ஒஸாகி ஹொசாய்: நாள் முழுவதும் வார்த்தைகளற்று.


25 தேர்ந்தெடுத்த ஹைக்கூ கவிதைகள்

 

ஊருக்கு வெளியே துரத்தப்பட்ட தாமதமாக வந்த நிலவு, காத்துக் கிடக்கிறது

 


 

சரியான நேரத்தில் வந்து ஒரு பிச்சைக்காரர் என்னைச் சந்தித்தார்


 

என் நகங்கள் வளர்ந்து கொண்டே செல்கின்றன

என் தனிமையான உடலிலிருந்து


 

என்ன ஒரு அற்புதமான மார்பகம்!

அதன் மேல் ஒரு கொசு அமர்ந்துள்ளது.


 

நாளை ஆண்டின் முதல் நாள் வருகிறது,

சாக்கிய முனியும் நானும் மட்டும் (தான் இருப்போம் இங்கே)


 

ஷோஜி கதவுகளை மூடிய பின்,

அறையைத் தனிமையால் நிரப்புகிறேன்


 

நாள் முழுவதும்

வார்த்தைகளற்று நான்

ஒரு பட்டாம்பூச்சி தன் நிழலை எறிகிறது


 

புல்லின் நுனி மேல்

முடிவிலி வானைப் பார்த்தபடி

ஒரு எறும்பு


 

மிகத் தனிமை

நான் என் நிழலை நகர்த்துகிறேன்

வெறுமனே பார்ப்பதற்கு

 


 

புத்தர் எனக்கு அளிக்கிறார்

இன்னும் சில நாட்களை

நான் சலவை செய்கிறேன்


 

என் இதயத்தில்

நான் எதையாவது விரும்பும்போது

அதைக் கடலிடம் விடுவித்து விடுகிறேன்

 


 

ஒரு தட்டான்

என்னைப் பார்க்க வந்தது

என் தனிமையான மேசைக்கு

 


 

பனிப்பொழிவு நின்றுவிட்டது

சூரியன் பிரகாசிக்கிறது

குழந்தைகளின் குரல்களின் மேல்

 


 

மலைகளின் ஆழத்தில்

நம் அந்தரங்க வார்த்தைகள்

 


 

சூரியகாந்திகள் இந்தப் பக்கம் முகம் காட்டுகின்றன

அந்தி என் மேஜைக்கே வந்துவிட்டது


 

எதார்த்தத்தை வாதிட்டபடி

பெர்சிம்மன் பழங்கள் உதிர்கின்றன


 

ஒரு ராட்சத மரத்தின் அடியில் ஒளிந்தபடி

பனியில் ஒரு ஜிசோ


 

கீழே குப்புறப் படுத்தபடி நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கடிதத்தை என் வீட்டுக் கோழி எட்டிப் பார்த்துவிட்டுச் செல்கிறது


 

என் அமைதியான நிழலை நகர்த்தி என் விருந்தினருக்கு நான் தேநீர் ஊற்றுகிறேன்


 

தொட்டாற் சிணுங்கி மலர்கள், மதியம் கடந்துவிட்டது, கோவில் மணி கனமாகத் தொங்குகிறது

 


 

ஒரு பிச்சைக்காரரின் குழந்தை

தன் பையில் இருந்து கிங்கோ கொட்டைகளை எடுக்கிறான்

அவ்வளவு கொட்டைகள்!

 


 

பெரிய வானத்தின் கீழ், நான் தொப்பி அணியவில்லை


 

புத்தரின் உருவம் செதுக்கப்பட்ட ஒரு கல் அமர்ந்திருக்கிறது

 


 

ஒரு பொய் சொன்னது போல

மதிய வானில் நிலா

அதோ அங்கே இருக்கிறது


 

டடாமி மீது நடக்கும் இந்தக் குருவியின் காலடி ஓசை எனக்கு நன்கு பரிச்சயம்


குறிப்புகள்:

சாக்கிய முனியும்கவுதம புத்தரின் வழக்கமான பெயர்களில் ஒன்று “சாக்கிய முனி” (“சாக்கியர்களின் முனிவர்”) என்பதாகும். கி.மு. 5ஆம் நூற்றாண்டில் கிழக்கு இந்திய துணைக் கண்டத்தில்  இருந்த ஒரு சமூகமான சாக்கியர்களின் குலத்தில் புத்தர் பிறந்தார் என்பதற்கு ஆரம்பகால நூல்களின் சான்றுகள் உள்ளன.

ஷோஜி – Shoji – ஜப்பானியக் கட்டிடக்கலையில், ஒரு அறையைப் பிரிக்கப் பயன்படும், பக்கவாட்டில் நகரும் ஒளி கசியக்கூடிய தாள்களால் ஆன ஒரு வகைக் கதவு.

பெர்சிம்மன் பழங்கள் – Persimmon – சீமைப் பனிச்சை – உண்ணத் தக்க ஒரு வகைப் பழம் – ஜப்பானில் பிரசித்தமானது

ஜிசோ – Jizō – ஜிசோ என்பவை ஜப்பான் முழுவதும் காணப்படும் சிறிய கற்சிலைகள். இந்த புத்த சிலைகள் பெரும்பாலான ஜப்பானியர்களால் ஓ-ஜிசோ-சேன் என்று அன்பாகக் குறிப்பிடப்படுகின்றன.

கிங்கோ கொட்டைகளை – Ginkgo Nuts – உண்ணத் தகுந்த ஒரு வகைக் கொட்டை- இது பாரம்பரிய மருத்துவத்திலும், உணவிலும் பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. பெரும்பாலும் திருமணங்கள் போன்ற சிறப்பு நிகழ்வுகளில் இது ‘புத்தரின் களிப்பு’ என்று அழைக்கப்படும் சைவ உணவின் ஒரு பகுதியாக வழங்கப்படுகிறது.

டடாமி – Tatami – டாடாமி என்பது பாரம்பரிய ஜப்பானிய பாணி அறைகளில் தரை விரிப்பாகப் பயன்படுத்தப்படும், வைக்கோல் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வகை பாய் ஆகும்.


ஒஸாகி ஹொசாய்

தமிழில்: நந்தாகுமாரன்

 

[tds_info]

ஆசிரியர் குறிப்பு

ஒஸாகி ஹொசாய் (Ozaki Hōsai) – (20 ஜனவரி 1885 – 7 ஏப்ரல் 1926) – இயற்பெயர்: ஒஸாகி ஹிடியோ (Ozaki Hideo): 

ஒஸாகி ஹொசாய் ஒரு ஜப்பானிய சுதந்திர வடிவ ஹைக்கூ கவிஞர். சுதந்திர வடிவ வசன பாணி ஹைக்கூவின் முன்னோடியான ஒகிவாரா செய்சென்சுயின் (Ogiwara Seisensui) மாணவர். இவர் தன் ஹைக்கூக்களை பெரும்பாலும் ஒரு வரியில்தான் எழுதினார். பல ஜப்பானிய ஹைக்கூ கவிஞர்களும் விரிவுரையாளர்களும் ஹைக்கூவிற்கு ‘ஒரு வரி’ வடிவம்தான் உகந்தது எனக் கருதுகிறார்கள். தனிமைதான் இவரின் முக்கியப் பாடுபொருள்.

ஹொசாய் தன் மனச்சோர்வினை நுட்பமான தரிசனங்களாக உருமாற்றி அதை ஒரு தனிப்பட்ட குரலாகத் தன் கவிதைகளில் ஒலிக்கவிட்டார்.  இவரது ஹைக்கூக்கள் இவரது சொந்த வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளைப் பற்றி பேசுவன. இவரது கவிதைகள் அன்றாடச் சூழல் மற்றும் பொருட்கள் தரும் சுய விழிப்புணர்வின் நீட்சியாக உள்ளன. இவர் நவீன ஹைக்கூவில் ஒரு முக்கிய குரல். இவரது ஹைக்கூக்கள் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த ஒன்றாகக் கருதப்படுகின்றன. இவர் படைப்புகள் பரந்துபட்ட விஷயங்களைப் பேசுவதாக உள்ளன. மேலும் அவை மனச்சோர்வினை நகைச்சுவையாகக் கண்டு, தீவிர ஆன்மீக நோக்கத்தை நிராகரிப்பதாக அமைந்திருக்கின்றன.

உயர்நிலைப் பள்ளிக்குப் பிறகு, ஜப்பானில் உள்ள டோக்கியோ இம்பீரியல் பல்கலைக்கழகத்தில் பயின்ற போது அங்கு யோஷி சவா என்ற நெருங்கிய தோழியைத் திருமணம் செய்ய விரும்பினார். ஆனால் யோஷியின் சகோதரர் அந்தத் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இந்த நிராகரிப்பால் அவர் காயமடைந்து மதுவை நாடினார்; அதன் விளைவாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

டைவானில் சில காலம் ஒரு காப்பீடு நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு ஜப்பானுக்குத் திரும்பிய பிறகு, இவர் தனது உடைமைகள் அனைத்தையும் தனது மனைவியிடம் விட்டுவிட்டுத்  துறவற வாழ்க்கைக்குச் சென்று கோவில் கோவிலாக அலைந்து திரிந்தார். தன் உடல்நிலைக் குறைவால், ஒரு புத்தத் துறவியின் வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிப்பது என்பது இவருக்கு மிகுந்த சிரமமாக இருந்தது. இவர் இறுதியாக செட்டோவில் உள்ள ஒரு தீவில் குடியேறினார், அங்கு காசநோய் பிடித்து இறந்தார். ஹொசாயின் படைப்புகளுக்கான உந்துதல்கள், இலக்கியக் கோட்பாட்டிற்குப் பதிலாக அவரது சுதந்திரமான உற்சாகமான வாழ்க்கைமுறையிலிருந்து இயல்பாக வெளிப்படுவதாக இருக்கின்றன.

ஒஸாகி ஹொசாயின் ஒரே கவிதைப் புத்தகம்,  ‘பெரிய வானம்’, அவரது மரணத்திற்குப் பின் 1926-இல் வெளியிடப்பட்டது; அதன் விரிவாக்கப்பட்ட பதிப்பு 1956-இல் வெளியிடப்பட்டது; பின்னர் மீண்டும் அத்தொகுதி 1973-இல் வெளியிடப்பட்டது. அவரது எழுத்துக்களின் முழுத்தொகுப்பு இனோவ் மிகியோ (Inoue Mikio) என்பவரால் 1972-இல் வெளியிடப்பட்டது; இதில் ‘பெரிய வானம்’ தொகுப்பில் இடம்பெற்றது போக அவரது ஆரம்பக் கால 17 அசைகள் கொண்ட ஹைக்கூக்களும், கட்டுரைகளும், 550 கடிதங்களும் இடம் பெற்றன.

ஒஸாகி ஹொசாயின் முழுத்தொகுப்பிலிருந்து தேர்தெடுக்கப்பட்ட ஹைக்கூகளும், ஆறு கட்டுரைகளும் கொண்ட ஹைக்கூ மற்றும் உரைநடைப் புத்தகம் ‘பெரிய வானத்தின் கீழ், நான் தொப்பி அணியவில்லை’ எனும் பெயரில் 1993-இல் ஹிரோகி சேட்டோ (Hiroaki Sato) என்ற மொழிபெயர்ப்பாளரால் ஜப்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு ஆக்கம் செய்யப்பட்டு வெளியானது.

 

மொழிப்பெயர்ப்பாளர் : 

நந்தாகுமாரன்

கோவையில் பிறந்து வளர்ந்த இவர் தற்போது பெங்களூரில் கணினித் துறையில் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணி புரிகிறார். இலக்கியத்திலும், ஓவியத்திலும், ஒளிப்படத்திலும் ஆர்வமுள்ள இவர் பிரதானமாகக் கவிதைகளும் அவ்வப்போது சிறுகதைகளும், கட்டுரைகளும், பயணப் புனைவுகளும் எழுதுகிறார். இவரின் முதல் கவிதைத் தொகுதி ‘மைனஸ் ஒன்’, உயிர்மை வெளியீடாக டிசம்பர் 2012-இல் வெளியானது. இவரின் ஆதிச் சிறுகதைத் தொகுதி ‘நான் அல்லது நான்’, அமேசான் கிண்டில் மின்னூலாக ஃபிப்ரவரி 2019-இல் வெளியானது. ‘கலக லகரி: பெருந்தேவியின் எதிர்கவிதைகளை முன்வைத்துச் சில எதிர்வினைகள்’ எனும் வித்தியாசமான விமர்சன மற்றும் ரசனை நூல் அமேசான் கிண்டில் மின்னூலாக ஏப்ரல் 2020-இல் வெளியானது.

[/tds_info]

Previous articleசுசுமு ஓனோவின் நூற்றாண்டில்…….
Next articleமாயி -சான் | ஹிரோஷிமாவின் வானம்பாடி
Avatar
கோவையில் பிறந்து வளர்ந்த இவர் தற்போது பெங்களூரில் கணினித் துறையில் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணி புரிகிறார். இலக்கியத்திலும், ஓவியத்திலும், ஒளிப்படத்திலும் ஆர்வமுள்ள இவர் பிரதானமாகக் கவிதைகளும் அவ்வப்போது சிறுகதைகளும், கட்டுரைகளும், பயணப் புனைவுகளும் எழுதுகிறார். இவரின் முதல் கவிதைத் தொகுதி ‘மைனஸ் ஒன்’, உயிர்மை வெளியீடாக டிசம்பர் 2012-இல் வெளியானது. இவரின் ஆதிச் சிறுகதைத் தொகுதி ‘நான் அல்லது நான்’, அமேசான் கிண்டில் மின்னூலாக ஃபிப்ரவரி 2019-இல் வெளியானது. ‘கலக லகரி: பெருந்தேவியின் எதிர்கவிதைகளை முன்வைத்துச் சில எதிர்வினைகள்’ எனும் ரசனை நூல் அமேசான் கிண்டில் மின்னூலாக ஏப்ரல் 2020-இல் வெளியானது. இவர் தற்போது, 'ரோம் செல்லும் சாலை' எனும் பயணப் புனைவுப் புதினம் ஒன்றினை எழுதி வருகிறார்.
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments