உயரப் பறக்கும் கழுகு

லகின் மூலை முடுக்குகளில் இருப்பவர்களுக்குக் கூட அமெரிக்க வாழ்வியலும் ஒன்றிரண்டு னித்துவமான அமெரிக்க சொற்பிரயோகங்களும் தெரிந்திருக்கும். ஹாலிவுட்டின் வீச்சு அப்படிப்பட்டது. ஆனால் அதோடு ஒப்பிடும்போது அமெரிக்க சூழலியல் கூறுகள் பலவும் நமக்குப் பரிச்சயமில்லாதவை. வித்தியாசமான கொம்புகளைக் கொண்ட மூஸ், அலிகேட்டர் எனப்படும் ஒருவகை முதலை, ஒப்போஸம், ரக்கூன், ப்ரெய்ரி டாக் போன்ற பாலூட்டிகள் ஆகிய பொதுவான அமெரிக்க விலங்குகள், க்ராண்ட் கேன்யன் பள்ளத்தாக்கு, மேற்கு அமெரிக்காவின் வறண்ட பகுதிகள், ஃப்ளோரிடாவின் எவர்க்ளேட் சதுப்புநிலங்கள், வெப்ப நீரூற்றுகள் போன்ற பல வாழிடங்கள் என்று பன்முகத்தன்மை வாய்ந்த சூழலியல் அம்சங்கள் இங்கு உண்டு.

 

மான்ஹாட்டனின் ஃபேஷன் கடைகளும் நியூயார்க்கின் வானுயர ஊசிக்கட்டிடங்களுமாக கான்க்ரீட் காடுகளையே அமெரிக்கக் காட்சிப் படைப்புகள் அதிகம் சித்தரிக்கின்றன. ஒருவகையில் இந்த சித்தரிப்பையே அமெரிக்க சூழலியல் மனப்பான்மைக்கு ஒரு உதாரணமாகவும் எடுத்துக்கொள்ளலாம். அமெரிக்காவாக இவர்கள் நினைப்பது வால் ஸ்ட்ரீட்டையும் டைம்ஸ் ஸ்கொயரையும்தான்.  வாழ்வை வெறுப்பவர்களும் துக்கத்திலிருந்து விடுபட நினைப்பவர்களும் உள்ளொளிப் பயணத்துக்காக சில நாட்கள் இயற்கையோடு இணைந்து இருந்துவிட்டு, மீண்டும் கான்க்ரீட் காடுகளுக்குத் திரும்பிவிடுகிறார்கள். தன்னைப் புதுப்பித்துக்கொள்ள இயற்கையை ஒரு சேவைத்தளமாக (Service provider) மட்டுமே பயன்படுத்திக்கொள்ளும் மனப்பான்மையே அங்கு பெரிதளவில் இருக்கிறது. இதை அமெரிக்கக் குடிமக்கள் மீதான ஒரு குற்றச்சாட்டாக இல்லாமல், அமெரிக்க சமூகக் கட்டமைப்பின் விளைவாகவே பார்க்கவேண்டும்.

வரலாற்றுப் பின்னணி:

1900களில் ஜான் முயிர் (John Muir), ஆல்டோ லியோபால்ட் போன்ற அமெரிக்க அறிஞர்களின் கருத்தாக்கங்கள் சூழலியல் பிரக்ஞைக்கு வித்திட்டன எனலாம். அப்போதைய அமெரிக்க அதிபர் தியோடோர் ரூஸ்வெல்ட்டோடு இணைந்து 1901ல் ஜான் முயிர் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை வரையறுக்கத் தொடங்கினார். எல்லோஸ்டோன் தேசியப் பூங்கா முதல் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

