சுசுமு ஓனோவின் நூற்றாண்டில்…….


 

பண்டைத்தமிழ் ஜப்பானிய ஒப்பாய்வுகள் குறித்த மிகச்சுருக்கமான அறிமுகக் கட்டுரை

மிழ் ஆய்வுலகம் கொண்டாட வேண்டிய ஆய்வாளர் சுசுமு ஓனோ. தமிழிற்கும் ஜப்பானிய மொழிக்குமுள்ள உறவினைத் தக்க சான்றுகளோடு நிறுவியவர். இவரின் ஆய்வுகள் கீழைநாட்டு ஒப்பியலாய்வில் குறிப்பிடத்தக்க முடிவுகளை வெளிக்கொணர்ந்திருக்கின்றன. அவை தமிழாய்விற்குப் புத்தொளியினை நல்கியிருக்கின்றன. அவரின் நூற்றாண்டில் உள்ளோம். தமிழகத்தில் இவருக்கு ஒரு பல்கலைக்கழகம், ஆய்வுநிறுவனம் எதுவுமே நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடாத நிலையில் விலக்காகப் புதுச்சேரியில் முனைவர் மு.இளங்கோவன் நன்றியுணர்வோடு கொண்டாடினார். அண்மையில் ஆகஸ்ட் 23-25 ஆகிய மூன்றுநாட்கள் வெட்சி இதழும் தமிழ் ஜப்பானிய ஒப்பியலாய்வாளர்களும் இணைந்து நடத்திய கருத்தரங்கம் அவரின் பணிகளையும், தமிழ் ஜப்பானிய ஆய்வு நிலைகளை விவாதித்தது.

ஜப்பானிய மொழி அறிஞர்களுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் தங்களுடைய மொழியின் தோற்றம்/ வேர்/ மூலம் பற்றி அறிந்துகொள்ளுவதில் மிகுந்த ஆர்வமிருந்தது. தொடக்கத்தில் ஜப்பானிய மொழி ஆய்வாளர்கள் சீனம், கிரீக், இந்தோனேசியன் போன்ற மொழிகளுடனுள்ள தொடர்பை ஆராய்ந்து பார்த்தனர். ஆனால் ஒத்திசைவான கூறுகள் பெரிதும் இல்லை. இச்சூழலில் ஜப்பானிய மொழியின் தோற்றம் குறித்த ஆய்வில் நாட்டம் கொண்டிருந்த கக்சுயின் பல்கலைக்கழகப் பேராசிரியர் சுசுமு ஓனோ (1909-2008) அவர்கள் 1950 களில் கொரிய மொழியோடு ஒப்பீடு செய்து பார்த்தார். ஆனால் அவர்க்கு அதில் நிறைவு கிடைக்கவில்லை. பின்னர் 1970 களில் புஜிவர, சிப, முரயம போன்ற ஜப்பானிய மொழி அறிஞர்கள் திராவிட மொழிகளோடு ஒப்பீடு செய்து பார்த்தனர். பேராசிரியர் சுசுமு ஓனோவும் முதலில் தெலுங்கு மொழியோடு ஒப்பீடு செய்து பார்த்தார். இதற்கு எமினோவும் பரோவும் தொகுத்த A Dravidian Etymological Dictionary அகராதியை முதன்மைத் தரவாக வைத்துக்கொண்டார். ஆனால் அவரின் கவனம் தமிழின் பக்கம் திரும்பியது. ஒலி, சொல், பொருள் நிலையில் ஒன்றுபடும் முந்நூறுக்கும் மேற்பட்ட சொற்களைத் தொகுத்துக் கட்டுரையாக்கம் செய்து 1981 இல் மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் வாசித்தார். இக்கட்டுரையைப் பலரும் வரவேற்றனர். தமிழுக்கும் ஜப்பானிய மொழிக்குமான உறவினை 1856 இல் கால்டுவெல் தான் வெளியிட்ட திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தில் எடுத்துக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னைப் பல்கலைக்கழக முன்னைத் துணைவேந்தர் பேராசிரியர் பொற்கோவிடம் சென்னை வந்து ஓராண்டு தங்கித் தமிழ்க்கற்றுக் கொண்டார். அவரின் வழிகாட்டலில் தமிழ் – ஜப்பானிய ஒப்பாய்வு மொழியியல், இலக்கியம், பண்பாடு, தொல்லியல் என பல தளங்களில் விரிவடைந்தது. ஈழத்தைச் சார்ந்த பேராசிரியர்கள் அருணாசலம் சண்முகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ் இருவரும் கக்சுயின் பல்கலைக்கழகத்தில் அவரோடு இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டனர்.

ஆய்விற்கான பரப்பாகப் பண்டைய காலத்தமிழ் குறிப்பாகச் சங்ககால மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றையும் பண்டைய ஜப்பானிய மொழி (நர மற்றும் ஹீயன் காலம்), இலக்கியம், பண்பாடு ஆகியவற்றையும் எடுத்துக்கொண்டனர். 25 ஆண்டுகாலம் இந்த ஆய்வு நடைபெற்றது. ஆய்வில் கண்டறிந்த வியக்கத்தக்க முடிவுகளை நூல்வடிவில் வெளியிட்டுள்ளனர். சுசுமு ஓனோவின் ஒப்பாய்வு நூல்கள் பலஇலட்சம் படிகள் விற்றன. இவர்களின் ஆய்வுகள் குறித்த விவாதங்கள் ஜப்பானிய நாட்டுச் சூழலில் தீவிரமான முன்னெடுக்கப்பட்டன. அதற்கு ஆசகி, கெங்கோ, NHK போன்ற அந்நாட்டு ஊடகங்கள் (இதழ்கள், வானொலி, தொலைக்காட்சிகள்) துணைநின்றன.  எனவே, மக்களும் உடனுக்குடன் தமிழ் ஜப்பானிய மொழிகளுக்கிடையேயான ஒப்புறவை அறிந்துகொள்ள ஏதுவாய் அமைந்திருந்தது. இதே காலகட்டத்தில் தமிழ்ச்சூழலில் இந்த ஒப்பாய்வு குறித்த விவாதங்களோ, ஆய்வுகுறித்த அறிமுகமோ இல்லாமல் இருந்தது. அத்தகைய போக்கு இன்றைக்கும் தொடர்வதுதான் வேதனைக்குரியது.

கீழைத்தேய மொழி, பண்பாடு, இலக்கியங்களுக்கிடையேயான நடைபெற்ற ஒப்பாய்வுகளில் குறிப்பிடத்தக்க விவாதங்களையும் முடிவுகளையும் கொண்டுவந்தது தமிழ் ஜப்பானிய ஒப்பாய்வு ஆகும்.

மொழியியல் ஆய்வுகள்

சுசுமு ஓனோவின் The Relationship of the Tamil and Japanese Languages, Sound Correspondence between Tamil and Japanese போன்ற கட்டுரைகள், அருணாசலம் சண்முகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோர் வெளியிட்ட தமிழ் மொழியும் யப்பானிய மொழியும் இலக்கண ஒப்பீடு, Tamil – Japanese Relationship ஆகிய நூல்கள் மொழி அடிப்படையில் தமிழும் ஜப்பானியமும் ஒன்றுபடும் தன்மைகளை எடுத்துக் காட்டியுள்ளனர். சில கூறுகள் மட்டும் பார்வைக்கு.

ஒலி – சொல் – பொருள் நிலையில் ஒன்றுபடும் சொற்கள்

அணை – ana, சேறு – Siro, பொங்கலோ பொங்கல் – Fongara fongara, பூ – Fo, வழி – Wari, நெல் – Ni, ஏனல் – Ina, குரம்பு – Kuro, தம்பல் – Tambo, முறம் – Mumi, தடி – Tati, யாறு – Yara, தும்பி – Tombo, களி – Kayu,  அரை – Are இவை போன்ற 300 க்கும் மேற்பட்ட சொற்கள் காணப்படுகின்றன.

