கருநீலப் பேரச்சம்.

ன் பெயர் அனிருத்த போஸ். எனக்கு 29 வயதாகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த எட்டு வருடங்களாக,  நான் கல்கத்தாவில் உள்ள  வியாபார நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறேன். கிடைக்கிற சம்பளத்தில் சந்தோஷமாகவே வாழ்க்கை நடத்துகிறேன். நான் சர்தார் சங்கர் ரோட்டில் ஒரு வாடகை வீட்டில் வசிக்கிறேன். இரண்டாவது மாடியில் இரண்டு அறைகள், தெற்குப்பக்கம் திறந்தவெளி.  இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு அம்பாசிடர் கார் வாங்கினேன். அதை நானே ஓட்டுகிறேன். ஆபீஸ் வேலையைப் பார்ப்பதோடு கூட,  எனக்கு எழுதவும் பிடிக்கும். இதுவரையில், என்னுடைய மூன்று சிறுகதைகள் பெங்காலி பத்திரிகைகளில் பிரசுரமாகி,  நண்பர்களிடமிருந்தும் தெரிந்தவர்களிடம் இருந்தும் பரவலாக பாராட்டைப் பெற்றிருக்கின்றன. ஆனால், எழுதுவதால் மட்டுமே வாழ்வாதாரத்துக்கு தேவையானதை சம்பாதித்துவிட முடியும் என்கிற திறமையோ, நம்பிக்கையோ என்னிடம் இல்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். கடந்த சில மாதங்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக நான் எதையும் எழுதாத போதிலும், இந்த சமயத்தில் நான் நிறைய புத்தகங்களை படித்தேன். எல்லாமே வங்காளத்தில் இண்டிகோ விவசாயம்  சம்பந்தப்பட்ட புத்தகங்கள். இந்த விஷயம் குறித்து போதுமான அறிவு பெற்றவனாக,  இப்போது என்னை நான் கருதிக் கொள்ள முடியும். ஆங்கிலேயர்கள் எப்போது இந்தியாவில் இண்டிகோ விவசாயத்தை  வளர்க்க ஆரம்பித்தார்கள்,  எப்படியெல்லாம் அவர்கள்  கிராம மக்களை துன்புறுத்தினார்கள்,  இண்டிகோ புரட்சி எப்படி தொடங்கியது, எப்படி ஜெர்மானியர்கள் முதல்முறையாக செயற்கை இண்டிகோவைத் தயாரித்ததார்கள்,  எப்படி  அது,  இந்தியாவில் இண்டிகோ விவசாயத்தில் ஈடுபட்டிருந்த தொழிற்சாலைகளை இழுத்து மூடுவதற்கு அடிகோலியது,  இது குறித்த எல்லா தகவல்களும் என் விரல் நுனியில் இருந்தன. இந்த புத்தகங்களை வாசிக்கையில் எனக்கு ஏற்பட்ட கனவு போன்ற அனுபவம், இண்டிகோ விவசாயம் சம்பந்தமாக  எப்படி என் ஆர்வத்தை தூண்டியது என்பதே இன்று நான் எழுத எடுத்துக் கொண்டிருக்கும் விஷயம்.

இங்கு நான் என் குழந்தைப் பருவத்தைப் பற்றி கொஞ்சம் பேசியாக வேண்டும்.

என் தந்தை முங்கேரின்  புகழ்வாய்ந்த மருத்துவர். நான் அங்குதான் பிறந்தேன். மிஷினரி பள்ளியில் படித்தேன். எனக்கு ஒரு மூத்த சகோதரன் இருக்கிறான்;  என்னைவிட ஐந்து வயது பெரியவன். இங்கிலாந்தில்  மருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து விட்டு,  தற்போது லண்டனுக்கு அருகேயுள்ள கோல்டர் ஸ்கிரீன் என்கிற இடத்தில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் பணி புரிகிறான். அவனுக்கு தாய் நாடு திரும்பி வருகிற எண்ணம் இல்லை என்று தான் நினைக்கிறேன்.  எனக்கு பதினாறு வயதிருக்கையில் என் தந்தை இறந்து போனார். அடுத்த சில மாதங்களில்,  நானும் அம்மாவும், கல்கத்தாவில் இருக்கும் என் பெரிய மாமாவின் வீட்டிற்கு வந்துவிட்டோம். அங்கிருக்கும்போது,  நான் செயின்ட் சேவியர் கல்லூரியில் சேர்ந்து என் பட்டப்படிப்பை முடித்தேன். சில காலம், எழுத்தாளன் ஆக வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருந்தது. ஆனால் அம்மாவின் தொடர்ந்த  நிந்தனை காரணமாக ஒரு வேலையைத் தேடிக்கொள்ள  வேண்டியிருந்தது. மாமாவின் சிபாரிசின் பேரில் ஒரு வேலையும் கிடைத்தது. என்னுடைய மதிப்பெண்கள் நன்றாக இருந்தன;  நான் நன்றாக ஆங்கிலம் பேசுவேன். மேலும், எனக்கிருந்த தன்னம்பிக்கையும்,  என்னுடைய சாமர்த்தியமும் நேர்காணலின் போது எனக்கு வெகுவாக உதவின என்று நான் நம்புகிறேன்

முங்கேரில் கழிந்த என் குழந்தைப் பருவத்தைப் பற்றி நான் பேசுவதன் மூலம் என்னுடைய குணாதிசயத்தின்  ஒரு பரிமாணத்தை நீங்கள் மேலும் நன்றாக அறிந்து கொள்ள முடியும்.  கல்கத்தாவின் அலுப்பான வாழ்க்கையில் நான் மிக எளிதில் சோர்வடைந்து விடுகிறேன். விழி பிதுங்கும் ஜனக்கூட்டம்,  ட்ராம் மற்றும் பேருந்து வண்டிகள் எழுப்புகிற இரைச்சலும் ஆரவாரமும், தினசரி வாழ்க்கையின் அலுப்பை ஏற்படுத்துகிற  சூழல்கள் மற்றும் கஷ்டங்கள்.  சிலசமயம்,  எனக்கு இவை எல்லாவற்றையும் விட்டு விட்டு எங்காவது ஓடி விடலாமா என்று தோன்றும்.  வண்டி வாங்கிய பிறகு,  நான்கைந்து முறை நிஜமாகவே ஓடிப் போயிருக்கிறேன். விடுமுறை நாட்களில் நான் பலமுறை டைமண்ட்  ஹார்பர் போயிருக்கிறேன். சிலமுறை கானிங் துறை முகத்துக்கும் ஒரு முறை டம்டம்டம் ரோடு வழியாக ஹஸ்னாபாதிக்கும் போயிருக்கிறேன். எல்லா பயணங்களையும், என்னோடு கூட வர எவருக்கும் ஆர்வம் இல்லாததால், நான் தனியாகவே மேற்கொள்ள வேண்டியிருந்தது.

இதிலிருந்து,  கல்கத்தாவில் எனக்கு உண்மையான நண்பர்கள் என்று எவரும் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். எனவே தான்,  பிரமோதின் கடிதம் வந்ததும் நான் மிகவும் உற்சாகமானேன். பிரமோத், முங்கேரில்   என்னுடன் படித்தவன். கல்கத்தா வந்த பிறகு,  நாங்கள் அடிக்கடி கடிதங்களைப் பரிமாறிக் கொள்வதுண்டு. இந்த பழக்கம் மெல்ல மெல்ல நின்று போனதற்கு நான்தான் காரணம். திடீரென ஒரு நாள்,  நான் அலுவலகத்திலிருந்து திரும்பியதும்,  பெரிய மாமா வீட்டிலிருந்து யாரோ ஒரு கடிதத்தை கொடுத்துவிட்டுப் போனதாக என் வேலைக்காரன் குருதாஸ் கூறினான். உரையின் மேலிருந்த கையெழுத்தைப் பார்த்ததுமே,  அது பிரமோதுடைய கடிதம் என்று எனக்கு தெரிந்து விட்டது.  அவன் தும்காவில் ஏதோ ஒரு காட்டு அலுவலகத்திலிருந்து எழுதி இருந்தான். எனக்கு இங்கு தங்க இடம் இருக்கிறது. நீ ஏன் ஒருவாரம் விடுமுறை எடுத்துக்கொண்டு இங்கு வந்து என்னுடன் தங்கக்கூடாது என்று கேட்டிருந்தான்.

