பருத்திப்பூ

முனியாண்டி சேர்வை தன்னுடைய நண்பரான சாலப்பட்டி ராசுவிடம், “நானும் கவனிச்சு பாத்திட்டேன்பா. அஞ்சு தலை ஒண்ணா சேந்துருது. ஆனா நாலு மொலை என்னைக்குமே சேர மாட்டீங்குது” என்றார் காதைக் கோழி இறகை வைத்துச் சுழற்றிக் கிண்டியபடி. “புரியலையே நீ சொல்ற பக்குவம்” என்றார் ராசு. “அதில்லப்பா ஐஞ்சு ஆம்பளையாளுக கடைசி வரை ஒண்ணா இருந்துருவாங்க. ரெண்டு பொம்பளைக ஒண்ணாவே சேர மாட்டாங்க. அதைச் சொன்னேன்” என்று சொல்லிவிட்டு, இது தெரியாதா என்கிற மாதிரி ஏளனமாகப் பார்த்தார் முனியாண்டி. அவருக்குத் தெரியாததா? வாழ்வில் அதில்தானே கட்டி உருண்டு கொண்டிருக்கிறார்? “அதெல்லாம் வாங்கி வர்ற வரம்ப்பா” என்றார் ராசு.

முனியாண்டி யோசித்துப் பார்த்தார். அவருடையது பொங்கு கரிசல் காடு. ஒருகாலத்தில் எப்பேர்ப்பட்ட பேர் வாங்கியது. செங்காட்டுக்காரனுக்குப் பெண் தந்தால், தண்ணீர் சுமந்து ஊற்ற முடியாது என்று சொல்லி அந்தக் காலத்தில் மறுத்து விடுவார்கள். கரிசல்காட்டுக்காரனாகப் பார்த்துத்தான் பெண்ணை ஒப்படைப்பார்கள். செங்காடு ரத்தம் குடிப்பதைப் போல நீரை உடனடியாக உறிஞ்சிக் குடித்து முடித்துப் பின் காய்ந்தும் விடும். இன்றைக்கு மழை அடித்துப் பெய்தால்கூட நாளைக்கு கட்டாம்தரையைப் போலக் காட்சியளிக்கும் செங்காடு. கரிசல்தான் அதை உறிஞ்சி உள்ளுக்குள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும். அதனாலேயே கரிசல் காட்டுக்காரனுக்குப் பெண் கொடுக்கப் போட்டியே நடக்கும்.

அவருடைய இந்தக் காலத்தை யோசித்துப் பார்த்தார். ஆங்காங்கே வீட்டுமனை என வருகையில் செங்காட்டிற்குத்தான் மதிப்பு. கரிசல் காட்டில் கட்டிடம் கட்டமுடியாது என்று அதைக் கைவிட்டனர். ஒரேடியாக வாழ்க்கைதான் எப்படித் தலைகீழாக மாறிவிட்டது? என யோசித்தார் முனியாண்டி. தன்னோடு செங்காடு வைத்திருந்தவர்கள் எல்லாம் நல்ல விலைக்கு விற்று கார், வீடு என்று வளர்ந்து விட்டார்கள். முனியாண்டியின் கரிசல்நிலம் ஊருக்குள்ளே மூன்று மைல்தள்ளி இருக்கிறது. விதைக்க வேண்டும் என்று விருப்பம் இருப்பவர்கள் மட்டுமே அங்கு பூமியை வாங்கிக் கொண்டிருந்தனர். செங்காடு விலைக்கெல்லாம் அது போக இன்னும் முப்பது வருடமாவது ஆகும் என நினைத்துக் கொண்டார் முனியாண்டி.

ஒருகாலத்தில் பேர்பெற்ற கரிசல் காட்டு விவசாயியாக முனியாண்டி இருந்த போது தாளக்குளத்தில் இருந்து, ஆதரவு எனப் பெற்றோர் இல்லாத அவருக்குப் பெண் தர முன்வந்தார்கள். ஐந்து மக்களைப் பெற்ற வீடு. மக்காச் சோளமும் சூரியகாந்தியும் என மாறிமாறி நிலத்தில் விதைத்துக் கொண்டு இருக்கிற முனியாண்டிக்கு, அத்தனை நல்லபேர் இருந்தது விவசாயிகளிடத்தில். “ஆளு நல்ல உழைப்பாளி. காடே கதின்னு கெடப்பான். நம்பிக் குடுக்கலாம். பிள்ளைக்கும் வீட்டில எந்த பிக்கல் பிடுங்கலுமில்லை” என்று பெண்வீட்டில் சொன்னார்கள்.

பாப்பாத்தியைப் பெண்கேட்க அவருடைய ஊரில் இருந்து மாட்டுவண்டி கட்டிக் கொண்டு  சொந்தக்காரர்கள் எல்லோரும் கிளம்பிப் போனார்கள். சம்பிரதாயத்திற்குத்தான் போனார்கள். அதற்கு முன்னமே பாப்பாத்தியைக் கட்டிக் கொள்வது என முனியாண்டி முடிவு எடுத்து வைத்திருந்தார். காடுகரையில் அவரோடு பாடுபட ஒரு ஆள் இருந்தால், நன்றாக இருக்கும் என்று தோன்றியது. சமையல் உட்பட எல்லா வேலைகளையும் அதுவரை தனியாகவே செய்து அயர்ந்தும் விட்டார்.

அவர்களுடையதுமே தாயில்லாவிட்டாலும் பெரிய குடும்பம். அடுத்த அறுப்பு முடிந்ததும் கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்தார்கள். அந்த வருடம் சூரியகாந்தி முனியாண்டிக்கு நன்றாகக் கைகொடுத்தது. பருவம் தப்பாத மழையும் குளிரும் இருந்ததால் பூத்துக் குலுங்கி விட்டது. கல்யாணச் செலவுகளுக்கு யாரிடமும் போய் நிற்கத் தேவையில்லை. முனியாண்டிக்கு என எல்லோரும் உறுத்தாக நின்று தடபுடலாகவே எடுத்துச் செய்தார்கள். வந்தவர்களுக்கு எல்லாம் வயிராற அரிசிச் சோறும் குழம்பும் போட்டார்கள்.

பாப்பாத்தி கொஞ்சம் தடித்துதான் இருந்தாள் என்றாலும், முதல் ராத்திரி முனியாண்டிக்கு மறக்க முடியாததாக இருந்தது. மறுநாள் காலையில் தண்ணீர்கட்டப் போகச் சீக்கிரமே எழுந்து விட்டார். மண்வெட்டியை எடுத்து வைத்துக் கிளம்புகிற அவசரத்தில் இருந்த முனியாண்டிக்கு, அப்போதும் குப்புறப்படுத்துத் தூங்கும் பாப்பாத்தியைக் கண்டு சந்தேகம் வந்தது. காடுகழனிக்கான பெண்ணா அவள்? திரும்பி வந்து பேசிக் கொள்ளலாம் என கிளம்பிப் போனார்.

இலையில் சோறு வைத்து நல்லெண்ணை மிதக்கிற கத்தரிக்காய்ப் புளிங்குளம்பு விட்டாள் பாப்பாத்தி. அந்தச் சுவையில் சொக்கிப் போய்விட்டார் முனியாண்டி. “ஏயாத்தா இந்த மாதிரி ருசியை என் வாழ்நாள்ள தின்னதே இல்லையே? குழம்பைத் தனியா குடிக்கலாம் போல இருக்கு” என்றார். அன்றைக்கு இருமடங்கு சாப்பிட்டு விட்டு, கயிற்றுக் கட்டிலைத் தூக்கிக் கொண்டு வேப்பரமர நிழலடிக்குப் போனார். அமைதியாய்ப் பல்லைக் குத்தியபடி அமர்ந்து யோசித்தார். அவருக்கு நன்றாகப் புரிந்துவிட்டது.

