கணவனுக்கான தையல்

(இந்தக் கதையை நீங்கள் சத்தம் போட்டுப் படிக்கிறீர்கள் என்றால் கீழே குறிப்பிட்ட தொனியில் கதை மாந்தர்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்றவாறு
உங்கள் குரலில் மாற்றங்கள் செய்து படியுங்கள்.

குழந்தையாக நான் : கீச்சென்ற ,எளிதில் மறக்கக்கூடிய வகையில் உள்ள குரல்

வளர்ந்த பெண்ணாக :  அதே போல கீச்சென்ற சிறுவயதின் குரல்.

வளர்ந்து என் கணவனாகப் போகிற சிறுவன் : வலுவான அதே நேரம் தற்செயலானதொரு தொனியில் உள்ள குரலைப் பிரயோகியுங்கள்.

என் தந்தை: கனிவோடும்  அதிகாரத்தோடும் ஓங்கி ஒலிக்கும் குரல் ..உங்கள் தந்தையைப் போல அல்லது நீங்கள் தந்தையாக  நினைத்த ஒருவரின் குரலைப் போல.

என் மகன்:  சிறு குழந்தையாக : மென்மையான மிக மெல்லிய மழலை கலந்த குரல் .
வளர்ந்த ஆணாக:  அவனுடைய அப்பாவைப் போல.

மற்ற எல்லாப் பெண்கள் : என் குரலைப் போலவே.)

 

தொடக்கத்திலேயே  எனக்கு அவன் தேவை என்று தெரிந்தது.  அவனுக்கு
இது தெரியும் முன்பே என்னால் அதை உணர முடிந்தது. இப்படிச் செய்வது வழக்கமில்லை என்றாலும் நான் இப்படித்தான் செய்யப்போகிறேன். பதினேழு வயது  எனக்கு.நான் பக்கத்து வீட்டில் ஏதோ ஒரு  கொண்டாட்டக் கூடுகையில்  என் பெற்றோருடன் இருக்கிறேன்.
அப்பா கவனிக்காத வேளையில், என் வயதொத்த தோழியுடன் வெள்ளை வைன் அரை கோப்பை குடித்து  முடித்திருக்கிறேன் .அந்த அறையில் எல்லாமுமே தைல வண்ண ஓவியம் ஒன்றைப் போல மென் ஒளியுடன் சுழல்கிறது.

அவன் என் பக்கம் திரும்பவில்லை. கழுத்து மற்றும்
தோள்பட்டையின் தசைகளின் திரட்சியால் அவன் அணிந்துகொண்டிருக்கும் சட்டை இறுக்கமாக  இருப்பதைப் பார்க்கிறேன். உடல் உழைப்பால் வாழ்பவனின் முதுகைப்போல. என் உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றன. நானும் அழகானவள்தான். என் உதடுகள் அழகானவை .என் மார்புகள் உடைகளையும் மீறித் திமிறிக்  கொண்டிருப்பது  எப்படியோ குழந்தைத்தனமாகவும் அதே நேரத்தில் சிறிது கிளர்ச்சியூட்டக் கூடியதாகவும் இருக்கும். நான் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த நல்ல பெண். எனக்கு வேறு ஆண்கள் கிடைப்பார்கள்  ஆனாலும் அவனுடைய முகத்திலிருக்கும் ஒரு உறுதி ,ஒரு நிரந்தரத் தன்மை என்னைக் கவர்கிறது. ஒரு மலை உச்சியின் செங்குத்தான பாறையைப் போல் இருக்கின்றன அவனுடைய முகத்தின் அவயங்கள் . அவனுக்கும் நான் தேவைப்பட்டிருக்கலாம்.

செய்யக் கூடாதவற்றைத் தன்  ரகசிய காதலனிடம்  செய்யக் கேட்ட ஒரு பெண்ணைப் பற்றிய கதையை நான் கேள்விப் பட்டிருக்கிறேன்.
அவன் அவளுடைய குடும்பத்தாரிடம் இதைப் போட்டு உடைத்து அவளை
மனநல காப்பகத்தில் கொண்டு விடுவதாகக் கதை முடியும். அப்படி அவள் எதைக் கோரினாள் என்று தெரிந்துகொள்ளத் தீராத ஆசை உண்டெனக்கு.
நமக்குத் தெரிந்த இவ்வுலகத்தை விட்டு வேறு உலகத்தில் தள்ளி விடக் கூடிய அந்த புதிரான பேராசை என்னவாக இருக்கும்?

அவன் என்னைப் பார்த்துவிட்டான். நல்லவனாகத் தெரிகிறான். சிறிய
பதட்டத்துடன் என் பெயரைக் கேட்கிறான். எனக்கான தருணங்களை நான் எப்போதும் தேர்ந்தெடுக்க விரும்புவேன்.
இத்தருணத்தை நான் தேர்ந்தெடுக்கிறேன். நான் அவனை முத்தமிடுகிறேன். அவன் முதலில் மெதுவாகவும் பின்பு விசையோடும் என்னை பதில் முத்தமிடுகிறான். அவனுடைய நாக்கால் என் உதடுகளைப்
பிரிக்கிறேன் . இருவருக்கும் இது ஆச்சரியமளிக்கிறது . இரவுகளில்
என் கனமான போர்வைக்கு அடியில் நான் பல கனவுகள்
கண்டிருக்கிறேன். ஆனால் அது எல்லாவற்றையும் மீறிய
இன்பமளிப்பதாக இந்த முத்தம் இருந்தது. முத்தம் தந்த போதையில்
முனங்குகிறேன். பின் என் கழுத்தைப் பார்க்கிறான்.
‘’இது என்ன?” என்கிறான்.
“ஓ இதுவா..” நான் என் கழுத்தில் கட்டப்பட்டுள்ள ரிப்பனைத்
தொட்டுப் பார்க்கிறேன் “ஒன்றுமில்லை என் ரிப்பன்” .
அதன் பட்டையான பச்சையான நீளத்திற்குக் கழுத்தைச்சுற்றி என் விரல்களை ஓட விட்டு முன்னால் போடப்பட்டிருக்கும் அழகான முடிச்சில்
வந்து நிறுத்துகிறேன். அவன் கைகள் என் ரிப்பனை நோக்கி
நீள்கின்றன, அதைத் தட்டி விடுகிறேன்.
“நீ தொடக்கூடாது” என்கிறேன்..
விடைபெறுவதற்கு முன் மறுபடி சந்திப்போமா? எனக் கேட்கிறான்.
கண்டிப்பாகச் சந்திக்கலாம் என்கிறேன். இரவு தூங்குவதற்கு
முன் மறுபடி அந்த முத்தத்தை நினைத்துப் பார்க்கிறேன். …
அவனுடைய நாக்கு என் உதடுகளைப் பிரிப்பதை, நரம்பும் தசையுமாக
என்னை மகிழ்விக்க விருப்பமாக இருந்தான். நாங்கள் திருமணம்
செய்து  கொள்வோம் என்று எனக்குப் புரிந்துவிட்டது.

ஆனால் அதற்கு முன் இருட்டில் தன்னுடைய காரில், சதுப்பான குளக்கரைக்கு என்னை அழைத்துச் செல்கிறான். என்னை முத்தமிடுகிறான். என் முலைகள் அவனுடைய விரல்களுக்கு அடியில் விரைக்கின்றன. உண்மையாகவே என்ன செய்யப் போகிறான் என்பது அவன் அதைச் செய்வதற்கு முன்பு  நான் யோசித்திருக்கவில்லை.  கடினமாக, உறுதியாக, புதிதாகச் சுட்ட ரொட்டியின் மணத்துடன் மிகவும்
விரும்பத்தக்கவனாக இருக்கிறான். என்னைக் கிழித்து என்னுள் நுழைகிறான். கடலின் நடுவில் தொலைந்து போனவளைப் போலச் சிறு வலியுடனும் பெரும்  இன்பத்துடனும் அவனைப் பற்றிக் கொள்கிறேன்.  எங்கள் உடம்புகள் பிணைந்துகொள்கின்றன. அவன் மேலும் மேலும் தன்னை என்னுள் செலுத்திக்கொண்டிருக்கிறான்.   முடித்த போது என் ரத்தம் அவன் உடம்பில் வழிந்து கொண்டிருக்கிறது. அந்தச் சீரான தாளகதி, அவனுடைய மறுக்கவியலாத தேவை, முடிந்த பின்வரும் ஆசுவாசம் என்னைக் கவர்கிறது. மேலும் தூண்டுகிறது. அவன் காரின் இருக்கையில் சரிந்து விழுகிறான். இரவு நேர குளத்தின்
அரவங்கள் கேட்கின்றன ….லூன் பறவைகளும் , க்ரிக்கொட் பூச்சிகளும்
பேன்ஜோவின் நரம்புகளை மீட்டுவது போன்ற ஒரு ஒலியும். குளத்திலிருந்து வீசும் காற்று என்னைக் குளிர்விக்கிறது.
இப்போது என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. என் கால்களுக்கிடையில் என் இதயம் துடித்துக்கொண்டிருக்கிறது. இப்போது வலி இருந்தாலும் போகப்போக இது தரப்போகும் இன்பத்தை என்னால் எண்ணிப்பார்க்க முடிகிறது. என் கைகளை என் உடம்பு முழுதும் தடவிச் செல்கிறேன். எங்கோ வெகு தூரத்தில்  தெரியும் அந்த சுகத்தின் சாயல்களை என்னால் உணர முடிகிறது. அவனுடைய மூச்சு நிதானமாகிறது. என்னைக் கவனித்துக்
கொண்டிருக்கிறான். ஜன்னலிலிருந்து வரும் நிலவொளியில்
என் மேனி மினுங்குகிறது. கையை விட்டுத் தவ்வி பிடிக்கும் உயரத்தில்
மேலே செல்கின்ற பலூனின் நூல் என் விரல்களில் புரியும்
சாகசத்தைப் போல இந்த இன்பத்தை என்னால்
கொஞ்சம் எட்டினால் பிடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையை அவன் பார்வை தருகிறது. என்னுடைய உச்சத்தை மெதுவாக எட்டி பல்லைக்
கடித்துக்கொண்டு அதைக் கடக்கிறேன்.
” எனக்கு இன்னும் தேவை ” என்கிறான் . ஆனால் அதற்காக எந்த
முயற்சியும் செய்யவில்லை. இருவரும் ஜன்னல் வழியே வெளியில்
இரவைப் பார்க்கிறோம். அந்த இருட்டில் ஏராளமானவை நகர்ந்து கொண்டிருக்கலாம் என்று எனக்குத் தெரியும்…. கொக்கி கையன், அதே
பாதையில் தினமும் வண்டிகளை நிறுத்தும் ஒரு பயணி பேய், குழந்தைகளின் குரலால் ஈர்க்கப்பட்டு வரும், பின்  கண்ணாடியினுள் ஓய்வெடுக்கும் வயதானவள்… எல்லாருக்கும் இந்தக் கதைகள் தெரியும்… ஆனால் யாரும் நம்புவதில்லை. அவன் ஒரு கனம் நீரைப் பார்த்துவிட்டு பின் என்னைப் பார்க்கிறான்.

” உன் ரிப்பனைப் பற்றிச் சொல் ”

” சொல்ல ஒன்றுமில்லை. அது என் ரிப்பன்”

” அதை நான் தொடவா?”

” கூடாது”

” எனக்கு அதைத் தொடவேண்டும் போல உள்ளது”

அவனுடைய விரல்களில் லேசான நடுக்கம். நான் எழுந்து நேராக அமர்கிறேன். குளத்திலிருந்து ஏதோ ஒன்று தன் தசைகளை இறுக்கி , ஒருசத்தத்துடன் நிலத்தில் குதிக்கிறது .

” மீனாக இருக்கும்” என்கிறான்.

” வேறொரு நாள் இந்தக் குளத்தைப் பற்றி அதில் உறையும் உயிரினங்களைப் பற்றிய கதைகளை உனக்குச் சொல்கிறேன்”  என்கிறேன்.

என்னைப் பார்த்துப் புன்னகைக்கிறான்.  ஏதோ யோசனையில் தன் தாடையைத் தடவுகிறான். என்னுடைய ரத்தம் அவன் முகத்தில் கீற்றாய் படிகிறது. அவன் அதை உணரவில்லை. நான் ஒன்றும் சொல்லவில்லை.

” எனக்குக் கதைகள் பிடிக்கும் ” என்கிறான்.

” வீட்டிற்குப் போகலாம் ” என்கிறேன்.

அன்று இரவு குளிக்கும் போது  துரு ஏறிய இரும்பின் வாசனையை, அவனுடைய வாசனையை, அவனுடைய நிறத்தைக் கழுவுகிறேன். முன்னெப்போதையும் விடப் புதிதாக உணர்கிறேன் .

என் பெற்றோருக்கு அவனை மிகவும் பிடித்து விடுகிறது. நல்ல பையன்.
நாளை நல்ல ஆண் மகனாக வளர்வான் .அவனுடைய வேலை,
பொழுது போக்குகள், குடும்பம் பற்றியெல்லாம் கேட்கிறார்கள். அப்பாவின் கையை உறுதியாகப் பற்றிக் கைகுலுக்குகிறான். அம்மா வெட்கத்தில் சிறுபெண்போலச் சிவந்துபோகும் அளவிற்கு அவளை மிகையாகப் பாராட்டுகிறான் .

வாரத்தில் இருமுறை சில சமயங்களில் மூன்று முறை கூட எங்கள் வீட்டிற்கு வருகிறான். அம்மா அவனை இரவு விருந்துக்கு அழைக்கிறாள். எல்லோரும் உணவு உண்ணும் போது என் நகங்களை அவன் கால் தொடையில் பதிக்கிறேன். ஐஸ்க்ரீம் உண்ட பிறகு அவனுடன் சிறிது நேரம்
வெளியில் செல்வதாகக் கூறிவிட்டு கைகோர்த்தபடி தெருவில்
நடக்கிறோம். வீடு கண்களை விட்டு மறையும் தொலைவில் தெருவை
விட்டு மரங்கள் அடர்ந்துள்ள பக்கத்தினுள் அவனை இழுத்துச் செல்கிறேன். அங்கே புல் தரையில்  உடைகளை அவிழ்த்து என்னை அவனுக்கு அளிக்கிறேன்.

என்னைப் போலுள்ள பெண்களைப் பற்றிய கதைகளைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப் போல ஒரு கதையாவதில் எனக்கு
எந்த பயமுமில்லை. அவனுடைய பேண்ட் அவிழ்ந்து கீழே விழும் சத்தம்
கேட்கிறது. அவன் முழுதும் கடினமாகவில்லை என்பதை உணர்கிறேன்.
என்னை அலைக்கழிக்கக் கூடாது என்று வேண்டுகிறேன். ஒப்புக்
கொள்கிறான். அந்தப் புல்வெளியில் சம்போகிக்கிறோம். என் இன்பத்தின்
முனங்கல்களும், அவனுடைய நல்லூழின் சத்தங்களும் கலவையாக
இரவை நிரப்புகின்றன. இருவரும்  ஒருவரைப் பற்றி மற்றொருவர் பாடம்
பயின்றுகொண்டிருந்தோம்.

இரண்டு விதிகள் மட்டுமே உண்டு. என்னுள் ஸ்கலிதமாகக் கூடாது. என்
பச்சை ரிப்பனைத் தொடக்கூடாது. அவன் மண் தரையில் மீதியைத் தொடர்கிறான்.

எங்கள் உடம்புகளில் அப்பியிருந்த மண்ணைத் தட்டிவிட்டு ஆடைகளைச்
சரிசெய்து, முடியின் பின்களை மறுபடி பொருத்துகிறேன்.  பின் நோக்கிப் படிய வாரிய தலையில் ஒரு சுருள் முடிக்கற்றை மட்டும்  தன்னை விடுவித்து முன்னால் வந்து விழுகிறது. அதை மறுபடி  அதன் இடத்தில் அழுத்தி வைக்கிறேன். சிற்றோடையில் எங்கள் கைகளைக் கழுவிக்கொள்கிறோம். கைகோர்த்தபடி வீடடைகிறோம். அம்மா  காப்பி போட்டுத் தருகிறாள். அப்பா அவனுடைய வேலையைப் பற்றி விசாரிக்கிறார்.

( இந்தக் கதையை நீங்கள் உரக்கப் படிக்கிறீர்கள் என்றால் புல்வெளியில் நடந்தவற்றைப் படிக்கும் போது

ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெகு நேரத்திற்கு அப்படியே வைத்திருங்கள்,

பின் ஒரு உயர்ந்த தூண் கீழே சரிவதைப் போல ஒரே நொடியில் விசையோடு மூச்சை வெளிவிடுங்கள்.

இதையே மறுபடி மறுபடி செய்யுங்கள். மூச்சை உள்ளே பிடித்து வைக்கும் நேரத்தை மட்டும் குறைத்துக் கொண்டே வரவேண்டும்.)

நான் எப்போதும் ஒரு கதைசொல்லியாகத் தான் இருந்திருக்கிறேன். சிறு
வயதில் அம்மா என்னைக் காய்கறி வாங்க அழைத்துச்சென்றாள்.
உருளைக்கிழங்குகளுக்கு நடுவில் கால் விரல்கள் சில இருப்பதைக்கண்டு
பயந்து அலறியிருக்கிறேன். அங்கு எல்லா பெண்களும் அக்கறையுடன் திரும்பிப் பார்த்தனர். வீட்டிற்கு வந்தவுடன் அம்மா அவை உருளைக்கிழங்குகள், கால்விரல்கள் இல்லை என்றாள். ஆனால் எனக்குத் தெரியும் கிழங்குகளுக்கிடையில் வெட்டப்பட்ட ரத்தம் தோய்ந்த கால் விரல்கள் இருந்தன. தொட்டால் ஐஸ்கட்டியைப் போலக் குளிர்ந்து ஒரு கொப்புளத்தைப் போல அமுங்கின. இதை அம்மாவிடம் கூறிய போது திடுக்கிட்ட பூனை ஒன்றைப் போல அவளுடைய கண்களுக்குப்பின் உள்ள திரவம் இடம் மாறியது.

” நீ இப்படியே உட்கார்ந்து இரு “என்றாள்

வேலை முடிந்து வீடு வந்த அப்பா என் கதையைக் கேட்டார்.

” நீ பார்ன்ஸ் இடம் பேசினாயா? ” என்றார்

பார்ன்ஸ், பனிப்பொழிவிற்கு முன்னுள்ள வானத்தைப் போல வெள்ளை முடியுடன், இந்த சந்தையை நடத்துபவர். அவரை ஒரு முறை பார்த்திருக்கிறேன்.
“பார்ன்ஸ் ஏன் கால்விரல்களை விற்கப் போகிறார்?” என்றார்
“அவருக்கு எங்கிருந்து அவை கிடைக்கும்?”
இடுகாடுகளைப் பற்றியும் பிணவறைகளைப்பற்றியும் அறிய வாய்ப்பில்லாத சிறு வயதெனக்கு. அதனால் இந்தக் கேள்விகளுக்கு என்னிடம் பதிலில்லை.

“அப்படியே எங்கிருந்தோ இந்த விரல்கள் கிடைத்திருந்தாலும் அதை விற்பதால் அவருக்கு என்ன லாபம்?”

நான் என் கண்ணால் பார்த்தேன் அங்கு கால்விரல்கள் இருந்தன ஆனால் அப்பாவின் தர்க்கப்பூர்வமான வார்த்தைகளுக்குப் பின் என் கண்களின் மேலேயே எனக்குச் சந்தேகம் வரத் தொடங்கியது.

” முக்கியமாக….” அப்பா தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்

” உன்னைத்தவிர வேறுயாரும் அதைப் பார்க்கவில்லையே ஏன்?”

ஒரு ஜோடிக் கண்கள் மட்டுமே பார்க்கக் கிடைக்கிற உண்மையானவை உலகத்தில் உண்டு என்று  வளர்ந்த பெண்ணாக இன்று எனக்குத் தெரியும். ஆனால் அன்று அவருடைய வார்த்தைகளை ஏற்றுக் கொண்டேன். என்னை அள்ளி முத்தமிட்டுவிட்டு  அனுப்பிவிட்டார்.

பொதுவாகப் பெண்கள் ஆண்களுக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை என்றாலும் என்னுடைய தேவையைத் தானே நான் அவனிடம் சொல்கிறேன். நான் தூங்கும்தருவாயில் என் கண்களினுள் ரசவாதம் புரிபவைகளைப் பற்றி, என்னுடைய தேவையும் ஏக்கமும் கைமீறும் நேரம் கண்களில் ஒளிரும் பிரத்தியேக ஒளியைப் பற்றி  இப்படி அவனிடம் எதையும் மறைக்காமல் சொல்கிறேன்.

என்னுடைய வாயையும் என் தொண்டையையும் கூட அவன் கேட்கும் போது தந்து இயற்கையாக வரும் குமட்டலைக் கட்டுப்படுத்தி அவனை முழுவதும் ஏற்கப்பழகிக்கொண்டேன். என்னுடைய மிக மோசமான ரகசியங்களைப் பற்றிக் கேட்டான்.  பள்ளி ஆசியர் ஒருவர் பள்ளி முடிந்த பின் என்னை மட்டும் தனியாக இருத்தி தன் உறுப்பைப் பிடிக்கக் கொடுத்ததைப் பற்றியும் பின் வீடு வந்து கைகளை ரத்தம் வரும் வரை தேய்ப்பானால் தேய்த்துக் கழுவியதைப் பற்றியும் அவனிடம் சொல்கிறேன். அவ்வளவு கோபமும் அவமானமும் அன்று ஏற்பட்டது. அதை இன்றும் என்னால் உணர முடிகிறது. பிறகு ஒரு மாதத்திற்கு மேல் இரவில் பயந்து விழிக்கும் படி கனவுகள் படுத்தின. என்னுடைய பதினெட்டாவது வயது முடிவதற்குச் சில நாட்களுக்கு முன் தன்னைத் திருமணம் செய்யச் சம்மதமா என்கிறான். மனமுவந்து ஒப்புக்கொள்கிறேன்.

அப்போது பூங்காவின் இருக்கையில் அவன் மடியில் அமர்ந்திருக்கிறேன். கீழே நடப்பவை தெரியாத வகையில் என் ஸ்கர்ட்டை குடை போல பரத்திவைத்திருக்கிறேன்.” எனக்கு உன்னுடைய பல பகுதிகள் தெரியும். இனி உன்னை முழுமையாகத் தெரிந்துகொள்வேன்” என்கிறான்.

தோழிகளுடன் பந்தயம் கட்டிக்கொண்டு இரவில் இடுகாட்டிற்குப் போன
ஒரு பெண்ணைப் பற்றிய கதை ஒன்று சொல்வார்கள். அவளுடைய தப்பு தான் அது. நடு  இரவில்  புதைமேட்டில் நின்றால் உள்ளிருந்த கை ஒன்று நிற்பவரை இழுத்துப் புதைத்துவிடும் என்று அவளுடைய தோழிகள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு அவள் இளக்காரமாகச் சிரித்திருக்கிறாள். ஒரு பெண்ணாக அவள் செய்த முதல் பிழை அது.
“ஒன்றுமில்லாததைப் பற்றிய பயத்தில் இந்த சிறிய வாழ்வை வீணாக்கக்கூடாது” என்று சொல்லியிருக்கிறாள். “நான் எப்படி தைரியமாக இருப்பது என்று காண்பிக்கிறேன்”. தற்பெருமை இரண்டாவது பிழை.

அவளிடம் ஒரு கத்தியைக் கொடுத்து ( அடையாளத்திற்குப் புதைமேட்டில் குத்தி வைக்க ) அவளை அனுப்பியுள்ளனர். சில கதைசொல்லிகள்  அவள் ஏதோ ஒரு புதைமேட்டில் ஏறி நின்றாள் என்பார்கள். ஆனால் எனக்குத் தெரியும் அவள் இருப்பதிலேயே பழையதான ஒன்றைத் தேர்ந்தெடுத்திருப்பாள். அந்த நேரத்தில் தோன்றும் பயமும்
ஒரு வேளை இதெல்லாம் உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகமும்
அப்படித்தான் செய்யத் தூண்டும். ரத்தமும் சதையுமாக இருக்கும் புதிதாகப் புதைக்கப்பட்ட உடம்பை விடப் பல வருடங்களான உடம்பில் அவ்வளவு வலிமை இருக்காது என்று நினைத்திருப்பாள். மேட்டில் மண்டியிட்டு கத்தியைக் குத்தியிருக்கிறாள். ஆனால் அவளால் எழுந்து கொள்ள முடியவில்லை. கண்களுக்குப் புலப்படாத ஏதோ ஒன்று அவளுடைய உடைகளை, கால்களைப் பிடித்து உள்ளே இழுத்தது. அவளால் அங்கிருந்து தப்ப முடியவில்லை. காலையில் அவளுடைய தோழிகள் அந்த புதை மேட்டிலேயே  அவள் இறந்துகிடப்பதைப் பார்த்தார்கள். பயத்தில் இறந்தாளா, குளிரில் இறந்தாளா தெரியவில்லை.  ஆனால் இப்போது அதைப்பற்றிப் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை. அவள் நம்பிக்கை வைத்தது தப்பில்லை.  சிலர் அவள் இறப்பதற்கு விருப்பம் கொண்டு தான் சென்றாள் என்பார்கள். ஆனால் அவள் வாழ வேண்டும் என்ற விருப்பத்தினால் இறந்தவள். பெண்கள் சரியாகப் பேசுவதும் சரியாக இருப்பதும் தான் மூன்றாவது பிழை. மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் பிழையும் இதுவே.நான் திருமணம் செய்து கொள்வது என் பெற்றோருக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது.  இந்த காலத்துப் பெண்கள் வயது கடந்து மணமுடிக்கிறார்கள் என்றாலும் தான் 19 வயதில் அப்பாவை மணந்தது நல்ல முடிவு என்கிறாள் அம்மா. என் மணநாள் உடையைத் தேர்வு செய்யும் நேரத்தில் வேறு ஒரு கதை நினைவிற்கு வருகிறது. ஒரு இளம்பெண் தன் காதலனுடன் ஒருநடன கூடுகைக்குச் செல்ல விரும்பினாள். புதிதாக உடை வாங்க இயலாததால் பழைய உடைகள் விற்கும் கடையில் தனக்கு ஒரு அழகான வெள்ளை திருமண உடை ஒன்றை வாங்கினாள். அவள் விரைவிலேயே நோய் பீடித்து  இறந்து போகிறாள். அவளுடைய உடலைப் பரிசோதனை செய்த மருத்துவர் இறந்த உடல்களைப் பதப்படுத்தும் திரவம் தான் அவளுடைய இறப்பிற்குக் காரணம் என்றார். பிறகு தான் உண்மை வெளிவந்தது. இறந்த மணப்பெண் ஒருத்தியின்  உடலைப் புதைக்கும் முன் சடங்குகளைச் செய்பவருடைய உதவியாளர் சடலத்திலிருந்து உடையைத் திருடி விற்றிருக்கிறார்.

இதிலிருந்து என்ன தெரிந்து கொண்டேன் .. ஏழையாக இருப்பது உங்களைக் கொன்றுவிடும். நான் நினைத்ததை விட விலையுயர்ந்த திருமண உடையைசெச் தேர்வு செய்கிறேன். அதில் அழகாக இருக்கிறேன்

இறந்து போவதை விட எதுவுமே அழகு தானே. அதை மடித்து என்பெட்டியில் வைக்கும் போது  தன்னுடைய மணநாளில் ஒளிந்து விளையாடிய ஒரு மணப் பெண்ணின் கதை நினைவுக்கு வருகிறது . இதைப் போல ஒரு பெட்டியில் தான் அவளும் ஒளிந்து கொள்கிறாள். அது தற்செயலாக வெளியில் தாழிட்டுக் கொள்கிறது. அவளை யாரும் கண்டுபிடிக்கவில்லை தன் காதலனுடன் ஓடிவிட்டாள் என்று நினைத்துவிட்டார்கள். பல வருடங்கள் கழித்து அந்த பெட்டியில் திருமண உடையில்  மடங்கி உட்கார்ந்த நிலையில் ஒரு எலும்புக்கூட்டைக் கண்டெடுத்தார்கள். கதைகளில் மணப்பெண்களுக்குச் சரியான முடிவு அமைவதேயில்லை. இப்படித்தான் பல கதைகள் நம் மகிழ்ச்சியைத் தேடிக் கண்டுபிடித்து ஒரு மெழுகுத்திரியை ஊதி அணைப்பதைப் போல அணைத்து விடுகின்றன.

அசாதாரண குளிரான ஒரு ஏப்ரல் நாளின் மதியத்தில் எங்கள் திருமணம் நடைபெறுகிறது. திருமண உடையில் என்னைப் பார்க்கிறான் ஆழமாக முத்தமிடுகிறான் என் உடைகளுக்குள் அவனுடைய கைகள் செல்கின்றன. அவனுடைய இச்சையை உணர்கிறேன். என் உடலை எப்படி வேண்டுமோ அப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவனிடம் சொல்கிறேன். என்முதல் விதியைத் தளர்த்துகிறேன். என்னுடைய கழுத்திலுள்ள பச்சை ரிப்பனை ஒரு நொடி அவனது கட்டை விரல் தடவுகிறது. சுவரில் என்னைச் சாய்க்கிறான். அங்கேயே உறவு கொள்கிறோம். பல முறை ” நான் உன்னைக் காதலிக்கிறேன் ” என்கிறான். புனித ஜார்ஜ் தேவாலயத்தில் கால்களில் சுக்கிலம் வழியத் திருமணம் செய்துகொண்ட முதல் பெண் நான் தானா என்று எனக்குத் தெரியாது ஆனால் அப்படி நினைத்துக்கொள்ள எனக்குப் பிடித்திருக்கிறது.

தேனிலவிற்கு ஐரோப்பாவிற்கு செல்கிறோம். நாங்கள் செல்வந்தர்கள் இல்லை. ஆனால் எப்படியோ இந்தப் பயணத்தின் செலவுகளைச் சமாளிக்கிறோம். ஐரோப்பா கதைகளால் நிறைந்த கண்டம். உடலுறவுகளுக்கு இடையே அந்தக் கதைகளைத் தெரிந்து கொள்கிறேன். சந்தடிகள் நிறைந்த புராதன நகரங்கள் முதல் அமைதியான கிராமங்கள் வரை, நொதித்த பழச்சாறுகளை ருசித்துக்கொண்டு, வறுத்த இறைச்சியை அவற்றின் எலும்புகளிலிருந்து பிய்த்து உண்கிறோம். தொடர்வண்டிப் பயணங்களில் முட்டைநூடில்ஸ் மற்றும் ஆலிவ்களை ருசித்துப் பார்க்கிறோம். ராவியோலி, நான் தினமும் காலையில் ஏங்கும் ருசியான பெயர் தெரியாத பால் நிறைந்த ஒரு தானியம் , எல்லாவற்றையும் ருசிக்கிறோம். தொடர்வண்டியில் படுக்கை வசதி கொண்ட இருக்கைகளை எங்களால் வாங்க முடியவில்லை ஆனால் என் கணவன் அந்த ரயில் ஊழியரிடம் கையூட்டாகப் பணம்  கொடுத்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு காலி அறையை ஏற்பாடு செய்தான் . ரைன் நதியைக் கடக்கும் போது தென்படும்  மலைகளை விடவும் தொன்மையான ஒரு குரலில் குதூகலமாகக் கத்திக் கொண்டே என்னுடன் அந்த அறையில் உறவு கொண்டான். உலகத்தின் சிறு பகுதி தான் இது ஆனால் எல்லா இடங்களுக்கும் இப்படிப் பயணிக்கப் போகிறோம் என்ற எண்ணமே கிளர்ச்சி அளிப்பதாக உள்ளது.

( நீங்கள் இந்தக் கதையைச் சத்தமாகப் படித்துக் காட்டுகிறீர்கள் என்றால் தொடர்வண்டியில் உறவு கொள்ளும் போது  பழைய மடிக்கும் இரும்பு நாற்காலி ஒன்றை மடித்து மடித்து விரிக்கவும். அதைச்செய்து சோர்வாகிவிட்டீர்கள் என்றால் பாதி மறந்த பழைய பாடல்களை உங்களுக்கு நெருக்கமானவர்களுக்குப் பாடிக் காட்டுங்கள். குழந்தைகளுக்குத் தாலாட்டு பாடுவதைப் போல பாடுங்கள்)

 

தேனிலவிலிருந்து திரும்பியதும் என் மாதவிடாய் நின்று விடுகிறது. இதைக்கேட்ட மகிழ்ச்சியில் அவன் கண்கள் மின்னுகின்றன.” குழந்தை ” என்கிறான் கைகளைத் தன் தலைக்கு அண்டை கொடுத்தபடி

மறுபடி “ஒரு குழந்தை” என்கிறான் முகமெல்லாம் மகிழ்ச்சியுடன். கண்மூடி சிறிது நேரம் அப்படியே இருக்கிறான். தூங்கிவிட்டான் என்று நினைத்தேன். பிறகு என் பக்கம் திரும்பி

” அதுவும் பச்சை ரிப்பனோடு பிறக்குமா ?”

கோபத்தில் என் முகம் இறுகுகிறது. தன்னிச்சையாக என் கை என் கழுத்திற்குச் செல்கிறது. நிறைய பதில்கள் மனதில் தோன்றி மறைகின்றன. கவனமாக என் கோபத்தை வெளிக்காட்டாத பதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறேன்.

” அதைப் பற்றி இப்போதே ஒன்றும் சொல்வதற்கில்லை”

எதிர்பாராமல் சட்டென்று தன் விரல்களால் என் கழுத்தைச்சுற்றி ரிப்பனைத் தடவுகிறான். அவனைத் தடுக்க முயற்சி செய்கிறேன் ஆனால் தன் மற்றொரு கையால் என்னைத் தடுக்கிறான். தன் மிருக பலத்தால் என் கைகளைப் பிடித்துக் கொள்கிறான். ரிப்பனின் முடிச்சை அதனிடம் உறவு கொள்ள நினைப்பவனைப் போல தடவித் தூண்டு முயல்கிறான். அவனிடம் அதைத் தொடவேண்டாம் என்று மீண்டும் மீண்டும் கெஞ்சுகிறேன். அவன் நினைத்திருந்தால் அவனால் அந்த கணம் என் பச்சை ரிப்பனின் முடிச்சை அவிழ்த்திருக்க  முடியும். ஆனால் என்னை விடுவித்து திரும்பிப் படுக்கிறான். ஒன்றுமே நடவாததது போலத் தூங்கிவிடுகிறான். என் மணிக்கட்டுகள் வலிக்கின்றன. கண்களிலிருந்து வழியும் நீரின் ஊடாக நான் கண்ணாடியில்  ரிப்பனின் முடிச்சு சரியாக இருக்கிறாதா என்று  பார்த்து உறுதி செய்து கொள்கிறேன்.
காட்டுக்குள் தனியாக வசித்த ஒரு இளம் கணவன் மனைவி பற்றிய கதை ஒன்று உண்டு. எனக்கு பிடித்தமான கதை அது. இரவில் அவர்கள்
இருவரையும் ஒரு ஓநாய் கூட்டம் கொன்றுவிடுகிறது. ஆனால் அவர்களின்
சில மாதங்களே ஆன குழந்தையின் உடல் மட்டும் கிடைக்கவில்லை.  அவள் ஓநாய்களுடன் சேர்ந்து வளர்வதாகச் சிலர் கூறினர். அவ்வப்போது வேட்டைக்குச் சென்று வந்த சிலர் அவளைப் பார்த்ததாகக் கூறுவார்கள். கடும்பனிக் காலத்தில் அவள் ஒரு வேடைனைப் பார்த்து தன் பற்களைக் காட்டி ஓநாய்களை விடவும் ஆக்ரோஷமாக ஊளையிட்டதாகக் கூட ஒரு பேச்சு உண்டு.  ஒரு வளர்ந்த பெண்ணாகக் காட்டுக் குதிரையின் மேல் ஏற முயல்வதைக் கண்டுள்ளனர் சிலர். இறகுகள் வெடித்துச் சிதற ஒரு கோழியை அவள் கிழித்து உண்டதைப் பற்றி சிலர் பேசிக்கொண்டனர். பல வருடங்கள் கழித்து ஆற்றங்கரையில் அவள் இரண்டு ஓநாய் குட்டிகளுக்குப் பால் கொடுத்துக்கொண்டிருந்ததைப்  பார்த்துள்ளனர்.

அந்த குட்டிகள் அவளால் பிரசவிக்கப்பட்டவை என்று நான் நம்பினேன். முதல் முறையாக மனிதக்கறை படிந்த  ஓநாய் வழித் தோன்றல்களாக இருந்திருக்கும். கண்டிப்பாக  அவளுடைய மார்புகள் ரத்தக் கடிகள் பட்டிருக்கும். ஆனால் அவள் அதைப்பற்றிக் கவலைப்பட்டிருக்க மாட்டாள். ஏனென்றால் அவை அவளுடைய குட்டிகள் அவளுக்கு மட்டுமே சொந்தமானவை.  அந்த கோரைப்பற்களின் கடியில்  எங்கும் காணக்கிடைக்காத அமைதியைக் கண்டிருப்பாள். ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக என்னால் சொல்ல முடியும். மனிதர்களுக்கிடையில் இருப்பதை விட ஓநாய்களுக்கு மத்தியில் அவள் மகிழ்ச்சியாகத் தான் இருந்திருப்பாள்.

…………………

மாதங்கள் நகர்கின்றன. என் வயிறு பெரிதாகிக் கொண்டிருக்கிறது.என்
குழந்தை என் வயிற்றுக்குள் நீந்திக்கொண்டும், உதைத்துக்கொண்டும்
குத்திக்கொண்டும் இருக்கிறான்.  நடைபாதையில் நடந்து செல்லும் போது
வயிற்றைப் பிடித்துக்கொண்டே அங்கேயே தடுமாறி உட்காருகிறேன்.
சின்ன பிள்ளையே ( அப்படித்தான் கூப்பிடுகிறேன் குழந்தையை ) உன்
விளையாட்டை நிறுத்து என்கிறேன்.  வேறொரு முறை பூங்காவில்
நடக்கும் போது, மேலே செல்ல முடியாமல் அங்குள்ள இருக்கையில்
உட்கார்ந்துவிடுகிறேன். ஒரு வருடம் முன்பு இதே இருக்கையில் தான்
என் கணவன் கல்யாணம் செய்து கொள்ளலாமா? என்று கேட்டான். பலமாக மூச்சு வாங்க, கண்களில் நீர் வழிய அமர்ந்திருக்கும் என்னைப் பார்த்து ஒரு பெண்  அருந்த தண்ணீர் தருகிறாள். முதல் பிரசவம் சிரமமாகத்தான் இருக்கும். அடுத்து வருபவைகள் இவ்வளவு சங்கடப்படுத்தாது என்று ஆறுதல் சொல்கிறாள்.