அலுவலகத்தில் என்னுடைய கணக்கில்  கணிசமான விடுமுறை நாட்கள் சேர்ந்திருந்தன.  எனவே,  நான் மீதமிருந்த வேலைகளை விரைவாக முடித்து விட்டு,  எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்த பின் ஏப்ரல் 27ஆம் தேதியன்று –  அந்த நாளை நான் என்றும் ஞாபகம் வைத்துக் கொள்வேன் –  என்னுடைய சாமான்களுடன் கல்கத்தாவின் நெரிசலையும் இடிபாடுகளையும் பின்னே விட்டு விட்டு கிளம்பினேன்.

பிரமோதிடம் தும்காவுக்கு நான் காரில் வருவதை பற்றி எதுவும் முன்னதாக கூறி இருக்கவில்லை.  200 கிலோ மீட்டர் பயணம் செய்ய அதிகபட்சம் ஐந்து அல்லது ஐந்தரை மணி நேரம் பிடிக்கலாம். சீக்கிரமாகவே மதிய உணவை,  சரியாக காலை பத்துமணிவாக்கிலேயே முடித்துவிட்டு கிளம்பினால்,  அந்தி சாய்வதற்கு முன்பாகவே தும்கா சென்றடைந்து விடலாம் என எண்ணியிருந்தேன்.

என்னுடைய திட்டத்தில்,  எடுத்த எடுப்பிலேயே முட்டுக்கட்டை விழுந்தது.  சாப்பாடு என்னவோ கிட்டத்தட்ட சரியான நேரத்தில் முடிந்து விட்டது.  நான் வெற்றிலை போட்டுக்கொண்ட அதே தருணத்தில்,   என் தந்தையின் நெடுங்கால  நண்பரான மோஹித் காக்கா வந்து சேர்ந்தார்.  காக்கா வயதானவர் என்பதாலும், கடந்த  பத்து வருடங்களில் நான் அவரை  சந்தித்திருக்கவில்லை என்பதாலும்,  நான் அவசரமாக கிளம்பி கொண்டிருக்கிற விஷயத்தை அவரிடம் சொல்லவில்லை. அவருக்கு தேநீர் தயாரித்து கொடுத்தபின், கிட்டத்தட்ட ஒருமணி நேரம், அவருடைய சொந்த கதைகளை கேட்டுக் கொண்டிருக்க வேண்டியிருந்தது.

ஒருவழியாக,  மோஹித்  காக்காவை வழியனுப்பி வைத்துவிட்டு, என்னுடைய சாமான்களை வண்டிக்குள் வைத்துவிட்டு, ஏறி உட்காரும் போது,  போலா பாபுவும் அவரது மகன் பின்டோவும்  எங்கிருந்தோ திரும்பி வந்து கொண்டிருப்பதைக் கண்டேன். போலா பாபு, எங்கள் கட்டிடத்தின் தரைப்பகுதி  வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார். அவர் என்னை பார்த்தவுடன், “தன்னந்தனியாக எங்கே கிளம்பி விட்டாய்?” என்று கேட்டார். என்னுடைய பதிலைக் கேட்டதும், “அவ்வளவு தூரம் தனியாகவா வண்டியை ஓட்டிக் கொண்டு போகப் போகிறாய்? இந்த பயணத்திற்காவது ஓட்டி ஒருவரை அமர்த்தி கொண்டிருக்கலாமே?” என்று தயக்கத்துடனும் சந்தேகத்துடன் கேட்டார்.  நான் மிகவும் கவனமாக வண்டி ஓட்டுவேன் என்றும், வண்டியை  புத்தம்புதியது போல நன்றாக பராமரித்து வருவதால்,  கவலைப்பட எந்த அவசியமும் இல்லை என்றும்  அவருக்கு பதில் அளித்தேன். எனக்கு வாழ்த்து சொல்லிவிட்டு, மகனின் கையைப் பிடித்துக்கொண்டு போலா பாபு  வீட்டிற்குள் சென்றார்.

வண்டியை உயிர்ப்பிப்பதற்கு முன்பு,  நான் என் கைக்கடிகாரத்தில் மணியை பார்த்தேன்‌.  பதினொன்று ஆகி பதினைந்து நிமிடங்கள் கடந்து விட்டிருந்தன.

ஹௌராவை தவிர்த்துவிட்டு,  பாலி பிரிட்ஜ் ரோடு வழியாகச் சென்ற போதிலும்,  சந்த்ர நாகூரை அடைய, எனக்கு சுமார் ஒன்றரை மணி நேரம் பிடித்தது.  முதல் முப்பது மைல்கள் மிகவும் மோசமானதாக இருந்தன. சாலைகள் கரடு முரடாகவும், இயற்கை அழகுகள் ஏதுமற்றும் இருந்தன. பயணம் குறித்து எனக்குள் ஏற்பட்டிருந்த மகிழ்ச்சியும் கிளர்ச்சியும், சற்று நேரத்திற்குள்ளாகவே வடிந்து போயிருந்தது. ஆனால்,  வண்டி நகரை விட்டு நீங்கி, கிராமப்புறத்துக்குள் நுழைந்தவுடனேயே மாயாஜாலம் தொடங்கியது –  இதற்காகத்தானே நான் வந்தேன்! இந்த சுத்தமான  புகையால் மாசடையாத வானம் இத்தனை நேரம் எங்கே ஒளிந்து கொண்டிருந்தது? மண்வாசனையில் முங்கிய,  இனிய,  சுத்தமான காற்று இத்தனை நேரம் வேறெங்கே வீசிக்கொண்டிருந்தது?

சுமார் ஒன்றரை மணிக்கு நான் பர்த்வானுக்கு அருகே உள்ள, ஏதோ ஒரு இடத்தை சென்றடைந்து இருந்தேன். எனக்கு பசித்தது. வண்டியில் சில ஆரஞ்சு பழங்களும் ஃபிளாஸ்கில் தேநீரும் இருந்தபோதிலும், எனக்கு வேறு எதையேனும் சாப்பிட வேண்டுமென தோன்றியது. சாலையை ஒட்டியே ரயில் நிலையம் இருந்தது. நான் வண்டியை நிறுத்திவிட்டு,  அங்கிருந்த உணவுவிடுதி ஒன்றுக்குள் நுழைந்து,  சில ரொட்டித் துண்டுகளையும் ஆம்லெட்டையும் சாப்பிட்டுவிட்டு ஒரு கோப்பை காபியையும் குடித்தேன்.  பிறகு மறுபடியும் வண்டியை ஓட்டத் தொடங்கினேன்.  இன்னும் நூற்றிமுப்பது மைல்கள் போக வேண்டும்.

பான்கர், பர்த்வானில் இருந்து 25 மைல் தூரத்தில் இருந்தது. அங்கிருந்து கிராண்ட் டிரங்க் ரோடில் இருந்து விலகி, ஏலாம் பஜார் ரோட்டில் மேற்கொண்டு பயணிக்க வேண்டும். ஏலாம் பஜாரிலிருந்து, சிவுரி வழியாக மஸன்ஜோரைக்  கடந்த பிறகே,  தும்கா போய் சேர முடியும்.

பான்கரின் ராணுவக் குடியிருப்புகள் கண்ணில் தென்படத் தொடங்கிய சமயம்,  வண்டியின் பின்புறத்திலிருந்து,  பலூன் ஒன்று வெடித்தது போன்ற பலத்த சத்தம் கேட்டது. வண்டி ஒரு பக்கமாக சாய்ந்தது. காரணம் தெரிந்ததுதான்.

வெளியே இறங்கி பார்த்தால்,  நகரம் இன்னும் சில மைல்களுக்கு அப்பால் இருந்தது தெரியவந்தது. வண்டியை பழுது பார்க்கும் கடை எதுவும் சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடும் என்கிற நம்பிக்கையை கைவிட வேண்டியதாயிற்று. என்னிடம் மாற்று ஸ்டெப்னி இல்லாமல் இல்லை. ஜாக்கியை உபயோகித்து பழுதான டயரை மாற்றும் திறமையும் இல்லாமல் இல்லை. இருப்பினும்,  ஏனோ எனக்கு அதை செய்கிற மனநிலை இல்லை. கிராண்ட் டிரங்க் ரோடின் நடுவில் நின்றுகொண்டு நான் காரின் டயரை மாற்றி கொண்டிருப்பதை பரிதாபத்துடன் பார்த்தவாறே,  மற்ற வண்டிகள் வேகமாக கடந்து செல்லக் கூடும் என்கிற நினைப்பே எனக்கு எரிச்சல் மூட்டியது. ஆனால்,  வேறு வழியும் இல்லை.  நான் சுமார் பத்து நிமிடங்கள் இங்குமங்கும் பார்த்தவாறே காத்துக்கொண்டிருந்தேன். சாலையில் மேலும் கீழுமாக நடந்தேன். கடைசியில் வேறு வழியின்றி பழுதான டயரை மாற்றும் வேலையில் ஈடுபட்டேன்.

வேலையை முடித்தபின்,  பழுதான டயரை பத்திரமாக உள்ளே வைத்துவிட்டு நிமிர்கையில், சட்டை வியர்வையில் நனைந்து உடம்போடு ஒட்டிக் கொண்டிருந்தது. நான் கடிகாரத்தைப் பார்த்தேன். மணி அப்போதே இரண்டரை ஆகிவிட்டிருந்தது. புழுக்கமாக இருந்தது. ஒருமணி நேரம் முன்பு வீசிய தென்றலின் சுவடே காணவில்லை. காரிலிருந்து, சாலையின் இருபுறமும் கவிழ்ந்திருக்கும் மூங்கில் மரங்களை பார்த்தேன். இப்போது,  அமானுஷ்யமான அமைதி, நாற்புறமும் விரவி இருந்தது. நான் வண்டிக்குள் ஏறும் முன்பு கருநீலக்கோடு ஒன்று தூரத்து மரங்களின் மேல் வானத்தில் தோன்றி இருப்பதை பார்த்தேன் –  மேகங்கள் – புயல் வீசப் போகிறதா என்ன? ஒன்றும் பிரச்சினை இல்லை – எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். நான் விரைவாகச் செல்ல வேண்டும். ஃபிளாஸ்கில் இருந்து கொஞ்சம் தேநீரைக் குடித்துவிட்டு, நான் மறுபடியும் பயணப்பட ஆரம்பித்தேன்.

 

நான் ஏலாம் பஜாரை கடந்தவுடன் அச்சுறுத்தும் புயல் ஆரம்பித்தது. நான் எப்போதும் என் அறையில்,  குளிருக்கு இதமான மூலையிலிருந்தவாறே, புயலின் தாளத்துக்குப் பொருத்தமான தாகூரின் பாடல்களோடோ அல்லது  தோதான  மனநிலையோடோதான் புயலை ரசித்திருக்கிறேன். ஆனால், கிராமப்புறங்களில், வெட்டவெளியில் வேகமாக விரையும் வண்டிக்குள்ளிருந்து பார்க்கையில், புயல் இப்படி கொடூரமாக தாக்க வரும் என்று ஒருபோதும் கற்பனை கூட செய்ததில்லை.  இடியும் புயலும் இயற்கையின் கொடூரமான முகங்களில் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். நிராதரவான மனிதன் ஒருவனை,  தன் கட்டிலடங்கா சக்தியால் சீண்டிப் பார்ப்பது அதன் நோக்கமாக இருக்க வேண்டும். கண்ணைக் குருடாக்கிவிடுகிற மின்னல் வெளிச்சம்,  வானில் இங்குமங்கும் பளீரிட்டது. இடிமுழக்கங்களும் தொடர்ந்தன. மின்னலும் இடியும் என் வண்டியை குறி பார்ப்பது போல எனக்கு தோன்றியது. இன்னமும் கூடுதல் கவனத்துடன் வண்டியை ஓட்ட வேண்டும் என்று  நினைத்துக் கொண்டேன்.

நான் எப்படியோ ஒருவாறு மஸன்ஜோர்  போகிற பாதையில் சென்று கொண்டிருந்தபோது,  திடீரென,  வண்டியின் பின்புறத்தில் இருந்து மறுபடியும் காதைத் துளைக்கும் சத்தம் கேட்டது. நிச்சயமாக இது இடியோசை இல்லை. இரண்டாவது டயர் உயிர் விட்டிருந்தது.

நான் மொத்த நம்பிக்கையையும் இழந்திருந்தேன். மணியோ ஐந்தரைக்கு மேல் ஆகியிருந்தது. மழை வேறு கொட்டிக் கொண்டிருந்தது. கடைசி இருபது மைல்களை  நான் மணிக்கு 15-லிருந்து 20 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், இந்த நேரத்தில் நான் மஸன்ஜோரை  கடந்திருப்பேன். நான் எங்கு வந்து சேர்ந்திருக்கிறேன்?  எதிரில் தெரியும் பாதையை பார்த்தால் எனக்கு ஒன்றும் புரியவில்லை. வண்டியின் கண்ணாடி மீது  மழை, அருவிபோல கொட்டிக்கொண்டிருந்தது. துடைப்பான்கள் மிகுந்த சத்தத்துடன் சிரமப்பட்டுக் கொண்டிருந்த போதிலும் பயனேதுமில்லை. ஏப்ரல் மாதத்தில், சூரிய அஸ்தமனம் ஆகும் நேரம் அது அல்ல என்றபோதிலும், வெளியில், இரவைப்போல இருள் கவ்வியிருந்தது.

நான் வண்டியின் வலது பக்க கதவைத் திறந்தேன். மரங்களுக்கு நடுவே சில வீடுகள் இருப்பது போல எனக்கு தோன்றியது. ஆனால் வெளியே இறங்கி பார்ப்பதென்பது நிச்சயம் முடியாது. கிட்டத்தட்ட இரண்டு மைல் தூரத்துக்கு கடைகளோ கடைத்தெருவோ எதுவும் இல்லை என்பது கீழே இறங்கிப் பார்க்காமலேயே புரிந்தது.

என்னிடம் மாற்றுவதற்கு வேறு டயர்கள் இனி இல்லை.

நான் வண்டியில் அமர்ந்திருக்கையில், சாலையில் ஒரு ஆளோ வண்டியோ கூட தென்படவில்லை என்பதை கவனித்தேன்.  நான் தவறான பாதையில் வந்து விட்டேனா என்ன?  என்னிடம் சாலை வரைபடம் இருந்தது. நான்சிவுரி  வந்து சேர்ந்தது வரை எனக்குத் தெரியும்.  அதற்கு பின்னர்,  தவறான பாதையில் வந்தவிட்டேனா? கண்களை குருடாக்கும்படி பெய்கிற இந்த மழையில் அது சாத்தியம் என்றே தோன்றியது.

அப்படியே தவறான பாதையில் நான் சென்றிருந்தாலும், ஆப்பிரிக்கா அல்லது தென்அமெரிக்காவின் அடர்காடுகளின் நடுவே சிக்கிக்கொண்டு தவிப்பது போல நான் ஏன் நோக்கமின்றி சுற்றிக் கொண்டிருக்க வேண்டும்?  அது எந்த இடமோ, நிச்சயமாக  பீர் பும்மிக்கு அருகில் தான் இருக்க வேண்டும் என்றும்,  சாந்திநிகேதனில் இருந்து 50 மைல்களுக்குள்ளாகத்தான் இருக்க வேண்டும் என்றும் நான் உணர்ந்தேன். மழை நின்ற பிறகு எல்லாம் தெளிவாகும் என நினைத்தேன். ஒரு மைல் தூரத்துக்கு உள்ளாகவே வண்டியை பழுது பார்க்கிற ஒரு கடையைக் கூட கண்டுபிடித்து விட முடியும் என நான் நம்பினேன்.

என்னுடைய காற்சட்டை பையிலிருந்து வில்ஸ் சிகரெட் பாக்கெட்டையும் வத்திப் பெட்டியும் வெளியே எடுக்கும்போது எனக்கு போலா பாபுவின் முன்னுணர்வு நினைவுக்கு வந்தது. அவரும் இம்மாதிரியான சூழலில் சிக்கி பரிதவித்திருக்கக் கூடும் – இல்லாவிட்டால்  எப்படி இத்தனை சிறந்த அறிவுரையை எனக்கு தந்திருக்க முடியும்? இனிமேல்…..

பை……பை……பை (ஹார்ன் சத்தம்)

வண்டியில் ஹாரன் சத்தம் லேசாக கண்ணயர்ந்திருந்த என்னை எழுப்பியது. மழை ஓரளவு நின்றுவிட்டிருந்ததை நான் கவனித்தேன். ஆனால் இருள் இன்னமும் கருத்திருந்தது.

பை….பை….பை (ஹார்ன் சத்தம்)

என் வண்டியின் பின்னால் ஒரு லாரி நிறுத்தப்பட்டிருந்ததைப் பார்த்தேன். ஏன் ஹார்ன் அடிக்கிறார்கள்?  நான் என்ன முழுச் சாலையையும் மறித்து வண்டியை நிறுத்தி இருக்கிறேனா?

வண்டியிலிருந்து இறங்கி பார்த்தபோது,  லாரிக்காரனை  குறைகூற முடியாது என்பது புரிந்தது. என்னுடைய வண்டியின் இரண்டாவது டயர் பழுதடைந்ததில் வண்டி சற்று கோணலாக நின்று போயிருந்தது. முழுச் சாலையையும் அடைத்து நிற்காவிட்டாலும், வண்டி பாதி சாலையை,  லாரி போக முடியாதபடி, அடைத்தவாறு நின்றிருந்தது.

“காரை ஒருபக்கமாக நகர்த்தி நிற்க வையுங்கள்”

என் பரிதாபமான நிலையை புரிந்து கொண்டதாலோ என்னவோ,  அந்த பஞ்சாபி லாரி ஓட்டுநர்,  லாரியில் இருந்து குதித்து என் அருகே வந்தார்.

“என்ன ஆயிற்று?  பங்க்சர்?”

நான் ஃப்ரெஞ்சுக்காரர்களைப் போல,  தோள்களை குலுக்கி என் இயலாமையையும், தவிப்பையும் தெரிவித்தேன். அவர் எனக்கு உதவி செய்தால், நான் என் வண்டியை நகர்த்த முடியும் என்றும் ஜாடையால் உணர்த்தினேன்.

அந்த பஞ்சாபி ஓட்டுநரின் உதவியாளர் ஒருவரும் லாரியில் இருந்து கீழே குதித்து அருகே வந்தார்.  நாங்கள் மூவருமாக சேர்ந்து, ஸ்டீயரிங் வீலை சுழற்றி,  ஒருவாறாக வண்டியை சாலையின் நடுவில் இருந்து நகர்த்தி,  ஒரு ஓரமாக நிறுத்தினோம். அந்தச் சாலை தும்காவுக்கு போகாது என லாரி ஓட்டுனரிடமிருந்து நான் தெரிந்து கொண்டேன். நான் தவறான வழியில் வந்து  விட்டேன்.  இருப்பினும், தும்கா  மூன்று மைல் தூரத்தில்தான் இருந்தது.  அருகில் வண்டியை பழுது பார்க்கும் கடை எதுவும் இல்லை என்பதையும் அந்த ஓட்டுநர் தெரிவித்தார்.

அந்த லாரி புறப்பட்டு சென்றது. லாரி  சென்ற சத்தம் தேய்ந்ததும், கனத்த அமைதி நாற்புறமும் சூழ்ந்தது.  நான் ஆழ்ந்த சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன்.

அன்று இரவே தும்கா போய் சேர எந்த வாய்ப்பும் இல்லை. இரவை எப்படி கழிப்பது என்று எனக்கு தெரியவில்லை.

அருகிலிருந்த குளத்திலிருந்து,  தவளைகள் ஒரே நேரத்தில் சேர்ந்திசை எழுப்புவதைக் கேட்டேன். மழை ஓரளவுக்கு குறைந்திருந்தது. வேறு நேரமாக இருந்தால்,  நான் ஈர பூமியின் நறுமணத்தை ரசித்திருப்பேன். ஆனால் இந்த இக்கட்டான சூழலில் அது முடியவில்லை.

நான் வண்டிக்குள் ஏறி அமர்ந்து கொண்டேன். ஆனால் என்ன பிரயோஜனம்? கை கால்களை நீட்டிப் படுக்க அம்பாசிடர் காரை விட அசௌகரியமான இடம் இந்த பூமியில் இருக்கிறதா என்ன?

 

நான் இன்னொரு சிகரெட்டை பற்ற வைக்க தொடங்குகையில், திடீரென மங்கிய வெளிச்சம் ஒன்று ஸ்டீயரிங் வீல் மீது விழுவதை கவனித்தேன். நான் ஜன்னல் வழியாக தலையை நீட்டி பார்த்த போது,  மரங்களின் ஊடாக சதுர வடிவமான வெளிச்சத்தைக் கண்டேன் அது ஒரு ஜன்னல் போலத் தெரிந்தது நெருப்பில்லாமல் புகையாது. மண்ணெண்ணெய் விளக்கிலிருந்து வெளிச்சம் வருமானால்,  அங்கு கண்டிப்பாக மனிதர்கள் இருந்தாகவேண்டும். மனிதர்கள் வசிக்கும் வீடொன்று அருகில் இருக்கக் கூடும் என எனக்கு தோன்றியது.

கைவிளக்கை எடுத்துக்கொண்டு நான் வண்டியிலிருந்து இறங்கினேன். வெளிச்சம் வெகு தூரத்தில் இல்லை.  எனக்கு மேற்கொண்டு சென்று பார்க்க வேண்டுமென தோன்றியது. காட்டினூடே, குறுகலான பாதை ஒன்று வெளிச்சம் வரும் இடத்திற்கு சென்றது.

நான் கவலைப் படவில்லை. வண்டியைப் பூட்டி விட்டு நடக்க ஆரம்பித்தேன்.

நான் எப்படியோ தட்டுத் தடுமாறி,  கீழே விழாமல் கவனமாக சென்றேன். மழைநீர் தேங்கி இருந்த குட்டைகளில் கால் வைத்து நடந்தவாறே, ஒரு புளியமரத்தைத் தாண்டியதும் நான் அந்த வீட்டைக் கண்டேன்.  அதை வீடு என்று சொல்வது தவறு –  அது மெல்லிய செங்கல் சுவர்களாலான தகரக் கூரை வேயப்பட்ட குடிசை. பாதி திறந்திருந்த கதவின் வழியாக,   மண்ணெண்ணெய் விளக்கின் புகை சூழ்ந்த அறையில், நான் சதுரவடிவக் கட்டிலின் காலை பார்த்தேன்.

“யாரேனும் இருக்கிறீர்களா?”

குள்ளமான, நடுத்தர வயது மீசைக்கார மனிதன் ஒருவன் டார்ச் விளக்கின் பிரகாசம் தாங்காமல்,  கண்களை  சுருக்கியவாறு என்னை பார்த்தான். நான் டார்ச் விளக்கை கீழே தாழ்த்தினேன்.

“எங்கிருந்து வருகிறீர்கள் ஐயா?”

நான் என் கதைச்சுருக்கத்தை அவனிடம் சொல்லிவிட்டு, இரவு தங்குவதற்கு ஏதாவது இடம் ஏற்பாடு செய்து தர முடியுமா என்று கேட்டேன். அதற்கு என்ன செலவானாலும்,  அதைத் தர தயாராக இருப்பதாகவும் சொன்னேன்.

” நீங்கள் டாக் பங்களாவில் தங்கி கொள்கிறீர்களா?”

டாக் பங்களாவா?அது எங்கே இருக்கிறது?  என் மனதில் அந்த கேள்வி எழுந்ததுமே நான் என் தவற்றை உணர்ந்து கொண்டேன். கையில் இருந்த டார்ச் விளக்கின் ஒளியையும்,  மண்ணெண்ணெய் விளக்கின் ஒளியையுமே  தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்ததால்,  நான் அக்கம்பக்கம் இருந்தவற்றை சரியாக கவனிக்கவில்லை. இப்போது, விளக்கின் ஒளியைப் பாய்ச்சி, என் இடதுபுறம், ஒரு பெரிய பழங்கால வீடொன்றைக் கண்டேன். அந்த வீட்டை சுட்டிக் காட்டியபடியே, அதுதான் டாக் பங்களாவா என்று கேட்டேன்.

“ஆமாம் ஐயா. ஆனால், உங்களுக்கு இங்கு படுக்கையோ, உணவுவோ கிடைக்காது.”

“என்னிடம் படுக்கை இருக்கிறது. அங்கு ஒரு கட்டிலாவது இருக்கும் அல்லவா?”

“ஆமாம். கட்டில் இருக்கக்கூடும்.”

“உங்கள் வீட்டில் நான் ஒரு ஸ்டவ் இருப்பதை பார்த்தேன். நீங்கள் உங்கள் உணவை சமைத்துக் கொண்டிருக்கக்கூடும் அல்லவா?”

அந்த மனிதன் சிரித்தவாறே, தான் சமைத்த தடியான ரொட்டிகளையும், தன்  மனைவி சமைத்த உளுத்தம்பருப்பு தாலையும் நான் சாப்பிடுவேனா என்று கேட்டார். எல்லாவிதமான ரொட்டிகளும், உளுத்தம்பருப்பு தாலும் எனக்கு மிகவும் பிடித்தமானவை என்று நான் பதிலளித்தேன்.

அந்த இடம் முன்பு எப்படி இருந்ததோ தெரியாது – இப்போது டாக் பங்களா என்று வெறும் பெயரளவில்தான் இருந்தது.  அந்த காலத்தில் ‘சாகிப்புகளுக்காக’ கட்டப்பட்டிருந்ததால், அறை விசாலமானதாகவும், கூரை உயரத்திலும் காணப்பட்டது. மரச்சாமான்களைப் பொறுத்தவரையில், ஒரு நாடா கட்டில்,  மேஜை மற்றும் கை உடைந்த நாற்காலி ஒன்றையும் நான் அந்த அறையில் கண்டேன்.

காவல்காரன் அரிக்கேன் விளக்கு ஒன்றை மேஜையின் மீது வைத்தான். நான் அவனிடம் பெயரை கேட்டேன்.

“சுக்கன் ராம் ஐயா”

“எனக்கு முன்பு இங்கே யாராவது தங்கியிருக்கிறார்களா அல்லது நான்தான் முதல் விருந்தாளியா?”

சுக்கன்ராம் வேடிக்கை உணர்வு மிகுந்தவன் போலும். என்னுடைய கேள்விக்கு அவன் சிரித்தான்.  ” பூதம் கீதம் எதுவும் இல்லாமல் இருக்கவேண்டும்” என்றேன்.

“அடக்கடவுளே! நிறைய பேர் இங்கு வந்து தங்கி இருக்கிறார்கள். இம்மாதிரியான குற்றச்சாட்டுகளை என்னிடம் யாரும் இதுவரை சொன்னதில்ல.”

அவனுடைய பதிலால் நான் முழுமையாக திருப்தி அடைந்ததாக சொல்ல முடியாது. நான் பூதங்களை நம்பினேனா இல்லையா என்பது முக்கியமில்லை.  அந்த பங்களா உண்மையிலேயே பாழடைந்ததாக இருப்பின்,  பூதங்கள் வசிக்கும் வீடாகத் தான்  இருக்கும்.   இந்த பங்களாவை கட்டி எவ்வளவு காலம்   ஆகியிருக்கும் என நான் கேட்டேன்.

நான் என்னுடைய படுக்கையை விரித்துக் கொண்டிருக்கும்போது, சுக்கன்ராம், “ஆதிகாலத்தில் இது நீல பங்களாவாக இருந்தது” என்றான். அருகில் இண்டிகோ தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இருந்தது. புகைபோக்கி ஒன்று இன்றளவும் நின்று கொண்டிருப்பதைக் காண முடியும். மற்றவை அழிந்து விட்டன என்றான். சுற்றுவட்டாரம் முழுவதும் இண்டிகோ விவசாயம் நடைபெற்றது என்பதை நான் அறிந்திருந்தேன். நான் முங்கேரில் இருக்கையில் பல இண்டிகோ மாளிகைகளைக் கண்டிருக்கிறேன்.

சுக்கன்ராம் அளித்த ரொட்டி மற்றும் உளுத்தம் பருப்பு தாலு டன் இரவுச்சாப்பாட்டை முடித்துக்கொண்டு, நான் அந்த நாடா கட்டிலில் படுக்கையில் இரவு பத்தரை மணி ஆகிவிட்டிருந்தது. நான் பிரமோததுக்கு மாலைக்குள் அவன் இருக்குமிடத்திற்கு வந்து சேர்ந்து விடுவேன் என்று தந்தி அடித்திருந்தேன். அவன் என்னைக் குறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்க கூடும். ஆனால் அதைப்பற்றியெல்லாம் யோசிப்பதால் எனக்கு இப்போது எந்த வித லாபமும் இல்லை என்பதும் புரிந்தது. அதிர்ஷ்டவசமாக இரவுப் பொழுதைக் கழிக்க எனக்கு ஒர் இடம் கிடைத்திருக்கிறது. இனிமேல் போலா பாபு அளிக்கும் எந்தவிதமான அறிவுரையையும் நான் செவிமடுப்பேன். நான் மிகக் கடினமான பாடம் ஒன்றே கற்றுக்கொண்டேன். கடினமான முறையில் கற்றுக் கொண்டாலொழிய யாரும் எதையும் எளிதாக கற்றுக்கொண்டுவிட முடியாது என்பது மிகவும் உண்மை.

நான் குளியல் அறை விளக்கை எரியவிட்டிருந்தேன். கதவிடுக்கின் வழியாக வந்த, மங்கிய கோடு போன்ற வெளிச்சம் போதுமானதாக இருந்தது. விளக்கு எரிந்து கொண்டிருக்கையில் என்னால் தூங்க முடியாது. நல்ல தூக்கம் என்பதே என் அப்போதைய தேவையாக இருந்தது. என்னுடைய சாமான்களை நான் வண்டியிலிருந்து எடுத்து வந்திருந்தேன்‌. வண்டியைப் பூட்டியிருந்தேன் என்று சொல்லத் தேவையில்லை. கிராமப்புறங்களைக் காட்டிலும், கல்கத்தாவின் தெருக்களில், வண்டியை யாருமற்று நிற்கச் செய்வது அபாயகரமானது.

வெளியில் மழைச் சத்தம் ஓய்ந்திருந்தது. சில்வண்டுகள் மற்றும் தவளைகளின் கூட்டிசை, அந்த இரவை நிறைத்துக் கொண்டிருந்தது. நகர வாழ்க்கை எங்கோ வெகு தொலைவில், வரலாற்றுக்காலத்திற்கு முன்பாகவே நின்று விட்டிருந்தது போல ஒரு மன மயக்கம் ஏற்பட்டது! “இண்டிகோ மாளிகை!” தீனபந்து மிஸ்ராவின் “இண்டிகோ கண்ணாடி” என்னும் நாடகம் நினைவுக்கு வந்தது. நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கையில் அந்த நாடகத்தைப் பார்த்திருக்கிறேன். தொழில்முறை நாடக குழுமம் ஒன்று, கார்ன்வாலிஸ் தெருவில், அந்த நாடகத்தை நடத்தியது.

நான் திடுக்கிட்டு எழுந்தேன். எவ்வளவு நேரம் தூங்கியிருப்பேன் என்று தெரியவில்லை.

உட்பக்கம் தாளிடப்பட்டிருந்த கதவுக்கு வெளியே, யாரோ கதவை நகத்தால் பிறாண்டுவது போலச் சத்தம் கேட்டது. நாயோ அல்லது நரியோ, கதவை வெளியிலிருந்து பிறாண்டியிருக்கக்கூடும். ஒருநிமிடம் கழித்து சத்தம் நின்றுவிட்டது. மறுபடியும் நாலாபக்கமும் அமைதி சூழ்ந்தது.

நான் கொஞ்சநேரம் கண்ணயர்ந்தேன். மறுபடியும் நாய் குரைக்கும் சத்தம் என்னை எழுப்பியது.

அது சாதாரணக் கிராமத்து நாயின் குரைப்பு அல்ல. ‘சாஹிப்’ வளர்க்கும் வேட்டைநாயின் உறுமல் அது. எனக்கு அந்த உறுமல் பரிச்சயமானதே. முங்கேரில், எங்கள் வீட்டிற்கு இரண்டு வீடுகள் தள்ளி இருந்த மார்டின் சாகிப் வீட்டு நாயின் உறுமலை நான் கேட்டிருக்கிறேன். ஆனால், இந்த அத்துவானக் காட்டில் யார் வேட்டை நாய் வைத்திருக்க போகிறார்கள்? எனக்கு எழுந்து போய் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் எழுந்தபோதிலும், சாதாரண நாய் குரைப்புக்காகத் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு எழுந்து போக விரும்பவில்லை. அதற்குப் பதிலாக கொஞ்சம் தூங்கவேணும் முயற்சி செய்யலாம் என நினைத்தேன். இப்போது என்ன நேரம்?

ஜன்னலின் வழியாக மங்கிய நிலவொளி அறைக்குள் விழுந்திருந்தது‌ நான் கையை முகத்தருகே கொண்டு செல்கையில், திடீரென என் இதயம் துடிக்க மறந்து துள்ளிக் குதித்தது.

என் கைக்கடிகாரத்தைக் காணவில்லை!

தானியங்கி கடிகாரத்தை அணிவது பழகிவிட்டிருந்ததால், நான் மணிக்கட்டிலிருந்து கடிகாரத்தை அவிழ்ப்பதேயில்லை. தூங்கும் போதுகூட நான் கடிகாரம் அணிந்தபடியே தான் தூங்குவது வழக்கம். கடிகாரம் எங்கே? என் கார் என்னவாகியிருக்கும்?

தலையணைக்கு அருகாக இருட்டில் துழாவி டார்ச் விளக்கைத் தேடினேன். அதுவும் காணாமற்போயிருந்தது.

நான் படுக்கையிலிருந்து துள்ளி எழுந்து கட்டிலுக்கு அருகே தேடினேன். என்னுடைய பெட்டியையும் காணவில்லை!

எனக்குக் கோபம் வந்தது – நான் ஏதாகினும் செய்ய வேண்டும். “காவற்காரரே! நான் உரக்கக் கத்தினேன்.

பதில் வரவில்லை.

நான் கதவைத்திறந்து கொண்டு வராந்தாவுக்குச் செல்ல முயற்சிக்கையில், கதவு இரவு நான் பூட்டியபடியே இருந்தது. ஜன்னலிலும் கம்பிகள் போடப்பட்டிருந்தன. பிறகு எப்படித் திருடன் உள்ளே வந்திருக்க முடியும்? நான் கதவைத் திறக் கையில், என் பார்வை கைகளின் மீது விழுந்தது. இது என்ன சுவரில் இருந்த சுண்ணாம்பா அல்லது வேறு ஏதேனும் பொடியா? நான் தூங்குவதற்கு முன்பு அரைக்கை சட்டை அணிந்திருந்தேனே? பிறகு எப்படி இப்போது இந்த முழுக்கைப் பட்டுச் சட்டையை அணிந்து கொண்டிருக்கிறேன்?

எனக்கு தலைச் சுற்றியது. நான் வராந்தாவிற்கு சென்றேன்.

“காவல்காரரே?”

என்னுடைய குரலையோ அல்லது உச்சரிப்பையோ என்னாலேயே அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை! மிஷனரி பள்ளியில் படித்தும் கூட என்னுடைய பங்கலா பேச்சு மொழியின் மீது, சரியான ஆங்கில உச்சரிப்போ அல்லது பேசும் விதமோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தி இருக்கவில்லை.

காவற்காரனும் அவனுடைய குடிசையும் கண்ணிலேயே படவில்லை! என் கண்களுக்கு முன் பாழடைந்த நிலப் பரப்பு விரிந்து கிடந்தது. தூரத்தில் ஒரு வீடு கண்ணில் பட்டது. அதன் பின்புறம், பெரிய தூண் வடிவில் ஒரு புகைபோக்கி நின்று கொண்டிருந்தது. அமானுஷ்யமான அமைதி நாற்புறமும் விரிந்து கிடந்தது.

எல்லாம் மாறிக்கிடந்தது.

நானும் மாறி இருந்தேன்.

நான் பயத்தில் வியர்த்துக் குளிர்ந்தவாறே அறைக்குத் திரும்பினேன். அதற்குள் என் கண்கள் என்னைச் சுற்றி படர்ந்திருந்த இருட்டுக்குப் பழகி இருந்தன. இப்போது என்னால் அறையில் இருந்த அனைத்தையும் பார்க்க முடிந்தது. கட்டில் ஒன்று இருந்தது – கொசுவலை இல்லை – தூங்கப் போவதற்கு முன் நான் கொசுவலை தொங்க விட்டது எனக்கு நன்றாக நினைவிருந்தது. கட்டிலின் மீது ஒரு தலையணை இருந்தது. ஆனால், அது என்னுடையது அல்ல. என்னுடைய தலையணையை போலல்லாது, அந்தத் தலையணை புதிதாகவும் அதன் ஓரங்கள் மடிப்பு வைத்து தைக்கப்பட்டதாகவும் இருந்தது. கட்டிலுக்கு அருகே ஒரு மேஜை இருந்தது. அதே பழைய நாற்காலி. ஆனால் இப்போது அவை புதியதாகவும் மெருகேற்றப்பட்டும் காட்சியளித்தன. மங்கிய ஒளியில், வார்னிஷ் பூசப்பட்டுப் பளிச்சிட்ட மரச்சாமான்களை நான் கவனித்தேன். மேஜையின் மீது – ஹரிக்கேன் விளக்கு அல்ல – அழகான வேலைப்பாடுகள் செய்யப்பட்ட, உயர்தர நூதனமான மேல் திரையுடன் கூடிய, மண்ணெண்ணெய் விளக்கு வைக்கப்பட்டிருந்தது. அறையில் வேறு பல பொருள்களும் இருந்தன. அவை இப்போது என் கண்களுக்குப் புலப்பட்டன. ஒரு மூலையில் சில ட்ரங்க் பெட்டிகள், சுவரில் துணிகளை வைப்பதற்காக அமைக்கப்பட்ட அலமாரி, அதில் தொங்கிக்கொண்டிருந்த கோட், வித்தியாசமான, இதுவரை பார்த்திராத தொப்பி மற்றும் வேட்டைக்காரர்கள் பயன்படுத்தும் சாட்டை. அதற்குக் கீழே முழங்கால் உயர, தோலாலான, “கலோஷ்” எனப்படும் நீர் புகாக் காலணிகள்.

நான் என்னையே பார்த்துக் கொண்டேன். இதற்கு முன் நான் அந்த பட்டுச் சட்டையை மட்டுமே கவனித்திருந்தேன். இப்போது உடலை இறுக்கிப் பிடிக்கும் காற்சட்டையும், காலுறைகளையும் அணிந்து கொண்டிருப்பதை நான் கவனித்தேன். நான் காலணிகளை அணிந்திருக்கவில்லை. ஆனால் கட்டிலுக்கருகே ஒரு ஜோடி கருப்பு நிறத் தோல் காலணிகள் இருப்பதைக் கவனித்தேன்.

வலது கையால் முகத்தைத் தொட்டுப் பார்த்த போது, முகம் மட்டுமல்ல, முகத்தின் தோற்றமும் முழுவதுமாக மாறி இருந்ததை உணர்ந்தேன். இத்தனை கூர்மையான மூக்கோ, மெல்லிய உதடுகளோ அல்லது இத்தனை குறுகிய முகவாய்க்கட்டைய எஎனக்கு ஒரு போதும் இருந்ததில்லை. தலையைத் தொட்டுப் பார்த்தேன், அடர்த்தியான முடி தோள்பட்டையைத் தொட்டது. காதின் பின்புறம் இருந்த முடி தாடை வரை நீண்டிருந்தது.

பயமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தபோதிலும் எனக்கு என்னையே பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற தீவிர உந்துதல் ஏற்பட்டது. ஆனால் கண்ணாடி எங்கே இருக்கிறது?

நான் குளியலறைக்கு ஓடி கதவை அவசரமாக திறந்தேன்.

முன்பு அங்கே ஒரு வாளி மட்டுமே இருந்ததை நான் கவனித்திருந்தேன். இப்போது, மூலையில், தகரத்தால் ஆன குளிக்கும் தொட்டியையும், சிறிய நாற்காலி மற்றும் பீங்கான் குவளை ஒன்றையும் கண்டேன். நான் தேடிக் கொண்டிருந்தது என் கண் முன்னே நின்று கொண்டிருந்தது. அலங்கார மேஜையில் மாட்டப்பட்டிருந்த முட்டை வடிவக் கண்ணாடி! கண்ணாடியின் முன் நிற்பது நான் தான் என்பது எனக்குத் தெரிந்திருந்த போதிலும், கண்ணாடியில் பிரதிபலித்த உருவம் என்னுடையது அல்ல. ஏதோ பயங்கரமான மாயவித்தையின் விளைவால், நான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆங்கிலேயச் சீமானாக உருமாறி இருந்தேன். வெளுத்த, தங்க நிற முடி வாய்ந்த லேசான மங்கல் நிறக் கண்களும், இறுக்கமும் சோர்வும் ஒன்று கலந்த பார்வையையும் கொண்ட ஒரு ஆங்கிலேயே சீமான். ‘சாகிப்புக்கு’ என்ன வயதிருக்கும்? முப்பதுக்கு மேல் இருக்காது என அனுமானித்தேன். ஆனால், தன் வயதைக் காட்டிலும் அதிகம் மூப்படைந்தவராக அவர் காட்சியளித்தார். நோயும் அதிக வேலைப்பளுவும் அவரது தோலை, வயதிற்கு முனபாகவே முதுமையடைடையச் செய்திருந்தன.

என்னுடைய முகத்தை இன்னும் நன்றாகப் பார்ப்பதற்காக நான் கண்ணாடிக்கு அருகே சென்றேன். என் நெஞ்சிலிருந்து பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது.

ஹா!

அது என்னுடைய குரல் அல்ல. அந்தப் பெருமூச்சு, சாஹிபின் உள்ளுணர்வுகளை வெளிப்படுத்தியது – என்னுடையதை அல்ல. அடுத்து நடந்தது, என் குரல் மட்டுமல்ல, என் கைகள் கால்கள் போன்ற எல்லாமே வேறு ஒருவருக்கு அடிமையாகி விட்டன என்பதை எனக்கு உணர்த்தியது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அனிருத்த போஸ் ஆகிய நான், முழுவதுமாகவே வேறொருவனாக மாறிவிட்டிருந்ததை நன்றாகவே உணர்ந்திருந்தேன். இந்த மாற்றம் தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்பது எனக்குத் தெரியவில்லை. என்னுடைய உடலை, அது முன்பிருந்த நிலைக்கு மாற்ற ஏதேனும் வழிகள் உள்ளனவா என்றும் எனக்குத் தெரியவில்லை.

குளியலறையிலிருந்து நான் படுக்கை அறைக்கு வந்தேன்.

என் கண்கள் மேஜையை நோக்கிச் சென்றன. எரிந்து கொண்டிருக்கும் விளக்கிற்குக் கீழே தோலட்டை இடப்பட்டிருந்த நோட்டுப்புத்தகம் ஒன்று விரிந்து கிடந்தது .அதனருகே, மைக்குப்பியில், சிறகுப்பேனா ஒன்று தோய்த்து வைக்கப்பட்டிருந்தது

நான் மேஜையை நோக்கிச் சென்றேன் . நோட்டுப் புத்தகத்தின் திறந்திருந்த பக்கங்கள் வெறுமையாக இருந்தன. இனம் புரியாத சக்தி ஒன்று, என்னை நாற்காலியில் அமர வைத்து, பேனாவை கையிலெடுக்கச் செய்தது. என் கை, வெற்றுத்தாளின் இடப்புறத்தை நோக்கிச் சென்றது. காகிதத்தின் மீது பேனா உரசும் ஓசை, அறையின் அமைதியைக் குலைத்தது. பேனா, தானாகவே எழுதிக் கொண்டே சென்றது.

27.4.1868

ராட்சசக் கொசுக்களின் ரீங்காரம் என் காதுகளுக்கு மிக அருகே மறுபடியும் கேட்கத் தொடங்கியது. கடைசியில், என்னைப் போன்ற திடகாத்திரமான பிரிட்டிஷ் கனவான், கடுகளவு கூட முக்கியத்துவம் இல்லாத இச்சிறிய கொசுவிடம் தோற்று விட வேண்டி வருமோ? இதுதான் விதியின் நெறியா? எரிக் ஓடிப் போய்விட்டான். பெர்சியும் டோனியும் ஏற்கனவே போய்விட்டார்கள். பணத்தின் மீது, அவர்களுக்கு இருந்த ஆசையைக் காட்டிலும், எனக்கிருந்த மோகம் சறறு அதிகமாக இருந்திருக்க வேண்டும். அதனால் தான், அடிக்கடி ஏற்படுகிற மலேரியா காய்ச்சல் தாக்குதல்களையும் மீறி, இண்டிகோ மீதான மோகத்தை என்னால் கைவிட முடியவில்லை – அதுமட்டுமில்லை. நாட்குறிப்பில் பொய்யெழுதுவதென்பது அதன் புனிதத்தை அவமதிப்பதற்கு ஒப்பானது. இன்னொரு காரணமும் இருக்கிறது – என் நாட்டினர், என் கொடூரச் செயல்களை நன்கு அறிவர். அதற்காக, நான் அங்கே இருக்கும்போது உத்தமனாக இருந்தேன் என்று அர்த்தமில்லை – மக்கள் அனைத்தையும் நினைவு வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எனவேதான், எனக்கு இங்கிலாந்து திரும்பிச்செல்ல தைரியமில்லை. நான் இங்கேயே தான் இருக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். இங்கேயேதான் இறக்கவும் வேண்டும். மேரி மற்றும் டோனியின் கல்லறைக்கு அருகில்தான் நானும் உறங்க வேண்டும் என்பதே எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. கிராம மக்களை நான் மிகவும் துன்புறுத்திமிருக்கிறேன். என் மறைவுக்குப் பிறகு, எனக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்த கூட ஒருவரும் இருக்கமாட்டார்கள். ஒருவேளை மீர் ஜான் மட்டும் தான் கண்ணீர் விடக்கூடும். என் பாசமான வேலைக்காரன்!

என்னுடைய வேட்டை நாய் ரெக்ஸ்! நான் ரெக்ஸைக் குறித்து உண்மையிலேயே கவலைப்படுகிறேன். ஓ! மிகுந்த விசுவாசத்துடன் தன் முதலாளியின் கட்டளைப்ப்படி நடப்பவன் அவன். நான் இறந்த பிறகு அவர்கள் உன்னைக் கல்லால் அடித்துத் துன்புறுத்தக் கூடும். கட்டையால் அடித்து உன்னை சாகடிக்கக் கூடும். உனக்கு ஏதாவது மாற்று ஏற்பாடு மட்டும் செய்ய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

என்னால் மேற்கொண்டு எழுத முடியவில்லை . என் கை நடுங்கிக் கொண்டிருந்தது. என்னுடைய கை அல்ல – அந்த நாட்குறிப்பை எழுதியவரின் கை. நான் பேனாவைக் கீழே வைத்தேன்.

என்னுடைய கை, மேஜையிலிருந்து என் மடிக்கு வந்து, வலப்புறம் நகர்ந்தது.

அங்குதான் மேஜையின் இழுப்பறையின் கைப்பிடி இருந்தது.

என் கை தானாகவே இழுப்பறையைத் திறந்தது. இழுப்பறைக்குள் குண்டூசிகளை குத்தி வைக்கப் பயன்படும் பஞ்சாசு உருண்டை, காகிதங்களை பறக்க விடாமல் வைக்க உபயோகப்படுத்தப்படும் பித்தளை எடைக்கல், புகைப் பிடிக்கப் பயன்படுத்தப்படும் குழாய் மற்றும் சில காகிதங்கள் இருந்தன. இழுப்பறையை மேலும் திறந்து பார்த்ததில், யானைத் தந்தத்தில் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட கைப்பிடி கொண்ட துப்பாக்கி ஒன்று இருந்தது.

என் கை அந்தத் துப்பாக்கியை வெளியே எடுத்தது. இப்போது என் கைகள் நடுங்கவில்லை.

நரிகளின் கூட்டம் வெளியே ஊளையிட்டுக் கொண்டிருந்தது. அவற்றுக்கு பதில் அளிப்பது போல, வேட்டை நாய் குரைக்கத் தொடங்கியது. பௌ… பௌ… பௌ… வௌ…

நான் நாற்காலியிலிருந்து எழுந்து, கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தேன்..

விரிந்திருந்த வெட்டவெளி, நிலவொளியில் பிரகாசித்துக் கொண்டிருந்தது. வராந்தாவிலி ருந்து, இருபது அடிகள் தூரத்தில் பெரிய வேட்டை நாய் ஒன்று புல்வெளியில் நின்றுக் கொண்டிருந்தது. என்னைப்பார்த்ததும் வாலை ஆட்டியது.

ரெக்ஸ்!

அதே, பழைய, தீர்க்கமான வெள்ளைக்காரக் குரல், தூரத்து மூங்கில் காடுகளினூடேயும் இண்டிகோ தொழிற்சாலையினூடேயும் எதிரொலித்துத் திரும்பியது. ரெக்ஸ்!…. ரெக்ஸ்!….. ரெக்ஸ்!

ரெக்ஸ் வாலை ஆட்டியவாறே என் அருகே வந்து நின்றது.

ரெக்ஸ் வராந்தாவிற்கருகே வந்தவுடன், என் வலது கை இடுப்புப்பக்கம் இறங்கியது. துப்பாக்கி முனை இப்போது ரெக்ஸைக் குறி பார்த்தது. ரெக்ஸ் என்னை ஆச்சரியத்துடன் பார்த்தது. அதன் ஒளிர்விடும் கண்களில் குழப்பம் தெரிந்தது.

என் வலது கை துப்பாக்கி விசையை அழுத்தியது.

கண்களை கூச வைக்கிற ஒளியும் குண்டு வெடித்தது போன்ற ஓசையும் ஒருசேர ஒலித்தன. புகைப்படலம் காற்றை நிரப்பியது. துப்பாக்கிக் குண்டின் துகள்கள் காற்றில் பறந்தன .ரெக்சின் உடல் அசைவற்று விழுந்தது. உடலின் மேற்பகுதி வராந்தாவிலும் பின்பகுதி புல் தரையிலும் விழுந்தது.

துப்பாக்கி வெடித்த சத்தத்தில் தூரத்து மரங்களின் உச்சியிலி ருந்து காகங்கள் பறந்தன. சத்தம் கேட்டு தொழிற்சாலையிலிருந்து ஒரு சிலர் ஓடி வந்தனர்.

நான் அறைக்குத் திரும்பி, கதவை தாழிட்டுக் கொண்டேன். வெளியே கூச்சல் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

என் காதுகளின் பின்புறம் துப்பாக்கியின் முனையை என்னால் உணர முடிந்தது. அது இன்னமும் சூடாக இருந்தது.

அதற்குப்பிறகு என்ன நடந்தது என்று எனக்கு நினைவில்லை.

யாரோ கதவைத் தட்டும் ஓசை என்னை எழுப்பியது.

“தேநீர் கொண்டிருந்திருக்கிறேன், ஐயா!”

அறை, சூரிய வெளிச்சத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்தது. பழக்கம் காரணமாக, என் கைகள் மணிக்கட்டைப் பார்த்தன. ஆறு மணியாகி பதிமூன்று நிமிடங்கள் ஆகியிருந்தது. நான் கையை கண்களுக்கு இன்னும் அருகாக கொண்டு வந்தேன். கடிகாரத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்த தேதியை என்னால் பார்க்க முடிந்தது.

28 ஏப்ரல்.

“உங்கள் வண்டியை பழுது பார்க்கப்பட்டு விட்டது ஐயா” என்று சுக்கன் ராம் வெளியே சொல்லிக்கொண்டிருப்பது காதில் விழுந்தது.

பீர்பும் மாவட்ட இண்டிகோ  வரி அதிகாரி ஒருவரின் நூறாவது நினைவு நாளன்று, எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை யாரேனும் நம்புவும் கூடுமோ?


சத்யஜித் ராய்

https://bit.ly/3gGrI3q


அனுராதா கிருஷ்ணசாமி.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.