எழுவாய், செயப்படுபொருள், பயனிலை, பெயரெச்சம், வினையெச்சம், இடைச்சொல் போன்ற அமைப்பு ஒற்றுமைகள். கவிதைமொழியிலும் பேச்சு வழக்கிலும் ஒன்றுபடுகின்றன.

செம் – பெயரடை (தமிழ்), akai – பெயரடை (ஜப்)

மலர் – பெயர் (த), hana – பெயர் (ஜப்)

சுசுமு ஓனோ தொகுத்த சொற்களில் ஒன்றுபடும் பெரும்பாலான சொற்கள் வேளாண் சார்ந்த சொற்களாக உள்ளதால் தமிழகத்திலிருந்து அரிசியை முதன்மைப்படுத்தி ஜப்பானுக்குக் குறிப்பிட்ட காலத்திற்குள் தமிழர்களால் வந்திருக்க வேண்டும். இவை அரிசிப்பண்பாட்டை முன்னிறுத்துகின்றன என்ற கருதுகோளைப் பேராசிரியர்கள் சண்முகதாஸ் மற்றும் மனோன்மணி ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.

இலக்கிய ஆய்வுகள்

ஜப்பானிய செவ்வியல் கால இலக்கியங்களான கொஜிகி, நிகொன்சொகி, மன்யோசு ஆகியவற்றோடு தொல்காப்பியம், சங்க இலக்கியங்களை ஒப்பிடுகின்ற ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. அவற்றினூடாகத் தமிழாய்வுக்குப் புதிய பார்வைகள் கிடைத்திருக்கின்றன. கி.பி.8 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட மன்யோசு இலக்கியம், சங்க அகப்பாடல் மரபோடும் தொல்காப்பியத்தோடும் நெருங்கிய உறவுடையதாகக் காணப்படுகின்றது. பண்டைத் தமிழ் அகப்பாடல் மரபில் வரும் பெயர்சுட்டாத் தன்மை, முதல், கரு, உரிப்பொருள் அமைப்பு, தலைவன், தோழி, தலைவிக் கூற்றுநிலையான பாடல்கள், நெஞ்சொடு கிளத்தல், இயற்கைப்பொருள்கள், உயிரினங்களை விளித்துப் பாடும் பாடல்கள், ஆற்றியிருத்தல், பிரிவு குறித்த உணர்வுநிலையான பாடல்கள், பருவங்களை முதன்மைபடுத்திப் பாடும் முறைகள், உள்ளுறை, இறைச்சி போன்ற குறிப்புப்பொருள் வடிவங்கள் ஆகியன ஒற்றுமையுடையனவாக உள்ளன. இவை குறித்த ஆய்வுகளைப் பேராசிரியர்கள் இராம. குருநாதன், மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோர் நிகழ்த்தியுள்ளனர். தமிழிலுள்ள சிந்தியல் வெண்பாவோடு ஜப்பானிய தாங்கா என்ற பாவடிவம் ஒன்றுபடுவதைப் பேராசிரியர் பொற்கோ எடுத்துக் காட்டியுள்ளார். இவர்களின் ஆய்வுகள் இலக்கிய வடிவம், உள்ளடக்கம், உத்தி ஆகியவற்றை உள்ளடக்கியதாக உள்ளன.

இந்த இலக்கிய ஒப்பாய்வின் ஊடாகத் தமிழ்ச்சூழலுக்கு மன்யோசுப் பாடல்கள் மொழிபெயர்க்கப்பட்டுப் பெருந்திரளான பாடல்கள் கிடைத்துள்ளன. மனோன்மணி சண்முகதாஸ் கக்சுயின் பல்கலைக்கழகத்தில் ஜப்பானிய மொழியைக் கற்று, சுசுமு ஓனோவின் துணையோடு பத்து ஆண்டுகால இடைவெளியில் மன்யோசு பாடல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். மன்யோசு பத்தாவது தொகுதி, ஜப்பானியக் காதற்பாடல்கள் என்ற பெயரில் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வெளியீடாக வந்துள்ளது. இத்தொகுப்பில் 537 பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. பதினோராவது தொகுதியிலுள்ள பாடல்களின் (450 க்கும் மேற்பட்டவை) மொழிபெயர்ப்பு ஜப்பானியக் காதற்பாடல்கள் என்ற பெயரில் யாழ்ப்பாணம், கோகுலம் வெளியீடாக  வந்துள்ளது. இவ்விரண்டு தொகுப்புகளும் முழுமையான மன்யோசு அகப்பாடல்களின் தொகுப்புகளாகும். மன்யோசு 20 தொகுதிகளைக் கொண்டுள்ளது. 4500க்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ளன. அவற்றுள் சங்க இலக்கியங்களில் வரும் உண்டாட்டு, கையறுநிலை போன்ற தன்மையில் இடம்பெறும் புறம்சார்ந்து ஒன்றுபடும் பாடல்கள் உள்ளன. இவை குறித்தும் பேராசிரியர்               இராம. குருநாதன் எழுதியுள்ளார். அண்மையில் நடைபெற்ற சிகாகோ உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் மனோன்மணி சண்முகதாஸ் 30 மன்யோசு புறப்பாடல்களைத் தமிழில் மொழிபெயர்த்து சங்கப் பாடல்களோடு ஒப்பிட்டு கட்டுரை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மனோன்மணி சண்முகதாஸ் மொழிபெயர்த்த பாடல்களிலிருந்து ஒருபாடல் சான்றிற்கான…               

 

Faru same va (5)                         வேனில் மழையே (5)
Itaku na furi (7)                 வன்பெயல் பொழியாதே (7)
Sakura fana (5)                           சகுர மலர் (5)
Imada mi naku ni (7)     இப்போது காணாமலே (7)      
Tiramaku wosi mo (7)    உதிர்ந்திடக் கூடுமோ!” (7)   

(மன்யோசு : 10 : 1870)

மேற்கண்ட பாடல் ஹைக்கூவுக்கு முன்னோடியான தாங்கா என்ற பாவடிவத்தில் அமைந்திருக்கின்றது. இப்பாவானது 5-7-5-7-7 என்ற அசையமைப்பில் அமைந்திருக்கும். இதே அமைப்பினைத் தமிழ் மொழிபெயர்ப்பிலும் கையாண்டு பெயர்த்திருப்பது மொழிபெயர்ப்பின் தனிச்சிறப்பாகும். பேராசிரியர் மனோன்மணியின் இந்த மொழிபெயர்ப்புப் பணி இதுவரை நடந்த கீழைத்தேய மொழிபெயர்ப்புகளிலிருந்து பெருந்திரளான பாடல்களைத் தமிழுக்குத் தந்திருக்கின்றது.   

பண்பாட்டு ஆய்வுகள்

மொழி, இலக்கிய ஆய்வுகளைப் போன்றே தமிழகத்திற்கும் ஜப்பானுக்கும் நெருங்கிய உறவுகள் காணப்படுகின்றன. இலக்கியத் தரவுகள், களஆய்வுகள், தற்கால நடைமுறைகளின் அடிப்படையில் பண்பாட்டு ஒப்பாய்வுகள் நடைபெற்றுள்ளன. தமிழ்ப்பண்பாடு, ஜப்பானியப் பண்பாடு என்று பொதுமைப்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன. இரண்டு சூழல்களிலும் பல பண்பாட்டு மரபினர் வாழ்கின்றனர். எனவே, பல பண்பாட்டுக் கூறுகளில் சிலவற்றை எடுத்துக்கொண்டு ஆய்வுகள் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. நம் சூழலில் தெரிந்த கூறுகள், தெரியாத கூறுகள் என உள்ளன. ஆய்வாளர்கள் கண்ட கூறுகளின் அடிப்படையில் பல ஒன்றுபடும் கூறுகள் கிடைத்திருக்கின்றன.