தியோடோர் ரூஸ்வெல்ட் காட்டுக்குச் செல்லும்போது அங்கிருந்த கரடியை வேட்டையாட மறுத்ததும், அதை வைத்து வரையப்பட்ட கார்ட்டூனை அடிப்படையாகக் கொண்டு “தியோடோர்” என்ற பெயரின் சுருக்கத்தோடு “டெடி பியர்” என்ற பொம்மை உருவாக்கப்பட்டதும் எல்லாருக்கும் தெரிந்த செய்திதான். ரூஸ்வெல்ட்டின் எதிர்ப்பாளர்கள் பலரும் அவருக்குப் பெண் தன்மை அதிகமாகவே உண்டு என்று சொல்லிக்கொண்டிருந்தனர். வேட்டையாட மறுப்பதும் இயற்கையைப் பாதுகாக்க நினைப்பதும்கூட அதன் நீட்சியாகவே சொல்லப்பட்டது. 2021ல் கூட “இயற்கையைப் பாதுகாப்பது பற்றிப் பொதுவெளியில் பேசினால் பெண் தன்மை கொண்டவனாக நினைத்துவிடுவார்கள்” என்று நினைக்கும் அமெரிக்க ஆண்கள் உண்டு! அதற்கு வித்திட்டது டெடி ரூஸ்வெல்ட்டின் அரசியல் எதிரிகள்!

 

மீண்டும் அமெரிக்க சூழல் வரலாற்றுக்குத் திரும்புவோம்.  ஆங்காங்கே சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்தாலும் பொதுத்தளங்களில் அது பெரிய அளவில் பேசப்படவில்லை. இது ஒரு புறம் என்றால் கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்க பொருளாதாரம் நிலக்கரி மீது அதீத சார்பு கொண்டதாக மாறியது. அதனால் சூழல் மாறத் தொடங்கியது.  1943ல் நச்சுவாயு உமிழ்வு விபத்துக்களால் சிலர் இறந்தனர். அது பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. சுத்தமான காற்றுக்கான தேவையை மக்கள் உணர்ந்தார்கள். 1955ல் காற்று மாசு பற்றிய முதல் சட்டம் இயற்றப்பட்டது. 1962ல் ரேச்சல் கார்சன் எழுதிய “மௌன வசந்தம்” நூல் வெளியானது. பூச்சிக்கொல்லிகளின் ஆபத்தை அமெரிக்கர்கள் உணர்ந்தனர். இது எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல 1960களில் வெளியான அருகிவரும் விலங்குகளின் பட்டியலில் அமெரிக்கச் சின்னமான வெண்தலைக் கழுகு (Bald eagle) சேர்க்கப்பட்டிருந்தது. “என்ன! தேசிய சின்னமே அழிகிறதா” என்று அமெரிக்கா விழித்துக்கொண்டது. என்ன பிரச்சனை என்று தேட ஆரம்பித்தது.

கரியமில வாயுவால் ஏற்படும் பிரச்சனைகளை ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தின. 1969 சாண்டா பார்பரா எண்ணெய்க் கசிவு உட்பட பல சூழல் விபத்துக்களால் மக்கள் சிதறடிக்கப்பட்டனர். பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. தன்னெழுச்சியாக 20 மில்லியன் மக்கள் தெருவுக்கு வந்து 1970 ஏப்ரல் 22ம் நாளன்று சூழலைப் பாதுகாக்கும் சட்டங்களுக்காகப் போராடினர். “இந்தப் போராட்டம் தன்னைத் தானே நடத்திக்கொண்டது” என்று எழுதுகிறார் கேலார்ட் நெல்சன். மாபெரும் இந்த தன்னெழுச்சிப் போராட்டத்தின் நினைவாக வருடாவருடம் ஏப்ரல் 22 புவி நாளாகக் கொண்டாடப்படுகிறது!

தொடர் விபத்துக்களின் இழப்பாலும் மக்களின் கோரிக்கைகளாலும் உந்தப்பட்ட அமெரிக்க அரசு, அடுத்தடுத்து நீர், காற்று பற்றிய சட்டங்களை இயற்றியது. DDT பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. மக்கள் அமைதியடைந்தனர். எல்லாம் சரியாகிவிட்டது என்று சூழல் விவாதங்களை விட்டுவிட்டுத் தங்கள் வேலைகளுக்குத் திரும்பினர்.

