கவிதை: அன்று முதல் இன்று வரை

யவனிகா ஸ்ரீராம்:

வரது கவிதைகளைப் படித்து வருகிறபோது, என்னால் சர்ரியலிஸ ஓவியங்களை நினைக்காமலிருக்க முடியவில்லை. சினிமாவில் மாண்டேஜ் என்ற காட்சியமைப்புகள் உண்டு. ஒன்றுக்கொன்று தொடர்பற்றது போல் தோன்றும் காட்சிகளைத் தொகுத்தால் இறுதியில் ஒரு பொருள் தோன்றும். தமிழில் இன்று எழுதும் பெரும்பாலான கவிஞர்களிடம் உள்ள எழுதும் பாணியை சர்ரியலிஸ, மாண்டேஜ் வகைப்பட்ட, நவீன எழுத்து என்று வகைப்படுத்தலாம். இந்த வகைப்படுத்தலுக்குள் யவனிகா ஸ்ரீராமின் கவிதைகள் வருகின்றனயவனிகா ஸ்ரீராம்

தொடர்பற்ற காட்சிகளையும், உணர்வுகளையும் விவரிப்பது இக்காலக் கவிதைகளின் முகமாக இருக்கிறது. இது யவனிகா ஸ்ரீராமின் கவிதைகளில் தூக்கலாக உள்ளது. அர்த்தத்திற்கும் அர்த்தமின்மைக்கும் வரிகள் மாறி மாறி நழுவுகின்றன. எதிர்பாராத சொற்களை இணைத்துப் படிமமாக்கி ஒரு வியப்பைத் தனது சில கவிதைகளில் இவர் தோற்றுவிக்க முயற்சிக்கிறார். ஆரம்பகாலக் கவிதைகள் ஒருவிதமான இயல்பு தளத்தில் நிகழ்ந்தாலும், பிற்காலக் கவிதைகளில் இடம்பெறும் உணர்வுகளையும், காட்சிகளையும் நொடிக்கு நொடி மாற்றிக்காட்டும் இயல்பும் அவற்றில் ஊடாடி நிற்கின்றன.

நிலாக்காலத்தில் நெருங்கும் புன்னகை என்ற கவிதை, யவனிகாவின் ஆரம்பகாலக் கவிதைகளில் ஒன்று என்றே கருதுகிறேன். இக்கவிதையின் ஆரம்ப வரிகள் ஒரு பொருள் தொடர்பைக் கொண்டிருக்கின்றன.

கசிந்து வடியும் இந்த வியர்வைக்கிடையே

    (இந்த என்ற சொல் தேவையில்லை – வ.நி)

 

வாகனங்களைத் துரத்தி

    உன்னைக் காதலிக்க மு டியவில்லை

    உன் ஒளியுமிழும் காதலனைப் பற்றிய கற்பனைகள்

    எனக்கு அச்சமூட்டுகின்றன

    அவன் அதிநவீன உடையில் உலகின் பெருநகரங்களை

    கடந்துபோகிறவனாக இருக்கிறான்

என்று இயல்பாக நகரும் கவிதை, திடீரென அவனது வாகனம் ஆளரவமற்ற நிலாக்கால இரவில் கடற்கரையில் காத்துக்கிடக்கிறது என்று நாம் நினைத்தறியா இடத்திற்கு இட்டுச் செல்கிறார்.

திருப்பம் என்ற கவிதை அருமையான, வாசகனுக்கு உவப்பளிக்கும் வரிகளைக் கொண்டிருக்கிறது. வேட்டையாடு வம்சாவளி என்ற கவிதை வெளிநாட்டைக் காட்சிப்படுத்துகிறது. ஊசியிலை மரங்கள், ஆப்பிள் அறுவடை, வெண் பனி பொழியும் வனங்கள், ஜெனிபர், கொழுத்த யூரோ நாணயங்களை எல்லாம் விவரிக்கிறது. நழுவ விட்ட அதரங்கள் என்ற கவிதையின் தலைப்பே வசீகரமாக இருக்கிறது.

நீ நழுவ விட்ட அதரங்களோடு

புகைப்பானைப் பொருத்துகிறேன்

உன் வியர்வை முகடுகளில்

நட்சத்திரங்கள் மினுங்கிக் கொண்டிருக்கின்றன

என்று படிமங்கள் தொடர்ந்து வந்து விழுகின்றன.

