அருகன்

டுப்பில் தக்காளி வதங்கும் வாசம்  கூரையின் இடுக்குகளைக் கடந்து வெளியேறியது. கூரைக்கம்புகளில் பிணைக்கப்பட்டிருந்த பாலை முடிச்சுகளில் ஒவ்வொரு நாள் சமையலின் நெடியும் பிசுக்குகளாய்த் தேங்கியிருந்தன. வதங்கிய தக்காளியுடன் மினுமினுவென சின்ன வெங்காயங்கள் புடைத்துக் கொண்டு உருண்டன.

அடுப்பை அணைத்துவிட்டு கூடத்திற்கு வலப்பக்கமாய் இருந்த அறைக்குள் சென்று எட்டிப் பார்த்தாள் லீலா. மாது குப்புறப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். அவனருகே அமர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள். அவன் தலை முடியைக் கோதினாள்.

“வாக்கட்டுலதான் புள்ள நிக்கிது நீ முக்கலன்னா புள்ள மூச்சுத் தெணறும் சொல்லிப்புட்டேன் ஒழுங்கா முக்கி புள்ளய வெளியத்தள்ளு” என்று பெரியாசுபத்திரி நர்சு சிடுக்கு வெடுக்கென பேசியதை லீலா நினைத்துப் பார்த்தாள். அய்யயோ என் புள்ளக்கி மூச்சுத் தெணறுமா! என வலி மொத்தத்தையும் உச்சந்தலைக்கு ஏற்றிக் கொண்டு தன்னால் முடிந்த அளவிற்கு வயிற்றைக் கீழ் நோக்கி அனுப்பினாள் லீலா. சதைப்பற்றை விட்டு முழு மாங்கொட்டை நழுவியதைப் போல மாது லீலாவை விட்டு வெளியேறினான்.

கடிகாரத்தைப் பார்த்தாள் லீலா. எட்டு மணி என்று காட்டியது. அவனை எழுப்பாமலேயே திரும்பி விட்டாள்.

அந்தக் கோவிலின் கோபுரமும்  ஓர் இரவும் ஒன்றையொன்று தழுவிக்கொள்ள நெருங்கிய வேளையிலேயே பிடித்துக்கொண்டது ஒரு பேய் மழை. கோவில் மொத்தமும் நனைந்து வீதியெங்கும் வடிந்து கொண்டிருந்தது. மழை நிற்பதற்கான அரவமே இல்லை. தான் நனைவதை விடத் தன் குதிரை நனைவதை அவன் விரும்பாமல் தேர்ப்பக்கமாக குதிரையை அணைத்து நின்றான். யாருமற்ற வீதியில் இரவு பெருந்துளிகளாய் விழுந்து கொண்டிருந்தது. கோவில் கதவின் இடுக்கில் அப்போதுதான் வெளியேறப் பாய்ந்த பூனைக் குட்டி ஒன்று சிக்கிக் கொண்டது. அதைக் காக்கும் பொருட்டு கோவிலின் வாயிலுக்கு மழையில் நனைந்தபடியே ஓடினான். குட்டியைத் தூக்கிக் கீழே விட்டதும் அது விருட்டெனப் பாய்ந்து அருகிலிருந்த பழைய மாளிகைக்குள் சென்றது.

தேர்ப்பக்கமே மீண்டும் செல்லத் திரும்பியவனின் கண்களில் வீதியின் முனகல் கொலுசு மணிகளாகக் கேட்டது. தூரத்தில் தீபமொன்று அம்மழையிலும் அணையாமல் நடந்து வந்தது. அது ஒரு ஐந்தடி உயர தீபம். செங்குத்தான ஓடமொன்று அகலமான வாய்க்காலைக் கிழித்து வருவது போல அது அவனை நெருங்கிக் கொண்டிருந்தது. அது என்ன என ஊகிக்க இரவு ஒத்துழைத்தாலும் மழை அவனுக்குத் திரையிட்டுக் கொண்டே இருந்தது.

அவன் கண்களின் முழுத் திருப்திக்கு இப்போது அது அவன்முன் வந்து நின்றது. தலையில் முக்காடுடன் ஈரப்பெண் ஒருத்தி. அவளின் இடது இடையில் வெண்கலக்குடம். அவளின் குறுக்கில் பட்டு குடம் பளிச்சிட்டது. இரவுதான் என்றாலும் பொன்வண்டு நிறப் புடவையில் அவள் பின்னால் இருந்த வீதிக்கே ஒளியூட்டினாள். முகத்தை மறைத்திருந்த முக்காட்டை மழை அவளுடன் ஒட்டி வைத்திருந்தது. மூக்கும் உதடுகளும் எங்கே இருக்கிறோம் என அப்பட்டமாய்க் காட்டிக் கொண்டன. கன்னக் கதுப்பில் துணி அவ்வளவாக ஒட்டவில்லை.

குடத்துடன் அவளின் கனம் அப்படியே அவனுள் புகுந்தது. தான் ஒரு ஆண் என அவனின் ரோமங்கள் அவனைக் குத்தி குத்திக் காட்டின. இடுப்பிலிருந்து குடத்தைச் சரித்து அவனிடம் நீட்டினாள். அவள் உதட்டின் வரிகளைத் தேடிக்கொண்டே அதை வாங்குகையில் குடம் ஆர்ப்பரித்தது. ஆகாயம் மொத்தமும் குடத்துக்குள் அடைந்ததாய் மழை கொப்பளித்து வெளியேறியது. இரண்டு கைகளாலும் குடத்தைப் பிடித்து முகத்திற்கு நேராய் வைத்துப் பார்த்தான். அவனுக்கும் அவளுக்கும் இடையே பூமியைப் பிளந்து ஏழடியில் முளைத்த ஒருவன் குடத்தை எட்டி உதைத்தான். குடம் வெடித்து வீதியே ஆறாய் ஓடியது.

உடைந்து ஒழுகியவனாய் விழிப்புக்கு வந்தான் மாது. கட்டிலின் முடுக்கப்பட்ட பாகங்கள் ஒன்றை விட்டு ஒன்று விலகி க்ரீச் க்ரீச் என்றன. அசுரனின் பூமி மிதிப்பு போலத் தரையை உந்தி “அம்மா!” என அலறினான்.

பாத்திரங்களிலிருந்து வெளியேறியவளாய்  டங் க்ளிங் ஒலிகளுடன் அவன் அறை நோக்கி ஓடினாள் லீலா.

“என்னய்யா என்னாச்சு!” அறைக்குள் நின்றும் ஓடிக்கொண்டே இருப்பவள் போல மூச்சிரைக்கக் கேட்டாள்.

“மணியப்பாத்தியா! மணி எட்ரை!

என்ன ஏன் எழுப்பல?”

“இல்லப்பா விடிகாலைலதான் வந்த தூக்கமே இல்ல ஒனக்கு. அசந்து தூங்குனியா எழுப்ப மனசே வரலப்பா”

வாஞ்சையாய் முகத்தைக் கீழிறக்கி கண்களை மட்டும் உயர்த்தினாள் லீலா.

துண்டை உதறிக் கொண்டு வேகமாய் புழக்கடைக்குச் சென்றான் மாது.

குளித்து முடித்து தலையைத் துவட்டிக் கொண்டிருந்தவனுக்கு இட்டலிகளை ஊட்டிக்கொண்டே அவன் பின் ஓடினாள் லீலா.

