் ஒரு பொண்ணுக்கு இவ்ளோ ஆங்காரம் ஆவாது. அந்த மனுசன் என்ன புள்ளையே வேணாம்னா சொல்றார்? குடும்பம்னா கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும். நாமதான் அனுசரிச்சிப் போவணும். இதெல்லாம் ஒரு பெரிய விசயமா?” எனக் கேட்ட உறவினர்களது பேச்சால் அவளுக்கு அயர்ச்சி உண்டானது.

“நான் என்னவோ தப்பு செஞ்சிட்ட மாதிரி எனக்கு அட்வைஸ் பண்றீங்க? என்னோட குழந்தை. அம்மா நம்மள காப்பாத்துவான்னு எங்கிட்ட பத்திரமா இருக்கு. அதைப் போய் ஏமாத்தச் சொல்றீங்களா?” அவர்களது வாயை அடைத்தாள்.

மண வாழ்வின் தோல்வி மனத்தை அறுத்தாலும் மகனை எண்ணி மீண்டெழுந்தாள். கல்வியும் கடின உழைப்பும் கைகொடுத்தது. கரையேறிவிட்டதாய் நினைத்த வேளையில் மகனால் மீண்டும் மூழ்கும் நிலைக்கு ஆளானாள்.

தலைவலி அதிகரித்தது. வீட்டுக் கதவைத் திறந்து சில நிமிடங்கள் நின்றாள். எதிர்வீட்டு அங்க்கிள் கையில் குருவிக் கூண்டோடு வெளியே வந்தார். வீட்டுக்குள்ளிருந்து குருவிகளின் கீச்சொலியுடன் அவற்றுக்குப் பதில் சொல்வதைப்போலப் பேசும் ஆண்ட்டியின் குரலும் சேர்ந்து வந்தன. சிறு முறுவலை உதிர்த்தாள். “வெளியே போகணும்னு அடம் பிடிக்கிறாங்க” சொன்னவாறு கூண்டை அதற்கான கொக்கிகளில் மாட்டினார்.

‘இவங்களைப்போல குழந்தையே இல்லாம இருந்திருக்கலாமோ?’ மேலெழுந்த எண்ணத்தை அக்கணமே கடிந்து அகற்றினாள்.

‘அம்மா மனசு கோணக்கூடாதுன்னு நாலு வயசுலேயே பக்குவமா நடந்துகிட்ட புள்ளையாச்சே!’

ஆதவனது நான்காம் பிறந்தநாளன்று, ‘சுங்கை காடுட்’ வட்டாரத்திலுள்ள அரசகேசரி சிவன் கோயிலுக்கு அழைத்துச் சென்றிருந்தாள். அமைதியான வளாகத்தில் அமைந்துள்ள கோயிலும் அதைச் சுற்றியுள்ள ரம்மியமான சூழலும் அவளுக்கு மிகவும் பிடிக்கும். அன்றுதான் மகனை முதன் முதலில் அங்கு அழைத்துச் சென்றாள். அவன் அவளுடன் கோயிலுக்குள் போகாமல் வெளியே மேய்ந்துகொண்டிருந்த கோழிகளைப் பார்த்து நின்றுவிட்டான்.

“உள்ள வாப்பா….”

“ம்மா… பேபி கோழிக்கெல்லாம் அப்பா இருக்கு. பாருங்கம்மா…!”

ஏக்கத்தை நெஞ்சில் சுமப்பவனை நினைத்துத் துடித்துப் போனாள். “சாமி கும்பிட்டு வந்து பார்க்கலாம்பா” நான்கைந்து முறை அழைத்த பின் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே வந்தான். பிள்ளையாரைக் கும்பிட்டு வந்தபிறகும் அவனது பார்வை கோழிகளைத் தேடுவதிலேயே இருந்தது.

“என் செல்லக்குட்டிக்கு இருக்கிற மாதிரியே குட்டிப் பாதங்கள் இருக்கு… இங்க பாருங்க” மகனைத் தூக்கிக் கொடிமரத்தின் மேடையில் வெள்ளித் தட்டில் வைக்கப்பட்டிருந்த சிறிய பாத வடிவச் சிற்பத்தைக் காட்டினாள். வெள்ளிப் பாதங்களைச் சுற்றிச் செந்நிறச் செம்பருத்தி மலர்களும் அவற்றுக்கு நடுவில், வெள்ளை இதழும் சிவந்த காம்புகளுமுடைய பவளமல்லி மலர்களும் அலங்கரித்திருந்தன.

