அவதானிப்பும் கரைதலும்: கவிஞர் ஆசையின் ‘கொண்டலாத்தி’ தொகுப்பை முன்வைத்து

வதானித்தல் என்பது எதிரே இருக்கும் சூழலுக்குள் உட்புகாமல், ஒரு பாதுகாப்புத் திரைக்கு வெளியே நின்று கவனிக்கும் செயல்பாடு. சூழலோடு கரைந்துபோக பிரக்ஞையின் துணையோடு நிகழும் அவதானிப்பு என்ற செயல்பாடு நழுவி அகல வேண்டும். அந்த நழுவல்கூட கவனச்சுவர்களை உரசி புலன்களை எழுப்பி விடாத மெல்லமைதியுடன் நிகழ வேண்டும்.

காட்சிப் படிமங்களை வெளிப்படுத்தும் காட்சிப்பொருட்களின் அருவமான தளத்தை புலன்கள் எட்டும்போது அங்கு கரைதல் நிகழ்கிறது. ஒளியை உமிழும் கருவியும் அதே ஒளியைப் பதிவு செய்யும் கருவியும் ஒன்றே என ஆகும் இந்நிலையில் இடைப்பட்ட கால இடைவெளி பூஜ்யமாகிறது. இடையே இருந்து வந்த பாதுகாப்புத் திரை காணாமல் போகிறது.

அறியாமையோடு இயற்கையை நேசிக்கும் கண்கள் இயல்பான ஞானம் கொண்டுவிடுகின்றன. எவ்விதக் கற்பிதங்களின் சுவடுகளும் காட்சிகளை பகுத்தறிவுக்கு விளக்க வேண்டிய அவசியமற்ற ஒருமை நிலை சலனமற்றது. தன் மீது விழும் நிழல்களையும் பிம்பங்களையும் பிரயத்தனமின்றி தன்னியல்பாக தன் மேற்பரப்பில் பிரதிபலிக்கும் நீர்தேக்கம், தன் பிரதி உருவத்தை பிரதிபலித்துக் காட்டும் நீர்த்தேக்கத்தின் இருப்பின் பிரக்ஞையின்றியே தன் இருப்பை ஸ்திரப்படுத்திக் காட்டும் காட்சிப்பொருள், இவ்விரண்டுக்கும் இடையேயான சங்கேதப் பரிமாற்ற இடைவெளியில் நிலவும் ஆதிகால மௌனம். இந்த மௌனத்தின் அரவணைப்பில் தன்னைக் கரைத்து சாட்சியக் குரலை அவதானித்து இருபுற உரையாடல்களின் குளிர்மையையும் வெதுவெதுப்பையும் சொடுக்கில் உடைந்துவிடும் நீர்க்குமிழியைக் கைக்குக் கை மாற்றுவது போல் பத்திரமாக ஏந்தி நம் மனக்கரங்களில் ஒப்படைக்கிறது கவிஞர் ஆசையின் கவிதை மொழி.

விதவிதமான பறவைகளைப் பற்றிய நுணுக்கமான அசைவுகளையும் அவற்றின் தனித்துவமான உருவ அமைப்புகளையும் மெச்சுக் கொட்டும் உள்ளப்பூரிப்பில் தொனிக்கும் ஆசையின் கவிதை மொழியின் வியப்பு, காணாததைக் கண்டுவிட்ட அறிவியலாளனின் வியப்பு அல்ல, மாறாக தன்னைச் சுற்றி நிறைந்திருக்கும் இயற்கையின் பூரணத்தில் கரைந்து திளைக்கும் சிறுவனின் மனவியல்பும் எளிமையும் கூடிய பாந்தமான வியப்பு.