திண்ணையிலிருந்த சைக்கிளை இறக்கித் தெருவில் வைத்து அவசரமாய்  ஏறி ஒரு மிதி கொடுக்கையில் தனம் எதிரே வந்தாள். மஞ்சள் தாவணியில் அவளின் மாநிற முகம் வனப்பேறிப் படர்ந்தது. வழக்கத்தை விட அவளின் முகம் சற்றுப் பெரிதானதாகத் தோன்றியது அவனுக்கு. அருகே வந்து அவன் பிடித்திருந்த கைப்பிடியை அழுத்திப் பிடித்தாள் அவள். அவ்வளவு நெருக்கமாய்த் தன் முகத்தை அவன் முகத்திடம் கொடுத்தாள். உதடுகளைப் பரப்பிச் சிரித்தான். இல்லையென்றால் அவளைத் தொட்டுவிடும் தொலைவிலிருந்தன அவன் உதடுகள். முகத்தை வெடுக்கென மீட்டுக் கொண்டாள். அவனிலிருந்து விலகி திண்ணைக்கு ஏறினாள். அவளின் பின்னழகில்தான் அவனுக்கு விருப்பமே.

 “அம்மாவைப் பாத்துக்க” என்றான்.

“முடியாது” என்றாள்.

சிரித்துக் கொண்டே சைக்கிளை மிதிக்கலானான் மாது.

மரவாடி ஒன்றில் மாதுவின் அப்பா கணக்கு எழுதிக் கொண்டிருந்தார். அவரின் அகால மரணத்திற்குப் பிறகு எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு அப்பாவின் வேலையைப் பிடித்துக் கொண்டான்.

“என்னடே மாது இன்னிக்கி நேரமாய்ட்டுதா?” வீராச்சாமி செட்டியார்  மரவாடிக்குள் நுழைந்தார்.

“இல்லங்கய்யா நேரத்துக்கு வந்துட்டனே” தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்று சொன்னான் மாது.

“இல்லடே எட்டு மணிக்கு இப்டியேத்தான் தங்கச்சி ஊட்டுக்குப் போனேன். சீட்டுல உன்னைக் காணலயே!”

“ஆமாய்யா எட்டே முக்காலுக்குத்தான் வந்தேன்”

“அதானப் பாத்தேன் பய எட்டுக்கெல்லாம் இருப்பானே காணுமேன்னு தாசுப்பயல கேட்டனே!. கடையை அப்பத்தான் தொறந்தான் போல!”

“ஆமாய்யா கொஞ்சம் நேரமாச்சுன்னு நானே தம்பி ஊட்டுக்குப் போயி சாவியை வாங்கிட்டு வந்துட்டன்” தாசு மரப்பலகைகளை அடுக்கிக் கொண்டே சொன்னான்.

மாது ஏதும் சொல்லாமல் அப்படியே நின்றான்.

“எடே! நான் என்னாடா சொல்லப் போறேன் ஒன்னப்போயி! நீ பொறுப்பான புள்ளடா. அபபனுக்குத் தப்பாம பொறந்த பய நீ! ஒன்ன  நம்பிதான் மரவாடியையே நடத்துறேன். ராத்திரி சினிமாக்குப் போயிட்டேன் கண்ணசந்துட்டேன்னு சொன்னா நான் என்னா பிச்சா திங்கப் போறேன்!?”

“இல்லங்கய்யா அது வந்து….”

“ஒன்னும் சொல்லாத கடையைப் பாரு நான் ஆச்சியைக் கொண்டுக்குட்டு ஆசுபத்திரி போயிட்டு வாரேன்” செட்டியார் பெட்டி வைத்த சைக்கிளில் மெல்ல உருண்டு மறைந்தார்.

ஆச்சிக்கு உடம்புக்கு என்ன என தாசும் மாதுவும் கேட்பதே இல்லை. அது ஒரு முப்பது வருடச் சடங்கு. எல்லோருக்கும் பழகிவிட்டது.

மாணிக்கம் ஆசாரியிடம் அரைமணி நேரப் பேரத்துக்குப் பிறகு கருங்காலி மரத் துண்டு ஒன்றை இருநூறு ரூபாய்க்கு வாங்கிவிட்டுக் கணக்கெழுதி நிமிர்ந்து சோர்வில் அப்படியே தன்னிருக்கையில் சரிந்தான் மாது.

மரவாடிக்கு எதிரே தெப்பக்குளம். சாகரம் ஒன்றைச் சதுரமாய் வடித்தது போல் கணக்கச்சிதமாய்

இருக்கும். தெப்பக்குளத்தின் நடுவே ஒரு மண்டபம்  மரங்கள் சூழ கிளைகளைப் பறவைகள் சூழ என சூரியன் தணியும் மாலையில் குளிர்க் காற்றை உற்பத்தி செய்து கொண்டிருக்கும். மண்டபத்தின் காவி வெள்ளைக் கோடுகளைப் பார்த்தபடியே இருப்பான் மாது. வெள்ளையில் காவிக்கோடுகளா அல்லது காவியில் வெள்ளைக் கோடுகளா எனத் தேடிக்கொண்டே இருப்பது அவன் வழக்கு.

கடைக்கும் குளத்திற்கும் இடையிலான வீதி யாருமின்றி தனித்துக் கிடந்தது. ஆடாத ஊஞ்சல் ஒன்று கயிறுகளற்று நிலத்தில் கிடப்பது போல் நல்லதொரு அகலத்தில் வீதி. அவ்வீதியில் மெல்ல அவனின் சோம்பலை வைத்து குளத்திற்குள் ஆட்டினான் மாது. வீதி மெல்ல மேலெழும்பிய நேரத்தில் அதை மிதித்துக் கடந்தான் நேமி. ஊஞ்சல் உயிரிழந்தது.

ஊரின் பெரியகோவில் போல, ஊரின் தெப்பக்குளம் போல, ஊரின் காவல் நிலையம் போல, ஊரின் பள்ளிக்கூடம் போல ஊரின் அங்கமாய் விரவித் திரிபவன் நேமிநாதன். உபகிளைகள் கழிக்கப்பட்ட முருங்கைமரம் போல் வானைத் தொட வளர்ந்து கொண்டிருப்பவன். அவன் உயரம் கூடிக்கொண்டே இருப்பது போல்தான் எல்லோர் கண்களுக்கும் தெரிந்தது. நீண்ட கால்கள் முளைத்த இடம் அப்பட்டமாய்த் தெரியும் அளவிற்கான நிர்வாணம். அவன் இடுப்பில் மூன்று மூட்டைகள் தொங்கும். பக்கவாட்டில் வலம் இடம் எனச் சில்லறைக் காசுகள் சேர்த்து வைக்கப்பட்ட மூட்டைகள் தொடை வரை தொங்கும். நடுவில் ஒன்று சிறுவர்களுக்கான ஆராய்ச்சிக்கென காலம் காலமாய் இழுத்துக் கட்டப்பட்டது. மூட்டைகளும் அவனும் பிரித்தறிய வாய்ப்பின்றிப் பூரணமாய் அழுக்கேறி ஆண்டாண்டுகளாய் பிணைந்திருந்தனர்.

