எமிலிக்காக ஒரு ரோஜா

1

மிஸ் எமிலி க்ரையர்ஸன் இறந்தபோது மொத்த நகரமுமே இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டது. வீழ்ந்துபோன ஒரு புராதனச் சின்னத்துக்கான மரியாதைமிக்க அன்பின் நிமித்தமாக ஆண்களும்,  எமிலியின் வீடு எப்படி இருக்கிறது என்பதைக் காணும் ஆர்வத்தில் அதிகமும் பெண்களும் அதில் கலந்துகொண்டனர். கடந்த பத்து ஆண்டுகளில் தோட்டக்காரரும் சமையல்காரரும் சேர்ந்த ஒரு ஆண் வேலையாளைத் தவிர்த்து யாரும் அவ்வீட்டினுள் சென்று வந்ததில்லை.

அது பெரிய,  சதுர வடிவில் அமைந்த, ஆதியில் வெள்ளை நிறத்தில் இருந்த வீடு. கூரையில் உருளை மற்றும் கூம்பு வடிவ அமைப்புகள், வட்டவடிவில் அமைந்த பால்கனிகள் என அதிகமும் எழுபதுகளின் தான்தோன்றித்தனமான முறையில் கட்டப்பட்ட வீடு. ஒருகாலத்தில் மிகவும் பிரதானமானதாக இருந்த தெருவில் அது அமைந்திருந்தது. மோட்டார் வாகன பழுதுபார்ப்புப் பட்டறைகளும், பஞ்சு பிரித்தெடுக்கும் இயந்திரங்களும் ஆக்கிரமிப்பு செய்து முன்பு அப்பகுதியில் மிகப் பெருமைமிக்கனவாக இருந்த பெயர்களைக்கூட அழித்துவிட்டன. எமிலியின் வீடு மட்டுமே தனது பிடிவாதமான, கவர்ச்சியான வேசையுடையதைப் போன்ற சிதைவுகளைத் தூக்கிப்பிடித்தபடி பஞ்சு வண்டிகளுக்கும் பெட்ரோல்  நிலையங்களுக்கும் மேலாக நின்றுகொண்டிருந்தது; கண் உறுத்தல்களுக்கு மத்தியில் அமைந்த கண் உறுத்தல். இப்போது எமிலியும் பெருமைமிக்க அப்பெயர்களின் பிரதிநிதிகளோடு சேர்ந்துகொள்ளவேண்டி ஸீடர் மரங்கள் மண்டிக்கிடக்கும் கல்லறைத் தோட்டத்தில் ஜெஃபர்ஸன் சண்டையில் மாண்ட தகுதிபெற்றவர்களும் பெயர் தெரியாதவர்களுமான யூனியன் மற்றும் கான்ஃபெடரேட் படைவீரர்களது கல்லறைகள் நடுவே சென்று அடங்கிவிட்டாள்.

உயிரோடிருந்தபோது எமிலி ஒரு பாரம்பரியம், ஒரு கடமை, ஒரு கரிசனம்; கறுப்பினப் பெண்கள் எவரும் உடைக்கு மேலாக மறைப்புத்துணி இன்றி தெருவுக்கு வரக்கூடாது என ஆணை பிறப்பித்த மேயரான கர்னல் சர்தோரிஸ் அவளது அப்பா இறந்த தினத்திலிருந்து என்றென்றைக்குமாக அவளது வரிகளை செலுத்த முன்வந்த 1894ஆம் ஆண்டின் அந்த நாளிலிருந்து எமிலி அந்நகரின்  வழிவழியாக வரும் ஒருவகை கடன்பத்திரமாகவும் இருந்தாள். எமிலி ஏதோ இதைத் தானமாகப் பெற்றுக்கொண்டாள் என்றில்லை. அவள் அப்பா அந்நகருக்கு கடனாகப் பணம் கொடுத்திருப்பதாக கர்னல் சர்தோரிஸ் ஒரு கதையை உருவாக்கினார், நியாயப்படி அப் பணத்தை இந்த வழியில் திருப்பிச் செலுத்துவதாக அவர் சொன்னார். கர்னல் சர்தோரிஸின் தலைமுறையையும் சிந்தனைப் போக்கையும் சேர்ந்த ஒருவரால் மட்டுமே இப்படியொரு கதையைப் புனைந்திருக்க முடியும், அதையும் ஒரு பெண் மட்டுமே உண்மையென நம்பியிருக்க முடியும்.

நவீன கருத்துகளையுடைய அடுத்த தலைமுறையினர் மேயர்களாகவும் நகர்மன்ற உறுப்பினர்களாகவும் வந்தபோது இந்த ஏற்பாடு சிறு அதிருப்தியை உண்டாக்கியது. ஆண்டின் முதல்நாள் வரி கட்டும்படி அவளுக்குக் குறிப்பாணை அனுப்பப்பட்டது. பிப்ரவரி பிறந்தும் அதற்குப் பதிலில்லை. அவளுக்கு வசதிப்படும் நேரத்தில் நகரக் காவல் அதிகாரியின் அலுவலகத்துக்கு வருமாறு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. ஒரு வாரம் கழித்து, தான் நேரில் வரவா அல்லது தன் காரை அனுப்பவா எனக் கேட்டு மேயரே அவளுக்கு எழுதினார். பதிலாக பழங்கால வடிவத்திலிருந்த காகிதத்தில் மங்கிய மைகொண்டு மெல்லிய சரளமான நளினமான எழுத்துக்களில், தான் இப்போதெல்லாம் வெளியே செல்வது இல்லை என எழுதப்பட்ட கடிதம் வந்தது. வரி கேட்டு அனுப்பப்பட்டக் குறிப்பாணையும் எந்தப் பதிலும் எழுதப்படாமல் உடன் இணைக்கப்பட்டிருந்தது.

நகர்மன்றத்தின் சிறப்புக் கூட்டமொன்றை அவர்கள் கூட்டினர். பிரதிநிதிகள் குழுவொன்று எமிலியின் வீட்டுக்குச் சென்று காத்திருந்தது. எட்டு அல்லது பத்து வருடங்களுக்கு முன் சீன ஓவியம் கற்றுத் தருவதை அவள் நிறுத்திய பின் யாரும் அதன்வழி சென்றிராத அந்தக் கதவை அவர்கள் தட்டினர். வயதான கறுப்பின வேலையாள் அழைத்துச் செல்ல அவர்கள் வெளிச்சம் மங்கிய கூடத்துக்குள் சென்றனர். அங்கிருந்து இன்னுமதிகம் இருள் கவிந்த, தூசினாலும் பயன்படுத்தாமையினாலும் உண்டான ஈரம் கலந்த மட்கிய வாடையுடனிருந்த படிகள் வழி வரவேற்பறையொன்றை அடைந்தனர். அந்த அறை தோலுறைகளால் மூடப்பட்ட பெரிய இருக்கைகளைக் கொண்டிருந்தது. வேலையாள் சன்னல் தடுப்புகளைத் திறந்தபோது அந்தத் தோலுறைகளில் கிழிசல்கள் இருப்பதைக் காணமுடிந்தது. அதில் அவர்கள் அமர்ந்தபோது தூசு கிளம்பி சிறுசிறு துகள்கள் ஒற்றைச் சூரியக் கிரணத்தில் சுழன்றபடி அவர்களது தொடைகளைச் சுற்றி மிதந்தன. கணப்பு அடுப்பு முன் அழுக்கேறிப்போன பொன்னிறத் தாங்கியில் மெழுகுப் பென்சிலால் வரையப்பட்ட எமிலியின் அப்பாவின் படம் இருந்தது.

அவள் உள்ளே வந்தபோது அவர்கள் எழுந்து நின்றனர்; கறுப்பு ஆடையில், கழுத்திலிருந்த தங்கச் சங்கிலி இடுப்பு வரை இறங்கி வந்து இடுப்புப் பட்டியில் மறைந்திருக்க, அழுக்கடைந்த தங்கப்பூணைக் கொண்ட கருங்காலி மரத்தாலான கைத்தடியை ஊன்றி வந்த சிறிய பருமனான உருவம். அவளது உருவம் சிறியதாக, சற்றுத் தடிமனாக இருந்தது. அதனாலேயே மற்றவருக்கு பூசினாற்போன்று தோன்றக்கூடிய உடல்வாகு அவளைப் பருமனானவளாகக் காட்டியது. நீண்ட நாள் தண்ணீரில் கிடந்ததைப்போல அவள் உடல் ஊதிப்போய் நிறம் வெளிறிக் காணப்பட்டது. அவள் முகத்தின் மேடுகளுக்குள் தொலைந்திருந்த கண்கள், வந்திருந்தவர்கள் தாங்கள் வந்த விஷயம் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கையில் ஒரு முகத்திலிருந்து மற்றொன்றுக்கு  நகர்ந்தபோது மாவு உருண்டையில் அழுத்தி வைக்கப்பட்ட இரண்டு சிறிய கரித்துண்டுகளைப் போல் தோன்றின.

அவர்களை அவள் அமரச் சொல்லவில்லை. பேசிக் கொண்டிருந்தவர் சட்டென தனது பேச்சை நிறுத்தும்வரை கதவருகே நின்றபடி அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். அப்போது தங்கச் சங்கிலியின் முனையில் கட்டியிருந்த கண்ணுக்குத் தெரியாத கடிகாரத்தின் ஓசையை அவர்கள் கேட்டனர்.

அவள் குரல் வறண்டு உணர்ச்சியற்றிருந்தது. “ஜெஃபர்ஸனில் எனக்கு வரிகள் ஏதும் கிடையாது. கர்னல் சர்தோரிஸ் அதை எனக்கு விளக்கமாகச் சொல்லியிருக்கிறார். விரும்பினால் உங்களில் யாராவது ஒருவர் நகரத்தின் ஆவணங்களைப் பார்த்துத் திருப்தி கொள்ளலாம்.”

“ஆனால், வரிகள் இருக்கின்றன. நாங்கள் நகரத்தின் அதிகாரிகள், மிஸ் எமிலி. காவல் அதிகாரியிடமிருந்து அவரது கையொப்பமிட்ட கடிதமொன்று  உங்களுக்குக் கிடைக்கவில்லை?”

“கடிதமொன்று வந்தது, ஆமாம்” எமிலி சொன்னாள். “அவர் தன்னை இந்நகரின் காவல் அதிகாரியாகக் கருதிக்கொண்டிருக்கலாம்… ஜெஃபர்ஸனில் எனக்கு வரிகள் ஏதும் கிடையாது.”

“ஆனால், அப்படிச் சொல்லப் பதிவேடுகளில் எந்த ஆதாரமும் இருக்கவில்லை. நாங்கள் சட்டப்படி…”

“கர்னல் சர்தோரிஸைப் பாருங்கள். ஜெஃபர்ஸனில் எனக்கு வரிகள் ஏதும் கிடையாது.”

“ஆனால், மிஸ் எமிலி…”

“கர்னல் சர்தோரிஸைப் பாருங்கள்.” (கர்னல் சர்தோரிஸ் இறந்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் ஆகியிருந்தது). “ஜெஃபர்ஸனில் எனக்கு வரிகள் ஏதும் கிடையாது. தோபி!” அந்த வேலைக்காரர் வந்தார். “இந்த கனவான்களுக்கு வெளியே போகும் வழியைக் காட்டு.”

2

இவ்வாறு அவர்களை அவள் வெற்றிகொண்டாள். அந்த வாடை சம்பந்தமாக முப்பது வருடங்களுக்கு முன்  அவர்களது தந்தையர்களை வெற்றிகொண்டது போலவே தனது பலமத்தனையும் கொண்டு அவர்களை வென்றாள். அப்போது அவள் தந்தை இறந்து இரண்டு ஆண்டுகளும் அவளைத் திருமணம் செய்துகொள்வான் என நாங்கள் எதிர்பார்த்த அவளது காதலன் அவளை விட்டு ஓடிப்போய் சிறிது காலமும் ஆகியிருந்தது. அவள் தந்தை இறந்த பிறகு அவள் அரிதாகவே வெளியில் வந்தாள். அவள் காதலன் ஓடிப்போனபின் கிட்டத்தட்ட யாருமே அவளை வெளியில் பார்த்ததில்லை. சில பெண்களுக்கு அவளைப் பார்க்கச் செல்லும் தைரியமிருந்தது ஆனால் அவளோ யாரையும் பார்க்கத் தயாராயில்லை. அந்த இடத்தில் யாரேனும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதற்கான அறிகுறி அந்த கறுப்பின வேலைக்காரர், அப்போது அவர் இளைஞர், அங்காடிக்குச் செல்லும் ஒரு கூடையுடன் அவ்வப்போது வீட்டுக்கு உள்ளும் வெளியிலுமாகப் போய் வந்துகொண்டிருந்தது மட்டுமே.