தடயம் என்ற கவிதையின் கடைசி இரண்டு வரிகளும் சர்ரியலிஸமாய் விரிகின்றன.

அதன் முதுகில் ஒரு தவளை அதன் முதுகில்

மிதிவண்டியின் மணல் தடயம்.

ஒரு கேலிச்சித்திரக்காரனின் பிரச்சனை என்ற கவிதையில் யதார்த்த உலகின் குரூரங்களை மாண்டேஜ் காட்சிகளுடன் கவிதைப்படுத்துகிறார் கவிஞர். காட்சிகளும், தருணங்களும் உடைபட்டுக் கொண்டே இருக்கின்றன. சில கவிதைகளில் பெண்ணின் மறைவுறுப்பை வேண்டுமென்றே எழுகிறாரோ என்று தோன்றுகிறது.

சில கவிதைகளில் மார்க்ஸியம் மெலிதாக இடம்பெறுகிறது. அது பிரசாரமாக இல்லாமல், கவிதை வரிகளுடன் இசைவாகப் பொருத்தப்பட்டுள்ளது. கிரகம் – அமானுஷ்யத்தை, கவிஞரின் கற்பனையை, யதார்த்த ஒப்பனைகளுடன் விவரிக்கிறது. முக்கியமான கவிதை. பதினேழு அர்த்தங்களில் ஒரு கவிதையும் என்னை ஈர்த்த கவிதைகளில் ஒன்று. ஞானக்கூத்தன், தர்மூசிவராம், கலாப்ரியா, விக்ரமாதித்யன் போல் தனக்கென்று தனித்த கவி நடையைக் கொண்டவரல்ல யவனிகா ஸ்ரீராம். என்றாலும், குறிப்பிடத்தக்க கவிஞர் என்ற இடத்தை அடைந்துள்ளவராகவே தோற்றம் தருகிறார்.

போகன் சங்கர்:

தற்காலக் கவிதை வாசகருக்கு போகன் சங்கரை நினைவுபடுத்த வேண்டியதில்லை. இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகளை போகன் சங்கர் வெளியிட்டுள்ளார். இந்த 2021-ல் நாளுக்கொரு கவிதைத் தொகுப்பு எங்கிருந்தாவது வெளிவருகிறது. இவ்வளவு நெருக்கடி மிக்க கவிதையுலகில், தன்னை ஒரு கவிஞனாக நிலைநிறுத்திக் கொள்வதற்கு சகலவிதமான வித்தைகளையும் ஒரு கவிஞன் காட்ட வேண்டியதிருக்கிறது. போகன் சங்கரும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள, புதுமை, நவீனம் என்ற பேரில் ஏதேதோ முயற்சிகளில் ஈடுபடுகிறார்.

சிறிய எண்கள் உறங்கும் அறை என்ற போகன் சங்கரின் சமீபத்திய தொகுப்பில், ஒற்றை வரியில் எழுதப்பட்டவற்றை எல்லாம், கவிதை என்று அவர் சாதிக்கும் போக்கு தெரிகிறது. அந்த ஒற்றை வரிகளுக்குத் தலைப்புகளும் வைத்து வாசகனை அவர் மிரட்டுகிறார்.யவனிகா ஸ்ரீராம்

என்னே அதிசயங்கள், இவர் மரித்தும் போகிறார் என்கிற வரியை கவிதை என்று வாசகனைக் கருதச் சொல்கிறார். இன்னொரு வரி நீலி இவை உனது வீழ்ந்திடாத மழைத்துளிகள் என்கிறது. இதையும் கவிதை என்று கவிஞர் சாதிக்கிறார். இந்த இரண்டு வரிகளையுமே அவற்றின் தலைப்புகளாகப் பொருளடக்கத்தில் கொடுத்திருக்கிறார். இதில் கவிதையோ, புதுமையோ என்ன இருக்கிறது என்பதை அவர்தான் விளக்க வேண்டும். இதுபோன்ற மேம்போக்கான கவிதை என்பதையே கேலிக்கூத்தாக்கும் பல இடங்கள் இத்தொகுப்பில் உள்ளன. இதை இத்தொகுப்பின் பின்னட்டைக் குறிப்பும் வலியுறுத்துகிறது. கவிதையில் கேலி இருக்கலாம்; தவறில்லை. ஆனால், அது கவிதையாக இருக்கவேண்டும். பின் நவீனத்துவம் அல்லது அதி நவீனத்துவம் ஒற்றை வரியில் கவிதை இருக்க க் கூடாதா என்ற கேள்வியை எழுப்பினாலும் எழுப்பலாம். ஆனால், போகன் சங்கருக்கு கவிதை எழுத வருகிறது என்பதை, அவரது சில வரிகளே மெய்ப்பிக்கின்றன.