இயற்கையைக் கடவுகளாக வழங்கும் மரபு, நீர்நிலைகள், மலைஉச்சிகள், குன்றுகள், மரங்கள் ஆகியவற்றில் கடவுள் (கமி) உறைவதாக நம்பும் வழக்கம், ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் கடவுள் தலைமையுடையதாக இருத்தல், நற்சொல் கேட்கும் வழக்கம் (விரிச்சி), மூதாதையர் வழிபாடு, ஆண்டுதோறும் முன்னோர்க்குப் படையலிட்டு வழிபடுதல், ஈமத்தாழிகளிலிட்டுப் புதைக்கும் வழக்கம், பொங்கல் விழா, திருமணம் சார்ந்த நடைமுறைகள் போன்றன ஒற்றுமையுடையனவாக உள்ளன. பேராசிரியர் சுசுமு ஓனோ தைப்பொங்கல் விழா, இறப்பு குறித்த பண்பாட்டு நடைமுறைகளை ஒற்றுமைப்படுத்தி ஆய்ந்துள்ளார். தஞ்சாவூர்க்கு அண்மையிலுள்ள நகுச்சி என்ற கிராமத்தில் அவருடன், NHK என்ற ஜப்பானிய தொலைக்காட்சி நிறுவனமும் களஆய்வில் ஈடுபட்டது. அங்கு கொண்டாடப்பட்ட பொங்கல் விழா நடைமுறைகளை நுட்பமாகக் கண்டு, ஜப்பானில் ஜனவரி 14, 15, 16 ஆகிய நாட்களில் கொண்டாடும் மரபு புத்தாண்டு (KOSTOGATSU) நடைமுறைகளோடு ஒப்பிட்டு 11 வகையான ஒற்றுமைக்கூறுகளைப் பட்டியலிட்டார். முதல் நாளில் (ஜன.15) அசுகி பருப்புடன் இனிப்பு சேர்த்து பொங்கல் வைத்தல், மறுநாள் குதிரைகளுக்கு நன்றி சொல்லுதல், பணியாளர்களுக்கு உணவு பரிமாறுதல், மூன்றாம் நாள் பட்டம் விடுதல், ஆடல் பாடல் நிகழ்வுகள் ஆகியன நடைபெறும். ஜனவரி 14 ஆம் நாள் இங்கு பழைய பொருட்களை எரித்து, வீடுகளைத் துப்புரவு செய்வது போலவே, அங்கும் பழைய குடில்களை எரித்தல், துப்புரவு செய்யும் பணிகள் நடைபெறுகின்றதை சுசுமு ஓனோ சுட்டிக் காட்டியுள்ளார்.  பொங்கல் பொங்கிவரும் வேளையில் பொங்கலோ பொங்கல் என்று ஒலியெழுப்புவது போன்றே ஜப்பானியர்களும் ஹொங்கரா ஹொங்கரா என்று ஒலியெழுப்புவதையும் ஒற்றுமைக் கூறாகக் காட்டுகின்றார். ஜப்பானிய மொழியில் ப என்ற ஒலி ஹ என கிறிஸ்துவ மிஷ்னரிமார்களால் நவீன மொழியில் திரிபடைந்து ஒலிக்கப்படுவதாகவும், அது நரகாலத்தில் ப என்றே ஒலிக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் கூறுகிறார். ல என்ற ஒலி ஜப்பானிய மொழியில் இல்லாததால் அது ர என்று ஒலிக்கப்படும்.

பேராசிரியர் சுசுமு ஓனோவின் மொழி, பண்பாட்டு ஆய்வுகளுக்கு மனோன்மணி சண்முகதாஸ் சங்க இலக்கியத் தரவுகளை எடுத்துக்காட்டி உதவினார்.

தொல்லியல் ஆய்வுகள்

தம்முடைய கருதுகோளுக்குத் தொல்லியல் துறை பயன்நல்கும் என்று எண்ணிய சுசுமு ஓனோ தொல்லியல் படிப்பைக் கற்றார். மேற்கொண்டு தொல்லியல் ஆய்வாளர்கள் குருராஜாராவ், கா.ராஜன், சுப்புராயலு போன்றோரின் துணையோடு ஜப்பானில் கியுசு, நர ஆகிய பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஈமத்தாழிகள், மண்தாழிகளில் பொறிக்கப்பட்ட குறியீடுகளைத் தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட தாழிகளிலுள்ள குறியீடுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தார். 300 குறியீடுகளில் 270 குறியீடுகள் ஒற்றுமையுடையனவாக இருந்தன.

சுசுமு ஓனோவின் ஆய்வுமுறையினை கமில் சுவெலபில், வாச்செக் போன்ற மேலை நாட்டு ஆய்வாளர்கள் வரவேற்று எழுதியுள்ளனர்.

இந்த ஆய்வு முடிவுகள் குறித்துப் பேசிய பேராசிரியர்கள் சண்முகதாஸ், மனோன்மணி ஆகியோர், “நாங்கள் சுசுமு ஓனோவுடன் இணைந்து ஆய்வினை நிகழ்த்திய வேளையில் பல எதிர்ப்புகளும் விமர்சனங்களும் ஜப்பானிய மொழி ஆய்வாளர்களிடமிருந்து வந்தன. ஆனால், ஆய்வினை முடித்த வேளையில் (25 ஆண்டுகளுக்குப் பின்னர்), பலரும் வரவேற்றனர். தொல்லியல் அடிப்படையில் இரண்டு மரபிற்குமான ஒற்றுமைகளை சுசுமு ஓனோ விளக்கியபோது புவியியல் ஆய்வாளர்கள் கேலிக்கூத்தாகப் பார்த்தனர். ஆனால், இன்றைக்குப் புவியியல் மொழியியல் ஆய்வாளர்கள் வியப்பாகப் பார்க்கின்றனர். அத்துறைப் பேராசிரியர் இத்தகைய உறவு கடல் நீரோட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தாழிப்பண்பாடு தமிழகத்திலிருந்து ஜப்பானுக்கு வந்திருக்க வேண்டும் என்று கருதுகின்றார். இன்றைக்கு இளந்தலைமுறையினர் இந்த ஆய்வினை கையில் எடுத்திருக்கின்றனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், டெல்லி – ஜவகர்லால் பல்கலைக்கழகம், திருவாரூர் – மத்தியப் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களிலுள்ள ஆய்வாளர்கள் இத்துறையில் ஆய்வுசெய்துவருவது மிகுந்த நம்பிக்கையளிக்கின்றது.” என்றனர்.

இவ்வாறு பல நிலைகளில் விரிவடைந்த சுசுமு ஓனோவின் தமிழ் – ஜப்பானிய ஒப்பாய்வு இன்னும் தொடக்கநிலையில்தான் உள்ளது. இன்னும் மானிடவியல், சமூகவியல், வரலாற்றியல், புவிவியல் துறைகளோடு இணைந்து ஆய்வுகளை நிகழ்த்த வேண்டியிருக்கின்றது. ஜப்பானுக்கும் தமிழகத்திற்குமான நெருக்கமான உறவுகளை நிறுவிட அறிவியல் பூர்வமான முடிவுகளை இன்றைய ஆய்வாளர்கள் வெளிக்கொண்டுவர வாய்ப்புகள் இன்று பெருகியுள்ளன.

தன் வாழ்நாள் முழுதும் இந்த ஆய்வில் ஆர்வங்கொண்டிருந்த ஓனோ அவர்கள் 2008 ஆம் ஆண்டு காலமானார். 40 ஆண்டுகாலமாக அவரால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆய்வு இன்றும் தொடர்கிறது என்பதில் பெருமை மட்டுமல்ல, இன்னும் தமிழ் ஆய்வாளர்கள் கவனமும் தீவிரமும் காட்டவேண்டும் என்பதுதான் அவரது நூற்றாண்டின் நோக்கமாக இருக்கட்டும். துடிப்பான ஓர் இளந்தலைமுறை ஆய்வாளர்கள் புத்தொளி பாய்ச்சிட முன்வர வேண்டும். அதற்கு அவரின் ஆய்வுகள் வழிகாட்டுதல்களாக அமையும்.


கானகநாடன்

பார்வைக்கு

 • பொற்கோ, தமிழ் – ஜப்பானிய ஒப்பாய்வு, பூம்பொழில் வெளியீடு, சென்னை – 2005
 • தமிழ் மொழியும் யப்பானிய மொழியும் இலக்கண ஒப்புமை, மூலம் : சுசுமு ஓனோ, தமிழாக்கம் : அ.சண்முகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ், கொழும்பு தமிழ்ச்சங்கம், 1990
 • அருணாசலம் சண்முகதாஸ், இன்றைய திராவிட மொழி ஆய்வில் தமிழ் யப்பானிய ஒப்பீடு, யாழ்பாணப் பல்கலைக்கழகம், 1993
 • மனோன்மணி சண்முகதாஸ், சங்க – மன்யோசுக் காதற் பாடல்களின் அகப்பொருள் பற்றிய ஒப்பீட்டாய்வு, கோலாலம்பூர் ஆறாவது உலகத்தமிழாராய்ச்சி மாநாடு, 1987
 • மனோன்மணி சண்முகதாஸ், ஜப்பானியக் காதற்பாடல்கள், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2000
 • மனோன்மணி சண்முகதாஸ், ஜப்பானியக் காதற்பாடல்கள், கோகுலம் வெளியீடு, யாழ்ப்பாணம், 2014
 • மன்யோசு காதற்காட்சிகள், தமிழ்ச்சங்கம், கொழும்பு – 1992
 • இராம. குருநாதன், சங்கப்பாட்டும் ஜப்பானியக் கவிதையும், கலைஞன் பதிப்பகம், சென்னை – 1986
 • Arunasalam Sanmugadas & Manonmani Sanmugadas , Tamil – Japanese Relationship, Institute of Asian Studies, Chennai – 600 119, First Edition – 2011
 • யப்பானிலும் தைப்பொங்கல், மூலம் : சுசுமு ஓனோ, தமிழில் : அருணாசலம் சண்முகதாஸ், வெட்சி சிறப்பு மலர், 2020
 • செல்வ அம்பிகை நந்தகுமரன், சங்க – யப்பானியக் காதற் பாடல்களின் பொருள் மரபு பற்றிய ஓர் ஒப்பீடு, முதுதத்துவமாணி பட்டத்திற்கான ஆய்வேடு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 2004
 • இரா.ரம்யா, தமிழில் குறுந்தொகை, ஜப்பானியத்தில் மன்யோசு தொகுதி பத்து : ஓர் ஒப்பாய்வு, முனைவர்பட்டத்திற்கான ஆய்வேடு, தமிழ்ப்பிரிவு, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுதில்லி, 2017
 • கனகராசு, நி., தொல்காப்பியச் செய்யுளியல் நோக்கில் ஐங்குறுநூற்று முல்லைத்திணைப் பாடல்களும் மன்யோசு கார்காலப் பாடல்களும் – ஓர் ஒப்பாய்வு, (முதுகலைப் பட்ட ஆய்வேடு), தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர், மே, 2018

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.