கனலி 2024 வெளியீடுகள்

2024 ஆம் ஆண்டின் சென்னை புத்தகக் திருவிழாவில் கனலி சார்பில் ஆறு புத்தகங்கள் வெளியாகின்றன.

மொழிப்பெயர்ப்புச் சிறுகதைகள்:

ரஷ்ய மொழிப்பெயர்ப்புச் சிறுகதைகள்

தமிழில் -கீதா மதிவாணன் 

விலை :உரூபாய் 300

ரஷ்ய மொழிப்பெயர்ப்புச் சிறுகதைகள்

தொகுப்பிற்கான கீதா மதிவாணன் முன்னுரை:

பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்ய இலக்கியத்தின் பொற்காலம் எனப்படுகிறது. அக்காலத்தில்தான் ரஷ்ய இலக்கியத்தில் முன்னோடி முயற்சியாக, படிமம், குறியீடு, புனைவியம், யதார்த்தவியம், நவீனத்துவம், போன்றவற்றை உள்ளடக்கிய பல பரீட்சார்த்தமான படைப்புகள் படைக்கப்பட்டன. கதை, கவிதை, உரைநடை, புதினம், நாடகம் அனைத்தும் புது வடிவம் பெற்றுப் பெரும்பாய்ச்சல் பாய்ந்தன. அக்காலத்தில்தான் ரஷ்ய இலக்கியம் குறுகிய அரசியல் சித்தாந்தங்களிலிருந்து விடுபட்டு, பரந்துபட்ட சமூக வெளியில் சஞ்சரிக்கத் தொடங்கியது. காதல், காமம், துரோகம், சீற்றம், தனிமை, மரணம், தோல்வி, தற்கொலை, போர், புரட்சி, அமைதி என தனிமனித மற்றும் சமூகம் சார்ந்த வாழ்வைப் பேசியது. அந்நாளைய ரஷ்ய சமூகத்தின் அடுக்குநிலைகளையும் அவற்றின் ஏற்றத் தாழ்வுகளையும், தொழிலாளர் வர்க்கத்தையும், விளிம்புநிலை மானுடரையும், மனித மனங்களின் விநோதங்களையும், வாழ்வியல் இன்னல்களையும் எவ்விதப் பாசாங்குமின்றி வெளிப்படுத்தியது. போர்களின் கொடூர விளைவுகளைக் கண்முன் நிறுத்தியது. வாழ்க்கைத் துயரங்களைச் சொல்லும் அதே சமயம் அவற்றை எதிர்கொள்ளும் வழிகளையும் கோடிட்டுக் காட்டியது. ரஷ்ய செவ்வியல் இலக்கியங்கள் பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டு அதன் வாசகப்பரப்பு விரிவடைந்தது. அதன் தொடர்ச்சியாய், ரஷ்ய இலக்கியப் பொற்காலத்தின் நீட்சியாய் இத்தொகுப்பு கனலி பதிப்பகம் வாயிலாக தற்போது வெளியாகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளுமைகளான ஆன்டன் செகாவ், மக்ஸிம் கார்க்கி, லியோ டால்ஸ்டாய், செவோலோட் கார்ஷன், மிஹயீல் அர்ஸிபாஷேவ், ஜினைடா கிப்பியஸ், அலெக்ஸாந்தர் குப்ரின், அலெக்ஸாந்தர் புஷ்கின், ஃபியோதர் சோலோகப், விளாதிமீர் நபகோவ் ஆகியோரின் சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமான வாசிப்பனுபவத்தைத் தரக்கூடியவை. வாசிப்பனுபவம் ஒரு வகை சுவாரசியம் எனில் மொழிபெயர்ப்பு அனுபவம் எனக்கு இன்னொரு வகை சுவாரசியத்தைத் தந்தது. கதைக்களம், கரு, கதாபாத்திர அமைப்பு, மானுட குணவியல்புகள், மொழிநடை, உட்பொருள், கதை சொல்லும் பாணி ஆகியவற்றால் ஒன்றுக்கொன்று மாறுபட்ட கதைகளிலிருந்து விடுபட்டு வெளியேறுவது ஒரு சவாலாகவே இருந்தது. சில கதைகள் என்னைத் தொடர்ச்சியாக அடுத்தடுத்தக் கதைகளுக்குப் பயணிக்கவிடாமல் என்னை தமக்குள்ளேயே சில நாட்களுக்குச் சிறைப்பிடித்துவைத்துக்கொண்டன. முக்கியமாக, ‘அந்த நான்கு நாட்கள்’ கதையிலிருந்து நான் மீண்டுவர அதிக நாள் எடுத்தது. மொழிபெயர்ப்பின் நடுவே சட்டென்று எல்லாவற்றையும் ஓரங்கட்டி வைத்துவிட்டு, கொஞ்ச நேரம் அழுவேன். சிறு ஆசுவாசத்துக்குப் பிறகு தொடர்வேன். மறுபடி மனம் கனக்க, மூடி வைத்துவிடுவேன். மறுபடி தொடர்வேன். மூலக்கதை தந்த துயரை, வலியை, விரக்தியை துளியளவும் குறையாமல் அப்படியே தமிழில் கொண்டுவரப் பெரும்பாடு பட்டேன். பணியிலிருந்து மீண்ட பின்பும் அந்தப் பதற்றம் தரும் நினைவிலிருந்து மீள்தல் அவ்வளவு இலகுவாக இல்லை.


‘அறச்சீற்றம்’ என்னை மிகவும் மாறுபட்டக் கண்ணோட்டத்தோடும் வெகு நுட்பமான கவனத்தோடும் கையாள வைத்தது. நையாண்டி போன்று ஆரம்பத்தில் தோன்றினாலும் அதற்குள் இருக்கும் மனிதநேயம் வியப்பூட்டியது. முதல் கதையான ‘பந்தயம்’ இரண்டு வருடங்களுக்கு முன்பு கனலியில் வெளியாகி, பலருடைய பாராட்டைப் பெற்றுத் தந்தது. கதையை எத்தனை முறை வாசித்தாலும் இறுதியில் கண்கள் கசியாமல் இருக்காது. என்னுடைய முதல் ரஷ்ய மொழிபெயர்ப்புக் கதைநாயகன் செகாவ்தான். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள சில எழுத்தாளர்கள் இத்தொகுப்பின் மூலமாகவே எனக்குப் பரிச்சயமானவர்கள். அவர்களுள் என்னை அதிகமாக வியப்பில் ஆழ்த்தியவர் ஜினைடா கிப்பியஸ். இல்லறத்துக்காக அல்லாமல் இலக்கியத்துக்காகத் திருமணம் செய்துகொண்டு, 52 வருடங்கள் ஒருவரை ஒருவர் பிரியாமல் ஒற்றுமையாய் வாழ்ந்த ஜினைடா கிப்பியஸ் தம்பதியர் பற்றி மேலதிகத் தகவல்களை அறிந்தபோது வியப்பின் எல்லைக்கே சென்றேன்.
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள எழுத்தாளர்களுள் பலர் துயரம் ததும்பிய வாழ்க்கையை வாழ்ந்துமுடித்தவர்கள். வறுமை, நோய்மை, வன்முறை, ஆதரவின்மை, மன அழுத்தம் என ஏதாவதொன்றால் பாதிக்கப்பட்டவர்கள். தற்கொலை முயற்சியில் தோற்றவர்களும் உண்டு. வெற்றி பெற்றவர்களும் உண்டு. பலரிடம் இருந்த ஒற்றுமை, சமூக நன்னோக்கு. அந்நாளைய ரஷ்யப் பேரரசின் அடக்குமுறைக்கு எதிராக, தங்கள் எழுத்தாலும் செயல்பாட்டாலும் அரசுக்குத் தொடர்ச்சியாக, தலைவலி தந்தவர்கள். அதற்குத் தண்டனையாக தலைநகரத்திலிருந்து தள்ளி வைக்கப்பட்டார்கள் அல்லது நாடுகடத்தப்பட்டார்கள். நாட்டை விட்டு வெளியேறினாலும் அவர்களது எழுத்தின் வீச்சும் வீரியமும் சற்றும் குறைந்துவிடவில்லை. சொல்லப்போனால் முன்பை விடவும் அதிகமாகவே அவை அவர்களது எழுத்தில் வெளிப்பட்டன. அத்தகு வீரியமிகு எழுத்தாளர்களின் படைப்புகளிலிருந்து இக்கதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்து, பதிப்பித்துள்ள விக்னேஷ்வரனுக்கு என் மனமார்ந்த நன்றி.

சிறார் புத்தகங்கள்:

பச்சைக்கிளியே பறந்துவா 

(சிறார் பாடல்கள்)

கீதா மதிவாணன் 

விலை -உரூபாய் 100

பச்சைக்கிளியே பறந்துவா 

இத்தொகுப்பு உருவானதற்கான பின்புலம் பற்றி கீதா மதிவாணனின் கூற்று:

குழந்தைகளுக்குத் தாய்மொழியைக் கற்பிப்பதன் எளிய வழிமுறைதான் பாடல்கள். பாடுவதன் மூலமும் பாடல்களைத் தொடர்ச்சியாகக் கேட்பதன் மூலமும் மொழி வசப்படுகிறது. உச்சரிப்பு தெளிவாகிறது. புதிய வார்த்தைகள் அறிமுகமாகின்றன. நினைவாற்றல் வலுப்படுகிறது. தாய்மொழியில் தேர்ச்சி கிடைக்கிறது. அதனால்தான்,
அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
என்று ஆரம்ப எழுத்துகளைக் கூட பாடல் வழியே கற்றுத்தருகிறோம்.
பச்சைக் கிளியே பறந்து வா
பாடம் படிக்க விரைந்து வா
என்று பச்சைக் கிளியை அழைக்கும் சாக்கில் நான் இங்கே சிறுவர்களை அழைக்கிறேன். இத்தொகுப்பில் உள்ள பாடல்கள் அனைத்தும் ஐந்து முதல் பதினைந்து வயது வரையிலான எந்தக் குழந்தையையும் கவரும் என்று நம்புகிறேன். தமிழ்ப் பேசும் குழந்தைகள் அனைவருக்கும் இந்நூலைச் சமர்ப்பிக்கிறேன்.

குழந்தைகளே இது உங்கள் காலம் 

சூ.ம ஜெயசீலன் 

விலை -உரூபாய் 150

குழந்தைகளே இது உங்கள் காலம் 

இந்த தொகுப்பு இந்து தமிழ் திசை நாளிதழில் ‘வெற்றிக்கொடி’ பள்ளி நாளிதழில் பகுதியில் தொடராக வெளிவந்து மிகச்சிறந்த முறையில் வரவேற்பும் கவனமும் பெற்றது. 

தொகுப்பிற்கு ஆ.மாதவன் (தமிழ்நாடு அறிவியல் இயக்கம்) சிறப்பான முன்னுரை ஒன்றை எழுதியுள்ளார்.அதிலிருந்து சில வரிகள்

“இருட்டைப் பழிப்பதைவிட அந்த இடத்தில் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி வைப்பது மேல்” என்று கூறுவார்கள். அந்த வகையில் குழந்தைகளால் சமூக இருளை மாய்க்க இப்படிப்பட்ட சிறு மெழுகுவர்த்திளைத்தான் ஏற்ற இயலும். இந்தச் சிறுமெழுகுவர்த்திகள் அவர்களின் கைகளுக்குள் அடங்கும் சிறியவையாக இருந்தாலும் அவற்றிலிருந்து கிடைக்கும் ஒளி நல்ல செயல்களுக்காக உலகெங்கும் ஒளியைப் பாய்ச்சும் வீச்சினைக் கொண்டவை. உருவில் சிறியவர்களாக இருந்தாலும் சிறார்கள் தம் எண்ணங்களால் உயர்ந்தோராயிருப்பவர்கள். தமது உயர்ந்த எண்ணத்திற்கேற்ப, தம்மால் இயன்ற நற்செயல்களில் ஈடுபடவும் முனைபவர்கள். அவர்களை ஆற்றுப்படுத்தவில்லயென்றாலும் குறை சொல்லாமல் இருந்தால்கூடப் போதும் பல நல்ல செயல்கள் நடந்தேறும்.“குழந்தைகளே இது உங்கள் காலம்” நூலை வாசிப்போர் நிச்சயம் இப்படிப்பட்ட செயல்பாடுகளை ஊக்குவிப்போராகவே இருப்பர்.அல்லது மாறிவிடுவர். தொடர்ந்து சிறார்களின் நற்செயல்களை உலகிற்குப் படம் பிடித்துக் காட்டும் ஜெயசீலன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்

அல்புனைவு:

ஆதிநிலத்து மனிதர்கள் 

ஹேமா 

விலை -உரூபாய் 180

ஆதிநிலத்து மனிதர்கள் 

சிங்கப்பூரின் வரலாற்றுத் தடங்களைப் பேசும் அல்புனைவாக வெளிவந்துள்ள இந்தத் தொகுப்பின் முன்னுரையில் தொகுப்பிற்கான காரணங்களை  ஹேமா  தெளிவான முறையில் எடுத்துரைக்கிறார்.

நவீனத்தில் நின்று ஆதியை நோக்குதல்

காலத்திற்கேற்ப  வெகுவேகமாய்த்   தன்னை நவீனப்படுத்திக் கொள்ளும் நாடுகளில் முதன்மையானது சிங்கப்பூர். பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும் இந்நகரின் உயர்ந்த கட்டடங்களுக்கிடையில் அலங்காரப் படகுகள் மிதக்க அடக்கமாய் நகரும் ஆறு, அதன் கரையோரம் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் நிலவிய மன்னராட்சியைப் பிரதிநிதித்து சங் நீல உத்தமா தோள்புடைக்கச் சிலையாக நிற்கிறார். அவருக்குச் சற்றுத் தள்ளி குழந்தையாய்த் தன்னிடம் வந்து தற்போது நெடுநெடுவென வளர்ந்து நிற்கும் நாட்டை கைக்கட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறார் ராபிள்ஸ். இவர்கள் இருவரையும் கண்டதற்குச் சான்றாய் இப்போது இருப்பவை, இடைப்பட்ட நூற்றாண்டுகளில் உருதிருத்தம் கொண்ட ஃபோர்ட் கேனிங் குன்றும் சிங்கப்பூர் ஆறும் மட்டுமே.   

எப்போதும் பார்த்துப் பழகிய முதியவர்களுக்கு இளமையென்று ஒன்று இருந்த யோசனையே வியப்பைக் கொடுப்பது போல நவீனத்தால் மெருகேறி நிற்கும் தற்போதைய சிங்கப்பூருக்கு ஒரு வரலாறு இருந்திருக்கிறது, அதில் ஓர் அரண்மனை இருந்தது, அவற்றில் அரச அரசியர் வாழ்ந்தார்கள் என்ற எண்ணமே எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. இந்த ஆச்சரியமே சிங்கப்பூரின் வரலாற்றை நோக்கி என்னை  மீண்டும் மீண்டும் ஈர்க்கிறது. அதைத் தேடித் தேடி வாசிப்பதன் மூலம் தற்போதைய அதிவேக சிங்கப்பூருக்குள் ஆழ்ந்திருக்கும் அதன் அடித்தளத்தைப் புரிந்துகொள்ள முயல்கிறேன். வரலாற்றை நோக்கிய என் பார்வை ஒரு ஆய்வாளனுடையதாக இல்லாமல், ஒரு சிறுமியின் வியப்புப் பார்வையாகவே இருக்கிறது.  அதைப் பகிர்ந்து கொள்ளவே கட்டுரைகளை எழுதுகிறேன். அப்படி எழுதிய கட்டுரைகளின் சிறுதொகுப்பே இப்புத்தகம். வாசிப்பை எளிதாக்க இக்கட்டுரைத் தொகுப்பில் நான் பேச எடுத்துக்கொண்ட அரசர்களின் வரிசையை (மட்டும்) இடையிடையில் கொடுத்திருக்கிறேன்.

என் கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டு ஆதரவு கொடுத்த ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ மாத இதழுக்கும், அதன் நிறுவனர் திரு முஸ்தஃபா அவர்களுக்கும், கட்டுரைகள் செம்மையாய் வெளிவர உதவியதோடு இந்நூலுக்கு முன்னுரையும் எழுதிக் கொடுத்திருக்கும் இதழின் முதன்மை ஆசிரியர் திரு. முகம்மது காசிம் ஷாநவாஸ் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நூல் சிறப்பாய் உருப்பெற உறுதுணையாய் இருந்த கனலி ஆசிரியர் குழுவைச் சேர்ந்த திரு. க.விக்னேஸ்வரன் மற்றும் திரு. மகேஸ்வரன் ஆகியோருக்கும் இந்நூல் முழுமைபெற உறுதுணையாய் இருந்த எழுத்தாளர்கள் சிவானந்தம், கங்கா, மகேஷ்குமார், இந்நூலில் இருக்கும் சித்திரங்களை வரைய ஊக்குவித்து அதைச் செம்மைப்படுத்த உதவிய ஆசிரியர் Priya Kumari Karkada ஆகியோருக்கும் என் நெகிழ்ச்சியான நன்றி. இப்புத்தகத்தில் பிழைகள் இருப்பின் அதற்கு இவர்கள் சொன்ன திருத்தங்களில் நான் எடுத்துக்கொண்ட சில சுதந்திரங்களே காரணம். அவை வாசிப்பைச் சலனப்படுத்துவதாய்த் தெரிந்தால் அடுத்த பதிப்பில் திருத்திவிடுகிறேன்.

புனைவுகள்:

இம்முறை புனைவுகள் பிரிவில் எழுத்தாளர் காலத்துகளின் இரண்டு சிறுகதைத் தொகுப்புகளைக் கனலி வெளியிடுகிறது. 

சில்லுகளில் அலைகழியும் பிம்பங்கள் 

காலத்துகள்

விலை-உரூபாய் 150 

சில்லுகளில் அலைகழியும் பிம்பங்கள் 

முற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம் 

காலத்துகள்

விலை-உரூபாய் 150 

முற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம்

இரண்டு தொகுப்புகளும் அடிப்படையில் வெவ்வேறு பரிமாணங்களைக் கொண்டது, ஒரு தொகுப்பு நவீன வாழ்வில் மனிதனின் தீமையான பக்கங்களையும் அவனுது கசடுகளைப் பேசினால் இன்னொரு தொகுப்பு தமிழ்ச் சிறுகதைகளில் வழக்கமாகப் பின்பற்றப்படும் அத்தனை எல்லைகளையும் சற்றுக் கலைத்துப்போட்டு மையங்கள் அற்ற சிறுகதை வடிவத்தை ஒன்றை உருவாக்க முயல்கிறது.

 

கனலிக்கு ஆதரவளிக்கும் நண்பர்கள் இம்முறையும் இந்தத் தொகுப்புகளை வாங்கி ஆதரவளித்து உதவுங்கள்.

நன்றி, 

தொடர்புக்கு -9080043026

[email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.