அவன் பிசுக்குகளைக் கூர்ந்து கவனித்தால் அவன் எத்துணை நிறமானவன் என்பது புரியும். நல்ல மஞ்சள் நிறத்தான் என பிசுக்கடைந்த அவனின் புஜங்கள் ஆண்டுகள் கடந்தும் பூர்வ நிறத்தைப் பறைசாற்றுவன.  எப்போதாவது அவன் தெப்பக்குளத்திலிருந்து வெளிவரும்போது சூரியனின் நிமிண்டலில் அவன் பொன்னிறம் மின்னும்.

ஆறாண்டுகளாய் பிள்ளை இல்லாத கவிதா ஈரப்பாவாடையுடன் மலைவேம்பை அரைத்துண்ணும் படித்துறையில் சரசு கிழவி அவளை நேமியை வைத்துச் சீண்டுவாள்.

“ஒத்த ராத்திரி ஒன் திண்ணைல நேமியப் படுக்கப்போட்டிருந்தீன்னா அஞ்சு புள்ள பெத்துருக்கலாம்” குறுக்கு மாராப்புடன் புடவையைப் பிழிந்துகொண்டே சொல்வாள் சரசு.

குழுமியிருந்த பெண்கள் எல்லோருக்கும் ஏக ராகத்தில் சிரிப்பொலி கிளம்பும்.

“அதெப்புடி கெளவி ஒத்த ராத்திரிக்கு அஞ்சு புள்ள?” மஞ்சளைப் பூசிக்கொண்டே சீதா கேட்பாள்.

“அவன் மூட்ட கனம் தெரியாதா ஒனக்கு?” படிக்கட்டில் உட்கார்ந்துகொண்டு ஒரு குவளையில் தண்ணீரை

மொண்டு ஊற்றிக்கொண்டே முடுக்குவாள் சரசு கிழவி.

“கெளவி ஏழு புள்ளயும் அப்டித்தான் வாங்கிருப்பா போல!” கவிதா சீறுவாள்.

“என் கெளவன் என்னா ஒம்புருசனாட்டம் சத்தில்லாதவனாடி?” குவளையால் இடிப்பாள் சரசு.

கவிதாவிற்கு ஆத்திரம் முட்டினாலும் ஒரு சில நாள்கள் நேமிக்குத் திண்ணையைக் கூட்டிப் பெருக்கி வைப்பாள்.

நேமி அந்த மடத்துத் திண்ணையை விட்டு வேறெங்கும் படுப்பதில்லை. சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஜைனக் கோவில் அது. இரண்டடுக்குக் கோபுரத்துடன் அத்தெருவையே தன் கைகளுக்குள் அணைத்திருக்கும். தெருவின் அகலமும் கோவிலின் சப்பணமிடப்பட்ட இருப்பிற்கு அகண்டு இருக்கும். கோவிலை ஒட்டி வலம் இடம் என இரு சந்துகள் பிரியும். சந்துகள் கோவிலின் மதிலை ஒட்டித்தான் வரையப்பட்டிருக்கும். வலப்பக்க மதிலுக்கு நேரே அதாவது கோவிலின் வலது தோள்பட்டைக்கு நேரே வடக்கு நோக்கி மடம் ஒன்று இருக்கும். பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மடமாகத்தான் இருக்க வேண்டும் என அதன் சிதிலங்கள் எழுதி இருந்தன.

கறுப்பு அப்பியிருந்த மாளிகை அது. பாசிபடர்ந்து காலத்தின் கண்டிப்பில் அது கறுப்பாய் மாறியிருக்க வேண்டும்.

முகப்பு அலங்காரங்கள் கூரான கலசங்களைத் தலைகீழாய்த் தொங்கவிட்டது போல் ஓரடிக்கு ஒன்றாய் கூரையிலிருந்து தொங்கும். மாளிகையின் சுவர்களின் வழியே அரசமரக் கன்றுகள் வெடித்து வெளியேறிக் கொண்டிருந்தன. மாளிகைக்கும் கோவிலுக்கும் இடையேயான அந்தச் சந்தைக் கடந்தாலே வௌவால் எச்சத்தின் வீச்சம் குமட்டிக்கொண்டு வரும். அதன் திண்ணைகளே நேமி வாழும் இடம்.

அந்த மடத்தின் கதவுகள் பல நூற்றாண்டுகளுக்கும் முற்பட்டவை. இவ்வளவு காலமாகியும் அப்படியே ஆற்றல் குறையாமல் காத்து நிற்பவை. கோவிலின் கதவுகளும் மடத்தின் கதவுகளும் அசப்பில் அப்படியே இருப்பன. கோவிலின் கதவுகள் பராமரிப்பினால் பொலிவுடன் இருந்தன. மடத்தின் கதவுகளில் விரிசல்கள் விழுந்திருந்தன. கதவுகளின் முன் இரும்புச் சங்கிலிகளில் ஒரு முழு ஆணின் தலையளவிற்குப் பூட்டு ஒன்று தொங்கிக் கொண்டிருக்கும். அதன் சாவி யாரிடம் உள்ளது எனக் கோவிலின் அறங்காவலருக்கு மட்டுமே தெரிந்திருக்கக் கூடும். அவரும் வடக்கே ஏதோ ஒரு வியாபாரத்தில் இருக்கிறார். கோவில் பராமரிப்பிற்கான செலவுகளை இங்கிருக்கும் ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைப்பார்.

கோவிலின் தேர் நிலையடியில் நின்று ஒரு நூறு ஆண்டுகளாவது ஆகியிருக்கும். அதன் மரவேலைப்பாடுகள் உருக்குலைந்திருந்தாலும் பிரமிப்பைக் கொண்டிருந்தன. அந்தத் தேரில்தான் மாது மற்றும் அவன் வயதொத்த தெருப் பிள்ளைகளும் விளையாடுவர். தேரின் உச்சியில் ஒரு பூ வேலைப்பாட்டில் ‘மாதவன்’ என்று தகரத்தினால் கீறி இருப்பான். இருபது வருடங்கள் கடந்தும் அந்தக் கீறல் அப்படியே இருந்தது. கடைசி ‘ன்’ ல் ஒற்றுப்புள்ளி மட்டும் நீண்டு பட்டையாய் வெடித்திருந்தது.

அந்தத் தேர் விளையாட்டில் எப்போதும் அரசன் மாதுதான். அவனின் அரசிகள் அவ்வப்போது மாறுவர். தேர் நகர்வது போன்றே எல்லோரும் உடலைக் குலுக்குவர். மாது நெஞ்சை நிமிர்த்தி ஹரி நீட்டிக் கொண்டிருக்கும் தட்டுகளில் இருக்கும் கூழாங்கற்களைத் தெருவில் விசிறுவான். கீழிருக்கும் மக்கள் அதை ஓடி ஓடி பொறுக்கிக் கொள்வர். அரசனுக்கு உடலை வளைத்துக் கைகூப்பி நன்றி சொல்வர்.

