“அடிப்படை மனித விழுமியங்களுக்குக் குரல் எழுப்புவதும் அரசியல்தான்” எழுத்தாளர் திலீப் குமார் நேர்காணல்

குஜராத்தியைத் தாய்மொழியாகக் கொண்ட திலீப் குமார் (பி. 1951), தமிழ் இலக்கியத்தில் தனக்கான தனித்த இடத்தை உருவாக்கிக்கொண்டவர். சிறுகதையாசிரியர், இலக்கியத் திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல தளங்களில் இயங்கிவரும் திலீப் குமார், 1970களில் எழுதத் தொடங்கினார். சென்னை மயிலாப்பூரில் நீண்ட காலம் புத்தகக் கடை ஒன்றை நடத்திவந்த திலீப் குமார், ஏறக்குறைய கடந்த அரை நூற்றாண்டு காலத் தமிழ் இலக்கிய வரலாற்றின் நேரடி சாட்சியங்களில் ஒருவர். ‘மூங்கில் குருத்து’ (1985), கடவு (2000) சிறுகதைத் தொகுப்புகள், ‘மௌனியுடன் கொஞ்ச தூரம்’ (1992) இலக்கியத் திறனாய்வு, ‘ரமாவும் உமாவும்’ (2011) நாடகம், ‘The Tamil Story: Through the Times, Through the Tides’ (தொகுப்பாசிரியர்/ பதிப்பாசிரியர், 2016; சாகித்ய அகாடமியின் மொழிபெயர்ப்புக்கான விருது பெற்றது) என திலீப் குமாரின் பங்களிப்புகள் ஆழம் கூடியவை. நகர வாழ்வின் இடர்களையும், எளிய நடுத்தர வர்க்க மக்களின் சமூக-பொருளாதார சூழல், அவர்கள் சந்திக்கும் புறக்கணிப்பு, அவை ஏற்படுத்தும் உள-உறவுநிலை மாற்றங்களை விவேகத்துடனும், அங்கதத்துடனும் நுட்பமாகக் காட்சிப்படுத்திய திலீப் குமாரின் படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன; சில திரைவடிவம் பெற்றுள்ளன. பல்லாண்டு சென்னை வாழ்க்கைக்குப் பிறகு மீண்டும் கோவைக்குத் திரும்பியிருக்கும் திலீப் குமாருடனான உரையாடலில் இருந்து…

28 வயது வரை கோவை வாசம்; பிறகு 71 வயது வரை சென்னை வாழ்க்கை; இப்போது மீண்டும் கோவை. சென்னையில் இருந்தபோது கோவை உங்கள் நினைவில் என்னவாக இருந்தது, இப்போது சென்னை உங்கள் நினைவை எப்படி ஆக்கிரமித்திருக்கிறது? கோவை திரும்பிய பிறகு உங்கள் மனநிலை, எண்ணவோட்டங்கள் பற்றிப் பகிர முடியுமா?

நான் எனது இலக்கிய-பண்பாடு சார்ந்த ஆர்வங்களைத் தீவிரமாகப் பின்பற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் நிறைந்த ஓரிடமாக இருக்கும் என்று கருதியே சென்னை சென்றேன். துரதிர்ஷ்டவசமாக, கோவையில் எனது இளமைக்காலம் அத்தனை மகிழ்ச்சியானதாக இருக்கவில்லை. எனது பன்னிரண்டாவது வயதிலிருந்து இருபத்தி எட்டாவது வயது வரை ஒவ்வொரு வேளை உணவும் நிச்சயமின்மையின் பீதிக்குப் பின்புதான் கிட்டியது. எனக்கு என் கோவை வாழ்வைக் குறித்த இனிமையான நினைவுகள் அதிகமில்லை. எனவே நான் சென்னைக்கு இடம்பெயர்ந்தது ஒருவித விடுதலை உணர்வை அளித்ததோடு எனது இலக்கிய லட்சியங்களை நோக்கி நகர்வதற்கான நல்வாய்ப்பாகவும் அமைந்தது என்று சொல்லலாம்.

அதேபோல், நான் தற்போது கோவைக்குத் திரும்பியிருப்பதுகூட, இங்கு முதியோர்களுக்கான ஓய்வு இல்ல வசதிகள் சிறப்பாக உள்ளன என்பதால்தான். மற்றபடி, ‘வீடு-திரும்புதல்’, ‘வேர்களுக்குத் திரும்புதல்’ போன்ற பகட்டான காரணங்கள் ஏதுமில்லை.

கோவை ஒரு வர்த்தக நகரம். விளைவாக, பல்வேறு சமூகக் குழுக்கள் மிக இணக்கமாக வாழ்ந்த ஒரு இடமாகத்தான் எப்போதும் என் நினைவில் அது இருந்திருக்கிறது. ஆனால், தற்போதைய கோவை பல்வேறு துறைகளில் மிகப் பிரம்மாண்டமான வளர்ச்சியை அடைந்திருந்தாலும் கூடவே, அரசியல் ஆவேசங்கள் மிகுந்த நகரமாகவும் மாறியுள்ளது. அதன் பண்பாட்டு உளவியலில் மிகக் கடுமையான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகவே நினைக்கிறேன்.

எப்படியும், சென்னையின் பன்முகத்தன்மை குறித்த ஏக்கம் என்னிடம் இருக்கவே இருக்கிறது.

உங்கள் தாய்மொழி குஜராத்தி; எழுதியது தமிழில்; ஆங்கிலப்புலமை உண்டு. இந்தி உள்ளிட்ட மொழிகள் சார்ந்து மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டுள்ளீர்கள். பல மொழிப் புலமை ஒருவருடைய கண்ணோட்டத்திலும் அணுகுமுறையிலும் ஆழ்ந்த தாக்கம் செலுத்தக் கூடியது; ஒரு மொழி மட்டும் அறிந்தவர்களைவிட கூடுதல் பலம் அவர்களுக்கு உண்டு. ஓர் எழுத்தாளராகவும் இது உங்களில் எப்படி இயங்குகிறது.

நீங்கள் குறிப்பிடுவது சரிதான். ஒரு எழுத்தாளன் தன் தாய்மொழி தவிர மேலும் சில மொழிகளை அறிந்திருப்பது நிச்சயம் அவனுக்குக் கூடுதல் பலம்தான். அதன் பயன்களும் பலவாறானவை.