1980ல் ஓசோன் படலத்தில் ஓட்டை கண்டுபிடிக்கப்பட்டது. 1982ல் சூழல்சார் சமூக நீதிக்கான (Environmental justice) குரல்கள் ஓங்கி ஒலித்தன. அமெரிக்க சூழல்சார் வரலாற்றையே புரட்டிப் போட்ட குரல்கள் இவை. முயரின் தலைமையில் உருவாக்கப்பட்ட எல்லோஸ்டோன் தேசியப் பூங்காவிலிருந்து அமெரிக்கத் தொல்குடிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டிருப்பதை அவர்கள் சுட்டிக் காட்டினர்.  “எல்லா நச்சுக்கழிவுகளையும் ஏன் கறுப்பின மக்களின் குடியிருப்புக்களுக்கு அருகிலேயே கொட்டுகிறீர்கள்” என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். நிலத்தடி நீர் பாதிக்கப்படுவது மாதிரியான தொழிற்சாலை என்றால், அது கறுப்பின மக்கள் வாழும் பகுதியில்தான் கட்டப்படுகிறது. கறுப்பின மக்கள், லத்தீன் அமெரிக்க மக்கள் வாழும் பகுதிகளில் காற்றும் நீரும் மாசடைந்து இருப்பதால் அவர்களின் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. சமூக நீதி இல்லாவிட்டால் சூழல் பாதுகாப்பால் எந்தப் பயனுமில்லை என்று மானுடவியலாளர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் குரல் கொடுத்தனர். சூழல்சார் செயல்பாடுகளில் கறுப்பின, ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களும் தொல்குடிகளின் கோரிக்கைகளும் மதிக்கப்படவேண்டும் என்பதை ஓரளவாவது அமெரிக்கா உணர்ந்தது. இதன் எதிரொலி உலகின் பிற நாடுகளிலும் கேட்கத் தொடங்கியது. 20ம் நூற்றாண்டின் சூழலியலாளர்களுடைய கருத்தாக்கங்களிலிருந்து வெளியேறி, எல்லாரையும் உள்ளடக்கிய சூழல் பாதுகாப்பு சாத்தியமா என்று உலகம் யோசிக்கத் தொடங்கியது. அமெரிக்க சூழல் செயல்பாடுகளின் வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள் இவை.

 

இரு பறவைகள்

Passenger_pigeon

பயணிப் புறா (Passenger Pigeon) என்பது வட அமெரிக்காவில் மட்டுமே வாழ்ந்த ஒரு அகணிய உயிரி (Endemic bird). ஆனால் அது இப்போது முழுவதுமாக அழிந்துவிட்டது. 1914ல் கடைசிப் பறவையும் உயிரிழந்தபிறகு, இது வெறும் வரலாற்று ஓவியமாக மட்டுமே உயிர்வாழ்ந்துகொண்டிருக்கிறது. வட அமெரிக்க மண்ணில் காலனியவாதிகளின் கண்மூடித்தனமான வேட்டையால் உயிரிழந்த உயிரினம் இது. “7 வாரங்களில் 10,000 பயணிப் புறாக்களைக் கொன்றோம்” என்று மார்தட்டுகிறது காலனியவாதி ஒருவரின் டைரிக் குறிப்பு. காடுகளை அழித்ததாலும் கடுமையான வேட்டையாலும் இந்த இனம் முற்றிலுமாக அழிந்தது. “என்ன உணவுத் தேவை இருந்தாலும் வளர்ந்த பெரிய புறாக்களைக் கொல்லக்கூடாது, அது பாவம்” என்ற நம்பிக்கையோடு வாழ்ந்துகொண்டிருந்த தொல்குடிகள் மத்தியில் வந்து இறங்கிய காலனியவாதிகள், இந்த இனத்தை அழித்தொழித்தார்கள்.