“பாருங்க… சாமி பாதம் ‘க்யூட்டா’ இருக்குதான…!” லேசாகத் தலையை உயர்த்தி ரகசியக் குரலில் மகனைப் பார்த்துக் கேட்டாள்.

“அப்பா கோழிய காணோம்மா….” சட்டென அவளது பிடியிலிருந்து இறங்கி வாசலை நோக்கி ஓடினான். சாமிக்குத் தீபாராதனை காட்டிக்கொண்டிருந்தபோது அவள் மகனைத் தேடும்படி ஆனது.

“ஹை… ம்மா…. அம்மா கோழி, பேபி கோழிங்ககூட அப்பா கோழியும் வந்துடிச்சி….” ஆர்ப்பாட்டத்துடன் கைகளைத் தட்டிக்கொண்டு குதித்தான். அருகிலிருந்தவர்கள் அவனது குதூகலத்தைக் கண்டு சிரித்தனர். மரத்துப் போன மனத்துடன் வீட்டுக்குத் திரும்பினாள்.

“ஆதவனுக்கு மட்டும் ஏம்மா அப்பா இல்ல?”

“செல்லமே…!”

“ம்மா… அழாதீங்கம்மா…!” பிஞ்சு விரல்களால் அவள் முகத்தைத் துடைத்துவிட்டான்.

“சாரிம்மா…” அதன் பிறகு அப்பா எனும் பேச்சே எடுக்காமல் இருந்தவன்தான்.

உறவுக்காரர் ஒருவர், அவள் மண வாழ்க்கையில் நடந்ததைப்பற்றி ஏடாகூடமாக ஏதோ சொல்லப் போக வந்தது வினை. ‘ம்… அஞ்சு வருசமா ஆட்டிப் படைக்கிறான்…!’ ஆயாசத்துடன் சோபாவில் சாய்ந்தாள்.

போருக்கு ஆயத்தமாவதைப்போலக் கருமேகங்கள் திரண்டு கிழக்கு நோக்கிச் சென்றுகொண்டிருந்தன. எங்கோ மழை பெய்ததன் அறிகுறியாய்க் கிளர்ந்தெழுந்த மண் வாசம் நாசியைத் தீண்டியது.

‘இன்னும் கொஞ்ச நேரத்துல மழை கொட்டப் போகுது’ நினைத்த வேளையில் மெல்லிய சாரல் வீட்டுக்குள் நுழைந்தது.

“எங்க போயிருக்கான்னே தெரியலையே?” மனத்திலிருந்தவை புலம்பலாய் வந்து விழுந்தன. சன்னலை மூடக்கூட மனம் முரண்டு பண்ணிற்று. மழையின் வேகம் அதிகரிக்கவும் எழுந்தாள்.

நப்பாசையுடன் ஏழாவது தளத்திலிருந்து பார்வையைக் கீழே படரவிட்டாள். மழையுடன் காற்றும் இணைந்துகொண்டதால் சாலையில் வாகனங்கள் ஊர்ந்தன. நடைபாதையில் சென்றுகொண்டிருந்த ஒருவரது குடையைக் காற்று தன் விருப்பத்துக்குத் திருப்பியது. அப்படியும் இப்படியுமாகத் திரும்பிக் குடையை மடக்கப் பார்த்த அவர், முடியாததால் அருகிலிருந்த குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ்த்தளத்தை நோக்கி ஓடினார்.

‘எங்கதான் போயிருக்கேடா…? ஆதவா…!’

வீட்டுக்குக் கீழே மகனது தலை தென்படுகிறதா என எட்டிப் பார்த்தாள்.