“ஒரு ஆண், எந்த ஆணாகட்டும், சமையலறையை ஒழுங்காக வைத்திருந்தார்ப் போலத்தான்” எனப் பெண்கள் பேசிக் கொண்டார்கள். எனவே அந்த வாடை கிளம்பியபோது அவர்கள் ஆச்சரியப்படவில்லை. அது அகண்ட, ஏராளமான உயிரிகளால் நிரம்பிய இவ்வுலகிற்கும் உயர்ந்தவர்களும் வலுமிக்கவர்களுமான க்ரையர்ஸன்களுக்கும் இடையிலான இன்னொரு தொடர்பு.

எண்பது வயதான மேயர் நீதிபதி ஸ்டீவன்ஸிடம் பக்கத்து வீட்டுப் பெண்ணொருவர் புகார் தெரிவித்தார்.

“அதற்கு நான் என்ன செய்யவேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள், அம்மா?”  அவர் கேட்டார்.

“அதை நிறுத்தச் சொல்லி அவருக்குச் சொல்லியனுப்புங்கள்” அப் பெண் கேட்டார்.  “அதற்கு சட்டத்தில் இடமிருக்கிறது, இல்லையா?”

“எனக்குத் தெரியும், அதற்கு அவசியமில்லை” நீதிபதி ஸ்டீவன்ஸ் சொன்னார். “அது வாசலில் அந்த வேலைக்காரர் அடித்துப் போட்ட ஒரு பாம்பாகவோ எலியாகவோ இருக்கலாம். அவரிடம் நான் பேசுகிறேன்.”

அடுத்த நாள் அவருக்கு மேலும் இரண்டு புகார்கள் வந்தன. அதில் ஒன்று தயக்கம் கலந்த எதிர்ப்புடன் ஒரு ஆணிடமிருந்து வந்திருந்தது. “உண்மையிலேயே நாம் ஏதாவது செய்தாக வேண்டும், நீதிபதியவர்களே. இந்த உலகில் மிஸ் எமிலிக்குத் தொந்தரவு தர நினைப்பவர்களில் கடைசி ஆளாக நான் இருப்பேன். ஆனால் நாம் ஏதாவது செய்தேயாக வேண்டும்.” அன்றிரவு நகர்மன்றக் குழு கூடியது; மூன்று நரைத்தலைகளும் ஒரு இளைஞனும்-வளர்ந்து வரும் தலைமுறையினருள் ஒருவன்.

“அது ரொம்பச் சுலபம்” அவன் சொன்னான். “அவர்களது இடத்தைச் சுத்தம் செய்யும்படி உத்தரவொன்றை அனுப்புங்கள். கெடு விதியுங்கள். அதற்குள் அது நடக்கவில்லையென்றால்…”

“வாயை மூடுங்கள், ஐயா”, நீதிபதி ஸ்டீவன்ஸ் சொன்னார். “அவளிடமிருந்து கெட்ட வாடை வருகிறதென்று முகத்துக்கு நேராக ஒரு பெண்ணை உங்களால் குற்றஞ்சாட்ட முடியுமா?”

ஆகவே மறுநாள் இரவு, நள்ளிரவுக்குப் பின் நான்கு பேர் எமிலியின் வீட்டு வாசலைக் கடந்து திருடர்களைப் போல் வீட்டைச் சுற்றி மெதுவாக நடந்தனர். அவர்களில் ஒருவர் தோளில் தொங்கிய பையில் கையைவிட்டு விதைப்பது போல எதையோ தூவியபடியே வர மற்றவர்கள் செங்கல்லால் ஆன அவ்வீட்டின் கீழ்ப்பகுதியையும் நிலவறையின் திறப்புகளையும் முகர்ந்தபடி வந்தனர். நிலவறைக் கதவை உடைத்துத் திறந்து உள்ளேயும் வெளிப்புறக் கட்டடங்களிலும் சுண்ணாம்பைத் தூவினர். திரும்ப அவர்கள் வாசலைக் கடந்து வெளியே வருகையில் இருட்டிக் கிடந்த சன்னலொன்று ஒளியூட்டப்பட்டது. அதில் தனக்குப் பின்னால் ஒளி அமைந்திருக்க நிமிர்ந்து விறைப்புடன்  மார்பளவிலான ஒரு சிலையைப்போல மிஸ் எமிலி அமர்ந்திருந்தாள். அவர்கள் அரவமின்றி ஊர்ந்து புல்வெளியைத் தாண்டி தெருவில் வரிசையாக நின்றிருந்த லோகஸ்ட் மரங்களின் நிழலில் மறைந்தனர். ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் அந்த வாடை இல்லாமல் போனது.

மக்கள் அவளுக்காக உண்மையிலேயே பரிதாபப்பட ஆரம்பித்தது அப்போதுதான். எங்கள் நகர மக்கள் வயதான  அவளது அத்தை வ்யாட் அம்மையார்  எப்படிக் கடைசியில் முழுப் பைத்தியமாகிப் போனார் என்பதை நினைவுகூர்ந்தனர். க்ரையர்ஸன்கள் எப்போதுமே தங்களை இயல்புக்கும் சற்றுக் கூடுதலாகவே உயர்வாகக் காட்டிக் கொண்டதாக எண்ணினர். அந்தவாறே நகரத்தின் இளைஞர்கள் யாருமே மிஸ் எமிலிக்கு ஏற்ற ஜோடியாக இல்லை. நெடுங்காலமாக அவர்களை நாங்கள் அழகுற அமைந்த ஒரு சிலைக்காட்சி அமைப்பாக நினைவில் கொண்டிருந்தோம். வெள்ளை உடையில் பின்னணியில் மெல்லிய உருவமாக மிஸ் எமிலி, முன்னணியை அடைத்த ஒரு வெளிக்கோட்டுருவமாக எமிலிக்கு முதுகு காட்டியபடி கால்களை அகட்டி நின்று குதிரைச் சாட்டையைப் பிடித்தபடி அவள் அப்பா, இருவரையும் சட்டம்செய்த விதமாகப் பின்புறம் திறந்து கிடக்கும் கதவு. அவளுக்கு முப்பது வயதாகி இன்னும் திருமணமாகாமல் இருந்தபோது எங்களுக்கு அதில் மகிழ்ச்சியில்லை, ஆனால் நாங்கள் நினைத்தது சரியென்று ஆனது; அக்குடும்பத்தின் பைத்தியக்காரத்தனத்தைக் கணக்கிலெடுத்துக் கொண்டால்கூட அவை தகைந்து வந்திருக்கும் பட்சத்தில் கிடைத்த வாய்ப்புக்களை அவள் தட்டிக்கழித்திருக்க மாட்டாள்.

