கொலைகாரர்கள்.

ஹென்றி மதிய உணவகத்தின் கதவைத் திறந்துகொண்டு இரண்டு ஆடவர்கள் உள்ளே வந்தார்கள். உணவு வைக்கின்ற மேடைக்கு அருகில் அமர்ந்தார்கள்.

“என்ன சாப்பிடுகிறீர்கள்?” அவர்களிடம் ஜார்ஜ் கேட்டார்.

“தெரியவில்லை,” அவர்களில் ஒருவர் சொன்னார். “அல்! சாப்பிடுவதற்கு உங்களுக்கு என்ன வேண்டும்?”

“தெரியவில்லை. என்ன சாப்பிடுவது என்று தெரியவில்லை,” என்றார் அல்.

வெளியே இருட்டத் தொடங்கியது. வெளியில் இருந்த சன்னல் வழியாக தெரு விளக்கின் வெளிச்சம் உள்ளே வந்தது. உணவு வைக்கின்ற மேடைக்கு அருகில் அமர்ந்திருந்த இருவரும் உணவுப்பட்டியலை வாசித்தார்கள். மேடைக்கு மறுமுனையில் இருந்த நிக் ஆடம்ஸ் இவர்களைக் கவனித்தார். இந்த இருவரும் உள்ளே நுழைந்தபோதே ஜார்ஜோடு நிக் பேசிக்கொண்டிருந்தார்.

“எனக்கு, ஆப்பிள் குழம்புடன் கூடிய பொறித்த பன்றி இறைச்சியும், பிசைந்த உருளைக்கிழங்கும் வேண்டும்,” முதலாமவர் சொன்னார்.

“அது இன்னும் தயாராகவில்லை.”

“நாசமாப்போக! அப்புறம் எதுக்கு அட்டையில் குறிப்பிட்டுள்ளீர்கள்?”

“அது இரவு உணவுக்கானது. உங்களுக்கு அது ஆறு மணிக்கு கிடைக்கும்,” ஜார்ஜ் விளக்கினார்.

மேடைக்குப் பின்னால் சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார்த்த ஜார்ஜ், “இப்போது மணி ஐந்து” என்றார்.

“கடிகாரம் ஐந்து இருபது என்று காட்டுகிறது,” இரண்டாமவர் சொன்னார்.

“அது இருபது நிமிடங்கள் வேகமாகச் செல்கிறது.”

“ஓ! கடிகாரம் நாசமாப்போக! சாப்பிட உங்களிடம் என்னதான் இருக்கிறது?” முதலாமவர் கேட்டார்.

நீங்கள் விரும்புகிற எந்த சான்விட்ஜ் வேண்டுமென்றாலும் கிடைக்கும். பன்றி தொடைக்கறியும் முட்டையும், பன்றியின் வயிற்றுக் கறியும் முட்டையும், கல்லீரலும் பன்றியின் வயிற்றுக் கறியும் அல்லது மாட்டுக்கறி.”

“எனக்கு பச்சைப் பட்டாணி, நசுக்கிய உருளைக்கிழங்கு, கெட்டியான குழம்புடன் கூடிய சிக்கன் குரோகெட்ஸ்.”

“அது, இரவு உணவுக்கானது.”

“நாங்கள் விரும்புவது எல்லாமே இரவு உணவுக்குத்தான் கிடைக்குமா? இப்படிதான் பதில் சொல்வீர்களா?”

“பன்றித் தொடைக்கறியும் முட்டையும், பன்றியின் வயிற்றுக் கறியும் முட்டையும், கல்லீரலும் …. என்னால் தரமுடியும்”

“நான் பன்றித் தொடைக்கறியும் முட்டையும் சாப்பிடுகிறேன்,” அல் எனப்படும் மனிதர் சொன்னார். அவர் டெர்பி தொப்பியும், கருப்பு மேலங்கியும் அணிந்திருந்தார். மேலங்கியில் நெஞ்சுக்கு குறுக்கே பித்தான் மாட்டியிருந்தார். அவருடைய சிறிய முகம் வெள்ளையாகவும், உதடுகள் இறுக்கமாகவும் இருந்தன. பட்டு மஃப்ளரும் கையுறையும் அணிந்திருந்தார்.

“எனக்கு, பன்றியின் வயிற்றுக் கறியும் முட்டையும்” கொடுங்கள்,” மற்றவர் குறிப்பிட்டார். ஏறக்குறைய அல் போலவே இவரும் உடல் அளவில் ஒரே மாதிரி இருந்தார். இருவரின் முகங்களில் வேறுபாடு இருந்தாலும், இரட்டையர்கள் போலவே உடை உடுத்தியிருந்தார்கள். இருவரும் இறுக்கமான மேலாடை அணிந்திருந்தார்கள். உணவு வைக்கின்ற மேடையில் முழங்கையை ஊன்றி முன்னே சாய்ந்தபடி அமர்ந்திருந்தார்கள்.

“குடிக்க ஏதாவது இருக்கிறதா?” அல் கேட்டார்.

“சில்வர் பியர், பெவோ, ஜிஞ்சர் ஏல்,”[1] ஜார்ஜ் சொன்னார்.

“குடிப்பதற்கு ஏதாவது இருக்கிறதா என நான் கேட்டேன்?”

“நான் சொன்னவை மட்டும்தான் உள்ளன.”

“இந்த நகரம் மிகவும் சூடாக உள்ளது. இதன் பெயர் என்ன?” மற்றவர் கேட்டார்.

“சம்மிட்.”

“எப்போதாவது இந்நகரத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” அல் தன் நண்பரிடம் கேட்டார்.

“இல்லை,” என்றார் நண்பர்

“இராத்திரியில் அவர்கள் இங்கே என்ன செய்கிறார்கள்?” அல் கேட்டார்.

“அவர்கள் இரவு உணவு சாப்பிட வந்திருக்கிறார்கள்,” அல் என்பவரின் நண்பர் சொன்னார். “இரவில் கவலை மறந்து பொறுமையாக சாப்பிடுவதற்காக எல்லாரும் இங்கே வந்துள்ளார்கள்.”

“நீங்கள் சொல்வது சரி,” என்றார் ஜார்ஜ்.

“அப்படியென்றால், அதுதான் காரணம் என்று நீங்கள் சொல்கிறீர்களா?”ஜார்ஜிடம் அல் கேட்டார்.

“நிச்சயமாக.”

“நீங்கள் மிகவும் புத்திசாலி. அப்படித்தானே?”

“நிச்சயமாக,” ஜார்ஜ் சொன்னார்.

“இல்லை… நீங்கள் நினைப்பது போல் இல்லை,” என்று கூறிய மற்றொரு மனிதர், “இவர் புத்திசாலியா, அல்?” என்று கேட்டார்.

“அவன் முட்டாள்,” என்று சொன்ன அல், நிக் பக்கமாகத் திரும்பி, “உங்களுடைய பெயர் என்ன?” என்று கேட்டார்.

“ஆடம்ஸ்.”

“மற்றொரு புத்திசாலி பையன்,” என்ற அல், “இவர் புத்திசாலி இல்லையா மாக்ஸ்?” என கேட்டார்.

“இந்த நகரம் முழுவதும் புத்திசாலி பையன்கள்தான் இருக்கிறார்கள்,” என்றார் மாக்ஸ்.

ஒரு தட்டில் பன்றி தொடைக்கறியும் முட்டையும் மற்றொரு தட்டில் பன்றியின் வயிற்றுக் கறியும் முட்டையும் கொண்டு வந்த ஜார்ஜ், உணவு வைக்கின்ற மேடையின் மேல் வைத்தார் . கூடுதலாக, இரண்டு தட்டுகளில் வறுத்த உருளைக்கிழங்கையும் வைத்துவிட்டு சமையலறைக் கதவை மூடினார்.

“உங்களுடைய சாப்பாடு எது?” ஜார்ஜ் கேட்டார்.

“ஏன், உங்களுக்கு ஞாபகம் இல்லையா?”

“பன்றி தொடைக்கறியும் முட்டையும்.”

“புத்திசாலிப் பையன்தான்,” என்ற மாக்ஸ், முன்னோக்கிச் சரிந்து பன்றி தொடைக்கறியும் முட்டையும் உள்ள தட்டை எடுத்தார். அணிந்துள்ள கையுறைகளுடனேயே இருவரும் சாப்பிட்டார்கள். அவர்கள் சாப்பிடுவதை ஜார்ஜ் பார்த்துக்கொண்டிருந்தார்.

“எதைப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்?” ஜார்ஜை நோக்கி மாக்ஸ் கேட்டார்.

“ஒன்றுமில்லை.”

“நாசமாகப் போக! நீங்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தீர்கள்.”

“ஏய், மாக்ஸ்! ஒருவேளை சும்மா ஜாலியா பார்த்திருப்பார்,” என்றார் அல்.

ஜார்ஜ் சிரித்தார்.

“நீங்கள் சிரிக்கத் தேவையில்லை,” என்ற மாக்ஸ், “நீங்கள் சிரிக்கவே கூடாது, புரிகிறதா?” என்றார்.

“ம்… சரி” என்றார் ஜார்ஜ்.

“அப்படியென்றால், அது சரி என்று அவர் யோசிக்கிறார்.” அல் பக்கமாகத் திரும்பிய மாக்ஸ், “அது சரி என்று அவர் யோசிக்கிறார். அதுவும் நல்லாருக்கு,” என்றார்.

“ஓ! அவர் யோசிக்கிறவர்,” என்றார் அல். அவர்கள் தொடர்ந்து சாப்பிட்டார்கள்.

“மேடைக்கு அந்தப்பக்கமாக இருக்கிற புத்திசாலி பையனுடைய பெயர் என்ன?” அல், மாக்ஸிடம் கேட்டார்.

“ஏய், புத்திசாலிப் பையா,” நிக்கை நோக்கி கூப்பிட்ட மாக்ஸ், “சுற்றி மேடைக்கு அந்தப் பக்கமாகச் சென்று உங்கள் நண்பரோடு சேர்ந்து நில்லுங்கள்.”

“எதற்காக?” நிக் கேட்டார்.

“ஒரு காரணமும் இல்லை.”

“புத்திசாலிப் பையா, நீங்கள் சுற்றி அந்தப் பக்கம் போவது நல்லது,” அல் சொன்னார். மேடையைச் சுற்றி பின்பக்கமாகச் சென்றார் நிக்.

“என்ன காரணம்?” ஜார்ஜ் கேட்டார்.

“அது உங்களுக்குத் தேவையில்லாதது. சமையலறைக்குள் யார் இருக்கா?” அல் கேட்டார்.

“நீக்ரோ.”

“நீக்ரோ என்றால்….?”

“நீக்ரோ, சமையல்காரர்.”

“அவரை வெளியே வரச்சொல்லுங்கள்.”

“என்ன காரணத்துக்காக?”

“அவரை வெளியே வரச்சொல்லுங்கள்.”

“நீங்கள் எங்கே இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?”

“நாங்கள் எங்கே இருக்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியும் டா. என்ன, எங்களைப் பார்த்தால் முட்டாள் மாதிரி தெரிகிறதா?” மாக்ஸ் கேட்டார்.

“நீங்கள் முட்டாள்தனமாகப் பேசுகிறீர்கள். எதற்காக இந்தக் குழந்தையிடம் வாக்குவாதம் செய்கிறீர்கள்?” என்று சொன்ன அல், ஜார்ஜைப் பார்த்து, “கவனியுங்கள், அந்த நீக்ரோவை இங்கே வரச் சொல்லுங்கள்,” என்றார்.

“அவரை என்ன செய்யப் போகிறீர்கள்?”

“ஒன்றுமில்லை. உங்கள் மூளையைப் பயன்படுத்துங்கள், புத்திசாலி பையா. நீக்ரோவுக்கு நாங்கள் என்ன செய்துவிடுவோம்?”

பின்னால் இருந்த சமையலறைக்குச் செல்வதற்காக, கொஞ்சமாக விலகி இருந்த கதவைத் திறந்த ஜார்ஜ், “சாம், ஒரு நிமிடம் இங்கே வாருங்கள்,” என்று கூப்பிட்டார்.

சமையலறை கதவு திறந்ததும், அந்த நீக்ரோ உள்ளே வந்தார். “என்ன ஆச்சு?” என்று கேட்டார். மேடைக்கு அருகில் இருந்த இருவரும் நீக்ரோவைப் பார்த்தார்கள்.

“சரி! நீக்ரோ, நீங்கள் அங்கேயே நில்லுங்கள்,” என்றார் அல்.

சமைக்கும்போது உடலில் கரைபடாமல் இருக்க அணிந்திருக்கும் மேலாடையுடன் நின்ற சாம் எனப்படும் நீக்ரோ,  மேடைக்கு அருகில் அமர்ந்திருந்த இருவரையும் பார்த்தார். “சரிங்க ஐயா” என்றார். அல் தன் இருக்கையில் இருந்து எழுந்தார்.

“நீக்ரோவுடனும், புத்திசாலிப் பையனுடனும் நான் சமையலறைக்குள் திரும்பிச் செல்கிறேன்,” என்றார் அல். “நீக்ரோ, உள்ளே சமையலறைக்குள் போங்கள். புத்திசாலி பையனே நீங்களும் அவருடன் சேர்ந்து போங்கள்.” சமையல்காரரான சாம் மற்றும் நிக் இருவரையும் பின்தொடர்ந்து பின்னால் உள்ள சமையலறைக்கு அல் சென்றார். அவர்கள் சென்றதும் கதவு அடைக்கப்பட்டது. மாக்ஸ் எனப்படும் மனிதர், ஜார்ஜ்-க்கு எதிரே மேடைக்கு அருகில் அமர்ந்திருந்தார். அவர், ஜார்ஜை பார்க்கவில்லை, மாறாக, முகம் பார்க்கும் கண்ணாடியில் தனக்குப் பின்னால் என்ன நிகழ்கிறது என்பதைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஹென்றி உணவகமானது, முன்பு முடிதிருத்தும் கடையாக இருந்து பிறகு உணவகமாக மாறியதாகும்.

“நல்லது, புத்திசாலி பையா,” முகம் பார்க்கும் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டே சொன்ன மாக்ஸ், “ஏன் எதுவுமே பேசமாட்டேன் என்கிறீர்கள்?” என்றார்.

“இங்கே என்னதான் நடக்கிறது?”

“ஹேய், அல்! புத்திசாலிப் பையனுக்கு இங்கே என்ன நடக்கிறது என்பது தெரியனுமாம்.”

“நீங்களே ஏன் சொல்லக்கூடாது?” சமையலறையில் இருந்து அல்லின் குரல் வந்தது.

“இங்கே என்ன நடக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?”

“எனக்குத் தெரியவில்லை.”

“நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

தான் பேசும்போதெல்லாம் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டே இருந்தார் மாக்ஸ்.

“நான் சொல்ல மாட்டேன்.”

“ஹேய், அல்! என்ன நடக்கிறது என்பது குறித்து இந்த புத்திசாலிப் பையன் எதுவும் சொல்ல மாட்டாராம்.”

“நீங்கள் சொல்வது எனக்குக் கேட்கிறது.” சமையலறையில் இருந்து அல் பதில் சொன்னார். தக்காளி சாஸ் போன்று போத்தல்களில் அடைக்கப்பட்டப் பொருட்களையும், உணவுகளையும் எடுத்து வருகின்ற பாதையில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த தட்டியைத் திறந்தார். உள்ளிருந்தபடியே, ஜார்ஜிடம், “சரி, புத்திசாலி பையனே, கவனியுங்கள். அந்தத் தடுப்புக்கு கொஞ்சம் தள்ளி நில்லுங்கள். மாக்ஸ், நீங்கள் கொஞ்சம் இடது பக்கம் தள்ளி நில்லுங்கள்.” ஒரு குழுவைப் படம் எடுக்கப்போகும் ஒளிப்படக் கலைஞர்போல ஒழுங்குசெய்தார்.

“புத்திசாலி பையனே, என்னிடம் பேசுங்கள். என்ன நடக்கப்போகிறது என நீங்கள் நினைக்கிறீர்கள்?”

ஜார்ஜ் எதுவும் சொல்லவில்லை.

“நானே சொல்கிறேன்,” என்ற மாக்ஸ், “ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஒருவரை நாங்கள் கொலை செய்யப் போகிறோம். குண்டான, ஸ்வீடிஸ் பெயர் உள்ள, ஓலே ஆண்டர்சன் பற்றி உங்களுக்குத் தெரியுமா?” எனக் கேட்டார்.

“ஆமாம்.”

“சாப்பிடுவதற்கு தினமும் இரவு அவர் இங்கு வருவார், அப்படித்தானே?”

“சிலநேரங்களில் அவர் இங்கே வருவார்.”

“அவர் இங்கு ஆறு மணிக்கு வருவார். அப்படித்தானே?”

“ஒருவேளை வந்தால்.”

“புத்திசாலிப் பையனே, எங்களுக்கு எல்லாம் தெரியும்.” மாக்ஸ் சொன்னார். “வேறு எதைப் பற்றியாவது பேசுங்கள். படம் பார்க்கவெல்லாம் எப்போதாவது போயிருக்கிறீர்களா?”.

“எப்போதாவது.”

“நீங்கள் படம் பார்க்க அடிக்கடிச் செல்ல வேண்டும். உங்களை மாதிரி புத்திசாலிப் பையன்கள் படத்துக்குப் போகலாம்.”

“எதற்காக ஓலே ஆண்டர்சனை கொல்லப் போகிறீர்கள்? அவர் உங்களை என்னதான் செய்தார்?”

“எங்களை எதுவும் செய்வதற்கான வாய்ப்பு ஒருபோதும் அவருக்கு வாய்த்ததில்லை. எங்களை அவர் ஒருபோதும் பார்த்ததும் இல்லை.”

“மேலும், அவர் ஒருமுறைதான் எங்களைப் பார்க்கப் போகிறார்” சமையலறையின் உள்ளிருந்து அல் சொன்னார்.

“பிறகு, எதற்காக அவரைக் கொல்லப் போகிறீர்கள்?” ஜார்ஜ் கேட்டார்.

“ஒரு நண்பருக்காக நாங்கள் அவரைக் கொல்லப் போகிறோம். நண்பர் சொன்னார் என்பதற்காக. அவ்வளவுதான், புத்திசாலிப் பையா.”

“வாயை மூடுங்கள்,” சமையலறையில் இருந்து அல் கத்தினார். “நீங்கள் ரொம்ப அதிகமாகப் பேசுகிறீர்கள்.”

“சரி! புத்திசாலி பையன் மகிழ்ச்சியாக இருக்கட்டுமே என்று நினைத்தேன். அப்படித்தானே புத்திசாலி பையா?”

“நீங்கள் ரொம்ப பேசுகிறீர்கள்,” அல் சொன்னார். “நீக்ரோவும் இந்தப் புத்திசாலி பையனும் தங்களை நினைத்தே மகிழ்ந்துபோய் இருக்கிறார்கள். மடங்களில் உள்ள சில பெண் தோழிகளைப் போல இவர்கள் இருவரையும் ஒன்றாகக் கட்டி வைத்துள்ளேன்.”

“நீங்கள் மடத்தில் இருந்தீர்கள் என நினைக்கிறேன்.”

“உங்களுக்கு தெரியவே தெரியாது.”

“நீங்கள் கோஷர் மடத்தில் இருந்தீர்கள். ஆம், அங்கேதான் இருந்தீர்கள்.”

ஜார்ஜ் நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்த்தார்.

“யாராவது உள்ளே வந்தால், சமையல்காரர் விடுமுறை எடுத்துள்ளார் என சொல்லுங்கள். அதன்பிறகும்  அவர்கள் சாப்பிட விரும்பினால், நீங்களே சென்று சமைத்து தருவதாகச் சொல்லுங்கள். நான் சொல்வது புரிகிறதா, புத்திசாலி பையா?”

“புரிகிறது. சரி, அதன்பிறகு எங்களை என்ன செய்யப் போகிறீர்கள்?” ஜார்ஜ் கேட்டார்.

“அது அந்த நேரத்தைப் பொறுத்தது. இப்போதைக்கு நீங்கள் அறியாத விஷயங்களில் அதுவும் ஒன்று” மாக்ஸ் சொன்னார்.

ஜார்ஜ் நிமிர்ந்து மணியைப் பார்த்தார். 6.15. சாலை பக்கமாக இருந்து கதவு திறக்கப்பட்டது. டிராம் வண்டி ஓட்டுநர் உள்ளே வந்தார்.

“ஹலோ, ஜார்ஜ், எனக்கு உணவு கிடைக்குமா?” என்று கேட்டார்.

“சாம் வெளியே போய்விட்டார். ஒரு அரைமணிநேரத்தில் வந்துவிடுவார்,” என்றார் ஜார்ஜ்.

“சரி, நான் சாலையோர கடைக்கே போகிறேன்,” டிராம் வண்டி ஓட்டுநர் சொன்னார். ஜார்ஜ் கடிகாரத்தைப் பார்த்தார், மணி 6.20.

“சிறப்பாக பதில் சொன்னீர்கள் புத்திசாலி பையா! நீங்கள் பெரியமனிதர் போல நடந்துகொண்டீர்கள்,” என்றார் மாக்ஸ்.

“அவருடைய தலையை நான் சுக்குநூறாக்கி விடுவேன் என்பது அவருக்குத் தெரியும்,” சமையலறையில் இருந்து அல் சொன்னார்.

“இல்லை, அப்படியெல்லாம் இல்லை,” என்ற மாக்ஸ், “இந்த புத்திசாலி பையன் நல்லவர். இவர் நல்ல பையன். எனக்கு இவரைப் பிடித்திருக்கிறது,” என்றார்.

6.55 மணிக்கு, ஜார்ஜ் சொன்னார், “அவர் வரவில்லை.”

இன்னும் இருவர் கடைக்குள் இருந்தார்கள். பன்றி தொடைக்கறியும் முட்டையும் உள்ள சான்விட்ஜ் தயாரிக்க ஜார்ஜ் சமையலறைக்குள் சென்ற பிறகு, “எடுத்துச் செல்ல” பொட்டலம் கட்டி எடுத்துப் போக என சொன்னார். சமையலறைக்குள், டெர்பி தொப்பி பின்னால் தொங்கிக்கொண்டிருக்க, வாயிலுக்கு அருகே நாற்காலியில் அல் அமர்ந்திருந்தார். முகவாய் விலக்கப்பட்ட சிறு துப்பாக்கியானது ஓரத்தில் இருந்தது. நிக்கும் சமையல்காரரும் முதுகோடு முகுது ஒட்டிக்கொண்டு மூலையில் இருந்தனர். அவர்களின் வாய் துண்டால் கட்டப்பட்டிருந்தது. ஜார்ஜ் சான்விட்ஜ் தயார் செய்து, எண்ணெய் தடவிய தாளில் சுற்றி ஒரு பையில் வைத்து கொண்டுவந்தார். அதற்கான பணத்தைக் கொடுத்துவிட்டு அம்மனிதர் வாங்கிச் சென்றார்.

“புத்திசாலி பையனால் எல்லா வேலையும் செய்ய முடிகிறது,” மாக்ஸ் சொன்னார். “அவருக்கு சமைக்கவும் தெரிகிறது மற்ற எல்லா வேலைகளும் தெரிகிறது. உன்னால், ஒரு பெண்ணை நல்ல மனைவியாக வைத்துக்கொள்ள முடியும் புத்திசாலி பையா.”

“அப்படியா?” என்றார் ஜார்ஜ். “உங்கள் நண்பர் ஓலே ஆண்டர்சன் வருவதாகத் தெரியவில்லை.”

“பத்து நிமிடம் காத்திருப்போம்,” என்றார் மாக்ஸ்.

கண்ணாடியையும், கடிகாரத்தையும் மாக்ஸ் பார்த்தார். கடிகார முள் ஏழு மணியைக் காட்டியது, பிறகு 7.05 காட்டியது.

“அல், வா போகலாம், அந்த நபர் வருவதுபோல் தெரியவில்லை,” என்றார் மாக்ஸ்.

“இன்னும் ஐந்து நிமிடங்கள் காத்திருக்கலாம்,” சமையலறையில் இருந்து அல் சொன்னார்.

இந்த ஐந்து நிமிடங்களில் ஒரு நபர் உள்ளே வந்தார், சமைக்கிறவருக்கு உடல்நிலை சரியில்லை என அவரிடம் ஜார்ஜ் சொன்னார்.

“என்ன கொடுமை இது! வேறு ஒரு சமையல்காரரைப் பார்க்க வேண்டியதுதானே? மதிய உணவுக் கடைதானே நடத்துகிறீர்கள்?” கேள்வி கேட்டுவிட்டு அம்மனிதர் வெளியேறினார்.

“அல், வெளியே வா,” மாக்ஸ் கூப்பிட்டார்.

“இந்த இரண்டு புத்திசாலி பையன்களையும் நீக்ரோவையும் என்ன செய்வது?”

“அவர்கள் ஒன்றும் பிரச்சனை இல்லை.”

“அப்படியா நினைக்கிறீர்கள்?”

“ஆமாம்! உறுதியாகத்தான் சொல்கிறேன்.”

“எனக்குப் பிடிக்கவில்லை. இது சரியில்லை. நீங்கள் ரொம்ப பேசுகிறீர்கள்,” என்றார் அல்.

“ஓ! என்னே கொடுமை!” என்ற மாக்ஸ், “நாங்கள் ஜாலியாகவே இருந்தோம், அப்படித்தானே?” என கேட்டார்.

“இது எல்லாவற்றையும்விட, நீங்கள் அதிகமாக பேசுகிறீர்கள்,” என்று சொல்லியபடி சமையலறையில் இருந்து அல் வெளியே வந்தார். உறையில் போடப்பட்ட சிறு துப்பாக்கி, இடுப்புக்குக் கீழே மிகவும் இறுக்கமான அவரது மேலாடையில் சிறிது உப்பித் தெரிந்தது. கையுறை அணிந்தபடியே மேலாடையை இழுத்து நேராக்கினார்.

“நல்லா இரு புத்திசாலி பையா, உனக்கு அதிர்ஷ்டம் நிறைய இருக்கிறது,” ஜார்ஜிடம் அவர் சொன்னார்.

“அது உண்மைதான்,” என்றார் மாக்ஸ். “பந்தயங்களில் கண்டிப்பாக நீங்கள் விளையாட வேண்டும் புத்திசாலி பையா.”

இருவரும் அங்கிருந்து வெளியேறினர். அவர்கள் தெருவிளக்கின் கீழே சாலையைக் கடந்து செல்வதை சன்னல் வழியாக ஜார்ஜ் பார்த்தார். இறுக்கமான மேலாடைகள் மற்றும் டெர்பி தொப்பிகள் அணிந்து வாட்வில் அணியினர் (Vaudeville Team) போலவே இருந்தார்கள். ஆடிக்கொண்டிருந்த சமையலறை கதவு வழியாகத் திரும்பிச் சென்று நிக் மற்றும் சமையல்காரரின் கட்டுக்களை ஜார்ஜ் அவிழ்த்தார்.

“எனக்கு இந்த வேலையே இனி வேண்டாம்,” சமையல்காரரான சாம் சொன்னார். “எனக்கு இந்த வேலையே இனிமேல் வேண்டாம்.”

நிக் உறைந்துபோய் நின்றார். இதற்குமுன் ஒருபோதும் அவரது வாயினுள் துண்டு இருந்ததே இல்லை.

“சொல்லுங்கள்,” அவர் கேட்டார். “என்ன கொடுமை இது?” தன்னை நல்லவர் போல காட்டிக்கொள்ள முயன்றார்.

“ஓலே ஆண்டர்சனை அவர்கள் கொலை செய்யப் போகிறார்கள்,”ஜார்ஜ் சொன்னார். “இங்கே அவர் சாப்பிட வரும்போது சுட்டுக் கொல்ல காத்திருந்தார்கள்.”

“ஓலே ஆண்டர்சன்?”

“ஆமாம்.”

தன் கட்டைவிரல்களை வாயின் ஓரங்களில் வைத்து சமையல்காரர் அழுத்தி பார்த்தார்.

“அவர்கள் எல்லாரும் போய்விட்டார்களா?” அவர் கேட்டார்.

“ஆமாம்! இப்போது போய்விட்டார்கள்,” என்றார் ஜார்ஜ்.

“எனக்கு இது பிடிக்கவில்லை,” என்றார் சமையல்காரர். “எனக்கு இது எதுவுமே பிடிக்கவில்லை.”

“கவனியுங்கள், நீங்கள் ஓலே ஆண்டர்சனைச் சென்று பார்ப்பது நல்லது,” ஜார்ஜ், நிக்கிடம் சொன்னார்.

“சரி.”

“இதைக் குறித்து நீங்கள் எதுவுமே செய்யாமல் இருப்பது நல்லது,” என்றார் சமையல்காரர். “இதை விட்டு விலகி இருப்பது சிறந்தது.”

“செல்வதற்கு விருப்பம் இல்லை என்றால் நீங்கள் செல்ல வேண்டாம்,” என்றார் ஜார்ஜ்.

“இதைப் போட்டுக் குழப்பிக்கொள்வதால் உங்களுக்கு ஒரு பயனும் விளையப் போவது இல்லை. இதைவிட்டு நீங்கள் விலகி நிற்பதே நல்லது,” என்றார் சமையல்காரர்.

“சரி, நான் போய் அவரைப் பார்க்கிறேன். அவர் எங்கே இருக்கிறார்?” ஜார்ஜிடம் நிக் கேட்டார்.

சமையல்காரருக்கு இதில் விருப்பம் இல்லை.

“தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் சின்ன பசங்க எப்போதுமே தெளிவாக இருக்கிறார்கள்,” என்றார்.

“ஹெர்ஸ் வாடகை விடுதியில் அவர் தங்கியிருக்கிறார்,” நிக்கிடம் ஜார்ஜ் சொன்னார்.

“சரி, நான் அங்கே போகிறேன்.”

வெளியே, மரத்தின் இலைகளற்ற கிளைகள் வழியாக தெருவிளக்கின் வெளிச்சம் தெரிந்தது. பந்தயத்துக்குப் பயன்படுத்தும் சாலை வழியாக நடந்த நிக், அடுத்த தெருவிளக்குக்கு பக்கத்துத் தெருவில் திரும்பினார். அதே தெருவில் மூன்று வீடுகள் தள்ளி ஹெர்ஸ் வாடகை விடுதி இருக்கிறது. இரண்டு படி ஏறிய நிக், அழைப்பு மணியை அழுத்தினார். ஒரு பெண் கதவருகில் வந்தார்.

“ஓலே ஆண்டர்சன் இருக்கிறாரா?”

“நீங்கள் அவரைப் பார்க்க விரும்புகிறீர்களா?”

“ஆமாம், அவர் உள்ளே இருந்தால்….”

பெண்மணியைப் பின்பற்றி படியேறி, பின்பக்கமாக தாழ்வாரத்தின் கடைசிக்குச் சென்றார் நிக். அப்பெண்மணி கதவைத் தட்டினார்.

“யார் அது?”

“யாரோ ஒருவர், உங்களைப் பார்க்க வந்திருக்கிறார்,” அப்பெண்மணி சொன்னார்.

“என் பெயர் நிக் ஆடம்ஸ்.”

“உள்ளே வாங்க.”

கதவைத் திறந்துகொண்டு நிக் உள்ளே சென்றார். வெளியே செல்வதுபோல, எல்லா உடைகளையும் உடுத்திக்கொண்டு ஓலே ஆண்டர்சன் படுத்திருந்தார். மிகுஎடை (Heavyweight) குத்துச்சண்டை போட்டியில் பரிசுபெற்ற வீரரான ஆண்டர்சன், கட்டிலைவிட நீளமாக இருந்தார். இரண்டு தலையணைகள் மீது தலையை வைத்திருந்தார். அவர் நிக்கை பார்க்கவில்லை.

“என்ன விசயம்?”

நிக் சொன்னார், “நான் ஹென்றி மதியஉணவகத்தில் இருந்தேன். இரண்டுபேர் வந்து என்னையும் சமையல்காரரையும் கட்டிப்போட்டார்கள். பிறகு, உங்களைக் கொல்லப் போவதாகச் சொன்னார்கள்.”

நிக் சொன்னது, முட்டாள்தனமானதாகத் தெரிந்தது. எனவே ஓலே ஆண்டர்சன் எதுவும் சொல்லவில்லை.

“அவர்கள் எங்களை சமையலறைக்குள் அடைத்து வைத்தார்கள்,” நிக் தொடர்ந்து பேசினார். “நீங்கள் இரவு உணவுக்கு வரும்போது சுட்டுக்கொல்ல இருந்தார்கள்.”

ஓலே ஆண்டர்சன் சுவரைப் பார்த்தார். ஒன்றும் சொல்லவில்லை.

“இங்கு வந்து உங்களிடம் இதைப்பற்றி சொல்வது நல்லது என ஜார்ஜ் நினைத்தார்.”

“இதைக் குறித்து பேசுவதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை,” ஓலே ஆண்டர்சன் சொன்னார்.

“அவர்கள் என்ன மாதிரி இருந்தார்கள் என நான் சொல்கிறேன்.”

“அவர்கள் என்ன மாதிரி இருந்தார்கள் என அறிந்துகொள்ள நான் விரும்பவில்லை,” என்ற ஓலே ஆண்டர்சன், சுவரைப் பார்த்தார், “இதைக் குறித்து சொல்ல வந்ததற்கு நன்றி” என்றார்.

“அது, பரவாயில்லை.”

கட்டிலில் படுத்திருந்த பெரிய மனிதரை நிக் பார்த்தார்.

“நான் சென்று காவலரிடம் சொல்ல வேண்டாமா?”

“வேண்டாம்,” ஓலே ஆண்டர்சன் சொன்னார். “அதனால் ஒரு பயனும் இல்லை.”

“என்னால் செய்யக்கூடிய காரியம் ஏதாவது உள்ளதா?”

“இல்லை. செய்ய வேண்டியது எதுவும் இல்லை.”

“ஒருவேளை சும்மா பயமுறுத்துவதாக இருக்கலாம்.”

“இல்லை, பயமுறுத்துவதற்காக இல்லை.”

ஓலே ஆண்டர்சன் புரண்டு சுவர் பக்கம் பார்த்து படுத்தார்.

“ஒரே காரணம் என்னவென்றால்,” சுவரைப் பார்த்தபடியே அவர் சொன்னார், “வெளியே போக தோணவில்லை. அதனால் நாள் முழுவதும் இங்கேயே இருக்கிறேன்.”

“இந்த நகரை விட்டு உங்களால் போக இயலாதா?”

“இல்லை,” ஓலே ஆண்டர்சன் சொன்னார், “என்ன நடக்கிறது என்பது பற்றி எனக்கு எல்லாம் தெரியும்.”

அவர் சுவரைப் பார்த்தார்.

“இப்போதைக்கு செய்யக்கூடியது ஏதும் இல்லை.”

“ஏதாவது செய்து சரிசெய்ய இயலாதா?”

“இல்லை. நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டீர்கள்.” அதே சாதாரண தொணியில் பதில் சொன்னார். “வேலை எதுவும் இல்லை. சிறிது நேரங் கழித்து தோணுச்சு என்றால் வெளியில் செல்வேன்.”

“நான் திரும்பிச் சென்று ஜார்ஜை பார்ப்பது நல்லது,” என்றார் நிக்.

“இவ்வளவு தூரம் வந்ததற்கு நன்றி,” நிக்கை பார்க்காமலேயே ஓலே ஆண்டர்சன் சொன்னார்.

நிக் வெளியே வந்தார். கதவைச் சாத்தியபோது, எல்லா உடைகளையும் உடுத்தி, சுவரைப் பார்த்தபடி படுத்திருந்த ஓலா ஆண்டர்சனைப் பார்த்தார்.

“நாள் முழுவதும் அவர் இந்த அறையில்தான் இருக்கிறார்,” கீழே நின்ற வீட்டுப் பெண்மணி சொன்னார். “அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று நினைக்கிறேன். நான் அவரிடம் சொன்னேன்: ‘திரு.ஆண்டர்சன், இலையுதிர் காலத்தின் இதுபோன்ற அற்புதமான நாட்களில் நீங்கள் கட்டாயம் வெளியே நடந்து போக வேண்டும்’, ஆனால் அவருக்குப் போகத் தோணவில்லை.”

“வெளியே செல்ல அவர் விரும்பவில்லை.”

“மன்னித்துக்கொள்ளுங்கள், அவருக்குத் தோணவில்லை,” பெண் சொன்னார், “அவர் ரொம்ப நல்ல மனிதர். குத்துச்சண்டை வீரர், உங்களுக்குத் தெரியுமா?”

“ஆமாம், தெரியும்.”

“அவருடைய முகத்தைத் தவிர வேறு எந்த வழியினாலும் அவர் குத்துச்சண்டை வீரர் என்பதை உங்களால் கண்டுபிடிக்க இயலாது,” பெண் சொன்னார்.

வீதிக்கு இட்டுச் செல்லும் கதவுக்கு அருகில் நின்று இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். “அவர் மரியாதையுள்ள நற்குணம் மிக்க மனிதர்.”

“மகிழ்ச்சி. இரவு வணக்கம் திருமதி ஹெர்ஸ்,” என்றார் நிக்.

“என் பெயர் திருமதி ஹெர்ஸ் இல்லை, அது இந்த இடத்து முதலாளியின் பெயர். அவருக்குப் பதிலாக இந்த இடத்தை நான் பார்த்துக்கொள்கிறேன், அவ்வளவுதான். என் பெயர் திருமதி பெல்,” என்றார் அப்பெண்.

“மகிழ்ச்சி. இரவு வணக்கம் திருமதி பெல்,” என்றார் நிக்.

“இரவு வணக்கம்,” என்றார் அப்பெண்.

இருளான வீதியில் நடந்து தெருவிளக்கு இருந்த முக்கத்துக்கு வந்து, அங்கிருந்து பந்தயப் பாதையின் வழியே நடந்து ஹென்றி உணவகத்துக்கு நிக் திரும்பினார். உள்ளே, உணவு வைக்கின்ற மேடைக்குப் பின்னே ஜார்ஜ் இருந்தார்.

“ஓலே ஆண்டர்சனைப் பார்த்தீர்களா?”

“ஆமாம். அவரது அறையில் இருந்தார். அவர் வெளியே செல்லவே இல்லை,” என்றார் நிக்.

நிக்கின் குரலைக் கேட்ட சமையல்காரர், சமையலறையில் இருந்து கதவைத் திறந்தார்.

“இதைக் கேட்கக்கூட நான் விரும்பவில்லை,” என்று சொல்லிவிட்டு கதவை படாரென்று மூடினார்.

“நடந்ததைப் பற்றி அவரிடம் சொன்னீர்களா?” ஜார்ஜ் கேட்டார்.

“நிச்சயமாக! அவரிடம் சொன்னேன். ஆனால், அவருக்கு இது குறித்தெல்லாம் தெரிந்திருக்கிறது.”

“அவர் என்ன செய்யப் போகிறார்?”

“ஒன்றுமில்லை.”

“அவர்கள் அவரைக் கொன்றுவிடுவார்கள்.”

“அப்படித்தான் நான் நினைக்கிறேன்.”

“சிகாகோவில் ஏதோ பிரச்சனையில் சிக்கிக்கொண்டார் என நினைக்கிறேன்.”

“நானும் அப்படித்தான் நினைக்கிறேன்,” என்றார் நிக்.

“என்னே கொடுமை!”

“ரொம்ப மோசம்!” என்றார் நிக்.

அவர்கள் இருவரும் எதுவும் பேசவில்லை. துணி எடுத்து உணவு வைக்கின்ற மேடையை ஜார்ஜ் சுத்தம் செய்தார்.

“அவர் என்ன செய்திருப்பார் என நான் யோசிக்கிறேன்,” என்றார் நிக்.

“யாரையாவது ஏமாற்றியிருப்பார். அதனால்தான் அவர்கள் அவரைக் கொல்ல நினைக்கிறார்கள்.”

“நான் இந்த நகரை விட்டு போகப் போகிறேன்,” என்றார் நிக்.

“ஆமாம்! அது நல்ல முடிவுதான்,” என்றார் ஜார்ஜ்.

“அவருக்கு என்ன நடக்கப்போகிறது என்பது தெரிந்தும், அவரை நினைத்துக்கொண்டு அறையில் என்னால் இருக்க முடியாது. அது மிகவும் மோசமானது.”

“அது சரி! நீங்கள் அதைப் பற்றி சிந்திக்காமல் இருப்பது நல்லது,” என்றார் ஜார்ஜ்.

 

ஏர்னஸ்ட் ஹெமிங்வே

தமிழாக்கம் சூ..ஜெயசீலன்


ஏர்னெஸ்ட் ஹெமிங்வே :

அமெரிக்காவில் இலினாய்ஸ் மாகாணத்தில் பிறந்தவர் ஏர்னெஸ்ட் ஹெமிங்வே (1899 ஜுலை 21 – 1961 ஜுலை 2). இசை, கல்வி, விளையாட்டு என்று பல துறைகளிலும் மிளிர்ந்த ஹெமிங்வே, ஏழு புதினங்கள், ஆறு சிறுகதைத் தொகுப்புகள், மற்றும் புனைவற்ற இரண்டு புத்தகங்களை தன் வாழ்நாளில் வெளியிட்டார். ஹெமிங்வே இறந்த பிறகு, மேலும் மூன்று புதினங்களும், நான்கு சிறுகதைத் தொகுப்புகளும், புனைவற்ற மூன்று புத்தகங்களும் வெளிவந்தன. இவரின், ‘கடலும் கிழவனும்’ (The Old Man and the Sea) புதினத்துக்கு புலிட்சர் விருதும் (1953), இலக்கியத்துக்கான நோபல் பரிசும் (1954) கிடைத்துள்ளது.

 

ஹெமிங்வே எழுதிய கொலைகாரர்கள் எனும் இச்சிறுகதை மார்ச் 1927-இல் முதல் முறையாக  Scribner’s இதழில் வெளியானது. The Best Short Stories of 1927 தொகுப்பில் இச்சிறுகதையும் இடம் பெற்றது. அமெரிக்காவில், இலினாய்ஸ் மாகாணத்தில், சம்மிட் எனும் சிறு நகரத்தில் இக்கதை நிகழ்கிறது. பொதுவாக குண்டர்களைப் (Gangsters) பற்றி பேசும்போது, கொலை செய்வது, பணம் பறிப்பது, துன்புறுத்துவது, போதைப்பொருட்கள் கடத்துவது போன்ற அச்சமிகு சூழ்நிலைகளை எழுதுவார்கள். ஆனால், நம்மில் ஒருவராக எதார்த்தமாகப் பயணிக்கும் குண்டர்களை ஹெமிங்வே இச்சிறுகதையில் முன்னிறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.