அரசன் ஒருநாள் தேரில் நகர்வலம் வந்தபோது புதுமணத் தம்பதிகளின் வரவேற்புச் சடங்கு ஒன்று அந்தத் தெருவில் நிகழ்ந்து கொண்டிருந்தது. அரசனின் தேர் அந்நேரத்தில் வரும் என யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஏனெனில் அது அரசனின் நேரமன்று. இரவு முழுவதுமாய் கவிந்த பின்மாலை அது. அரசனின் தேர் அதிர்வைக்கொண்டே அரசனின் வரவை உணர்ந்த மக்கள் வீதியின் இருமருங்கிலும் ஒதுங்கிக் கொண்டனர். ஏதோ ஓர் கொண்டாட்டத்தின் இடையில் தான் வந்து விட்டதாய் உணர்ந்த அரசன் தனது பட்டாடை வெளிச்சமூட்ட ஆபரணங்கள் இசையமைக்கக் கொண்டாட்ட வீட்டின் அருகே வந்தான். அரசன் நின்ற வாசலுக்கு ஓடி புதுமணத் தம்பதியர் அரசனின் ஆசிக்காய் அவன் கால்களில் கிடந்தனர். அவர்களை  உயர்த்தினான் அரசன். மணமகன் ராஜ களையில் வாலிபத்தைத் தன் கண்களில் தீட்டிக்கொண்டு நின்றான். மணமகள் முகத்தை முழுவதுமாய் மூடியிருந்தாள்.

அவர்களை ஆசீர்வதித்துப் பொன்முடிப்பு ஒன்றை வழங்கி விட்டுக் கோவிலுக்குள் புகுந்தான் அரசன்.

கோவிலின் கொடிக்கம்பத்திற்கு அருகே ஐந்தடி உயரத்தில் கொப்பரை ஒன்று நெருப்பிற்காகக் காத்துக்கொண்டு நின்றது. சுள்ளிகள் அடுக்கப்பட்டு கொழுந்து விடுவதற்கான எரிபொருள்கள் கொப்பரையில் நிரம்பியிருந்தன.

“இது என்ன?” என அரசன் கேட்டான். புதிதாய் திருமணம் ஆன அப்பெண் புகுந்த வீட்டிற்குள் நுழையும் முன் இக்கொப்பரையைச் சுடர்விடச் செய்வாள். இது இப்பகுதி மக்களின் பழக்கம் என்றார் அமைச்சர்.

“ஓகோ! அப்பெண் இங்கே வந்து இதை நெருப்பூட்டுவாள் அப்படித்தானே!” அரசன் கேட்டான்.

“ஆம் அரசே!”

‘சரி நாமும் இங்கிருந்து அச்சடங்கைப் பார்த்து விட்டுச் செல்வோம்”

“இல்லை அரசே! புதுமணப் பெண்ணை வெளி ஆண்கள் யாரும் பார்த்துவிடக் கூடாது என்பது அவர்களின் நெறி”. அதனால்தான் அவள் முகத்தை முக்காடிட்டு மறைத்திருக்கிறாள்.

“ஆம். நானும் அதைக் கவனித்தேன்” என அரசன் இழுக்கையிலேயே மனக்கண்ணில் அவளை உயர்த்திய போது அரசன் கண்ணுற்ற அவளின் கழுத்து அவனைக் குடைந்தது. நிச்சயம் அவள் பேரழகி. அந்தக் குரல்வளையின் வடிவே சொல்லிற்று. அவளின் முகத்தைக் காண வேண்டுமென்ற ஆவல் அவளை ஆசீர்வதித்தபோதே அரசனை ஆக்கிரமித்து விட்டது.

அரசன் அதற்கு மேல் அதில் பிடிவாதம் பிடிப்பது அவனின் மாண்பிற்குப் பிசகு எனக் கோவிலில் கொலுவீற்றிருந்த மல்லிநாத தீர்த்தங்கரரைத் தரிசித்து விட்டு வெளியேறினான். கோவிலின் வலப்பக்கத்தில் இருந்த மாளிகையின் வாசலில் ராட்சத கதவுகளுக்கு முன்னால் முக்காடிட்ட அவள் முதல் படியில் நின்று கொண்டிருந்தாள். அதனாலேயே மற்றவர்களிடமிருந்து உயரே தெரிந்தாள். அரசனுக்கான கூட்டம் கூடியதில் தெருவே நிறைந்தது.

அவளை வாழ்நாளில் ஒரு முறையேனும் தரிசித்து விட வேண்டும் என அரசன் தன் நெஞ்சை மூன்றுமுறை தட்டிக் கொண்டான். தேரில் ஏறியதும் மாளிகையை ஒருமுறை பார்த்தான். அவளின் முக்காடு விலகவே இல்லை. முன்னறிந்த அழகிகளின் பெயர்போன அங்கங்களையெல்லாம் இணைத்து அவனாகவே ஒரு உருவம் கொடுத்து அவனருகில் கற்பனையில் அவளை அமர்த்திக் கொண்டான். அப்படியும் அவளின் முக்காடு அவனை வருத்திக் கொண்டிருந்தது.

ஏழு மணிக்கெல்லாம் விளையாட்டை முடித்துக் கொள்ளும் மாது எட்டுமணி வரை வீடு திரும்பவில்லை என்றதும் லீலா தேடிக்கொண்டு வந்துவிட்டாள். வழக்கம்போல அரசனின் பக்கத்தில் புது அரசி. தட்டில் கூழாங்கற்கள். இன்னும் கொஞ்சம் கூழாங்கற்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என அரசி சொல்ல ஹரியும் விமலும் கூடுதலாய்க் கூழாங்கற்களைச் சேகரித்துக் கொண்டிருந்தனர். தேரில் அமர்ந்துகொண்டு நிமிர்ந்தால் மாளிகைமடம் துல்லியமாய்த் தெரியும். அதன் மூடப்பட்ட கதவுகள் இருட்டிலும் அதன் சதுரங்களை எடுப்பாய்க் காட்டும். பூட்டும் சங்கிலியும் மட்டும் தெரியாது. அன்று அந்தக் கதவுகள் திறக்கப்படுவது போல் ஓர் மெல்லிய ஒளிக்கீற்று கதவின் உயரத்திற்கு நின்றது. மெல்ல அக்கீற்று அகலமானது. ஒரு ஆள் நுழையக் கூடிய அளவுக்கான சுடர் ஒன்று ஒளிர்ந்து கொண்டிருந்தது.

தேரிலிருந்த மாதுவின் முகத்தில் அச்சுடர் பிரகாசித்தது. தலையில் முக்காடு அணிந்த பெண்ணொருத்தி அங்கே நின்றாள். தேடிக்கொண்டு வந்த லீலாவின் குரலில் திடுக்கிட்ட மாது தேரின் உச்சியிலிருந்து தவறி கீழே விழுந்தான். அடித்துக்கொண்டு ஓடிவந்து பிள்ளையைத் தூக்கிய லீலாவின் கைகளெல்லாம் இரத்தம். மாதுவின் தலை நனைந்திருந்தது.

கடையைப் பூட்டி விட்டு மணியைப் பார்த்தபோது மணி பத்து. “நான் கெளம்புறேன் தம்பி” என்று தாசு நடையைக் கட்டினான்.

சைக்கிளைத் தொட்ட போதுதான் மாதுவிற்கு தனத்தின் நினைப்பே வந்தது. ஒரு புன்சிரிப்புடன் சைக்கிளை மிதிக்கத் துவங்கினான்.

கோவில் வீதியை அடைந்தபோது கோபுரத்தின் தலையில் நிலவு நின்றது. தெருவிளக்குகள் ஏதுமில்லை. தூரத்தில் நாய்களின் குரைப்பொலி. சைக்கிள் மிதியின் போது அவனின் கால்சராயின் வாயகன்ற அடிப்பகுதிக்குள் அவன் பாதங்கள் புதைந்து புதைந்து வெளியேறின. அவன் பதினைந்து ஆண்டுகளாய்க் கடக்கும் வீதி. கடந்த ஐந்து ஆண்டுகளாய் இரவு அதே பத்து மணியில் உலாவுகிறவன். கோவில் கோபுரத்தின் உச்சியில் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் மின்விளக்கு அன்று எரியவில்லை.

நிலவொளியே போதும்தான் அவ்வீதிக்கு. மாளிகைமடத்திற்கு நேராய் அன்றும் சந்தை பாதி அடைத்தாற்போல் தேர் நின்று கொண்டிருந்தது. தேர் நிற்பதாலேயே நான்கு சக்கர வாகனங்கள் எதுவுமே அந்த இடப்பக்க சந்தின் வழி வரவே முடியாது. கோவில் கோபுரத்தைப் பார்த்துக்கொண்டே தேர் நிற்கும் சந்து வழி சைக்கிளைத் திருப்பினான் மாது. யாரோ தேர்ச்சக்கரத்தில் கம்பு ஒன்றைச்  சொருகியிருந்ததால் அதில் சிக்கி அவன் சைக்கிள் வழுக்கியது. மாதுவும் சைக்கிளும் கீழே விழுந்தனர். பெரிய அடி ஏதும் இல்லை. மாது எழுந்து சட்டை கால்சராயில்  ஒட்டியிருந்த மண்ணைத் தட்டி விட்டு சைக்கிளை எடுக்கக் குனிந்தான். சைக்கிளை நிமிர்த்திவிட்டு தேரை அண்ணாந்து பார்த்தான். பின் ஏதோ நினைவுற்றவனாய்ச் சடாரென வலப்பக்கம் திரும்பி மாளிகைமடத்தைப் பார்த்தான். இருட்டில் கண்களைமூடித் தூங்கிக்கொண்டிருந்தது மாளிகை.

அதைச் சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். தீக்குச்சியில் நெருப்பு தொற்றியது போலக் கதவுகளுக்குள் சுடர்விட்டது அப்பேரொளி. தூங்கிக்கொண்டிருந்த அரசி ஒருத்தி கண் திறந்ததுபோல உயிர் கொண்டது மாளிகை. சைக்கிளை அப்படியே விட்டுவிட்டு கதவை நோக்கிச் சென்றான் மாது. அவன் கதவை நெருங்க நெருங்க கதவு மெல்ல மூடிக்கொண்டிருந்தது. கதவு மொத்தமாய் மூடப்போகிறது என்றுணர்ந்து அவன் பாய்கையில் அவன் முன் நேமி நின்றான். இருள் சூழ இருவரும் எதிரெதிராய் நின்றனர். நேமிக்குப் பின்னே கதவு நிரந்தர இருட்டிற்குள் சென்றது. நேமியைத் தாண்டி கதவின் மேல் மாது கண்களை வைத்தபோது நிழல் நிறத்தில் பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது.

நேமியின் உள்ளங்கைச் சூடு மாதுவின் நெஞ்சில் ஊறிக்கொண்டிருந்தது. நேமியின் கைகளைத் தன்னிடமிருந்து பிடுங்க முடியவில்லை மாதுவால். நேமியின் கண்கள் மாளிகையின் இருட்டிலும் செவ்வொளியாய்த் தகித்தது. நேமியின் மயிரடர்ந்த முகத்திற்குள் அவனின் வாலிபத்தை மாதுவால் காண முடிந்தது. மாளிகையின் வௌவால் வீச்சத்துடன் நேமியின் பீடி மணம் கூடி நெருக்கடியை மேலும் அதிகரித்தது.

தன்னாலானவரைத் திறம் வளர்த்து நேமியின் கைகளைப் பின்னுக்குத் தள்ளினான் மாது. பின்வாங்கியவாறு தளர்ந்திருந்த நேமி மாதுவைத் தன் இடது தோள்பட்டைக்குத் தூக்கி ஆங்காரமாய்க் குரலொன்று எழுப்பி வீதியில் வீசினான். அது நுண்மண்ணாலான வீதி என்பதால் தொப்பென்று விழுந்தான் மாது. சுதாரித்து எழுந்த போது தூணின் உச்சியில் கால்களை வைத்துக்கொண்டு தலை வைப்பதற்கென மேடாக்கிய கல்லின் அணைப்பில் தலை வைத்துக் கண்களை மூடித் திண்ணையில் படுத்திருந்தான் நேமி.

மறுநாள் அம்மா எழுப்புவதற்கு முன்பே எழுந்த மாது அம்மாவிடம் நேமி பற்றி விசாரித்தான்.

“யாருதான் மா இந்த நேமி?”

“என்னடா திடீர்னு அவனைப் பத்தி கேக்குற? எல்லாரும் சொல்லுற கததான. அவன் அந்தக் காலத்துலயே நல்லா படிச்சவனாம் படிச்சி படிச்சே பைத்தியம் ஆயிட்டானாம்”

“அவன் யாரூட்டு புள்ள?”

“நான் கல்யாணம் பண்ணி இந்த ஊருக்கு வந்த காலத்துலேந்தே அவன் இப்புடித்தான் சுத்துறான். நான் அன்னைக்கி எப்படி பாத்தனோ அப்புடியேத்தான் இன்னும் இருக்கான்”

“அந்த மடம்?”

“அங்கதான் அவன் பொறந்ததாவும் சொல்லுவாங்க!”

“அவன் ஆயி அப்பன்!”

“யாரு கண்டா! சரசு கெளவிக்கே தெரியல!”

“சரசு கெளவி கலியாணம் பண்ணி வந்த காலத்துலேந்தே நேமி இருக்கான்னு சொல்லும்”

“அந்த மடத்துக்குள்ள யாராச்சும் இருக்காங்களாம்மா?”

லீலாவின் முகமெல்லாம் வியர்த்திருந்தது.

இருபது ஆண்டுகளுக்கு முன் தேரிலிருந்து தவறி விழுந்த அந்த ஒரு மாதத்தில் மாது கேட்டுக் கொண்டேயிருந்த அதே கேள்வி.

“அங்க யாருமே இல்லப்பா. அது பூட்டியேத்தான் கெடக்கும். அங்க யாரும் இல்லய்யா. ஒனக்கு ஏன் திடீர்னு அந்த கேள்வி இப்ப?”

“இல்லம்மா சும்மாதான் கேட்டன்”.

சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியேறினான். தேருக்குப் பின்னால் சைக்கிளை நிறுத்திவிட்டு மாளிகைமடத்தை எட்டிப் பார்த்தான். திண்ணையில் நேமி இல்லை. மெல்ல நடந்து வௌவால் புழுக்கைகள் இறைந்திருந்த திண்ணையைப் பார்த்தான். இரண்டு புறமும் திண்ணைகள் வௌவால்களின் ஆட்சியில் கருகி இருந்தன. சுவர் முழுக்க கரிக்கோடுகள். என்னென்னவோ எழுதப்பட்டிருந்தன. அந்த எழுத்து வடிவம் மாது இதுவரை பார்த்திராத ஒன்றாக இருந்தது. இந்தியும் இல்லை என உறுதி செய்து கொண்டான். ஓவியங்களும் இருந்தன. அளவில் சிறிய ஓவியங்கள் என்றாலும் அத்தனையும் ஆடம்பரமான ஓவியங்கள். சிறு வயதில் தேருடனே நின்றுவிட்ட மாதுவிற்குத் திண்ணை இப்போது விசித்திரமாய் இருந்தது. அதிகமாகப் பல்லக்கு ஓவியங்கள் இருந்தன. ஒரு தேர் ஓவியமும் இருந்தது.