ஆசையின் கொண்டலாத்தி பிரக்ஞைப் பூர்வமான “அவதானிப்பு” மற்றும் அதற்கு அப்பாற்பட்ட “கரைதல்” இந்த இரண்டு தளங்களிலும் நிகழும் சூழல் விந்தைகளையும் ஸ்பரிசித்து உணர வைக்கிறது. ‘தையல்சிட்டு பறந்து சென்ற பின்’, ‘இந்தக் கணத்தின் நிறம் நீலம்’, ‘பிரபஞ்சங்களின் தோற்றம்’, ‘அதே இடம்’ ஆகிய கவிதைகள் கரைதலின் வெளிப்பாட்டின் உதாரணங்களாகவும் ‘முதல் தோசை’, ‘புள்ளித் தேன்’, ‘பெயர்களின் பயனின்மை’, ‘குக்குறுவான் வைரங்கள்’ ஆகிய கவிதைகளில் அவதானிப்புச் சுவை கூடியதாகவும் அமைந்துள்ளன. அவதானிப்பு மற்றும் கரைதல் இரண்டின் கூட்டுச்சுவையோடு உருவாகி வந்திருக்கும் கவிதைகளாக ‘காற்றுக்கொத்தி’, ‘மழைக்கொத்தி’ ஆகியன தனிச்சிறப்பு கொண்டு திகழ்கின்றன.

வெளியே அகமாகி, கண் சிமிட்டும் கணத்தில் இணைந்து துண்டித்துப் போன நிகழ்வின் அதிர்வலையை உருவாக்குகிறது, “தையல்சிட்டு பறந்து சென்ற பின்” என்ற கவிதை

 

தையல்சிட்டின் கனம்தான்

இருக்கும்

இந்தக் கணம்

 

அதிர்ந்துகொண்டிருக்கிறது

அது

தையல்சிட்டு பறந்து சென்ற பின்

அதிரும்

இலைக்காம்புபோல

 

ஒருமுறைக்கு மறுமுறை வாசிப்பில் வேறு வேறு கற்பனைகளைக் காட்டி இன்னதென்று வரையறுத்துக் கூற முடியாத ஆனந்தத் தத்தளிப்பில் அலையாட வைக்கிறது, “இந்தக் கணத்தின் நிறம் நீலம்” என்ற கவிதை

 

தளும்பத் தளும்பப் பொங்கும் நீலம்

சிறகிலிருந்து நூலாய்ப் பிரியும்

ஒளியும் நனைய காற்றும் நனைய

பெய்யும் மழையின் பெயர் நீலம்

 

நுரைத்து நுரைத்து அலைகள் பாய்ந்து

தெறிக்கும் துளியில் ஒளியும் ஏறி

விரியும் வில்லில் தொடங்கும்

இந்த ஆற்றின் பெயர் நீலம்

 

கரையக் கரையப் பறந்து சென்று

முடியும் புள்ளியில் மூழ்கும் மீன்கொத்தி

அலைகள் தோன்றி அதிரும்

இந்தக் கணத்தின் நிறம் நீலம்

 

‘காற்றுக்கொத்தி’, ‘மழைக்கொத்தி’, ‘பறவைகளின் வரைபடம்’ என்ற தலைப்புகளில் இடம்பெறும் மூன்று கவிதைகள் ஒரு நாவலின் அடுத்தடுத்த மூன்று அத்தியாயங்கள் போன்ற ஒற்றுமையான தொடர்புகளைக் கொண்டுள்ளன. மூன்றிலும் வரும் பெண் முதலாமவதில் அரூபமான ஒன்றை அறிந்தும் இரண்டாமவதில் ஒன்றை அறிவித்தும் மூன்றாமவதில் அறிதலுக்கு அப்பாற்பட்ட முக்தி நிலையையும் எய்துகிறாள்.

‘முதல் தோசை’ என்ற கவிதையில், அடுப்பைப் பற்ற வைத்ததும் உணவு கேட்டு வந்து அமர்கிறது காகம் ஒன்று. அதன் கரைதலில் ஒரு அதட்டல். வீட்டு உறுப்பினர்கள் பற்றிய எண்ணமேதுமில்லை அதற்கு. கவிதையின் முடிவு இவ்வாறு வருகிறது,

 

காகமே

நீ உரிமையாய்க் கேட்கும்போது

திருட்டுப் பொருளைத்

திருப்பிக் கொடுப்பதுபோல்

தருகிறேன் உன்னிடம்

ஆற வைத்த

முதல் தோசையை

 

தொகுப்பில் உள்ள பிற கவிதைகளின் இயல்புகளை இன்னும் ஒளியுடன் மெருகேற்றிக் காட்டுகிறது, ‘சிறியதின் இடம்’ என்ற கவிதை. அதன் ஒரு பகுதியாக கீழ்கண்டவாறு வருகிறது.

