பனி சூழ் உலகு

The ultimate achievement of mankind would be, not just self-destruction, but the destruction of all life; the transformation of the living world into a dead planet – Ice p. 164

ப்போதும் நம்மிடையே இருந்துவரும் ஊழிக்காலக் கற்பனைகளை நாம் கண்ணுறும்போது எதனிடம் நாம் சரணடைவோம்?

அன்னா கவன் (1901-1968), ஹெராயின் அடிமையாக இருந்து மீட்கப்பட்டவர். அவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கும் அழிவு எவ்வளவு கொடுமையானதாக இருந்தாலும் அதன் சுவை நம்மை அடிமைப்படுத்துமென்று. நாம் அழிவை இரகசியமாக சிநேகிப்பவர்கள். அதனைத் தள்ளிப்போடுவதில் சலிப்படைந்திருக்கிறோம். நமது உடல்களின் மையக் கூட்டிற்குள் யுகங்களாகச் சிறைபட்டிருக்கும் பறவைகள் வெளியேறத் துடிக்கின்றன. நாம் பொறுமையற்றிருக்கிறோம்.

வெள்ளியிழைக் கூந்தலுடைய (ஏறக்குறைய snow white) ஒரு பெண், அவளை ஒரு பண்டமாகக் கையாளும் அவளது கணவன், அவளை அடிமையாக நடத்தும் ஒரு போர்ப்பிரபு, இவர்கள் இருவரிடமிருந்தும் அவளை மீட்பதாகச் சொல்லும் ஒருபோதும் வாக்களித்தபடி நடந்திராத அவளது காதலன் என இந்நாவலின் நான்கே நான்கு கதைமாந்தர்களும் பெயர் வழங்கப்படாதவர்கள். ஆகவே நம்மை அவர்களின் ஆடைகளுள் நுழைத்துக் கொள்வதற்கு இடமளிப்பவர்கள். வடதுருவப் பனி உருகி பாளம் பாளமாக கடலில் மிதந்து தன் மீது பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளியைக் கொண்டு உலகின் வடபகுதிக் காற்றில் தீ வைக்கிறது.

பறவைகள், விலங்குகள் மனிதர்கள் என எல்லோரும் செய்வதறியாது அரசும், தெய்வமும், சமூகமும் கைவிட்டுவிட்ட ஓர் உலகில் வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர்கிறார்கள். அவர்களுடைய ஒரே நம்பிக்கை இந்த இடத்தை விடவும் மற்றொரு இடம் பனி சூழ்ந்திராமல், இறந்த பறவைகளின் உடல்கள் கருகி நிற்கும் மரக்கிளைகளில் சிக்கியிருக்கும் காடுகளற்ற ஓரிடமாக அது இருக்கலாம் என்பதே.

அன்னா கவன் எழுதுகிறார்:

`செய்திகளைத் தணிக்கை செய்யும் அரசு, மக்கள் வெளியேறுவதை அனுமதிக்கிறதென்று`. அரசுகள் என்ன செய்வதென்று மலங்க மலங்க விழிக்கின்றன. உள்நாட்டு யுத்தம் ஆங்கங்கே நடக்கிறது. முறையற்ற இராணுவங்கள் தங்களது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் உணவு, நீர், நடமாட்டம், போக்குவரத்து என அனைத்தையும் கட்டுப்படுத்துகின்றன. மின்சாரமற்ற இடங்களில், கட்டிட இடிபாடுகளுக்கு இடையே, எஞ்சியிருக்கும் மனிதர்கள் எலிகளைப் போல வசிக்கிறார்கள்.

சூழல் அழிவின் மாபெரும் பாதிப்பு பெண்களுக்கும், குழந்தைகளுக்குமே. போர், பஞ்சம் என எதுவாயினும் அவர்களே பெருமளவு பாதிப்படைகிறார்கள். வெள்ளியிழைக் கூந்தலுடைய பெண் ஆணின் எடையினால் அழுத்தமடைந்து உடல்வற்றிப் போய் ஒளி ஊடுருவக் கூடியவளாகத் தேய்ந்து கிடக்கிறாள். தேவதேவனின் மொழியில் சொன்னால், இவ்வுலகே அவளது உடல் அல்லவா!

இருவேறு மண்டிலங்களின் இயல்பு திரிந்த அன்னா கவனின் உலகைக் காட்டிலும், தாந்தேவின் நரகமும் கொடுமையானதாக இல்லை. அங்கே ஒருபோதும், சருகுகளும் நீங்கிய மரங்களின் அனல் மூச்சில் கருகும் பறவைகளின் இறந்த உடல்கள், வலை பின்னியிருக்கும் கிளைகளின் நடுவே தொங்குவதில்லை. பனி ஊழின் வெண்ணிறத்தையும், அழியும் காடுகளின் கரிய நிறத்தையும், தாவரங்களற்ற நகரங்களின் இடிபாடுகளையும் இவ்வளவு துல்லியமாகச் சொல்லியிருக்கும் அன்னா கவன், பனி நாவலை ஹெராயினின் ஆக்கிரமிப்பில் எழுதியிருக்கவில்லை. பனிப்போரின் உச்சத்தில் உலகின் வடபகுதி நாடுகள் அணுவெடிப்பை அஞ்சி நடுங்கிய அந்நாட்களில் அன்னா கவன் இன்னும் சில மைல்கள் முன்னே சென்றே அணுவெடிப்போடு, பனிப்பாளங்கள் வெடிப்பையும் கண்டு எழுதுகிறாள், ஒவ்வொரு சொல்லிலும் சாவைச் சுமக்கும் இந்நாவலை.

ஒழுங்கு குலையும் காலநிலை, சுழற்சி பிறழும் பருவகாலத்தில் காலமும் திணையும் அற்றுப் போகின்றன. பிறப்பும் இறப்பும் ஒரு புதிய தன்மையைத் தோற்றுவிக்கின்றன. முன்னதில் நாம் வாழ்வின் மீது நம்பிக்கையுறுகிறோம். நான் வசிக்கும் பகுதியில் சரியாக நவம்பர் இரண்டாம் வாரத்தில் இளஞ்சிவப்பு நிற மலர்களாகவே தன்னை உருமாற்றிக் கொள்ளும் மரங்கள் (pink poui) இருக்கின்றன. இளவேனிலில் பூக்கும் மஞ்சள் கொன்றை, சரக் கொன்றைகளும், இளவேனிலின் நிறமே மஞ்சள்தான். என்றாவது ஒரு நவம்பர் மாதத்தில் இளஞ்சிவுப்பு மலர்களும், இளவேனிலில் கொன்றைகளும் மலராமல் போனால் நாம் பருவகாலங்களுக்காகக் காத்திருக்கத் தேவையில்லை. கையிருப்பிலிருக்கும் கடைசிப் பணத்தையும் சூதாட்டத்தில் பந்தையம் வைக்கலாம். சூதாட்ட விடுதியிலிருந்து வெளியே வரும்போது நாம் பெல்லா தாரின் (Bella Tarr) டூரின் குதிரைத் திரைப்பட நிலத்திலே இருப்பதைக் காண்போம்.

The race was dying, the collective death-wish, the fatal impulse to self-destruction, though perhaps human life might survive – Ice p.142

இந்த நாவல் எனக்கு எந்த வித ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை. இந்நாவல் சமீப காலமாக, குறிப்பாக காலநிலை மாற்றம், சூழல் அழிவைப் பற்றி விவாதிக்கும் குழுக்களிடையே பேசப்படுகிறது. எனக்கு ஏன் இந்நாவல் ஆச்சரியமளிக்கவில்லை என்றால், நான் பிறந்த ஊரில் முப்பதாண்டுகளுக்கு முன்பு நிலவிய மிதமான தட்பவெப்பநிலை மாற்றமடைந்து எந்நாளும் கோடையைப் போலிருக்கிறது. கண்முன்னே கண்ட நீர் மறைந்துவிட்டது. பனிக்காற்று, மூக்கை வறண்டு போகச் செய்து சுவாசிப்பதை கத்தியால் அறுபடும் அனுபவமாக மாற்றும். வெய்யிலைப் பற்றி நாம் புதிதாக ஒன்றும் சொல்லத் தேவையிருக்கவில்லை. ஆயினும் நாம் நமது எதிர்காலத்தின் பளபளப்பின் மீது மையலுற்று இருக்கிறோம். மனிதர்களால் தொழில்நுட்பத்தின் உதவியோடு அனைத்தையும் கடந்துபோக முடியுமென்று விவாதிக்கிறோம். காலநிலை மாற்றத்தை, சூழலியல் அழிவைப் பற்றிப் பேசுபவர்களை நாம் நவஇடதுசாரிகள் என்று ஒதுக்குகிறோம். ஆனால் நாம் மெதுவாக இறந்து கொண்டிருக்கிறோம். மூலதனத்தின் மாபெரும் பாய்ச்சலில் மனித ஆன்மாவின் வீழ்ச்சியை நவீன இலக்கியம் பேசினால், இன்றோ இலக்கியம் மனித உயிரனத்தின் அழிவையும், உயிர்க்கோளத்தின் நெருக்கடியையும் பேசுகிற இடத்தில் நிற்கிறது.

ஆனாலும், நாம் சூழலியல் படைப்புகளில் அக்கறையற்று இருக்கிறோம். அவை அனைத்தும் ஒன்றையே சொல்கின்றன. பேசுவதையே திரும்பப் பேசுகின்றன என சலித்துக் கொள்கிறோம். இந்தச் சலிப்பு அவநம்பிக்கையின் வெளிப்பாடு. அழிவின் தவர்க்கவியலாமையை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதின் வெளிப்பாடு. இலக்கியத்திலிருந்து ஒருபோதும் செயல்திட்டம் உருவாகாது. இலக்கியத்திலிருந்து உளச்சான்று ஒன்று உருப்பெறும். அது நம்மிடம் உண்மையைப் பேசும். அன்னா கவனின் பனி அவ்வாறுதான் உண்மையைப் பேசுகிறது.

I got the impression that birds and animals were seeking us out for protection against the unknown danger we had unloosed – Ice p.102

நம்மிடம் பேசுவதற்கு பறவைகளிடமும், விலங்குகளிடமும், தாவரங்களிடமும் மொழியில்லை. அவற்றின் உயிர்ப்பும், பெருக்கமுமே அவை நம்மோடு பேசும் சங்கேதங்கள். நாம் இப்போது அவற்றின் சங்கேதங்கள் உரத்து ஒலிக்கும் ஒரு சூழலைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறோம். ஆனால் அதற்கு பொறுப்பு ஏற்க மறுக்கிறோம். கூடவே யார் பொறுப்பு ஏற்பதென்று சுட்டு விரலை நீட்டுகின்றோம். இனி புவிக்கோளத்தில் என்ன நடந்தாலும் மனிதர்கள் மட்டுமே பொறுப்பு. அனைத்தையும் மெதுவாக அழிப்பதில் எவ்வளவு ஆனந்தம். ஆக்கத்தின் அழகிலே சலிப்படைந்து, அழிவின் வசீகரத்தில் வாய் பிளந்திருக்கிறோம். அப்படியொரு வசீகரத்தை நமக்கு வழங்கிய அன்னா கவன், பனி சூழ் உலகின் வருகையை முன்னறிந்து சொன்ன ஒரு தீர்க்கதரிசியாக தான் மறுவாழ்வு முகாமில் கண்ட கனவாகவே இந்நாவலைப் படைத்தாள். நாம் ஒரு கொடுங்கனவிலிருந்து கண்விழிக்க கைகால்களை அசைத்து காற்றோடு சண்டையிடுகிறோம்.


பாலசுப்ரமணியன் பொன்ராஜ் – எழுத்தாளர்; கனவு மிருகம், துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.