Californian Condor என்ற ஒருவகை பாறுக்கழுகு அமெரிக்காவின் மிகப்பெரிய நிலவாழ் பறவை. வேட்டையாடுதல், பூச்சிக்கொல்லிகளின் நச்சு,காரீய நச்சு, வாழிட இழப்பு ஆகியவற்றால் 1987ல் இது கிட்டத்தட்ட அழிந்துபோன்றது. காட்டில் மீதம் இருந்த 27 பறவைகளைப் பிடித்து வந்த அமெரிக்க அரசு, அதை ஆய்வகங்களிலும் தேசியப் பூங்காக்களிலும் பாதுகாத்து இனப்பெருக்கம் செய்ய வைத்தது. 1991ல் இவை மீண்டும் வெற்றிகரமாகக் காட்டுக்குள் விடப்பட்டன.

Califonian_Condor

அமெரிக்க சூழலியலின் உருவகங்களாக இந்தப் பறவைகள் இருக்கின்றன. தொல்குடிகளின் நம்பிக்கையை பூட்ஸ் கால்களால் சிதைத்த காலனியவாதிகள், எப்படி சூழலைச் சுரண்டினார்கள் என்பதற்குச் சாட்சியாக இருக்கிறது பயணிப்புறா. காலனியாதிக்கத்துக்குப் பின்னான அமெரிக்காவில் சூழல் மதிப்பீடுகள் மாறிப்போனதையே இது சுட்டிக்காட்டுகிறது. சமகாலத்தின் தவறான முடிவுகளால் அழிவின் விளிம்புக்குச் சென்றாலும் சூழல் மீட்டெடுக்கப்பட்ட வெற்றிக்குச் சாட்சியாக வானில் பறந்துகொண்டிருக்கிறது பாறுக்கழுகு. அமெரிக்க அரசு மனது வைத்தால் இதுபோன்ற சூழல் மீட்டெடுப்புகளும் சாத்தியம் என்ற நம்பிக்கையையும் விதைக்கிறது.

 

சமகால அமெரிக்காவின் சூழல் பிரச்சனைகள்

நேரடியாகப் பார்த்தால் காட்டுத்தீ, திடக்கழிவுகள், நிலத்தடி நீர், காற்று மாசு, காடழிப்பு போன்றவையே அமெரிக்காவை அச்சுறுத்தும் பிரச்சனைகளாக நிற்கின்றன. ஆனால் அவற்றின் பின்னணியில் இருக்கும் சில அடிப்படையான அமெரிக்கக் கருத்தாக்கங்களே இந்தப் பிரச்சனைக்குக் காரணிகள் என்பதால் அதை ஆராயவேண்டியிருக்கிறது.

 

நுகர்வுக் கலாச்சாரம்

விநியோகச் சங்கிலியால் அடிமைப்படுத்தப்பட்ட

கறுப்பின சிறுவர்கள், மேற்கு ஆப்பிரிக்க வெயிலில்

முதுகில் கொக்கோவைச் சுமக்கிறார்கள்,

அவர்களது  ஆன்மாவை வாழ்த்துவோம்.

 

தீப்பற்றி எரியும் சிறு கடைகளில்

நம் துணிகளை நெய்கிறார்கள் பழுப்புநிறச் சிறுமிகள்

அவர்களது ஆன்மாவை வாழ்த்துவோம்

 

