உலகத்தையே தன் உள்ளங்கைகளுக்குள் வைத்திருக்கும் ஒரு நாட்டை அவ்வப்போது இயற்கை பதம் பார்த்துச் செல்கிறது. கல்வி, தொழில்நுட்பம், ராணுவம், அறிவியல், விஞ்ஞானம், விவசாயம், பொருளாதாரம், விண்வெளி ஆராய்ச்சி என சகல பக்கமும் பலம் வாய்ந்த ஜாம்பவானாக விஸ்வரூபம் எடுத்த அமெரிக்காவை விடாது துரத்துகிறது இயற்கை அனர்த்தங்கள்.
இயற்கை அனர்த்தங்கள் பரவலாக உலகின் எல்லா நாடுகளிலும் நிகழ்ந்தாலும் அமெரிக்கா போன்ற சர்வ வல்லமையும் பொருந்திய ஒரு வல்லரசும் ஏன் அதிகம் பாதிக்கப்படுகிறது? நவீன தொழில்நுட்பங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் இவர்களால் ஏன் இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க முடியவில்லை..?
மலைகள், காடுகள், புல்வெளிகள், பாலைவனங்கள், என அத்தனை மாறுபட்ட இயற்கை வளங்களையும் தன்னகத்தே கொண்ட ஒரு அற்புதமான நாடு அமெரிக்கா. அதே நேரம் இந்த மாறுபட்ட நிலப்பரப்பு தான் காற்று, நீர், நெருப்பு என பூமியின் மேற்பரப்பில் உள்ள சகல சக்திகளாலும் உருவாகும் அத்துனை இயற்கை ஆபத்துகளுக்கும் ஏதுவாகி விடுகிறது. பூகம்பங்கள், எரிமலைகள், பனிப்புயல், சூறாவளி, புயல், காட்டுத்தீ, நிலச்சரிவு, பனிச்சரிவு, வெள்ளம், வறட்சி, வெப்ப அலைகள் மற்றும் பல இயற்கை ஆபத்துகளுக்கும், பேரழிவுகளுக்கும் அமெரிக்காவின் வானிலை மற்றும் புவியியல் அமைப்பே அழைப்பு விடுத்து விடுகிறது.
“அமெரிக்கா பல்வேறு வகையான இயற்கை அபாய நிகழ்வுகளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது” என்று வட அமெரிக்காவின் புவியியல் ஆய்வின் செயல் துணை இயக்குனர் டேவிட் ஆப்பில்கேட் கூறுகிறார். அமெரிக்காவின் எல்லா பிரதேசங்களும் இயற்கை அனர்த்தங்களின் ஹாட்ஸ்பாட்டா என்றால், ஆம் சில ஆபத்துகள் அமெரிக்காவின் கிட்டத்தட்ட ஒவ்வொரு மூலையிலும் காணப்படுகிறது என்பதே உண்மை. புவியியலில் என்னென்ன இயற்கை சீற்றங்கள் அட்டவனைப்படுத்தப் பட்டுள்ளதோ, அவை அனைத்தும் அமெரிக்காவில் காணப்படுகிறது..
ஆனாலும் அசைந்து கொடுக்குமா வல்லரசு?
நாம் நிற்கும் இடத்தில் நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்கு நூறடிக்கும் மேல் ஒரு பெரிய பள்ளம் திடீரென்று தோன்றி அப்படியே அதன் சுற்று வட்டராத்தை மொத்தமாக விழுங்கி விடுகின்றது என்றால் எப்படி இருக்கும்? நினைக்கவே கதிகலங்க வைக்கும் இது அமெரிக்காவின் சில மாகாணங்களில் அடிக்கடி நிகழும் ஒரு நிகழ்வு.