அவள் அப்பா இறந்தபோது அவளுக்கென்று இருந்தது அந்த வீடு மட்டுமே என்பது தெரியவந்தது; ஒருவிதத்தில் மக்களுக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது. கடைசியில் மிஸ் எமிலி மீது பரிதாபம் கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு. வறிய நிலையில் தனித்துவிடப்பட்ட சூழல் அவளைச் சாதாரண மனுஷியாக்கும். ஒரு ரூபாய் கூடவோ குறையவோ இருப்பதன் சந்தோஷம் அல்லது துக்கத்தை இனி அவளும் அனுபவிப்பாள்.

எங்கள் வழக்கப்படி அவள் தந்தை இறந்த மறுநாள் பெண்கள் அனைவரும் அவள்  வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரிக்க ஆயத்தமானார்கள். மிஸ் எமிலி வழக்கமாக உடுத்தியபடி முகத்தில் துக்கத்தின் அடையாளம் ஏதுமற்று அவர்களைத் தன் வீட்டு வாயிற்படியிலேயே சந்தித்தாள். தன் தந்தை இறக்கவில்லை என அவர்களிடம் சொன்னாள். அவளைப் பார்க்க வந்த பாதிரிகளிடமும், உடலைப் புதைக்க அவளை அறிவுறுத்த வந்த மருத்துவர்களிடமும் மூன்று நாட்களுக்கு அதையே சொன்னாள். வலுவுடன் நின்று சட்டப்படி அவர்கள் நடவடிக்கை எடுக்க முனைந்தபோது அவள் தளர்ந்தாள். அவசர அவசரமாக  உடலை அவர்கள் புதைத்தனர்.

அவளுக்கு அப்போது பித்து பிடித்திருந்தது என நாங்கள் சொல்லவில்லை. அவள் அவ்வாறு செய்வாள் என்றே நாங்கள் எதிர்பார்த்தோம். அவள் தந்தை விரட்டியடித்த அத்தனை இளைஞர்களையும் நாங்கள் நினைத்துப் பார்த்தோம். எல்லாரையும் போல எதுவும் மிச்சமில்லாதபோது தன்னை எது எதுவுமில்லாமல் ஆக்கியதோ அதையே அவள் பற்றிக் கொள்வாள் என எங்களுக்குத் தெரியும்.

 

3

நீண்ட நாட்கள் அவள் நோய்வாய்ப்பட்டிருந்தாள். திரும்ப அவளை நாங்கள் பார்த்தபோது தலைமுடியைக் குட்டையாக வெட்டியிருந்தாள். அவளை அது இளம்பெண்ணாகக் காட்டியது, வண்ணமூட்டப்பட்ட தேவாலய சன்னல்களில் காணப்படும் தேவதூதுவர்களை லேசாக நினைவுபடுத்தும் வகையில் சற்றே துயருடனும் தூயத் தன்மையுடனும்.

நகரத் தெருக்களோரம் நடைபாதை அமைக்க அப்போதுதான் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. அவள் தந்தை இறந்த பிறகு வந்த கோடையில் வேலைகள் ஆரம்பித்தன. கட்டுமான நிறுவனம் கறுப்பின வேலையாட்கள், மட்டக் குதிரைகள், இயந்திரங்கள் இவற்றுடன் ஹோமர் பாரன் என்ற மேற்பார்வையாளனோடும் வந்தது. அவன் வடக்கத்திக்காரன். பெரிய கருத்த உருவமும், தடித்தக் குரலும், முகத்தைக் காட்டிலும் வெளுப்பான கண்களையும் கொண்ட எதற்கும் துணிந்த ஒருவன். அவன் கறுப்பின வேலையாட்களை வசவுகூறித் திட்டுவதையும், அவ்வேலையாட்கள் குந்தாலிகள் உயர்ந்து விழுவதற்கேற்ப பாடும் பாடல்களையும் கேட்க சிறுவர்கள் கூட்டமாகப் பின்னாலேயே சென்றார்கள். வெகு விரைவிலேயே நகரத்தில் எல்லாரையும்  அவன் தெரிந்துவைத்துக் கொண்டான். எப்போதெல்லாம் சதுக்கத்தையொட்டி பலத்தச் சிரிப்புச் சத்தங்கள் கேட்கின்றனவோ அங்கே அந்தக் கூட்டத்தின் நடுவே ஹோமர் பாரன் இருப்பான். ஞாயிற்றுக்கிழமை மதியங்களில் அவன் மிஸ் எமிலியுடன் மஞ்சள் சக்கரங்களையுடைய, வாடகைக்கு எடுத்த செம்பழுப்புக் குதிரைகள் பூட்டிய சிறு குதிரைவண்டியில் சவாரி போவதை சமீபமாக நாங்கள் பார்த்தோம்.

முதலில் எமிலி அவனில் ஆர்வமுடையவளாக இருப்பதையறிந்து நாங்கள் மகிழ்வுற்றோம், ஏனென்றால் பெண்கள் சொன்னார்கள், “ஆமாம், க்ரையர்ஸன் குடும்பத்தவள் ஒரு வடக்கத்திக்காரனை, ஒரு தினக்கூலியைப் பற்றி தீவிர யோசனை கொள்ளமாட்டாள்”. தந்தையை இழந்த துக்கம்கூட ஒரு நல்ல பெண் தன் குடிப்பெருமையை மறந்து செயல்படக் காரணமாகாது எனச் சொன்ன மற்றவர்களும்-வயதானவர்கள்-இருந்தனர். குடிப்பெருமை என்று அதைக் குறிப்பிடாமல் “பாவப்பட்ட எமிலி, அவளது உறவுக்காரர்கள் அவளுக்கு உதவ வர வேண்டும்” என்று அவர்கள் சொன்னார்கள். அவளுக்கு அலபாமாவில் சில உறவினர்கள் இருந்தனர்; வயதான அத்தையான அந்தப் பைத்தியம் பிடித்த பெண்மணி வ்யாட்டின் எஸ்ட்டேட்டுக்கு உரிமை கொண்டாடுவது பற்றிய சண்டையில் அவர்களது உறவை எமிலியின் அப்பா துண்டித்து விட்டிருந்தார். இரண்டு குடும்பங்களுக்கிடையே பேச்சுவார்த்தை கிடையாது. அவர்கள் அவள் அப்பாவின் இறுதி ஊர்வலத்துக்குக்கூட யாரையும் அனுப்பிவைக்கவில்லை.

வயதானவர்கள் “பாவம் எமிலி” எனச் சொல்ல ஆரம்பித்ததுமே அந்த முணுமுணுவென்ற பேச்சு தொடங்கிவிடும். “அது உண்மையாயிருக்குமென நீ நினைக்கிறாயா?” அவர்கள் ஒருவரையொருவர் கேட்டுக்கொண்டனர். “ஆமாம், அது உண்மைதான். வேறென்ன…“ இப்படி அவர்கள் குசுகுசுவென்று பேசிக்கொண்டிருக்க ஞாயிற்றுக்கிழமை சூரியனை முன்னிட்டு மூடிய கண்ணாடி சன்னல்களுக்குள் கழுத்துயர்ந்த பட்டு, ஒண்பட்டு ஆடைகள் சரசரக்க, குதிரைகள் பூட்டிய சிறிய அவ்வண்டியின் விரைவான க்ளாப்-க்ளாப்-க்ளாப் ஓசை அவர்களைக் கடந்து சென்றபோது அவர்கள் சொன்னார்கள்: “பாவம் எமிலி”.

அவள் வீழ்ந்துபோனாள் என நாங்கள் எண்ணியபோதுகூட தலை   உயர்த்தியே நடந்தாள். க்ரையர்ஸன் குடும்பத்தவரில் கடைசியானவள் என்ற தன் தகுதிக்கு அதிகமாகவே அவள் எதிர்பார்த்ததாகத் தோன்றியது. தன்னை யாராலும் ஊடுருவ முடியாது என்ற கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக, தான் சற்று நாகரீகக் கேடாக நடப்பது- ஒருமுறை அவள் ஆர்ஸெனிக் எலிப் பாஷானம் வாங்கினாள்- தேவையென்பது போல அவள் நடந்துகொண்டாள். அது அவர்கள் “பாவம் எமிலி” எனச் சொல்ல ஆரம்பித்து ஒரு வருடத்துக்கும் பிறகு, அவளது ஒன்றுவிட்ட சகோதரிகள் இருவர் தொடர்ந்து அவளைப் பார்க்க வந்துகொண்டிருந்தபோது நடந்தது.

“எனக்குக் கொஞ்சம் விஷம் வேண்டும்” மருந்துக் கடைக்காரரிடம் அவள் கேட்டாள். அப்போது அவளுக்கு வயது முப்பதைக் கடந்திருந்தது. இன்னமும் மெலிதான உருவத்துடன்-வழக்கத்துக்கு மாறான மெலிந்த உருவத்துடன்-உணர்ச்சியற்ற ஆனால் பீடுடைய கருத்த அந்தக் கண்கள் இரண்டு நெற்றிப் பொட்டுகளுக்கிடையேயும் விழிப் பள்ளங்களைச் சுற்றியும் இறுக்கமாக அமைந்த சதையைக் கொண்ட முகத்தில் அமைந்து ஒரு கலங்கரை விளக்கக் காவல்காரனின் முகம் எப்படி இருக்கும் என நீங்கள் கற்பனை செய்திருப்பீர்களோ அப்படி இருந்தது அவள் முகம்.  “எனக்குக் கொஞ்சம் விஷம் வேண்டும்” அவள் கேட்டாள்.

“எந்த வகை விஷம் மிஸ் எமிலி? எலிகளுக்குப் பயன்படுத்துவது போன்றதா? நான் சொல்கிறேன் இந்த…”

“இருப்பதிலேயே…. நீங்கள் வைத்திருப்பதிலேயே சிறந்தது எனக்கு வேண்டும், எந்த வகை என்பது பற்றியெல்லாம் கவலையில்லை.”

மருந்துக் கடைக்காரர் பலவற்றின் பெயர்களைச் சொன்னார். “ஒரு யானை வரை எதை வேண்டுமானாலும் கொல்லக்கூடியவை உள்ளன. உங்களுக்குத் தேவையானது….”

“ஆர்ஸெனிக்” மிஸ் எமிலி சொன்னாள். “அது நன்றாக இருக்குமா?”

“ஆர்ஸெனிக்கா? இருக்கிறது. ஆனால் உங்களுக்கு எதற்காக….”

“எனக்கு ஆர்ஸெனிக் வேண்டும்.”

மருந்துக் கடைக்காரர் அவளை உற்றுப்பார்த்தார். அவள் திரும்பி அவரைப் பார்த்தாள். விறைப்பான அவள் முகம் கசங்கிய கொடியைப் போலிருந்தது. “சரி, எதற்காக?” மருந்துக் கடைக்காரர் கேட்டார். “உங்களுக்கு அது தேவைப்படுகிறது என்றால், அதை எதற்காகப் பயன்படுத்தப்போகிறீர்கள் எனச் சொல்ல வேண்டும், சட்டம் அப்படி.”

மிஸ் எமிலி அவரையே உற்றுப் பார்த்தாள், அவர் தன் கண்களை விலக்கிக் கொண்டு ஆர்ஸெனிக்கை எடுத்துப் பொட்டலம் கட்டும் வரை தலையைச் சற்றே பின்னுக்குச் சாய்த்து அவரது கண்களுக்குள் பார்த்தபடி இருந்தாள். பொருட்களைக் கொண்டுவந்து தரும் கறுப்பினச் சிறுவன் அந்தப் பொட்டலத்தைக் கொண்டுவந்து கொடுத்தான்; உள்ளே சென்ற மருந்துக் கடைக்காரர் வெளியே வரவில்லை. வீட்டிற்கு வந்து அதைத் திறந்து பார்த்தபோது மருந்துப் பெட்டியின் மேல் கபாலமும் எலும்புகளும் வரைந்து அடியில் “எலிகளுக்காக” என எழுதியிருந்தது.

