கார்பன் சந்தையும் காலநிலை அகதிகளும்

ங்கதேசத்தின் அந்தக் கடலோரக் கிராமத்தில் ஜெஹனாராவும், அவரது கணவரும், நான்கு குழந்தைகளும் ஓரளவு நிம்மதியாகத்தான் வாழ்ந்துவந்தனர். தாகூர் சொல்வாரே, மழைக்காலம் வந்து ஆறுகளில் வெள்ளம் வந்தால் உள்நாட்டிலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு படகுகள் வரும், தூங்கிக் கிடக்கும் கிராமங்கள் புத்துணர்வுடன் எழுந்து விழாக்கோலம் கொள்ளும் என்று! அப்படிப்பட்ட ஒரு அழகான கிராமம். இங்கும் குறுக்கும் நெடுக்கும் ஆறுகள் ஓடின. விவசாயம் செய்ய கொஞ்சம் நிலமிருந்தது. புயல்களுக்குப் பெயர்போன வங்கதேசத்தில்கூட அண்மைக் காலமாக புயல்கள் அதிக உக்கிரமடைந்துவந்தன. ஆனால் கடலிலிருந்து காக்க, கரை ஒன்று எழுப்பப்பட்டிருந்தது. எனவே பயம் இல்லை என்பது போலத்தானிருந்தது.

2009 ஜூன் மாதத்தில் ஒருநாள். வானம் பகல் நேரத்திலேயே மையிருள் கொண்டது. வெடித்துப் பிளந்தது. அப்படியொரு புயலை ஜெஹனாரா வாழ்க்கையில் கண்டதில்லை. குடும்பத்தினர் வீட்டின் மூலையில் ஒண்டிக் கிடந்தனர். கொந்தளித்துப் பொங்கிய அலைகள் மூர்க்கமாகத் தாக்கியதில் அவர்கள் பெரிதாக நம்பிக் கொண்டிருந்த தடுப்புச் சுவர் உடைந்து சிதறியது. விநாடி நேரத்தில் அவர்கள் வீடு அடித்துச் செல்லப்பட்டது. குடும்பத்தினர் சாயாமல் நின்று கொண்டிருந்த ஒரு மரத்தைப் பிடித்துக்கொண்டு உயிர் தப்பினர்.

புயல் ஓய்ந்த பிறகும் அவர்களால் நிம்மதிப் பெருமூச்சு விடமுடியவில்லை. கிராமம் முழுவதும் நாசமாகிவிட்டிருந்தது. அழகான ஆறுகளும், பசுமை கொஞ்சும் நிலங்களும் கடல்நீர் புகுந்ததால் உப்பாகிப் போய்விட்டிருந்தன. கிராமத்தின் பல பகுதிகள் மூழ்கிப் போக, சிறு திட்டுகளாக விளைநிலங்கள் உப்புத் தண்ணீருக்கு வெளியே தலை நீட்டிக் கொண்டிருந்தன. அடுத்த புயலில் மிச்சமீதியிருக்கும் இந்தப் பகுதிகளும் முழுகிவிடும் என்று நிபுணர்கள் சொன்னார்கள். ஆனாலும் அவர்களுக்கு வேறு வழியில்லை. கடல்மட்டத்திற்குக் கீழே இருந்த ஓரிடத்தில் ஒரு சிறிய குடிசை போட்டுக்கொண்டனர். புயலால் அனுபவித்த உடல் மன வேதனைகளால் ஜெஹனாராவின் கணவர் மரணமடைந்துவிட்டார். ஜெஹனாரா தனது 13 வயதும், 11 வயதுமான இரண்டு குழந்தைகளை டாக்காவில் செங்கல் சூளைகளில் கொத்தடிமையாக வேலை செய்ய அனுப்பிவிட்டார். விற்றுவிட்டார்.

காலை முழுவதும் அடுப்பெரிக்க சாணி சேகரிப்பார். பிறகு உப்பாகிப் போன நிலத்தில் ஏதாவது விளைவிக்க முடியுமா என்று போராடுவார். புற்கள்கூட வளராத அந்த வெறுமையான நிலப்பரப்பில் இப்படித்தான் பலர் எல்லா நம்பிக்கைகளையும் தொலைத்துவிட்டு வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

வங்கதேசத்தின் பல கடலோரப் பகுதிகளின் கதை இதுதான். லட்சக் கணக்கானவர்கள் ஏற்கெனவே உள்நாடு நோக்கிச் சென்றுவிட்டனர். இவர்களுக்குதான் காலநிலை அகதிகள் என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. காலநிலை மாற்றத்தால், புவிவெப்பமடைவதால் மாறிமாறி வரும் புயலையும், வெள்ளத்தையும், வறட்சியையும் தாக்குப் பிடிக்க முடியாமல் சொந்த நிலங்களை விட்டு வெளியேறியவர்கள்.