ஒரு படைப்பை மொழிபெயர்ப்பில் படிப்பதைவிட மூல மொழியில் வாசிப்பது ஒரு காத்திரமான அனுபவமாக அமையும். குறிப்பாக, ஒன்றுக்கு மேற்பட்ட இந்திய மொழிகளை அறிந்தவர்கள் கற்றுக்கொள்ளவும், மகிழ்ச்சியாக இனம்கண்டுகொள்ளவும் நிறைய விஷயங்கள் இருக்கும். நமது அரசியல் – சமூக வாழ்க்கை ஒன்று போல இருந்தாலும் நமது மாநிலங்களில் காணப்படும் பண்பாட்டு வேற்றுமை-ஒற்றுமைகளை நம்மால் எளிதில் புரிந்து ரசிக்கமுடியும். வாக்கிய அமைப்பு, பழமொழிகள், உவமைகள், உணவு முறைகள், உடல் உழைப்பு சார்ந்த திறன்கள் இப்படிப் பலவற்றைக் கூற முடியும்.

பொதுவாக பன்மொழி அறிவு, முதன்மையாக வாழ்க்கை குறித்த நம் கண்ணோட்டத்தை விசாலப்படுத்தும். அதோடு நம் தாய்மொழியில் நாம் அதுவரை உணர்ந்திராத பல பரிமாணங்களையும் சாத்தியகூறுகளையும் நோக்கி நம்மை நகரச் செய்யும். அதன் தொடர்ச்சியாக நமது தாய்மொழியின் நுட்பமான கூறுகளைத் துலங்கச்செய்து நமது படைப்பு மொழியை இன்னும் கூடுதலாகச் செழுமைப்படுத்தும்.

என்னைப் பொருத்தவரை (தமிழை முறையாகக் கற்கும் வாய்ப்பைப் பெற முடியாமல் போயிருந்தாலும்கூட) குஜராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகளை அறிந்திருந்ததனாலேயே தமிழ் மொழியின் மேன்மையை என்னால் இன்னும் சிறப்பாக உணர்ந்துகொள்ள முடிந்தது. இன்னும் சற்று விளக்கமாகக் கூறுவது என்றால், என் படைப்பு மொழி தமிழாகவும் என் பாத்திரங்களின் தாய்மொழிகள் குஜராத்தி, ஹிந்தி, மராட்டி, உருது ஆகியவைகளாக இருந்த பல சந்தர்ப்பங்களில் தமிழ் மொழியின் விரிவும் ஆழமும் மிகுந்த வெளிப்பாட்டுத் திறனை நான் கண்கூடாக உணர்ந்திருக்கிறேன். என் கதை மொழி கூர்மையாகவும் சுவாரசியமாகவும் அமைவதற்குத் தமிழ் மொழியின் இந்த ஆற்றல் எனக்குப் பெரிதும் உதவி இருக்கிறது.

உங்கள் சிந்தனை மொழி எது?

என் சிந்தனைமொழி நிச்சயம் தமிழ்தான்! தமிழ் வாழ்க்கையை, தமிழர்களும் படிப்பதற்காக தமிழில் எழுதும் ஒரு எழுத்தாளனின் சிந்தனை மொழி தமிழைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்!

ஒரு விஷயம் குறித்த கருத்து, கண்ணோட்டம் உங்களில் எப்படி உருப்பெறுகிறது?

இக்கேள்விக்குப் படைப்பு சார்ந்தே பதிலளிக்க முயல்கிறேன். வாழ்க்கை அனுபவங்களும் வாசிப்பும் தான் நமக்குள் ஒரு விஷயம் குறித்த கருத்து-கண்ணோட்டம் உருவாகத் துணைபுரிகின்றன. ஆனால், ஒரு படைப்பு உருவாக இவை போதுமானவை அல்ல. ஒரு படைப்பு உருவாக மேற்குறித்த இரண்டு அம்சங்களின் சில கீற்றுகள் ஒரு வினோத கலவையாக எழுத்தாளனின் மனதில் தோன்ற வேண்டும். அவ்வாறு திடீரெனத் தோன்றி மறையும் அந்தக் கணம்தான் ஒரு இலக்கியப் படைப்பு உருவாவதற்கான குறிப்பு என்று எடுத்துக் கொள்ளலாம்.

உதாரணமாக, ‘கண்ணாடி’ என்கிற தலைப்பில், 1979இல் நான் எழுதிய ஒரு கதையைப் பற்றிச் சொல்கிறேன். நான் கடைக்குச் செல்லும் வழியில், பாத்திரங்களுக்கு ஈயம் பூசிப் பிழைத்த, தெருவோரத்தில் வசித்த ஒரு தம்பதியினரைப் பார்க்க நேரிடும். பல நாட்கள் அவர்கள் வேலையின்மையாலும் பட்டினியாலும் அவதியுற்று, பயங்கரமாகச் சண்டையிட்டுக் கொள்வார்கள். அந்தப் பெண்ணின் கணவன் தெருவே வேடிக்கை பார்க்க அவளை மிகக் கொடூரமாக அடிப்பான். ஒருநாள் காலை அந்தப் பெண் தன்னிடம் இருந்த ஒரு சிறிய கண்ணாடித் துண்டின் உதவியுடன் தன் நெற்றியில் பொட்டிட்டுக் கொண்டிருந்தாள். அந்தக் கண்ணாடித் துண்டு மிக மிகச் சிறியது. அதாவது நெற்றி தெரிந்தால் உதடு தெரியாது, உதடு தெரிந்தால் மூக்கு மட்டும்தான் தெரியும். கண்களோ நெற்றியோ, முழு முகமோ தெரிய வாய்ப்பே இல்லை. அந்தப் பெண் தன் நெற்றியில் பொட்டிட்டுக் கொண்டிருந்த அந்தக் காட்சி ஆழமாக ஒரு சித்திரம் போல் என் மனதில் நிழலாடிக்கொண்டே இருந்தது. நமது ஆன்மிக, தத்துவ, சிந்தனை மரபுகள் அனைத்துமே நாம் வாழ்க்கையைச் சிதறல்களாக அல்லாமல் முழுமையாகப் பார்க்க கற்றுகொள்ள வேண்டும் என்றே வலியுறுத்துகின்றன. ஆனால், அவ்வாறு முழுமையாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் அந்த அனுபவம் மகிழ்ச்சிகரமானதாக இருக்குமா என்று ஒரு எண்ணம் மின்னல் போன்று என் மனதில் தோன்றியது. இந்த இழையைப் பின்பற்றிதான் நான் அந்தக் கதையை எழுதினேன்.

தன் கணவனிடம் பயங்கரமாக அடிவாங்கி சோர்ந்து படுத்திருந்த இவளை எழுப்பி தன் பங்களாவில் ஈயம் பூசுவதற்கு நிறைய பாத்திரங்கள் உள்ளன என்று கூறி ஒரு பணக்காரப் பெண் வந்து அழைத்துச் செல்கிறாள். பாத்திரங்களை எடுத்துவரச் செல்லும் இவள், அந்தப் பெரிய வீட்டின் பின்கட்டை அடைய, ஒரு சந்தின் வழியாக நடக்க ஆரம்பிக்கிறாள். அப்படி நடக்கும்போது சந்தைப் பார்த்த மாதிரி ஒரு அறை திறந்திருக்கிறது. அங்கு ஒரு முழுநீளக் கண்ணாடி பதித்த பீரோ உள்ளது. அதைக் கடந்து சென்ற இவள் ஏதோ நிழலாடியது போல் தோன்ற சற்றுப் பின்வாங்கி அந்த முழுநீளக் கண்ணாடியில் பிரதிபலித்த தன் உருவத்தைப் பார்த்துத் திகைத்து நின்றுவிடுகிறாள். அதுவரையிலான அவளது வாழ்க்கை முழுதும் அந்த ஒரு கணத்தில் திரைப்படம் போல் விரிந்து பின் சுருங்கிவிடுகிறது. இளமை தொலைந்த, வறுமை சிதைத்த தன் பரிதாபமான உருவத்தைப் பார்க்க பார்க்க அவளுக்கே அச்சமாக உள்ளது. எல்லாவற்றையும் பறிகொடுத்த பின்பும் அந்த உருவத்துக்குள்ளும் அதற்கு அப்பாலும் ஏதாவது மிஞ்சி இருக்குமா என்கிற மிரட்சியோடு நிலைகுலைந்து போகிறாள் அவள்.

மிக எளிய மனிதர்களின் வாழ்க்கையிலும் வாழ்க்கையின் ஆதாரமான கேள்விகளை எதிர்கொள்ளும் இதுபோன்ற தருணங்கள் நிச்சயம் இருக்கும். எளிமையானவர்கள் என்பதால் அவர்களை நுட்பமற்றவர்கள் என்று கருத இயலாது என்பதையும் இக்கதை கூற முற்படுகிறது. இக்கதை ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதோடு, கன்னடத்தில் குறும்படமாகவும் எடுக்கப்பட்டது.

“குஜராத்திகளை ப் பற்றிய என் கதைகளின் மூலம், நான் பிரதிபலிக்க விரும்பியது ‘இடம்பெயர்ந்த’ ஒரு சமூகத்தின் மதிப்பீடுகள், நம்பிக்கைகள், பதற்றங்கள், நெருக்கடிகள், ஏமாற்றங்கள் இவற்றைத்தான். அதே சமயம், எனது இத்தகைய படைப்புகள், குஜராத்திகளின் வாழ்வியலோடு மட்டும் சுருங்கிவிடாமல் அதற்கப்பாலும் மிக விரிவான ஒரு தளத்தில் பொருள்பட வேண்டுமென்பதில் எப்போதுமே நான் கவனமாக இருந்திருக்கிறேன்,” என்பது உங்கள் கூற்று. இடப்பெயர்வு – உள்ளூர் தொடங்கி உலகம் வரையிலும் இன்று ஓர் அரசியல் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது; போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் விளைவாக ‘இடப்பெயர்வு/புலம்பெயர் இலக்கியம்’ என்கிற இலக்கிய வகைமை இன்று பரவலாகியிருக்கிறது. உங்கள் படைப்புகளை ‘புலம்பெயர் இலக்கியம்’ என்று கூற முடியுமா? பொதுவாக இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

நான் அறிந்தவரையில் என் படைப்புகளை ‘புலம்பெயர்ந்தோர் இலக்கியம்’ என்று சற்றுத் தயக்கத்துடன்தான் வகைப்படுத்த முடியும். ஏனெனில், நாங்கள் இடம்பெயர்ந்து 150 ஆண்டுகள் ஆகிவிட்டன. பொதுவாக புலம்பெயர்ந்தோர்/இடம்பெயர்ந்தோர் உருவாக்கும் இலக்கியப் படைப்புகளின் உள்ளடக்கத்தை மூன்று பிரிவுகளாக இனம் காண முடியும்: ஒன்று, தங்கள் தாய்மண்ணின் நினைவுகள்-அனுபவங்கள்; இரண்டாவது, தாங்கள் இடம்பெயர்ந்து வந்துள்ள நிலத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதில் உள்ள அரசியல், பொருளாதார, பண்பாட்டு சவால்கள்; முன்றாவது, இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களின் வாழ்வியலோடு தாங்களும் ஒன்றிவிட்டதை விவரிக்கும் வகையிலான அனுபவங்கள். இந்த மூன்றாம் வகைப் படைப்புகள்தான் உண்மையில் நில, மொழி எல்லைகளைக் கடந்து பொருள்படக்கூடியவை. உள்ளூர் மக்களின் சிந்தையைக் கவரக்கூடியவை. நம்பிக்கை அளிக்கும் இத்தகைய படைப்புகளை, அதிகமும் என்னைப் போன்ற, மூன்றாம், நான்காம் தலைமுறை இடம்பெயர்ந்தோர்தான் எழுத நேரிடுகிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதுபோன்ற படைப்புகளுக்கான வாசகத்தளமும் அங்கீகாரமும் சீராகவோ பெரிய அளவிலோ இருப்பதில்லை.

எனவே, புலம்பெயர்ந்தோர்/இடம்பெயர்ந்தோரை முன்னிட்டு உருவாக்கப்படும் மிகையான அரசியல், சமூக நெருக்கடிகளை இலக்கிய படைப்புகள் மூலம் எதிர்கொள்வது மிகவும் கடினம். ஒரு கொந்தளிப்பான சூழ்நிலையில், எவ்வளவு பொறுப்பாகவும் நுட்பமாகவும் எழுதப்பட்டிருந்தாலும் சமூகத்தில் ஒரு சாதகமான தாக்கத்தையோ மனமாற்றத்தையோ ஏற்படுத்தும் ஆற்றல் இத்தகைய படைப்புகளுக்கு நிச்சயம் இருப்பதில்லை.

வதந்திகளை பரப்பி, போலியான நெருக்கடிகளை உருவாக்கும் அரசியல் நாணயமின்மைக்கு முன் இலக்கியம் தோற்றுப் போகவே நேரிடும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. எனவே ஒரு எழுத்தாளன், எழுத்தாளனாகச் செய்வதற்கு அதிகம் இல்லை. ஆனால், தனிமனிதனாகச் செய்வதற்கு ஏதாவது உண்டா என்று பார்க்க வேண்டும்.

‘தடம்’ சிறுகதை போலீஸ் என்கௌன்டரைப் பதிவுசெய்திருக்கிறது; ‘ஒரு குமாஸ்தாவின் கதை’ கோவை நிலவரத்தைப் பேசுகிறது. தமிழ் எழுத்தாளர்கள் சமகால அரசியல் நிகழ்வுகள் பற்றி நேரடியாகவும் படைப்பு சார்ந்தும் எந்த எதிர்வினையும் புரிவதில்லை (விதி விலக்குகள் உண்டு) என்கிற பொதுவான குற்றச்சாட்டு உண்டு. நீங்கள் எந்த உந்துதலில் இவற்றைக் கதைகளாக எழுதினீர்கள்? சமகால அரசியல் நிகழ்வுகள் (அல்லது சமகாலம்) குறித்த எழுத்தாளனின் கடப்பாடு என்ன?

தடம்: இச்சிறுகதை இலங்கையிலிருந்து வெளியாகிக்கொண்டிருந்த ‘அலை’ என்ற இதழுக்காக 1984ஆம் ஆண்டு எழுதினேன். எண்பதுகளின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் நிறைய என்கௌன்டர் மரணங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன. அதே போல், இலங்கையிலும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள் சிங்கள ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். இந்த இரண்டு சூழல்களின் துயரத்தைப் பிரதிபலிக்கக் கூடிய கதையாக இது அமைய வேண்டும் என்று கருதினேன். அந்தக் காலகட்டத்தில் ஈழத்து நண்பர்கள் மூலமும் தமிழ்நாட்டு முற்போக்கு இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் மூலமும் நான் பல தகவல்களை அறிய நேர்ந்தது. அதோடு அந்தச் சமயத்தில் நான் வாசிக்க நேர்ந்த புத்தகங்களின் தாக்கமும் என்னிடம் இருந்தது. பொதுவாக, இங்கு தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டவர்களுடைய தரப்பு வாதங்களை யாரும் செவிமடுப்பதில்லை. அவர்கள் ஏன் கொல்லப்படுகிறார்கள் என்பதும் தெரிவதில்லை.

ஈழத்திலும் இதே நிலைமைதான் நிலவியது.

அந்தச் சமயத்தில் என்கௌன்டர் மரணம் என்ற சொற்றொடரை முதல் முறையாகக் கேட்கும்/வாசிக்கும் எவருக்கும் அது அச்சத்தையும் வேதனையையும் அளிப்பதாகத்தான் இருந்தது. ஆனால், நாளடைவில் மிகவும் சகஜமான எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தாத ஒரு சொற்றொடராக பொது கதையாடலுக்குள் வந்துவிட்டது. அதனால் இச்சொற்றொடருக்கு பின்னால் உள்ள தீவிரத்தையும் பயங்கரத்தையும் உணர்ந்துகொள்ளக்கூடிய வகையில் இந்தக் கதையைக் கட்டமைத்தேன். ஒரு சமூக அக்கறை உள்ள தனிமனிதனைக் காவல்துறை என்ற நிறுவனம், தீவிரவாதி என்று குற்றம்சாட்டி, எப்படியெல்லாம் துன்புறுத்த முடியும், அவனது சுயத்தின், உடலின் கண்ணியத்தை அத்துமீறி எப்படி எல்லாம் பாழாக்கமுடியும் என்பதை அரசியல் விவாதங்களுக்குள் செல்லாமல் இக்கதையில் விளக்கியுள்ளேன். இந்தக் கதை இலங்கையில் வெளியானதால் இதற்கான பெரிய எதிர்வினைகள் ஏதும் இங்கு இருக்கவில்லை.

ஒரு குமாஸ்தாவின் கதை: தொண்ணூறுகளின் இறுதியில், கோவையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இக்கதையை எழுதினேன். மதசார்போ, அரசியல் சார்போ இல்லாத ஓர் ஏழை இஸ்லாமிய மனிதனின் ஒருநாள் வாழ்க்கையைக் கூறுகிறது இக்கதை. கதையின் இறுதியில் அவன் ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவன் என்பதாலேயே கும்பல் ஒன்றால் அடித்துக் கொல்லப்படுகிறான். இதில் பரிதாபம் என்னவென்றால், தான் எதற்காகத் தாக்கப்படுகிறோம் என்பதை புரிந்துகொள்ளாமலேயே அவன் இறந்துவிடுகிறான். இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரின் அனுபவத்தைத் தொகுத்து இக்கதையை உருவாக்கினேன். வரலாற்றுக் காலம்தொட்டே கலவரங்களின்போது மனிதர்கள் தனிமனிதர்கள் என்ற நிலையிலிருந்து தாழ்ந்து ஒரு குழுவின், ஒரு இனத்தின், ஒரு மதத்தின் தரப்பினராக மாறி, தட்டையான பிராணிகளாக இருந்துவந்திருக்கிறார்கள் என்பதை இக்கதை கோடிட்டுக் காட்டுகிறது.

தன்னிலை, படர்க்கை இரண்டையும் தவிர்த்து முன்னிலையில் முழுவதும் சொல்லப்பட்டுள்ளது இந்தக் கதையின் மற்றொரு முக்கிய அம்சம். அதாவது, இந்தக் கதையில் நீங்கள்தான் அந்த மனிதர், அதில் நடக்கும் ஒவ்வோன்றும் உங்களுக்குத்தான் நடக்கிறது. இந்த உத்தி ஒரு சிறுபான்மையினரின் வாழ்வியலையும் துயரத்தையும் மரணத்தையும்கூட வாசகர் அந்தப் பாத்திரமாகவே மாறி உணர்ந்துகொள்ளும்படி அமைத்துள்ளேன். இது ஒரு மதத்தின் சிறுபான்மையினரைக் குறித்த அச்சத்தையும் முன்-முடிவுகளையும் தகர்த்து அவர்களும் நம்மைப் போன்றவர்களே என்பதை வலியுறுத்துகிறது.

 என்னுடைய வருத்தம் என்னவென்றால், இவ்வளவு ஆண்டுகள் கழிந்த பின்னும் மேற்குறித்த இரண்டு கதைகளின் பொருத்தப்பாடு கூடிக்கொண்டே போகிறதே என்பதுதான்.

இன்றைய சூழ்நிலையில் சமகால அரசியல் நிகழ்வுகளுக்கு எழுத்தாளர்கள் படைப்புரீதியாக எதிர்வினை ஆற்றுவது மிகவும் முக்கியம் என்று நான் கருதுகிறேன். குறிப்பாக தொண்ணூறுகளுக்குப் பின்பான உலகமயமாக்கலும் பொருளாதார தாராளமயமாக்கலும் நமது சமூக ஏற்றத்தாழ்வுகளை முன்பைவிடவும் அதிகப்படுத்தியுள்ளன. ஒரு சமூகமாக நாம் சிறிது சிறிதாக நமது எல்லா அறங்களையும் இழந்து கொண்டிருக்கிறோம். அடிப்படை மனித விழுமியங்களுக்காகக் குரல் எழுப்புவதும் அரசியல்தான். அதை நாம் நேர்த்தியாகவும் புத்திசாலித்தனமாகவும் செய்ய வேண்டும்.

1991 பொருளாதார சீர்திருத்தத்துக்கு முந்தைய இந்தியச் சமூகம்; அதற்குப் பிறகான (முப்பது ஆண்டுகளில்) இந்தியச் சமூகம். 1970களில் எழுதத் தொடங்கியவர் என்கிற முறையில், இந்த இரண்டு நிலைகளை, இலக்கியத்தின் வழி நின்று எப்படி மதிப்பிடுவீர்கள்?

இந்திய அளவில் நமது சமூக-பண்பாட்டு அரசியல் நிலைகளில் எழுபதுகளுகளுக்கும் தொண்ணூறுகளுக்கும் இடையே பல ஆதாரமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக நான் கருதுகிறேன்.

விடுதலைக்குப் பின்பான நமது சமூக-பண்பாட்டு வாழ்க்கையானது கல்வி, கேளிக்கை சாதனங்கள், திரைப்படம், பத்திரிக்கைகள், அரசியல் இயக்கங்கள் ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்டு, அறுபதுகளின் இறுதிவரையில் அதிக மாற்றங்கள் இன்றி ஒரே நேர்கோட்டில் பயணித்துக் கொண்டிருந்தது என்று கூறலாம். ஆனால், எழுபதுகளின் தொடக்கத்திலிருந்து நவீனத்துவத்தின் சாரல் நம் மீது வீசத் தொடங்கியதையும், அதன் சாத்தியகூறுகளையும் கலைஞர்களும் இலக்கியவாதிகளும் உணர்ந்துகொண்டார்கள். விளைவாக, அநேகமாக எல்லா கலைத் துறைகளும் ஒருவித மறுமலர்ச்சியை நோக்கி நகரத் தொடங்கின.

நவீன ஓவியம், நவீன நாடகம், மாற்று சினிமா, வீதி நாடகம், திரைப்படச் சங்கங்கள், சிறுபத்திரிகைகள், சிறு பதிப்பகங்கள் என்று இந்த அக்கறைகள் விரிவடைந்து முற்றிலும் புதிய முயற்சிகளுக்கு வித்திட்டன. சமூக, பண்பாட்டு, அரசியல் பிரக்ஞை கொண்ட, தனித்துவமும் படைப்பாற்றலும் மிக்க தனிமனிதர்களின் ஒருங்கிணைப்பில், எல்லா துறைகளிலும் (அவர்களுக்குள் நிலவிய சிறு முரண்களை அதிகம் பொருட்படுத்தாமல்) புதிய பண்பாட்டுத் தளங்கள் உருக்கொள்ள துவங்கின. இதன் நீட்சியாக, அறிவுபூர்வமான, அழகியல் ரசனை மிகுந்த ஐனநாயக உணர்வுகள் மிக்க துடிப்பான சிறுபான்மையினரை உள்ளடக்கிய ஒரு பண்பாட்டுக் களம் உருவாக ஆரம்பித்தது. (நெருக்கடிநிலையை தவிர்த்துவிட்டு யோசித்தால், எழுபதுகளை உற்சாகமான காலகட்டம் என்றே கூறலாம்).

அக்காலகட்டத்துத் தமிழ்ச் சூழலிலும் இப்போக்கு சிறப்பாகப் பிரதிபலித்தது. ‘எழுத்து’, ‘வாசகர் வட்டம்’, ‘க்ரியா’, ‘அன்னம்’, ‘கூத்துப்பட்டறை’, ‘வீதி நாடக இயக்கம்’, ‘பரீக்ஷா’, ‘கணையாழி’, ‘கசடதபற’, ‘நடை’, ‘அஃ’, ‘வானம்பாடி’, ‘இலக்கியச் சங்கம்’, ‘இலக்கியச் சிந்தனை’ ஆகிய அமைப்புகள் தோன்றி, ஆரோக்கியமான தாக்கத்தைச் செலுத்தத் தொடங்கின. அதோடு, அம்பை, அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, ந.முத்துசாமி, தி.ஜானகிராமன், சா.கந்தசாமி, வண்ணநிலவன், வண்ணதாசன், பிரமிள், ஞானக்கூத்தன், எஸ்.வைத்தீஸ்வரன், எஸ்.வி.ராஜதுரை, வெங்கட் சாமிநாதன் ஆகியோர் தங்களது சிறந்த படைப்பாற்றலை வெளிப்படுத்திய காலமும் இதுதான்.

ஆனால், இத்தகைய முன்னெடுப்புகளுக்கு ஆதாரமாக விளங்கியது, தங்களது சமூகப் பங்களிப்பை அங்கீகரிக்க கூடிய, பொருட்படுத்த கூடிய ஒரு ஜனநாயக கட்டமைப்பும் அரசியல் வெளியும் நாட்டில் உள்ளது என்ற நம்பிக்கைதான். தொண்ணூறுகளில் இந்த நிலை முற்றிலும் மாற துவங்கியது.

அரசின் தாரளமய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக உலகமயமாக்கத்தின் தொடக்கத்துக்கு வித்திட்ட ‘காட்’ ஒப்பந்தம், சோவியத் ஒன்றியத்தின் சிதைவு, மண்டல் கமிஷன் அறிக்கைக்கு எதிரான போராட்டம், பாபர் மசூதி இடிப்பு ஆகிய நிகழ்வுகள் மனசாட்சியுள்ள மனிதர்களிடையே பெருத்த அவநம்பிக்கையையும், குழப்பத்தையும் விளைவித்தன.

திடீ‌ரென்று, தனிமனிதர்கள் ஒரு குழுவின், ஒரு தரப்பின் பிரதிநிதிகளாக அடையாளப்படுத்தப்பட்டு தங்களது சுயத்தை இழக்க வற்புறுத்தப்பட்டார்கள். கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஜனநாயகவாதிகள், எளிய மனிதர்கள் என்று எல்லோரும் முடக்கப்பட்டு, அவர்கள் பொதுசமூக வெளியிலிருந்து அப்பட்டமாக அந்நியபடுத்தப்பட்டார்கள்.

இதில் மேலும் அபத்தம் என்னவென்றால், ஒருபுறம் தனிமனிதர்களை அர்த்தமற்ற கும்பலாக மாற்றிவிட்டு, மறுபுறம் எல்லா சமூக-பொருளாதார நெருக்கடிகளுக்கும் அதே தனிமனிதர்கள் தான் காரணம் என்று கூறப்பட்டது. சாதாரண மனிதர்கள் நிராதரவாக நிற்க, மேலும் மேலும் சலுகைகள் வழங்கப்பட்டு நிறுவனங்கள் தான் காப்பாற்றப்படுகின்றன. (நண்பர் ராஜன் குறை அவர்களிடமிருந்து ஒரு வார்த்தையைக் கடன் வாங்கிக் கூறுவதென்றால “‘முதலீட்டிய’த்தின் கரங்கள் மிக கொடூரமானவை. அவை பிரதமர் முதல் சாதாரண மனிதன் வரை – கலைஞர்கள் உட்பட – யாரையும் விட்டுவைப்பதில்லை!”

இலக்கிய உலகில், தலித் இலக்கியத்தின் எழுச்சியும், பெரியாரின் மீள்கண்டுபிடிப்பும் தவிர நாம் பெருமைகொள்ளதக்க நிகழ்வுகள் அதிகமில்லை. பின்நவீனத்துவம், உலகமயமாக்கல் ஆகிய சொற்களைக் கேடயமாக்கி இலக்கிய மற்றும் தனிமனித நாணயத்தைக் கேலிபொருளாக்கியதைச் சிலாகிக்க முடியுமா என்று தெரியவில்லை.

முன்பு எப்போதையும்விட அதிகம் தேவைப்படும் அரசியல் உணர்வோடும் மனிதாபிமானத்தோடும் பரிமளிக்கவேண்டிய நம் இலக்கியப் படைப்புகள், உள்ளடக்கத்தின் கூர்மையின்மையை எதிர்கொள்ள முடியாமல் உருவம் மற்றும் மொழி சார்ந்த அழகியல் சாகசங்களில் ஈடுபட நிர்பந்திக்கபடுன்றன. நமக்கே தெரியாமல் நாம் சிறிது சிறிதாக ‘முதலீட்டிய’த்தின் கூடாரத்துக்குள் திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் நிதர்சனம்.

Hemingway கூறிய “One true sentence”-ஐ நம்மால் எழுத முடியுமா என்று சமீப நாட்களில் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

உங்கள் சிறுகதைள் பலவும் திரை வடிவம் பெற்றிருக்கின்றன [அவை உங்களுக்குத் திருப்தி அளித்தனவா?]. சிறுகதை/நாவல் என படைப்புகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்பட உருவாக்கம் தமிழ் சினிமாவில் பரவலாகிக்கொண்டிருக்கிறது. படைப்பு ஒன்று திரை வடிவம் பெறுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்? இதன் சாத்தியங்கள், சவால்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

இதுவரை எனது நான்கு சிறுகதைகள் திரைவடிவம் பெற்றிருக்கின்றன (‘கடிதம்’ [1994] – ஜேடி ஜெரி; ‘கண்ணாடி’ [1997] – பதி ஐயர்; ‘திருமதி ஜேம்ஸ் என்ன செய்ய வேண்டும்’ (நிகழ மறுத்த அற்புதம்) [2007] – ஞாநி; ‘ஒரு குமாஸ்தாவின் கதை’ (நசீர்) [2020] – அருண் கார்த்திக். இந்த நான்குமே சிறப்பான முயற்சிகள் என்றுதான் கூறவேண்டும். திரை என்பது இலக்கியத்திலிருந்து மிகவும் மாறுபட்ட ஊடகம். எனவே அதைக் காட்சிப்படுத்தும்போது ஒருசில மாற்றங்கள் நிகழ்வதைத் தவிர்க்க முடியாது. நான் அடிப்படையில், பிரபலமடையாத ஒரு சிறுபத்திரிக்கை எழுத்தாளன். வெகுஜன இதழ்களில் எழுதுவதை எப்போதுமே தவிர்த்து வந்துள்ளேன். எனவே என் கதைகளுக்குத் திரை வடிவம் கொடுக்க முன்வந்தவர்கள் என் கதைகளில் வெளிப்படும் அக்கறைகளைப் பகிர்ந்துகொள்பவர்களாக லாபநோக்கமற்றவர்களாகத்தான் இருந்தார்கள். மேலும் அவர்கள் தங்கள் துறையில் சிறந்த படைப்பாளுமைகளாகவும் இருந்தார்கள். எனவே, திரை வடிவத்தில் என் கதையின் நுட்பமான கூறுகள் எதையும் இழந்துவிடக்கூடாது என்பதில் அவர்கள் என்னைவிட மிகுந்த கவனம் எடுத்துக்கொண்டார்கள். அதனால் என் கதைகளின் திரை வடிவம் குறித்து அதிருப்தி கொள்ள ஏதுமில்லை. ‘நசீர்’ படத்தை இயக்கிய அருண் கார்த்திக், கோவை இஸ்லாமியர்களின் வாழ்க்கையைத் துல்லியமாகப் பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக இஸ்லாமியர் வாழ்ந்த பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கேயே பல மாதங்கள் தங்கியிருந்தார். இதன் பயனாக அந்தப் படத்தின் காட்சிகள் மிகுந்த நம்பகத்தன்மையுடன் அமைந்தன. பல சர்வதேச விருதுகளையும் இத்திரைப்படம் பெற்றது.

தமிழ் இலக்கியப் படைப்புகள் திரைப்படங்களாக உருவாவது நிச்சயம் வரவேற்கத்தக்கது. ஆனால், பல எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளின் திரை வடிவம் குறித்து அதிருப்தி கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். என்னைக் கேட்டால் நீங்கள் பெரிய இயக்குநரிடம் சென்றால், பெரிய சமரசங்களை செய்யத்தான் வேண்டியிருக்கும். இது போன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ளுபவர்களுக்கு ஒரு அமெரிக்கத் திரைப்படத்தின் தலைப்பைத்தான் ஆலோசனையாகச் சொல்வேன்: ‘Take your money and run’.

கலிஃபோர்னியா, சிகாகோ, யேல், ஹார்வர்டு, பல்கலைக்கழக அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?

தமிழ் கற்பிக்கப்படும் அயல்நாட்டுப் பல்கலைக்கழக நூலகங்களுக்கு, சிறந்த தற்கால தமிழ நூல்களைப் பரிந்துரைக்கும் பணியில் பல வருடங்களாக நான் ஈடுபட்டிருக்கிறேன். எனவே அங்கிருந்த தமிழ்ப் பேராசிரியர்களோடு எனக்கு நல்ல பரிச்சயம் இருந்தது. அவ்வகையில் தொண்ணூறுகளின் இறுதியில் கலிஃபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்டின் அறிமுகமும் கிடைத்தது. அவர்தான் என்னை முதல் முதலாக 2000ஆம் ஆண்டு தன் மாணவர்களிடையே தற்காலத் தமிழ் இலக்கியம் குறித்துப் பேச அழைத்தார்.

அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் கற்பிக்கும் பேராசிரியர்கள் பெரும்பாலும் (எல்லோருமே என்றுகூட சொல்லலாம்) பழந்தமிழ் இலக்கியங்களில் மட்டுமே பயிற்சி பெற்றவர்கள். அவர்கள் உருவாக்கும் பாடத்திட்டங்களில் சங்க இலக்கியப் பகுதிகள்தான் இடம்பெறும். தற்காலத் தமிழ் இலக்கியம் குறித்து அவர்கள் அதிகம் அறிந்திருக்கவில்லை.

George Hart

பேராசிரியர் ஹார்ட் என்னை அழைத்தபோதுபோது, அவர் விரும்பியவாறு, சுமார் 120 ஆண்டு நவீன தமிழ் இலக்கியப் போக்குகள் குறித்து அந்த மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் ஒரு சிறிய பாடத்திட்டத்தை வடிவமைத்து ஒருசில வாரங்கள் பேசினேன்.

தொடக்க காலப் பத்திரிகைகளின் வரலாறு, தமிழ் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், விமர்சனம், வெகுஜன எழுத்து, பத்திரிகைகள், சிற்றிதழ்கள் என்று (அதாவது வேதநாயகம் பிள்ளையிலிருந்து தொடங்கி மனுஷ்யப்புத்திரன் எழுத்துக்கள் வரை) பலவற்றையும் குறித்து ஒரு சிறிய, ஆனால், பாரபட்சமற்ற அறிமுகத்தைச் செய்ய வாய்ப்பு கிடைத்தது.

கலிஃபோர்னியா தவிர மற்ற பல்கலைகழகங்களில் வெவ்வேறு சமயங்களில் ஒருசில மணிநேரங்களே பேசி இருக்கிறேன். பெரும்பாலும் தமிழ்ச் சிறுகதை குறித்துதான்.

நவீன தமிழ் இலக்கியம் குறித்து அவர்களின் பொதுவான புரிதல் என்ன?

நான் ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகள், தற்காலத் தமிழ் இலக்கியத்தோடு (ஒரு வாசகனாக, எழுத்தாளனாக, புத்தக விற்பனையாளனாக, மொழிபெயர்ப்பாளனாக) பல நிலைகளில் தொடர்புகொண்டவனாக இருந்திருக்கிறேன். எனது அனுபவம் என்னவென்றால், பொதுவாக தமிழைச் சங்க இலக்கியத்தோடும் வெகுஜன இலக்கியத்தோடு மட்டுமே அடையாளப்படுத்தும் அல்லது புரிந்துகொள்ளும் போக்குதான் பெரும்பாலும் காணக் கிடைக்கிறது. ஆனால், உண்மையில் சங்க இலக்கியம் – வெகுஜனம் இலக்கியம் இவை இரண்டுக்கும் அப்பாற்பட்டு மூன்றாவதாக, பாரதி புதுமைப்பித்தன் தொடங்கி இன்றுவரையில் வளர்ந்துவரும் ஒரு சீரிய, துடிப்பான நவீன இலக்கிய மரபு ஒன்று தமிழில் உள்ளது என்பது குறித்த புரிதல் குறைவாகவே உள்ளது. கல்லூரி அளவில் தமிழ் இலக்கியத்தைப் பாடமாகக் கொண்டு படிக்கும் மாணவர்களிடையேகூட இந்தத் தற்கால மரபின் வீச்சும் பரிமாணமும் முழுமையாக உணரப்படாமலேயே இருந்துவருகிறது.