படிகளில் தவறி விழுவது போல் எளிதானது இந்த இடத்துக்கு வருவது என்ற வரிகளில் கவிதை இல்லாமலில்லை. (கவிதையின் தலைப்பே இந்த வரிகள்தான்.) இந்த வரிகளைத் தொடர்ந்து அடுத்து வரும் மீண்டும் மீண்டும் ஒரு மறதி வளைவு திரும்பியதும் படிகள் வருகின்றனதானே? என்கிற வரிகளில் வருகின்றனதானே என்ற சொல் கவிதையாகாமல் நிற்கிறது. சிறிய எண்கள் எங்கு உறங்கும் என்று அவள் கேட்டாள் என்கிற வரியில் அவள் என்ற சொல் தேவையில்லாமல் உடனிருக்கிறது. போல என்று நான் சொன்னேன் என்ற வரியிலுள்ள நான் தேவையில்லை. கவிதையில் இவை எல்லாம் வெறும் வளவளப்பாகிவிடும்.

அடுத்த கவிதை, எனது நாய் ஒருபோதும் என்னை வேறு ஒருவராக நினைத்துக் கொள்வதில்லை உறக்கத்தில் கூட நோயில் கூட மரணத்தில் கூட அது நாயாய் இருப்பதிலிருந்து மாறிவிட்ட பின்பும் கூட என்று முடிகிறது. இதில் கூட, கூட என்று அடுக்கத் தேவையில்லை. இப்படி இருந்தாலே போதும் உறக்கத்தில் நோயில் மரணத்தில் கூட என்று கடைசி வினைச் சொல்லுடன் மட்டும் கூட என்பது இருந்தால் போதும். கவிதைக்குச் சொற்சிக்கனம் அவசியம். லெக்சரோ, விரிவுரையோ கவிதையாகாது.

கிளம்பிய எல்லா கப்பல்களும் மனிதனை அடைந்தன என்று தொடங்கும் கவிதையில், மூன்றாவது வரி, ஒளி எப்போதும் விதை வடிவில் இருக்கிறது விதை வடிவில் ஒடுங்குகிறது எல்லா விதைகளும் அவிழும்போது மனிதனுருவை அடைகின்றன… என்று நீள்கிறது கவிதை. இந்த வரிகளில் கவிதை நிகழ்கிறது. நட்சத்திரம் எனும்போது இசை எழும்புகிறது என்று தொடங்கும் கவிதையில் மொழியின் சரும ம் அமிர்தப் புள்ளிகளைக் கொண்டிருக்கிறது  என்று அபாரமான படிம ம் வந்து விழுகிறது. இதுபோன்ற அபூர்வமான வரிகளை அடைய, வாசகன் ஏராளமான மலட்டு வரிகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. கவிதையாகத் தேர்வது சில வரிகள்; வெறும் பதர்களாக க் குவியும் வரிகள் நிறைய.

இதுதான் போகன் சங்கரின் கவியுலகம்.

ரவிசுப்பிரமணியன்:

வளர்ந்து வரும் இன்றைய தலைமுறைக் கவிஞர்களில், இதுவரை வெளிவந்துள்ள ஐந்து தொகுப்புகளால் ஒரு முக்கியமான கவிஞராக ரவிசுப்பிரமணியன் அறியப் பெற்றிருக்கிறார். இவர் கட்டுரையாளராகவும், ஆவணப்பட இயக்குனராகவும் செயல்பட்டு வருகிறார். எனாலும், இதுவரை வெளிவந்துள்ள இவரது ஐந்து கவிதைத் தொகுப்புகளின் மூலம் தற்காலக் கவிதையுலகில் இவரது இடமென்ன என்று பார்க்கலாம். ஒப்பனை முகங்கள், காத்திருப்பு, காலாதீத இடைவெளியில், சீம்பாலில் அருந்திய நஞ்சு, விதானத்துச் சித்திரம், நினைவின் ஆழியில் அலையும் கயல்கள் ஆகிய தொகுப்புகளில் படிப்படியாக இவரது கவிதை கூறும் முயற்சி, அனுபவத்தை வெளிப்படுத்தும் முறை, மொழி ஆகியவற்றில் ஒரு படிநிலை காணப்படுகிறது. படிநிலை என்றால் கீழிறங்கும் படிநிலையல்ல. இவரது அண்மைக் காலத்துக் கவிதைகள் முந்தய ஐந்து தொகுப்புகளையும் விட, முற்றிலும் புதிய, ஆங்காங்கே படிமங்கள் தோன்றி மறையும் வெளியீட்டு முறையைக் கொண்டுள்ளன.

முதல் தொகுப்பான ஒப்பனை முகங்களில் உள்ள கவிதைகள் உரத்த குரலைக் கொண்டிருக்கின்றன. பல கவிதைகளில் பாமரத்தனமான, மேலெழுந்தவாரியான ஒரு வெளியீட்டு மொழியே காணப்படுகிறது. இது குறையல்ல. இன்று வளர்ந்து நிற்கும் பெரும்பாலான கவிஞர்களின் ஆரம்பகாலக் கவிதைகள் உரத்த குரலுடன் தட்டையான மொழியைத்தான் கொண்டிருக்கும். ஆனால் காலப்போக்கில் இந்த இடத்திலிருந்து கவிஞன் நகர்ந்துவிடவேண்டும். இந்த நிலை ரவிசுப்பிரமணியனுக்கு வாய்த்திருக்கிறது.

ஒப்பனை முகங்களில் ஒரு கவிதை:

மிருக க்காட்சி சாலையில்

சுற்றம் இழந்து

சுதந்திரம் இழந்து

தனிமைக் கவலையில்

சாதுவாய் உறங்கும்

மிருகம்

என்று முடிகிறது. இது தட்டையான காட்சிக்கவிதை. பூடகமாக கவிஞர் எதையும் உணர்த்தவில்லை. நேரடியாக தனது கவிப்பொறியை வாசகனிடம் கூறுகிறார். தலையுதிர்காலமா? … என்ற கவிதை அரசியல் – சமுதாய நடப்பை விவரிக்கிறது.

… சீழ் பிடித்துப்போனது

என் தேசம்

காயமாய் இருக்கும்போதே

கட்டுப் போடாத

காரணத்தால்

சீழ்பிடித்துப் போனது

என் தேசம்

என்று தட்டையான விவரிப்பு மொழியைக் கொண்டிருக்கிறது. சமூக, அரசியல் உணர்வுகளைக் கவிதையாக்க க்கூடாது என்பதில்லை. ஆனால் அதில் கவித்துவம் இருக்க வேண்டும். இத்தொகுப்பில் எழுதப்பட்ட முன்னுரையில் பாலா, மொழிக்குள் இன்னொரு மொழியை உருவாக்கும் சாகசமே கவிதை என்கிறார். இது ரவிசுப்பிரமணியனின் பெரும்பாலான கவிதைகளில் நிகழவில்லை. காத்திருப்பு தொகுப்பில் 1992-ல் நடந்த மகாமக க்குள நிகழ்வு பற்றிக் கூட கவிதை உள்ளது. சினிமா தியேட்டரில் பார்த்த பெண்ணை அல்லது காதலியைப் பற்றி எழுதியிருக்கிறார். ஹிம்சிக்கும் கடந்த கால நினைவுகளைப் பற்றியசில கவிதைகளும் இதில் உள்ளன.

விதானத்துச் சித்திரம் தொகுப்பில் கவிதையைச் சொல்லும் முறையில் சில கவிதைகளில் கவித்துவம் தலையைக் காட்டுகிறது. ஒரு கைதியைப் பற்றிக் கூட ரவிசுப்பிரமணியன் எழுதியிருக்கிறார். (நாம் ஏன் அவனை அப்படி ஆக்கினோம்) இது சற்றே நீண்ட கவிதை. கடைசி வரிகளை, ஆனாலும் தாய் அறியாது குழந்தையின் விரல்கள் இழுத்த துண்டின் நூல்களில் சேகரமாயிருந்த து அவனின் ணில இரவுகளுக்கான நினைவுகள் என்று கவிதையை கவித்துவத்தோடு முடிக்கிறார். குழந்தையின் விரல்கள் இழுத்த துண்டின் நூல்களில் சேகரமாயிருந்த து அவனின் சில இரவுகளுக்கான நினைவுகள் – என்பதுதான் கவிதை.

மலருதிர் மகிழ மரம் நீ என்ற கவிதையில் பிடியைத் தவறவிட்ட முல்லைக்கொடி காற்றில் தவிக்கிறது என்றும், கிரஹ சுழற்சி கவிதையில் ஈர அடியைக் கரையில் வைக்க மண்ணெல்லாம் புல்லாகிச் சிரிக்கிறது என்றும் கூறும்போது கவித்துவத்தின் சாரம் வாசகனின் மனதுக்குள் இறங்குகிறது. ரவிசுப்பிரமணியனின் இதர நான்கு தொகுப்புகளை விட விதானத்துச் சித்திரம் தொகுப்பில் பல கவிதைகள் கவிதைக்குரிய லட்சணங்களுடன் இருக்கின்றன. இக்காலக் கவிஞர்களைப் போல் அடிக்கடி யோனி என்று எழுதா தற்கே இவரைப் பாராட்டலாம். நினைவின் ஆழியில் அலையும் கயல்கள் தொகுப்பில் சில கவிதைகள் தேறுகின்றன.

கடங்கநேரியான்:

அந்நாளைய திருநெல்வேலி மாவட்டத்தில் ஊர்பெயர்களைக் கொண்டு இட்ட மொழிக்கார ர், உவாக்கார ர், வாகைக் குளத்தாள், பொட்டல்காரி என்றெல்லாம் அழைக்கும் பழக்கம் இருந்த து. இந்த வழக்கம் கேரளத்தில் கூட உண்டு. இதுபோல் கவிஞர் கடங்கநேரியானும் தான் ஊர்ப்பெயரைக் கொண்டு கவிதைகள் எழுதுகிறார். நிராகரிப்பின் நதியில், யாவும் சமீபித்திருக்கிறது, சொக்கப்பனை ஆகிய தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். அவருடைய சொக்கப்பனை தொகுப்பிலுள்ள கவிதைகள் வேறு மாதிரியாக இருக்கின்றன. இத்தொகுப்பின் முன்னுரையில் நான் வாழும் காலத்தில் நடக்கும் சமகால அரசியலை, நிகழ்வுகளை முடிந்த அளவிற்கு கவிதைகளில் படைத்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். இவரது கவிதைகளில் கிராமத்து நிலக்காட்சிகளும் கிராமப்புற பழக்க வழக்கங்களும், அந்த வாழ்வும் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. தனது இணைப் பெண்ணிடம் புளியம் பூக்களைப் பனைவெல்லம் கூட்டி அம்மிக் கல்லில் நசித்தெடுத்த பக்குவம் நம் கூடல்… என்கிறார். புளியம்பூக்களை கருப்பட்டியுடன் சேர்த்து அரைத்துத் தின்பது கிராமப்பகுதியில் வழக்கம். இந்த வழக்கத்தைச் சொல்லி நம்மை அந்த த் தொல்லுலகிற்கு அழைத்துச் செல்கிறார் கவிஞர்.

இத்தொகுப்பில் கவிஞரின் அரசியல், அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம் பற்றிய அவதானிப்புகள் எரிச்சலாகவும் கேலியாகவும் வந்து கவிகின்றன. மாட்டுக்கறி உண்போர்க்கு ஹிந்தியத்தில் இடமில்லை என்ற வரிகள், கசந்துபோன ஹிந்துத்வா மீது கூறப்படும் விமர்சனமே. இன்னொரு கவிதையில் தென்னங்கீற்றுக் கொட்டகைகள் பற்றியெரிகின்றன சாதிக் கட்சிகளின் தேவைகளின் பொருட்டு என்று சாதிக் கட்சிகளை விசனிக்கிறார். வெயிலுக்கு அஞ்சி ஓடும் முயல்களைப் பற்றிக் கூட கடங்கநேரியானின் கவனம் குவிகிறத. … தரிசுக் காட்டின் புதர் மீறித் துழாவும் தாகமெடுத்த பரிதிச் சர்ப்பத்திற்கு அஞ்சி வாழைத் தோட்டம் தேடி ஓடுகின்றன சிறுமுயல்கள்… சங்க க் கவிதைகளில் விவரிக்கப்படும் நிலக்காட்சி போலுள்ளன இவ்வரிகள்

தங்க நாற்கரச் சாலைகள் சமீப காலத்திய வரவு. குளிர்பானக் கம்பெனிகள் நீர்நிலைகளை உறிஞ்சுவதும் நவீன வாழ்வின் கோலம். இவை எப்படி கிராமத்து வாழ்வைப் பாதிக்கிறது என்பதைக் கவிதையாக்குவது கடினம். இவை அரசு நிர்வாகம், அரசின் திட்டங்கள் குறித்தவை. ஆனால் மனதில் ஈரம் நிரம்பிய கடங்கநேரியான் இவற்றைக் கவிதையில் சொல்லிப் போகிறார். மழை பொய்த்த கிராமக் காட்சியிலிருந்து துவங்குகிறது கவிதை.

பருவம் தவறிப்போக வேறு வழியில்லாமல் காளைக் கன்றைத் தூர தேசத்திற்குக் கைமாற்றிவிட்டார் செல்லையா த்தா ஏரோட்டிய நிலம் நாற்கரச் சாலையென நீண்டுகிடக்கிறது வெயில் தாளாமல் உருகியோடும் தாரில் கரையும் லாடக்கம்பி கானலென வெள்ளாமை நிலம் திரும்பும் காளைக் கன்று கமலைத் தடம் தேடி வீழ்ந்த து குளிர்பானக் கிசற்றில் மனம் பிறழ்ந்து என்று முடிகிறது கவிதை. இன்றைய விவசாயியின் பாட்டை இதைவிடக் கவித்துவத்தோடு எப்படிச் சொல்ல முடியும்?

நகரங்களில் ரிலையன்ஸ், மோர், பிக்பஜார் என்று பெரிய பெரிய டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர்கள் வந்து சிறு மளிகைக் கடைக்கார ர்களைத் திணறடிக்கின்றன. எல்லாப் பொருட்களும், பிராண்ட ட் கம்பெனிகள் விற்பனை செய்யும் பொருட்களாக இருக்கின்றன. மளிகைக் கடைகளும், நி யூஸ் பேப்பர்களில் கட்டித்தரப்படும் பொருட்களும் இல்லாமல் போய்க் கொண்டிருப்பதை ஒரு கவிதையில் கவனப்படுத்துகிறார். … டிப்பார்ட்மெண்டல் ஸ்டோரின் பிராண்ட ட் பாக்கெட்களில் மளிகைக் கடைக்கார ர் களின் மூச்சு திணறுகிறது… என்கிறார் கடங்கநேரியான்.

இக்காலத்தில் சமூகசேவை செய்கிறோம் என்ற பேரில் வெளிநாட்டுப் பணத்தில் கொழிக்கும் என்.ஜீ.ஓ.க்கள் நாடெங்கும் மலிந்து கிடப்பதைக் கடங்கநேரியான், -க்களின் காசில் மதுவருந்தி பூர்வகுடிகளுக்கான செலவில் கணக்கெழுதுகிறார்கள் தேவைக்கும் அதிகமாகப் பெருத்துத் தொங்குகிறது தசை… என்று கூறுகிறார். இந்தச் சமூக அக்கறையை மட்டுமே இவர் கவிதையாக்கவில்லை. பூனைகள் அடுப்புச் சாம்பலில் படுத்துறங்குவது அக்கால கிராமங்களில் தென்படும் (இப்போது எல்லா வீடுகளிலும் கியாஸ் வந்துவிட்டது.) சாதாரணமான காட்சி இதை … சாம்பல் பூத் தேடிச் சோர்வடைந்த பூனையொன்று அடுக்களைச் சுவற்றில் விறகடுப்பை வரைகிறது.. என்கிறார் கவிஞர். எவ்வளவு அருமையான படிம ம் இது.

எளிமையான சொற்கள், எளிய கவிநடை, உருவப் பம்மாத்து இல்லாத கவிதை வரிகள் என்று விரிகின்றன கடங்கநேரியானின் கவிதைகள். 2016-ல் வெளிவந்த சொக்கப்பனை தொகுப்புக்குப் பின் இவர் எழுதாமல் போனது துரதிருஷ்டமே.

 

—————————————————————————————————————————————–

வண்ணநிலவன்.

 

 

1 COMMENT

  1. உள்ளதை உள்ளபடி பகிரும் உன்னதத்திற்கு நன்றி. அருமை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.