4

அடுத்தநாள் “அவள் தற்கொலை செய்துகொள்ளப் போகிறாள்” என நாங்கள் அனைவரும் பேசிக்கொண்டோம்; அதோடு அதுவே அவளுக்கு சரியானதாக இருக்கும் என்றும் சொன்னோம். ஆரம்பத்தில் அவளை ஹோமர் பாரனோடு பார்த்தபோது “அவள் அவனைத் திருமணம் செய்துகொள்வாள்” என்றோம். பிறகு “இப்போதும் அவள் அவனை சம்மதிக்க வைப்பாள்” என்றோம், காரணம் தனக்கு ஆண்களைப் பிடிக்கும் என ஹோமர் சொல்லியிருக்கிறான். அதோடு எல்க்ஸ் விடுதியில் தன்னிலும் இளைய ஆண்களோடு அவன் குடிப்பதும் அவனுக்குத் திருமணத்தில் நம்பிக்கையில்லை என்பதும் எங்களுக்குத் தெரியவந்தது. பிறகு ஞாயிறு மதியத்தில் பளபளக்கும் அந்தச் சிறு குதிரைவண்டியில் மிஸ் எமிலி தலையை உயர்த்தியபடியும் ஹோமர் பாரன் சாய்வாகத் தொப்பியணிந்து வாயில் சுருட்டுடன் கடிவாளம் சாட்டை ஆகியனவற்றை மஞ்சள் கையுறை அணிந்த கையில் பற்றியபடியும் கடந்து சென்றபோது கண்ணாடி சன்னல்களுக்குப்  பின்னிருந்து  நாங்கள்  சொன்னோம் “பாவம் எமிலி”.

அது நகரத்துக்கு அவமானம் மற்றும் இளைஞர்களுக்கு மோசமான முன்னுதாரணம் எனச் சில பெண்கள் சொல்ல ஆரம்பித்தனர். ஆண்கள் அதில் தலையிட விரும்பவில்லை. எனினும் சில பெண்கள் பாப்டிஸ்ட் பாதிரியாரை வற்புறுத்தி-மிஸ் எமிலியின் குடும்பம் எபிஸ்கோப்பல் பிரிவைச் சேர்ந்தது-எமிலியைச் சென்று பார்க்க வைத்தனர். அவளைச் சந்தித்தபோது என்ன நடந்தது என்பதை ஒருபோதும் அவர் சொல்லவில்லை, அதோடு திரும்பவும் அங்கு செல்ல அவர் மறுத்துவிட்டார். அடுத்த ஞாயிறன்று அவர்கள் மறுபடியும் தெருக்களில் வலம் வந்தனர். மறுநாள் பாதிரியாரின் மனைவி அலபாமாவில் உள்ள எமிலியின் உறவினர்களுக்குக் கடிதம் எழுதினார்.

திரும்ப அவள் வீட்டுக்கு ரத்த சொந்தங்கள் வந்தனர், நாங்கள் என்ன நடக்கிறதென்று கவனிக்கத் தொடங்கினோம். முதலில் எதுவுமே நடக்கவில்லை. அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என நாங்கள் உறுதியாக நம்பினோம். மிஸ் எமிலி நகைக் கடைக்குச் சென்று வெள்ளியில் முகச்சவரக் கருவிகள் உள்ளிட்ட குளிப்பறைப் பொருட்கள், அவற்றில் ஹெச். பி. என்ற எழுத்துகள் பொறித்திருக்கும்படி, செய்யச் சொன்னதாக நாங்கள் அறிந்தோம். இரண்டு நாட்கள் கழித்து இரவில் உடுத்தும் சட்டை உள்ளிட்ட ஒரு ஆணுக்கான அத்தனை ஆடைகளையும் அவள் வாங்கி வந்ததாக எங்களுக்குத் தெரியவந்தது. நாங்கள் சொன்னோம் “அவர்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது”. எங்களுக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் மகிழ்ச்சிக்குக் காரணம் அந்த ஒன்றுவிட்ட சகோதரிகள் இருவரும் மிஸ் எமிலியை விடவும் அதிகம் க்ரையர்ஸன்களாக இருந்ததுதான்.

எனவே நடைபாதைப் பணிகள் முடிந்து சிறிது காலம் கழித்து ஹோமர் பாரன் அங்கிருந்து போய்விட்டது எங்களுக்கு எந்த ஆச்சரியத்தையும் தரவில்லை. ஆனால் எல்லாரும் அறியும்படியான பிரிவுபச்சாரம் இல்லையே என்பதில் நாங்கள் சிறிது ஏமாற்றமடைந்தோம். அவன் மிஸ் எமிலியின் வருகைக்கான ஆயத்தங்களை மேற்கொள்ளச் சென்றிருக்கிறான் அல்லது அந்த ஒன்றுவிட்ட சகோதரிகளை கைகழுவிவிட்டு வர அவளுக்கு ஒரு வாய்ப்பளித்துவிட்டுப் போயிருக்கிறான் என்றே நம்பினோம். (அந்நேரத்தில் அதுவொரு ரகசியத் திட்டமாயிருந்தது. அந்தச் சகோதரிகளை விரட்டுவதில் நாங்கள் எல்லாருமே எமிலிக்கு உதவும் கூட்டாளிகளாயிருந்தோம்). ஒருவாரம் கழித்து அவர்கள் வீட்டை விட்டுக் கிளம்பினர். நாங்கள் எண்ணியவாறே மூன்றே நாட்களில் ஹோமர் பாரன் திரும்பி வந்தான். மாலை மங்கும் வேளையில் மிஸ் எமிலியின் வீட்டு வேலைக்காரர் சமையலறைக் கதவு வழியாக அவனை வீட்டுக்குள் அழைத்துச் சென்றதைப் பார்த்ததாக அண்டை வீட்டுக்காரர் ஒருவர் சொன்னார்.

அதுதான் ஹோமர் பாரனைக் கடைசியாக நாங்கள் பார்த்தது. மிஸ் எமிலியை அதன் பிறகு சில நாட்களுக்குப் பார்த்தோம். அந்தக் கறுப்பின வேலைக்காரர் கையில் அங்காடிக்குச் செல்லும் கூடையுடன் உள்ளேயும் வெளியேயும் போய் வந்தார், ஆனால் முன் கதவு எப்போதும் அடைத்தே இருந்தது. எப்போதாவது அவளைக் கணநேரம் நாங்கள் சன்னலில் பார்ப்போம், அன்றிரவு சுண்ணாம்பைத் தூவியவர்கள் பார்த்தது போல. ஆனால் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு  அவளைத் தெருவில் பார்க்க முடியவில்லை. இதையும் நாங்கள் எதிர்பார்த்தேயிருந்தோம். பல நேரங்களில் இயல்பான ஒரு பெண்ணுக்குரிய வாழ்வை அவளுக்கு அனுமதிக்காத அவளுள் இருந்த அவளது தந்தையின் குணம், அவளிடமிருந்து அகல முடியாதபடிக்கு கடுமையானதாகவும் ஆக்ரோஷம் மிக்கதாகவும் இருந்தது.

