Sunday, Jun 26, 2022
Homeபடைப்புகள்நாவல் பகுதிமாயி -சான் | ஹிரோஷிமாவின் வானம்பாடி

மாயி -சான் | ஹிரோஷிமாவின் வானம்பாடி

குண்டுவெடித்த சத்தத்தைக் கேட்ட மாயி-சான், உடனடியாக மயக்கமாகி விழுந்தாள். அவளுக்கு நினைவு திரும்பிய போது, நாலா பக்கமும் ஒரே புகைமூட்டம். வானத்தை முட்டித்துளைக்கும் உயரத்திற்கு, ராட்சதக் காளானாக கதிர்வீச்சுப் புகைமண்டலம் சூழ்ந்தது. கரும்புகை மேகக் கூட்டங்கள் ஆகாயத்தில் மிதந்து வந்தன. ஆரம்பத்தில், அவளால் உடம்பை அசைக்கக்கூட சக்தியில்லை. கண்களுக்கு முன்பு, தீயில் எரிந்து கொண்டிருந்த பொருட்களைப் பார்த்து பயந்தாள்.

ஊரெங்கும் ஒரே கூச்சல்… அலறல்… ஆரவாரம்…

இருட்டாக இருந்த திசையிலிருந்து தெரிந்த செந்நிற வெளிச்சம், அவளை கண் திறந்து பார்க்க வைத்தது. பிறகு, அம்மாவின் அலறல் குரல் கேட்டது. அலறலுக்கு மத்தியில், அம்மா அவளை அழைப்பதை உணர்ந்தாள்.

“மாயி-சான்” என்று கூச்சலிட்ட அம்மாவின் இருப்பிடம் தேடி கண்கள் சுழன்றன. உதவி கேட்டு அழைக்க நினைத்தவளின் உதடுகள் இரண்டும் ஒட்டிக்கொண்டன. பேச வாய் வரவில்லை.  கையை உயர்த்தி அசைத்துக் காண்பித்தாள்.

மாயி-சான், தன்மீது விழுந்து கிடந்த மரத்துண்டை வெகு கடினமாக புரட்டிப் போட்டாள். அதற்குள், அம்மா அவளை நெருங்கி ஓடிவந்தாள். செல்லப்பெண் மாயி-சானை வாரியெடுத்து நெஞ்சோடு சேர்த்து கட்டியணைத்துக்கொண்டாள். ஆசையாசையாய், இரு கன்னத்திலும் முத்தங்களைப் பதித்தாள். மகள், பிழைத்து விட்டாள் என்பதை உறுதி செய்த சந்தோசம்.

“மாயி-சான். நாம் இருவரும் இனி விரைந்து செயல்பட வேண்டும்” என்ற அம்மா, “அதோ பார். உனது தந்தை, எரியும் நெருப்புக்கு மத்தியில் பயங்கர இடிபாடுகளில் சிக்கிக்கொண்டுள்ளார்.”

“அச்காய்”

பலத்த குரலில் கூச்சலிட்டாள் அம்மா.

தீக்கிரையாகிக் கொண்டிருந்த மாயி-சானின் அப்பா உயிர் தப்புவாரா? நெருப்பின் பிடியிலிருந்து யாரவரை காப்பாற்றுவார்?

 

னக்குழப்பத்தில் இருந்த அவர்கள் இருவரும், நெருப்பின் கொடிய தாண்டவத்தைப் பார்த்து கொதித்துப் போனார்கள். கொஞ்சம் சுதாரித்து எழுந்த அம்மா, படுவேகமாக தீப்பிளம்புக்குள் குதித்து நுழைவதைப் பார்த்து திகைத்து நின்றாள் மாயி-சான். அப்பாவை பிடித்து இழுத்து, அவரைத் தோள்களில் தாங்கியபடி பாதுகாப்பாய் வெளியில் கொண்டு வருவதையும் பார்த்தாள்.

அப்பாவின் நிலையைப் பார்த்து இருவருக்கும் அழுகை வந்தது. அவரின் உடம்பை கவனமாக பரிசோதித்த அம்மா சொன்னாள்.

“அப்பாவின் உடம்பெல்லாம் மிக மோசமான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.” என்றவள், தனது அடர்த்தியான மேலாடையை உடனடியாகக் கிழித்து பட்டி தயாரித்தாள். ரத்தம் வழிந்த இடங்களிலும் தீப்புண்ணிலும் அதைச் சுற்றி கட்டி முதலுதவி செய்தாள்.

அச்சச்சோ! அத்தைமகன் எங்கே? பெயர்ந்து விழுந்த மேல்கூரை மரங்களுக்கு நடுவே இடிபாடுகளில் சிக்கிக்கொண்டானா? குண்டு வெடித்த அதிர்ச்சியில் வீட்டுச் சன்னல் வழியே தெருவில் வீசப்பட்டானா? எவ்வளவு தேடியும் அவன் கிடைக்கவில்லை.

எரியும் நெருப்புக்கு மத்தியில் நின்று ஆலோசித்தல் பயனில்லை. யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் தனது கணவரைத் தூக்கி தோள்களில் படுக்க வைத்துக்கொண்டாள். கணவர் மீதிருந்த அன்பும் மதிப்பும் அளவிட முடியாதே. அம்மாவுக்கு, அபூர்வசக்தி எப்படிக் கிடைத்ததோ? ஒரு கையால் மாயிசானை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஓடினாள்.

“மகளே! அருகிலுள்ள நதியை நோக்கி ஓடு. தாமதிக்காதே நாம் வெகு சீக்கிரமே நதிக்கரை சென்று அடைந்தாக வேண்டும்.” அம்மாவின் கட்டளையை ஏற்று, பின் தொடர்ந்து ஓடினாள் மாயி -சான்.

மரத்துண்டுகளும், பொடிப்பொடிக் கற்களும் சிறுமியின் மென்மையான பாதங்களை பதம் பார்த்தன. கடுமையான வலியைத் தாங்கிக் கொண்டு ‘ஓ’வென அழுதபடி ஓடினாள் சின்னஞ்சிறுமி.

 

டியோடி நதிக்கரையை அடைந்த மூவரும், துரத்தி வரும் ஆபத்திலிருந்து தப்பிக்க எண்ணி தண்ணீரில் குதித்தனர். கணுக்கால்கள் நனைய தண்ணீரில் இறங்கிய மூவரும், ‘சப்சப்’ பென்ற சத்தத்தைக் கடந்து ஆழமான பகுதிக்குள் பிரவேசித்தார்கள்.

மாயி-சான், நதியின் நடுப்பகுதியை கடந்த கணத்தில் அம்மாவின் பிடியிலிருந்து விடுபட நேர்ந்தது.

“மாயி-சான். என் செல்லமே. தைரியமாய் இரு. மனம் தளராதே. அம்மாவை இறுக்கமாகப் பிடித்துக் கொள்.” அம்மா உரக்கக் கத்தினாள்.

தீயிலிருந்து தப்பிக்க, மூச்சிரைக்க ஓடிவந்து தண்ணீரில் பாய்ந்து உயிர் பிழைக்க வருவோரின் கூட்டம் அதிகரித்தது. அவர்களுள், பலரின் மேலாடை முழுவதுமாக எரிந்து போயிருந்ததைப் பார்த்தாள் மாயி-சான். அக்கூட்டத்தில் அவளது வயதை மதிக்கத்தக்க பல சிறுவர் சிறுமியரும் நதியில் இறங்க வழிதேடிக் காத்திருந்தனர். சிறு குழந்தைகளின் உடைகளும் நெருப்பில் எரிந்து போயிருந்தன. பல பிள்ளைகள், ஒட்டுத்துணி கூட இல்லாமல் வெற்றுடம்போடு, விழிகள் கனக்க அழுது கொண்டிருந்தார்கள்.

உதடுகள் மற்றும் கண்ணிமைகள், நெருப்பு சுட்டு வெடித்துப்போயிருந்தன. நதிக்கரையில் துணியில்லாமல் தீப்புண்ணுடன் நடமாடிய மக்கள், இருட்டடியில் பயமுறுத்தும் பேய், பிசாசுகள் மாதிரி கறுப்புநிறப் பூச்சுடன் அலைந்தார்கள்.

சக்தி இழந்து போரில் தோற்றுப்போன படைவீரனைப்போல, பலர் சுடுமணலில் சரிந்தார்கள். மீதியுள்ள சிலர், சரிந்த படைவீரர்கள் மீது சாய்ந்து விழுந்தார்கள்.

எங்கு பார்த்தாலும் மக்கள் குவியல் குவியலாக உணர்விழந்து கிடந்தார்கள். ஒன்றின் மேல் ஒன்றாய் சரிந்து விழுந்த மனித உடல்கள் நிறைந்த பகுதி சின்ன மலைபோலக் காட்சியளித்தது.

கிட்டத்தட்ட நரகத்தில் நடக்கிற காட்சிகள் பலவற்றை அச்சம்பவம் ஞாபகப்படுத்தியது.

மாயி- சானின் பெற்றோருக்கு, கொடிய சூழலிலிருந்து கரையேற, அங்கிருந்து சீக்கிரம் தப்பிப்பதில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. வேகவேகமாக நடந்து, அடுத்த நதிக்கரையைத் தொட்டார்கள். நெஞ்சில், பதட்டம் நெருப்பாய் எரிந்து கொண்டிருந்தது.

நதிக்கரையை நெருங்கிய மாயி-சானின் பெற்றோர் உடல்வலிமை குன்றி சோர்ந்திருந்தார்கள். அவளது அம்மா, அப்பாவை கரையோர மணல்பரப்பில் படுக்க வைத்தாள். பின்னர், அம்மாவும் அவருக்கு அருகில் தலை சாய்த்து ஓய்வெடுத்தாள்.

மாயி-சான், தனது கால்களுக்கு இடையில் ஏதோ ஒரு பொருள் நகர்ந்து போவதாய் உணர்ந்தாள். ‘டப்…டப்…’ ஓ! அது ஒரு பறவை. அடடே! அழகான வானம்பாடி பறவை. அந்த பறவையின் நிலைமையைப் புரிந்து கொண்ட மாயி-சானுக்கு மனக்கவலையில் கண்கள் குளமாகின.

அதன் இறகுகள் எரிந்து போனதால் பறக்க முடியாமல் திணறியது. “டப்..டப்..” என்ற ஓசை மட்டும் கேட்கிறது. ஆனாலும், இறகுகள் கருகிப் போனதால் அதனால் தத்தித்தத்தி நடக்க மட்டுமே இயன்றது. சிறுமியின் இதயம் கடுமையாக வலித்தது. அவள் பீதியடைந்தாள்.

அதேநேரம், மற்றும் ஒரு கொடூரத்தைக் கண்டாள்.

இறந்து போன ஒருவரது உடல் தண்ணீரில் அசைந்தாடி மிதந்து போவதைப் பார்த்தாள். இதயம் இறுக்கமானது. சற்று நேர அமைதிக்குப் பிறகு, அந்த மனித உடலைத் தொடர்ந்து இறந்த ஒரு பூனை மிதந்து வந்தது.

ஒரு வினாடி இமைகளை மூடித்திறந்தாள். சுடுமணலில் உதிர்த்த கண்ணீர்த் துளிகள் சற்றும் தாமதிக்காமல் வறண்டு போயின.


தோசி மாருகி 

தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ

 

குறிப்பு :  இந்நாவலை முழுவதும் வாசிக்க  வாங்கிப் படிக்கவும். பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. விலை ரூ.60

Latest comment
  • மனம் கனக்க, நினைவு ஹிரோஷிமாவில் 2018-இல் நான் நடந்து சென்ற போர் நினைவு சதுக்கத்தில் பயணிக்கிறது. எளிமையான, உருக்கமான மொழி நடை. வாழ்த்துகள்.

leave a comment

error: Content is protected !!