The American Geosciences Institute-ன் அறிக்கையின் படி புளோரிடா, டெக்சாஸ், அலபாமா, மிசோரி, கென்டக்கி, டென்னசி, மற்றும் பென்சில்வேனியாவில் இவ்வாறான sinkholes அதிகளவில் காணப்படுகிறது. பூமிக்கு உள்ளே இருக்கும் பல அடுக்கு படிமங்களில் லைம் ஸ்டோன் எனப்படும் சுண்ணாம்புக்கற் பாறைகள், டோலோஸ்டோன் (dolostones) போன்ற கார்பனேட் பாறைகள் மழை நீர் நிலத்தடியில் உட்புகும் போது மிக இலகுவாக கரைகிறது. இவ்வாறு கரையும் போது, பூமியின், மேல் அழுத்தம் தாங்காமல் நிலம் உள்வாங்கப்படுகிறது.
அமெரிக்காவின் புளோரிடாவில் இவை அடிக்கடி நடக்கும் ஒரு நிகழ்வு. ஏனெனில் புளோரிடா தீபகற்பத்தின் நிலப்பகுதி கார்பனேட் பாறைகளால் ஆனது. இந்த கார்பனேட் பாறைகள் நிலத்தடி நீரை சேமித்துக் கடத்துகின்றன. இவை மெதுவான இரசாயன செயல்முறை மூலம் கரையும் போது கார்ஸ்ட் நிலப்பரப்பு என்று சொல்லப்படும் சிதைந்த படிவு சேர்ந்த நிலப்பகுதியாக அந்த நிலப்பரப்பு மாறுகிறது. இவ்வாறான நிலப்பரப்பு புளோரிடா முழுவதும் காணப்படுகின்றன. “Golly Hole” என்று அழைக்கபடும் மிகப்பெரிய சிங்க்ஹோல் அலபாமா மாநிலத்தில் பதியப்பட்டுள்ளது. புளோரிடா தீயணைப்பு மீட்பு திணைக்களத்தின் கூற்றுப்படி, கடந்த ஜூலை மாதம் கூட புளோரிடாவில் நிலக்கீழ் குழிகள் பல தோன்றி உள்ளன.
அமெரிக்காவை நிலைகுலையச் செய்யும் மற்றுமொரு இயற்கை அனர்த்தம் வெள்ளம் மற்றும் மண்சரிவு. தென் கரோலினா பல்கலைக்கழகத்தின் அபாயங்கள், பாதிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Hazards & Vulnerability and Research Institute at the University of South Carolina) தலைவர் சூசன் கட்டர் “வெள்ளம் என்பது அமெரிக்காவில் எங்கும் காணக்கூடிய அபாயமாகும். நதிகள் மற்றும் கடற்கரையோரங்கள் குறிப்பாக வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன, வறண்ட பகுதிகள் வறட்சியை எதிர்கொள்கின்றன. நிலச்சரிவுகளும் பரவலாக உள்ளன” என்கிறார்.
NOAA (National Oceanic and Atmospheric Administration) இன் கூற்றுப்படி, அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் வெள்ளம் சராசரியாக குறைந்தது 90 பேரைக் கொல்கிறது. அமெரிக்காவில் பெரும்பாலான வெள்ள இறப்புகள், கார்கள் மற்றும் பிற வாகனங்களில் மக்கள் அடித்துச் செல்லப்படுவதால் ஏற்படுகின்றன. மிசூரி மற்றும் மிசிசிப்பி நதிகளின் கிளை நதிகள் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் கரை கடக்கின்றன. பருவகால வெப்பநிலை அதிகரிக்கும் போது, பனி ஆரம்பத்தில் உருகி, நதிகளின் நீர் மட்டத்தை அதிகரிக்கின்றன. அதே நேரத்தில் வசந்த காலத்தில் பொழியும் மழைத் தண்ணீரும் சேர்ந்து கொள்ள, ஆறுகள் பெருக்கெடுத்து பெரும் அழிவுகளை ஒவ்வொரு ஆண்டும் உண்டாக்கிச் செல்கின்றன. டெக்சாஸின் பரந்த பூகோள நிலப்பரப்பில், டல்லாஸின் வடக்கிலிருந்து சான் அன்டோனியோவின் தெற்கே உள்ள பகுதிகள் வரை அதிகளவு வெள்ளத்தால் பாதிக்கப்படுவதால் இந்த முழு மண்டலமும் “Flash Flood Alley” என்று குறிப்பிடப்படுகிறது.
