விபத்து

சாலையோர மரங்களில் இன்னும் உதிராமல் மீதமிருந்த மஞ்சள் நிற இலைகள், காற்றில் அசைவது தெருவொர மஞ்சள் விளக்குகளின் வெளிச்சத்தில் ஒரு நடனமென நிகழ்ந்துக்கொண்டிருந்தது. சற்றுமுன் பெய்து ஓய்ந்திருந்த மழையில் சாலைகள் முழுக்கவே நனைந்திருந்தன. குளிர்காலமென்பதால் மாலை ஐந்தரை மணிக்கே நன்கு இருட்டியிருந்தது.

திடீரென்று ஒரு பெண் குழந்தை உரக்க அலறும் ஓசை கேட்டு திரும்பினேன். கசாயிலிருந்து, தோக்கியோ நோக்கி செல்லும் பெரிய சாலையில் இருந்து இடது ஓரமாக பிரியும் குறுக்குச் சாலை சந்திப்பில்  ஒரு ஜப்பானிய இளம்பெண் நின்றிருப்பது தெரிந்தது. அருகே ஒரு வயதான ஜப்பானியர் குனிந்து நின்றிருந்தார். அங்கிருந்துதான் சத்தம் வருகிறதா, என்பது புரியாமல் நின்றபோது, அங்கு நின்றிருந்த அந்த இளம்பெண் சத்தமாக ஏதோ கூறியபடி அழுதாள். அருகே சென்றபோது, அந்த பெண் முகத்திலிருந்து ரத்தம் கொட்டுவது தெரிந்தது. அழுதபடி அவள் பேசுவதால் வார்த்தைகள் தெளிவில்லாமல் ஒலித்தது.

இள மஞ்சள் நிற  ஜெர்கினும், தலையில் ஹூட்ஸும் அணிந்திருந்த அந்த கிழவர் ரயில் நிலையங்களில் விளம்பரத்திற்க்காக கொடுக்கப்படும் டிஷ்யு பாக்கெட்டில் இருந்து, ஒரு டிஷ்யு பேப்பரை உருவி, தயக்கத்துடன் ஏதோ முனகியபடி அந்த பெண்ணில் காலில் ஒட்டியிருந்த ரத்தத்தை துடைக்க முயன்றார். கோபத்துடன் அந்த டிஷ்யுவை பிடுங்கி தனது வாயைத் துடைத்துவிட்டு, ”நான் நிறைய இடம் விட்டுதானே வந்தேன்” என்று அழுதபடியே சொல்லிவிட்டு, ரத்தம் தோய்ந்த டிஷ்யூ பேப்பரை சாலையில் விட்டெறிந்தாள் அந்த பெண். மூக்கிலிருந்து கொட்டிய ரத்தம் அவளுடைய உடலெங்கும் சிந்தி, கால்கள் வழியாக சாலையில் இறங்கியது. அந்த பெண் கறுப்பு நிற ஜெர்கினும் அடியில்  அதே நிறத்தில் டிராயரும் அணிந்திருந்தாள். கால்களில் தோலின் நிறத்திலேயே ஸ்டாக்கிங்ஸ் அணிந்திருந்ததால், ரத்தம் கால்களிலிருந்து வழிவது போல் தெரிந்தது. தலையை பொன்னிறத்தில் ப்ளிச் செய்திருந்தாள். கண்களில் பொருத்தியிருந்த செயற்கை இமைகள் கண்ணீரில் நனைந்திருந்தது. மிக மெல்லிய உடல்வாகு, சற்று தூக்கிய மேலுதடு. நீண்ட விரல்களில் செயற்கை நகங்கள், திருத்தமான முகம். காணும் விழிகளை நிலைத்திருக்கும்படி செய்யும் அழகி. மாலை நேர சந்திப்பிற்காக தனது நண்பர்களை சந்திக்கப் புறப்பட்டவள் போல் அவள் இருந்தாள்.

