இனிமை

து என்னுடைய குற்றமில்லை. எனவே நீங்கள் என்மேல் பழிபோடமுடியாது. நான் செய்யவில்லை; அது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அவளை என்னுடைய தொடைகளுக்கு இடையே இருந்து வெளியே இழுத்துப் போட்ட பிறகு ஏதோ தவறு ஏற்பட்டு விட்டது என்று உணர ஒருமணி நேரத்திற்கு மேல் ஆகவில்லை. உண்மையிலேயே தவறு தான். அவள் என்னைப் பயமுறுத்தி விட்டாள், அவ்வளவு கறுப்பு. நடுராத்திரிக் கறுப்பு, சூடான் நாட்டுக் கறுப்பு.  எனக்கு ஓரளவு வெளிறிய தோல், அதிகப்படியான மஞ்சள் என்று கூறப்படுகின்ற தலைமுடி, லுலாவின் அப்பாவிற்கும் அப்படித்தான். அப்புறம் எங்கள் குடும்பத்தில் யாருமே இந்த நிறத்துக்கு நெருங்கி வரமாட்டார்கள். தாரைத் தான் அதற்கு நெருக்கமாக நான் நினைக்க முடியும், ஆஸ்திரேலியாவின் நிர்வாண ஆதிக்குடியினரின் மயிர்போல. அவள் கறுப்பின மூதாதையினரின் தன்மையைத் திரும்பப் பெற்றவள் என்று நீங்கள் நினைக்கலாம். எதிலிருந்து எதற்கு? நீங்கள் எனது பாட்டியைப் பார்த்திருக்கவேண்டும். அவளை வெள்ளைக்காரி என்றே சொல்லலாம். வெள்ளைக்காரரைக் கல்யாணம் செய்துகொண்டாள்; அதன்பிறகு அவளது குழந்தைகள் யாரிடமும் ஒரு வார்த்தைகூடப் பேசியதில்லை. என்னுடைய அம்மா அல்லது சித்தியிடமிருந்து வந்த எந்தக் கடிதத்தையும் திறக்காமலேயே திருப்பி அனுப்பி விடுவாள். கடைசியில் செய்தி இல்லாத செய்திதான் வந்தது. அப்படியே அவள் இருக்கட்டும். அந்தக் காலத்தில் எல்லா பாதி கறுப்பினமும் பாதி வெள்ளை இனமும் கலந்த கலப்பு நிறத்தாரும், கால்வாசி கறுப்பு இரத்தம் ஓடுபவர்களும் அப்படித்தான் செய்தார்கள். – அதாவது அவர்களுக்குச் சரியான நிறமும் தன்மையும் உள்ள தலைமுடி இருந்தால். எத்தனை வெள்ளைக்காரர்களுக்கு அவர்களது இரத்தக் குழாய்களில் நீக்ரோ இரத்தம் ஒளிந்து கொண்டிருக்கிறது என்று உங்களால் கற்பனை செய்யமுடியுமா? உத்தேசமாகச் சொல்லுங்கள். இருபது சதவீதம் என்று கேள்விப்பட்டேன். என்னுடைய அம்மாவை, லுலா மேயை,  வெள்ளைக்காரி என்றே சொல்லலாம். ஆனால் அவள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவள் அந்த முடிவிற்காகத் தரவேண்டியிருந்த விலை பற்றியும் அவள் சொன்னாள். அவளும் எனது தந்தையும் நீதிமன்றத்திற்குத் திருமணம் செய்யச் சென்றபோது, இரண்டு விவிலிய நூல்கள் இருந்தன. இவர்கள் நீக்ரோக்களுக்காகவென்று வைக்கப்பட்டிருந்த திருவிவிலியத்தில் கைகளை வைத்தார்கள். இன்னொன்று வெள்ளையரின் கைகளுக்காக. திருவிவிலியம்! எப்படியிருக்கிறது என்று பாருங்கள். எனது அம்மா ஒரு பணக்கார வெள்ளைத் தம்பதியரின் வீட்டு மேற்பார்வையாளர். அவள் சமைத்த உணவைத்தான் அவர்கள் உண்பார்கள். அவர்கள் குளியல் தொட்டியில் அமர்ந்திருக்கும்போது அவர்களது முதுகைத் தேய்த்துவிடச் செய்வார்கள். அவர்களுக்கு நெருக்கமான வேறு எவற்றையெல்லாம் அவளைச் செய்யச் செய்வார்களோ கடவுளுக்குத்தான் தெரியும்.  ஆனால் பைபிளை மட்டும் தொடக்கூடாது.