அடுத்து நாங்கள் மிஸ் எமிலியைப் பார்த்தபோது அவளது உடல் பருத்து கேசம் நரைக்கத் தொடங்கியிருந்தது. அடுத்து வந்த சில ஆண்டுகளில் நரை மேலும் மேலும் கூடி பிறகு நரைப்பது நின்றபோது கேசம் கறுப்பு வெள்ளை மற்றும் பழுப்பு வெள்ளையாய்க் காட்சியளித்தது. எழுபத்து நான்கு வயதில் அவள் இறந்த அந்த தினம் வரை வலுவான பழுப்பு வெள்ளையில், சுறுசுறுப்பாய் இயங்கும் ஒரு ஆண்மகனுடைய கேசத்தைப் போலவே அது காணப்பட்டது.

அப்போதிருந்து அவ்வீட்டின் முன்கதவு மூடியிருந்தது. இடையில் ஆறு அல்லது ஏழு வருடங்கள்-அப்போது அவள் வயது நாற்பதையொட்டியிருந்தது-அவள் சீன ஓவியம் கற்றுத்தந்த காலத்தில் மட்டும் அது திறந்திருந்தது. கீழறைகளுள் ஒன்றில் அவள் ஓவியக்கூடத்தை அமைத்திருந்தாள். அங்கு கர்னல் சர்தோரிஸின் சமகாலத்தவர்களது மகள்களும் பேத்திகளும் உண்டியல் தட்டில் போட கையில் இருபத்தைந்து சென்ட் நாணயத்துடன் ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்துக்கு அனுப்பப்படும் அதே ஒழுங்குடனும் உணர்வுடனும் அங்கு அனுப்பப்பட்டனர். இதனிடையே அவளது வரிகள் கட்டப்பட்டு வந்தன.

 

பின் இளைய தலைமுறையினர் நகரின் முதுகெலும்பாகவும் உணர்வாகவும் மாறினர். ஓவியம் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது. ஓவியம் கற்றவர்கள், வண்ணப்பெட்டிகள், கடும் வேலைவாங்கும் தூரிகைகள் மற்றும் பெண்கள் பத்திரிக்கைகளிலிருந்து வெட்டப்பட்ட படங்களுடன் தங்கள் பிள்ளைகளை அவளிடம் அனுப்பவில்லை. கடைசியாக வந்தவரும் வெளியேறியபோது மூடிய முன்கதவு பிறகு எப்போதைக்குமாக அடைபட்டது. நகருக்கு இலவச தபால் விநியோக முறை வந்தபோது கதவின்மேல் உலோகத்தில் அமைந்த எண்களைக் கட்டி அதனுடன் தபால் பெட்டியொன்றை வைக்க அனுமதி அளிக்காத ஒரே நபர் மிஸ் எமிலிதான். அவர்கள் எவ்வளவு சொல்லியும் அவள் கேட்கவில்லை.

நாட்களாக, மாதங்களாக, வருடங்களாக அந்த கறுப்பின வேலைக்காரர் தலை நரைத்து கூன் விழுந்து கையில் அங்காடிக்குச் செல்லும் கூடையுடன் வீட்டிற்கு உள்ளும் புறமும் சென்று வருவதை நாங்கள் கவனித்தபடியிருந்தோம். ஒவ்வொரு டிசம்பரிலும் அவளுக்கு வரி செலுத்த உத்தரவிட்டு ஆணை அனுப்பினோம், வாங்கப்படாமையால் அது ஒருவாரம் கழித்து தபால் அலுவலகத்தால் திருப்பி அனுப்பப்படும். எப்போதாவது அவளை நாங்கள் கீழறைகளின் சன்னல்களில் பார்ப்போம். வீட்டின் மேல்தளத்தை அவள் மூடிவிட்டிருந்தாள். எங்களைப் பார்த்தபடியிருக்கிறதா இல்லையா என ஒருபோதும் எங்களால் சொல்ல முடியாத, பிறை மாடத்திலிருக்கும் கல்லில் குடைந்த ஒரு மார்பளவுச் சிலையைப் பார்ப்பது போல அவளைப் பார்ப்போம். இவ்வாறாக அவள் பிரியத்துக்குரியவள், தவிர்க்க இயலாதவள், ஊடுறுவ முடியாதவள், எதனாலும் பாதிக்கப்படாதவள், ஒழுங்குகளை மீறுபவள் என ஒரு தலைமுறையிலிருந்து மற்றதற்கு கடந்து சென்றாள்.

அவ்வாறே அவள் இறந்தாள். தள்ளாத ஒரு வேலைக்காரன் மட்டுமே துணைக்கிருக்க தூசும் இருளும் படிந்த வீட்டினுள் மடிந்து வீழ்ந்தாள். அவள் நோய்வாய்ப்பட்டிருந்ததுகூட எங்களுக்குத் தெரியாது. அந்த வேலைக்காரரிடமிருந்து தகவல்களைப் பெற முயல்வதை எப்போதோ நாங்கள் கைவிட்டிருந்தோம். அவர் யாரிடமும் பேசமாட்டார், சொல்லப் போனால் மிஸ் எமிலியிடம் கூட பயன்படுத்தாமையினாலோ என்னவோ அவர் குரல் இறுகிக் கடினமாகிவிட்டிருந்தது.

கீழ்த்தளத்தில் இருந்த அறைகளொன்றில் திரைச்சீலையமைந்த வாதுமை மரத்தாலான பெரிய கட்டிலில் வெளிச்சத்தைப் பார்க்காமையினால் மஞ்சள் நிறமேறி சிதைந்து கிடந்த தலையணையில் தனது நரைத்தலையைச் சாய்த்து அவள் இறந்துபோனாள்.

5

கிசுகிசுப்பான குரல்களுடனும் துறுதுறுவென்ற ஆவல்மிக்க பார்வைகளுடனும் முதலில் வந்த பெண்களை வாசலில் பார்த்த வேலைக்காரர் அவர்களை உள்ளே அனுமதித்தார். பிறகு அவர் காணாமல் போனார். வீட்டினுள்ளாக நடந்து பின்புறமாக வெளியேறியவரை பிறகு காண முடியவில்லை.