சாலையில் சென்றுக்கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் போலிருந்த இருவர், நெருங்கி வந்து நின்றனர். தயக்கத்தை உடைத்து, குறுந்தாடி வைத்திருந்த இளைஞன் அந்த கிழவரிடம் “விபத்து நிகழ்ந்துவிட்டதா?”, என்று கேட்டான். டிஷ்யூ பேப்பரால் அந்த பெண்ணை துடைத்துக்கொண்டிருந்த பெரியவர் நிமிர்ந்து பார்த்து, “விபத்தாகதானே இருக்க முடியும்” என்று சொன்னார். அந்த பதிலில் குழம்பிய மாணவன், அழும் இளம்பெண் ஏதேனும் கூடுதலாக சொல்லக்கூடுமென்று என்று எண்ணி அவளைப் பார்த்தான். அந்த பெண் உரத்த குரலில் “நேரமாகி விட்டதே. அய்யோ, இன்றைக்கு எல்லாம் பாழாகிவிட்டது” என்று கூறி அழுதாள். ஒவ்வொரு முறையும் அவள் அழுதது, ஒரு குழந்தையின் அழுகையை போலவே ஒலித்து,சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தவர்களை திடுக்கிட வைத்தது. அங்கு வந்து நின்ற ஒரு மத்திய வயது பெண், “வாயிலும் அடிபட்டிருக்கிறதோ?” என்று கேட்டார். உடனே திடுக்கிட்ட அந்த இளம்பெண் தன்னுடைய கைப்பேசியை எடுத்து, கேமராவில் முகத்தை பார்த்தாள். மூக்கிலிருந்து ரத்தம் வழிந்துக்கொண்டிருக்க, முன் உதடு பெரிதாக வீங்கியிருந்தது. அடிப்பட்ட அதிர்ச்சியில் முகமே வீங்கியிருந்தது. “அய்யோ என் முகம். இப்போ என்ன செய்வேன். நான் இடம் விட்டுதானே வந்தேன்”, என்று அழுதாள்.

அவள் செய்திருந்த ஒப்பனைகளையெல்லாம் தாண்டி, அடிப்பட்ட அதிர்ச்சியில் அவளுக்குள் மறைந்திருந்த ஒரு சிறிய குழந்தை வெளிவந்திருந்தாள். சற்று நேரத்திற்க்கு முன்பு வரை, அவள் சிரிக்கும்போது கையால் வாயை மறைத்துக்கொண்டு சிரித்திருப்பாள். எதையேனும் மெல்லுகையில், கையால் வாய் அசைவதை மறைத்துக்கொண்டிருப்பாள்.  ஒவ்வொரு கணமும்,தனது ஒவ்வொரு அசைவிலும் நளினத்தைச் சூடி இருந்திருப்பாள். இந்த விபத்து ஒரு பெருமழையென அவளை உரித்திருந்தது.

இப்போது ஒரு சிறிய கூட்டம் கூடியிருந்தது. சாலையோரமிருந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் சிலர் பால்கனியில் வந்து நின்று பார்த்துக்கொண்டிருந்தனர். மிதிவண்டியில் சென்ற, சீருடை அணிந்த ஒரு பள்ளி மாணவி, தன்னுடைய புத்தகபையிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து அடிப்பட்ட பெண்ணிடம் நீட்டினாள். அந்த ஜப்பானிய கிழவர் தண்ணீர் பாட்டிலை வாங்கி தன்னிடமிருந்த கடைசி டிஷ்யூ பேப்பரில் தண்ணீர் ஊற்றி நனைத்து அந்த பெண்ணின் முகத்தைத் துடைத்தார். “ரத்தம் நிற்கவேயில்லையே!” , என்று சொன்னார் சிவப்பு மப்ளர் அணிந்து அங்கு வந்து நின்ற ஒருவர். ஐம்பதுகளில் இருந்த அந்த நபர், தலையில் ஜெல் அணிந்து படிய சீவியிருந்தார். கறுப்பு நிற கோட்சூட் அணிந்து கழுத்தில் சிவப்பு மப்ளரை சுற்றியிருந்தார். வேலை முடிந்து தோக்கியோவின் ஏதோ ஒரு மூலையிலிருக்கும் தனது வீட்டிற்கு செல்பவர். மெட்ரோ ரயில் பிடிப்பதற்க்கு முன் ரயில் நிலையம் அருகே இருக்கும் பாரில் ஒன்றிரண்டு கிளாஸ் பீர் அருந்திவிட்டு செல்ல இருந்தவர். முப்பதாண்டுகளாக ஒரு நாள் தவறாமல் தொடரும் வேலைநாளின் சலிப்பான வழமையிலிருந்து சட்டென்று மாறிய ஒரு மாலை அவருக்கு நிறைய உற்சாகத்தை கொடுத்திருந்தது. ஒரு பெரிய சம்பவத்தின் சாட்சியாக அங்கு நின்றிருப்பது போல் உணர்ந்தார். “ஆம்புலன்ஸை அழைத்து விட்டீர்களா?” என்று சுற்றிலும் நின்றவர்களை கேட்டபடி தனது கைப்பேசியை எடுத்தார் அவர். அவருக்கு முன்னதாக அங்கு வந்திருந்த அந்த கல்லூரி மாணவர்கள், “நாங்கள் ஆம்புலன்ஸை அழைத்துவிட்டோம்.இப்போது வந்துவிடும்”, என்று சொன்னார்கள். சட்டென்று ஒரு பெரும் செயல் கையை விட்டுப்போனது போல் உணர்ந்த சிவப்பு மப்ளர்காரர் ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு,  என்ன நடந்தது என்று கல்லூரி மாணவர்களிடம் கேட்டார். “சம்பவம் நடந்தபோது நாங்களும் இங்கு இல்லை. விபத்தாகதான் இருக்கும்”, என்று சொன்னான் குறுந்தாடி இளைஞன். “போலிஸையும் அழைத்து விடலாம். பாவம், அந்த பெண்ணுக்கு நன்றாக அடிபட்டிருக்கிறது”, என்று சொன்ன சிவப்பு மப்ளர், அவராகவே 110க்கு தொடர்புகொண்டு, சாலையின் பேரை அங்கிருந்த பலகையில் படித்து, அருகிலிருந்த கட்டிடத்தை அடையாளம் சொல்லி போலிஸை அழைத்தார்.  

இப்போது கூட்டத்தின் கவனம் துடைத்துக்கொண்டிருந்த பெரியவர் மீது திரும்பியது. பெரியவருக்கு எப்படியும் எழுபது வயதுக்கு மேலிருக்கும். அவர் ஓட்டி வந்த மிதிவண்டி, அருகில் நின்றிருந்தது. அந்த மிதிவண்டியில் தொங்கிய பாலிதின் பையில் ரெடிமேடு நூடூல்ஸ் டப்பாக்கள், பிரெட் பாக்கெட் போன்ற உடனடி உணவு பொருட்கள் தெரிந்தது. தோக்கியோவில் தனியாக வசிக்கும் எத்தனையோ முதியவர்களில் ஒருவர் என்று தோன்றியது. அவர் கடந்துவந்த எந்த ஒரு சிறிய மாற்றமுமில்லாத, எத்தனையோ சாதாரண நாட்களில் ஒன்றாக அந்த நாள் இருந்திருக்கவேண்டும். சட்டென்று மாறிய சூழலின் கணத்தில் அவர் தடுமாறியிருந்தார். அருகிலிருக்கும் அங்காடியில் அவர் பொருட்கள் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு திரும்பியிருக்கவேண்டும். சாலையோரம் விழுந்து கிடந்த பிங்க் நிற மிதிவண்டி அந்த இளம்பெண்ணுடையதாக இருக்கவேண்டும். நேருக்கு நேர் மோதியிருக்கிறார்கள் என்று தெரிந்தது.

“மன்னிக்கவும், இங்கிருக்கும் யாரிடமாவது டிஷ்யு பேப்பர்கள் இருக்கிறதா?”, என்று கேட்டார் அந்த பெரியவர். மத்திய வயது பெண் தன்னுடைய தோள்பையில் தேடி டிஷ்யு பேப்பர்களை எடுத்துக்கொடுத்தார். நன்றி சொல்லி பெற்றுக்கொண்ட பெரியவர் மறுபடியும் குனிந்து அந்த பெண்ணின் கால்களை துடைத்து விட தொடங்கினார். குளித்து முடித்து, தலையிலிருந்து தண்ணீர் சொட்ட சொட்ட ஓடி வரும் பெண் குழந்தையை துவட்டிவிடும் தந்தை என அவர் தோன்றினார். அங்கு நிற்கும் யாரிடமும் என்ன நிகழ்ந்தது என்பதை விளக்க முனையாமல், அமைதியாக அந்த பெண்ணை துடைத்துவிடுவதிலேயே கவனமாக இருந்தார். 

“ரத்தம் நிற்கவேயில்லை” என்று மறுபடி சொன்னார் சிவப்பு மப்ளர்காரர்.  அந்த பெண் இந்த முறை இன்னும் அதிக சத்தத்துடன் அழுதாள். கைப்பேசியில் யாரிடமோ தொடர்புக்கொண்டு “தன்னால் இன்று வரமுடியாது, மன்னிக்கவும்” என்று அழுதபடியே கூறினாள். அவளை கைத்தாங்கலாக பிடித்துக்கொண்ட மத்திய வயது பெண், டிஷ்யு பேப்பரை சுருட்டி அடிப்பட்டிருந்த மூக்கில் ரத்தம் வழியாமல் நிற்கும்படி சொருகினாள். மூக்கில் சொருகிய பேப்பருடன், “நான் இப்போது மருத்துவமனைக்கு போகவேண்டுமா?”, என்று கேட்டாள் அந்த இளம்பெண். “ஒன்றும் இல்லை, எல்லாம் சரியாகிவிடும்” என்று ஆறுதலாக சொன்னார் மத்திய வயதுபெண். “அய்யோ நான் மருத்துவமனைக்கு போகணுமா!”, என்று மறுபடியும் அழுதாள். “நான் ஒழுங்காதானே வந்தேன்”, என்று அவள் அழுதபோதும், பெரியவர் ஏதும் பேசாமல் அந்த பெண்ணின் முகத்தில் வழியும் ரத்தத்தை துடைக்க முயல, மிகுந்த கோபத்துடன் அவருடைய கைகளைத் தட்டிவிட்டாள்  அந்த இளம்பெண். பரிதாபமாக அவளை பார்த்த பெரியவர், அவருடைய மிதிவண்டி அருகே போய் இருக்கையில் வலது முழங்கையை ஊன்றி, தலையைப் பிடித்தபடி  நின்றுக்கொண்டார்.

“பெரும்பாலும் வயதானவர்களால்தான் இம்மாதிரி விபத்துகள் நிகழ்கின்றன”, என்றார் சிவப்பு மப்ளர்காரர்.

“ஆம், அவர்கள் வாகனங்கள் ஓட்டி வருவது அவர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே ஆபத்து.”, என்றார் புதிதாக அங்கு வந்து நின்றிருந்த சாம்பல் நிற சூட் அணிந்தவர்.

“இவரிடம் விபத்து காப்பீடு கூட சரியாக இருக்கும் என்று தோன்றவில்லை. இந்த பெண்ணுக்கு நன்கு அடிப்பட்டிருக்கிறது. நிச்சயம் நிறையச் செலவாகும். இவள் அழுவது பரிதாபமாக இருக்கிறது. ஏதோ நிகழ்ச்சிக்கு புறப்பட்டு போனவளை இப்படி இடித்து தள்ளியிருக்கிறார்”

“அவருடைய தலையில் இந்த பெண்ணின் முகம் மோதியிருக்கவேண்டும். ரத்தம் வழிவது நிற்கவேயில்லை. எப்படியும் மருத்துவமனையில் இருக்க வேண்டி வரும். உதட்டிலும் நன்றாக அடிபட்டிருக்கிறது.” என்றார் சாம்பல் நிற சூட்காரர்.

குறுந்தாடி இளைஞன் சாலை குறுக்கே சென்று ஆம்புலன்ஸ் வருகிறதா என்று பார்த்தான். பிறகு மெதுவாக நடந்து வருகையில் ஏதோ கண்டுபிடித்தவன் போல் முகத்தில் மெல்லிய பிரகாசத்துடன் என் அருகே வந்தான்,

“தாத்தா இடது பக்கமாக சரியான திசையில்தான் மிதிவண்டி ஓட்டி வந்திருக்கிறார். இந்த பெண் தவறாக வலதுபக்கமாக வந்து குறுக்கு சாலையில் செல்ல மிதிவண்டியை திருப்பியிருக்க வேண்டும். அப்போதுதான் இருவரும் மோதியிருக்கவேண்டும். தாத்தா மீது தவறில்லை”, என்றான்.

குறுந்தாடி இளைஞனின் நண்பனும் இப்போது சாலையை அவதானித்து. “ஆம் தாத்தா சரியான திசையில் தான் வந்திருக்கிறார்”, என்றான்.

தாத்தாவின் அருகே சென்ற குறுந்தாடி இளைஞன், “உங்களுக்கு எங்கேனும் அடிப்பட்டிருக்கிறதா?”, என்று கேட்டான்.

அப்போதுதான் சுரணை பெற்றவர் போல் தனது வலது நெற்றியோரம் நெல்லிக்காய் போல் இருந்த புடைப்பை நீவிவிட்டுக்கொண்டார் தாத்தா. “இல்லை, இது சரியாகிவிடும்” என்றார்.

தாத்தா, நீங்கள் சரியாகதான் வந்திருக்கிறீர்கள். போலிஸ் வந்தவுடன் அதை சொல்லுங்கள் என்று கிசுகிசுப்பாக அவரிடம் கூறினான் குறுந்தாடி இளைஞன்.

சுவாரஸ்யமில்லாமல் அதை கேட்டுக்கொண்ட அந்த பெரியவர், “ஆம்புலன்ஸ் இன்னும் வரவில்லையே”, என்றார்.

உங்களுக்கும் அடிபட்டிருக்கு தாத்தா. போலிஸிடம் எல்லாவற்றையும் சொல்லுங்கள். நீங்கள் இடது பக்கமாக தான் வந்திருக்கிறீர்கள்.

“ம்ம்..இளம்பெண்ணுக்கு ரத்தம் நின்றுவிட்டால் போதும். வீக்கம் எல்லாம் சில நாட்களில் சரியாகிவிடும். பாவம் ரொம்ப வலிக்கிறது போல்”, என்றார் தாத்தா.

ரத்தம் சாலையில் கொட்டியிருந்ததை, அழுதபடியே சென்று தனது கைப்பேசியில் படம்பிடித்தாள் அந்த இளம்பெண். கேமராவை திருப்பி வீங்கியிருந்த வாயைத் திறந்து பார்த்து, “அய்யோ..” என்று மீண்டும் கதறினாள். அவள் பேச முயற்சித்து வாயிலிருந்து கொழகொழவென்று ரத்தமும் எச்சிலுமாய் துப்பினாள்.  

சாலை நடுவே இப்படி நிற்பது ஆபத்து. தயவுசெய்து ஓரமாக வந்துவிடுங்கள். என்று அவளது கையைபிடித்து தாங்கலாக அழைத்துச்சென்றாள் அந்த பள்ளிமாணவி.

“இவ்வளவு நேரமாக ஆம்புலன்ஸ் வராமல் இருப்பது ஆச்சரியம்தான். தோக்கியோவில் இப்போதெல்லாம் இப்படி நடப்பது சகஜமாகி விட்டது”, என்றார் சிவப்பு மப்ளர்காரர்.

சாலையில் சென்ற கார்கள், கூட்டத்தை கவனித்து, வேகத்தை சட்டென்று குறைத்து என்ன நடக்கிறது என்று கவனித்துசென்றார்கள். சாலையோரம் கிடந்த இளம்பெண்ணின் பிங்க் நிற மிதிவண்டியை, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இன்னும் ஓரமாக நகர்த்தி போட்டான் குறுந்தாடி இளைஞன்.

சற்று நேரத்தில், ஆம்புலன்ஸ் வண்டியின் சைரன் ஒலி உரக்க கேட்டது. இரண்டு ஆம்புலன்ஸ் வண்டிகள் ஒன்றின் பின் ஒன்றாக வந்து யூ டர்ன் செய்து எங்கள் அருகே வந்தது. கூடவே போலிஸ் காரின் சைரன் சத்தமும் கேட்டது. போலிஸ் காரை கண்ட குறுந்தாடி இளைஞன் மீண்டும் தாத்தாவின் அருகே வந்து, “எல்லாவற்றையும் அவர்களிடம் சொல்லுங்கள். நீங்கள் சரியாகதான் வந்திருக்கிறீர்கள்.”, என்றான்.

பெரியவர், “அந்த பெண் மட்டும் போனில் பேசியபடியே வராமல் இருந்திருந்தால்..”, என்று முனகியபடியே தனது மிதிவண்டி அருகே சென்றார். நிதானமாக தனது மிதிவண்டியில் தொங்கிய பாலிதீன் பையிலிருந்து ஒரு பீர் கேனை எடுத்து அதைத் திறந்தார். .

அதைக்கண்ட குறுந்தாடி இளைஞன் பதறிப்போனவனாய் அவரருகே ஓடிவந்து, “தாத்தா, தயவு செய்து இப்போது குடிக்காதீர்கள். உங்கள் மீது தவறே இல்லை. நீங்கள் இப்போது குடித்திருந்தால், உங்கள் மீதுதான் குற்றம் என்று ஆகிவிடும். வேண்டாம் அதை உள்ளே வையுங்கள் போலிஸ் வந்துவிட்டார்கள் ”, என்றான்.

பெரியவர் எதுவும் பேசாமல் ஒரு மடக்கு குடித்தார். ஆம்புலன்ஸிலிருந்து வெளியே இறங்கிய மருத்துவமனை ஊழியர்கள், ஸ்டெரச்சரில் இளம்பெண்ணை படுக்கவைத்து ஏற்றினார்கள். அந்த பெண் “நான் மருத்துவமனை போகவேண்டுமா” என்று அவர்களிடம் கேட்டு அழுதாள். “என்னுடைய மிதிவண்டி அங்கே கிடக்கிறது”, என்றாள். “அதை போலிஸ்காரர்கள் பார்த்துக்கொள்வார்கள். நீங்கள் தயவுசெய்து படுத்துக்கொள்ளுங்கள்”, என்று கூறினார்கள் மருத்துவமனை ஊழியர்கள்.

போலிஸ்காரிலிருந்து இரு காவல் அதிகாரிகள் இறங்கினார்கள். தங்களை அழைத்தவர் யாரென்று கேட்டு, சிவப்பு மப்ளர் அணிந்தவரை தனியே அழைத்துச்சென்று என்ன நிகழ்ந்தது என்று கேட்டார்கள்.

தனது மிதிவண்டியில் சாய்ந்து பீரை குடித்துக்கொண்டிருந்த பெரியவரிடம் குறுந்தாடி இளைஞன் மன்றாடினான்.

நீங்கள் செய்வது புரிகிறதா? குடித்துவிட்டு விபத்து ஏற்படுத்தினால், சிறைக்கு செல்ல நேரிடும். தவறே செய்யாமல் மாட்டிக்கொள்வீர்கள் தாத்தா. தயவு செய்து பீர் கேனை மூடி உள்ளே வையுங்கள்.

“தனியே வாழ்வது கொடுமையானது”, என்ற பெரியவர் மிச்சமிருந்த பீரையும் குடித்தார்.

Previous articleஉலராதிருக்கும் வரை
Next articleபருத்திப்பூ
ரா.செந்தில்குமார்
ரா.செந்தில்குமார் மன்னார்குடியை பூர்வீகமாக கொண்டவர். 1976 ஆம் ஆண்டு ஜூலை 23ம் தேதி பிறந்தவர். ஜப்பான், டோக்கியோவில் 20 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இசூமியின் நறுமணம் மற்றும் பதிமூன்று மோதிரங்கள் என இரு சிறுகதை தொகுப்புகள் வெளியாகி பரவலானக் கவனத்தைப் பெற்றுள்ளது. சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.