பாப்பாத்திக்குச் சமையல் மட்டுமே நன்றாக வருகிறது. மற்ற சோலிகளுக்கெல்லாம் அவள் லாயக்குப்பட்டு வர மாட்டாள். சீமையில் வளர்க்கிற மாதிரி வளர்த்திருப்பார்கள் போல. அவளுக்கும் சேர்ந்து காட்டில் தான் உழைத்துக் கொள்ளலாம் என முடிவிற்கு வந்தார். அதற்கப்புறம் அதுகுறித்து ஒரு சொல் அவர் வாயில் இருந்து வரவில்லை. பாப்பாத்தி வீட்டில் இருக்கிற மாடுகளுக்கு எல்லாம் தண்ணீர் காட்டி, சாணத்தைச் சுத்தம் செய்தெல்லாம் வைத்து விடுவாள். ஆனால் கரிசல் காட்டிற்கு உழைக்க வர மாட்டாள்.

அவள் வீட்டைவிட்டே வெளியேறப் பிரயத்தனம் இல்லாதவளாகவும் இருந்தாள். முனியாண்டி வேலை அழுத்தத்தில் இருந்தார். அவசரப்பட்டு விட்டோமோ என்றுகூடத் தோன்றியது அவருக்கு. ஆனால் மற்ற காரியங்களில் நீக்குப் போக்காகவே இருந்தாள். சொகுசு கண்டவள் என்று மட்டும் நினைத்துக் கொண்டார். யாரிடமும் அதுகுறித்து எல்லாம் வாய்திறந்தே பேசமாட்டார். “என்ன முனியாண்டி உன் பொண்டாட்டி கவர்மெண்ட் வேலைக்கு மட்டும்தான் போவாளாமாம்” என்றார் முனியாண்டியின் சித்தி. “ஏங்க சித்தி. நாக்குக்கு செத்து கெடந்தேன். இப்ப வயிராற சாப்பிடறேன். அது போதாதா? எந்த வேலையா இருந்தா என்ன? அதை ரசிச்சு செஞ்சா பார்க்கவே சந்தோஷமாத்தானே இருக்கு? அவ பாட்டுக்கு இருந்துக்கட்டும்” என்று பதில் சொன்னார் முனியாண்டி.

பாப்பாத்தியிடம் கதையாடக்கூட யாராலும் போக முடியவில்லை. அவளுக்கு வீடே கதி என்றாகிப் போய்விட்டது. வெளியில் வந்து அவளுமே யாருடனும் உறவாடவும் விரும்பவும் இல்லை. எல்லோரும் அவரவர் வேலையில் இருந்தார்கள். ஒருநாள் அதிகாலை காட்டிற்குக் கிளம்ப சட்டையை மாட்டி முனியாண்டி நின்ற போது, வாசலில் மாசுமரு இல்லாத வெள்ளை மாட்டோடு ஒரு பெண் நிற்பதைப் பார்த்தார். கொஞ்ச நிதானத்திற்குப் பிறகுதான் அவளை அடையாளமும் கண்டார். பாப்பாத்தியின் அக்காள் காந்திமதி.

அவள் ஏன் இந்தக் கருக்கலில் மாட்டைக் கையில் பிடித்துக் கொண்டு இங்கே வந்து நிற்க வேண்டும்? அவர் தன்னையறியாமல், “ஏய் பாப்பாத்தி. இங்க வந்து என்னன்னு பாரு” எனக் கூச்சலிட்டார். படுக்கையில் இருந்து எழுந்து அவசரகதியில் ஓடிவந்தாள் பாப்பாத்தி. படலைத் திறந்தபோது காந்திமதி உள்ளே வந்தாள். முனியாண்டி வெளியே கிளம்பிப் போனார்.

திரும்பி வந்து அவர் பார்த்த போது, வீட்டிற்குத் தெற்காக இருந்த இன்னொரு குடிசையில் காந்திமதி அமர்ந்து வெங்காயம் உரித்துக் கொண்டிருந்தாள். பாப்பாத்தியிடம் போய் கேள்வியோடு நின்ற போது, “இங்கயே இன்னொரு சீவனா இருந்துட்டு போகட்டும்” என்றாள். அதற்குப் பிறகு அதுபற்றியும் ஒரு வார்த்தைகூடக் கேட்டதில்லை முனியாண்டி. யாரும் எதையும் பேசிக் கொள்ளவே இல்லை. அதுபாட்டிற்கு நகர்ந்தது வாழ்வு.

வந்ததில் இருந்தே கவனித்துப் பார்த்தார் முனியாண்டி. சகோதரிகள் இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை. அவள் குழம்பு வைக்க வேலையை ஆரம்பித்தால், இவள் வெங்காயம் பூண்டு உரிக்க ஆரம்பிப்பாள். இருவரும் தூரத்தில் நின்று பார்த்துக் கொள்வார்கள். ஆனால் நெருங்கிப் போய்ப் பேசுவதே இல்லை. அது என்னவிதமான உறவு என்கிற குழப்பம்தான் வந்தது முனியாண்டிக்கு. சின்ன வயதில் சண்டையிட்டு ஏதாவது ஆறாத காயத்தை உள்வாங்கி வைத்து இருக்கிறார்களா? இந்த வயதில் பழையதையா தூக்கிச் சுமப்பார்கள்? அதுவுமே தெரியவில்லை முனியாண்டிக்கு. இது ஒருவகையான பெறப்புகள் என்கிற முடிவிற்கு வந்தும் சேர்ந்து விட்டார்.

ஏதோ ஒரு வரப்பை வெட்டி அதன் வழியாகத் தண்ணீரைப் பாய்ச்சித் தன் நிலத்தில் விட்டுவிட்டதாக உணர்ந்தார் முனியாண்டி. ஆரம்பத்தில் அவள்மீது விலக்கம் இருந்தது அவருக்கு. “ரெண்டு பொம்பளைகளுமே உழைப்புக்கு ஆக மாட்டாங்க” என மனதிற்குள் நினைத்துக் கொண்டார். ஒருநாள் காட்டிற்கு அவர் கிளம்பியபோது, கூடவே களைக் கொத்தியையும் கூடையையும் தூக்கிக் கொண்டு வந்து நின்றாள் காந்திமதி. முனியாண்டி முன்னால் நடக்க அவருக்குப் பின்னால் நடந்து போனாள்.

காட்டிற்குப் போவதற்கு முன்பு இருந்த வளைவில் நின்று திரும்பிப் பார்த்தார். எதிர்காற்றிற்கு அவளது தலைமுடி பருத்திப் பூவைப் போல விரிந்து பறந்துது. அவளுக்கு முடிநரைத்தால் முற்றிலும் பருத்திப் பூ போலவே அவளது தலையில் வெள்ளை படர்ந்துவிடும் எனத் தோன்றியது முனியாண்டிக்கு.  காற்றை எதிர்த்துக் கொண்டு தன்னை நோக்கி வரும் காந்திமதியைப் பிடித்து விட்டது முனியாண்டிக்கு. அவளுடைய முன்கதை என எதையும் கேட்கவேகூடாது என முடிவெடுத்தார். அந்தக் கரிசல் நிலத்தில் இருந்து துவங்கியது அவர்களது வாழ்க்கையும். அவர்கள் நின்ற இடத்தில் பருத்தி நட்டிருந்தார்கள்.

அவர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, தூரத்தில் அவரைக் கேட்காமலேயே களைகளைச் சுத்தம் செய்யத் துவங்கினாள் காந்திமதி. அதேமாதிரி அடுத்தடுத்து தன்னால் செய்யக் கூடிய வேலைகளை அவரைக் கேட்காமலேயே செய்தாள். அவளே பேசட்டும் எனக் காத்துக் கிடந்தார் முனியாண்டி. காந்திமதி அவரை நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை. என்ன மாதிரியான பெண்கள்? எனச் சிரித்துக் கொண்டார் முனியாண்டி.

காந்திமதி வேலை பார்க்கையில் தூரத்தில் நின்று முனியாண்டி. அவளை உற்றும் பார்ப்பார். ஆனால் அவள் அப்படி ஒரு மனிதன் நிற்கிறான் என்பதையே மறந்து தன் வேலையில் கவனமாக இருப்பாள். அவளுக்கு விதைப்பும் அறுப்பும் நன்றாகவே தெரிந்திருந்தது. அவள் வந்த வருடத்தில் பருத்தி போட்டார் முனியாண்டி. அந்த வருடம் முனியாண்டியின் காட்டில் ஏக்கருக்கு கூடுதலாக நான்கு மூட்டைகளை அறுவடை செய்தார். “முனியாண்டிக்கு வந்த அதிர்ஷ்டத்தை பாருங்கப்பா. வீட்டுக்கு ஓராள். காட்டுக்கு ஓராள். ஆனா ரெண்டு பேரும் சேந்த மாதிரியும் தெரியலை. அந்த பொண்ணு மொகம் கனியலையே? இன்னும் கடுகடுன்னுதானே இருக்கு” என்றார்கள் ஊரில்.

பாப்பாத்திக்கு முதல் ஆண்குழந்தை பிறந்த போது பிரசவம் பார்க்கிற இடத்திற்கு வெளியேயே நின்றாள் காந்திமதி. பிறந்து கொஞ்ச நேரத்திலேயே உள்ளே போய்த் தூக்கிக் கொண்டு வந்து, சூரிய ஒளியில் காட்டி, “எங்குழந்தை” என்றாள் தூரத்தில் பார்த்து. அதுவரை அவள் ஊமையாக இருப்பாளோ என்றுகூட நினைத்துக் கொண்டிருந்தார் முனியாண்டி. பிள்ளைப் பால்குடிக்கிற நேரங்களில் மட்டுமே பாப்பத்தியிடம் இருக்கும். அதைத் தூக்கிக் கொண்டு தன்னுடைய குடிசைக்குப் போய் அதனோடு தனியாகப் பேசிக் கொண்டிருப்பாள் காந்திமதி. அதற்கடுத்து இரண்டு பையன்களும் இரண்டு பெண்களும் பிறந்தார்கள். அப்போதும் அதையே செய்தாள் காந்திமதி. அந்தப் பிள்ளைகளோடு பேசிக் கொண்டிருப்பது மட்டுமே அவள் வாழ்க்கை என்றானது.

பிள்ளைகளின் மத்தியில் அவளுக்கு வளத்தம்மா எனப் பெயர் வந்தது. அதுவே பிற்பாடு கடைசி வரை அவளுடைய பெயராகவும் நிலைத்து விட்டது. எல்லோருமே வளத்தம்மா எனத்தான் அவளைக் கூப்பிடுவார்கள். “எப்படியும் தங்கச்சிக்காரி மேல் நோவாம இருப்பா. அதுக்காக நாம போயி இருந்து வாழ்க்கையை ஓட்டிக் கொடுத்திடலாம்ணு வந்திட்டா போல” என ஒருதரப்பும், “முனியாண்டியை பிடிச்சு போயி வந்திட்டாப்பா. தங்கச்சிக்காரியும் மேல் வேலைகளுக்குப் பயந்து ஒத்துக்கிட்டா. இப்படி சுருக்குனு பேசி முடிங்கப்பா” என இன்னொரு தரப்பும் பேசியது. ஊருக்குள் அந்த மூவரைப் பற்றி இத்தனை வருடங்களில் எத்தனையோ கதைகள் வந்துவிட்டன.

ஆரம்பத்தில் எல்லோருக்கும் பதில் சொல்லவேண்டும் என முனியாண்டி நினைத்தார். ஆனால் வானத்தையே தட்டாகக் கொண்டாலும் ஊர்வாயை மூட முடியாது என்பதையும் உணர்ந்தார். மூவருமே ஒன்றும் பேசாமல் கமுக்கமாக இருந்து கொண்டனர். வளத்தம்மா காடு வீடென உழைத்துக் கொண்டே இருந்தாள். ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய மாடுகூட அப்படி உழைத்துக் கொட்டவில்லை. காட்டிற்கு ஓடிப் போய் வேலைகளை முடித்து விட்டு, வீட்டிற்கு ஓடிவந்து பிள்ளைகளின் மூக்குச் சளியைத் துடைத்துக் கொண்டிருப்பாள். அப்போதெல்லாம் சமையல் வேலைகளைக்கூட சங்கடத்துடன்தான் செய்து கொண்டிருந்தாள் பாப்பாத்தி. கிராமத்தில் அவளை மாதிரி பருத்துப் போன பெண்ணைப் பார்க்கவே முடியாது.

வளத்தம்மாதான் எல்லா பிள்ளைகளையும் தலைவாரி எண்ணைய் தேய்த்து பாப்பாத்தியிடம் அனுப்பி வைப்பாள். அவள் குழந்தைகளை மடியில் போட்டுக் கொஞ்சிக் கொண்டிருப்பாள். குழந்தைகள் அனைவருமே பாசத்தில் வளத்தம்மாவை விட்டுக் கொடுப்பதே இல்லை. அம்மா, வளத்தம்மா இதற்கு மேல் மறுவார்த்தை பேச மாட்டார்கள். பெரிய பையனின் பள்ளியில் இன்னொரு பையன், “உங்கப்பாக்கு ரெண்டா?” என்று கேட்டதாக வந்து சொன்னான்.

வளத்தம்மா அப்போது தென்னங்குச்சியை உருவியபடி தூரத்தில் அமர்ந்து அதைப் பார்த்தாள். பாப்பாத்தி வீட்டு வாசலில் வைத்து மகளுக்கு ஈர் உருவிக் கொண்டு இருந்தாள். பையனிடம், “ஆமா அப்பாவுக்கு ரெண்டு பொண்டாட்டி” என்றார் முனியாண்டி. காந்திமதி குனிந்து தன்வேலையைப் பார்க்கத் துவங்கினாள். பாப்பாத்தி அங்கே இருந்தபடி குறுகுறுவென முனியாண்டியையே பார்த்தாள். வளத்தம்மாவுக்கு அந்த இடத்தைக் கொடுக்க வேண்டுமென முனியாண்டிக்குத் தோன்றியது. அவர்களுக்குள் என்னமாதிரியான உறவு என்பது யாருக்குமே தெரியாது. இருவருமே அதற்கடுத்து கப்பென வாயை மூடிக் கொண்டனர். மானசீகமாக ஒருத்தருக்கு ஒருத்தர் சத்தியம் செய்து கொண்டனர்.

பாப்பத்தியின் தொண்டையில் அன்றுமுதல் மீன்முள் சிக்கிக் கொண்டது. அவளது தொண்டையில் இருந்து வளத்தம்மா குறித்த விபரீத ஓலங்கள் வரத் துவங்கின. “நம்பித்தானே ஆம்பிளைகிட்ட பாதுகாப்பா ஒருத்தியை ஒப்படைக்கிறோம். அதையும் சேத்து பெண்டாள நினைப்பீயா?” என்றாள் பாப்பாத்தி முனியாண்டியிடம். “நீ எதுக்கு அவளை இங்க வச்சுக்கிட்ட” என்றார் முனியாண்டி. “அக்கா தங்கச்சிக்குள்ள ஆயிரம் இருக்கும். அதை நான் சொல்லத் தேவையில்ல” என்றாள்.

கொஞ்சம் கோபமான முனியாண்டி அவளை முறைத்துப் பார்த்துவிட்டு, “உன் பழமையை எல்லாம் உன் வீட்டில வச்சுக்கணும். நீயும் அவளை பயன்படுத்திக்கிட்ட. நானும் அவளை பயன்படுத்திக்கிட்டேன். இத்தோட ஒரு சொல் உன் வாயில இருந்து விழக் கூடாது. அவ காதிலயும் எதுவும் விழக் கூடாது” என எச்சரித்து விட்டுச் சென்றார் முனியாண்டி.

தென்னைமரத்திலிருந்து விழுந்து வலது காலை உடைத்துப் படுத்துக் கிடந்தார் முனியாண்டி. அப்போது விதைப்பு தொடங்கி அறுப்பு வரை பொறுப்பெடுத்து வளத்தம்மாதான் பார்த்துக் கொண்டாள். முனியாண்டியைவிடக் கூடுதலாக நல்ல வெள்ளாமையை எடுத்துக் காட்டினாள். “நல்ல தாட்டியமான பொம்பளைப்பா. ஒத்தை ஆளா மொத்த நிர்வாகத்தையும் பாத்துக்கறா. முனியாண்டி அதிர்ஷ்டக்காரன்தான். சொகத்துக்கு சொகம். ஒழைப்புக்கு ஒழைப்பு” என்றார் லட்சுமணன்.

ஒருநாள் நொண்டிக் கொண்டு படலைத் திறந்து கொண்டு வெளியே வந்து பார்த்தார் முனியாண்டி. தூரத்தில் புங்க மரத்தினடியில் அமர்ந்து தலையை விரித்துப் போட்டுச் சொறிந்து கொண்டிருந்தாள் வளத்தம்மா. அங்கே நின்று பார்த்த போதே அவளது தலையெங்கும் வெள்ளை முடிகள் தென்பட்டன. ஒரு மனுஷிக்கு அத்தனை சீக்கிரம் மொத்தமும் நரைத்துப் போகுமா என்ன? கண்மூடித் திறப்பதற்குள் அவள் முடி எல்லாம் நரைத்து தலைக்கு மேலே ஒரு பருத்திப் பூவை வைத்தமாதிரி ஆகிவிட்டது. திருவிழாவில் விற்கும் பஞ்சு மிட்டாய்கூட அப்படித்தான் இருக்கும் என முனியாண்டி நினைத்தார்.

அவளது நரை முகத்தில் அடித்த மாதிரித் தட்டுப்படத் துவங்கிய போதிலிருந்து ஊர் அவர்கள் இடையிலான உடல்சுகம் குறித்துப் பேசுவதை நிறுத்திக் கொண்டது. பாப்பாத்தியுமே அவ்வாறான சிந்தனைகளில் இருந்து விடுபட்டு விட்டாள். ஆனாலும் நெருப்பு ஒன்று அவளுக்குள் கனன்றபடியேதான் இருந்தது. அப்போதெல்லாம் காந்திமதியின் முகத்தைக் கூடத் திரும்பிப் பார்ப்பதில்லை அவள்.

“எந்நேரமும் எதுக்கு அங்க போயே கெடக்குறீங்க? இங்க அம்மாவோட இருங்க” எனப் பிள்ளைகளிடம் சொல்லிப் பார்த்தாள். யாரும் அவள் சொல்லை மதிக்கவே இல்லை. பிள்ளைகளை அடித்துப் பார்த்தாள். ஆனாலும் மீறிக் கொண்டு அங்கேதான் ஓடினான்கள். வளர வளரப் பெண்பிள்ளைகள் மட்டும் அம்மாவோடு ஒட்டி இருந்து கொண்டார்கள். வளத்தம்மாவுமே அதற்கடுத்து பெண்பிள்ளைகளைத் தொந்தரவு செய்யவில்லை. பிள்ளைகள் அனைவரும் அடுத்தடுத்து படித்து வளர்ந்து கொண்டே இருந்தார்கள். அவர்களுக்காகச் சுழற்றிச் சுழற்றி வேலை பார்த்தது வளத்தம்மாதான்.

அவள் இல்லவிட்டால் அந்த நொண்டிக்காலை வைத்துக் கொண்டு முனியாண்டியால் இப்படியெல்லாம் முன்னேறி வந்திருக்கவே முடியாது. ரேஷன் கார்டு வந்த போது பாப்பாத்திக்கு தெரியாமல் அவளையும் சேர்த்துக் கொண்டார். பெயரை வளத்தம்மா என்றே கொடுத்திருந்தார் முனியாண்டி. முதல் பையனுக்குத் திருமணம் வைத்த போது, வளத்தம்மா மணமேடையில் வந்து நிற்கக் கூடாது என்றாள் பாப்பாத்தி. செய்தி அவளது காதிற்கு போனதும் வீட்டை விட்டு வெளியேறாமல் அங்கேயே இருந்து கொண்டாள். அதுமாதிரியே எந்தக் குழந்தைகளின் திருமணத்திற்கும் வளத்தம்மா வரவில்லை.

பையன்கள் மட்டும் ஆசிர்வாதம் வாங்க மறக்காமல் வந்தார்கள். பெண்பிள்ளைகளைப் போகவிடாமல் தடுத்து விட்டாள் பாப்பாத்தி. பிள்ளைகளின் திருமணம் முடிந்ததும் தன் யுத்தத்தைத் துவங்கினாள் அவள். எல்லோரும் ஓய்ந்து படுத்துக் கொண்டு இருக்க வேண்டிய வயதில் அவள் ஓலமிடத் துவங்கினாள். பிள்ளைகள் யாருமே வீட்டில் இல்லை. மூவர் மட்டுமே அங்கே இருந்தனர். வளத்தம்மாவை கண்டபடி ஏசத் துவங்கினாள் பாப்பாத்தி. முனியாண்டி உள்ளே போய் மிரட்டவும் செய்தார். “என்னைய உன்னால ஒண்ணும் செய்ய முடியாது. எம்பிள்ளைக இருக்காங்க. இது அவங்க எடுத்துக் கெட்டின வீடு. முடிஞ்சா இரு. இல்லாட்டி அவளையும் கூப்டுகிட்டு வெளிய போயிரு” என்றாள் ஆங்காரமாகப் பாப்பாத்தி.

அவளுடைய ஆங்காரத்தைக் கண்டு அரண்டு போய்விட்டார் முனியாண்டி. அதுவரை ஒருசொல்கூட எதிர்த்துப் பேசாமல் இருந்த அவளா? எனத் திகைத்தும் போய்விட்டார். அவள் வருடக் கணக்கில் நஞ்சைத் துப்புவதற்காகச் சேகரித்துக் காத்து இருந்ததைப் போல, வளத்தம்மாவை நாவினால் தீண்டிக் கொண்டே இருந்தாள். அத்தனை கொத்துகளையும் வாங்கிக் கொண்டு அமைதியாய் அலைந்தாள் வளத்தம்மா. பெண் பிள்ளைகளிடம், “அவ உங்கப்பாவோட வப்பாட்டிதான். தாலியா கட்டியிருக்காரு. அதெப்படி உங்களுக்கு அம்மாவா ஆக முடியும். வளத்தம்மாவாம். ஆளும் மண்டையும். அவளை நினைச்சாலே எனக்கு பத்திக்கிட்டு வருது” என்றாள் பாப்பாத்தி.

பிள்ளைகள் ஒருசண்டையில் வளத்தம்மா முன்னிலையிலேயே அதைச் சொல்லவும் செய்துவிட்டனர். அவள் நிமிர்ந்து முனியாண்டியை ஒரு பார்வை மட்டுமே பார்த்தாள். பிள்ளைகளின் வாயை முனியாண்டியால் அடக்கவே முடியவில்லை. மெதுவாக மருமகள்களின் காதிலும் இந்த நஞ்சை ஊற்றினாள் பாப்பாத்தி. எல்லோருமே படித்த பிள்ளைகள் என்பதால் இங்கத்திய பழங்காலப் பழக்கம் எல்லாம் அவர்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. “என் பிள்ளைகள் என்னன்னு கேட்டா. அது உங்க தாத்தாவோட ரெண்டாவது பொண்டாட்டி, வப்பாட்டின்னு சொல்லவா முடியும்? இந்தக் காலத்தில் இப்படீலாம் நினைக்கவே அசிங்கமா இருக்கு” என்றாள் இரண்டாவது மருமகள். பையன்களாலுமே ஒன்றும் செய்ய முடியவில்லை.

மனம் கேட்காமல் பாப்பாத்தியிடம் போய் நின்றார் முனியாண்டி. “இது அவளுக்கும் எனக்கும் நடக்கிற பலகாலத்துச் சண்டை” என்றாள் முகத்தை இன்னொரு பக்கம் திருப்பிக் கொண்டு. அதைக் கேட்டபிறகுதான் சாலப்பட்டி ராசுவிடம் அதைச் சொன்னார் முனியாண்டி. பேரப்பிள்ளைகள் எல்லாம் வந்து விட்டார்கள். அப்போதெல்லாம் அவருக்கு நெஞ்சின் இடதுபக்கம் அடிக்கடி சுருக் சுருக்கென வலிக்கவும் செய்தது.

ராசுவிடம், “எப்டீயும் அவங்க எல்லாரும் வளத்தம்மாவை கைவிட்டிருவாங்க. நான் இருக்கிற வரைக்கும் தாக்குப் பிடிச்சிருவா. அடுத்து என்ன செய்யப் போறாளோ? உண்ட்ட என்னைக்காச்சும் வந்து நின்னா ஏதாச்சும் குடுத்து உதவு” என்றார் முனியாண்டி. அடுத்த ஆறுமாதங்களில் முனியாண்டி காட்டில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த போது அப்படியே மண்ணில் சரிந்து விழுந்து இறந்தார். ஊர்க்காரர்கள் போய்ப் பார்த்தபோது தலை முழுக்க மண்ணிற்குள் புகுந்து குப்புற விழுந்து செத்துப் போயிருந்தார். “குப்புற விழுந்து உடம்பைக்கூட நகட்ட முடியலை பாரு. மூச்சு முட்டியே செத்துருப்பாரு. கண்டிப்பா வலிப்பாத்தான் இருக்கணும்” என்றார் அருகில் நின்ற ஒருத்தர்.

பிள்ளைகள், ஊர்க்காரர் என எல்லோரும் சேர்ந்து அவரைத் தூக்கிக் கொண்டு போய்ப் புதைத்தார்கள். “ஒருகாலத்தில விவசாயத்தில எப்பேர்பட்ட பேர் எடுத்தவரு. அக்ரி ஆபிஷருங்களே அவர்ட்ட கைகட்டி நிப்பாங்க. நல்லா வெகுசிறப்பா வழி அனுப்பி வைக்கணும்ப்பா” என அவருடைய பையன்களிடம் சொன்னார்கள். அதன்படியே ஆட்டம் பாட்டம் என முனியாண்டியின் கல்யாணச் சாவு ஊர்வலம் வீட்டில் இருந்து புறப்பட்டது. முச்சந்திக்குப் பாப்பாத்தி மட்டுமே வந்து நின்று அழுதாள். “என்ன இருந்தாலும் காந்திமதியையும் வர வச்சுருக்கணும்ப்பா. அவளும் கூட வாழ்ந்தவதானே?” என்றனர்.

முனியாண்டியின் சவ ஊர்வலம் போய்க் கொண்டிருந்த போது தனது குடிசையில் தலையை முழங்காலிற்குள் புதைத்து அமர்ந்திருந்தாள் வளத்தம்மா. அவளுடையதை மட்டுமே குடிசையாக விட்டு வைத்து இருக்கிறார்கள். பாப்பாத்தி இருக்கிற இடத்தைப் பிள்ளைகள் எடுத்துக் கட்டி விட்டனர் ஏற்கனவே. அங்கே அமர்ந்து எல்லோரும் வளத்தம்மா இருக்கிற இடத்தை நோக்கிப் பார்த்தார்கள்.

மூத்தவன் எழுந்து, “வளத்தம்மாவை பார்த்திட்டு வந்திர்றேன். வந்ததில இருந்து பேசவே இல்லை” என்று கிளம்பினான். அவனது மனைவி “அது பாட்டுக்கு இருக்கும். நீங்க எதுக்கு போறீங்க?” என்றாள். “அப்பிடியே செவுள்ள ஒண்ணை வச்சிருவேன். மனுஷங்களோட சந்தோஷத்தில கூட இல்லாட்டின்னாலும் துக்கத்தில இருக்கணும்” என்று சொல்லிவிட்டுப் போனான்.

நிழல் வந்து விழுவதைப் போல உணர்ந்ததும் தலையைத் தூக்கிப் பார்த்தாள் வளத்தம்மா. வந்து நின்ற மூத்தவனைக் கண்ணைச் சுருக்கிப் பார்த்தாள். அவனை கீழே அமரச் சொல்லிச் சைகை காட்டினாள். அவனுமே அமர்ந்து வளத்தம்மாவின் கையைப் பற்றிக் கொண்டான். அப்போது வளத்தம்மா, “ஏன் ராசா வளத்தம்மா சொல்றதை நம்பணும். நான் உங்கப்பாவுக்கு பொண்டாட்டியும் இல்லை. வப்பாட்டியும் இல்லை” என்றாள்.

மூத்தவன் போய்ச் சொன்ன போது, “ஆமாம் இதை பத்தி மேற்கொண்டு விசாரிக்கணும்னா. குழியைத் தோண்டி உங்கப்பாவை எழுப்பணுமா? சாகப் போற நேரத்தில எதுக்கு அந்தம்மா திடீர்னு பத்தினி வேஷம் போடுது?” என்றாள் மூத்த மகள். பாப்பாத்தியுமே, “அவளுக்கு உடம்பெல்லாம் பொய்யி. உங்கட்ட ஒட்டிக்கணும்னு அப்படிப் பேசறா” என்றாள். யாருமே வளத்தம்மா சொல்வதை நம்பத் தயாராக இல்லை. இரண்டு பெண்களுமே அம்மாவின் வீட்டருகே குடிபுகுந்தார்கள்.

அவர்களுக்குள்ளாகவே போய் வந்து கொண்டார்கள். மூத்தவன் மட்டும் அடிக்கடி வந்து வளத்தம்மாவிற்குச் செலவிற்குக் காசு கொடுத்துவிட்டுப் போவான். அதை வைத்துக் கொண்டு தன்னால் முடிந்தளவிற்குப் பொங்கிச் சாப்பிடத் துவங்கினாள் வளத்தம்மா. ஊரில் இருந்த இன்னொருத்தர் பரிதாபப்பட்டு முதியோர் உதவித் தொகையை வாங்கிக் கொடுக்க முன்வந்தார். அதில் இன்னார் சம்சாரம் எனப் போடவேண்டிய நிலை வந்தபோது, பாப்பாத்தி வாசலில் நின்று அவரை அசிங்கமாக ஏசினாள். அவர் கோபித்துக் கொண்டு கிளம்புவதற்கு முன்பு, “பாப்பாத்தி பழைய காலத்தை மறந்திராத. அவ உங்க காட்டில பாடுபடாட்டி இன்னைக்கு நீங்க இப்படி உக்காந்திருக்க முடியாது. செய்ற பாவம் திரும்பி வந்திரப் போகுது” எனச் சொல்லிவிட்டுப் போனார்.

வளத்தம்மாவிற்கு அப்போது தனது வைராக்கியம் எல்லாம் உடலில் இருந்து உதிரும் முடியைப் போல ஆகிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். ஆனால் பேரப் பிள்ளைகளைப் பார்த்தால் தூக்கி வைத்துக் கொஞ்சலாம் என ஆவலாதியாக இருந்தது. வெளியில் விளையாடிய பேரனைத் துக்கிக் கொஞ்சினாள் ஒருதடவை. தூரத்தில் இருந்து அவனுடைய அம்மா இதைப் பார்த்தாள்தான், ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அதற்கடுத்து குழந்தையை அதிகம் அவள் வெளியே விடவே இல்லை.

அப்போதெல்லாம் தடுமாறி நிற்கிற நிலைக்கு வந்து இருந்தாள் வளத்தம்மா. மழை வந்தால் ஒழுகுகிறது என்று மூத்தவன் ஆஸ்பெட்டாஸ் கூரை போட்டுவிட்டான். செங்கல் வைத்துத்தான் கட்டிக் கொடுக்க நினைத்தான். அவனுடைய பொண்டாட்டி, “பிள்ளைகளுக்கு ஒண்ணும் சேத்து வைக்கலை. உங்கப்பாவோட வப்பாட்டிக்குச் செய்யணும்னு என்ன இருக்கு? வளத்தம்மாண்ணே வச்சுக்கிட்டாலும் எல்லாரும் செய்யணும்ல. நீங்க மட்டும் எதுக்கு செய்யணும்?” என்றாள்.