ஒன்றுவிட்ட சகோதரிகள் உடனே வந்தனர். கடையில் வாங்கப்பட்ட பூக்களின்  குவியலுக்கடியில் கிடந்த மிஸ் எமிலியைக் காண நகரமே திரண்டு வர, அவள் சவப்பெட்டிக்கு மேல் அவளது அப்பாவின் ஓவியம் ஆழ்ந்த சிந்தனையில் இருக்க, வந்திருந்த பெண்கள் தாழ்ந்த குரலில் திகிலூட்டும் கதைகளைப் பேசியபடியிருக்க இரண்டாம் நாளே அச்சகோதரிகள் இறுதி ஊர்வலத்தை நடத்தினர்; குஞ்சங்கள் வைத்த கான்ஃபெடரேட் ராணுவச் சீருடையில் வாசலிலும் புல்தரையிலும் நின்றிருந்த வயதான ஆண்கள் தாங்கள் மிஸ் எமிலியின் சமகாலத்தவர்கள் போல அவளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். அவளோடு நடனமாடியதாகவும் திருமணம் செய்துகொள்ளும் நோக்கத்துடன் அவளோடு பழகியதாகவும் கூட கற்பனையாக அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.  கடந்தகாலம் ஒரு மறைந்துகொண்டிருக்கும் சாலையாக அல்லாமல் இப்போது அவர்களிடமிருந்து சில பத்து வருடங்கள் என்ற சிறு தடையால் பிரிக்கப்பட்டுவிட்ட எந்தக் குளிர்காலமும் தொடாத பரந்த புல்வெளியாகத் தோன்ற முதியவர்கள் வழக்கமாகச் செய்வது போல காலத்தை அதன் ஒழுங்குமுறைப்பட்ட இயக்கத்தோடு சேர்த்துக் குழப்பிக் கொண்டவர்களாய் அவர்கள் பேசிக்கொண்டனர்.

படிகளுக்கு மேலிருந்த பகுதியில் கடந்த நாற்பது வருடங்களில் யாரும் நுழையாத ஒரு அறை இருந்தது எங்களுக்குத் தெரியும். கதவை உடைத்துத்தான் அதைத் திறக்கவேண்டும். மிஸ் எமிலியை நல்லபடியாக அடக்கம் செய்தபின் அதைத் திறக்கலாம் என முடிவு செய்தோம்.

கதவை ஆக்ரோஷமாக அடித்துத் திறக்க அந்த அறையே தூசுகளால் நிரம்பிவிடுவது போலிருந்தது. திருமணத்துக்கு அலங்கரிக்கப்பட்டது போல அலங்கரிக்கப்பட்டு இருக்கைகள் போடப்பட்டிருந்த அந்த அறையில் கல்லறையில் காணப்படுவதுபோன்ற ஆழ்ந்த இறுக்கமான துக்கவுணர்வு நிரம்பியிருந்தது: வெளிறிய ரோஜா வண்ண அலங்கார திரைச்சீலைகள், ரோஜா நிற விளக்குகள், அலங்கார மேசை, படிகாரக் கல் உள்ளிட்ட வரிசையாக அழகுற அடுக்கப்பட்ட அழுக்கேறிய பின்புற வெள்ளிப் பூச்சுக் கொண்ட ஒரு ஆணுக்குத் தேவைப்படும் குளிப்பறைப் பொருட்கள்-மிகுந்த அழுக்கேறியிருந்ததால் அவற்றின் மீது பொறிக்கப்பட்டிருந்த எழுத்துகள் தெளிவற்றுப் போயிருந்தன-என யாவற்றின் மீதும் அவ்வுணர்வு படிந்திருந்தது. அவற்றினிடையே இப்பொழுதுதான் கழற்றி வைக்கப்பட்டது போல ஒரு கழுத்துப் பட்டையும், பட்டியும். அவற்றைக் கையிலெடுக்க கீழே தூசு நடுவே மங்கிய பிறை வடிவில் அவற்றின் தடம். ஒரு நாற்காலி மீது ஒழுங்காக மடித்து வைக்கப்பட்ட ஓர் ஆணின் ஆடைகள். அதன் கீழே மௌனமாய் இரண்டு சப்பாத்துக்களும், கைவிடப்பட்டக் காலுறைகளும்.

அவனே படுக்கையில் படுத்திருந்தான்.

நீண்ட நேரம், முகத்தில் தசைகளின்றி வெளிப்பட்ட ஆழ்ந்த, அர்த்தமிகு அந்தச் சிரிப்பைப் பார்த்தபடியே நாங்கள் நின்றிருந்தோம். தழுவுவது போன்ற நிலையில் எப்போதோ அந்த உடல் கிடத்தப்பட்டிருந்திருக்கிறது. ஆனால் காதலைத் தாண்டியும் நீளும், காதலின் முகச்சுழிப்பைக்கூட வென்றுவிடும் அந்த நீண்ட உறக்கம் அவனது காதலுக்கு துரோகமிழைத்துவிட்டிருந்தது. அவனில் மீதமிருந்தது, மீதமிருந்த அந்த இரவு உடுப்பின் கீழ் அழுகிக் கிடந்தது, அவன் கிடந்த அப்படுக்கையோடு பிரிக்க முடியாதபடி கலந்துவிட்டிருந்தது. அவன் மீதும் அவனுக்குப் பக்கத்திலிருந்த தலையணை மீதும் உடன் வாழும் பொறுமைமிக்க துசியின் சம அளவான படிவு காணப்பட்டது.

இரண்டாவதாகக் காணப்பட்ட தலையணையில் தலையொன்று அழுந்தி ஏற்பட்டிருந்த பள்ளத்தைக் கண்டோம். அப் பள்ளத்திலிருந்து ஒருவர் எதையோ எடுத்தார், அதை நோக்கிக் குனிந்தபோது மெல்லிய கண்ணுக்குத் தெரியாத தூசும் நெடியும் மூக்கைத் துளைக்க நீளமான ஒற்றைப் பழுப்பு வெள்ளை முடியை நாங்கள் பார்த்தோம்.

 

வில்லியம் ஃபாக்னர்

தமிழில்: அசதா


நீல நாயின் கண்கள்,

மொழிபெயர்ப்பு : அசதா

இந்தத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட மொழிபெயர்ப்பு சிறுகதை.

நன்றி : அசதா அவர்களுக்கு
(நாதன் பதிப்பகம்)

Previous articleஇனிமை
Next articleஉயரப் பறக்கும் கழுகு
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments