‘காலநிலை மாற்றம்’: கிலோ என்ன விலை?

யற்கையை, தான் வாழ்ந்த திணையைப் போற்றிய சமூகம், தமிழ்ச் சமூகம். தம் வாழ்நிலத்தை, அதன் சூழலியல் வளத்தைச் சுட்டிக்காட்டும் கூறுகளைக் கருப்பொருள்களாக்கிப் போற்றிய அதேநேரம், அந்தத் திணையின் சீரழிவையும் சங்க இலக்கியங்கள் பேசின.

இன்றைக்குப் பொது சமூகம் இயற்கை, சூழலியலில் இருந்து அந்நியமாகி நிற்பதற்கு மரபின் செழுமையிலிருந்து துண்டித்துக்கொண்டது, அறிவியல்பூர்வப் புரிதலின்மை, காலனியாதிக்கக் கல்வி, உலகமயமாக்கம் எனப் பல்வேறு காரணங்களைச் சொல்லலாம். ஆனால், பெரும்பாலான சமூகங்களில் அவற்றின் மனசாட்சியாகத் திகழும் கலை-இலக்கியப் பங்களிப்பாளர்கள் சுற்றுச்சூழல் இயக்கங்களில் முன்னின்று இருந்திருக்கிறார்கள், பங்களித்து இருந்திருக்கிறார்கள்.

1962-இல் மௌன வசந்தம் நூலின் மூலம் அறிவியலாளர் ரேச்சல் கார்சன் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை கவனப்படுத்தினார். அந்த நூல் வெறுமனே சுற்றுச்சூழல் அக்கறையை உருவாக்கிய நூலாக மட்டுமல்லாமல், ஒரு செவ்விலக்கியமாக உலகெங்கிலும் போற்றப்படுகிறது. 1976-இல் கேரளத்தில் அறிவியல் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்களின் பங்களிப்புடன் உருவான அமைதிப் பள்ளத்தாக்கு சூழலியல் போராட்டம், கேரள சூழலியல் பாதுகாப்பு இயக்கத்தின் தோற்றத்துக்குக் காரணமாக அமைந்தது.

ஆனால் சுற்றுச்சூழல் அக்கறை, சூழலியல் பாதுகாப்பு போன்ற பதங்களும் செயல்பாடுகளும் தமிழ் எழுத்தாளர்களுக்கு அந்நியமானவையாகவே இருந்துவந்திருக்கின்றன. அந்தப் பட்டியலில் ‘காலநிலை மாற்றம்’ என்கிற புதிய சொல்லும் அது சார்ந்த செயல்பாடும் சமீபத்தில் சேர்ந்திருக்கிறது.

அப்படியென்றால்?

காலநிலை மாற்றம் என்கிற கருத்தாக்கம் 15 ஆண்டுகளுக்கு முன்னதாகவே உலக அளவில் பிரபலமாகத் தொடங்கி, பரவலாகியும்விட்டது. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல் கோர், அவர் இயக்கிய ‘An Inconvenient Truth’ ஆவணப் படம், பிரிட்டன் சூழலியல் எழுத்தாளர் ஜார்ஜ் மோன்பியோ, அவருடைய ‘Heat: How to Stop the Planet Burning’, ஐ.நா.வின் துணை அமைப்பான காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழுவின் (IPCC) தொடர்ச்சியான மதிப்பீட்டு அறிக்கைகள் ஆகியவற்றின் மூலமாக காலநிலை மாற்றம் உலகளாவிய கவனத்தைத் தொடர்ச்சியாகப் பெறத் தொடங்கியது.

சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அக்கறை கொள்வதாகவும், எழுத்தின் மூலமும் விவாதங்களின் மூலமும் அவற்றைப் பதிவுசெய்துவருவதாகவும் அறிவித்துக்கொள்ளும் நவீன இலக்கியத் துறை-எழுத்துத் துறைகள் காலநிலை மாற்றம் குறித்து என்னவிதமான சித்திரத்தைத் தமிழ்ச் சமூகத்துக்கு இதுவரை வழங்கியிருக்கின்றன?

முதல் கேள்வி, காலநிலை மாற்றம் என்றால் என்ன, அது குறித்த அடிப்படைகளைத் தமிழ் கலை, இலக்கியவாதிகள் அறிந்திருக்கிறார்களா என்பது. ஒன்றரை ஆண்டுகளுக்குமுன், இந்திய-ஆங்கில எழுத்தாளர் அமிதவ் கோஷின் ‘கன் ஐலாண்ட்’ நாவல் வெளியானபோது, இதே கேள்வியை முன்வைத்து ‘இந்து தமிழ்’ நாளிதழில் சு. அருண் பிரசாத் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். ஆனால், அந்தக் கட்டுரை எழுப்பியிருந்த கேள்வி, இன்னும் விடை காணாமலேயே இருக்கிறது.

 உலகின் இருப்பு

தமிழ் தீவிர இலக்கியச் சூழலைப் பொறுத்தவரை, மக்களின் பாடுகள் என்பவை பெரும்பாலும் ‘விலக்கப்பட்ட கனிகளே’. அப்படியே எழுதப்பட்டாலும் அசையாத நாடகத் திரைகளைப் போன்றே அவை பல நேரம் பயன்படுத்தப்படுகின்றன. இடதுசாரி யதார்த்த இலக்கியம் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் எழுத்தாளர்கள், காலம்காலமாகப் பொருளாதாரரீதியிலும் சமூகரீதியிலும் ஒடுக்கப்பட்டும் நசுக்கப்பட்டும் வந்துள்ள பெருமக்கள் கூட்டத்தினரைத் தங்கள் படைப்புகளில் எவ்வளவு தூரம் பொருட்படுத்தியிருக்கிறார்கள்?

டால்ஸ்டாய், செகாவ், கார்க்கியை மொழிபெயர்த்துக் கூட்டம்கூட்டமாகப் படித்த இடதுசாரி எழுத்தாளர்கள், என்னவிதமான படைப்புகளைத் தமிழில் தந்தார்கள் என்று கேள்வி எழுப்பும் இலக்கியவாதிகள், அதேநேரம் தாங்கள் வாழும் சமூகத்தின் நிலையைப் பிரதிபலிக்கும் வகையிலோ அல்லது அவர்கள் சுயமாக வைத்துள்ள அயல்நாட்டு அளவுகோல் அடிப்படையிலேயோகூட என்னவிதமான படைப்புகளைத் தந்திருக்கிறார்கள்? – இந்தக் கேள்வியைத் தங்களுக்குள் அவர்கள் எழுப்பிக் கொள்கிறார்களா?

பொதுவாகத் தமிழ் இலக்கியவாதிகள் படைப்பிலக்கியத்தைத் தவிர வேறு எதையும் சட்டை செய்வதில்லை. படைப்பிலக்கியத்தைத் தவிர்த்த அனைத்தும் இலக்கிய மதிப்பற்றவை என்பதே அவர்களுடைய பார்வை. இந்தப் பின்னணியில் அறிவியல், சுற்றுச்சூழலைக் குறித்து வாசித்தோ மற்ற வகைகளிலோ அவர்கள் அறிந்துகொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு என்றே எண்ண வேண்டியிருக்கிறது. அது மட்டுமல்லாமல் தங்களிடம் ஒன்று தானாகவே தாக்கம் செலுத்த வேண்டும். அப்படித் தாக்கம் செலுத்தாத எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை என்ற போக்கையே இலக்கியவாதிகள் பரவலாக வெளிப்படுத்துகிறார்கள்.

இப்படியாகத் தத்துவ விசாரம், அகச் சிக்கல்கள், ஆண்-பெண் உறவு சார்ந்த பிரச்சினைகள், ஆத்ம ஞானம் உள்ளிட்டவை சார்ந்தே தமிழ் இலக்கிய உலகம் சுற்றிச் சுழன்றுகொண்டிருக்கிறது. ஆனால், பொருண்மையான உலகம், அங்கே அறிவைப் பயன்படுத்தி உழைக்கும் / அறிவைப் பயன்படுத்தித் தாம் வாழும் உலகைக் காக்கும் மக்கள் இருந்தால் மட்டுமே கலை, இலக்கியம் உள்ளிட்ட எதுவொன்றும் சாத்தியம். அந்தப் பொருண்மையான உலகத்தின் இருப்பு இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்பதுதான் தற்போதைய மிகப் பெரிய கேள்வி. இந்தக் கேள்விக்கான முதன்மைக் காரணம் காலநிலை மாற்றம்.

நகைமுரண்

இலக்கிய உலகம்-சுற்றுச்சூழல் இடையிலான தொடர்பின் நிலை இது என்றால், தமிழ்ச் சுற்றுச்சூழல் செயல்பாடுகளின் நிலையும் உற்சாகம் கொள்ள வைப்பதாக இல்லை. ஜோஷ் வண்டேலூவின் அபாயம் என்கிற அணுஉலையின் ஆபத்தைக் குறித்த நாவலை பல பத்தாண்டுகளுக்கு முன்பே ‘க்ரியா’ வெளியிட்டது. கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம் நம் சமீபத்திய நினைவுகளைக் கொண்டது. கூடங்குளம் அணுஉலைப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த எத்தனை பேர் அபாயம் நாவலைப் படித்திருப்பார்கள்? அல்லது அபாயம் நாவலை இலக்கியமாகப் படித்து சிலாகித்த எத்தனை பேர், தங்கள் கண் முன்பாக நடைபெற்ற கூடங்குளம் அணுஉலைப் போராட்டத்தில் தொடர்ச்சியாகப் பங்கெடுத்திருப்பார்கள்? தமிழகத்தில் சுற்றுச்சூழல்-இலக்கியத் துறைகளுக்கு இடையே நிலவும் பாரதூரமான இடைவெளி குறித்த நகைமுரண்களுக்கு இது ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே.

இயற்கைப் பேரழிவுகளின் தொடர்ச்சியாக, தொலைக்காட்சி விவாதங்களிலும் சமூக ஊடகப் பிரசாரங்களிலும் காலநிலை மாற்றம் குறித்துப் பேசப்படுகிறது. இவற்றில் பங்கேற்கும் ‘சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள்’ காலநிலை மாற்றம் என்பதை ஒரு அறிவியலாக அணுகாமல் – கவனப்படுத்தாமல், அது ஒரு பயங்கர பூதம் என்பது போன்ற சித்திரத்தையே வழங்கி வந்திருக்கிறார்கள். தமிழகத்தில் ‘சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்’ என்கிற அடையாளத்தை கம்பீரமாகச் சுமக்கும் பலர், எந்த இயற்கைப் பேரழிவு நிகழ்ந்தாலும் அதைக் காலநிலை மாற்றத்தின் விளைவுதான் என்று கூறி, காலநிலை மாற்றத்தை ஏதோ ‘பூர்வஜென்மப் பாவத்தால் விளைந்தது’ என்பதுபோன்ற கருத்தை உருவாக்க முயன்றுவருகிறார்கள். உலகம் ஒன்றிணைந்து, வேற்றுமைகளைக் களைந்து போராடியாக வேண்டிய காலநிலை மாற்றம் சார்ந்த புரிதலை மேம்படுத்தவும் பரவலாக்கவும் இதுபோன்ற அரைகுறை விவாதங்கள் உதவாது.

என்ன தேவை?

தேசிய அளவில் இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் காலநிலை மாற்றத்தை கவனப்படுத்தி ஒருபுறம் எழுதிவரும் அதேநேரம், சுனிதா நாராயண் தலைமையிலான டில்லியைச் சேர்ந்த அறிவியல்-சுற்றுச்சூழல் மையம் (CSE) கடந்த 20 ஆண்டுகளாகக் காலநிலை மாற்றம் குறித்து தொடர்ச்சியாகப் பேசி, எழுதி, பயிலரங்குகள்-கூட்டங்களை ஏற்பாடுசெய்து பல்வேறு வழிகளில் அது குறித்த புரிதலை மேம்படுத்தி வந்திருக்கிறது. சர்வதேச விவாதங்களில் ‘ஏழை நாடு’ என்கிற போர்வையில் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு இந்தியா அனுமதி கோரக் கூடாது, அதேநேரம் அமெரிக்காவைப் போல் இந்தியாவும் மோசமான சூழலியல் சீர்கேட்டில் சிக்காமல் காத்துவரும் நவீன வசதிகளற்ற ஏழைகளைக் காப்பாற்றும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது என்பதை வலியுறுத்தி வாதிட்டுவருகிறது.

ஆனால் சுனிதா நாராயண், மறைந்த அனில் அகர்வால் போன்ற முன்னோடிச் சூழலியல் செயற்பாட்டாளர்களும் அவர்கள் முன்வைக்கும் பார்வைகளும் இன்றுவரை தமிழ் மண்ணில் பரவலாக எடுத்துச் செல்லப்படவில்லை. இந்த நிலைக்குக் காரணம் தமிழகத்தில் செயல்படும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களின் அரைகுறை கவனப்படுத்தலே. இது ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே.

இலக்கியவாதிகள் சுற்றுச்சூழல் பிரச்சினை குறித்து அலட்டிக்கொள்ளாமல் இருப்பதிலும், தமிழக சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களில் பலரும் மேம்போக்கான சுற்றுச்சூழல் வாதங்களை முன்வைத்து வருவதிலும் காணப்படும் ஒற்றுமை ஒன்று உண்டு. காலநிலை மாற்றம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பிரச்சினைகள் சமூகப் பொருளாதார அடுக்கில் கீழ்த்தட்டில் உள்ள ஏழைகள், ஓடுக்கப்பட்டோரையே கடுமையாக பாதிக்கும். உலகில் பெரும்பான்மையாக உள்ள இந்த மக்கள், இவர்களுடைய பார்வை எல்லைக்குள் வராமல் இருப்பதே மேலே கூறப்பட்ட போக்குக்கான அடிப்படை.

காலநிலை மாற்றம் என்பது அடிப்படையில் ஒரு சூழலியல்-அறிவியல் பிரச்சினை. இது உலகத்தை ஏற்கெனவே புரட்டிப்போடத் தொடங்கிவிட்டது. உலகம் தலைகீழாகப் புரட்டிப்போடப்பட்ட பிறகே, அது குறித்து யோசிப்போம், பேசுவோம் என்றால், அது மனிதகுலத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகையே அழிவுப்பாதை நோக்கி இட்டுச் செல்லக்கூடியதாகவும் மாறலாம். அப்பொழுது நாம் பேசுவதற்கு எதுவும் எஞ்சியிருக்காது. கலை-இலக்கியவாதிகளும், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களும் இதை முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும்; சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றம் ஆகிய பிரச்சினைகளை அறிவியல்பூர்வமாக அணுகத் தொடங்க வேண்டும்.

ஒருவர் இறப்பதற்கு முன் அவருடைய உடல் சார்ந்த பிரச்சினைகளை, அறிகுறிகளை உணர்ந்துகொண்டு அந்த நபரைக் காப்பாற்றுவதே அறிவுடைமை. இறந்துவிட்ட பிறகு உயிர்கொடுக்கும் ஆற்றல் எப்போதுமே மனிதர்களிடம் இருந்தது கிடையாது. எதிர்காலத்திலும் அந்த வித்தை கைவரப்போவதில்லை.

உயிருடன் இருக்கப் போராடிக்கொண்டிருக்கும் பூவுலகு மரித்த பின்னரும், உயிரூட்டிவிட முடியாது என்பதே நிதர்சனம்!

குறிப்புகள்:

  1. உலகின் மாபெரும் பேரழிவை இலக்கியம் பேசுகிறதா?: சு. அருண் பிரசாத். இந்து தமிழ் திசை: 13 ஜூலை 2019.
  2. அபாயம்: ஜோஷ் வண்டேலூ; தமிழில்: என்.சிவராமன், க்ரியா: சென்னை. 2011

ஆதி

 

1 COMMENT

  1. காலத்திற்கேற்ற அருமையான கட்டுரை. உடல் இச்சைகள், மனித நகர்ச்சிகள் குறித்து அதிகமாக்க் கிலாகிக்கும் தமிழ் இலக்கியங்கள், கால நிலை மாற்றம். குறித்தும் வெப்பமாகிக் கொண்டுவரும் பூமிப்பந்தைக் குறித்தும் என்ன பேசியிருக்கின்றன என்பது கேள்விக்குறியே. இது போன்ற ஒரு மையக் கருத்தில் இம்மாதக் கனலியை கையில் எடுத்தக் குழுவினருக்கு முதலில் வாழ்த்துகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.