“ஏ மாது! என்னடா பண்ற அந்த நாத்தம்புடிச்ச  திண்ணையில?” செட்டியார் பார்த்துவிட்டார்.

“ஒன்னுமில்லங்கய்யா” அங்கிருந்து ஓடி வந்தான் மாது.

“கடை சாவி எங்க?”

“இந்தா இருக்குங்கய்யா. கடைக்குத்தான் போறேன்”.

“சாவியை என்னுட்ட குடு. கைப்பையை ஊட்டுல உட்டுட்டேன். நீ போய் அதை எடுத்தா”.

“சரிங்கய்யா”

“சைக்கிளு எங்கடா?”

“இந்தா இருக்குங்க” என்றபடியே தேருக்குப் பின் சென்று சைக்கிளை எடுத்தான்.

“சைக்கிளை பொதருக்குள்ள உட்டுப்புட்டு இந்த நாத்த திண்ணைல என்னாத்தடா தேடுன?”

பதில் ஏதும் சொல்லாமல் சைக்கிளை எடுத்துக்கொண்டு கோவிலுக்கு வலப்பக்க சந்திற்குள் மறைந்தான் மாது.

வீட்டு வாசலில் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான். ஊரிலேயே மடத்திற்கு பிறகான விசாலமான திண்ணை கொண்ட வீடு செட்டியார் வீடுதான். திண்ணையில் கயிற்றுக் கட்டிலில் ஆச்சி படுத்திருந்தாள்.

“ஆச்சி பை எங்க?” சத்தமாகக் கேட்டான்.

கட்டிலிலிருந்து மெல்ல எழுந்து தலையணைக்கு அடியில் வைத்திருந்த கறுப்புப் பையை எடுத்து அவனிடம் கொடுத்தாள் ஆச்சி. பையை வாங்கிவிட்டு ஆச்சியைப் பார்த்துக்கொண்டே நின்றான். அவளும் அவனைப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

“நல்லா இருக்கீங்களா ஆச்சி?”

“ஏ காமாச்சி!… மதுர மீனாச்சி..! இவனுக்கு இன்னிக்கித்தான் கேக்க புத்தி குடுத்தியளா!” தலையை நிமிர்த்தி ஓடுகளைப் பார்த்து வணங்கினாள் ஆச்சி.

“வேலை ஆச்சி அதான் இந்தப் பக்கம் வரவே முடியல!”

“ஒன் ஆத்தாக்காரி நல்லாருக்காளா?”

“எல்லாம் நல்லாருக்கு. அப்றம் உங்ககிட்ட ஒரு சேதி விசாரிக்கணும்”.

“அதான பாத்தன். ஒன் குடுமி ஏன் சிலுக்குதுன்னு!”

“அதெல்லாம் ஒன்னுமில்ல ஆச்சி. நம்ம மடத்துல நேமி கெடக்கான்ல. அவன் கதை எதாச்சும் தெரியுமா?”

“அவனுக்கு இருக்குடா ஓராயிரங்கத”

“ஒங்களுக்குத் தெரிஞ்சத சொல்லுங்க”

“என் மாமியா கெளவி ஒரு மொற சொல்லுச்சு. அவன் பேரழகியா ஒரு பொஞ்சாதியக் கொண்டாந்தானாம். நம்ம பயலுவோ எவனோ கொண்டு போய்ட்டானாம்” அதுல புத்தி பெசகிட்டுன்னு சொல்லக் கேள்வி.

பையுடன் கடைக்குள் நுழைந்தான் மாது. “அந்தப் பையக் குடு நான் தஞ்சாவூருக்குப் போயிட்டு வாரேன் ஒரு சின்ன வேல கெடக்கு” எனப் பையை வாங்கிக்கொண்டு கடையை விட்டு இறங்கினார் செட்டியார்.

“அய்யா இந்த நேமியப் பத்தி…” மாது மெல்ல இழுத்தான்.

“அவனைப் பத்தி என்ன?”

“அவனுக்கு என்னய்யா வயசிருக்கும்?”

சத்தமாகச் சிரித்தார் செட்டியார்.

“ஒங்கொப்பனுக்கு வந்த அதே சந்தேகம் ஒனக்கும் வந்துட்டா?” சிரிப்பைத் தொடர்ந்தார்.

“இல்லய்யா யாருக்கும் தெரியல அதான் கேட்டன்”

“அதான் நீயே சொல்லுறியே யாருக்கும் தெரியலன்னு”

“ஒங்களுக்கு எதாச்சும்?”

“நான் சிறு புள்ளையா இருந்த காலத்துலேந்தே அவன் இருக்கான். இப்புடியேத்தான் இருக்கான். அவன்லாம் அம்மண சாமியக் கும்புடுறவன். அவனை ரொம்ப தோண்டாத. புத்திக்கு நல்லதில்ல”.

சைக்கிளில் உருண்டு மறைந்தார் செட்டியார். கோவிலுக்குள் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் மாதுவிற்குக் கூடியது. கோவிலின் முன் மண்டபம் வரை போயிருக்கிறான். ஆனால் அது தாண்டி வேறு யாவருக்கும் அனுமதி இல்லை. அப்பகுதியிலேயே ஒரு ஐந்தாறு குடும்பங்கள் மட்டுமே உள்ளே செல்லலாம். கோவிலுக்குள்ளிருந்து ஒரு உன்னத மணம் விழாக்காலத்தில் தெருவெங்கும் மணக்கும். கோடையிலும் கோவிலின் மதிலையொட்டிச் செல்கையில் ஆழ்மனம் குளிர்வதாய் உணரும்.

கோவிலின் உறவுக் குடும்பங்களுக்கும் நேமியைப் பற்றி அவ்வளவாகத் தெரியவில்லை. நேமி கோவிலுக்கு அருகில் கூட செல்ல மாட்டான். அவனுண்டு அந்த மடமுண்டு எனக் கால்களை உயரமாய் வைத்துக்கொண்டு தூங்குவான். அவன் திண்ணையில் படுத்திருக்கையில் வீதியில் போவோர் வருவோர் சில்லறைகளைத் தூக்கிப் போட்டுச் செல்வர். அதை முடிந்து  மூட்டைகளாய் வைத்திருக்கிறான். அவனைத் தூங்கும்போது பார்த்திருக்கின்றனர். ஆண்டிற்கொரு முறை தெப்பக்குளத்தில் பார்த்திருக்கின்றனர். ஆனால் அவன் உணவு உண்டு யாருமே பார்த்ததில்லை.

தலைமுடி மணி மணியாய் உருட்டிக்கொண்டு அவன் மார்வரை தவழும். முகம் முழுக்க மயிர்தான். கீழே கவிழ்ந்த நிலையிலேயே ஒரு பார்வை ஊர் முழுக்க அத்துபடி. உடலெல்லாம் சாம்பல் நிறத்தில் எதையோ பூசிக்கொண்டு அலைவது போல் இருக்கும். நேமி எழுந்து நின்றால் மாளிகையின் முன்கூரை தலையில் தட்டும். ஏழடிக்குச் சற்றுக் குறைவு என்பது போலான உயரத்தில் மூட்டைகள் ஆட வீதியெங்கும் நடப்பான். அவன் குரல் அவனே கேட்டிராத ஒன்று.