 

விதிகள் தெரியாததால்

இவ்வளவு இயல்பாக

விளையாடி

வெற்றிகொள்கிறது

சகலத்தையும்

 

அவ்வளவு

உறுதியோடும்

இறுமாப்போடும்

அசைவற்ற நம்பிக்கையோடும்

வீற்றிருக்கும்

பிரம்மாண்டங்களின்

அஸ்திவாரத்தைச்

சுமந்து திரிகின்றன

இவ்வுலகின் நுண்மைகள்

வெகு இயல்பாக

 

அடையாளம் மற்றும் கணம் ஆகிய ஜாலங்களை மொழி கொண்டு நெய்கின்றன, ‘பெயர்களின் பயனின்மை’, ‘அதே இடம்’, ‘என் இடம்’ ஆகிய கவிதைகள்.

அறியாமைக் குணம் வைக்கும் நம்பிக்கை கடவுளின் ஸ்தானத்தை குற்றவுணர்வுக்குள்ளாக்கும் தவிர்க்க முடியாத தருணத்தைப் பதிவு செய்கிறது ‘அந்தத் தவிட்டுக்குருவி இறந்துகொண்டிருந்தது’ என்ற கவிதை. கச்சிதமான சிறுகதை உருவாகிவர விரிந்து கொடுக்கும் கணங்களை உள்ளடக்கிய கவிதையாக மிளிர்கிறது.

பிரபஞ்ச கடிகாரத்தின் நொடி முள்ளின் உருவகமாக காலத்தை அறிவிக்கிறது குக்குறுவான் பறவையின் ‘குக் குக் குக்’.

குடும்பக் கூட்டை ஒட்டுமொத்த பிரபஞ்சத்தை அடைகாக்கும் கர்வமும் அதட்டலும் கூடிய பாவனையில் அடைகாக்கிறது கரிச்சான். அதன் கரகரப்பான குரலும் துணிந்த தோரணையும் அவற்றைக் கவனத்தில் பொருட்படுத்தாத உலகின் அபாயங்களை நோக்கி தன் சுதந்திரத்தை பறைசாற்றும் தூய்மையில் தான் என்னே அழகு!

 

என்ன செய்ய முடியும் அதனால்

ஒரு பருந்து வந்தால்

பெருமழை அடித்தால்

அணுகுண்டு விழுந்தால்

விஷ வாயு கசிந்தால்

அணுஉலை வெடித்தால்

அவ்வளவு ஏன்

கிளையைப் பிடித்துச் சற்று உலுக்கினால்

 

ஒட்டுமொத்த உலகும்

அதற்கு எதிராக

 

என்ன செய்ய முடியும்

அதனால்

 

இருந்தும்

எல்லாவற்றுக்கும் எதிராக

அது கொண்டிருக்கிறது

ஒப்பற்ற ஓர் ஆயுதம்

 

இனிமையான

கரகரப்பான

அதட்டலான

அதன் குரல்

 

இயற்கையை அவதானித்தலும் இயற்கையோடு கரைதலும் சூழலின் மீது விழிப்புணர்வு தூண்டப்படும் கணத்தில் நிகழ்கின்றன. நிதானித்த விழிப்புணர்வு அருகிவரும் அவசரச் சூழலில் கண்முன்னே நொடிப்பொழுதில் நடந்து மறையும் இயற்கையின் அதிசயங்களை பிறருக்கான போதனையாக அல்லாமல் தன்னின் அகத்தில் பட்டு பிரதிபலிக்கும் பறவைகளின் ஒலிகள் மற்றும் பிரபஞ்ச இயக்கத்தோடு அவை நிகழ்த்தும் உரையாடல்களின் சங்கேத வடிவங்களில் தன் மனம்நிறைக்கும் சந்தோஷங்களைப் பதிவு செய்ய விரும்புவதே இப்படைப்பின் நோக்கமாகப் படுகிறது. அப்படிப் பார்க்கையில் இத்தொகுப்பு ஆரம்பத்தில் சூழல் மீதான கவனிப்பைக் கோரும் விதத்தில் மனிதர்களுக்கானதாகவும் பின் பறவைகளுக்கானதாகவும் ஒரு கட்டத்தில் இவ்விரண்டு இருப்புகளுக்கும் அப்பாற்பட்ட ஓர் அரூப நிலை இருப்பின் சாட்சியமாகவும் உருமாற்றம் கொள்கிறது.


டி.என். ரஞ்சித்குமார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.