சூறைக்காற்றும் புயலும் (Hurricanes and tornadoes) அமெரிக்க மக்களின் அன்றாட வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த துயரம். “Tornado Alley” என்று அழைக்கப்படும் பிரதேசம் டகோட்டாஸின் தெற்கிலிருந்து டெக்சாஸ் வரை நீண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 1,200 க்கும் மேற்பட்ட டோர்னேடோக்கள் அமெரிக்க மண்ணைத் தாக்குகின்றன. இது உலகின் ஏனைய பகுதிகளை விட நான்கு மடங்கு அதிகமாகும். ஏன் அமெரிக்காவிற்கு மட்டும் இந்த துயரம்?
தரைக்கு அருகே உள்ள வெப்பக் காற்றும், வளிமண்டலத்தில் இருக்கும் குளிர்ந்த காற்றும் ஒன்றுக்கொன்று வெவ்வேறு வேகங்களில் அல்லது திசைகளில் மோதும் போது காற்றின் அடர்த்தி காரணமாக கண்ணுக்குத் தெரியாத ஒரு சுழல் போன்ற அமைப்பு உருவாகும். அடர்த்தியைப் பொறுத்து இது அதி வேகமான காற்றாக உருவாகுகிறது. இந்த காரணிகள் அனைத்தும் உலகில் ஒரு சில இடங்களில் மட்டுமே சரியாகப் பொருந்தி வருகின்றன. துரதிஷ்டவசமாக அமெரிக்கவும் அதில் ஒன்று. அதே போல உலகிலேயே அதிகளவிலான சூறைக்காற்று உருவாகும் இடங்களில் அமெரிக்கா முதலிடம் பெறுகிறது. தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (National Oceanic and Atmospheric Administration (NOAA)) அறிக்கையின் படி Tornado Alleyஇல் உள்ள மாநிலங்களான டெக்சாஸ், அயோவா, ஓக்லஹோமா, கன்சாஸ், நெப்ராஸ்கா, தெற்கு டகோட்டா, கொலராடோ, நியூ மெக்ஸிகோ போன்ற இடங்களில் உலகின் பல மூர்க்கமான டோர்னேடோக்கள் உருவாக்குகின்றன.
அமெரிக்காவை நடுநடுங்க வைக்கும் இயற்கை அனர்த்தங்கள் இத்தோடு முடிந்து விட்டனவா என்றால் இல்லை.. அமெரிக்க காடுகளில் பற்றியெறியும் காட்டுத் தீ பல அரிய தாவர மற்றும் வன உயிர்களை காவு வாங்குவதோடு, வளி மண்டலத்தையும் பெருமளவில் மாசு படுத்தி சூழலியலுக்கு ஈடு செய்ய முடியா சேதத்தை விழைவித்துச் செல்கிறது.
தீயணைப்பு சூழலியல் நிபுணர் (Fire ecologist) மெலிசா ஃபோர்டரின் கூற்றுப்படி அமெரிக்காவின் தேசிய வனப் பூங்காக்களில் ஏற்படும் காட்டுத் தீயில் சுமார் 60 சதவீதம் மனிதர்களின் அலட்சியப்போக்காலும் கவனயீனத்தாலும் ஏற்படுகிறது என்கிறார். ஆயினும் அதிகரித்து வரும் வெப்பமான காலநிலையும், கடுமையான வறட்சியும் கூட சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்காவின் மேற்குப் பகுதிகளில் காட்டுத்தீக்கு ஏதுவான நிலைமைகளை உருவாக்கியுள்ளன. National Interagency Fire Center’s situation-இன் நிலைமை அறிக்கை, ஜூலை 19, 2021 வரையில் நாடு முழுவதும் 2.6 மில்லியனுக்கும் அதிகமான ஏக்கர்களை எரித்து சாம்பலாக்கிய மொத்தம் 35,086 காட்டுத்தீக்களை பட்டியலிட்டுள்ளது. தற்போது அமெரிக்காவின் மேற்கு மற்றும் அருகிலுள்ள மாநிலங்களில் குறைந்தது 70 பெரிய காட்டுத்தீக்கள் எரிந்து கொண்டிருக்கின்றன என அதிரச்சியூட்டும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா எனும் ஆளுமையை அசைத்துப் பார்க்கும் இயற்கையின் சீற்றம் சூறாவளி, புயல், வெள்ளம் வடிவில் மட்டுமல்ல, இன்னும் பல்வேறு வடிவங்களிலும் தொடர்கிறது.. தேசிய மின்னல் கண்டறிதல் வலையமைப்பை இயக்கும் வைசலா (Vaisala) அறிக்கையின் படி, 2020ஆம் ஆண்டில் சுமார் 17 மில்லியன் மின்னல் தாக்குதல்கள் அமெரிக்கா கண்டத்தின் வானத்தை ஒளிரச் செய்தன என்கின்றன. மின்னல் தாக்குதலினால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான தீ விபத்துக்கள் ஏற்படுவதோடு, இவை காட்டுத்தீயையும் பெட்ரோல் ஊற்றி பற்றியெரிய வைத்து விடுகிறது. தேசிய வானிலை சேவை மையம் (The National Weather Service) அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை, நாட்டின் மின்னல் தலைநகரம் என்று வர்ணிக்கிறது. புளோரிடாவின் வெதுவெதுப்பான நீரால் சூழப்பட்டுள்ள தனித்துவமான புவியியல் அமைப்பு, இடியுடன் கூடிய மழை பெய்ய தேவையான அனைத்து காரணிகளையும் இயற்கைக்கு இலகுவாக அமைத்துக் கொடுத்து விடுகிறது என்று NWS கூறுகிறது.
அமெரிக்காவின் முழு வெஸ்ட் கோஸ்ட்டும் உலகின் பல எரிமலைகளைக் கொண்டுள்ள பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள ஒரு பெரிய குதிரை லாட வடிவிலான ரிங் ஆஃப் ஃபயர் மீது அமைந்துள்ளது. அமெரிக்காவின் புவியியல் ஆய்வு (U.S. Geological Survey) கணக்கெடுப்பின் படி, பூமியில் ஏற்படும் பூகம்பங்களில் 80 சதவீதம் இங்கு தான் நிகழ்கிறது என்கிறார்கள். அமெரிக்கா கண்டம் ஏழு முக்கிய டெக்டோனிக் தகடுகளை உள்ளடக்கியது. டெக்டோனிக் தகடுகள், பூமியின் மேலோட்டத்தை பிரிக்கும் பெரிய பாறைகளின் அடுக்குகளாகும். இவை பூமியின் நிலப்பரப்பை மறுவடிவமைக்க தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கும். அமெரிக்காவின் இந்த பூகோள அமைப்பு அங்கு அதிகளவிலான பூகம்பத்தை ஏற்படுத்திச் செல்கிறது. முக்கியமாக கலிபோர்னியா மாநிலம் 39,768,522 சதுர மைல் பரப்பளவு கொண்ட உலகின் மிகப்பெரிய பசிபிக் தட்டின் மடிப்புகளில் அமைந்துள்ளதால் இங்கு பூமி அடிக்கடி ஆட்டம் காட்டி விட்டுச் செல்கிறது..