தெப்பக்குள வீதியில் சிவன் கோவில் பக்கமாக நேமி போவதைக் கடைக்குள்ளிருந்தவாறே மாது கண்டுவிட்டான். தெருமுனையைத் தாண்டித் திரும்பும் வரைக் காத்திருந்து மாளிகை பக்கமாய் சைக்கிளை எடுத்துக்கொண்டு பறந்தான் மாது. சைக்கிள் கேரியரில் பூந்துடைப்பம் ஒன்றை வைத்திருந்தான்.

மதியவேளை. ஆள் நடமாட்டம் ஏதுமற்ற அகாலம் அது. பூந்துடைப்பத்தைக் கொண்டு வலது பக்க திண்ணையைக் கூட்டித் தள்ளினான். வௌவால்களின் சாம்ராஜ்ஜியமே வீதிக்குச் சென்றது. இப்போது திண்ணையில் ஓவியங்கள் கறுப்பு கறுப்பாய் அப்பிக் கிடந்தன. ஒவ்வொன்றாய்க் கூர்ந்து ஆய்ந்தான்.

அழகிய வேலைப்பாடுகளுடனான பல்லக்குகள். சிறியது பெரியது என கொடியேந்திய தேர்கள். அத்தனைக் கொடியிலும் சுவசுத்திகா சின்னம். பட்டத்து யானைகள் வில்லேந்திய குதிரைகள் என ஏதோ ஒரு நூற்றாண்டின் காலம் திண்ணை முழுக்கப் படுத்திருந்தது.

இடது பக்கத் திண்ணைக்குச் சென்று ஓரடிக்குப் பூந்துடைப்பத்தால் ஒரு தள்ளு தள்ளினான். முக்காடிட்ட பெண்ணொருத்தி பக்கவாட்டில் நேரெதிர் எனப் பல்வேறு கோணங்களில் ஐந்தாறு சிறு ஓவியங்களாய் முகத்தை மறைத்திருந்தாள். அடுத்து ஓரடிக்கு வௌவால் புழுக்கைகளை வீதிக்குத் தள்ளினான். முக்காடிட்டவளின் முழு பின்னழகு. தலையில் முக்காட்டுடன் தீப்பந்தம் ஒன்றைக் கையிலேந்தி உயரமான ஏதோ ஒன்றிற்கு நெருப்பூட்டுகிறாள்.

உள்ளுக்குள் ஏதோ துணுக்குற்றவன் போல வீதியின் வாயிலை ஒருமுறை எட்டிப்பார்த்தான். நேமியின் மீது மாதுவிற்கு உச்சபட்ச அச்சம் இருந்தது. அவன் கைகளின் வலுவை ஒரே ஒருமுறை தொட்டுப்பார்த்தவன் என்ற வகையில் உயிர்பயம் இருந்தது. வீதியில் யாருமில்லை. மொத்தத் திண்ணையையும் சுத்தமாக்கினான். கறுப்புத் தடாகமாய் வெய்யிலின் சாரலில் திண்ணை கானலாய் ஜொலித்தது. தாவிச்சென்று மூன்றாவது அடியில் அமர்ந்தான்.

பெண்கள் சூழ கைவளைக் குலுங்க முக்காட்டைச் சரி செய்துகொண்டே கோவிலுக்குள் நுழைந்தாள் புதுப்பெண். ஆண்கள் யாருக்கும் உடன் செல்ல அனுமதி இல்லை. கொப்பரைக்கு முன் புதுப்பெண் மட்டும் நிற்க வேண்டும். தீப்பந்தத்தைத் தூக்கிக் கொப்பரைக்குள் சுடரை நுழைத்தாள். கொப்பரைக்குள் நுழைந்த கொள்ளியின் வாய் திடீரென வீசிய இரவுக் காற்றால் அவளின் முக்காட்டில் தீயைத் துப்பியது.

இறகென இழைக்கப்பட்ட அத்துணி கடகடவென தீயைத் தின்றது. உடனிருந்த பெண்கள் ஓடும் முன்னே முழு உடலையும் தீ சூழ்ந்தது. ஐந்தடியில் ஒரு கொப்பரையும் ஐந்தடிக்கும் குறைவாய் ஒரு கொப்பரையும் தக தக வென தீப்பற்றி மேலெழும்பின.

இரண்டு கொப்பரைகளும் ஓவியங்களாய் மாளிகையின் திண்ணையில் அணைந்து கிடந்தன. முக்காடிட்டவளின் முழுமுகமும் எங்குமே இல்லை. ஒரு மணி நேரமாக ஒவ்வொரு வரியாய்ப் புரட்டியும் மாதுவிற்கு அவளின் தரிசனம் கிட்டவே இல்லை. பிரகாரத்தின் தலையில் முழு நிலவொன்று கொப்பரைகளைப் பார்த்துக் கொண்டிருந்தது.

அன்றிரவெல்லாம் மாதுவிற்கு காய்ச்சல். லீலாவிற்கு என்னென்னவோ தோன்ற ஆரம்பித்துவிட்டது.

தனம் வந்து அறையை எட்டிப் பார்த்தாள். லீலா வெளியேறி மாதுவையும் தனத்தையும் தனியே விட்டாள்.

அவனருகில் அமர்ந்து அவன் மார்பில் உள்ளங்கைகளை வைத்து அழுத்தினாள். கண்கள் திறவாது அவள் கைகளைப் பற்றிக்கொண்டு அயர்ந்தான்.

ஒருவார காலம் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்தான் மாது. உடல் சற்று சீரானதும் சைக்கிளை இறக்கிக் கீழே வைத்தான். மணி இரவு ஒன்பது எனக் காட்டியது. அப்படியே படியில் உட்கார்ந்தான். கண்களால் தெருவை அளந்து பார்த்தான். ஐந்தாம்முறை அளக்க தலையை உயர்த்தியபோது தெருவின் வாயிலில் உயரமான அவ்வுருவம் தன் புறக்கோட்டில் மட்டும் ஒளிர்ந்துகொண்டு நின்றது. வரப்போகிறாயா இல்லையா எனக் கேட்பது போல அசுர சாடையில் நின்றது. நேமியே தான். சைக்கிளைக் கூட எடுக்காமல் மாளிகை நோக்கி ஓடினான் மாது.

தேரைத் தாண்டி அடி வைத்தபோது மாளிகையின் வாயிலில் நின்று வானம் பார்த்து அலறினான் நேமி. வைத்த காலை எடுத்துக்கொண்டு தேரை ஒட்டி நின்றான் மாது. கோவிலின் கோபுரத்தைப் பார்த்தும் பின் அதற்கு நேரெதிராய்த் திரும்பியும் மாறி மாறி நடந்து கொண்டிருந்தான் நேமி. தேரை ஒட்டி உட்கார்ந்து விட்டான் மாது. பனி விழும் இரவு அது. மாதுவிற்கு மெல்ல உடல் உதறியது. மாளிகைக் கதவின் க்ரீச் ஒலி கேட்டது.

மாது நிமிர்ந்து கொண்டான். நேமி நடையை நிறுத்தினான். ஒளி வளரத் துவங்கியது. தூணில் சரிந்து ஒளியை வழிபடுவது போல மண்டியிட்டான் நேமி. மாது எழுந்து வேகமாய் நடந்தான். கதவின் அருகே முழுவதுமாய் வந்து விட்டான் மாது. இம்முறை நேமி அவனைத் தடுக்கவில்லை. மருதாணியிட்ட கையொன்று அகல் தீபமொன்றை நீட்டியது. கதவிற்கு வெளியே முக்காடிட்ட பெண்ணொருத்தியின் இடுப்பு வரையிலான வலது பாகம் மட்டும் இரவை விரட்டியது. முகம் முழுவதுமாய் மறைந்திருந்தது. குரல்வளையின் மஞ்சள் நிறமும் அதன் கூர்மையும் மாதுவைப் பல நூற்றாண்டுக்குப் பின்னால் தூக்கிப் போட்டது. வனப்பேறிய வலது மார்பு திறக்கப்படாத இடது கதவில் முட்டி விறைத்திருந்தது.

அவள் கையிலிருந்த அகல்விளக்கை வாங்க நேமி கையேந்தினான். அதைப்பார்த்த மாதுவும் நேமி போலவே மண்டியிட்டுக் கையேந்தினான். ஒளி பொருந்திய அவ்விளக்கை நீட்டிக்கொண்டு அந்த அழகியகை அப்படியே இருந்தது. யார் கைக்கும் மாற்றப்படாத அவ்விளக்கை மாது எடுக்க முயன்றான். மாது எடுத்ததும் விளக்கு அணைந்தது. திரும்ப அந்தக் கையிலேயே விளக்கை வைத்தான். நேமி கண்ணீர் வடித்துக்கொண்டே இருந்தானே தவிர விளக்கைத் தொடவில்லை. ஏற்கனவே பலமுறை முயன்றவன் போல நேமி முயலவே இல்லை. ஆனால் கைகளை நீட்டிக் கொண்டிருந்தான்.

நேமியின் வேதனை மாதுவைக் கிழித்துக் கொண்டிருந்தது. முகம் தெரியுமா என எட்டி எட்டிப் பார்த்தான். சிலையாய் இருந்தது முக்காடு. அவள் கைகளிலிருந்து விளக்கை எடுத்தான் மாது. மறுபடியும் விளக்கு அணைந்தது. அணைந்த விளக்கை நீட்டிக்கொண்டிருந்த நேமியின் கைகளில் வைத்தான். விளக்கு உயிருடன் வந்தது. நேமியின் கண்கள் அகலமாய் விரிந்தது. நூற்றாண்டுகளாய்ப் பிழைக்காத ஒளி உயிருடன் ஒளிர்வதைக் கண் துவளாமல் பார்த்தான். மாதுவின் கைகளில் உயிரை விடுவதும் நேமியின் கைகளில் உயிரைப் பெறுவதுமாக அகல்விளக்கு செத்துப் பிழைத்துக் கொண்டிருந்தது.

நேமியின் கைக்கு நேரடியாய் மாறமுடியா அவ்வொளி மாதுவின் கைகளுக்காய் பல நூறாண்டுகளாய் பூட்டுக்குள் உறைந்திருக்கிறது.

நேமியின் கைகளில் சுடர்விட்ட அவ்வொளியில் கதவிற்குப் பின்னால் இருள் வளர்ந்தது. முக்காடு மெல்ல ஒளியைக் குறைத்தது. கதவுகள் ஒன்றையொன்று நெருங்கிக் கொண்டிருந்தது. மாளிகையில் இருள் முடிபோட்டது போல் தூணில் மாதுவைக் கட்டியிருந்தது. அகல்விளக்கின் ஒளியில் நேமி கரித்துண்டு கொண்டு எதையோ வரையத் துவங்கினான். உடலின் இரத்தம் சொட்டு கூட மிச்சமில்லாதது போல் வறண்டு சரிந்தான் மாது.

இரவை உரித்துக்கொண்டு பொழுது கவிழ்ந்தது. கருக்கல் பொட்டு பொட்டாய்ப் பனிச்சாரலில் கரைந்து கொண்டிருக்கக் கண்விழித்தான் மாது. மாளிகையின் கதவுகளில் அந்தப் பெரிய பூட்டு அசைவின்றிக் கட்டப்பட்டிருந்தது. அவனுக்கு நேர் திண்ணையில் நேமி இல்லை.  எழுந்து திரும்பி கோவிலைக் கண்டான். கோவிலின் வாசலில் அதன் கதவுகளை வெறித்தவனாய் நேமி நின்று கொண்டிருந்தான். கோவில் பூட்டப்பட்டிருந்தது.

நேமி வரைந்து கொண்டிருந்த இடத்தில் புது கறுப்புத் திட்டு அப்பியிருந்தது. ஓடிச்சென்று அதைக் கண்டான். முக்காட்டை நீக்கிய பெண்ணொருத்தியின் முகம். அவளின் முகத்தில் அகல்விளக்கு கவிழ்ந்திருந்தது.எண்ணெய்யொழுக பேரழகி ஒருத்தியின் முகம் கலங்கலாய்த் தெரிந்தது. பெரிய மூக்குத்தியும் வில்லான புருவங்களும் பெருங்காமச் சிலையொன்றைக் காட்டியது.

தன் நெஞ்சில் மூன்று முறைத் தட்டிக் கொண்டான் மாது. ஓவியத்தின் மேல் ஊறியிருந்த எண்ணெய்யை மெல்ல ஒதுக்கப் பார்த்தான். முகத்தின் முக்கியப் பாகங்கள் எல்லாமே எண்ணெய்யுடன் கலந்தது. ஓவியம் இப்போது எதையும் காட்டுவதாய் இல்லை.

கையில் பிசுபிசுத்த கரியுடன் நேமியைப் பார்த்தான். நேமி இப்போது அங்கில்லை. கோவிலின் முன் நின்று கொண்டிருந்த நேமி இப்போது கோவிலின் முன் இல்லை. தேரை ஒட்டி யாரோ நிற்பது தெரிந்தது. தனம் நின்று கொண்டிருந்தாள். தனத்தை மாதுவிற்கு அடையாளம் தெரியவில்லை.

ஓவியத்தை வழித்து விளக்கிற்குள் புகுத்தினான். தீயே பொருத்தாமல் தீபம் ஒன்றை ஏந்திக் கொண்டான். கதவருகே அமர்ந்து இல்லாத ஒளியில் அவளைத் தேடினான். காதுகளைக் கொண்டும் துழாவினான். நுணுங்கிக் கிடந்த கரித்துண்டில் நினைவில் இருக்கும் அவள் முகத்தை வரையத் துவங்கினான். நேமியின் திண்ணையில் மாதுவின் நிர்வாணம் உலரத் துவங்கியது.

நேமியை அதன் பிறகு யாருமே பார்க்கவில்லை. கோவிலுக்குள் இருந்த மல்லிநாதர் சிலை இப்போதெல்லாம் உயரமாய்த் தெரிவதாய் மக்கள் பேசிக்கொண்டனர்.

1 COMMENT

  1. நல்ல மொழியில் சொல்லப்பட்ட கனவும் நினைவுமாய் மயக்குகின்ற சிறுகதை. வாழ்த்துகள் அருணா !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.