சமூக கிளப்புகளில், குடியிருக்கும் பகுதிகளில், கோவில்களில், கல்லூரி பெண்கள் குழுக்களில், வெள்ளையரல்லாதவர்களுக்கான பள்ளிகளில்கூட தோல் நிறத்தைக் கொண்டு ( அதிகம் வெளிறிய தோலாக இருந்தால் நல்லது ) எங்களையே தனித் தனிக்குழுக்களாகப் பிரிப்பது நல்லதில்லை என்று உங்களில் பலர் ஒருவேளை நினைக்கலாம். ஆனால் பிறகு எப்படி கொஞ்சம் கண்ணியத்தைக் காப்பாற்றிக் கொள்ளமுடியும்? மருந்துக் கடையில் அவர்கள் எச்சில் துப்பும்போதும், பஸ் நிறுத்தத்தில் ஓரங்கட்டப்படுவதையும், நடைபாதை முழுவதையும் வெள்ளையருக்கு விட்டுவிட்டு சாக்கடையில் நடக்கவேண்டியிருப்பதையும், பலசரக்குக் கடையில் வெள்ளைக்கார வாடிக்கையாளருக்குக் காசில்லாமல் தரப்படும் பேப்பர் பைக்கு ஒரு நிக்கல் காசு தரவேண்டியிருப்பதையும் எப்படித் தவிர்க்கமுடியும்? கேவலமான பேச்சைக் கேட்கவேண்டியதைக் கூட விட்டுவிடுங்கள். இதுபற்றியும் இதற்கு  மேலுமே அதிகம் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் என்னுடைய அம்மாவின் தோல் நிறத்தினால், அவள் தொப்பியை அணிந்து பார்ப்பதையோ டிப்பார்ட்மெண்டல்  கடைகளில் கழிப்பறைகளைப் பயன்படுவதையோ யாரும் தடுக்கவில்லை. எனது அப்பா தனது காலணிகளைக் கடையின் முன்பகுதியிலேயே போட்டுப் பார்க்கலாம், பின்னறைக்குப் போகவேண்டியதில்லை. இரண்டுபேருமே ”கறுப்பு நிறத்தாருக்கு மட்டுமே,” என்று குறிப்பிட்ட நீரூற்றிலிருந்து தாகத்தால் செத்தால் கூடத் தண்ணீர் குடிக்கமாட்டார்கள்.

இதைச் சொல்வதற்கு எனக்கு வெறுப்பாகத்தான் இருக்கிறது. மகப்பேறுப் பிரிவில் தொடக்கத்திலிருந்தே குழந்தை, லுலா ஆன், என்னைச் சங்கடத்திற்கு உள்ளாக்கினாள்.  அவள் பிறந்தவுடன் இருந்த தோல், எல்லாக் குழந்தைகளையும் போலவே, – ஆப்பிரிக்கக் குழந்தைகள் உட்பட – வெளிறித்தான் இருந்தது. ஆனால் அது வேகமாக மாறிவிட்டது. அவள் என்னுடைய கண் முன்னாடியே கறு நீலமாக ஆனபோது எனக்குப் பைத்தியமே பிடித்துவிட்டது. – ஏனென்றால் ஒரு சில வினாடிகள் – அவளது முகத்தின் மேல் போர்வையை மூடி அழுத்திவிட்டேன். ஆனால் அதைச் செய்யமுடியாது. அவள் இந்தப் பயங்கர நிறத்தில் பிறந்திருக்கக் கூடாது என்று நான் விரும்பினால்கூட அதைச் செய்யமுடியாது. ஏதாவது அநாதை விடுதிக்குக் கொடுத்து விடலாமா என்று கூட நினைத்தேன். ஆனால் தங்கள் குழந்தைகளைக் கோவில் வாசலில் விட்டுச் செல்லும் தாய்மார்களில் நானும் ஒருத்தியாக இருக்க அஞ்சினேன். அண்மையில் ஜெர்மனியில் ஒரு தம்பதி பற்றிக் கேள்விப்பட்டேன். அவர்கள் பனிபோல வெண்மையானவர்கள். அவர்களுக்குக் கறுப்பு நிறக் குழந்தை. யாராலும் அதை விளக்க முடியவில்லை..  இரட்டைக் குழந்தைகளாம். அதில் ஒன்று வெள்ளை, இன்னொன்று கறுப்பு. அது உண்மையா என்று எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் என்னைப் பொறுத்தவரையில் அவளை வளர்ப்பது கறுப்புக் குழந்தை எனது மார்பை உறிஞ்சச் செய்வதாகத்தான் இருந்தது.  வீட்டுக்குப் போனவுடன் பாட்டில் பாலுக்குப் போய்விட்டேன்.