சரி.. இன்னும் ஏதேனும் மிச்சமுள்ளதா என அச்சத்தோடு கேட்கும் போது, பதறவைக்கும் தகவல்களோடு வந்து பதைபதைக்க வைக்கிறது தகதகத்து எரிந்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் எரிமலை குழம்புகள்.. அமெரிக்க புவியியல் ஆய்வறிக்கை அண்மையில் வெளியிட்ட தரவரிசைப்படி, அமெரிக்காவில் மிகவும் ஆபத்தான எரிமலையாக ஹவாயில் உள்ள கொலாயுவா முதலிடத்திலும், வாஷிங்டனின் மவுண்ட் செயின்ட் ஹெலன்ஸ் மற்றும் மவுண்ட் ரெய்னர் அடுத்த இரண்டு இடங்களையும் பிடித்திருக்கின்றன.. உலகின் மிக அதிகமான எரிமலைகள் உள்ள நாடுகளில் அமெரிக்கா முக்கிய இடம் பெறுகிறது. இது பூமியில் செயலில் உள்ள (Active Volcanos) மிக முக்கிய எரிமலைகளில் 10 சதவீதத்திற்கும் அதிகமான பகுதியாகும். சமீபத்திய அறிக்கை ஒன்று 161 எரிமலைகளை எந்நேரமும் வெடிக்கலாம் என்ற அபாய மணி கட்டி அடையாளம் காட்டியுள்ளது.
அவற்றில் பெரும்பாலானவை கலிபோர்னியா, வாஷிங்டன், ஓரிகான் மற்றும் அலாஸ்கா வழியாக நாட்டின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளன. மறுபடியும் “ஏன் அமெரிக்காவில் மட்டும் இவ்வளவு எரிமலைகள் காணப்படுகின்றன” என்ற கேள்விக்கு அதன் பூகோள அமைவிடத்தை நோக்கி கை நீட்டுகிறது புவியியல் ஆய்வுகள். எரிமலைகள் பொதுவாக பூமியின் டெக்டோனிக் தகடுகளுக்கு இடையிலான எல்லையில் உருவாகுகின்றன, அதனால்தான் இயற்கையாகவே அதிகளவு டெக்டோனிக் தகடுகளுக்கு மத்தியில் அமையப்பெற்றுள்ள அமெரிக்காவில் எரிமாலைகளுக்கும் பஞ்சமில்லாமல் இருக்கிறது.
இயற்கையின் அத்தனை ருத்ரதாண்டவங்களும் ஒரே இடத்தில் குவிந்திருக்கும் அமெரிக்காவில் சென்ற வருடம் மட்டும் வெப்பமண்டல சூறாவளிகளுடன் தொடர்புடைய 7 பேரழிவுகள், 13 கடுமையான புயல்கள், 1 வறட்சி, 1 காட்டுத்தீ என மொத்தம் 22 நிகழ்வுகள், நாட்டிற்கு 95 பில்லியன் டாலர் சேதத்தை ஏற்படுத்தின.
கொரோனா பேரலை ஒரு புறம் அமெரிக்காவை அப்படியே சுருட்டி சிதைத்துப் போட்டது என்றால் மறு புறம் இயற்கை பேரழிவுகள் பல பில்லியன் அமெரிக்க டாலர் சேதத்தை விழைவித்துச் சென்றது. ஆகஸ்ட் 2020 லாரா சூறாவளி ($19 பில்லியன் டாலர்), டிசம்பர் வரை தொடர்ந்த மேற்கத்திய காட்டுத்தீ ($16.5 பில்லியன் டாலர்), ஆகஸ்ட் 2020 டெரெகோ ($11 பில்லியன் டாலர்), செப்டெம்பர் மாதம் நிகழ்ந்த Hurricane Sally ($7.3 பில்லியன் டாலர்) ஆகியவை 2020ஆம் ஆண்டின் மிகவும் விலையுயர்ந்த துர் நிகழ்வுகளாகப் பதிவாகியது.
இது தொடரும் துயரமாகுமா, இல்லை இதற்கு ஒரு முடிவு ஏற்படுமா என்ற கேள்விக்கு,
“வரவிருக்கும் தசாப்தங்களில், காலநிலை மாற்றம் அமெரிக்காவில் இயற்கை ஆபத்துகளின் வடிவத்தை மாற்றப்போகிறது. பூகம்பங்கள் மாறாது, எரிமலை வெடிப்புகள் மாறாது, ஆனால் புவி இயற்பியல் அல்லாத பிற ஆபத்துகள் அனைத்தும் மாறும்”
என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். பாரிய சூறாவளி, மிகப்பெரிய புயல், கடும் வறட்சி மற்றும் காட்டுத்தீ ஆகியவற்றிலிருந்து அதிக சேதம் ஏற்படும். அடுத்த 50 ஆண்டுகளில் பசிபிக் வடமேற்கு ஒரு பெரிய பூகம்பத்தால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. மூளை உண்ணும் அமீபா போன்ற நோய்களை உண்டாக்கும் ஒட்டுண்ணிகள், நோய்களைச் சுமக்கும் உண்ணி போன்றன அவற்றின் எல்லையை விரிவுபடுத்தி நோய்களை மக்களுக்கு பரப்பக் கூடும் என்று மேலும் அச்சுறுத்துகிறார்கள்.
இருந்தாலும் இவற்றுக்கெல்லாம் அமெரிக்கா அசருவதாக இல்லை.
15ம் நூற்றாண்டு வரை அமெரிக்கா என்ற ஒரு நாடே இருக்கவில்லை. செவிவிந்தியர்களின் கூடாரமாக, எந்த ஒரு அபிவிருத்தியும் இல்லாது இருந்த ஒரு கண்டம் இன்று, உலகில் மட்டுமல்ல மனித வரலாற்றிலேயே மிகவும் முன்னேறிய, பலம் பொருந்திய ஒரு நாடக விஸ்வரூப வளர்ச்சி பெற்று நிற்கிறது.
50 மாகணங்களிலும் ஆயிரக்கணக்கில் பிரச்சனைகளை வைத்துக் கொண்டும் இன்று வரை யாராலும் அசைத்தும் பார்க்க முடியாத வல்லரசாக வளர்ந்து நிற்கிறது. எதிர்த்து நிற்பது இயற்கை மட்டுமே என்ற போதிலும், சிறிதும் சளைக்காமல், வரும் அத்தனை அனர்த்தங்களையும் அநாயசமாக கையாண்டு, மீண்டு வருகிறது. விழுந்தாலும் குதிரை போல விழுந்து, அடுத்த நொடியே குதித்து எழுந்து, முன்பை விட இன்னும் வேகமாக ஓடுகிறது அமெரிக்கா.
09/11 தாக்குதல், அதிபர் மாற்றங்களால் ஏற்பட்ட சலசலப்பு முதல் சென்ற வருட கொரோனாவின் அதிரடித்த பதிப்பு வரை அவ்வப்போது அமெரிக்கா, மனிதக் காரணிகளால் ஆட்டம் காணத்தான் செய்கிறது. அரசோடும் சட்டங்களோடும் ஒத்துழைக்காத மக்கள் அங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஊழலும் அரசியலும் அங்கும் இல்லாமல் இல்லை. இருந்தாலும் அமெரிக்கா தான் இன்று வரை உலக வல்லரசு. பொருளாதாரத்திலும், தொழில்நுட்பத்திலும், ராணுவ பலத்திலும், மக்கள் ஆளுமையிலும் என எந்த வகையிலும் அமெரிக்காவை மிஞ்ச ஒரு நாடு இல்லை.
எவ்வளவு தான் முன்கூட்டிய அவதனிப்புகள் மூலம் ஆயத்தமாக இருந்தாலும், சொல்லாமல் வந்து சிதறடிக்கும் இயற்கை சீற்றத்தைக் கூட லாவகமாக கையாண்டு, ஒரு துளி கூட தன் இருப்பில், தன் ஆளுமையில், தன் வளர்ச்சியில், தன் அபிவிருத்தியில் பின் தங்கிப் போகாது, வல்லரசு என்ற பட்டத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவிடம் இருந்து மற்றைய நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இன்னும் நிறையவே உள்ளது.
-றின்னோஸா