மகன் தொடக்கப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது அவள் வீட்டிலிருக்கும் நாட்களில் பள்ளி முடிந்து வரும்போது அவளது முகம் தெரிகிறதா என்று அண்ணாந்து பார்த்துக்கொண்டே வந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. இதோ வந்துவிட்டேன் எனக் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

கைத்தொலைபேசி அழைத்தது. ஓடிச் சென்று எடுத்தாள். அலுவலகத்திலிருந்து வந்த அழைப்பு என்பதைப் பார்த்தவுடன் மனம் மேலும் சோர்ந்தது.

‘ஐயோ… எனக்குப் பைத்தியமே புடிச்சிடும்போலிருக்கே…!’

வசந்தம் தொலைக்காட்சியில் ஏமாற்றியவனைப் பழி வாங்கும் கதையுள்ள நாடகத்தின் விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது. அலைவரிசைகளை மாற்றி மாற்றிப் பார்த்துவிட்டு வசந்தத்திற்கே வந்தாள். சமையல் கலை நிபுணர் ஏதோ ஒரு மேற்கத்திய உணவைச் செய்துகொண்டிருந்தார். டிவியை அணைத்துவிட்டு சன்னலை நோக்கிச் சென்றாள்.

கருஞ்சாலையெங்கும் இலை தழைகளாய்க் கிடந்தன. மடக்கிய குடையுடன் நடைபாதையில் சிலரைக் காண முடிந்தது. வீட்டுக்கு எதிரிலிருந்த பெரிய வாகை மரத்தில் கிளை ஒன்று முறிந்து தொங்கியது. வாகனத்திலிருந்து இறங்கிய இருவர் அம்மரத்தை அண்ணாந்து பார்த்தனர். அடுத்த சில நிமிடங்களில் அகற்றப்பட்ட கிளை அவர்கள் வந்த வாகனத்திலேயே கொண்டு செல்லப்பட்டது.

மடிக்கணினியைத் திறந்து வேலையிட மின்னஞ்சல்களைப் பார்த்தாள். எதற்கும் பதிலளிக்க மனம் இடங்கொடுக்கவில்லை. மணி ஏழாகிவிட்டதைச் சுவர்க் கடிகாரத்திலிருந்த குருவி, கூண்டைத் திறந்து வெளியே வந்து கூவிச் சென்றது.

‘ஒருவேளை…?’ மேற்கொண்டு யோசிக்கவிடாது பயம் நெஞ்சை இறுக்கியது.

சில நாட்களுக்கு முன்…

“நீ இங்கயா இருக்கே?”

‘தெம்பனீஸ்’ வட்டாரத்திலுள்ள ‘ஜயன்ட்’ பல்பொருள் அங்காடியிலிருந்து டிராலியைத் தள்ளிக்கொண்டு போன சுகந்தியின் கால்கள் நின்று, இதயத் துடிப்பு எகிறியது.

“பொறுப்ப தூக்கித் தோள்ல போட்டுக்கிட்டு இப்பவே பைத்தியமாட்டம் அலையச் சொல்றியா?” எனச் சொல்லிச் சென்றவன் நின்றுகொண்டிருந்தான்.

“ஒரு ரெண்டாயிரம் வெள்ளி குடேன்…! வீணாப் போனவனுங்க… சம்பளம் போடல…!” என்றவனின் கண்களில் போதை குடிகொண்டிருந்தது.

அவளது கால்கள் கார் பார்க்கை நோக்கி விரைந்து சென்றன.

“போடீ… போறியா… போ… போ…. எங்க போயிடப் போற…. உன்ன நிம்மதியா இருக்க விட்ருவனா?”

கார் வேகம் பிடித்தது.

‘வேண்டாதது எல்லாம் இன்னிக்குன்னு ஞாபகத்துக்கு வந்து தொலைக்குதே!’ எரிச்சல் தலைதூக்கியது. போனை எடுத்துப் பார்த்தாள். படர்ந்து கிடக்கும் இருளை விரட்ட வேண்டுமென்ற நினைப்புகூட எழவில்லை.

‘எங்கடா போனே…? ஆதவா….!’

கதவு மணிச் சத்தத்தில் விசுக்கென எழுந்தாள். அடுத்த அடியை எடுத்து வைக்க இயலவில்லை. வேக வேகமாகக் கதவைத் தட்டும் ஒலி கேட்டது.

ஆக்கம்: மணிமாலா மதியழகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.