டாக்காவின் சேரிகளில் மட்டும் இத்தகைய காலநிலை அகதிகள் பதினைந்து லட்சம் பேர் வாழ்கின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் வங்கதேசத்தின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதி கடலில் மூழ்கிவிடும், இரண்டரைக் கோடி பேர் அகதிகளாக வெளியேறுவார்கள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

Image result for climate refugees

புவிவெப்பமடைவதால் கடல்மட்டம் உயர்ந்துவருவது இந்தப் பேரழிவுகளுக்குக் காரணம் என்கிறார்கள். புவிவெப்பமடைவதால் முன் கண்டிராத அளவுக்குக் கடும் புயல்கள் அடிக்கடி வீசுகின்றன. வறட்சி தாண்டவமாடுகிறது. துருவப் பகுதிகளிலும் இமயமலை போன்ற மலை உச்சிகளிலும் பனிப் பாறைகள் உருகுவதால் கடல்மட்டம் உயர்ந்துவருகிறது. இதனால் ஏறக்குறைய கடல்மட்டத்திலிருக்கும் வங்கதேசம், பிஜி போன்ற நாடுகள் பேரழிவைச் சந்தித்துவருகின்றன. செழிப்பான நிலங்கள் கடலில் மூழ்கிவருகின்றன. இந்த நாடுகளைப் பாதுகாக்க, குறிப்பாக வங்கதேசத்தைப் பாதுகாக்க உலக நாடுகள் உதவியுடன் வங்கதேச காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் செயல் மற்றும் நடைமுறைத் திட்டம் (Bangladesh climate change strategy and action plan) 2009 என்ற திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதன் படி 2020-க்குள் வங்கதேசம் கரியமில வாயு உட்பட சுற்றுச்சூழலை பாதிக்கும் வாயுக்களை வெளியேற்றுவதை நாற்பதிலிருந்து நாற்பத்தைந்து சதவீதம் குறைக்க வேண்டும். 2050-இல் தொண்ணூறிலிருந்து தொண்ணூற்றைந்து சதவீதம் குறைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வெளிப் பார்வைக்குப் பார்த்தால் மிக நல்ல முடிவுதான். வங்கதேசம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, தான் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடின் அளவைக் குறைத்து புவியைக் குளிர்விக்க வேண்டும். ஒரே ஒரு வேடிக்கையான உண்மையைத் தவிர்த்துப் பார்த்தால் இது மிகச் சரியான, செயல்படக் கூடிய திட்டம்தான். என்று தோன்றும். அந்த உண்மை என்னவென்றால் வங்கதேசம் வெளியிட்ட பசுங்குடில் வாயுக்கள் எனப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடு, சல்பர்-டை-ஆக்ஸைடு போன்ற சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாயுக்களால் புவிவெப்பமடையவில்லை. புவிவெப்பமடைந்ததற்கு ஒரு சதவீதம்கூட வங்கதேசம் காரணமல்ல. எனவே வங்கதேசம், தான் வெளியிடும் மாசு வாயுக்களைக் குறைத்தால் புவிவெப்பமடைவது எப்படி நிற்கும்? அப்படியானால் புவிவெப்பமடையும் அளவுக்குச் சூழலை மாசுபடுத்தியது யார்? யார் செய்த தவறுக்கு ஜெஹனாரா போன்றவர்கள் நரக வேதனை அனுபவித்து வருகிறார்கள்?

1970-இல் இந்தியாவின் மொத்த உற்பத்தி இங்கிலாந்தின் மொத்த உற்பத்தியில் பத்தில் ஒரு சதவீதம்கூடக் கிடையாது. ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் இருக்கும் வளர்ச்சியடைந்த நாடுகளின் தொழிற்சாலைகள் 200 ஆண்டுகளாக நிற்காமல் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. தங்கள் நாடுகளில் ஏற்கெனவே காடுகளை ஒழித்துக் கட்டிய இவர்கள் இந்தியா போன்ற காலனி நாடுகளிலும் அற்புதமான பசுமை மாறாக் காடுகளை அழித்து தேயிலையும், காப்பியும், ரப்பரும் தேக்கும், யூக்கலிப்டஸும் பயிரிட்டார்கள். இவர்களது கப்பல்கள் தான் ஐந்து பெருங்கடல்களிலும் சஞ்சரித்தன. விமானங்களும், ராக்கெட்டுகளும், செயற்கைக் கோள்களும் விண்ணை நிறைத்துள்ளன. உலகின் அத்தனை இயற்கை வளங்களையும், தொழில்நுட்பங்களையும் குறைவின்றி நுகர்ந்துவருவது இந்த நாடுகள்தான். அமெரிக்க ஐக்கிய நாடுகளும், ஐரோப்பிய யூனியன் நாடுகள் இரண்டின் மக்கள் தொகையும் சேர்ந்து உலக மக்கள் தொகையில் 10 சதவீதம்தான். ஆனால் உலகில் வெளியாகும் கார்பன்-டை-ஆக்ஸைடில் 45 சதவீதத்தை இந்த நாடுகளே வெளிவிடுகின்றன என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

உலகமயமாக்கலுக்குப் பின்பு சீனா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் புதிதாகக் கடை திறந்த ஐரோப்பிய, அமெரிக்க நிறுவனங்களால் இந்த நாடுகளும் இதே அளவிற்கு சூழலை மாசுபடுத்தத் தொடங்கிவிட்டதாக சொல்கிறார்கள்.

எனவே புவிவெப்பமடைவதற்கு உண்மையிலேயே காரணமானவர்கள் என்ன சொல்கிறார்கள்?

புவிவெப்பமடைவதற்கு மனிதர்கள் காரணம் இல்லையென்று சாதிக்கும் மனிதர்களைப் பற்றி முதலில் பார்க்கலாம்.

2001-ஆம் ஆண்டு ஜப்பானின் கியோட்டோ நகரில் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுப்பது பற்றி விவாதிக்கவும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றிப் பேசவும் உலக நாடுகள் மாநாடு கூட்டப்பட்டது. ஆனால் பெரும் தொழில் நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு எதிரான பிரச்சாரம் அமெரிக்காவில் 1997-லேயே தொடங்கிவிட்டது. அதிகமாகச் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பெட்ரோலியம், நிலக்கரி மற்றும் ஏனைய எரிசக்தித் துறைகளிலிருக்கும் ஃபோர்டு, பிரிட்டிஷ் பெட்ரோலியம், டச்சு ஆயில், டேக்ஸகோ போன்ற இருபதுக்கும் மேற்பட்ட பிரம்மாண்டமான பன்னாட்டு நிறுவனங்கள், அமைப்புகள் இணைந்து காலநிலை ஒப்பந்த எதிர்ப்புப் பிரச்சாரத்தைத் தொடங்கின.

தொலைக்காட்சிகள், நாளிதழ்கள், வானொலி மூன்றிலும் தீவிரப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. இந்த நிறுவனங்கள் ஐந்து மில்லியன் டாலர் செலவழித்து உலகக் காலநிலை பற்றிய அறிகுறிகள் தொடர்பான புள்ளிவிவர மையம் ஒன்றை உருவாக்கி புவிவெப்பமடைதல் பற்றிய எச்சரிக்கைகள் ஆதாரமற்றவை என்று மக்களுக்குக் காட்ட முடிவுசெய்தன. பர்சன் மார்ஸ் டெல்லர் என்ற பிரச்சார நிறுவனத்தின் உதவியோடு புவிவெப்பமடைதல் ஒரு பிரச்சனை இல்லை என்று பிரச்சாரம் செய்யப்பட்டது.

ஆயிரமாண்டுகளுக்கு முன்பே மாயா இன்கா நாகரிகங்கள் காலநிலை மாற்றத்தால் அழிந்தன. அப்போது அதற்கு மனிதனா காரணம்? (நம் பூம்புகாரையும் சேர்த்துக் கொள்ளலாம்.) ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை இயற்கை அழிவுகள் ஏற்படுவது சகஜம்தான். இதற்காக அமெராக்காவின் தொழில்வளம், வாழ்க்கைத் தரம் எல்லாவற்றையும் பணயம் வைக்க முடியாது என்று ஆணித்தரமாக வாதிட்டது இந்த அமைப்பு.

உச்சகட்டமாக இன்னொரு பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டது. தொழில் நிறுவனங்கள் மீது அரசு ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சி இது. ஒரு விதத்தில் கம்யூனிஸ அபாயத்தைப் போன்றது என்றெல்லாம்கூட பேசப்பட்டது. ஆனால் இவ்வளவு திறமையாக, புத்திசாலித்தனமாக செயல்பட்டும்கூட இந்த உலகக் காலநிலைக் கூட்டமைப்புக்கு சோகமான முடிவே ஏற்பட்டது.

பிரிட்டிஷ் பெட்ரோலியம், ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ், டாக்ஸகோ போன்ற நிறுவனங்கள் ஒவ்வொன்றாக வெளியேறிவிட்டன. அதாவது புவிவெப்பமடைதலையும், அதற்கு மனிதன் காரணமென்பதையும் ஒப்புக் கொண்டன. எனவே இந்த அமைப்பு தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டது.

பிரிட்டிஷ் பெட்ரோலியம், புவிவெப்பமடையவேயில்லை என்று மறுப்பதைவிட புவிவெப்பமடைவதைத் தடுப்பது நல்லது என்று தனது புதிய நிலைப்பாட்டை வெளியிட்டது. இந்தப் புரட்சிகரமான செயல்பாட்டுக்காக அதன் தலைமை நிர்வாகி ஜான் ப்ரௌனியைச் சில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகழவும் செய்தனர். பிரிட்டிஷ் பெட்ரோலியம் சொன்னதோடு நிற்காமல் சூரியசக்தியில் பெரிய அளவிற்கு முதலீடு செய்யவும் தொடங்கியது. கூடவே தனது பெயரையும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் என்பதிலிருந்து ‘பியாண்ட் பெட்ரோலியம்’ (Beyond Petroleum-BP) அதாவது ‘பெட்ரோலியத்துக்கு அப்பால்’ என்று மாற்றிக் கொண்டது. பெட்ரோல் சுற்றுச்சூழலைப் பாதிக்கிறதாம். எனவே அதை மட்டுமில்லாமல் அனைத்து எரிசக்திகளையும் பயன்படுத்தும் நிறுவனம் என்று நிலைநாட்ட இந்தப் பெயரைச் சூட்டிக்கொண்டதாம்.

அதோடு தனது பெட்ரோல் நிலையங்களுக்குச் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நல்ல வண்ணங்களான பச்சை, வெள்ளை, மஞ்சள் நிறங்கள் பூசியது. தனது பெட்ரோல் நிலையங்களுக்கு மின்சாரம் வழங்க சூரிய ஒளித் தகடுகளைப் பொருத்தியது. இதற்காக பிபி செலவளித்த தொகை 500 கோடி ரூபாய் ஆகும்.

மனித உரிமை ஆர்வலர்கள், பிபி, கொலம்பியா நாட்டில் எண்ணெய்க் கிணறுகள் தோண்டும்போது செய்த அட்டூழியங்களை மறைக்கவே இவ்வாறு திடீரென்று சைவப்புலியாக வேடம் போடுகிறது என்று குற்றம்சாட்டினர்.

கொலம்பியா அமேசான் வடிநிலத்தில் உள்ள ஒரு பசுமை கொஞ்சும் நாடு. கைத்தடியை நட்டு வைத்தால்கூட தழைத்து வளரும் செழிப்பும், வற்றாத நீர்வளமும், பசுமைமாறாக் காடுகளும் கொண்ட பூமி. அங்கே அடர் காடுகளுக்குக் கீழே பெட்ரோல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வளவுதான். இந்த பெட்ரோலிய நிறுவனங்கள் கொலம்பியாவுக்குப் படையெடுத்தன.

பிபி கொலம்பியாவில் பெட்ரோல் கிணறுகள் தோண்டும்போது பல்லாயிரம் ஏக்கர் பசுமைமாறாக் காடுகள் அழிக்கப்பட்டன. பளிங்கு போன்ற நீர்நிலைகளில் கழிவுகள் கொட்டப்பட்டு அவை கற்பனைக்கு எட்டாத அளவுக்கு மாசுபட்டுப் போயின. இதற்கு எதிராகப் போராடிய மக்களிடமிருந்தும், கொரில்லா போராளிகளிடமிருந்தும் தன்னையும், தனது சொத்துக்களான பெட்ரோல் கிணறுகளையும், பெட்ரோல் கொண்டு செல்லும் குழாய்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக பிபி மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியது. முதல் சுற்றில் மூவாயிரம் ராணுவ வீரர்களும், இரண்டாவது சுற்றில் போலீசாரும், மூன்றாவது சுற்றில் மிக உயர்ந்த பயிற்சி பெற்ற பன்னாட்டு கூலிப் படையினரும் அமர்த்தப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவருமே பிபியின் நிதி உதவியோடு அதி நவீன ஆயுதங்கள் தாங்கியிருந்தனர். தமது கிராமங்களிலும், விளைநிலங்களிலும், நீர்நிலைகளிலும் ஏற்பட்ட சர்வ நாசத்தை சகித்துக் கொள்ள முடியாமல் எதிர்த்துப் போராடிய பலர் சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர். ஏராளமானவர்கள் கொல்லவும் பட்டுள்ளனர்.

எல்மோரோ சங்கம் என்ற ஒரு சங்கம் பிபி தனது கிராமத்தின் சாலைகளையும் குடிநீர்க் குழாய்களையும் சேதப்படுத்துவதை எதிர்த்து அமைதி வழியில் போராடியது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தென் ஆப்பிரிக்கா நிறவெறியைக் கடைபிடித்து வந்தபோது, நெல்சன் மண்டேலா உள்ளிட்ட பல தலைவர்களை ஆண்டாண்டு காலமாக சிறையில் வைத்திருந்தபோது, அந்த நாட்டோடு உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என்று சர்வதேசத் தடை இருந்தது. அப்போது தென்னாப்பிரிக்கா ராணுவத்திற்கு எல்லாத் தடைகளையும் மீறி பெட்ரோலும், எரிவாயுவும் விற்பனை செய்தது இந்த நிறுவனம். தென்னாப்பிரிக்க நிறவெறியை உயிருடன் வைத்திருப்பதே பிபி தான் என்றும் பேசப்பட்டது.

ஆர்க்டிக் பிரதேசத்தில் நூற்றி நான்கு இடங்களில் பெட்ரோலியத்தைக் கொட்டி அழிவு ஏற்படுத்தியுள்ளது. அலாஸ்காவில் பாதுகாக்கப்பட வேண்டிய இயற்கை வனப்பு மிகுந்த பகுதிகள் வழியாக ராட்சஸ பெட்ரோல் பைப் லைன்களை அமைத்துள்ளது. இதன் மூலமாக பழங்குடி மக்களின் வாழ்வுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஸ்காட்லாந்து சுற்றுச்சூழல் சீர்கெடக் காரணமான இரண்டு நிறுவனங்களில் ஒன்று பிரிட்டிஷ் பெட்ரோலியம் என்று கிரீன்பீஸ் சூழலியல் அமைப்பு கூறியிருக்கிறது. பாதுகாக்கப்பட வேண்டிய நிலப்பரப்புகளான ஆர்க்டிக் பிரதேசம், ஆண்டிஸ் மலைத்தொடர்கள் போன்ற இடங்களில் பெட்ரோல் தேடும் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. எனவே சூரிய சக்தியில் செய்துள்ள முதலீட்டைத் தவிர இந்த நிறுவனம் திருந்துவதற்கான ஒரு அறிகுறியும் தங்களுக்குத் தெரியவில்லை என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

சூரியசக்தியில் முதலீடு செய்துள்ளதால் பெட்ரோல் தேடுவதை நிறுத்துவதில்லை. அதையும் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறது. ஒரே ஒரு சந்தேகம்தான். இப்படிப் பட்ட ஒரு நிறுவனம் தனது பெயரைக் காப்பாற்றிக்கொள்ள மட்டும் சூரிய சக்தியில் ஒரு முதலீட்டை செய்யுமா? செய்யவே செய்யாது.

வேறென்ன காரணமாக இருக்கும்? சூரிய சக்தியும் விற்று வாங்கக்கூடிய ஒரு பண்டம்தானே! விற்பவனுக்கு லாபம் கொடுக்கக்கூடியதுதானே! சூரிய ஒளித் தகடுகளை யாரும் சும்மா தருவதில்லையே! பெட்ரோலில் லாபம் கிடைப்பதால் அதில் முதலீடு செய்கிறது. சூரிய சக்தியில் லாபம் கிடைத்தாலும் அதில் முதலீடு செய்யமாட்டோம் என்று பிபி வாக்குறுதி கொடுத்திருக்கிறதா என்ன? சந்தை எந்தப் பொருளுக்கு இருந்தாலும் அதைக் கைப்பற்றுபவன்தானே நல்ல வியாபாரி. இது பிபியின் கதை மட்டுமல்ல, ஏறக்குறைய பெட்ரோல், நிலக்கரி வணிகத்தில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான நிறுவனங்களின் கதைதான்.

சரி, வங்கதேச காலநிலை அகதிகள்? திரும்ப அவர்களிடம் வருவதற்கு முன்னால் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கார்பன்-டை-ஆகஸைடை விற்று வாங்கும் பொருளாக மாற்றிய சாமர்த்தியத்தையும் பார்த்துவிடலாம்.

கார்பன்-டை-ஆக்ஸைடுக்கு ஒரு மார்க்கெட்

தொழிற்சாலைகளின் புகைப்போக்கிகள் ஓயாமல் புகையைக் கக்கிக் கொண்டேயிருக்கின்றன. மக்களின் வரிப் பணத்தைக் கொட்டி அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான நெடுஞ்சாலைகளில் உலகம் முழுக்க கோடிக்கணக்கான வாகனங்கள் பறந்து கொண்டிருக்கின்றன. பூமிவெப்பமடைகிறது. பனிப்பாறைகள் உருகுகின்றன. புயல்களும் வெள்ளங்களும் நாடுகளைப் புரட்டி எடுக்கின்றன. இடையிடையே தோன்றும் வறட்சியால் ஆறுகள் வற்றிப் போகின்றன. நிலங்களையும் வாழ்வையும் ஒருங்கே இழந்த மக்கள் அகதிகளாக ஊர் ஊராக அலைகின்றனர்.

வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு கடந்த 4,20,000 ஆண்டுகளாக அதிகரிக்கவே இல்லை, நாம் சும்மா இருந்திருந்தால் இன்னும் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு அப்படியே இருந்திருக்கும். ஆனால் மனிதனின் பொறுப்பற்ற செயல்களால் கார்பன்-டை-ஆக்ஸைடு அதிகரித்து சுற்றுச்சூழல் மாசுபட்டு வருகிறது என்று ஐ.நா. ஆலோசனைக் குழுவைச் சேர்ந்த 3,000 அறிவியலாளர்கள் ஒருங்கிணைந்து 2001-இல் அறிவித்திருந்தனர்.

வெளிவிடப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடில் முக்கால் பங்கு பெட்ரோலையும், நிலக்கரியையும் எரிப்பதால் வருகிறது. மீதிப் பகுதி காடுகளை அழிப்பதால் வெளியாகிறது என்றும் கூறப்படுகிறது. எனவே சுற்றுச்சூழலைக் காக்க உடனடியாக கார்பன் வெளியேற்றத்தை, அதாவது சூழல் மாசுபடுத்துவதை 50-லிருந்து 70 சதவீதம் வரை குறைக்கவேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தினர்.

ஒரு நாடு அல்லது பல நாடுகளின் கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும்? சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி, தடையோ, தண்டனையோ விதித்து அவர்கள் மேற்கொண்டு சூழலை மாசுபடுத்தாமல் தடுக்கத்தானே வேண்டும்? அதுதான் சரியானதும்கூட, இல்லையா?

செய்துவிடலாம்தான். ஆனால் உலகமயமாக்கலுக்குப் பிறகு தீவிரம் பெற்றுவரும் ஒரு கோட்பாடு அரசு இந்தச் சில்லறை வேலைகளை எல்லாம் செய்யக்கூடாது என்று தடுக்கிறது. அரசு சுகாதாரம், கல்வி என்று எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டுச் செயல்படக் கூடாது. இவற்றையெல்லாம் தனியாரிடம் விட்டுவிட்டு நாட்டின் பாதுகாப்பு, நீதித்துறை போன்றவற்றில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று வளர்ந்த நாடுகளும், உலக வங்கி போன்ற அமைப்புகளும் இந்தியா போன்ற நாடுகளுக்கு உத்தரவிடுகின்றன. தொழில் நிறுவனங்களுக்கு இதைச் செய், அதைச் செய்யாதே என்று அரசு உத்தரவிடுவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்கின்றனர் உலகைத் தங்கள் பிடியில் வைத்திருக்கும் பிரம்மாண்ட பன்னாட்டு நிறுவனங்கள். இந்த நிறுவனங்கள் சந்தையே எல்லாவற்றையும் தீர்மானிக்கும். எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும் என்ற கோட்பாட்டைக் கொண்டுள்ளனர். எனவே சுற்றுச்சூழலைப் பாதுகாக்க கியோட்டோவில் கூட்டப்பட்ட உலக நாடுகளின் மாநாடு அட்டகாசமான ஒரு தீர்வை முன்வைத்தது.

மாசுபடுத்துபவர்களுக்கு கொஞ்சம் செலவு, மாசைக் கட்டுப்படுத்துபவர்களுக்கு லாபம். இப்படி ஒரு முறையை முன்வைத்தது. கூடவே அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகள் 2012-க்குள் கார்பன் வெளியிடுவதை 5.2% குறைக்கவேண்டும் என்று எல்லையும் நிர்ணயித்தது. அமெரிக்கா இதுபோல் எல்லை நிர்ணயிப்பதையெல்லாம் தான் ஒப்புக்கொள்ள முடியாது என்று விலகிக் கொண்டது. ஆனால் ஐரோப்பிய யூனியன் இதை ஏற்றுக்கொண்டு சந்தை மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முயற்சியில் முழுமூச்சில் இறங்கியது.

இந்த முறை என்னவென்றால் ஒரு நிறுவனம் எவ்வளவு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றலாம், எவ்வளவு தூரம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தலாம் என்பதற்கு ஒரு அளவு நிர்ணயிக்கப்படுகிறது. இந்த அளவை அரசு அல்லது ஏதோ ஒரு அமைப்பு உரிமங்களாக மாற்றி விற்பனை செய்கிறது.

எடுத்துக்காட்டாக ஒரு இரும்பு உருக்காலையோ, சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனமோ ஐம்பது டன் கரியமில வாயுவை அதாவது புகையை வெளிவிட்டுக் கொள்ளலாம் என்று அனுமதிக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். ஒரு டன் கரியமில வாயுவுக்கு ஒரு உரிமம் என்று வரையறுக்கப்பட்டு அந்த நிறுவனத்திற்கு ஐம்பது உரிமங்கள் வழங்கப்படும். அந்த ஆலை அதற்குள்தான் சுற்றுச்சூழலை மாசுபடுத்திக் கொள்ள வேண்டும்.

ஒருவேளை அந்த நிறுவனம் தன்னிடம் உள்ள உரிமங்களைவிட அதிக புகை வெளியிட வேண்டுமென்றால் உலகில் எங்காவது ஒரு நிறுவனம் தான் வாங்கி வைத்திருக்கும் உரிமங்களைவிட குறைவான அளவிற்குப் புகை வெளியிட்டிருக்குமல்லவா? அதனிடமிருந்து மிச்சமிருக்கும் உரிமங்களை வாங்கிக் கொள்ளலாம். எனவே குறைவாக மாசுபடுத்தும் தொழிற்சாலை தன்னிடம் மிச்சமிருக்கும் உரிமங்களை விற்று லாபம் அடைகிறது. அதனால் அத்தொழிற்சாலை மேலும் மேலும் குறைவாக மாசுபடுத்தி இன்னும் அதிக லாபம் பெற முயலும். அதிகமாகப் புகைவிடும் தொழிற்சாலை மேற்கொண்டு உரிமங்களை வாங்குவதற்காக செலவழிக்க வேண்டிவரும். அதிக செலவை மிச்சம் பிடிக்க சூழலை மாசுபடுத்துவதைக் குறைக்க முயலும். எனவே மொத்தத்தில் சுற்றுச்சூழல் மாசுபடுவது குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

திட்டம் என்னவோ கேட்க நன்றாகத்தானிருந்தது. ஆனால் பக்கவிளைவாக சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கார்பன்-டை-ஆக்ஸைடு விற்று வாங்கக்கூடிய ஒரு பொருளாக மாறிவிட்டது. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதாகிவிட்டது. கார்பன் வணிகம் ஜே ஜே என்று நடந்தது. சீனாவும், இந்தியாவும் பல ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்தன. பன்னாட்டு நிறுவனங்கள் மகிழ்ந்துபோய் இது சரியான முறை என்று பாராட்டின. உலக வங்கி கார்பன் வணிகத்திற்காக ஒரு தனித்துறையே தொடங்கியது. கார்பன் கிரெடிட்டுகளை விற்று வாங்கும் இடைத்தரகு நிறுவனங்கள் தோன்றி கொள்ளை லாபம் சம்பாதித்தன. வழக்கம்போல ஃபோர்டு, பிபி போன்ற பகாசுர நிறுவனங்கள் கார்பன் கிரெடிட்டுகளை வாங்கி விற்கும் தரகு வேலையில் இறங்கின.

இந்தியா போன்ற நாடுகளில் உண்மையிலேயே சில அமைப்புகள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதை பெருமளவுக்குக் கட்டுப்படுத்தவும் செய்தன. முக்கியமான ஒரு அமைப்பு திருப்பதி கோவில். திருப்பதி கோவிலுக்கு ஆண்டு வருமானம் குறைந்தது 1,700 கோடி ரூபாய். ஒவ்வொரு நாளும் ஐம்பதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் பேர் இந்தக் கோவிலுக்கு வருகை தருகிறார்கள்.

கோவில் நிர்வாகம் மக்களின் பக்தியையும், தனது பொருளாதார வலிமையையும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்குப் பயன்படுத்த முடிவு செய்தது. கோவிலில் தினமும் நாற்பத்தைந்தாயிரம் பேருக்கு சூரிய சக்தியின் மூலம் உணவு சமைக்கப்படுகிறது. தானாக சூரியனை நோக்கி திருப்பிக்கொள்ளும் ஆண்டனாக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் கோவிலில் தினமும் 500 லிட்டர் டீசலை மிச்சம் பிடிக்கிறது. 1350 கிலோ கார்பன்-டை-ஆக்ஸைடு உற்பத்தியாகாமல் தடுக்கப்படுகிறது. அதோடு காற்றாலைகள் அமைத்து அதிலிருந்தும் மின்சாரம் தயாரிக்கிறது.

கோவிலைச் சுற்றி ரிசர்வ் காடுகளை வளர்த்துள்ளது. திருப்பதி கோவில் ‘கிளீன் டெவலப்மெண்ட் மெக்கானிசம்’ என்ற அமைப்பில் பதிவு செய்துகொண்டு கார்பன் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது.

மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளின் மூலம் ஏராளமான கார்பன் பர்மிட்டுகளை மிச்சம் பிடித்துள்ளது. லாபமும் ஈட்டியுள்ளது. ஆனால் உண்மையிலேயே சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதாக கருதப்படும் பல இந்திய நிறுவனங்களும் கார்பன் வணிகத்தில் ஈடுபட்டுள்ளன.

ரிலையன்ஸ், பிர்லா, டாடா உள்ளிட்ட ஆயிரத்து அறுநூறு நிறுவனங்கள் கார்பன் வணிகத்தில் ஈடுபட்டுள்ளன. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நிறுவனம் எப்படி கார்பனை மிச்சம் பிடிப்பதாகச் சொல்லி கார்பன் வணிகத்தில் ஈடுபட முடியும்? தாராளமாக முடியும் என்பதுதான் இந்த வணிகம் செயல்படும் முறை.

உதாரணமாக, தஞ்சைப் பகுதியில் பச்சைப்பசேல் என்று வயல்கள் இருக்கின்றன. தெள்ளிய காற்று வீசுகின்றது. தூசு தும்பு, புகை எதுவும் இல்லை. நீர்நிலைகள் பளிங்கு போலிருக்கின்றன. இந்த இடத்தில் ஒரு அனல் மின்நிலையமோ, சிமெண்ட் ஆலையோ வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.

அனல் மின்நிலையம் ஆயிரம் டன் கார்பனை வெளியேற்றலாம் என்று பர்மிட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எண்ணூறு டன் கார்பனைத்தான் வெளியேற்றுகிறது. மீதியுள்ள இருநூறு டன் கார்பன் உரிமங்களை அது தாராளமாக விற்று லாபம் ஈட்டலாம். இதைவிட அதிகமாக மாசுபடுத்தும் இன்னொரு நிறுவனம் அதை வாங்கிக் கொள்ளும்.

அனல் மின்நிலையம் செயல்படும் பல நூறு ஏக்கர் பகுதி பாலைவனமாக ஆகியிருக்கலாம். நீர்நிலைகள் நாசமாகியிருக்கலாம். மரங்களும் செடிகளும் பூண்டோடு அழிக்கப்பட்டிருக்கலாம். உங்கள் உணவில் புகையும் கரியும் படியலாம், ஆனால் அந்த நிறுவனம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நிறுவனம் என்றுதான் கருதப்படும்.

இப்படித்தான் பல நிறுவனங்கள் கார்பன் வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றன. கார்பன் வணிகம் தீவிரமாக நடந்த நான்கைந்து ஆண்டுகளில் சுற்றுச்சூழல் மாசுபடுவது 0.1 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியா போன்ற வளரும் நாடுகள் சூழலை மாசுபடுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை எதிர்த்துப் போராடியும், அதே நேரம் கட்டுப்படுத்த இணைந்து செயலாற்றியும் வருகின்றன. எனவே இந்தக் கார்பன் கிரெடிட்டுகளை உருவாக்கும் திட்டங்கள் அந்நிய முதலீட்டில் இந்தியாவில் ஏராளமாகத் தொடங்கப்படும்.

இந்தியா போன்ற நாடுகளில் முதலீடு செய்யவும், கார்பன் வணிகம் தொடர்பான தரகு வேலையில் ஈடுபடவும் செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் தாங்கள் எவ்வளவு தூரம் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறோம் என்பது பற்றிய தகவல்களைத் திட்டமிட்டு மறைத்துவருகின்றன என்று குற்றம்சாட்டப்படுகிறது. அப்படியே இந்த நிறுவனங்கள் தரும் புள்ளிவிவரங்களை ஆய்வுசெய்வதிலும் ஏராளமான குளறுபடிகளும், ஊழலும் மலிந்திருக்கின்றன என்று ஹைடெ பச்ராம் கூறுகிறார்.

ப்ரைஸ்வாட்டர்கூப்பர்ஸ் என்ற கார்ப்பரேட் நிறுவனம் சூழலை மாசுபடுத்தும் நிறுவனங்களுக்கு கணக்காளராகவும், ஆலோசகராகவும் இருக்கிறது. அதே நேரம் சூழல் மாசுபடுவது குறைகிறதா என்று கண்காணிக்கும் வேலையும் பார்க்கிறது. வேலிக்கு ஓணான் சாட்சி என்ற கதைதான்.

கியோட்டோ ஒப்பந்தத்தின் இன்னொரு பகுதி காடு வளர்ப்பது. மரங்களை நட்டு வளர்த்தால் அவை காற்றிலிருந்து உணவு சேகரிக்கும்போது கார்பன்-டை-ஆக்ஸைடை உறிஞ்சிக் கொள்ளும். சுற்றுச்சூழல் சீர்படும் என்கிறது. எனவே சூழலை மாசுபடுத்தும் நிறுவனங்கள் வளரும் நாடுகளில் பெரும் நிலப்பரப்புகளில் காடுகளை வளர்ப்பதில் முதலீடு செய்கின்றன.

ப்யூச்சர் பாரஸ்ட் போன்ற கம்பெனிகள் இதை பயங்கரமான அளவுக்கு எடுத்துச் செல்கின்றன. நீங்கள் கார்பனை வெளிவிடாத விமானப் பயணம், கார் பயணம் செய்யலாம், கார்பனை வெளிவிடாத வீட்டில் குடியிருக்கலாம். மொத்தத்தில் கார்பனை வெளிவிடாத குடிமகனாக மாறிவிடலாம். மரங்களை மட்டும் நட்டு வளர்த்தால் போதும். உங்களுக்காக நிறுவனமே மரம் வளர்த்துவிடும். அதாவது பணக்கார நாடுகளில் வாழும் மக்கள் தங்கள் வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை. காரைப் பயன்படுத்துவதையோ, குளிர்பதன சாதனங்களைப் பயன்படுத்துவதையோ குறைத்துக் கொள்ள வேண்டியதில்லை. மரம் வளர்த்தால் போதும். அதுவும் இந்தியா, பிரேசில் போன்ற கண்காணாத நாடுகளில் வளர்த்தால் போதும். குற்ற உணர்ச்சியின்றி நிம்மதியாக வாழ்க்கையை அனுபவிக்கலாம்.

பூமிக்கு அடியில் உள்ள எரிபொருட்களான பெட்ரோலியமும், நிலக்கரியும் எரிக்கப்படுவதால் தோன்றும் சுற்றுச்சூழல் நாசத்தை எத்தனை கோடி மரம் நட்டாலும் ஈடுகட்ட முடியாது என்கிறது விஞ்ஞானம். ஆனால் உண்மை அந்நிய முதலீட்டைக் கொண்டுவருமா?

அது வரையில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இந்தியா என்ன செய்யும்? இன்னும் ஒரு இருபது ஆண்டுகளில் வங்கதேசத்தில் ஐந்தில் ஒரு பகுதி மூழ்கி இரண்டரை கோடி மக்கள் அகதிகள் ஆவார்கள் அல்லவா! அவர்கள் இந்தியாவுக்குள் வராமல் தடுக்க 2,100 கிலோமீட்டர் தூரத்திற்கு மின்சார வேலியை அமைத்துவருகிறது. மின்சார வேலி அகதிகள் இந்தியாவுக்குள் வராமல் தடுத்துவிடும். ஆனால் இந்தியாவுக்குள்ளேயே உருவாகும் காலநிலை அகதிகளை என்ன செய்வது?

பிரதமரின் குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கடலோர கிராமம் மோதி தண்டி. மகாத்மா காந்தி தண்டியாத்திரை நடத்திய பகுதியிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு மீனவர் கிராமம். இங்கும் ஜெஹனாராவின் கிராமத்தைப் போலவே அரசு ஒரு பத்தடி உயர சுவரை எழுப்பியுள்ளது. சுவர் சற்றே காலம் கடந்து எழுப்பப்பட்டதால் அதற்குள் கிராமத்தின் ஒருபகுதி மூழ்கிவிட்டது. கடலுக்குள் கிணறுகளும், மொட்டை சுவர்களும், ஒரு கோவில் கொடி மரமும் மூழ்கி நிற்பதைக் காணமுடியும்.

அருகில் இருக்கிறது குஜராத்தின் பண்பாட்டுத் தலைநகரான பரோடா. மாலை வேளையில் பரோடாவிலிருந்து கடற்கரைக்கு அமைக்கப்பட்ட அற்புதமான ஆறு வழிப் பாதையில் எல்லா விதமான விலையுயர்ந்த கார்களும் வழுக்கிக்கொண்டு கடற்கரை நோக்கி செல்வதைக் காணமுடியும். அரபிக்கடலில் சூரியன் மறைவதைக் காணவும், அருகில் உள்ள உணவகங்களில் இனிய மாலைப் பொழுதைக் கழிக்கவும் கடற்கரை நோக்கிச் செல்கிறார்கள் இவர்கள்.

அதே நேரத்தில் உயிர்த் துடிப்பிலாத ஆவிகளைப் போன்ற உருவங்கள் கால்நடையாக உள்நாடு நோக்கிச் சென்றுகொண்டிருப்பதைக் காணமுடியும். தங்கள் நிலங்களையும், வீடுகளையும் விழுங்கி தங்களையும் விழுங்கக் காத்திருக்கும் கடலிடமிருந்து விலகிச் சென்றுவிட வேண்டுமென்ற உறுதி அவர்கள் கண்களில் தெரியும்.

மேற்கு வங்காளத்தின் சுந்தரவனக் காடுகளும், ஒரிஸ்ஸாவின் கடலோரப் பகுதிகளும், கடலரிப்பால் பேரபாயத்தை எதிர்கொண்டுள்ளன. மாபெரும் பிரம்மபுத்திராவின் கரையில் உள்ள அஸ்ஸாமில் இயற்கை அழிவுகளை எதிர்கொள்ள ஒரு தனி அதிகாரியே ஏற்படுத்தப்பட்டுள்ளார். நிலைமை அந்த அளவுக்கு மோசமடைந்துள்ளது. இந்த அதிகாரி என்ன செய்கிறார்? அரசு சில தங்கிடங்களை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளம் வரும்போது மக்கள் அங்கே வந்து தங்கிக் கொள்வார்கள். வெள்ளம் வடிந்ததும் போய்விடுவார்கள் என்கிறார் அந்த அதிகாரி. அவ்வளவுதானா? அவ்வளவுதான்!

இந்தியாவின் மக்கள்தொகையில் 25 சதவீதம் பேர் கடலோரப் பகுதிகளில் வாழ்கிறார்கள். இன்றோ நாளையோ இந்த ஆபத்துக்குள்ளாகக் கூடியவர்கள்தான் இவர்கள் எல்லோரும். சந்தை சுற்றுச்சூழலைப் பாதுகாத்துவிடும் என்ற நம்பிக்கை அரசு தந்திருப்பதாலும், பன்னாட்டு மூலதனம் இதில் இருப்பதாலும் நாமும் நம்பிக்கையுடன் இருக்கவேண்டியதுதான்.


இரா. முருகவேள் மிளிர்கல், முகிலினி, செம்புலம், புனைபாவை உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர்

1 COMMENT

  1. சிறப்பான கட்டுரை வாசிக்கும் எண்ணத்தை அதிகரிக்க வைத்துள்ளன/ மகிழ்ச்சி ஒரு புறம் சூழல் பாதிப்பு ஆழ்ந்த கவலையை ஏற்ப்படுத்துகின்றன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.