பொம்மைகளையும் மின்னணுக் கருவிகளையும்

நமக்காகத் தயாரிக்கிறார்கள் ஆசிய சிறுவர்கள்

அவர்களது ஆன்மாவை வாழ்த்துவோம்

என்கிறது க்ரெய்க்  சாண்டோஸ் பெரோஸின் கவிதை ஒன்று. அமெரிக்க நுகர்வுக் கலாச்சாரம் உலகப் புகழ்பெற்றது. நன்றியறிவித்தல் (Thanksgiving) விழாவுக்கு அடுத்த வெள்ளிக்கிழமையன்று எல்லா அமெரிக்கக் கடைகளிலும் தள்ளுபடி தரப்படுகிறது. இந்த விற்பனை விழா “Black friday” என்றே அழைக்கப்படுகிறது. கண்ணில் ஒரு வெறியோடு கடைக் கதவைத் தள்ளிக்கொண்டு நுழையும் நுகர்வோர் கூட்டத்தின் பல சித்தரிப்புகளை நாம் அமெரிக்கப் படைப்புகளில் காணலாம். “1920களில் நுகர்வு என்பது மகிழ்ச்சிக்கான வழியாக முன்வைக்கப்பட்டது” என்கிறார் வரலாற்றாசிரியர் வில்லியம் லீச். பெரிய தொழிற்சாலைகள் வந்தபிறகு, அந்த உற்பத்தியைத் தொடர வேண்டுமானால் தொடர்ந்து பொருட்களை யாராவது வாங்கிக்கொண்டேயிருக்கவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. ஆகவே தனிமனிதர்களின் ஆசையை நோக்கியதாக விற்பனை முடுக்கிவிடப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகும் தொலைக்காட்சி, வானொலி விளம்பரங்கள் வந்த பிறகும் இது பன்மடங்கு அதிகரித்தது. “நீங்கள் என்பது நீங்கள் வாங்கும் பொருட்கள்தான்” என்பது அமெரிக்க மக்களின் மனதில் பதிந்துபோனது.

பொதுவாகச் சிக்கனமாக இருப்பதே சிறந்தது என்று நம்பிக்கொண்டிருந்த மக்களை நுகர்வோராக மாற்றியதில் விளம்பரங்களின் பங்கு முக்கியமானது. “நீங்கள் என்ன ஆடம்பரமாகவா செலவு செய்கிறீர்கள், உங்கள் வீட்டுக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குங்கள்” என்று அவர்களை உள்ளே இழுக்கும் விளம்பரங்கள், எல்லாவற்றையும் அடுத்தடுத்து விற்றுவிடுகின்றன. “இதை ஏன் பணக்காரர்கள் மட்டுமே அனுபவிக்கவேண்டும்? உங்களுக்கு அந்தத் தகுதி இல்லையா என்ன” என்று விலைக்குறைப்பு செய்த ஆடம்பரப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. நிதர்சனமே பண்டமாக மாற்றப்பட்டது. தேவை உற்பத்தி செய்யப்பட்டது. இப்போது அதிகம் பேசப்படுகிற அமெரிக்கக் கனவு (American dream) என்பதே இந்த நுகர்வின்மீது கட்டமைக்கப்பட்டதுதான்.

நுகர்வுக்கும் சூழல் சீரழிவுக்கும் இடையே மிக நெருக்கமான தொடர்பு உண்டு.

“இந்த பூமியில் உள்ள ஒவ்வொருவரும் அமெரிக்கர்களைப் போல நுகர்வை மேற்கொண்டு வாழவேண்டுமானால் அதற்கான வளங்களைத் தர 4 பூமிகள் தேவைப்படும்”

என்கிறார் பால் எல்ரிச். இருப்பதோ ஒரு பூமி, இன்னும் 3 பூமிகளுக்கு எங்கே போவது?!

2021 ஆகஸ்ட் நிலவரப்படி நாம் கடனில் தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். அதாவது, இந்த வருடத்துக்கான மொத்த வளங்களை ஜூலை 29ம் தேதியே பயன்படுத்தித் தீர்த்துவிட்டோம்! இது Overshoot day என்று அழைக்கப்படுகிறது. ஒருவேளை அனைவரும் அமெரிக்கர்களைப் போல வாழ்ந்திருந்தால் இந்த நிலை 2021 மார்ச் 14ம் தேதிக்கே வந்திருக்கும்! அமெரிக்க நுகர்வின் பிரம்மாண்டத்துக்கான சிறு உதாரணம் இது.