“கையில கால்ல விழுந்து கேட்கறேன். இந்த ஒரு விஷயத்தை மட்டும் என்னை செய்ய விட்டிரு. காடே கதின்னு அலைஞ்ச பொம்பளை. கடைசி காலத்தில நிம்மதியான ஒரு கூரையாவது இருக்கட்டும்” என்றான் மூத்தவன். அப்போது போனபோது அவனைக் கட்டிக் கொண்டு அழுத வளத்தம்மா, “நான் உங்க எல்லாருக்கும் நல்லதுதானே செஞ்சேன். எதுக்கு என்னை கைவிடறீங்க. என் தங்கச்சி ஒருத்தி நம்பிட்டா போதும். நம்பி அவதான் வீட்டுக்குள்ள விட்டவ” என்றாள். மூத்தவனுக்கு அதைக் கேட்கும் போது எரிச்சல்தான் வந்தது. தன் மனைவி, தன் பிள்ளை என வந்துவிட்டவனிடம், இன்னமும் இந்த வளத்தம்மா பழங்கதையைப் பேசுகிறதே என வருத்தம்.

நாளுக்கு நாள் வளத்தம்மாவின் நிலை மோசமாகிக் கொண்டே போனது. அவளால் சமைக்கவே முடியாத நிலையும் ஏற்பட்டு விட்டது. ஊரில் இருக்கிற ஹோட்டல்களில் போய் காசைக் கையில் வைத்துக் கொண்டு நிற்பாள். அவளுக்கு அங்கே எதைக் கேட்கவேண்டும் எனக்கூடத் தெரியாது. அவள் வாழ்க்கை முழுக்கவே கரிசலிலும் அந்தக் குடிசையிலும் கழிந்து விட்டது. அந்த ஊருக்கு வந்த நாளில் இருந்து, வெளியே வேறு எங்குமே சென்றதில்லை. அதிகம்போனால் ஆஸ்பத்திரிக்கோ மருந்துக் கடைக்கோ மட்டும் போவாள்.

ஹோட்டல் வைத்திருந்தவன் அவர்களுடைய பங்காளிதான். இரண்டாவது மகளுக்கு அழைத்து, “சித்தப்பன் பேசறேன்ம்மா. வளத்தம்மாவை இப்படி நீங்க விடறது ஞாயமே இல்லை. அது வெளியில கையேந்தி அலைஞ்சா உங்களுக்குத்தான் அசிங்கம்” என்றார் சுருக்கென. மகள் கிளம்பி வந்து அம்மாக்காரியிடம் ஒப்பாரி வைத்தாள். இருவரும் வாசலில் நின்றபடி வளத்தம்மாவை வைதனர்.

அவர்கள் வைதது எல்லாம் கேட்கவே முடியாத அளவிற்கு காது பூஞ்சையாகி விட்டது வளத்தம்மாவிற்கு. மூத்தவன் வேலைக்காக பம்பாய் கிளம்பிப் போனபிறகு மற்ற யாருமே ஒழுங்காகக் கவனித்துக் கொள்ளவில்லை அவளை. இரண்டாவது மகன் ஒருதடவை வந்து தலைமாட்டில் பணத்தை வைத்து விட்டுப் போனான். “ஒருநாளாச்சும் வளத்தம்மா கூட இருந்துட்டு போ ராசா” எனக் கெஞ்சினாள்.

பொங்கல், தீபாவளி அப்போதுகூட ஒரு சீலைத் துணி எடுத்துக் கொடுக்கவில்லை அவளுக்கு. பக்கத்து வீட்டில் இருந்த சொந்தக்காரி ஒருத்திதான் எடுத்துக் கொடுத்தாள். “எதுக்கு அவங்க தங்கச்சிக்காரிக்கு இவ்ளோ வீம்பு. அப்படி என்ன பண்ணிருச்சாம் வளத்தம்மா. நெஞ்சு கல்லு மாதிரி இருக்கலாம். ஆனால் நெஞ்சே கல்லா இருக்கக் கூடாது. வெஷம் ஊறி போயிருச்சு உள்ளுக்குள்ள” என்று பாப்பத்தியைப் பார்த்து வைதுவிட்டே போனாள். பாப்பாத்திக்கும் அதில் காதில் விழத்தான் செய்தது.

அவள் போன பிறகு வாசலில் அமர்ந்து மரவள்ளிக் கிழங்கு தோலை உரித்துக் கொண்டிருக்கிற அக்காவை சன்னல் வழியாகப் பார்த்தாள். ஒடிந்து போய் அமர்ந்திருந்தாள் காந்திமதி. அப்படியே இறங்கிப் போய் அவளது முன்னால் நிற்கலாமா என யோசித்தாள் பாப்பாத்தி. ஆனாலும் ஏதோவொரு வீம்பு அவளைப் போகவிடாமல் தடுத்தது. அதற்குப் பிறகு பிள்ளைகளிடம் வளத்தம்மா குறித்த எதிர்ப்பேச்சுக்களை நிறுத்திக் கொண்டாள். ”எங்க உக்கக்காவை பத்தின பேச்சையே காணோம்” என்ற மகளிடம், “பேசிப் பேசி சலிச்சிருச்சு. எனக்கே இப்ப காடு போகிற வயசு வந்திருச்சு” என்றாள்.

“உங்க அக்காவுக்குத்தான் உன்னவிட பன்னெண்டு வயசு மூப்பு. உனக்கென்ன நல்லாத்தானே இருக்க. என் பிள்ளைகளுக்கு உன்னைவிட்டா வேலை பார்க்க யாரு இருக்கா? இப்டீல்லாம் பேசிப் பழகாதம்மா” என்றாள் மகள். பெருமூச்சு விட்டு அதைக் கேட்டுக் கொண்டாள் பாப்பாத்தி. பிள்ளைகள் கழுத்திலும் காதிலும் தங்கமாகப் போட்டு அழகு பார்த்து இருக்கிறார்கள். காந்திமதி ஒருபொட்டுத் தங்கம்கூட இல்லாமல் அலைந்து கொண்டிருந்தாள். தாங்கள் ஒருகாலத்தில் எப்படி இருந்தோம் என எண்ணிக் கொண்டாள் பாப்பாத்தி.

அவர்களது வீட்டில் மூத்தவள் காந்திமதிதான். அதற்கடுத்து நான்கு பெண்கள். ஆரம்பத்தில் அவர்களுடைய அப்பா கஷ்ட ஜீவனம்தான் செய்தார். “ஐந்து பெத்தவன் கண்டிப்பா ஆண்டியாயிடுவான்ப்பா” என்றுதான் ஊர்க்காரர்கள் சொன்னார்கள். அதையே வைராக்கியமாக எடுத்துக் கொண்டு வெறிபிடித்த காளை மாதிரி உழைக்க ஆரம்பித்தார். அவருடைய மனைவி ஜன்னிகண்டு சீக்கிரமே செத்துப் போனாள். கடைசிப் பிள்ளை பாப்பாத்தி. ஐந்தாவது பிள்ளையால் அதிர்ஷ்டம் போய்விட்டது என ஊர்க்காரர்கள் சொல்லிவிடக்கூடாது என்பதால், பாப்பத்தியைத் தூக்கிக் கொஞ்சிக் கொண்டே இருப்பார். மூத்தவளான காந்திமதியுமே, தன்னப்பனைப் போல அவளைக் கைக்குள் வைத்துப் பொத்தி வைத்து அலைகிறவள்தான்.

அப்பா காட்டு வேலைக்குச் சென்றுவிடுவதால், பிள்ளைகளுக்கு எல்லாம் காந்திமதிதான் பொறுப்பு. வளர வளர பாப்பாத்தியை அதிகச் செல்லம் கெடுத்துக் கொண்டிருப்பதாகக் காந்திமதிக்குத் தோன்றியது. உடம்பு வளையாமல் நோகாமல் தின்றபடியே ஒருமாதிரியான மெதக்கத்துடன் சுற்றிக் கொண்டிருக்கும் பாப்பத்தியைக் கண்டு வருத்தமும் ஏற்படும். அப்பாவிடம், “அவளை இப்படியே விட்டீங்கன்னா எதுக்குமே வளையாம மரம் மாதிரியே ஆயிருவா” என்பாள். “ஏங்கண்ணு அதான் அவளை பார்த்துக்க நீ இருக்கீல்ல” என்றார் அவளுடைய அப்பா. அந்த வயதில் அது அவளது மனதில் ஆழமாகப் பதிந்தும் விட்டது.