என்னுடைய பெருத்த உடம்பைத் தவிர வேறு பல காரணங்களாலும்
கருத்தரித்திருப்பது மோசமான அனுபவமாகத்தான் இருக்கிறது. சின்ன பிள்ளைக்காகத் தினமும் பாடுகிறேன். மேல் வயிறு பெருத்திருக்கிறதா? இல்லை கீழ்வயிறு பெருத்திருக்கிறதா? என்பதைப் பொருத்து பாட்டிமார்களின் கதைகளை நினைவுகூர்கிறேன். என் வயிற்றில் தன் அப்பாவின் சாயலில் ஒரு மகன் இருக்கிறானா இல்லை தன் தம்பிகளை பக்குவப்படுத்தக்கூடிய அறிவார்ந்த மகளா ? என் கூட பிறந்தவர்கள் யாரும் இல்லை ஆனால் ஒரு பெரிய அக்கா தன் தம்பிகளின் உலகத்தை எப்படி ரம்மியமானதாக ஆக்குவாள் என்றும் அவர்கள் அவளை இந்த உலகத்தின் அபாயங்களிலிருந்து எப்படிக் காப்பார்கள் என்றும் பார்த்திருக்கிறேன். அக்காள் தம்பிகளுக்குள் நிறைந்திருக்கும் பாசம் என்னை எப்போதும் நெகிழ வைக்கும். நான் எதிர்பார்க்காத வகையில் எல்லாம் என் உடம்பு மாறுகிறது. என் மார்பகங்கள் பெரிதாகின்றன. புலியின் மேல் உள்ள அழுத்தமான நிறக் கோடுகளுக்கு நேர்மாறாக என் வயிற்றில் நிறம்மங்கிய கோடுகள் வரத் தொடங்குகின்றன. பூதாகரமாக உணர்கிறேன் ஆனால் என் கணவன்  உடல் இன்பம் துய்ப்பதில் புது உற்சாகத்துடன் இருக்கிறான். என் உடம்பும் அவனுடைய எல்லா இச்சைகளுக்கும் உவந்து ஈடு கொடுக்கிறது. பலசரக்குக் கடை வரிசையில் நிற்கும் நேரம், தேவாலயத்தில் புனித அப்பம் பெறும் நேரம், இப்படி எல்லா நேரமும் என் உடல் ஒரு தணிக்க முடியாத தேவையுடனே காத்திருக்கிறது

 

அவன் ஒவ்வொரு நாள் அலுவலகம் விட்டு வீடு திரும்பும் போதும் தனக்குத் தேவையானவற்றை மனதுள் பட்டியலிட்டுக்கொண்டு வருகிறான். நான் அவன் ஆசைப்படுவது அனைத்தும் அதற்கு மேலும் செய்யக் காத்திருக்கிறேன். ” நான் மிகவும் கொடுத்து வைத்த ஆண் ” என்கிறான் என் வயிற்றைத்  தடவிக்கொண்டே. காலை  அவன் வேலைக்குச் செல்லும் முன்னும் இது தொடர்கிறது. புதிய துடிப்புடன் தினமும் செல்கிறான்.  வேலையில் பல படிகளைக் கடந்து மேல் நிலைக்கு வருகிறான்.” நம் குடும்பத்திற்காக நிறையப் பணம். நம் மகிழ்ச்சிக்காக நிறையப் பணம்” என்கிறான்.

நள்ளிரவில் வலி தொடங்குகிறது. என் வயிற்றுக்குள் ஒரு கோபமான முடிச்சு அவிழ்ந்து அவிழ்ந்து இறுகுகிறது. முன்னொரு இரவு குளக்கரையில் நான் கத்தியதை விட மிகப்பெரிய குரலெடுத்து அலறுகிறேன், ஆனால் வேறு காரணத்திற்காக. சின்னப் பிள்ளையின் வருகையை எண்ணிக்கொண்டிருந்த கனவின் இன்பம் அத்தனையும் கொன்றுபோடுகிற தணியாத வலி. இருபது மணி நேரப் போராட்டம். என் கணவனது மணிக்கட்டை கிட்டத்தட்ட உடைத்துவிடுகிறேன். நான் பேசும் ஆபாச வார்த்தைகளால் அந்த மருத்துவரோ, செவிலியரோ அதிர்ச்சியடையாமல் சாதாரணமாக இருக்கிறார்கள். என் கால்களுக்கு இடையில் பார்க்கும் மருத்துவர் மூச்சை நன்றாக இழுத்து விடச் சொல்கிறார். என் பற்களைக் கடித்துக் கடித்து தூளாக்கிவிடுவேன் போல இருக்கிறது. மருத்துவர் என் கணவனிடம் இந்தக் குழந்தையை வயிற்றைக் கீறித் தான் எடுக்க வேண்டும் போல உள்ளது என்கிறார்.

“அது மட்டும் வேண்டாம், இன்னும் சிறிது நேரம் பொறுத்திருந்து பார்க்கலாம் ” என்று இறைஞ்சுகிறேன்.

மருத்துவர் என் கணவனைப் பார்த்து கண்ணைக் காட்டியது போலிருக்கிறது. இல்லை இந்த உயிர் போகும் வலியில் ஏற்படும் மனப் பிறழ்வா? நான் என் சின்னப் பிள்ளையுடன் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறேன். சின்னப் பிள்ளை இது தான் நீயும் நானும் ஓருடலாக இருக்கும் கடைசிக் கணம். என்னை வெட்டி உன்னை வெளியில் எடுக்கும் படி செய்துவிடாதே என்றுசொல்கிறேன்.

இருபது நிமிடங்களில் சின்னப் பிள்ளை பிறந்தான். வயிற்றில் எந்த வெட்டும் இல்லை ஆனால் கீழே யோனியைக் கிழித்து அவனை வெளியில் எடுக்கிறார்கள். அந்தி வான வண்ணத்தில் ரத்தக் கீற்றுகளுடன் , சுருக்கங்கள் நிறைந்த தோலுடன் அவனை என் கையில் கொடுக்கிறார்கள். ரிப்பன் ஏதும் இல்லாத ஆண் குழந்தை. என் மார்பில் அவனைக் கிடத்தி அழத் தொடங்குகிறேன். செவிலியர் அவனுக்குப் பாலூட்ட உதவி செய்கிறாள். காற்புள்ளிகளைப் போல வளைந்த கைகள் இரண்டையும் தடவியபடி மகிழ்ச்சியுடன் பாலூட்டுகிறேன்.

( நீங்கள் இக்கதையைச் சத்தமாகப் படிக்கிறீர்கள் எனில் கேட்பவர்களிடம் சிறு கத்தி ஒன்றைக் கொடுத்து அவர்கள் பெரு விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் உள்ள சதைப்பற்றான இடத்தை வெட்டச் சொல்லுங்கள். அதன் பிறகு வெட்டியதற்காக உங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுங்கள் .)

மருத்துவர் மிகவும் சோர்வாக இருந்த போது பேறு வலி எடுத்த ஒரு பெண்ணின் கதை உள்ளது. குறை மாதத்தில் பிறந்த ஒரு பெண்ணைப் பற்றிய கதை ஒன்று உள்ளது. தன் குழந்தையின் உடலோடு பிரிக்க முடியாதபடி ஒட்டிக் கொண்ட பெண்ணின் உடலைப் பற்றிய கதை உள்ளது ( அவளை வெட்டித் தான் குழந்தையை வெளியே எடுத்தார்கள்) . ரகசியமாக ஓநாய்களைப் பிரசவித்த பெண்ணைப்பற்றிய கதை உண்டு. குளத்தில் ஒன்றாகச் சேர்ந்து ஓடும் மழைத்துளிகளின் தன்மை, இந்தக் கதைகளில் எல்லாம் தெரிகிறது.

ஒவ்வொன்றும் வெவ்வேறு மேகத்திலிருந்து வந்தாலும் ஒன்று சேர்ந்தவுடன் அதைப் பிரிப்பதென்பது  இயலாத காரியம்.

( இதை நீங்கள் உரக்கப் படிக்கும் போது கேட்பவர்களிடம் ஜன்னலில் உள்ள திரைச்சீலைகளை விலக்கிக் காட்டுங்கள். நான் உறுதியாகச் சொல்கிறேன் அப்போது மழை பெய்துகொண்டிருக்கும்).

 

குழந்தையை எடுத்துச் செல்கிறார்கள். கிழித்த என் உடலில் தையல் போடுகிறார்கள். எனக்குத் தூக்க மருந்து செலுத்தியிருக்கிறார்கள். ஆனாலும் அரைத்தூக்கத்தில் தான் இருக்கிறேன். என் கையைப் பிடித்துக் கொண்டே மருத்துவருடன் விளையாட்டாகப் பேசிக்கொண்டிருக்கிறான் .

என் கணவன்.” ஒரு தையல் கூடுதலாகப் போட எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்? “என்கிறான்.” இப்படிக் கேட்கும்  முதல் ஆள்  நீங்கள் இல்லை . நிறையபேர் கேட்டிருக்கிறார்கள்” என்கிறார் அவரும் சிரித்துக் கொண்டே. நான் ஒரு புதைகுழிக்குள் மூழ்கி மூழ்கி எழுகிறேன். கறுப்பான எண்ணெய்யில் என் உடல் தோய்ந்திருக்கிறது. வாந்தி எடுக்க வேண்டும் என்ற உந்துதல் வருகிறது. ” ……. ஒரு கன்னிப் பெண்ணைப் போல…….” அரைகுறையான தூக்கத்தில் குரல்கள் கேட்கின்றன. பிறகு நான் முழுவதுமாக விழித்திருக்கிறேன். யாரும் அருகில் இல்லை. கணவன் இல்லை, மருத்துவர் இல்லை, குழந்தை இல்லை. ஒரு செவிலி மட்டும் எட்டிப் பார்க்கிறாள்.

” உன் கணவர் இப்பொழுது தான் காபி குடிக்கக் கீழே சென்றார். குழந்தை தூங்கிக் கொண்டிருக்கிறது ” என்றாள். மருத்துவர் கைகளைத் துடைத்துக்கொண்டே வருகிறார்..

” நீங்கள் நலமாக இருக்கிறீர்கள், எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கும்படி தையல்கள் போட்டுள்ளேன். புண் ஆறும் வரை என்ன செய்யவேண்டும் என்று செவிலி சொல்வார். முக்கியமாக உங்களுக்கு நீண்ட ஓய்வு தேவை” என்கிறார். குழந்தை விழிக்கிறது, என் கையில் அதைக் கொடுக்கிறார்கள். அவ்வளவு அழகாக இருக்கிறான் நான் மூச்சு விடக் கூட மறந்து அவனைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக நான் நலமடைந்து வருகிறேன். இருந்தாலும் உடலெங்கும் வலியும் அசதியுமாக உணர்கிறேன். கணவன் என்னைத் தொட்டால் கூட எரிச்சலாக உணர்கிறேன். அவனை நெருங்கவிடவில்லை. இரவில் பகலில் என்று எல்லா நேரமும் கண் முழிப்பதால் மனமும் சோர்வாக இருக்கிறது. பிறகு என் கைகளாலேயே என் கணவனை திருப்திப்படுத்த முடியும் என்று புரிகிறது. அப்படிச் செய்வதில் எனக்கு எந்த இன்பமும் இல்லாவிட்டாலும் அவன் மகிழ்ச்சியாகவே இருக்கிறான். குழந்தையின் முதல் பிறந்த நாள் கழிந்த பிறகு தான் என்னால் அவனுடன் உறவில் ஈடுபட முடிகிறது. வெகு நாட்களாகக் கிடைக்காத ஒன்று, ஏங்கிய ஒன்று கிடைத்த மகிழ்ச்சியில் அழுகை வருகிறது .

என் மகன் தொந்தரவு கொடுக்காத நல்ல பிள்ளையாக இருக்கிறான்.
வளர்ந்துகொண்டிருக்கிறான். நாங்கள் இரண்டாவது குழந்தை பெற்றுக்
கொள்ள எண்ணினோம். ஆனால் அது சாத்தியமில்லை என்று சொல்லிவிட்டார்கள். முதல் பிரசவத்திலேயே என் உடல்
அவ்வளவு பலகீனம் அடைந்துவிட்டது என்றார்கள்.
“சின்னப்பிள்ளை நீ ஒரு மோசமான குத்தகைக்காரன். உன்
முன்பணத்தைத் திரும்பத் தர மாட்டேன்” அவனுடைய மென்மையான
ப்ரௌன் நிற முடிகளில் ஷாம்பூவை தேய்த்தபடி சொல்கிறேன்.
அவன் கைகளை நீரில் அடித்து விளையாடித் திளைக்கிறான்.

என் மகன் என் ரிப்பனை தொட்டு விளையாடுகிறான் . ஆனால் அவன் தொடும் போது  எனக்கு எந்த பயமும் ஏற்படவில்லை ஏனென்றால் அவனுக்கு அது என்னில் ஒரு பகுதி அவ்வளவே. என் காதைப் போல என் விரலைப் போல அதைப் பாவிக்கிறான். மேலும் அதிலிருந்து அவனுக்கு எதுவும் தேவை இல்லை. வேறு குழந்தைகள் இல்லை என்பதில் என் கணவனுக்குப் பெரிதாக வருத்தம் இல்லை என்றுதான் நினைக்கிறேன். தன்னுடைய தேவைகளைப்பற்றி அவன் எவ்வளவு வெளிப்படையாக இருக்கிறானோ அதே அளவு தன் துக்கங்களைப் பற்றி ரகசியமாக இருக்கிறான். சின்னப் பிள்ளையிடம் பாசமாக இருக்கிறான். தினமும் வீடு வந்ததும் இருவரும் ஓடிப் பிடித்து விளையாடுகிறார்கள். பந்தை போட்டுப் பிடிக்கச் சொல்லித்தருகிறான். சின்னப்பிள்ளைக்கு அதைப் புரிந்து கொள்ளும் வயது வரவில்லை என்றாலும் பொறுமையாகச் சொல்லிக் கொடுக்கிறான்.

” பாரு பாரு …பார்த்தியா? இன்னும் கொஞ்ச நாள் தான், அழகா பந்தெடுத்து வீசுவான் ” என்கிறான். என்னிடம்.

எனக்குத் தெரிந்த அமெரிக்க கதைகளிலேயே மிகவும் உண்மையானதும் நம்பத்தகுந்ததும் இதுதான். ஒரு இளம் அமெரிக்கப் பெண் தன் அம்மாவுடன் பாரிஸ் நகருக்குச் செல்கிறாள். அங்கு  அம்மாவிற்கு உடம்பு சரியில்லாமல் போய்விடுகிறது. விடுதி அறையிலேயே ஓய்வெடுக்கிறார்கள்.

ஒரு மருத்துவரை அழைக்கிறாள். மருந்து கொடுத்தால் சரியாகும் ஆனால்
அது தன் வீட்டில் இருக்கிறது என்று சொல்கிறார். ஒரு வாடகை டாக்ஸியில் அவளை ஏற்றி ஓட்டுநரிடம் ஃப்ரென்ச்சில் வழி சொல்லி , தன் மனைவியிடமிருந்து அதை வாங்கி வரும்படி பணிக்கிறார். வெகு நேரத்திற்கு எங்கெல்லாமோ சுற்றித்திரிந்து மருத்துவரின் வீட்டை அடைகிறாள் அந்த இளம் பெண். மருத்துவரின் மனைவி
நம்ப முடியாத மந்த கதியில் பொடிகளிலிருந்து மாத்திரைகளை
உண்டாக்கித் தருகிறார். பின்பு வண்டி ஓட்டுநரும் மறுபடி எங்கெல்லாமோ சுற்றுகிறார். போன தெருவழியே மறுபடி மறுபடி ஓட்டிச் செல்கிறார். விரக்தியடைந்து வண்டியிலிருந்து இறங்கி நடந்தே விடுதி வந்துசேருகிறாள். அங்கு வரவேற்பறையில் உள்ள விடுதி ஊழியர்
இவள் யாரென்றே தெரியாது என்கிறார். அவள் தன் அம்மாவை
விட்டுச் சென்ற அறைக்கு ஓடுகிறாள். அங்கு அம்மா இல்லை. அறையே
வேறு மாதிரி இருக்கிறது. சுவரின் நிறங்கள் கூட வேறாக இருப்பதைப்
பார்த்து குழம்பிப் போகிறாள். இந்தக் கதைக்குப் பல முடிவுகள் உண்டு. அந்தப் பெண் பிடிவாதமாகப் பக்கத்தில் ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கி இந்த மர்ம விடுதியைப் பற்றி தீர விசாரிக்கத் தொடங்குகிறாள்.  அந்த விடுதியில் துணிகளை வெளுக்கும் பணியில் உள்ள ஒருவனை மயக்கி அவனிடமிருந்து உண்மையை அறிகிறாள். அம்மா அவள் போனதும் இறந்து போய் விடுகிறாள்.  நோய்த்தொற்றுக்குப் பயந்து அவள்  உடலை உடனடியாக அப்புறப்படுத்தி, அறையைச் சுத்தப்படுத்தி, வேறு வண்ணமடித்து மாற்றிவிடுகிறார்கள். சம்பந்தப்பட்ட அனைவருக்கும்  பணம் கொடுத்து நடிக்கச் சொல்லிவிடுகிறார்கள் என்று சிலர் கூறுவர். அவள் பாரீஸின் தெருக்களில் தன்னைப் பைத்தியம் என நம்பித் திரிந்ததாகச் சிலர் கூறுவர். அதில் தன்னுடைய  அம்மாவுடனான முந்தைய அமெரிக்க வாழ்க்கை முழுவதும் உண்மையில் நடக்கவேயில்லை என்றும், அவள் தன் மனதினுள் ஏற்படுத்திக் கொண்ட கற்பனை அது என்று நம்பி மனப்  பிறழ்வுடன் அலைவதாக முடியும். பாரிஸில் ஒவ்வொரு விடுதியாகச் சென்று வரவேற்பறைகளில் அவள் எதையோ தேடுவாள். ஒவ்வொரு முறை அவளை வெளியேற்றியவுடன் ஏனென்று தெரியாமல்  தொலைந்த  ஏதோ ஒன்றிற்காக அழுவாள். அவளுடைய அம்மா இறந்துவிட்டாள் என்பது அவளுக்குப் புரியாது. அவள் இறக்கும் வரை அது அவளுக்குப் புரியப் போவதுமில்லை. அதுவும் உங்களுக்கு சொர்க்கம், நரகம் என்பதிலெல்லாம் நம்பிக்கை இருந்தால் மட்டும் தான் இறக்கும் வரை என்று கூட நினைக்க முடியும்.

இந்தக் கதை சொல்லும் பாடம் என்னவென்று நான் உங்களுக்குச் சொல்லப்போவதில்லை. அது ஏற்கனவே உங்களுக்கு நன்றாகத்தெரியும் என்று நம்புகிறேன்.

ஐந்து வயதில் என் மகன் பள்ளி செல்கிறான். பிள்ளை உண்டாகி பூங்காவில் நான் மயங்கி விழுந்த போது எனக்குத் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தியவர் தான் அவனுடைய ஆசிரியை. அவருக்கும் என்னை நினைவிருக்கிறது. இவன் எனக்கு ஒரே மகனென்றும், இவன் பள்ளி செல்லத்
தொடங்கிய பின் வீட்டில் எப்படி நேரத்தைக் கழிப்பேன் என்று
தெரியவில்லை என்றும் அவரிடம் சொல்கிறேன். அங்கே உள்ள கல்லூரி
ஒன்றில் பெண்களுக்கென்று கலை வகுப்புகள் நடப்பதாகச் சொல்கிறார்
அந்த ஆசிரியை.

அன்று இரவு என் கணவன் என் கால்களில் தொடங்கி மெதுவாக ஒவ்வொரு அங்கமாகத் தொட்டு மேலே வருகிறான். நானும் ஆசையுடனும் எதிர்பார்ப்புடனும் அவனிடம் செல்கிறேன். அவனுடைய கால்களை, முட்டியை முத்தமிடுகிறேன். அவனை முழுவதுமாக என்னுள் இருத்திக் கொள்கிறேன். அவன் என் முடிகளைக் கோதியவாறே முனங்கிக் கொண்டிருக்கிறான். மெதுவாக அவனுடைய கைகள் என்  பின் கழுத்தில் பச்சை ரிப்பனில் நுழைவதை நான் கவனிக்கவில்லை. அவன் தன் விரலைச் சுழற்றி ரிப்பனைப் பிடித்து இழுத்தபோது திடுக்கிட்டு விலகினேன். கழுத்தில் அதன் முடிச்சு சரியாக இருக்கிறதா என்று பதட்டத்துடன் தொட்டுப் பார்த்தேன். உணர்ச்சியற்று என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

” இங்கே வா ” என்று அழைக்கிறான்.

”  இல்லை” என் ரிப்பனை நீ பிடித்து இழுப்பாய்”

அவன் எழுந்துநின்று தன் பேண்டின் பித்தான்களைப் போட்டுக்கொள்கிறான்

” ஒரு மனைவிக்குத் தன் கணவனிடமிருந்து மறைப்பதற்கு எந்த ரகசியமும் இருக்கக்கூடாது ” என்கிறான்.

” என்னிடம் ரகசியங்கள் எதுவும் இல்லை ” என்கிறேன்.

” அந்த பச்சை ரிப்பன்”

” இது ரகசியம் இல்லை . இது என்னுடைய ரிப்பன். அவ்வளவுதான்”

” நீ பிறக்கும் போதே இது இருந்ததா? ஏன் கழுத்தில் கட்டியிருக்கிறது ?’’

‘’ …..ஏன் பச்சை நிறம்? ”

நான் பதிலேதும் சொல்லவில்லை. நீண்ட நெடியதொரு நிமிடம் இருவரும் அமைதியாக இருக்கிறோம். பிறகு மறுபடி

” மனைவி என்பவளுக்கு ரகசியங்கள் இருக்கக்கூடாது ” என்கிறான். நான் சூடாக உணர்கிறேன். அழுகை வரவில்லை .

” நீ  இதுவரை கேட்டவற்றை எல்லாம் நான் உவந்து உனக்கு அளித்துவிட்டேன். இந்த ஒரு விஷயத்தை எனக்காகவென்று பிரத்தியேகமாக வைத்திருப்பதற்கு எனக்கு உரிமையில்லையா?” என்கிறேன்.

” அது என்னவென்று தெரிந்துகொள்ள நான் விரும்புகிறேன்”என்கிறான்.

” அப்படித்தான் நீ நம்புகிறாய் ஆனால் உனக்குத் தெரிந்துகொள்வதிலெல்லாம் எந்த விருப்பமும் இல்லை”

“இதை ஏன் என்னிடம் மறைக்கிறாய்”

” நான் அதை மறைக்கவில்லை. அது உனக்குச் சம்பந்தமில்லாத ஒன்று . அது உன்னுடையதல்ல. அவ்வளவுதான்”

எனக்கு மிக அருகில் வருகிறான். அவன் வாயிலிருந்து வரும் பர்பன் விஸ்கியின் வாடை என்னைப் பின் தள்ளுகிறது. அப்போது கதவில் ஒரு சிறு சத்தம் கேட்கிறது. என் மகன் மாடிப்படியில் ஓடும் சிறு காலடிஓசை கேட்கிறது.

கோபத்துடனே என் கணவன் உறங்கச் செல்கிறான். நான் வெகுநேரம் விழித்திருக்கிறேன். ஆண்களுக்கும் இதைப் போல ரிப்பன்கள் உண்டோ ? அவை பார்வைக்கு ரிப்பன் போல இல்லாதிருக்குமோ? என்று யோசிக்கிறேன். நாம் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் முத்திரை குத்தப்பட்டவர்கள் தானோ?

அடுத்த நாள் என் மகன் என் ரிப்பனைத் தொட்டுப் பார்க்கிறான். அதைப் பற்றி கேட்கிறான். அந்த முடிச்சை பிடித்திழுக்க முயல்கிறான். இதை என்றென்றைக்குமாகத் தடுத்து நிறுத்த வேண்டி சில்லறைகள் நிறைந்த ஒரு குவளையைக் குலுக்கி கீழே வீசுகிறேன். அது பெருஞ்சத்தத்துடன் சிதறுகிறது. அவன் பயந்து அழுகிறான். என்னைவிட்டு அகல்கிறான். அன்று எங்களுக்குள் ஏதோ ஒன்று நொறுங்கி உடைகிறது. அதை என்னால் மீண்டும் சரி செய்யவே முடியவில்லை.

( இதை நீங்கள் சத்தமாகப் படித்துக் காண்பிக்கிறீர்கள் என்றால் சில்லறைகள் நிறைந்த ஒரு சோடா பாட்டிலைத் தயாராக வைத்திருங்கள். கதையில் இந்த கட்டத்திற்கு வந்ததும் உங்களுக்கு மிக அருகில் உள்ளவர்களின் முகத்திற்கு நேராக வைத்து வலிமையோடு குலுக்குங்கள்.

அவர்கள் முகத்தில் தோன்றும் பயத்தையும், நீங்கள் துரோகம் செய்துவிட்டதைப் போல தோன்றும் ஏமாற்றத்தையும் கவனியுங்கள். கடைசிவரையில் உங்களை அவர்கள் இந்த கண்ணோட்டத்தில் தான் பார்ப்பார்கள் . ) கணவனும் மகனும் சென்றபின் தினமும், பெண்களுக்கான ஓவியப் பயிற்சி வகுப்பிற்குச் செல்லத் தொடங்குகிறேன். வகுப்பில் நிர்வாண ஆண்  மாடல்களை எங்கள் முன் நிறுத்துவதில்லை . ஆனால் பெண் மாடல்களுக்குப்  பஞ்சமில்லை. இந்த வகுப்புகள் அதற்கே உரிய ஒரு
பிரத்தியேகத் தன்மையுடனும், துடிப்புடனும் இருக்கின்றன. நிர்வாணப் பெண் உடலில் நம்மை ஈர்க்கும் விஷயங்கள் பல உள்ளன. கரித்தூளும்
வர்ணங்களும் குழைக்கும் நேரங்களில் இப்பெண்கள் ஒரே நிலையில்
உட்காருவதால் ஏற்படும்  மறத்தலைத் தடுக்க முன்னும் பின்னும் நகர்வதை ஆர்வமாகப் பார்க்கிறேன். அடிக்கடி வரும் ஒரு பெண்ணிற்கு அவளுடைய மெலிவான கணுக்காலில் ஒரு சிவப்பு ரிப்பன் முடிச்சிடப்பட்டிருக்கிறது. ஆலிவ் நிறத்தில் இருக்கிறாள். அவளது தொப்புளிலிருந்து கறுத்த முடிகள்
கீழே ஒரு வரி போல ஓடுகின்றன. அவளிடம் இச்சை கொள்ளக்கூடாது
என்று எனக்குப் புரிகிறது ஆனால் என்னால் அதைத் தவிர்க்கமுடியவில்லை. நான் அதனால் குற்ற உணர்ச்சி அடைகிறேன், அவள் பெண் என்பதால் அல்ல. எனக்கு அறிமுகமில்லாதவள் என்பதால் அல்ல,  ஆனால் உடைகளைக் களைவது அவளது வேலை அதை எனக்குச் சாதகமாக நான் பயன்படுத்திக்கொள்கிறேன் என்பதால். ஆனாலும் என் கரித்துண்டு அவளது வடிவத்தை வரைகையில் என் மனதின் ரகசிய ஓரங்களில்
என் கையும் அவளது வடிவத்தை வரைகிறது. இது என்னவென்று என்னால்
விளங்கிக் கொள்ள முடியவில்லை ஆனால் என்னைப் பித்து நிலைக்கு
இழுத்துச்செல்கிறது.

ஒரு மதியம் என் வகுப்பு முடிந்தபிறகு தாழ்வாரத்தில் அவளைப் பார்க்கிறேன். முழுதாக உடுத்தி அதற்கு மேல் மழைக் கோட்டும் அணிந்திருக்கிறாள். அவளுடைய பார்வை என்னைச் சிறைப்படுத்துகிறது. அவளது இரு கண்மணிகளைச் சுற்றியும் தங்க வளையங்கள் இரு சூரிய கிரகணங்கள் போல என்னை  ஈர்க்கின்றன. இருவரும் முகமன் கூறிக் கொள்கிறோம். பக்கத்தில் இருக்கும் உணவகத்தில் எங்கள் முட்டிகள் உரசியபடி எதிரெதிராக அமர்ந்திருக்கிறோம். கடுங்காப்பி குடிக்கிறாள். குழந்தைகள் உண்டா? என்று அவளிடம் கேட்கிறேன். பதினோரு வயதில் ஒரு மகள் உண்டென்கிறாள்.

” பதினொன்றென்பது மிகவும் திகிலூட்டும் வயது. என்னுடைய பதினொன்றாம் வயதிற்கு முன் எனக்கு என் குழந்தைப் பருவத்து நினைவுகள் எதுவுமே இல்லை .

ஆனால் அந்த வயதின் நிறங்கள், திகில்கள் எல்லாம் தெளிவாக நினைவில் இருக்கிறது. அப்பப்பா….” என்கிறாள்.

பின் அவள் மனதளவில் எங்கோ சென்றுவிட்டதைப் போலிருக்கிறாள். குளத்திற்குள் முங்கி மறைந்தவளைப் போல… பின் நீருக்கு மேல் எழும்பி வருகிறாள். தன் மகள் பாட்டுப் பாடுவதில் நிகழ்த்திய சாதனைகளைப் பெருமையாகச் சொல்கிறாள். ஒரு பெண் குழந்தையை வளர்ப்பதில் இருக்கும் பிரத்தியேக சங்கடங்களைப்பற்றி நாங்கள் பேசவில்லை. உண்மையில் அதைப் பற்றிக் கேட்பதற்கே எனக்குப் பயமாக இருக்கிறது. அதே போல அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? என்பதைப் பற்றியும் நான் எதுவும் கேட்கவில்லை. அவளும் எதுவும் சொல்லவில்லை. அவளது விரல்களில் மோதிரம் எதுவும் இல்லை. என் மகனைப்பற்றி, ஓவிய வகுப்புகளைப் பற்றிப் பேசுகிறோம்.  எதனால் நிர்வாண மாடலானாள் என்று கேட்க ஆர்வமாக உள்ளது ஆனால் அதையும் கேட்கவில்லை. ஒரு வேளை அந்த பதில் என்னை அச்சுறுத்தும் என்பதால் ( என் பதின்வயது நினைவுகளைப் போல ) கேட்கவில்லையோ என்னமோ.

நான் அவளால் ஆட்கெள்ளப்பட்டுவிட்டேன். இதை வேறு எந்த விதத்திலும்
என்னால் கூற முடியாது .அவளிடம் ஒரு இசைவு, ஒரு இயல்பு, ஒரு தன்மை
இருக்கிறது. என்னிடம் உள்ள ஒரு இயல்பு போல அல்ல அது. பிசைந்து
வைத்த மாவைப் போல இருக்கிறாள். எப்படி அது தன்னுடைய முழு சாத்தியக்கூறுகளை மறைத்துக்கொண்டு நம் கைகளின் போக்கில் வளைந்து கொடுக்குமோ அப்படி ஒரு இசைவு. ஒவ்வொரு முறை வேறு பக்கம் திரும்பி விட்டு பின் அவள் பக்கம் திரும்பி அவளைப் பார்க்கும் போதும் இரு மடங்கு பெரிதான ஆளுமையாகத் தோன்றுகிறாள்.

“வேறு ஒரு நாள் நாம் சந்திப்போம். இது எனக்கு மிகவும் பிடித்த
மதியப் பொழுதாக அமைந்தது” என்கிறேன் அவளிடம்
இதை என் கணவனிடம் சொல்லக்கூடாது என்று நினைக்கிறேன்.
ஆனால் அவனால் என்னுள் கனன்று கொண்டிருக்கும் ஆசையையும் அது அவனால் தீர்க்க முடியாத வேறு வகையானது என்பதையும்
உணர முடிகிறது. ஒரு நாள் இரவு அதைப் பற்றிக் கேட்கிறான். நான்
எல்லாவற்றையும்  ஒன்றுவிடாமல் அவனிடம் சொல்லி விடுகிறேன்.
அவளுடைய ரிப்பனைப் பற்றிக்கூட என்னுள் அவமானம் வழிய வழியச் சொல்லிவிடுகிறேன்.

ஆனால் அவனோ இதனால் கிளர்ச்சியடைகிறான். தன்னுடைய கீழாடைகளைக் கழற்றி என்னைப் புணர்கிறான்.  அவன் தன்னுடைய மீகற்பனையில் எங்கள் இருவரையும் சேர்த்து எவ்வாறு புணரப்போகிறான் என்று பேசிக்கொண்டே இருக்கிறான். அவளை வேறு மனுஷியாக அவன் உணர்ந்தது போலவே எனக்குத் தெரியவில்லை . அவனுடைய வார்த்தைகளைக் கேட்பதற்கே அருவருப்பாக உணர்கிறேன்.

அவளுக்குத் துரோகம் இழைத்ததைப் போல உணர்கிறேன். மறுபடி என்னால் அந்த வகுப்பிற்குச் செல்லமுடியவில்லை.  என் பொழுதைப் போக்க வேறு வழிகளைக் கண்டடைகிறேன்.

( இந்தக் கதையை நீங்கள் சத்தமாகப் படிக்கிறீர்கள் என்றால், கதை கேட்பவரின்  ரகசியம் ஒன்றை உங்களிடம் சொல்லும் படிச் செய்யுங்கள். பின் உங்கள் அருகிலுள்ள ஜன்னலைத் திறந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு சத்தம் போட்டு அந்த ரகசியத்தை வெளியே கத்தி அம்பலப்படுத்திவிடுங்கள். )

வயதான பெண் மற்றும்  அவளது கணவனைப் பற்றிய கதையொன்று உண்டு. அந்த கணவன் திங்கட்கிழமைகளைப் போன்று மட்டமானவன், கொடூரமானவன்.தன்னுடைய வன்முறையால் அந்த பெண்ணை அடக்கி அடிமையாக வைத்திருந்தான். அவள் தன் சமையல் திறத்தால் மட்டுமே அவனைத் திருப்திப்படுத்தி ஒரு கட்டுக்குள் வைத்திருக்க முடிந்தது. ஒரு நாள் ஒரு பருத்த கல்லீரல் ஒன்றை வாங்கி வந்தான். அவள்   மணமூட்டிகளைச் சேர்த்து அதைக் குழம்பாகச் சமைத்திருந்தாள். அவள் ருசி பார்க்கச் சிறிது உண்ணத் தொடங்கினாள். அதனுடைய ருசியில் மயங்கி முழுவதையும் சாப்பிட்டு விட்டாள். வேறு ஒரு கல்லீரல் வாங்க அவளிடம் பணம் ஏதும் இல்லை. தன் கணவன் என்ன செய்வானோ? என்ற பயத்தில் பக்கத்திலிருந்த தேவாலயத்திற்குச் சென்றாள். சமீபத்தில் இறந்த ஒரு பெண்ணின் உடல் கிடத்தப்பட்டிருந்தது. கத்தியைக் கொண்டு இறந்த உடலிலிருந்து கல்லீரலை வெட்டி எடுத்து வந்து  மறுபடி சமைத்து விட்டாள். இது வரை அவன் சாப்பிட்ட எல்லாவற்றையும் விட  அந்த இரவு உணவு அருமையாக இருந்ததாக அவளது கணவன் பாராட்டினான் . அன்று இரவு அவர்கள் உறங்கச் சென்ற பின் வாசல் கதவு திறக்கும் சப்தம் கேட்டது .. ஒரு மெல்லிய அழுகையின் ஓலம் காற்றில் மிதந்து வந்தது,.

“என்னுடைய  கல்லீரல் எங்கே? யார் எடுத்துச் சென்றது ?”

அந்த குரல் பக்கத்தில் வந்துகொண்டிருப்பதை இந்த முதிய பெண்
உணர்ந்தாள். அவள் படுக்கை அறையின் கதவு திறந்தது.
இறந்த பெண் மறுபடி தன் கேள்வியைக் கேட்டாள்.
பக்கத்தில் உறங்கிக்கொண்டிருந்த கணவனின் போர்வையை விலக்கி
” இவனிடம் தான் உன் கல்லீரல் இருக்கிறது ” என்றாள் இவள்.
பிறகு தான் இறந்தவளின் முகத்தைப் கவனித்தாள். இறந்தவளின் முகத்தில் தன்னுடைய கண்களும் வாயும் தெரிந்தன. பின் தன் வயிற்றைக் குனிந்து பார்த்தாள் வயதானவள். வயிறு வெட்டப்பட்டு ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.அவளுடைய உயிர் மெதுவாகப் பிரிந்தது. ஏதோ முணுமுணுத்துக் கொண்டே வயதானவள் இறந்து போனாள். திரும்பத் திரும்ப அவள் என்ன சொல்லிக் கொண்டிருந்தாள் என்று நமக்குத் தெரியப் போவதில்லை. நீங்கள் கேட்ட கதையில் இப்படி ஒரு முடிவு இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் நான் சொல்கிறேன் இது தான் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது

…..……………………

வழக்கத்திற்கு மாறாக ஹாலோவீனைக் கொண்டாட மிக ஆர்வமாக இருக்கிறான் என் கணவன். அவனுடைய பழைய மேல் சட்டை ஒன்றைக்
கொண்டு மகனுக்கு ஒரு சிறிய கோட் தைத்துக் கொடுத்தேன். குட்டி
பேராசிரியர் போல அவனை ஜோடிக்கிறேன். வாயில் புகைக்க பைப்
ஒன்றைக் கொடுக்கிறேன்.  ஏதோ பல காலம் பைப் பிடித்துப் பழக்கப் பட்டவனைப் போல அதைத் தன் பற்களுக்கிடையில் வாகாகக் கடித்துக் கொள்கிறான். எனக்கு அது சிறிய  பதற்றத்தை ஏற்படுத்துகிறது.

” அம்மா, நீ என்ன வேடம் பூண்டிருக்கிறாய்” என்கிறான்.
நான் பிரத்தியேக உடை எதுவும் அணியவில்லை
” நான் உன் அம்மா ” என்கிறேன்.

அவன் வாயிலிருந்து பைப் கீழே விழுகிறது. அப்படி ஒரு பெருங்குர
லெடுத்து அழத் தொடங்குகிறான், நான் உறைந்து அப்படியே  நிற்கிறேன்.
என் கணவன் அவனை அள்ளியெடுத்து மென்மையான குரலில் பேசி சமாதானம் செய்கிறான். அவன் அழுது ஓய்ந்த பிறகு தான் என் தவறை உணர்கிறேன்.

சேட்டை செய்யும் சிறு பெண்களைப் பற்றிய கதை ஒன்றை அவனிடம் சொல்லியிருந்தேன். அப்பெண்கள் பொம்மை முரசொன்றைக் கேட்டு தங்கள் அம்மாவிடம் விடாமல்  அடம் பிடித்தனர்.  அவர்களின் அம்மா இதைத் தாங்க முடியாமல் வீட்டை விட்டு எங்கோ சென்றுவிட்டாள். அம்மாவின் இடத்தில் தரையில் ஓங்கி அடிக்கும் மரத்தாலான வாலுடனும், கண்ணாடி கண்களுடனும் ஒரு புது அம்மா வந்தாள். இவ்வளவு சின்ன வயதில் அவனிடம் இந்தக் கதையைச் சொல்லியிருக்கக் கூடாது. ஆனாலும் சொல்லிவிட்டேன். வேறொரு கதையும் உண்டு. ஒரு சிறுவன் தன்னுடைய அம்மா உண்மையான அம்மாவே அல்ல என்று ஹாலோவீன் அன்று தெரிந்து கொள்வான் .  எல்லோரும் முகமூடி அணிந்து வேறு வேடம் தரித்திருக்கும் ஹாலோவீன் அன்று மட்டும் தான் தன் உண்மையான அம்மாவை அவனால் பார்க்க முடியும் என்றும் தெரிந்துகொள்கிறான்.

நான் என் மகனை இப்போது கட்டி அணைக்க நினைத்து அருகில் சென்றாலும்  விலகி அவனுடைய அப்பாவிடம் ஓடிவிட்டான். எனக்கு இந்த பண்டிகை அவ்வளவாகப் பிடிப்பதில்லை. மாறுவேடத்தில் என் மகனை அழைத்துக்கொண்டு வீடு வீடாகச் சென்று மிட்டாய்கள் வாங்கி வருவதில் விருப்பமில்லை. இரவு தன் அப்பாவுடன், குதூகலமாகச் சிரித்தபடி, மிட்டாய்களால் வாயின் நிறமே ஒரு ப்ளம் பழத்தைப் போலிருக்க வருகிறான் என் மகன். வீட்டிற்கு வரும் வரையிலாவது காத்திருந்து மிட்டாய்களைத் தந்திருக்கலாம். மிட்டாய்களில் ஊசிகளும், பிளேடுகளும் பதிந்திருக்க வாய்ப்புள்ளது.

ஆனால் இந்த உலகத்தில் பயம்கொள்ளவேண்டிய விஷயங்களைப் பற்றி என் கணவனுக்கு என்றைக்குமே புரிந்ததில்லை. என் மகன் மகிழ்ச்சியாக இருக்கிறான். வீட்டினுள் ஓடி ஓடி சுற்றுகிறான். சற்று முன் நடந்தவற்றை மறந்து  என் கால்களைக் கட்டிக் கொள்கிறான். மன்னிப்பு என்பது எல்லா மிட்டாய்களையும் விட இனிப்பாக உள்ளது. மென்மையான பாடல்கள் பாடி அவனைத் தூங்க வைக்கிறேன்.

அவனுக்கு எட்டு, பத்து என்று வயது ஏறுகிறது. அவனுக்கு வலி, இறப்பு போன்ற இருண்மைகளை முற்றிலுமாக விலக்கி பழைய தேவதைக் கதைகளை மட்டுமே சொல்கிறேன். கடல்கன்னிகளுக்கு மகிழ்வான சிரிப்பைப் போல கால்கள் முளைக்கின்றன. சேட்டைக்கார பன்றிகள் உண்ணப்படாமல் தப்பித்துக் கொள்கின்றன. தீங்கு நினைக்கும் மந்திரக் கிழவிகள்  அரண்மனைகளை விட்டு அகன்று, மரவீடுகளில் தங்கிக் காட்டு உயிரினங்களின் ஓவியங்களை வரைந்தபடி  தங்களது இறுதி நாட்களைக் கடத்துகிறார்கள்.

.அப்போது துடுப்புகளுக்குப் பதில் கால்கள் முளைப்பதென்பது எவ்வளவு கொடூரமான ஒன்று என்றான்.

” அது மிகவும் வலிக்கும் ”

“ஆமாம் வலிக்கும் தான்” என்கிறேன் அவன் காயத்திற்குக் கட்டுப்போட்டபடியே. பிறகு அவனுக்கு உண்மைக்கு நெருக்கமான கதைகளைச் சொல்கிறேன். ரயில் தண்டவாளங்களில் இரவுகளில் போகும் ஒரு மர்ம ரயிலைப் பற்றியும் அதன் அழகான விசில் சத்தத்தால் ஈர்க்கப்பட்டுக்  காணாமல் போகும் குழந்தைகளைப் பற்றி, ஒருவர் இறப்பதற்கு மூன்று நாட்கள் முன் அவர்கள் வாசலில் மட்டும் தோன்றும் கறுப்பு நாயொன்றைப் பற்றி, சதுப்புநிலங்களில்  நம்மை மறித்து நிறுத்தி நம் எதிர் காலத்தைக் கணித்துச் சொல்லும் மூன்று தவளைகளைப் பற்றி எல்லாம் அவனிடம் சொல்கிறேன். இது என் கணவனுக்குப் பிடிக்காது என்று தான் நினைக்கிறேன் ஆனால் இதை என் மகன்  கவனமாகக் கேட்டு தனக்குள்ளேயே வைத்துக் கொள்கிறான்.

அவனுடைய பள்ளியில் ஆண்டு விழாவிற்கு சின்ன பக்கிள் பாய் என்ற நாடகத்திற்காக ஒத்திகை பார்க்கிறார்கள். என் மகன் தான் சின்ன ‘பக்கிள் பாய்’ ஆக நடிக்கிறான். இந்த நாடகத்தில் பங்குபெறும் பிள்ளைகளின் தாய்மார்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து அவர்களுக்கான உடைகளைத் தயாரிக்கிறோம். பூக் குழந்தைகளுக்காகச் சின்னச் சின்ன பட்டு இதழ்கள், கடல் கொள்ளையருக்காக வெள்ளை கால்சட்டைகள்… இப்படிப் பல குட்டி குட்டி உடைகள். அங்குள்ள ஒரு அம்மா தன் விரலில்  வெளிர் மஞ்சள் ரிப்பன் ஒன்றைக் கட்டியிருக்கிறாள். அவள் தைக்கும் நூலில் அது ஓயாமல் சிக்கி அவளைத் துன்புறுத்துகிறது. ஒரு சமயம் மிக கவனமாக நான் கத்தரிக்கோல்களைக் கொண்டு, ரிப்பனுக்கு எதுவும் ஆகாமல் நூலைப் பிரித்தெடுக்கிறேன். அவள் அழுது அரற்றுகிறாள்.

அவன் வளர வளர நிறைய கேள்விகள் கேட்கிறான். அந்தப் பன்றிகளை உண்டால் என்ன? அவர்கள் பசியோடு இருந்தார்கள் இல்லையா?
இவ்வளவு தீமைகள் செய்த மந்திரக் கிழவிக்கு ஏன் தண்டனை
கொடுக்கவில்லை? கத்திரிக்கோலால் ஒரு முறை கைகளை வெட்டிக் கொண்டான் “இது எவ்வளவு பெரிய இம்சை” என்கிறாள்.
நானும் ஆமோதித்துத் தலையாட்டுகிறேன். வெளியே பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்,  ஒருவரை ஒருவர் பிடித்துத் தள்ளிக்கொண்டு உற்சாகமாக இருக்கிறார்கள். நாடகம் மிகவும் நன்றாக அரங்கேறுகிறது.  மிக அழகாக ஏற்ற இறக்கங்களுடன் என் மகன் அவனுடைய வரிகளைச் சொல்லி நடிக்கிறான்.

அவனுக்கு 12 வயதாகிறது. என்னுடைய ரிப்பனைப் பற்றி நேரிடையாக என்னிடம் கேட்கிறான். நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமானவர்கள் என்றும் சில சமயங்களில் கேள்விகள் கேட்கக்கூடாது என்றும், பெரியவனானதும் அவனுக்கே புரியும் என்றும் சொல்கிறேன். அவனுக்கு 13 ,14   வயதாகிறது. அவன் தன் முடியை நீளமாக வளர்த்திருக்கிறான். அவ்வளவு அழகாக அது இருக்கிறது, எனக்கு அதை வெட்ட மனம் வரவில்லை.  என் கணவன் அலுவலகம் செல்லும் முன் அவன் தலையை செல்லமாகக் கலைத்துவிட்டு, என் வாயோரத்தில் ஒரு முத்தம் வைத்துவிட்டுச் செல்கிறான். என் மகன் பள்ளி செல்லும்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் கால் ஊனமுள்ள சிறுவனுக்காகக் காத்திருந்து அவனுடன் மெதுவாக நடந்து செல்கிறான். ஒரு நுண்ணிய இரக்கத்துடன் தான் இருக்கிறான். சிலரைப் போல வன்முறையை விரும்புவதில்லை.

” உலகில் தேவைக்கு அதிகமான கொடுமைக்காரர்கள் இருக்கிறார்கள்” என்பதை மறுபடி மறுபடி சொல்லி வளர்த்திருக்கிறேன் அவனை. இந்த வருடம் என்னிடம் கதை கேட்பதை நிறுத்திவிட்டான்.

என் மகனுக்கு 15, 16, 17  வயதாகிறது. அவன் மிகவும் புத்திசாலியான இளைஞனாக வளர்ந்துள்ளான். பழகுவதில் அப்பாவைப் போல சாமர்த்தியமாகவும், மற்ற விஷயங்களில் என்னைப் போல மர்மமாகவும், சுவாரஸ்யமானவனாகவும் உள்ளான். தன் வகுப்பில் படிக்கும், அழகாகச் சிரிக்கும் பெண் ஒருத்தியுடன் நட்பு கொள்கிறான். அவளை வீட்டிற்கு அழைத்து வருகிறான். அவள் அன்பானவளாகவும் இருக்கிறாள்.

அவனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பிற்குத் தேர்வு செய்திருக்கிறார்கள் என்ற செய்தி என்னை அகமகிழவைக்கிறது. சிரித்தபடி பாடல்கள் பாடிக்கொண்டு அவனுடன் கைகோர்த்து வீட்டைச் சுற்றி சுற்றி வருகிறேன். என் கணவன் வந்ததும் அவனும் எங்களுடன் இந்த கொண்டாட்டத்தில் இணைகிறான். அன்று கடல் உணவுவிடுதிக்கு இரவு உணவிற்காகச் செல்கிறோம். மகனிடம் அவனை நினைத்து பெருமைப் படுவதாக என் கணவன் சொல்கிறான்.  அவன் தன்னுடைய தோழியைத் தான் கல்யாணம் செய்து கொள்ள விரும்புவதாகச் சொல்கிறான்.

இவன் எவ்வளவு பொறுப்புள்ளவனாக இருக்கிறான். எவ்வளவு நிறைவான
நாட்களை நான் எதிர்கொள்ளப் போகிறேன். என் அளவு அதிர்ஷ்டமானப் பெண் இந்த உலகத்திலேயே இல்லை என்பது போல உணர்கிறேன்.

இது தரமான ஒரு கதை . இது உங்களிடம் இதுவரை நான் சொல்லவில்லை.
காதலர்கள் இருவர் வாகன நிறுத்துமிடத்தில் காருக்குள் அமர்ந்திருக்கிறார்கள். அப்படிச் சொன்னாலே அவர்கள் முத்தமிட்டுக்
கொண்டிருக்கிறார்கள்  என்று சிலர் யோசிப்பார்கள். ஆனால் எனக்குத்
தெரியும் அது அப்படி இல்லை. ஏனெனில் அந்த குளக்கரையில் நின்றிருந்த வண்டியினுள் நான் தான் இருந்தேன். பின் இருக்கையில் உறவு கொண்டார்கள். பிறகு ரேடியோவில் பாடல்கள்  கேட்டனர். நடுவில்
ஒரு அவசரச் செய்தி ஒலிபரப்பப்பட்டது. பக்கத்தில் உள்ள மனநல
விடுதியிலிருந்து ஒரு கொக்கிக்கை கொலையாளி தப்பிவிட்டான் என்றும்
அந்த பகுதி மக்களை கவனமாக இருக்கவும் எச்சரிக்கை செய்தது.
காதலன் சிரித்துக்கொண்டே ரேடியோவை வேறு அலைவரிசைக்கு
மாற்றினான். கண்ணாடி ஒன்றில் காகிதக் க்ளிப்பால் உரசுவதைப் போல
ஒரு சிறிய அரவம் அந்த காதலிக்கு மட்டும் கேட்டது. தன் உடைகளைத்
திருத்திக்கொண்டே ” இங்கிருந்து கிளம்பலாம்” என்றாள்.

” வேண்டாம் இன்னும் ஒரே ஒரு முறை … முழு இரவும் நமக்காகக் காத்திருக்கிறது ” என்றான்.

“கொக்கிக்கை கொலைகாரன் இங்கு  வந்துவிட்டால்….” என்றாள் அவள் ” மனநல விடுதி மிக அருகில் தான் உள்ளது ”

” அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது , என்னை நம்பு ” என்றான். அவளும் அரைமனதுடன் ஒப்புக்கொண்டாள்.

பின் என்ன  அவளுடைய கைகளை எடுத்து தன் மீது போட்டுக் கொண்டான். அவள்  திரும்பி அந்தக் குளத்தைப் பார்த்தாள். நிலவொளி இரும்புக்கொக்கியின் மீது பட்டுத் தெரித்து மின்னியது. கொலைகாரன் அவளைப் பார்த்துக் கையசைத்துக்கொண்டே சிரித்தான். என்னை மன்னித்து விடுங்கள், மீதி கதையை நான் மறந்துவிட்டேன்.

என் மகன் கல்லூரி சென்ற பின் வீடே அமைதியாகிறது. கையால் சுவர்களைத் தடவியபடியே காலியான அறைகளில் ஒவ்வொன்றாக நுழைந்து நடந்துகொண்டே இருக்கிறேன். நான் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன். என்றாலும் என்னுள்ளே ஏதோ ஒன்று திரும்பி வர முடியாத புதிய இடத்திற்குச் சென்றுவிட்டதை உணர்கிறேன்.
அன்று இரவு என் கணவனுடன் இதுவரை உறவு கொள்ளாத அறைகளில், வீட்டின் பிற இடங்களில் உறவு கொள்கிறேன். மகன் பிறப்பதற்கு முன்
தான் இப்படித் தீவிரமாக உடலுறவு கொண்டோம். சமையலறை மேசையின்மேல் எனக்கு என்னுடைய பழைய ஆசைகளும் ஏக்கங்களும் நினைவிற்கு வருகின்றன. எங்கள் காதலின் தடயங்களை வீட்டின் எல்லா இடங்களிலும் தூவிச் சென்றுள்ளோம். என் மிக ரகசியமான இருட்டான இடங்களை அவன் விரும்பிக் கொண்டாடியுள்ளான். பக்கத்தில் வசிப்பவர்களுக்கு கேட்குமோ என்ற எந்த பயமும் இல்லாமல் உச்சக் குரலில் கத்தி குதூகலிக்கிறேன், அவர்கள் வீட்டின் ஜன்னல்கள் வழியேயும், மூடப்படாத எங்கள் வீட்டின் ஜன்னல்கள் வழியேயும்  யாரும் பார்ப்பார்களோ என்ற கவலைகள் ஏதுமற்று அவனை என் வாயில் முழுவதும் ஏற்கிறேன். அவன் விரும்பினால் வீட்டிற்கு வெளியில் எங்கள் தோட்டத்தில், அருகில் வசிப்பவர்களின் முன்னாலேயே  அவனுடன் கூட சம்மதித்திருப்பேன்.

பதினேழு வயதில் அந்த இரவுக் கூடுகையில் மோசமான வேறு ஆண்களைச் சந்திக்காமல் இவனைச் சந்தித்ததில், இவனைத் தேர்ந்தெடுத்ததில்
கர்வம் கொள்கிறேன். அயர்ச்சி மிகுதியால் அப்படியே உறங்கிவிடுகிறோம். நான் கண் விழிக்கும் போது என் கணவன் என் கழுத்தின் பின் புறம் உள்ள ரிப்பனைத் தன் நாக்கால் துழாவி என்னைக் கொஞ்சிக் கொண்டிருந்தான். ரிப்பனைத் தொட்டதால் என் உடம்பே சட்டென்று இறுக்கமாகிறது. சற்று முன்பு துய்த்த இன்பமனைத்தும் மறந்து போகிறது. நான் அவனைப் பேர் சொல்லி அழைக்கிறேன். அவன் அதைக் காதில் வாங்காமல் தொடர்கிறான். மறுபடியும்
அழைக்கிறேன் அவனோ என் ரிப்பனுடன் விளையாடுவதை நிறுத்தவில்லை. பலம் கொண்டு என் இரு கைகளாலும் அவன் கைகளைப் பிடித்திழுத்து, அவனுடைய முகத்தை என் முகத்திற்கு நேர்கொண்டு இருத்துகிறேன். சில்லறைகளைச் சிதறவிட்டு திடுக்கிட வைத்த அன்று என் மகனின் முகத்தைப் போலவே தன் முகத்தை வைத்துக் கொள்கிறான் மிகவும் வருத்தமாகவும் தான் ஏமாற்றப்பட்டது போன்றதுமான பாவனையுடன் என்னைப் பார்க்கிறான்

என்னுடைய உறுதி என்னை விட்டு வடிந்து போகிறது. என்னுடைய ரிப்பனைத் தொடுகிறேன். என் கணவனின் இச்சைகளின் முதலும் முடிவுமாக எல்லாமே அதில் தான் பொதிந்துள்ளது. அவன் மோசமானவன் இல்லை என்பது தான் என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தி  உறுதியிழக்கச் செய்கிறது.

” இதை அவிழ்த்துப் பார்க்க விருப்பமா?” என்கிறேன்

” இத்தனை வருடங்களுக்குப் பிறகும் என்னிடம் உனக்கு இது மட்டும் ஒரு குறையாக இருக்கிறதா?” என்கிறேன். அவன் முகத்தில் மகிழ்ச்சி, பேராசை எல்லாம் கலந்து ஒளிர்கிறது.

தன் கைகளால் என் வெற்றுடம்பைத் தடவியபடி “ஆமாம், ஆமாம்” என்கிறான். அந்த நினைப்பே அவனுடைய இச்சையைத் தூண்டுகிறது என்பதை அவனைத் தொடாமலேயே என்னால் உணர முடிகிறது. என்னை முதலில் முத்தமிட்டு, குளக்கரையில் என்னுடன் முதலில் உறவு கொண்ட அந்த இளைஞனை நினைத்துப் பார்க்கிறேன். எனக்கு ஒரு மகனைத் தந்து தானும் ஒரு ஆணாக வளர்ந்த என் கணவனைப் பார்க்கிறேன்.

” சரி , உனக்கு வேண்டியதை நீ செய்துகொள் .என் ரிப்பனை அவிழ்த்துப் பார்”நடுங்கும் கைகளுடன் ரிப்பனின் முடிச்சை அவிழ்க்கிறான். யுகங்களாக
இறுகியிருந்த முடிச்சும் அவிழ்கிறது. அவன் ஆசையின் உச்சத்தில்
அவனையறியாமல் முனங்குகிறான். ரிப்பன் கீழே விழுகிறது என்று
யூகிக்கிறேன் ஏனென்றால் என்னால் குனிந்து பார்க்க முடியவில்லை.
அவனுடைய முகபாவம் மாறுகிறது, முதலில் குழப்பத்தில் இருப்பவனைப் போலத் தெரிகிறான், பின் நடக்கக் கூடாத ஒன்று நடந்ததைப் போல அவன் தன் வாயைத் திறக்கிறான். நடக்கப் போகிற பேரிழப்பின் நிழலைப் பார்த்துவிட்டவனைப் போல அவன் முகம் மாறுகிறது.
தடுமாறி விழுபவளைப் போல பிடிமானம் வேண்டி என் கைகள் முன்னே நீட்டுகிறேன்.  பிறகு அவனுடைய முகம் மறைந்து விட்டது. ஆனால் அதற்கு முன் ” வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத அளவிற்கு நான் உன்னைக்காதலிக்கிறேன்” என்பதை மட்டும் சொல்லிவிடுகிறேன்.
” இல்லை இல்லை ” என்கிறான். எதை மறுக்கிறான் என்று எனக்குப் புரியவில்லை.

இதை நீங்கள் சத்தமாகப் படிக்கிறீர்கள் என்றால் ரிப்பனால் கட்டப்பட்ட
இடத்தில், என் கழுத்தில் வெட்டுப்பட்ட இடம் போல ரத்தம் வடிந்ததா,
அல்லது கால்களுக்கு இடையில் ஒன்றுமில்லாமல் இருக்கும் ஒரு பொம்மையைப் போல வழவழப்பாகத் தோல் மூடியிருந்ததா என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். ஆனால் என்னால் அதற்கெல்லாம் பதில் தர முடியாது ஏனென்றால் எனக்கே தெரியாது. இந்த கேள்விக்கும் இந்த
கதையில் உங்களுக்கு ஏற்படும் வேறு பல கேள்விகளுக்கும்
என்னால் எந்த பதிலும் தர இயலாது. என்னை மன்னித்துவிடுங்கள்.

என் எடை வேறாக மாறுகிறது. புவி ஈர்ப்பு சக்தியின் விசையினால் உந்தப்
படுகிறேன். நான் அந்த அறையின் விதானத்தைப் பார்க்கிறேன். கழுத்தோடு வெட்டப்பட்ட என் தலை கட்டிலில் விழுந்து பின் உருண்டு தரையில் விழுகிறது. நான் எப்போதும் போல தீராத் தனிமையில் இருக்கிறேன்.

கார்மன் மரியா மிச்சாடோ

மொழிபெயர்ப்பு : அனுராதா ஆனந்த்


கார்மென் மரியா மச்சாடோ :

பென்ஸில்வேனியா பல்கலைக்கழகத்தில்  Artist  – In – Residence ஆக பணிபுரியும் மச்சாடோ எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் விமர்சகர். இவரது படைப்புகள் நியூயார்க்கர் , நியூயார்க் டைம்ஸ்  , க்ரன்தா, வோக், ஹார்ப்பர்ஸ் ,பஸார்,க்வெர்னிகா போன்ற பல அமெரிக்கப் பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன.

இந்த கதை  “கணவனுக்கான தையல்”  இடம்பெற்றுள்ள ” Her Body And  Other Parties ”என்ற தொகுப்பு National book award , lambda literary award for lesbian fiction, national book critic circle award, brooklyn public library literature  prize போன்ற பல விருதுகளை வென்ற தொகுப்பு.

2018 – ல் New York Times இந்தத் தொகுப்பை 21 ஆம்நூற்றாண்டின் கதைகளின் போக்கையும் சொல்லல் முறையையும் , பெண்ணிய சிந்தனையையும் தீர்மானிக்கும் 15 முக்கியமான புத்தகங்களுள் ஒன்றாகத் தேர்வு செய்துள்ளது.

(Husband stitch )  குழந்தை பிறப்பு முடிந்தவுடன் கிழிந்த பிறப்புறுப்பைத் தைக்கும்போது

( episiotomy)கூடுதலாக ஒரு தையல் சேர்த்துப் போடப்படும் ஒரு கொடூரமான பழக்கம் நவீன மருத்துவத்தில் சிலரால் கடைபிடிக்கப்படுகின்றது .(  விழிப்புணர்வு காரணமாக இப்போது வெகுவாக குறைந்துள்ளது) . பெரும்பாலும் பெண் உடம்பைப் பற்றியும் ,அவள் அனுபவிக்கும் வலிகளைப் பற்றியும்  எந்த புரிதலும், அக்கறையும் இல்லாத ஆண் மருத்துவர்களால் மேற்கொள்ளப்பட்ட மோசமான முறை இது. இதனால்  குழந்தை பிறப்பிற்குப் பின்னான  உடலுறவின் போது ஆண்களுக்குக் கூடுதலான இன்பம் கிடைப்பதாக நம்பப்பட்டது . ஆனால் அதுவே  பெண்களுக்கு வருடக்கணக்கில் வலியையும், நோய்த் தொற்றையும் ( சிலருக்கு வாழ்நாள் உபாதைகளையும் ) தர வல்லது . இந்தக் கதையில் மச்சாடோ ” கணவனுக்கான தையல்” என்பதை  ஒரு குறியீடாகவும்  மிக அழகாகப் பயன்படுத்தியுள்ளார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.