உலகத்தின் அரிசிக் கிண்ணமாக இருந்த சீனாவை உலகின் தொழிற்சாலையாக மாற்றியதில் அமெரிக்காவின் பங்கு முக்கியமானது. உலகின் மற்ற வளர்ந்த நாடுகளோடு ஒப்பிடும்போது அமெரிக்கர்களின் சராசரி நீர்ப் பயன்பாடு 75% அதிகம் என்கிறது 2006ல் வந்த ஒரு ஆய்வு. உலகின் மொத்த மக்கள் தொகையில் 5% பேரை மட்டுமே கொண்ட ஒரு நாடு, உலகின் மொத்த காகிதத்தில் 30%, மொத்த கச்சா எண்ணெயில் 25%, மொத்த நிலக்கரியில் 23%, மொத்த அலுமினியத்தில் 27% என்ற அளவில் வருடாவருடம் பயன்படுத்துகிறது. சுருக்கமாக சொல்லப்போனால், உலகின் வளங்களில் கால்வாசியைப் பயன்படுத்துபவர்கள் அமெரிக்கர்கள்தான்! இதில் எத்தனை சதவிகிதம் ஆடம்பரமாக வீணாக்கப்படுகிறது என்பது தனி. அமெரிக்காவின் மொத்த சூழல் பாதிப்பை மக்கள்தொகையால் வகுத்துப் பார்த்தால் வேறு எந்த நாட்டுக் குடிமகனையும்விட ஒரு சராசரி அமெரிக்கரால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகம். தன் குடிமக்கள்மீது இந்தப் பெருஞ்சுமையை வைத்திருக்கிறது அமெரிக்கா.

 

அரசியல் பிளவுகள்

உலக அரசியலின் பெரியண்ணனாக இருப்பதால், ஒரு ஒப்பந்தத்தில் அமெரிக்கா என்ன முடிவு எடுக்கிறது என்பது பிற நாடுகளின் முடிவையும் அதிகமாகப் பாதிக்கிறது. பல நேரங்களில் சூழல் பாதிப்புக்குப் பெருமளவில் பங்களித்தாலும் தீர்வுகளில் உதவாமல் அமெரிக்கா நழுவியிருக்கிறது. இதற்கு சமகாலத்திலேயே பல உதாரணங்கள் உண்டு.

உலகிலேயே காலநிலை மாற்றம் பற்றி அதிகம் அறிந்தவர்கள் அமெரிக்கர்கள். மொத்த மக்கள் தொகையில் 96% மக்களுக்குக் காலநிலை மாற்றம் பற்றித் தெரியும். ஆனால் அதில் 34% பேர் மட்டுமே காலநிலை மாற்றத்துக்கு மனித செயல்பாடுகள் காரணம் என்று நினைக்கிறார்கள்.வளர்ந்த ஆசியா நாடுகளிலோ 76% மக்கள், காலநிலை மாற்றத்துக்கு மனிதர்கள்தான் காரணம் என்று நம்புகிறார்கள்.  உலக அளவில் காலநிலை மாற்றம் பற்றிய மிக மோசமான புரிதலைக் கொண்டவர்கள் அமெரிக்கர்கள் என்கிறது 2011ல் வெளிவந்த இந்த ஆய்வு. இந்தத் தரவை வைத்தே சராசரி அமெரிக்க மனநிலையை நாம் புரிந்துகொள்ளலாம்.  இதற்கு அரசியல் தலைவர்களின் புரிதல்களும் ஒரு முக்கியக் காரணம் எனலாம். காலநிலை மறுப்பாளரான டொனால்ட் ட்ரம்ப்பின் பதவிக்காலத்தில் பல முக்கிய காலநிலை செயல்பாடுகளில் அமெரிக்கா பங்களிக்கவில்லை. உலக அளவில் காலநிலை மாற்றம் தீவிரமடைவதற்கும் இது ஒரு காரணமாக விளங்கியது.

குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி என்று இரண்டாகப் பிளவு பட்டிருக்கும் அமெரிக்க அரசியலில், சூழல் சார்ந்த எந்த முடிவையும் எடுப்பது சிரமமானதாகவே இருந்துவருகிறது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பலரும் காலநிலை மறுப்பாளர்கள், இவர்கள் சுற்றுச்சூழல், காலநிலை தொடர்பான சட்டங்களை ஏற்பதில்லை. ஆகவே ஒருமித்த கருத்து எட்டப்படாமல் பல கோப்புகள் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. அமெரிக்க மக்களை எப்படிப் பேசித் தங்கள் பக்கம் இழுக்கவேண்டும் என்றும் இவர்கள் தெளிவாகத் தெரிந்துவைத்திருக்கிறார்கள். 1980களில் எண்ணெய் போன்ற எரிபொருட்களைக் குறைத்துக் கொள்ளவேண்டும் என்று அறிவியலாளர்கள் சொன்னபோது, “பார்த்தீர்களா…. இப்போதே நமக்கு சட்டங்கள் போட ஆரம்பித்துவிட்டார்கள், உங்கள் தனிமனித சுதந்திரம் பறிபோகும், இதெல்லாம் வேண்டாம்” என்றபடி அதைப் புறந்தள்ளினார்கள். தனிமனித சுதந்திரத்தை முன்வைக்கும் அமெரிக்கப் பொதுமரபு உடனே இவர்கள் சொல்வதை நம்பிவிட்டது. பெருந்தொற்றுக் காலத்திலும் முகக்கவசம் அணிய மறுத்த பல அமெரிக்கக் குடிமக்கள் இந்த சுதந்திரத்தையே சுட்டிக்காட்டி வாதிட்டதை நாம் சமூக வலைத்தளங்களில் பார்த்திருக்கலாம்.

பொருளாதார ரீதியாகப் பார்த்தால் உலக அளவில் அமெரிக்கா முதல் இடம் பிடிக்கிறது. பல சர்வதேசத் தளங்களில் அதன் முடிவே இறுதியானதாகவும் இருக்கிறது. ஆனால் அதே சமயம் சூழல் சார் செயல்பாடுகளில் இதற்கு 24வது இடம்தான். 2020ல் யேல் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு விரிவான ஆய்வில் அமெரிக்காவின் பல செயல்பாடுகள் சூழலைப் பாதிக்கின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கரிம உமிழ்வுகளை அதிகம் வெளியிடும் நாடுகளில் அமெரிக்கா இரண்டாவது இடம் பிடிக்கிறது. ஆனால் இதனால் ஏற்படும் காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் செயல்பாடுகளில் அதன் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது. அமெரிக்காவின் 50%க்கும் மேற்பட்ட திடக்கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படாமல், அழிக்கப்படாமல் அப்படியே கிடக்கின்றன. உலக அளவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நுகர்வில் அமெரிக்காவுக்கே முதல் இடம். வரலாற்று ரீதியாகப் பார்த்தால் வேறு எந்த நாட்டையும் விட அமெரிக்கா அதிக அளவில் கரிமங்களின் உமிழ்வுக்குக் காரணமாக இருந்திருக்கிறது.

காலநிலை மாற்றத்தைச் சரியாக எதிர்கொள்ள வேண்டும் என்று நினைக்கிற ஜோ பைடன் சமீபத்தில் அதிபராகியிருக்கிறார். கறுப்பின மக்களுக்கான Black lives matter போராட்டத்துக்குப் பிறகு சூழல்சார் சமூக நீதி பற்றிய விவாதங்கள் மீண்டும் தொடங்கப்பட்டிருக்கின்றன. காட்டுத்தீ,வெப்ப அலை போன்ற அடுத்தடுத்த பேரிடர்களால் பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்கப் பொதுமக்களும் காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை உணரத் தொடங்கியிருக்கிறார்கள். மேட்டிமைவாத சூழல் கருத்தாக்கங்களைக் கேள்வி கேட்கும் பல சூழல் செயற்பாட்டாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். அமெரிக்கா இனி சூழல் செயல்பாடுகளில் ஆர்வம் காட்டும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. தேசிய சின்னம் பாதுகாக்கப்படவேண்டும் என்பதால் முயற்சிகள் எடுத்து வெண்தலைக் கழுகை மீட்டெடுத்த அதே உந்துதல், அமெரிக்க அரசின் எல்லா சூழல் செயல்பாடுகளிலும் இனி வரும் காலங்களில் வெளிப்படும் என்று நம்புவோம்.

-நாராயணி சுப்ரமணியன்

 

தரவுகள்

As long as grass grows: The indigenous fight for Environmental Justice from Colonization to Standing Rock, Dina Gilio-Whitaker, 2019.

Environmental Performance Index (EPI), Yale University, 2020.

USGS, Estimated Use of Water in the United States, 2006.

U.S National Report on Population and Environment, 2006.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.