ஒரு நீதிக்கதை

முன்னொரு காலத்தில், ஒரு ஓவியர் வாழ்ந்துவந்தார். அவர் அழகான ஓவியம் ஒன்றை வரைந்து, கண்ணாடியின் எதிரே மாட்டிவைத்தார். ஓவியத்தைக் கண்ணாடி மூலமாகப் பார்த்தால், அது தொலைவில் மிக மிக மென்மையாகவும், சாதாரணமாகத் தெரிவதைவிட இரண்டு மடங்கு அழகாகத் தெரிவதாகவும் சொன்னார்.

அவர் வீட்டில் வளர்ந்துவந்த பூனை இந்த ஓவியத்தின் சிறப்பு குறித்துத் தன் நண்பர்களான காட்டு விலங்குகளிடம் சொன்னது. காட்டு விலங்குகள் வீட்டுப் பூனை மீது பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தன. ஏனென்றால், பூனை நல்ல கல்வியறிவும், கலாச்சார அறிவும் பெற்றிருந்தது. மேலும், அது காட்டு விலங்குகளுக்குத் தெரியாத எவ்வளவோ விஷயங்களைப் பற்றி அவ்வப்போது பேசும், அவர்களுக்குச் சொல்லியும் தரும். ஓவியத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதுமே, காட்டு விலங்குகள் மிகவும் குஷியாகிவிட்டன. அதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளும் ஆவலுடன், அவை பூனையிடம் நிறைய கேள்விகள் கேட்டன. முதலில், ஓவியம் என்றால் என்ன என்று கேட்டன. அதற்குப் பூனை,

“ஓவியம் என்பது ஒரு தட்டையான பொருள். அற்புதமான, பிரமாதமான, வசீகரமான தட்டைப் பொருள். அது எவ்வளவு அழகாக, தட்டையாக இருக்கும் தெரியுமா!”, என்றது.

இதைக் கேட்டதும் காட்டு விலங்குகள் மீண்டும் குஷியாகிவிட்டன. எப்படியாவது அந்த ஓவியத்தைப் பார்த்தே ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்டன. காட்டு விலங்குகளில் ஒன்றான கரடி, பூனையிடம் கேட்டது,

“அந்த ஓவியம் எப்படி அவ்வளவு அழகாக இருக்கிறது?”

“அந்த ஓவியத்தின் தோற்றமே அப்படித்தான்”, என்று பூனை சொன்னது.

காட்டு விலங்குகளுக்கு மகிழ்ச்சிதான். ஆனால், இதையெல்லாம் எப்படி நம்புவது என்றும் நினைக்கத் தொடங்கியிருந்தன. அப்போது, மாடு பூனையிடம் கேட்டது,

“சரி, கண்ணாடி என்றால் என்ன?”.

“அது சுவரில் இருக்கும் ஒரு துளை தான். நீங்கள் கண்ணாடியைப் பார்க்கும்போது, அதில் தெரியும் ஓவியம், உங்கள் கற்பனைக்கு எட்டாத பேரழகோடும், வசீகரத்தோடும் இருக்கும். அது தரும் பரவசத்தில் நீங்கள் தலை சுற்றிப் போவீர்கள்”, என்று பூனை பதிலளித்தது.

இதுவரை எதுவும் சொல்லாமல் எல்லாவற்றையும் கவனித்து வந்த கழுதை, இப்போது சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டது. இதற்குமுன் இந்த உலகில் அவ்வளவு அழகான பொருள் எதுவும் இருந்ததில்லை என்றும், இப்போதும் இருக்க முடியாது என்றும் கூறியது. அதோடு இல்லாமல், பூனை வேண்டுமென்றே நீண்ட நீண்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி அதன் அழகைப் பெரிதுபடுத்திக் காட்ட முயல்கிறது என்றும் கூறியது.

கழுதையின் பேச்சு காட்டு விலங்குகளையும் சந்தேகப்பட வைத்துவிட்டது. அதனால் கோபமடைந்த பூனை, அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டது.

அடுத்த இரண்டொரு நாட்கள் எந்த விலங்கும் இதைப்பற்றிப் பேசவில்லை. ஆனால், அந்த ஓவியத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் மீண்டும் துளிர்விட்டது. அப்போது எல்லா விலங்குகளும் கழுதையைத் திட்டத் தொடங்கின. ‘உன் சந்தேக புத்தியால் எல்லாவற்றையும் பாழாக்கிவிட்டாய். அந்த ஓவியம் அழகாக இருக்காது என்பதற்கு நீ ஆதாரம் ஏதாவது வைத்திருக்கிறாயா’ என்று கேட்டன. கழுதையோ அசரவே இல்லை. ‘நான் சொன்னது உண்மையா இல்லை அந்தப் பூனை சொன்னது உண்மையா என்று தெரிந்துகொள்ள ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. நானே சென்று அந்தச் சுவரில் உள்ள துளையைப் பார்த்துவிட்டு வந்து உங்களிடம் சொல்கிறேன்’, என்று அமைதியாகச் சொன்னது. காட்டு விலங்குகள் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டன.

கழுதை அதைப் பார்க்கச் சென்றபோது அங்கே ஓவியமும் அதன் எதிரே கண்ணாடியும் இருந்தன. எங்கு நின்றுகொண்டு எதைப் பார்க்கவேண்டும் என்று தெரியாததால், கழுதை ஓவியத்திற்கும் கண்ணாடிக்கும் நடுவில் நின்றுகொண்டு கண்ணாடியைப் பார்த்தது. பார்த்துவிட்டு வந்து,

“அந்தப் பூனை சொன்னது சுத்தப் பொய்! அங்கே ஓவியமும் இல்லை சுவரில் துளையும் இல்லை, அங்கே இருந்தது ஒரே ஒரு கழுதை! அழகான கழுதை, என்னுடன் நட்பாகப் பழகியது, ஆனால் அது வெறும் கழுதைதான். வேறொன்றும் இல்லை”, என்று கழுதை தன் நண்பர்களிடம் சொன்னது.

“சரியாகப் பார்த்தாயா? அருகே சென்று பார்க்கவேண்டியது தானே?”, என்று யானை ஹாதி கேட்டது.

“விலங்குகளுக்கு எல்லாம் தலைவனே ஹாதி, நான் அதை நன்றாகப் பார்த்தேன், அருகே நின்று பார்த்தேன். எவ்வளவு அருகே என்றால் என் மூக்கால் அதன் மூக்கைத் தொடும் அளவிற்கு அருகே நின்று பார்த்தேன்”, என்று கழுதை, ஹாதி யானையிடம் கூறியது.

“ஒரே மர்மமாக இருக்கிறதே! இதற்கு முன்பு வீட்டுப் பூனை நம்மிடம் பொய் எதுவும் சொன்னதில்லையே. சரி, வேறு யாராவது சென்று பார்த்துவரட்டும். பாலு, நீ போய் அந்தத் துளையில் என்ன இருக்கிறது என்று பார்த்துவிட்டு வா!”, என்று ஹாதி, பாலு என்ற கரடியிடம் சொன்னது.

பாலு கரடி சென்று பார்த்துவிட்டு வந்து சொன்னது, “பூனை சொன்னதும் பொய். கழுதை சொன்னதும் பொய். அங்கே இருந்தது ஒரே ஒரு கரடி!”.

இதைக் கேட்ட எல்லா விலங்குகளுக்கும் ஆச்சரியம் அடைந்து, தாமே போய் பார்த்துப் பரிசோதனை செய்யவேண்டும் என்று விரும்பின. ஹாதி யானை ஒவ்வொரு விலங்காக அனுப்பியது.

முதலில், மாடு சென்று பார்த்துவிட்டு வந்து, அங்கே ஒரு மாடு தான் இருக்கிறது, வேறொன்றும் இல்லை என்று சொன்னது.

புலி சென்று பார்த்துவிட்டு வந்து, அங்கே ஒரு புலி தான் இருக்கிறது, வேறொன்றும் இல்லை என்று சொன்னது.

சிங்கம் சென்று பார்த்துவிட்டு வந்து, அங்கே ஒரு சிங்கம் தான் இருக்கிறது, வேறொன்றும் இல்லை என்று சொன்னது.

சிறுத்தை சென்று பார்த்துவிட்டு வந்து, அங்கே ஒரு சிறுத்தை தான் இருக்கிறது, வேறொன்றும் இல்லை என்று சொன்னது.

ஒட்டகம் சென்று பார்த்துவிட்டு வந்து, அங்கே ஒரு ஒட்டகம் தான் இருக்கிறது, வேறொன்றும் இல்லை என்று சொன்னது.

இதையெல்லாம் கேட்ட ஹாதி யானைக்குக் கடும் கோபம் வந்துவிட்டது. தானே சென்று, உண்மை என்ன என்று அறிந்து வருவதாகக் கூறிச் சென்றது. திரும்பி வந்ததும், தன் ஆட்சியின் கீழ் இருக்கும் காட்டு விலங்குகள் எல்லாவற்றையும் பொய்யர்கள் என்று கடிந்து கொண்டது. மேலும், வீட்டுப் பூனையின் கெட்ட எண்ணத்தை நினைத்து ஆத்திரம் அடைந்தது. பின்பு சொன்னது, “ஒரு முட்டாளுக்குக் கூட இது தெளிவாகத் தெரியும், அங்கே இருந்தது ஒரு யானை மட்டுமே”.

[அமெரிக்க எழுத்தாளர் Mark Twain 1909-ல் எழுதிய ‘A Fable’ என்னும் நீதிக்கதையின் தழுவல் இது. ஒரு கலைப்படைப்பை அணுகும்போது, அதை நம் கற்பனை என்னும் கண்ணாடியைக் கொண்டு பார்க்கிறோம். ஒவ்வொருவருக்கும் அவரவர் எண்ணங்களின் பிரதிபலிப்பே  அந்தக் கண்ணாடியில் தெரிகிறது. நான் காண்பது மட்டுமே சரியானது என்று சொல்லமுடியுமா? ஒருவேளை, நம்மால் சில விஷயங்களைப் பார்க்கமுடியாமல் போகலாம். ஆனால், அவை படைப்பில் இருக்கும். இவ்வாறு இந்தக் கதையின் நீதியைப் புரிந்துகொள்ளலாம்.]

 

மார்க் ட்வெய்ன்

தமிழில் – ஈஸ்வர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.