மன்னிப்புக் கேட்பவர்கள்-மிலன் குந்தேரா (Milan kundera)

ஜூன் மாத காலையில், கிழக்கில் கிளம்பிய சூரியனைப் போல, மெதுவாக பாரீஸ் வீதியில் சென்று கொண்டிருந்தான் அலயன். எதிர்ப்பட்ட அனைத்து இளம் பெண்களும் குட்டையாக அணியப்பட்ட மேல் சட்டைக்கும், இறக்கமாக அணியப்பட்ட கால் சட்டைக்கும் இடையில் மையமாக, விகாசமாகத் தொப்புள் தெரியுமாறு உடுத்தி இருந்ததைக் கவனித்தவாறே நடந்தான். அவனைப் பொறுத்த வரை, பெண்கள் மீதான கவர்ச்சியின் மையல் தொடை, மார்பு, பின்புறங்களிலிருந்து ஏகமாக விலகி, இந்த வட்ட வடிவ மையப் புள்ளியில் தேங்கி விட்டதைப் போல, அந்த காட்சிகளால் ஈர்க்கப்பட்டு, வசீகரிக்கப்பட்டு, சலனத்திற்கு உள்ளாகி இருந்தான். 

தொப்புளின் மீதான இந்த திடீர் மையல், பெண்மையின் கவர்ச்சி சார்ந்து புதிய கேள்விகளையும் சிந்தனைகளையும் அவனுக்குத் தூண்டியது. விளைவாக, தொடையைக் கவர்ச்சியின் பிரதான மையமாகக் கருதுபவனின் (கருதும் தலைமுறையின்), காமம் சார்ந்த ரசனையையும், தனித்த பார்வையையும் எவ்வாறு புரிந்து கொள்வது என்ற கேள்வி எழுகிறது. களிப்பையும் நிறைவையும் நோக்கிய பயணத்தில், நீளும் ஒவ்வொரு கணத்திலும் இன்பத்தைப் பொதித்து வைத்திருக்கும் நீண்ட சாலையுடன் நீளும் கால்களை ஒப்பீடு செய்கிறான். அதன் முடிவாக, கூடலின் போது, அனுபவித்து உணர்ந்திடாத மாய ஜாலங்களை நிகழ்த்தக் கூடிய ஆற்றலைப் பெண்களுக்கு அளிக்கக் கூடியது அத்தகைய கால்கள் என்று கற்பிதம் செய்து கொள்கிறான்.

இதைத் தொடர்ந்து அதே கேள்வி பெண்களின் பின்புறங்களில் மையல் கொண்டவர்களை நோக்கி எழுகிறது. அதை இரட்டை இலக்குகளை ஒன்று சேர அடையக்கூடிய விரைவான பாதையுடன் ஒப்பீடு செய்கிறான். அதன் தொடர்ச்சியாக, அதை அதீத உற்சாகமும், முரட்டுத்தனத்தையும் வெளிப்படுத்தும் ரசனைத் தேர்வு என்ற புரிதலுக்கு வருகிறான்.

அடுத்ததாக மார்பகங்களின் மீதான ஈர்ப்பை நோக்கி அந்த கேள்வி இடம் பெயர்கிறது. அந்த ரசனை வெளிப்பாட்டை, மேரியிடம் பால் குடிக்கும் குழந்தை இயேசுவுடன் ஒப்பிட்டு, பெண் படைப்பின் புனித நோக்கங்களின் முன் ஆண்கள் மண்டியிட்டு ஆராதிப்பதாக முடிவுக்கு வருகிறான்.

ஆயினும், உடலின் மையப் புள்ளியான, குழிவான தொப்புளின் கவர்ச்சியில் மையல் கொள்ளும் ரசனையை எவ்வாறு வரையறுப்பது?

மெதுவாக வீதிகளில் உலவியபடி தொப்புளைப் பற்றிச் சிந்திப்பது அவன் வழக்கமாக இருந்தது. மீண்டும் மீண்டும் அதைப் பற்றிச் சிந்திப்பது எந்த விதத்திலும் அவனுக்குச் சலிப்பைத் தரவில்லை. அந்த சிந்தனை அவனது தாயுடனான கடைசி சந்திப்பைப் பற்றிய நினைவுகளை அடிமனதிலிருந்து மீட்பதாலேயே, பிடிவாதமாகத் தொப்புளைப் பற்றிச் சிந்தித்தான். 

அவனுக்குப் பத்து வயது இருக்கும். அலயன் விடுமுறையைக் கழிக்க நீச்சல்குளமும் தோட்டமும் கொண்ட வாடகை சொகுசு விடுதியில், தந்தையுடன் தங்கி இருந்தான். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவள் இப்பொழுது தான் முதன்முறையாக அவர்களைச் சந்திக்க வருகிறாள். பூட்டிய அந்த சொகுசு விடுதி கதவுகளுக்குப் பின்னால் அவளும் அவள் முன்னாள் கணவரும் மட்டும். பல மைல் தொலைவிலும் அந்த சூழலின் உஷ்ணம் உணரப்பட்டது போல் இருந்தது. எவ்வளவு நேரம் அங்கு இருந்தாள்? அதிகபட்சம் ஒன்றிரண்டு மணி நேரம் இருக்கலாம். அந்த சமயத்தில் அலயன் நீச்சலில் பொழுதுபோக்கிக் கொண்டிருந்தான். அங்கிருந்து கிளம்பத் தயாரான அவள், அவன் நீச்சல்குளத்திலிருந்து மேலேறி வந்ததைக் கவனித்து விட்டு, அவனிடம் விடை பெறுவதற்காக நின்றாள். தனியாக இருந்த அவளிடம் அலயன் என்ன பேசினான்? அவள் என்ன பேசினாள்? எதுவும் அவனுக்கு நினைவில் இல்லை. அவனுக்கு நினைவில் இருப்பது அந்த தோட்டத்து இருக்கையில் அவள் அமர்ந்திருந்ததும், நீர் வடியும் நீச்சலுடையில் அவளைப் பார்த்தவாறு அவன் நின்றிருந்ததும் மட்டுமே. அவளுடனான சம்பாஷனைகள் அவன் நினைவுகளைத் தப்பி இருந்தாலும், ஒரு கணம் மட்டும் காலத்திற்குமாக அவன் நினைவுகளில் உறைந்து விட்டிருந்தது. அது அந்த இருக்கையிலிருந்தவாறு அவன் தொப்புளை ஊடுருவிப் பார்த்த அவள் பார்வை. இன்னமும் அந்த பார்வையின் வீச்சை அவனால் உணர முடிகிறது. அவனைப் பொறுத்தவரை அது அன்பும் அவமதிப்பும் கலந்த விவரிக்க முடியாத ஒரு பார்வை. அதே உணர்வு அவள் புன்னகையின் உதட்டு சுழிப்பிலும் பிரதிபலித்தது. அந்த இருக்கையிலிருந்தவாறே, முன் சாய்ந்து, தன் ஆள்காட்டி விரலால் அவன் தொப்புளைத் தொட்டாள். உடனடியாக எழுந்து, அவனை முத்தமிட்டு விட்டு, அந்த முத்தத்தை அவன் சந்தேகத்துக்கிடமின்றி முத்தம் என உணரும் முன், அந்த இடத்தை விட்டுச் சென்று விட்டாள். அதன் பிறகு அவளை அவன் சந்திக்கவே இல்லை. 

ஒரு பெண் காரிலிருந்து இறங்குகிறாள்

ஆற்றை ஒட்டிய சாலையில் ஒரு கார் பயணிக்கிறது. புறநகருக்கும் கிராமப்புறத்திற்கும் இடைப்பட்ட, குடியிருப்புகளும் ஜன சந்தடியும் குறைவாக இருந்த, அந்த நிலப்பரப்பின் மந்தமான சூழலை, மேலும் பரிதாபத்திற்குரியதாக உணரச் செய்தது அந்த காலையின் குளிர்காற்று. அப்பொழுது அந்த கார் சாலை ஓரத்தில் நிற்கிறது. அழகிய இளம்பெண் ஒருத்தி அந்த காரில் இருந்து இறங்குகிறாள். பூட்டப்பட்டு விடாதவாறு அந்த கார் கதவை, அவள் அலட்சியமாகச் சாத்தியது வினோதமாக இருக்கிறது. அந்த அலட்சியத்தின் பொருள் என்ன? இந்நாட்களில் திருட்டு பயம் குறைந்துவிட்டதா? அந்த பெண்ணின் கவனச்சிதறலா?

கவனச்சிதறலாக இருக்க முடியாது என்பதை அந்த பெண்ணின் முகத்தில் பரவி இருந்த தீர்க்க ரேகைகள் உணர்த்தியது. தனக்கு என்ன தேவை என்பதில் தீர்க்கமாக இருந்தாள். பரிபூரணமான நெஞ்சுரம் மிக்கவள் இவள். சாலையை ஒட்டி சில நூறு அடிகள் நடந்து, பிறகு ஆற்றுப் பாலத்தை நோக்கி நடந்தாள். அந்த பாலம் சற்றே உயரமாகவும், குறுகலாகவும், வாகனப் போக்குவரத்தில் இருந்து விலக்கப்பட்டதாகவும் இருந்தது. அவள் அந்த பாலத்தில் ஏறி மறுகரையை நோக்கி சுற்றிலும் நோட்டம் விட்டவாறு நடக்கிறாள். அந்த பார்வை யாரையும் எதிர்பார்ப்பதாக இல்லாமல், யாரும் தன்னை எதிர்பார்த்து விடக் கூடாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதாக இருந்தது. நடுப் பாலத்தை எட்டியவுடன் நிற்கிறாள். முதலில் தயக்கத்தால் நின்றதைப் போலத் தோன்றினாலும், தயக்கத்தின் காரணமாகவோ, திடீரென எடுத்த முடிவின் காரணமாகவோ அவள் நிற்கவில்லை; மாறாகக் கவனத்தைக் கூர்மையாக்குவதற்காகவும், தன் நெஞ்சுரத்தைத் திடப்படுத்துவதற்காகவும் நின்றாள். நெஞ்சுரம் எனில்? சரியாகச் சொல்வதென்றால் விரக்தி. தயக்கத்தைப் போல் தோன்றிய அந்த இடைவெளி, அவளது உணர்வுகளுடனான முறையிடல்- தன் விரக்தி தன்னை கைவிட்டு விடாமல், தன் முடிவிற்குத் துணையாகவும் ஆதரவாகவும் இருப்பதற்காக அவள் வேண்டுகிறாள். 

பாலத்தின் கைப்படியில் கால் வைத்து, காற்று வெளிக்குள் பாய்கிறாள். பாய்ச்சலின் முடிவில், உறைந்த ஆற்றின் மேற்பரப்பில் மோதி, குளிரால் செயலிழந்து போகிறாள். சில வினாடிக்குப் பிறகு, அவள் நீருக்கு மேல் தலை காட்டுகிறாள். அவளது உள்ளார்ந்த நீச்சல் திறன்கள், சாக விரும்பும் அவள் முடிவிற்கு விரோதமாக, அனிச்சையாக வெளிப்பட்டு விட்டது. தன்னை மூர்ச்சையடையச் செய்ய, மீண்டும் நீருக்குள் மூழ்கி, காற்றுடன் நீரையும் வலிந்து நுரையீரலுக்குள் திணிக்க முயலுகிறாள். எதிர்பாராத விதமாக மறுகரையிலிருந்து ஒரு அபயக்குரல். யாரோ ஒருவர் பார்த்து விட்டார். திடீரென மரணம் தன்னை விட்டு விலகுவதை உணர்கிறாள். தன் கட்டுப்பாட்டை மீறிய நீச்சல் திறன்களை விட, தன் கவனத்திலிருந்து தப்பிய ஒருவனே மிகப் பெரும் இடையூறாக இருப்பான் என்பது புரிகிறது. தன் சாவை மீட்டெடுக்க அவள் கடுமையாகப் போராட வேண்டி இருக்கும்.

அவள் கொல்கிறாள்

அவள் குரல் வந்த திசையைப் பார்க்கிறாள். யாரோ ஒருவர் ஆற்றினுள் பாய்ந்தார். யாருடைய முயற்சி வெற்றி பெறக்கூடும் என ஆலோசிக்கிறாள்- தண்ணீரை உள்ளிழுத்து, மூழ்கிச் சாகும் தன் முயற்சியா? தன்னை காப்பாற்ற விரைந்து வருபவரின் முயற்சியா? நுரையீரலில் நீர் புகுந்து, பலகீனமான நிலையில் மூழ்கிக் கொண்டிருக்கும் போது, அவளைக் காப்பாற்ற முனைபவரின் நோக்கத்திற்கு அவள் எளிதான இலக்காகி விடக்கூடுமல்லவா? அவன் அவளைக் கரைக்கு இழுத்துச் சென்று, படுக்க வைத்து, கையால் அழுத்தியும், வாயால் உறிஞ்சியும் நீரை வெளியில் எடுத்து, மீட்புக்குழுவையும், காவலர்களையும் அழைத்து, அவளைக் காப்பாற்றக்கூடும். இதனால் வாழ்க்கை முழுதும் கூடுதலாக அவள் அவமானப்பட நேரிடும். 

“நில்! நில்!” அவன் கத்துகிறான்.

அனைத்தும் மாறிவிட்டது. அவள் நீருள் மூழ்குவதற்குப் பதிலாக, நீருக்கு மேல் எழும்பி, ஆழமாக மூச்சை இழுத்து தன் பலத்தைத் திரட்டிக் கொள்கிறாள். இதற்கிடையில் அவன் அவளை நெருங்கி விட்டான். இந்த முயற்சியின் மூலம் நாளிதழ்களில் இடம்பிடித்து, புகழ்பெற விரும்பும் பதின்ம வயது இளைஞன் அவன். “நில்! நில்!” எனத் தொடர்ந்து கூறியவாறு, அவளை நோக்கி தன் கைகளை நீட்டுகிறான். அவன் பிடியிலிருந்து விலகுவதற்குப் பதிலாக, அவள் அந்த கைகளை இறுகப் பிடித்து, ஆற்றின் ஆழமான பகுதியை நோக்கி அவனை இழுக்கிறாள். வேறெந்த வார்த்தையையும் பேசி அறிந்திடாதவனைப் போல, “நில்!” என மீண்டும் இரைகிறான். அதுவே அவன் பேசிய கடைசி சொல். அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு, அவன் தலை நீருக்குள் மூழ்கும் விதமாக தன் உடலை அவன் உடலோடு பின்புறமாகப் பொருத்திக் கொண்டு, அவனை ஆற்றின் அடிப்பகுதியை நோக்கி இழுக்கிறாள். தண்ணீரை உள்ளிழுத்து விட்ட அவன், கைகளை வீசுகிறான், விளாசுகிறான்; அந்த பெண்ணை வீழ்த்த போராடுகிறான். ஆனால் அவன் நீருக்கு வெளியில் தலையைத் தூக்கி மூச்சை இழுத்து விட முடியாதபடி அவள் அவன் மீது அழுத்தமாகப் பரவி இருக்கிறாள். சில நீண்ட, மிக மிக நீண்ட விநாடிகளுக்குப் பிறகு, அவன் அசைவுகளை இழந்து விட்டான். சோர்ந்து, நடுங்கி, ஓய்வெடுப்பதைப் போல, அந்த நிலையிலேயே அவன் மீது சிறிது நேரம் இருந்தாள். தன் பிடியில் இருக்கும் உடலில் எந்த அசைவுகளும் மீதம் இல்லை எனச் சமாதானம் அடைந்த பிறகே அந்த உடலை விட்டு விலகினாள். நடந்து முடிந்த நிகழ்வுகளின் நிழல் கூட தன்னுடன் வராதவாறு, அங்கிருந்து திரும்பித் தான் வந்த கரையை நோக்கி நகர்ந்தாள். 

என்ன நடக்கிறது இங்கே? தன் முடிவை மறந்துவிட்டாளா அவள்? அவள் ஏன் தன்னை நீரில் மூழ்கடிக்கவில்லை? அவள் சாவை அவளிடமிருந்து பறிக்க வந்தவன் உயிருடன் இல்லை என்பதாலா? தன்னை தடுக்க யாருமில்லாத போது, அவள் ஏன் சாவை தேடிப் போகவில்லை?

எதிர்பாராத விதமாக மீட்கப்பட்ட வாழ்க்கை, அவளது தீர்மானங்களை நொறுக்கி விட்டது. தற்கொலை முயற்சியில் கவனம் செலுத்துவதற்கான மனபலத்தை அவள் இழந்து விட்டாள். திடீரென தன்னிடமிருந்த நெஞ்சுரத்தையும், பலத்தையும் இழந்து விட்டதால், அவள் நடுங்குகிறாள். அனிச்சையாக அவள் காரை விட்டு வந்த இடத்தை நோக்கி நீந்துகிறாள். 

அவள் வீடு திரும்புகிறாள்

கொஞ்சம் கொஞ்சமாக தனக்குக் கீழிருக்கும் ஆற்றின் ஆழம் குறைந்ததை உணர்ந்தவள், தரையைத் தொட்டு நிற்கிறாள். அப்பொழுது சேற்றில் புதைந்து தவறிய காலணிகளைத் தேடக் கூட தெம்பின்றி, கரையேறி, சாலையை நோக்கி நடக்கிறாள். 

இப்பொழுது இந்த உலகம் வரவேற்க்கத்தக்கதாக தோன்றவில்லை. மாறாக ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டது: கார் சாவி கையில் இல்லை. சாவி எங்கே? அவளது பாவாடையில் பைகளும் இல்லை. 

மரணத்தை மனதில் வரித்துக் கொண்டு செல்கையில், வழியில் எதைப் புறக்கணித்து விட்டுச் செல்கிறோம் என்பதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அவள் காரை விட்டுச் செல்லும் பொழுது, எதிர்காலம் என்ற ஒன்று இல்லை. அவள் மறைக்க எதுவும் இல்லை. ஆனால் இப்பொழுது அவள் அனைத்தையும் ஆதாரமில்லாமல் மறைக்க வேண்டும். அவள் பதற்றம் அதிகரித்துக் கொண்டே இருந்தது: சாவி எங்கே? வீட்டை எப்படி அடைவது?

அவள் காரை அடைந்து கதவைத் திறக்க முயலுகையில், ஆச்சரியமூட்டும் விதமாகக் கதவு திறந்து கொண்டது. ஓட்டுநர் இருக்கை முன் அவளால் புறக்கணிக்கப்பட்ட சாவி அவளுக்காகக் காத்துக் கிடந்தது. இருக்கையில் அமர்ந்து, தன் வெறுங்கால்களை பெடலில் வைத்தாள். பதற்றத்தோடு குளிரும் சேர்ந்து அவள் நடுங்கிக் கொண்டிருந்த நிலையில், முற்றிலுமாக நனைந்துவிட்ட ஆடைகளிலிருந்து, அனைத்துப் புறமும் அழுக்கான ஆற்று நீர் காருக்குள் வடிந்தது. இந்நிலையில் அங்கிருந்து காரை கிளப்பினாள். 

ஒரு புறம் அவளுக்கு வாழ்வை மீட்டுத்தர முயன்றவன் நீரில் மூழ்கி இறந்து விட்ட நிலையில், மறுபுறம் அவள் கொல்ல நினைத்த சிசு இன்னும் அவள் வயிற்றில் உயிருடன் இருந்தது. தற்கொலை எண்ணத்தை மறு சிந்தனைக்கு இடமின்றி சாஸ்வதமாகக் கைவிட்டு விட்டாள். நடந்து முடிந்தவற்றை மறைக்க எதுவும் செய்யத் தயாராக இருந்தாள். அவள் நடுங்கிக் கொண்டிருந்த போதும், அவளது மனோதிடம் மீண்டும் உயிர் பெற்று விட்டது. இப்பொழுது அவள் சிந்தனை முழுவதும் அடுத்தகட்ட செயல்பாடுகள் பற்றியதாக இருந்தது: எவர் கண்ணிலும் படாமல் காரில் இருந்து செல்வது எப்படி? ஈரம் சொட்டும் ஆடையுடன் வரவேற்பாளர் கவனத்திலிருந்து தப்பி அறைக்குச் செல்வ

அலையன் தோளின் மீது வலிமையான தாக்குதலை உணர்ந்தான். 

“முட்டாள், கவனமாக போ” என்றொரு குரல் கேட்டது.

வேகமாகவும் ஆவேசமாகவும் தன்னைக் கடந்து செல்லும் இளம்பெண்ணை அலையன் திரும்பிப் பார்த்தான்.

மன்னிக்கவும்” என்ற அவனது பலவீனமான குரல் அவளை பின் தொடர்ந்தது. 

அவள் திரும்பாமலே பலமான குரலில் வசைச் சொற்களை உமிழ்ந்துவிட்டுக் கடந்து விட்டாள். 

மன்னிப்பு கோருபவர்கள்

இரண்டு நாட்களுக்கு பிறகும் கூட தன் தனிப்பட்ட குடியிருப்பில் இருக்கும் சமயம் அலையன் தன் தோள்பட்டையில் அந்த வலியை உணர்ந்தான். அந்த பெண் தன்னை வேண்டுமென்றே இடித்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறான். அவள் தன்னை கடுமையான குரலில் “முட்டாள்” எனத் திட்டியது நினைவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து “மன்னிக்கவும்” என்ற இவன் குரலும், அவளது வசைச் சொற்களும் கூட நினைவிற்கு வந்தது. மீண்டும் ஒருமுறை தவறேதும் செய்யாமல் மன்னிப்பு கேட்டிருந்தான். எதற்கெடுத்தாலும் அனிச்சையாகவே மன்னிப்பு கேட்டுவிடுகிற தன் முட்டாள்தனத்தை எண்ணிப் பார்த்தான். அந்த எண்ணங்கள் அவனை இம்சிக்கவே, யாருடனாவது பேச வேண்டும் எனத் தோன்றியது. தன் காதலி மெடலைன்னை அழைத்தான். அவள் பாரீஸில் இல்லை. அவள் கைப்பேசியும் தற்சமயம் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவன் சார்லஸ்ஸை அழைத்தான். மறுமுனையில் சார்லஸ்ஸின் குரலைக் கேட்டதும் மன்னிப்புக் கேட்டான். “என் மீது கோபப்படாமல் கேள். நான் மோசமான மனநிலையில் இருக்கிறேன். உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்”. 

“சரியான சமயத்தில் தான் அழைத்திருக்கிறாய். நானும் அதே மனநிலையில் தான் இருக்கிறேன். நீ எதனால் அப்படி இருக்கிறாய்?”.

“அனைத்து சந்தர்ப்பங்களிலும் குற்றவுணர்வுடனே இருப்பது குறித்து நான் என் மீதே கோபமாக இருக்கிறேன்”. 

“ அதுவொன்றும் மோசமான விசயமில்லை”.

“குற்றவுணர்வுடன் இருப்பதா, இல்லாமல் இருப்பதா என்பது தான் பிரச்சினை. அனைவருக்கும் அனைத்திற்கும் எதிரான போராட்டம் தான் வாழ்க்கையின் பொதுவான அம்சம். ஆனால் அந்த போராட்டம் ஒரு நாகரிகமான சமூகத்தில் எவ்வாறு நிகழ்கிறது? ஒருவர் மற்றொருவரை நேரடியாகத் தாக்குவதற்குப் பதிலாக, ஒரு குற்றம் செய்த அவமான உணர்வை மற்றவருக்கு ஏற்படுத்த முனைகிறார்கள். அந்த முயற்சியில், பிறருக்கு அந்த குற்றவுணர்வை ஏற்படுத்த இயலுகிறவர்கள் வெல்கிறார்கள். குற்றத்தை ஏற்றுக் கொள்பவர்கள் தோற்கிறார்கள். நீ ஒரு சாலையோரம் சிந்தனைவயப்பட்டு நடந்து செல்கிறாய். அப்பொழுது, தனக்கே அந்த சாலை சொந்தம் என்பது போலச் சுற்றும் முற்றும் கவனிக்காது நேரெதிரே வரும் பெண்ணுடன் மோத நேரிடுகிறது. அது தான் மனித இயல்பின் யதார்த்தம் வெளிப்படும் துல்லியமான தருணம்- யார் தன் அதட்டலால் மற்றொருவரை வீழ்த்தி சரணடைய வைக்கிறார் என்பது தான் அது. இது ஒரு வழமையான, யதார்த்தமான நிகழ்வு. அந்த விபத்தில் இருவருக்கும் சமபங்கு இருந்த போதிலும், சில சந்தர்ப்பங்களில் ஒருவர் முன்வந்து குற்றத்தை ஏற்று மன்னிப்பு கேட்கும் பொழுது, மற்றொருவர் தன்னை பாதிக்கப்பட்டவர் போல் பாவித்து குற்றம் சுமத்தத் துவங்கிவிடுகிறார். இந்த சந்தர்ப்பத்தில் நீ என்ன செய்வாய்- குற்றம் சுமத்துவாயா மன்னிப்புக் கேட்பாயா?”

“நான் நிச்சயம் மன்னிப்புக் கேட்பேன்”.

“அப்படியென்றால் நீயும் மன்னிப்புக் கேட்பவர்கள் குழுவைச் சேர்ந்தவன் தான். நீ உன் மன்னிப்பின் மூலம் அடுத்தவரைச் சமாதானம் செய்ய முயல்கிறாய்”

“ஆமாம்”

“அது தவறு. முதலில் முன்வந்து மன்னிப்புக் கேட்பதன் மூலம் நாம் நம் குற்றத்தை ஒப்புக் கொள்கிறோம். இதன் விளைவாக மற்றவர் நம் மீது பொதுவெளியில் குற்றம் சுமத்தவும் அவமானப்படுத்தவும் சந்தர்ப்பத்தையும் உரிமையையும் தருகிறோம்.”

“அதுவும் சரிதான். ஒருவர் மன்னிப்புக் கேட்டாக வேண்டியதில்லை. ஆனால் எந்த நிபந்தனையுமின்றி, உள்நோக்கமின்றி, விதிவிலக்கின்றி தேவைப்படாத சூழ்நிலைகளிலும் கூட, மனிதர்கள் மன்னிப்புக் கேட்பவர்களாக இந்த உலகில் இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.”

அலையன் தன் கைப்பேசியை எடுத்து மீண்டும் மெடலைன்னை அழைத்தான். மறுமுனையில் பதில் இல்லை. இது போன்ற சமயங்களில் அவன் சுவரில் மாட்டி இருக்கும் அந்த புகைப்படத்தின் மீது தன் கவனத்தைச் செலுத்துவது வழக்கம். தன் தாயின் அந்த இளமைக்கால புகைப்படத்தைத் தவிர அவன் ஸ்டூடியோவில் வேறு புகைப்படம் கிடையாது.

அலையன் பிறந்த சில மாதங்களில் அவள் தன் கணவனைப் பிரிந்து சென்று விட்டாள். அவன் தந்தை ஒரு மென்மையான, கண்ணியமான மனிதர். அவருக்கே உரிய இயல்பின் காரணமாக அவளைப் பற்றி தவறாக எதுவும் பேசியதில்லை. இது போன்ற ஒரு மனிதரை ஒரு பெண் எப்படிப் பிரிந்து சென்றாள் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. முக்கியமாகச் சிறுவயது முதலே மென்மையாகவும் கண்ணியமாகவும் நடந்து கொள்ளக் கூடிய தன் மகனை எப்படிப் பிரிய முடிந்தது என்பது அதை விடப் புதிராக இருந்தது. 

“அம்மா எங்கே வசிக்கிறாள்?” தந்தையிடம் கேட்டான்.

“அமெரிக்காவில் வசிக்க கூடும்”.

“வசிக்க கூடும் என்றால்?”

“எனக்கு அவள் முகவரி தெரியாது”.

“ஆனால் அதை உங்களுக்குத் தெரிவிப்பது அம்மாவின் கடமை”.

“அவள் எந்த வகையிலும் எனக்குக் கடமைப்பட்டவள் இல்லை”

“எனக்கும் இல்லையா? என்னைப் பற்றி அவள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லையா? நான் எப்படி இருக்கிறேன் என்று? நான் அவளைப் பற்றிச் சிந்திப்பது பற்றித் தெரிய வேண்டியதில்லையா?”

ஒருமுறை தந்தை பொறுமையிழந்து கூறினார்: “நீ தொடர்ந்து நிர்ப்பந்தித்துக் கேட்பதால் இதைத் தெரிவிக்கிறேன். அவளுக்கு உன்னைப் பெற்றெடுக்க விருப்பமில்லை. நீ சௌகரியமாகத் தூங்கும் அந்த சாய்வு நாற்காலியில் தூங்க வைக்க விருப்பமில்லை. உன்னைப் பற்றிய எதுவும் அவசியமில்லை. இப்பொழுது புரிகிறதா?

தந்தை உணர்ச்சிவசப்படக்கூடியவர் அல்ல. என் பிறப்புரிமையை மறுத்த என் தாயுடன் அவருக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவர் இயல்பான அமைதியை மீறி, அதன் அதிருப்தி வெளிப்பட்ட போது அதை மறைக்க முயலவில்லை. 

அலையனுடைய தாயுடனான அவனது கடைசி சந்திப்பைப் பற்றி முன்பே கூறியிருந்தேன். அது அவனது பத்தாவது வயதில் ஒரு சொகுசு விடுதியின் நீச்சல் குளத்தின் அருகில் நிகழ்ந்தது. அவனுக்கு பதினாறு வயது இருக்கும் போது அவன் தந்தை இறந்து விட்டார். அவரது இறுதிச் சடங்கு முடிந்த சில நாட்கள் கழித்து, அவர்களது குடும்ப படத்திலிருந்து தாயின் படத்தைத் தனியே கிழித்து சட்டம் போட்டு தன் அறையில் மாட்டினான். அவனது தந்தையின் புகைப்படம் எதுவும் அவன் அறையில் இல்லை. அதற்கான காரணம் எதுவானாலும் அது நியாயமில்லாதது; புரிந்து கொள்ள முடியாதது. ஆனால் அது தான் உண்மை. அவன் அறையிலிருந்த ஒரே புகைப்படமான தன் தாயின் படத்துடன் அவ்வப்போது உரையாடுவான்.

ஒரு மன்னிப்புக் கேட்பவனைப் பெற்றெடுப்பது எப்படி

“நீங்கள் ஏன் கருக்கலைப்பு செய்து கொள்ளவில்லை? அப்பா தடுத்துவிட்டாரா?”

அந்த புகைப்படத்திலிருந்து ஒரு குரல் கேட்டது: “அதை உன்னால் எப்பொழுதும் தெரிந்து கொள்ள முடியாது. என்னைப் பற்றி உன்னிடம் இருப்பது அனைத்தும் மாயாவாதக் கற்பனையே. ஆனால் அவை எனக்கும் கூட பிடித்தே இருக்கிறது. ஆற்றில் ஒரு இளைஞனை மூழ்கடித்த கொலைகாரியாக என்னை நீ கற்பனை செய்தது உட்பட அனைத்தும். அது போன்று மீண்டும் ஒரு கற்பனைக்காகக் காத்திருக்கிறேன். சொல்லு அலையன்”. 

அலையன் மீண்டும் கற்பனை வயப்பட்டான். அவன் தந்தையைத் தாய் மீது கற்பனை செய்தான். தான் கருத்தடை மாத்திரை எடுத்துக்கொள்ளவில்லை என்று அவள் எச்சரித்தாள். மீண்டும் ஒரு முறை அவன் உறுதியளிக்கவும், பரஸ்பர நம்பிக்கையுடன் சல்லாபித்தனர். அவன் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களிலிருந்து அவன் உச்சநிலையை அடைவதைப் புரிந்து கொண்டவள், “கவனம். என்னால் முடியாது; வேண்டாம்” எனக் கதறினாள். ஆனால் அவன் முகம் மேலும் சிவக்க, வெறுப்புணர்வு ததும்பத் தொடர்ந்தான். அவள் தன்னை ஆக்கிரமித்திருந்த தேகத்திடம் இருந்து விடுபடப் போராடினாள்; அவன் பிடி மேலும் இறுகியது. இது கண்மூடித்தனமான களிப்பால் நிகழவில்லை; தன் மீது திட்டமிட்டு மனவுறுதியுடன் வெளிப்படுத்தப்படும் வன்மம் என்று அவளுக்குப் புரிந்து விட்டது. தன் போராட்டம் தோல்வியடைந்ததன் காரணமாக, அவளுக்குள் அதுவரை இருந்த உணர்வுகள் அனைத்தும் திரண்டு கட்டுக்கடங்கா வெறுப்பாக மாறியது.

அவர்களது கூடலை அலையன் கற்பனை செய்வது இது முதல் முறையல்ல. அந்த கற்பனையால் அவன் மதிமயங்கி இருந்ததன் விளைவாக, ஒவ்வொரு மனிதனும் அவன் கருவில் உருவாகிய தருணத்தின் பிரதிபலிப்பு என்று கருதினான். கண்ணியமான, வலிமையான தன் தந்தையின் வெறுப்பும், மனதளவில் தைரியமும் உடலளவில் பலவீனமும் சேர்ந்த தன் தாயின் வெறுப்பும் என இரண்டு விதமான வெறுப்பின் கலவையான வெளிப்பாடே தான் என்று அவன் பிறப்பைக் கருதினான். கண்ணாடி முன் நின்று அந்த வெறுப்பின் ரேகைகளை தன் முகத்தில் தேடினான். 

அத்தகைய வெறுப்புகளின் சங்கமத்தால் பிறப்பவன் மன்னிப்புக் கேட்பவனாகத்தான் இருக்க முடியும் என எண்ணினான். தன் தந்தையைப் போலக் கண்ணியமாகவும் புத்திசாலியாகவும் தன்னை குறித்து எண்ணும் அதே வேளையில் தன் தாயின் பார்வையில் தன்னை ஒரு அத்துமீறுபவனாகவும் கருதினான். அத்துமீறுபவனாகவும் கண்ணியமானவனாகவும் இருக்கும் ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் கண்டனத்துக்குரியவனாகவும் மன்னிப்பு கோருபவனாகவும் தான் இருக்க முடியும் என்பது மறுக்கமுடியாத யதார்த்தம். மீண்டும் சுவரில் இருக்கும் தன் தாயின் புகைப்படத்தைப் பார்க்கிறான். இப்பொழுது அவள் தன் முயற்சியில் தோல்வியடைந்து, ஈரம் சொட்டும் ஆடைகளுடன் காரில் ஏறி, எவர் கண்ணிலும் படாமல் அறையை அடைந்து, தன்னுள் அத்துமீறி உருவாகி வளரும் சுமையை அங்கேயே இறக்கி விட்டு, சில மாதங்களில் நிரந்தரமாக மீண்டும் ஒரு முறை வெளியேறுகிறாள். 

ஏவாளின் மரம்

அலையன் தன் ஸ்டுடியோவில் சுவரில் சாய்ந்தவாறு தலைகுனிந்து அமர்ந்திருந்தான். ஒருவேளை உறங்கி இருக்கலாம். ஒரு பெண்ணின் குரல் அவனை எழுப்பியது. 

என்னிடம் நீ கூறிய அனைத்தும் நன்றாக இருக்கிறது. உன் கற்பனையின் கண்டுபிடிப்புகள் அனைத்தும் பிடித்திருக்கிறது என்பதைத் தாண்டி, உன்னிடம் சொல்ல வேறெதுவும் இல்லை. ஆனால் தொப்புள் குறித்த உன் கற்பனையிலிருந்து மாறுபடுகிறேன். உன் பார்வையில் தொப்புள் இல்லாத பெண் தேவதை போல் தெரிகிறாள். ஆனால் என் வரையில் உலகின் முதல் பெண்ணான ஏவாள் தான் தொப்புள் இல்லாதள். காரணம் அவள் கருவிலிருந்து பிறப்பதற்கு மாறாக இறைவனால் படைக்கப்பட்டவள். அவளது கருப்பையிலிருந்து தான் முதல் தொப்புள் கொடி தோன்றியிருக்க வேண்டும். பைபிளின் படி, அனைத்து தொப்புள் கொடிகளும் அதில் துவங்கியே தோன்றியிருக்க வேண்டும். ஒவ்வொரு கொடியின் முடிவிலும் ஒரு ஆணோ பெண்ணோ பிணைந்திருப்பார்கள். ஆண்களின் உடலுடன் அந்த சங்கிலி தொடர்ச்சியின்றி முடிந்துவிட்டாலும், ஒவ்வொரு பெண்ணின் கருப்பையிலிருந்தும் மேலும் தொப்புள் கொடி சங்கிலி தொடர்ந்து, ஒரு ஆணுடனோ பெண்ணுடனோ பிணைந்திருந்தது. இவ்வாறாக, லட்சோபலட்சம் முறை இது தொடர்ந்து, நீண்டு, எண்ணற்ற மனித உடல்களால் ஆன ஒரு வானளாவிய மரமாக வளர்ந்து நின்றது. அந்த மரத்தின் ஆணிவேர் தொப்புளற்ற ஏவாளின் கருப்பையிலிருந்தே நீண்டிருந்தது. 

நான் கருவுற்ற சமயம், என்னை நான் அந்த மரத்தின் ஒரு பகுதியாக, ஒரு கொடியில் இணைந்திருப்பதாக உணர்ந்தேன். என்னிலிருந்து வெளிப்படும் ஒரு கொடியின் முனையில் நீ ஊசலாடிக் கொண்டிருப்பதாகக் கற்பனை செய்து கொண்டேன். அந்த சமயம் முதல், ஒரு கொலைகாரன் கத்தியோடு அந்த மரத்தின் அடியாழத்தில் ஏவாளின் கழுத்தை வெட்டுவதாகக் கற்பனை செய்தேன். மரணத்தின் பிடியில் அவள் துடிதுடிக்க, அவளுள் இருந்து கிளைத்தெழுந்த அந்த பிரம்மாண்ட மரம், வேரின்றி பிடிப்பிழந்து, வீழ்வதைக் காட்சி செய்து கொண்டேன். அதன் எண்ணிலடங்கா கிளைகள் ஒரு பெருமழையைப் போல விழுவதாகக் கண்டேன். இதை மனித இனத்தின் அழிவாகவோ, எதிர்காலத்தை நிர்மூலமாக்குவதாகவோ புரிந்து கொள்ள வேண்டாம். மாறாக, இதன் மூலம் ஆதி முதல் அந்தம் வரை, நீரோ முதல் நெப்போலியன் வரை, இயேசு முதல் புத்தன் வரை, மனிதக் குலத்தின் இருப்பையே எந்த சுவடுகளும் நினைவுகளும் இன்றி, கடந்தகாலம், எதிர்காலம் என எதுவும் இன்றி மறையச் செய்ய வேண்டும் என்பதே நோக்கம். தனக்கு எந்த நன்மையையும் விளைவிக்கவியலாத, ஒரு துயரகமான கூடலால் வரும் பின்விளைவுகளை அறியாமல், அதற்காகக் காலந்தோறும் மனிதர்கள் எத்தகைய விலையை தங்கள் வாழ்நாள் முழுவதும் கொடுக்க வேண்டி இருக்கும் என எந்த புரிதலும் இல்லாத, ஒரு தொப்புள் இல்லாத பெண்ணின் கருவிலிருந்து உருவாகி கிளைத்தெழுந்த மரத்தை முற்றிலுமாக அழித்தொழிக்க வேண்டும் என்பதும் ஆகும்”.

அந்த குரல் மீண்டும் அமைதியானது. அலையன் சுவரில் சாய்ந்து மீண்டும் உறங்கிப் போனான்.

மோட்டர்பைக்கில் நிகழ்ந்த உரையாடல்

மறுநாள் காலை பதினொரு மணியளவில், லக்சம்பர்க் தோட்டத்தின் அருகில் உள்ள அருங்காட்சியகம் முன்பு தன் நண்பர்கள் ரேமொன் மற்றும் கலிபான் இருவரையும் அலையன் காண வேண்டி இருந்தது. தன் குடியிருப்பிலிருந்து கிளம்பும் முன், தன் தாயின் புகைப்படத்திடம் திரும்பி விடைபெற்றுக் கொண்டு, கீழிறங்கி வீதிக்கு வந்து, சற்று தள்ளி நிறுத்தியிருந்த தன் மோட்டர்பைக்கை நோக்கி நடந்தான். 

அவன் பைக்கில் ஏறியவுடன், ஒருவர் அவனை நெருங்கி அவன் மீது சாய்வது போல் உணர்ந்தான். அவன் காதலி மெடலைன் அவனுடன் பைக்கில் இருப்பது போல் உணர்ந்தான். இந்த கற்பனை தடுமாறச் செய்தது; அவள் மீதான அவன் காதலை உணர்த்தியது. அவன் வண்டியைச் செலுத்தினான். 

தன் பின்னால் ஒரு குரல் கேட்டது. 

“நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்”.

அந்த உணர்வை அடையாளம் கண்டு கொண்டான். அது அவன் தாயின் குரல். 

சாலையில் போக்குவரத்து குறைவாக இருந்தது. அவன் தாய் தொடர்ந்து கூறினாள்: “நம்மிடையே பரஸ்பர புரிதல் இருப்பதாக, நாம் தவறாகக் கருதிவிடக் கூடாது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்”.

ஒரு பாதசாரி இரு கார்களுக்கிடையில் புகுந்து சாலையைக் கடக்க முயன்றதால், அலையன் சட்டென வண்டியை நிறுத்தினான். அவன் அலையனை நோக்கி மிரட்டும் தொணியில் கையசைத்து விட்டு போனான்.

“நான் வெளிப்படையாகக் கூறுகிறேன். ஒரு உயிரை அவர்களது அனுமதியின்றி இந்த உலகில் திணிப்பதை மோசமான செயலாக உணர்கிறேன்”. 

அலையன் ஆமோதித்தான்.

“உன்னைச் சுற்றிப் பார். இங்கிருக்கும் ஒருவர் கூட தன் விருப்பத்தின் பேரில் வந்தவர் இல்லை. இப்பொழுது நான் சொன்னது இதுவரை நாம் கண்டறிந்ததிலேயே மிகச் சாதாரணமான உண்மை. அது மிகச் சாதாரணமாகவும் அடிப்படையானதாகவும் இருப்பதாலேயே நாம் அதைப் பார்ப்பதும் கேட்பதும் இல்லை”. 

சில நிமிடங்களுக்கு தன் இருபுறமும் சென்ற காருக்கும் லாரிக்கும் இடைப்பட்ட சாலையில் சீராகச் சென்றான்.

“அனைவரும் மனித உரிமையைப் பற்றிப் பிதற்றுகிறார்கள். என்ன ஒரு வேடிக்கை. நம் இருப்பே நம் விருப்பத்தின் பேரில் நிகழவில்லை. அதோடு இந்த மனித உரிமை பாதுகாவலர்கள் நாம் விரும்பிய வண்ணம் மரணத்தைத் தேடிக் கொள்ளக் கூட அனுமதிக்க மாட்டார்கள்”. 

சாலையின் சந்திப்பிலிருந்த விளக்கு சிவப்பிற்கு மாறியது. அவன் வண்டியை நிறுத்தினான். சாலையின் இருபுறமிருந்தும் மனிதர்கள் எதிர்புறத்தை நோக்கி விரைந்தனர்.

அவன் தாய் தொடர்ந்தாள்: “அவர்களைப் பார். பாதிக்கும் மேற்பட்டவர்கள் மோசமாகக் காட்சியளிப்பவர்களாக இருக்கிறார்கள். அசிங்கமாக இருப்பது கூட மனித உரிமையா? வாழ்க்கை முழுவதும் அசிங்கமான உருவத்தைச் சுமந்து திரியும் உணர்வு எத்தகையது என்று உனக்குத் தெரியுமா? ஒரு நிமிடம் கூட ஆசுவாசம் இருக்குமா? உன் பாலினம்? நீ ஒரு போதும் அதைத் தேர்வு செய்ய முடியாது. உன் விழியின் நிறம்? நீ பூமியில் வாழும் காலகட்டம்? உன் நாடு? உன் தாய்? இது எதுவும் முக்கியமில்லை. நம் உரிமைகள் என்பது முக்கியமில்லாத விசயங்களுடனே சம்மந்தப்பட்டிருக்கிறது. அதனால் உரிமைகளின் பொருட்டு நாம் சண்டையிடவோ பெரிதாக பிரகடனங்கள் செய்வதோ தேவையில்லாதது”. 

அவன் மீண்டும் வண்டியைச் செலுத்தினான். அவனது தாயின் குரலும் சற்று உயர்ந்து, “நான் பலவீனமாக இருந்ததால் நீ இவ்வாறு இருக்கிறாய். அது என் தவறு. மன்னித்து விடு” என்றாள்.

சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு, அலையன் மெதுவாகப் பேசினான். “எதற்காக நீங்கள் மன்னிப்பு கேட்கிறீர்கள்? என் பிறப்பைத் தடுக்க பலம் இல்லதாதற்காகவா? என் வாழ்க்கையில் மீண்டும் இணைந்து கொள்ளாததற்காகவா? இப்பொழுதிருக்கும் நிலையில் அதுவொன்றும் அவ்வளவு மோசமாக இல்லையே?” என்றான்.

சிறிய இடைவெளி விட்டு, “நீ சொல்வது கூட சரிதான். அப்படியானால் என் குற்றவுணர்வு இரட்டிப்பாகிறது”.

“நான் தான் உங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். ஒரு குப்பையைப் போல் உங்கள் வாழ்விற்கிடையே விழுந்தேன். அமெரிக்காவிற்கு விரட்டியடித்தேன்” என்றான் அலையன்.

“மன்னிப்புக் கேட்பதை நிறுத்து. என் முட்டாள் மகனே, உனக்கு என் வாழ்வைப் பற்றி எதுவும் தெரியாது. உன்னை நான் முட்டாள் என அழைக்கலாமா? கோபித்துக் கொள்ள வேண்டாம். என் பார்வையில் நீ ஒரு முட்டாள் தான். ஆனால் உன் முட்டாள்தனத்தின் பிறப்பிடம் எது தெரியுமா? உன் நல்ல இயல்பு தான். உன் உன்மத்தமான நல்லதனத்தில் இருந்து தான் உன் முட்டாள்தனம் உருவாகிறது”.

அவன் லக்சம்பர்க் தோட்டத்தை அடைந்து, வண்டியை நிறுத்தினான். 

“எதிர்ப்பு தெரிவிக்காமல் என்னை மன்னிப்பு கேட்க விடுங்கள்” என்றான் அலையன். “நான் ஒரு மன்னிப்பு கேட்பவன். அப்படித்தான் நீங்கள் இருவரும் என்னை உருவாக்கினீர்கள். இப்படி இருப்பது எனக்கு மகிழ்ச்சியே. நாம் பரஸ்பரம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளும் உணர்வு நன்றாக இருந்தது. அதில் ஒரு அன்பு இருந்தது இல்லையா?” 

அவர்கள் அருங்காட்சியகத்தை நோக்கி நடந்தனர்.

தமிழில்~ கோடீஸ்வரன் கந்தசாமி

மின்னஞ்சல்- [email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.