என்னுடைய கணவர் லூயிஸ் ஒரு சுமைதூக்கி. அவர் இரயில் நிலையத்திலிருந்து வந்தவுடன் எனக்குப் பைத்தியம் பிடித்ததிருந்தது போலப் பார்த்தார். குழந்தையை அவள் வியாழன் கிரகத்திலிருந்து வந்தது போலப் பார்த்தார். அவர் வழக்கமாகச் சபிக்கும் வார்த்தையெல்லாம் பேசமாட்டார். அதனால் அவர் “நாசமாகப் போக! என்ன நரகம் இது?” என்று சொன்னவுடன் பிரச்சனை வெடித்துவிட்டது என்று எனக்குப் புரிந்து விட்டது. இது தான் எல்லாவற்றிற்கும் காரணம். இதனால்தான் எனக்கும் அவருக்கும் சண்டைகள். எங்களது மணவாழ்க்கையைத் துண்டு துண்டாய் உடைத்துவிட்டது. மூன்று வருடங்கள் ஒன்றாக இருந்திருக்கிறோம். ஆனால் இவள் பிறந்தவுடன் என்னைக் குற்றம் சொல்லி, லுலா ஆனை அந்நியக் குழந்தை போல, அதற்கும் மேலாக ஒரு எதிரிபோல நடத்தினார். அவளை அவர் தொடவே இல்லை.

வேறு ஆணுடன் நான் ஒருபோதும் தொடர்பு வைத்துக்கொண்டதில்லை என்று என்னால் அவரை நம்பவைக்க முடியவில்லை. நான் பொய் சொல்கிறேன் என்பது பற்றி அவர் உறுதியாக இருந்தார். நாங்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தோம். அவளுடைய கறுப்பு அவருடைய குடும்பத்திலிருந்து வந்திருக்க வேண்டும், என்னுடைய குடும்பத்திலிருந்து அல்ல என்றேன். அப்போதுதான் அது மிக மோசமாகப் போய்விட்டது. அவர் எழுந்து போய்விட்டார். நான் குடியிருக்க வேறு ஒரு மலிவான இடம் தேடவேண்டியதாயிற்று. என்னால் முடிந்தவரையில் சமாளித்தேன். நான் வீடு தேடி வீட்டுக்காரர்களிடம் மனு செய்தபோது அவளைத் தூக்கிச் செல்லமுடியாது என்று எனக்குத் தெரியும். அதனால் அவளைப் பார்த்துக் கொள்ள என்னுடைய பதின்மவயது ஒன்றுவிட்ட தங்கையிடம் விட்டுச் சென்றேன். எப்படி இருந்தாலும் அவளை அதிகம் வெளியே எடுத்துச் செல்ல மாட்டேன். ஏனென்றால் அவளை வண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டு போகும்போது, மக்கள் குனிந்து ஏதாவது நல்லதாகச் சொல்ல எட்டிப்பார்த்துவிட்டு முகம் சுளிப்பதற்கு முன்னாலேயே அதிர்ச்சியில் பின்னால் தள்ளிவந்துவிடுவார்கள். அது என்னைக் காயப்படுத்திற்று. எங்கள் நிறம் அப்படியே மாறிப்போயிருந்தால் கூடக் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பேபி சிட்டராக இருந்திருப்பேன். ஒரு கலப்பு நிறப் பெண்ணுக்கு – அவள் மிக மஞ்சள் நிறமாக இருந்தால் கூட – நகரின் நாகரிகமான பகுதியில் வாடகைக்கு வீடு கிடைப்பது கடினம். தொண்ணூறுகளில், லுலா ஆன் பிறந்தபோது, யாருக்கு வாடகைக்கு விட வேண்டுமென்பதில் வேறுபாடு காட்டக் கூடாது என்று சட்டம் இருந்தது; ஆனால் பல வீட்டுச் சொந்தக்காரர்கள் அதைக் கவனிப்பதே இல்லை. உங்களுக்கு வீடு தராமல் இருக்க அவர்கள் வேறு காரணங்கள்  வைத்திருப்பார்கள். ஆனால் திரு லெயிடம் வீடு கேட்டபோது எனக்கு அதிர்ஷ்டம் இருந்தது; அவர் விளம்பரப் படுத்தியதை விட ஏழு டாலர்  கூட்டிவிட்டார் என்று எனக்குத் தெரியும். வாடகை தர ஒரு நிமிடம் தாமதமானாலும் அவருக்கு வலிப்பு வந்து விடும்.

அவள் என்னை ”அம்மா” அல்லது ”மம்மா” என்று அழைப்பதற்குப் பதிலாக ”இனிமை” என்று அழைக்கச் சொல்லியிருந்தேன். அதுதான் பாதுகாப்பு. அவள் கறுப்பாக இருப்பதும் அவளுடைய உதடுகள் தடியாக இருப்பதும் அவள் என்னை மம்மா என்று அழைத்தால் மக்களைக் குழப்பிவிடும். மேலும் அவளுடைய கண்கள் வேடிக்கையான நிறம், நீலம் கலந்த காக்கைக் கறுப்பு – அவற்றில் சூனியத்தன்மை வேறு.

நீண்ட காலமாக நாங்கள் இரண்டுபேர் மட்டும்தான். கைவிடப்பட்ட மனைவியின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்று உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. இப்படி எங்களை விட்டு விட்டதற்காக லூயிஸ் கொஞ்சம் வருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால்  சில மாதங்களுக்குப் பிறகு நாங்கள் குடியேறிய இடத்தைத் தெரிந்து கொண்டு, நான் கேட்காமலேயே, நீதிமன்றத்திற்குப் போகாமலேயே, மாதம் ஒரு முறை பணம் அனுப்பினார். அவர் அனுப்பிய ஐம்பது டாலரும் மருத்துவ மனையில் இரவு நான் பார்த்த வேலையில் கிடைத்த பணமும் என்னையும் லுலா ஆனையும் அரசின் நலத்திட்டத்திலிருந்து தப்பவைத்தன. அது நல்லது. அதனை நலத்திட்டம் என்று அழைப்பதை விட்டு விட்டு என்னுடைய அம்மா சிறுமியாக இருந்தபோது பயன்படுத்திய சொல்லுக்குப் போனால் நல்லது என்று நினைக்கிறேன். அப்போதெல்லாம் அதனை ”நிவாரணம்” என்று அழைத்தார்கள். அந்தச் சொல் நல்லதாகத் தெரிகிறது. நீங்கள் நல்ல நிலைக்கு வருவது வரையில் குறுகியகால உதவிதான் அது என்று தோன்றும். மேலும்  அந்த நலத்திட்ட எழுத்தர்கள் கீழ்த்தரமானவர்கள். கடைசியில் எனக்கு வேலை கிடைத்து அந்த உதவி தேவையில்லை என்று ஆனபோது அவர்களைவிட நான் அதிகமாகவே சம்பாதித்தேன். அவர்களது அற்பத்தனம் அவர்களுடைய சம்பளப் பற்றாக்குறையினால்தான் என்று நினைக்கிறேன். அதனால்தான் அவர்கள் எங்களைப் பிச்சைக்காரர்கள் போல நடத்தினார்கள். குறிப்பாக அவர்கள் லுலா ஆனைப் பார்த்துவிட்டு என்னைப்பார்த்தால் நான் ஏமாற்றுகின்றேனோ என்னவோ என்று நினைத்திருப்பார்கள். நிலைமை கொஞ்சம் சீரானது; இருந்தாலும் நான் கவனமாக இருக்க வேண்டும். அவளை வளர்ப்பதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அவளிடம் கண்டிப்பாக, மிகக் கண்டிப்பாக இருக்கவேண்டியிருந்தது. லுலா ஆன் எப்படி நடந்துகொள்வது என்றும், எப்படித் தனது தலையைக் குனிந்து கொள்ளவேண்டும் என்றும் தொந்தரவு கொடுக்கக்கூடாது என்றும் கற்றுக் கொள்ளவேண்டும். அவள் தனது பெயரை எத்தனை முறை மாற்றினாலும் கவலையில்லை. அவள் தனது நிறத்தை ஒரு சிலுவையாக எப்போதும் சுமக்க வேண்டும். ஆனால் அது என்னுடைய குற்றமில்லை. என்னுடைய குற்றம் இல்லை. இல்லவே இல்லை.

ஓ, ஆம். லுலா ஆன் சிறுமியாக இருந்தபோது அவளை நான் அப்படி நடத்தினேன் என்பதால் நான் சிலவேளைகளில் வருத்தப்பட்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்: நான் அவளைப் பாதுகாக்க வேண்டும். அவளுக்கு உலகம் தெரியாது. அந்தத் தோலை வைத்துக் கொண்டு, – நீங்கள் நியாயமாக இருந்தாலும் கூட, – முரட்டுத்தனமாகவோ மரியாதையில்லாமலோ நடப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. எதிர்த்துப் பேசுவதற்கோ பள்ளியில் சண்டை போட்டதற்கோ சிறார் சிறைக்கு உங்களை அனுப்பப்படக் கூடிய ஒரு உலகில், – கடைசியாக வேலைக்குச் சேர்க்கப்பட்டு முதலில் வீட்டுக்கு அனுப்பப்படும் ஒரு உலகில், – அப்படி இருக்க முடியாது.

இதுவெல்லாம், எப்படி அவளது கறுப்புத்தோல் வெள்ளையரை அச்சுறுத்தும் அல்லது அவர்களைக் கேலிச்சிரிப்பு சிரிக்கவைக்கும் என்பதோ அவளுக்குத் தெரியவில்லை. நான் ஒருமுறை பார்த்த காட்சி இது: லுலா ஆன் அளவிற்குக் கூடக் கறுப்பாக இல்லாத பத்து வயதுச் சிறுமி ஒருத்தியை வெள்ளைச் சிறுவர்கள் கூட்டம் ஒன்று தட்டிவிட்டுக் கீழே விழச்செய்தது. அவள் தட்டுத்தடுமாறி எழ முயன்றபோது ஒரு பையன் அவனது காலால் அவளது பின்புறத்தை உதைத்து மீண்டும் குப்புற விழச்செய்தான். சிறுவர்கள் தங்கள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தார்கள். அவள் போன பிறகும் அவர்கள் கர்வத்துடன் விடாமல் சிரித்துக் கொண்டிருந்தார்கள். நான் பஸ் ஜன்னல் வழியாக இந்தக்  காட்சியைப்பார்த்துக் கொண்டிராவிட்டால் அவளுக்கு உதவியிருப்பேன்; அந்த வெள்ளைக் குப்பைப் பையன்களிடமிருந்து அவளைக் காப்பாற்றியிருப்பேன். பாருங்கள், நான் லுலாவுக்கு சரியாகப் பயிற்சி கொடுத்திருக்காவிட்டால் தெருவைக் குறுக்காகக் கடக்கவேண்டும் என்றும் வெள்ளைச் சிறுவர்களைத் தவிர்க்கவேண்டும் என்றும் அவளுக்குத் தெரிந்திருக்காது. ஆனால் அவளுக்குக் கற்றுக்கொடுத்த பாடங்களுக்கு நல்ல பலன் கிடைத்தது. கடைசியில் என்னை மயில் போலக் கர்வம் கொள்ளச் செய்துவிட்டாள்.

நான் ஒரு மோசமான தாயாக இல்லை, உங்களுக்கு அது தெரிய வேண்டும். ஆனால் அவளைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக என்னுடைய சொந்தக் குழந்தையைத் துன்பப் படுத்தும் சில விஷயங்களைச் செய்திருக்கலாம். நான் செய்ய வேண்டியிருந்தது. எல்லாம் தோலின் உரிமைகளுக்காகத்தான். முதலில் அந்தக் கறுப்பையும் தாண்டி அவள் யாரென்று பார்க்காமல் அவளிடம் சாதாரணமாக அன்பு செலுத்தமுடியவில்லை.. ஆனால் அவளிடம் அன்பு வைத்திருக்கிறேன். உண்மையிலேயே. இப்போது அவளுக்குப் புரிகிறது என்று நினைக்கிறேன். அப்படித்தான் நினைக்கிறேன். கடைசியாக நான் அவளை இருமுறை பார்த்த போதும் அவள் கவனத்தைக் கவரும்வகையில் இருந்தாள்- துணிச்சலாக, தன்னம்பிக்கையுடன். அவள் என்னைப் பார்க்க வந்த ஒவ்வொரு முறையும், அவள் எவ்வளவு கறுப்பு என்பதையே மறந்துவிட்டேன். எல்லாம் அவள் வெள்ளை உடைகளை அணிந்திருந்த முறைதான்.

எனக்குத் தெரிந்திருக்க வேண்டிய பாடத்தை அது கற்றுக் கொடுத்தது. நீங்கள் உங்களுடைய குழந்தைகளுக்கு என்ன செய்கிறீர்களோ அதுதான் முக்கியம். அவர்கள் மறக்கவே மாட்டார்கள்.  எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக அந்த மோசமான குடியிருப்பில் தன்னந்தனியாக என்னை விட்டு விட்டுப் போய்விட்டாள். எவ்வளவு தூரம் போகமுடியுமோ அவ்வளவு தூரம் போய்விட்டாள். அலங்காரம் பண்ணிக்கொண்டு கலிஃபோர்னியாவில் பெரிய வேலைக்குப்  போய்விட்டாள். என்னை அழைப்பதோ என்னை வந்து பார்ப்பதோ இல்லை. அவ்வப்போது பணமும் பொருட்களும் அனுப்புகிறாள். ஆனால் அவளை நான் பல மாதங்களாகப் பார்க்கவே இல்லை. எவ்வளவு காலமாக என்பதுகூட எனக்குத் தெரியவில்லை.

ஊருக்கு வெளியே இருக்கும்,  காசு செலவு வைக்கும், பெரிய மருத்துவ மனைகளை விட இது – வின்ஸ்டன் ஹவுஸ் – எனக்குப் பிடித்திருக்கிறது. இது சிறியது, வீடு போல இருக்கும் , மலிவு. இருபத்து நான்கு மணி நேரமும் செவிலியர்; வாரம் இருமுறை மருத்துவர் வருவார். எனக்கு அறுபத்து மூன்று வயதுதான். – ஓரங்கட்டப் படும் அளவிற்கு வயதாகவில்லை. ஆனால் எனக்கு எலும்பு நோய் வந்துவிட்டது. நல்ல பராமரிப்பு அவசியம். இந்த சலிப்பு இயலாமையையும் வலியையும் விடக் கொடிது. ஆனால் செவிலியர் அருமையானவர்கள். நான் பாட்டியாகப் போகிறேன் என்று சொன்னவுடன் ஒரு செவிலியர் எனது கன்னத்தில் இப்போதுதான் முத்தமிட்டார்.  அவருடைய புன்னகையும் அவரது பாராட்டும் முடிசூடப் போகும் ஒருவருக்குப் பொருத்தமானவை. நான் லுலா ஆனிடமிருந்து வந்திருந்த நீலத்தாளில் எழுதிய கடித்ததைக் காட்டினேன். – அவள் ”பிரைட்” என்று கையெழுத்திட்டிருந்தாள். நான் அதைக் கண்டுகொள்ளவில்லை. அவளது வார்த்தைகள் கிறங்கவைத்தன. “என்னவென்று யூகியுங்கள். இந்தச் செய்தியைச்  சொல்ல எனக்கு மிகவும் மகிழ்ச்சி. எனக்குக் குழந்தை பிறக்கப் போகிறது. எனக்கு மிகச் சிலிர்ப்பாக இருக்கிறது, உங்களுக்கும்தான் என்று நினைக்கிறேன்.”  அவளுடைய மனக் கிளர்ச்சியும் மகிழ்ச்சியும் குழந்தையைப் பற்றித்தான், அதனுடைய அப்பாவைப் பற்றி அல்ல. அவள் அவனைப் பற்றிக் குறிப்பிட்டதே இல்லை. அவன் இவளைப் போலவே கறுப்பா என்று நினைப்பேன். அப்படியிருந்தால் என்னைப்போல அவள் கவலைப்பட வேண்டியதில்லை. நான் இளவயதில் இருந்ததை விட நிறைய மாற்றங்கள். டி வியிலும், ஃபேஷன் பத்திரிகைகள், விளம்பரப்படங்கள் முதலியவற்றிலும் திரைப்பட நடிகர்கள் என்றும் நீலக் கறுப்பு எங்கும் காணப்பட்டது..

மேலுறையில் முகவரி எதுவுமில்லை. நல்ல நோக்கத்துடன், சரியான வழிகளில் அவளை வளர்த்ததற்காக நான் சாகும் நாள் வரையில் தண்டிக்கப்படும் மோசமான பெற்றவளாகவே நான் இருக்கிறேன் என்று நினைக்கிறேன். அவள் என்னை வெறுக்கிறாள் என்று எனக்குத் தெரியும். எங்களது உறவு பணம் அனுப்புவதோடு முடிந்துவிடுகிறது. நான் பணம் அனுப்புவதற்காக அவளுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். ஏனென்றால் மற்ற நோயாளிகளைப்போல அதிகப்படிச் செலவுகளுக்காக நான் கெஞ்சவேண்டியதில்லை. தனியாக விளையாடுகிற சீட்டாட்டத்திற்கு புதிய சீட்டுக் கட்டு வேண்டுமென்றால் வாங்க முடிகிறது.  ஓய்வு அறையில் பழசாகிப்போன அழுக்கான சீட்டுகளை வைத்து ஆட வேண்டியதில்லை. முகக் கிரீமையும் வாங்கிக் கொள்ள முடிகிறது. ஆனாலும் நான் ஏமாறவில்லை. அவள் பணம் அனுப்புவது என்னிடமிருந்து தள்ளி இருக்க ஒரு வழி; அவளிடம் இருக்கும் கொஞ்ச நஞ்சம் மனசாட்சியையும் அமைதிப்படுத்திக் கொள்ளவும் முடியும்.

நான் எரிச்சல் பட்டு நன்றியில்லாதவள் போலத் தோன்றினால் , அதற்கு ஒரு காரணம் ஆழத்தில் ஒரு வருத்தம். நான் செய்த அல்லது தவறாகச் செய்த சிறு சிறு விஷயங்கள். அவளுக்கு முதல் மாத விடாய் வந்ததும் அதுபற்றி நான் எப்படி நடந்து கொண்டேன் என்பதும் எனக்கு நினைவிருக்கிறது. அல்லது அவள் கால் தடுக்கி விழுந்தபோது அல்லது கீழே எதையாவது போட்ட நேரங்களில் நான் கத்தியிருப்பேன். உண்மை. அவள் பிறந்த போது நான் உண்மையில் நிலை குலைந்துபோனேன். அவளுடைய கறுப்புத் தோல் என்னைத் தள்ளிப்போட்டது. முதலில் நான் நினைத்தது….. இல்லை. இந்த நினைவுகளையெல்லாம் ஒதுக்கித் தள்ள வேண்டும், வேகமாக… அதில் எந்த அர்த்தமும் இல்லை. அந்தச் சூழல்களில் என்னால் முடிந்தவரையில் அவளுக்கு நல்லதே செய்தேன். எங்களைவிட்டு எனது கணவர் ஓடிப்போனபோது எனக்கு லுலா ஆன் ஒரு சுமை. கனமான சுமை, ஆனால் நன்றாகவே தாங்கிக் கொண்டேன்.

ஆம், அவளிடம் கடுமையாகத்தான் நடந்து கொண்டேன். அவளுக்குப் பன்னிரண்டு முடிந்து பதிமூன்றான போது இன்னும் அதிகமான கடுமையுடன் இருந்தேன். என்னை எதிர்த்துப் பேசினாள். நான் சமைத்ததைச் சாப்பிடமாட்டாள். அவள் தலைமுடியை அவள் விருப்பம்போல அலங்கரித்துக் கொள்வாள். நான் சடைபோட்டுவிட்டால் பள்ளிக்கூடத்துக்குப் போனவுடன் பிரித்துவிட்டு விடுவாள். நான் மூடியை அழுத்தமாக மூடிவிட்டேன். அவள் பேசிய பேச்சு பற்றிக் கடுமையாக எச்சரித்தேன். எனினும் என்னுடைய வளர்ப்பு நல்லதே செய்திருக்க வேண்டும். அவள் எப்படி மாறி இருக்கிறாள் என்று பாருங்கள். வேலையிலிருக்கும் பணக்காரப் பெண். இதை யாராலும் தோற்கடிக்க முடியுமா?

இப்போது அவள் மாசமாக இருக்கிறாள். நல்லது, லுலா ஆன். குழந்தை வளர்ப்பது என்பது கொஞ்சுவது, அரைத் துணி மாற்றுவது என்று நீ நினைத்தால் உனக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருக்கும். நீயும் உனது பெயரில்லாத காதலன், கணவன், நண்பன் .. யாராக இருந்தாலும்  – கற்பனை செய்து பார்: ஊ! பேபி! கிச்சி கிச்சி கூ!

கவனமாகக் கேள். நீ பெற்றவளாக ஆகும்போது உலகம் எப்படி இருக்கிறது, எப்படி இயங்குகிறது, எப்படி மாறுகிறது, என்னவெல்லாம் இருக்கிறது என்று கண்டுபிடிக்கப் போகிறாய்.

நல் வாழ்த்து. குழந்தைக்குக் கடவுள் உதவட்டும்.

டோனி மாரிசன்

தமிழில்: ச. வின்சென்ட்


டோனி மாரிசன் (1931 – 2019) அமெரிக்க நாவலாசிரியர். அவர் சூலா, சாங் ஆஃப் சாலமன் முதலான பத்து நாவல்களும் பல சிறுகதைகளும் நாடகங்களும் எழுதியுள்ளார்.புலிட்சர் பரிசு, நோபெல் பரிசு உட்பட பல விருதுகள் பெற்றவர். கறுப்பின மக்களின் அனுபவங்களைச் சித்தரித்தன அவரது படைப்புகள்.

 

Previous articleசோப்பியின் தெரிவு
Next articleஎமிலிக்காக ஒரு ரோஜா
ச. வின்சென்ட்
பேராசிரியர் முனைவர் ச.வின்சென்ட் ஓய்வுபெற்ற ஆங்கிலத்துறைத் தலைவர். எழுத்தாளர், இலக்கியத் திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். அவற்றில் குறிப்பிடத்தக்கவை: ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்வும் பணியும், காஃப்காவின் உருமாற்றம். தீர்ப்பு, தாஸ்தாய்வ்ஸ்கியின் வெகுளி, சூஃபி ஞானி அத்தார் கவிதைகள் ஆகியவை.. தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு பத்து நூல்கள் வரையில் மொழிபெயர்த்திருக்கிறார். அவற்றில் குறிப்பிடத்தக்கவை: பிராதமுதலியார் சரித்திரம், ஒப்பியல் சமய நோக்கில் திருவருட்பா. திறனாய்வுக் கோட்பாட்டாளர்களும் கோட்பாடுகளும் இவருடைய திறனாய்வு நூல்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.