தமிழ்நாட்டுக்கு வெளியேயும் மற்ற நாடுகளிலும்கூட இதே நிலை நீடிப்பதில் வியப்படைய ஒன்றுமில்லை. எனவே இந்தத் தற்கால இலக்கிய மரபின் சிறப்பையும் மேன்மையையும் தொடர்ந்து நிறுவ வேண்டிய அவசியம் உள்ளது.

நவீன தமிழ் இலக்கியப் படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் சீரான இடைவெளியிலோ, எண்ணிக்கையிலோ வருவதில்லை என்பதால் இப்பணியின் முக்கியத்துவத்தை இன்னும் கூர்மையாக நாம் பரிசீலிக்க வேண்டும்.

தவிர இதுவரை மொழிபெயர்க்கப்பட்ட எழுத்தாளர்களோடு, மொழிபெயர்க்கப்படாத பல எழுத்தாளர்களின் படைப்புகளும் கவனம்பெறத்தக்க வகையில் உள்ளன. இது குறித்தும் ஏதாவது செய்யப்பட வேண்டும்.

அங்கு ஏற்பட்ட அனுபவங்களின் பிண்ணனியில் தமிழ் இலக்கியச் சூழலை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

தமிழ்ச் சூழலோடு ஒப்பிடும்போது அங்குள்ள இலக்கியப் பரப்பு மிக மிக விசாலமானது. பல்வேறு மாகாணங்களில் இருந்து ஏராளமான இதழ்கள் வெளியாகின்றன. இங்குள்ளது போல் ஒரு குறிப்பிட்ட இலக்கிய வெளியைப் பலரும் பங்கிட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல ஒரு சில இதழ்களையும், அவற்றின் இலக்கிய கண்ணோட்டத்தையும் சார்ந்து இயங்க வேண்டிய கட்டாயம் அங்குள்ள இலக்கிய எழுத்தாளர்களுக்கு இல்லை. எந்த ஒரு இலக்கியக் குழுவைச் சாராமலும் அதற்கு இணங்காமலும்கூட ஒரு எழுத்தாளன் தன் இலக்கிய ஆளுமையை நிறுவிக்கொள்ளும் வாய்ப்பும், சுதந்திரமும் அங்கு உள்ளது. இந்தியாவின் எல்லா மாநில மொழிகளின் இலக்கியச் சூழல்கள் ஒரே மாதிரியாகத்தான் இயங்க வேண்டி உள்ளது. இவை பெரும்பாலும் ஒரு அன்னியோன்யமான குடும்பத்தைப் போலவே செயல்படும் நிலையில் உள்ளன. இதன் காரணமாகவே இதற்குள் பல்வேறு நெருக்கடிகள், கோபதாபங்கள், தோழமைகள், சர்ச்சைகள். ஆனால், அங்கு சமகால எழுத்தாளர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வதுகூட சற்று அபூர்வம்தான். எனவே, தமிழ்ச் சூழல் முற்றிலும் வேறானதுதான் என்றாலும் ஒருவகையில் சுவாரஸ்யமானதும்தான்.

உங்களுக்கு எப்படிப்பட்ட கனவுகள் வரும்?

என் பதில் சற்று மிகையாகவும் வினோதமாகவும் தோன்றக்கூடும். ஆனால், அதுதான் உண்மை. என் மனம் வாசிப்பின் பக்கம் திரும்பியதிலிருந்தே புத்தகங்களும் பத்திரிகைகளும்தான் இன்றுவரை கனவில் வருகின்றன. எல்லாமே தமிழ்தான். பல சமயங்களில் சிறுபத்திரிகைகளின் இன்னும் வெளியாகாத அடுத்தடுத்த இதழ்கள்கூட என் கனவில் வந்துள்ளன. இதைப் பற்றி நான் ஒருமுறை சு.ரா.-விடம் சொன்னபோது, “அடுத்த முறை கனவு வரும்போது அந்தச் சிற்றிதழில் என் கதை வெளியாகியிருக்கிறதா என்று பார்த்துச் சொல். நான் இனி எழுத வேண்டிய கதைகளின் பட்டியலில் அதையும் சேர்த்துக் கொள்கிறேன்” என்று கேலி செய்தார். ஆனால், கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் புத்தகங்களோடு வாழ்ந்ததால் அது என் ஆழ்மனதுக்குள் பதிந்து கனவுகளாகத் தோன்றுகின்றன என்று நினைக்கிறேன்.

தமிழ் இலக்கிய உலகில் உங்கள் எங்கு இருத்திக் கொள்வீர்கள்?

கிட்டத்தட்ட 3,000 ஆண்டுகள் இலக்கிய வரலாறு கொண்ட தமிழ் மொழியில் நவீன தமிழ் இலக்கிய மரபும் அடக்கம் என்றே கருதுகிறேன். அதில் என் படைப்புகளின் இலக்கியத் திண்மைக்கு ஏற்ப எனக்குரிய இடம் ஒன்று, அது எவ்வளவு சிறியதாக இருப்பினும் நிச்சயம் இருந்தே இருக்கும் என்று நம்புகிறேன். அதே சமயம் அந்த குறிப்பிட்ட இடத்தைக் கோரும்/நிர்ணயிக்கும் உரிமை எனக்கில்லை என்பதையும் உணர்ந்திருக்கிறேன்

உங்கள் வாழ்க்கைச் சூழலின் பின்னணியில் உங்களின் அடையாளம் (identity) என்பதை நீங்கள் எப்படி வரையறுப்பீர்கள்?

“தமிழ் மீது, குறிப்பாக தற்காலத் தமிழ் இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டு, அதன் வளர்ச்சிக்கும், பரவலுக்கும் தன்னால் இயன்ற பங்களிப்பை செய்த ஒரு ‘தமிழ் எழுத்தாளன்’ என்பதற்கு மேல் வேறு எந்த ஒரு விசேஷமான அடையாளத்துக்கும் நான் தகுதி படைத்தவன் அல்ல!

அலைக்காக கரையும் ஏங்குவதில்லை. கரைக்காக அலையும் எழுவதில்லை… ஆனால், தொடுவானத்தின் பேரழகை தினம் தினம் இவைதான் சாத்தியமாக்குகின்றன!

(‘இந்து தமிழ் திசை’ தீபாவளி மலர் 2023இல் வெளியான பேட்டியின் முழுமையான வடிவம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.