எல்லோருக்கும் சோறு போடுகிற போது கவனமாக, பாப்பாத்தியின் தட்டில் மட்டும் குறைவாகப் போடுவாள். பாப்பாத்தி அப்பாவிடம், “இல்லை நீங்க நம்ப மாட்டேங்குறீங்க. அவ அப்படித்தான் செய்யுறா” என்றாள். அப்பா நம்பவே இல்லை. தொடர்ச்சியாகப் பாப்பாத்தி கவனித்த போது அதைத்தான் காந்திமதி செய்து கொண்டு இருந்தாள். ஒருதடவை தட்டில் விழுந்த கறித் துண்டுகளை எண்ணிப் பார்த்த போது, நாலைந்து குறைவாகவே கிடந்தன. அன்றுமுதல் அடியாழத்தில் இருந்து காந்திமதியை வெறுக்கத் துவங்கினாள் பாப்பாத்தி. வெளியில் யாரிடமும் சொல்லாமல் மனதிற்குள்ளேயே பொத்தி வைத்துக் கொண்டாள் அதை.

அவளுடைய அப்பாவிற்கு ஒரு பெரு விளைச்சலில் பணம் கிடைத்த போது, எல்லோருக்கும் கம்மல் வாங்கிக் கொண்டு வந்தார். அதில் ஒன்று மட்டுமே பெரியது. பாப்பாத்தி தனக்காக வாங்கப்பட்டதுதான் அது எனக் காத்திருந்தாள். அப்பா சொல்வதற்கு முன்னமே நடந்து வந்து தனக்கென அதைத் தூக்கிக் கொண்டாள் காந்திமதி. பாப்பாத்தியால் அதைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. அப்பாவிடம் கேட்ட போது, “உனக்குண்ணுதான் கண்ணு வாங்கினேன். அக்கா எடுத்திட்டா. எடுத்தவளை வைய்யின்னு சொல்ல முடியாதில்ல. உனக்கு நான் இதை விட பெரிசா ஒண்ணை வாங்கித் தர்றேன்” என்றார்.

அந்தச் சமாதானத்தைப் பாப்பாத்தியால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. ஆயிரம் கம்மல்கள் பிறகு வரலாம். அப்பா வாங்கிக் கொடுத்த முதல் கம்மல் அதுவல்லவா? என அந்த வயதில் இருந்தே மனதில் சஞ்சலத்துடனேயே இருந்தாள். காலவோட்டத்தில் அந்தக் கம்மல் அவளுக்குள் விஸ்வரூபம் எடுத்துப் பெருகியபடியே இருந்தது. அது ஒவ்வொரு சுற்றும் பெருகப் பெருக அவள் காந்திமதியிடம் இருந்து விலகத் துவங்கினாள். சின்னப்பிள்ளைகளின் வெள்ளாமை, இளம்குருத்தாய் வன்மம் என்கிற இந்த விஷயத்தில் வீடு வந்து சேர்ந்து விட்டது.

ஒரே வீட்டிற்குள்ளேயே எதிரும் புதிருமாக அலைந்தார்கள். காந்திமதி தங்கைக்காக எந்த எல்லைக்கும் இறங்கி வரத் தயாராகவே இருந்தாள். பாப்பாத்தி அவளுடனான உறவை கிட்டத்தட்ட முறித்துக் கொண்டாள். அப்பா ஒருநாள் காந்திமதியை அழைத்து, “மகளே அந்த கம்மலை மட்டும் நீ போட்டிராத. பாப்பா மனசு ஒடைஞ்சிடுவா” என்றார். பாப்பாத்தி திருமணமாகிப் போகையில் அவளுக்குத் தெரியாமலேயே பையில் போட்டு அந்தக் கம்மலையும் அனுப்பிவிட வேண்டும் எனக் கோபத்தில் உறுதி பூண்டாள் காந்திமதி.

ஒருசண்டையின் போது, “சோத்தில உப்புப் போட்டுத் திங்கறவளா இருந்தா, நானா பேசாம எண்ட்ட நீ பேசவே கூடாது” என்றாள் பாப்பாத்தி. சுருக்கென அந்த வார்த்தை காந்திமதியின் நெஞ்சில் தைத்து விட்டது. பசுமரத்தில்தான் ஆணி அத்தனை சீக்கிரமாக ஆழமாக இறங்கவும் செய்கிறது. மற்ற தங்கைகளுமே பாப்பத்தியுடன் இணைந்து கொண்டார்கள். எல்லோருக்குமே அந்தப் பெரிய கம்மலின் மீது கண் இருந்தது. அந்த வீட்டில் காந்திமதியைத் தவிர இருந்த மற்ற பெண்கள் எல்லோருமே அசமஞ்சமாக இருந்தார்கள். இருந்ததிலேயே எதற்கும் உதவாத அசமஞ்சம் பாப்பாத்திதான்.

எல்லோருக்கும் திருமண வயது வந்த போது அப்பாவிடம், “அப்பா ஊரு ஆயிரம் சொல்லும். ஏத்துக்காதீங்க. அம்மாவும் இல்லை இப்ப. நம்ம குடும்ப நிலவரம் நமக்குத்தான் தெரியும். மொதல்ல இவளுகளைக் கரை சேர்த்திட்டு நான் கல்யாணம் பண்ணிக்கறேன்” என்றாள். கொஞ்சம் சிந்திக்கிற மனிதர் அவர் என்பதால் அதற்கு ஒத்துக் கொண்டார். சொத்துபத்துக்களில் ஒன்றும் குறையில்லை என்பதால் வேகவேகமாக எல்லோருக்குமே மாப்பிள்ளை தேடத் துவங்கினார். பாப்பாத்தி உட்பட எல்லோரும் போய் அவரவர் இடத்தில் வசதியாக அமர்ந்தபிறகு மிச்சமானது அவரும் காந்திமதியும் மட்டும்தான். இருவருமே சோர்வின் உச்சியில் இருந்தார்கள் அப்போது.

அப்பாவும் உடலளவில் தெம்பாகத்தான் இருந்தார். காந்திமதிக்கும் முடித்துவிடலாம் எனத்தான் ஆரம்பத்தில் நினைத்தார். காந்திமதி ஒற்றைக்காலில் தனக்குத் திருமணம் வேண்டாம் என மறுத்துவிட்டாள். “எல்லாத்தையும் பாத்ததில திகட்டி போயிருச்சுங்கப்பா. தயவு செஞ்சு என்னை விட்டிருங்க. எல்லா பொறுப்பையும் என் தலையிலதான போட்டீங்க. மிச்சம் இருக்கற காலத்துக்கு என்பாட்டுக்கு வாழ்ந்துட்டு போயிடறேனே?” என்றாள். “என் மகளே என்ன இப்படி ஒரு வார்த்தையை சொல்லிட்ட” என மருகினார் அவளுடைய அப்பா.

“நான் சொன்னா சொன்னதுதான். இனி என் போக்கில என்னை விட்டிருங்க. குடும்பத்துக்கு அவமானமா மட்டும் நான் இருக்கவே மாட்டேன்” என்றாள் காந்திமதி. எதையும் போராடி நிறுவுகிற அளவிற்குத் தெம்பில்லை அப்போது அவரிடம். சித்தன் போக்கு சிவன் போக்கு என அவளிடம் பிறகு தலையாட்டிக் கொண்டே மட்டும்தான் இருந்தார். மாட்டிற்கான முக்கணாங்கயிறு என்னும் பொறுப்பைக் கைவிட்டு விட்டார் அவளுடைய அப்பா.

அப்படியொரு நாளின்போதுதான் காந்திமதி அப்பாவின் முன் போய் நின்று, “பாப்பாத்தி வீட்டோட போயிடலாம்ணு நெனைக்கேன். அவளால தனியா இந்த வாழ்க்கையை வாழ்ந்திர முடியாது. மத்தவக எப்படியோ பிழைச்சுக்குவாங்க” என்றாள். நிமிர்ந்து அவளைப் பார்த்துவிட்டு, “உம்மனசுக்குள்ள எதுவோ குடைய ஆரம்பிச்சிருச்சு. சொன்னாலும் கேட்க மாட்ட. அவளுக்குத்தான் நீன்னாலே ஆகாதே” என்றார்.

பதிலுக்கு காந்திமதி, “என்னை பார்த்தா அப்படியே வந்து கட்டிப் பிடிச்சுக்குவா. அப்படியே இல்லாட்டியும் நான் தூக்கி வளர்த்த பிள்ளை இல்லையா? உங்களுக்குமே பிடிச்ச பிள்ளை அவ. நம்ம வீட்டு லட்சுமியை கூப்டுட்டு போறேன்” எனச் சிரித்துக் கொண்டே சொன்னாள். காந்திமதி கடைசியாய் அவரிடம் மட்டுமே அப்படிச் சிரித்தாள். “நீயும் நல்லா இரு. பாப்பாத்தியையும் நல்லா பாத்துக்கோ. அவரும் நல்ல மனுஷந்தான். இனி உங்க விதி விட்ட வழி” என்று சொல்லி விட்டு எழுந்து போய் வேப்ப மர நிழலில் அமர்ந்தார்.  அவருக்குமே அந்த முடிவு சரியானதாகப் படவில்லை. அவர் ஆற அமர தான் கிளம்பி வந்த பாதையை அசைபோடவே அப்போது விரும்பினார். எந்தக் கயிற்றையுமே பொறுப்பாக பிடித்துக் கொள்ள முடியாதளவிற்கு மனதளவில் சோர்ந்தும் போயிருந்தார். அவருக்குமே எல்லாமும் திகட்டிப் போய்விட்டது.

அப்படித்தான் பாப்பாத்திக்குப் பிடித்த வெள்ளை மாடான லட்சுமியைக் கையில் பிடித்துக் கொண்டு கிளம்பினாள் காந்திமதி. பின்னர் அந்த வீட்டின் வளத்தம்மாவாக மாறிய கதையெல்லாம் தெரியாமல் செத்துப் போனார் அவளுடைய அப்பா. பாப்பாத்தி தனக்குத் துணையாக இருப்பாள் எனக் கணக்கிட்டு உடன் வைத்துக் கொண்டாள் என்றே சாவதற்கு முன்பு நினைத்தார்.

இதையெல்லாம் சுற்றி யோசித்தாள் பாப்பாத்தி. எதிரே தன்னுடைய அக்கா, தளர்ந்து உருகுவதைப் பார்க்கையில் கொஞ்சம் துளிர்ப்பு அவளுக்குள்ளும் வந்தது. வளத்தம்மாவின் உடல் எழக்கூட முடியாதளவிற்கு நைந்து போனது. அவள் பழைய அழுக்குப்படிந்த, கிழிந்த கம்பளிப் போர்வையைப் போலவே மாறிப் போனாள். சன்னல் வழியே பாப்பாத்தியின் கண்கள் அக்காவைத் தேடின. தட்டுப்படவில்லை அவள். மெதுவாகத் தனது பருத்த உடலைத் தூக்கி நடந்து வீட்டு வாசலுக்கு வந்து எட்டிப் பார்த்தாள். அப்போதும் பார்வைக்குத் தட்டுப்படவில்லை. மூங்கில் தடி ஒன்றை எடுத்து ஊன்றியபடி அக்காவின் குடிசையை நோக்கி நடந்தாள் பாப்பாத்தி.

உள்ளே வளத்தம்மாவின் நெஞ்சுக்குழி ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. பார்த்தவுடன் பாப்பாத்தியால் அழுகையை அடக்க முடியவில்லை. அதுவரை உள்ளுக்குள் சேகரித்து வைத்திருந்த விஷமெல்லாம் மரணத்தின் முன் தோற்று ஓடியதை உணர்ந்தாள். கஷ்டப்பட்டு அமர்ந்து அக்காளைத் தூக்கி மடியில் போட்டுக் கொண்டாள். கட்டுப்படுத்த முடியாத அழுகை அவளுள்ளிருந்து பீறிட்டது. எதை எதையோவெல்லாம் சொல்லியபடி ஏங்கி அழத் துவங்கினாள். அதில் கால்வாசிதான் வளத்தம்மாவின் காதில் விழுந்தது. அழுது அரற்றி முடித்த பின் அக்காவின் முகத்தைப் பார்த்து, “ஒரு வார்த்தை எண்ட்ட பேசலைல. கல்நெஞ்சக்காரி” என்றாள்.

கண்ணில் ஈரத்தோடு, “நீதானே சொன்ன” என்றாள் வளத்தம்மா “எதுக்கு இங்க வந்து உன் வாழ்க்கையை அழிச்சுக்கிட்ட?” என்றாள் தேம்பி. “அப்பாதான் உன்னைக் கடைசி வரைக்கும் பாத்துக்க சொன்னார்” என்று சொன்னாள். அதைக் கேட்டவுடன் பாப்பாத்தி ஏங்கி ஏங்கி அழுதாள். “பாப்பா இப்டீலாம் அழுதா அப்பாவுக்கு பிடிக்காது. கடைசியா பூமித்தாய் மேல சத்தியமா சொல்றேன். உங்க வீட்டுக்காரருக்கு நான் பொண்டாட்டியும் இல்லை. வப்பாட்டியும் இல்லை” என்றாள் வளத்தம்மா.

”எந்தெய்வமே என்னை மன்னிக்க மாட்டீயா?” என வானத்தை நோக்கிச் சொல்லிவிட்டு தடுமாறி எழுந்து வீட்டிற்கு நொண்டியபடி வேகமாக நடந்து போனாள் பாப்பாத்தி. உள்ளே போய்த் தட்டில் சோற்றைப் போட்டுக் குழம்பை ஊற்றியபின் அதை எடுத்துக் கொண்டு ஓடிப் போகிற உத்வேகத்துடன் எட்டுவைத்து நடந்து அக்காவைப் போய்ப் பார்த்தாள். அதற்குத்தான் காத்திருந்தேன் என்பதைப் போல, முன்பே செத்துப் போயிருந்தாள் வளத்தம்மா. அம்மாவே அழைத்ததால் எல்லோரும் ஓடிவந்து விட்டார்கள் விஷயத்தைக் கேட்டு.

“எங்கக்கா உங்கப்பா போன மாதிரி பூப்பல்லக்குளதான் போகணும்” என்றாள் மகன்களிடம் பாப்பாத்தி. “செத்த பிறகுதான் மனுஷங்க மேல பாசம் அப்படியே பாயுது” என்றான் மூத்தமகன் முகத்திற்கு நேராகவே. ஒன்றும் பேசாமல் குனிந்து அழுதபடியே இருந்தாள் பாப்பாத்தி.

நீர்மாலை எடுத்து வளத்தம்மாவைத் தூக்கிக் கொண்டு கிளம்புகையில், தன்பையனை அழைத்துக் கையில் பை ஒன்றைக் கொடுத்து, “எங்கக்காவை புதைக்கிறதுக்கு முன்னாடி இதை போட்டு விட்டிரு” என்று கொடுத்தாள். மயானத்தில் போய் நின்று அதைப் பிரித்துப் பார்த்த போது, கம்மல் ஒன்று இருந்தது. அப்பாவிற்காக அக்கா விட்டுக் கொடுத்த கம்மல் அல்லவா அது? அம்மாவின் சொல்படி வளத்தம்மாவிற்கு அதை அணிவித்துப் புதைத்தார்கள். பதினாறாம் நாள் காரியம் செய்யப் போயிருந்த போது அதைப் பார்த்தார்கள்.

வளத்தம்மாவின் தலைமாட்டில் இருந்த செடியில் கம்மலைப் போலவே பருத்தி பூத்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.