ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் “நிரந்தரக் கணவன் “ நாவலிலிருந்து ஒரு பகுதி

தேவாலயத்துக்கு அருகில் இருந்த காய்கறி கடையில்தான் வெல்ச்சேனினோ முதலில் விசாரித்தான். பக்கத்துத் தெருவில் இரண்டே எட்டில் அந்த ஹோட்டல் இருப்பதாகச் சொல்லப்பட்டது. ஹோட்டலின் பின்புறம் மரியா சிஸோயெவ்னாவின் சிறிய தனிவீட்டில் திரு.ட்ருஸோட்ஸ்கி வசிப்பதாகக் கூறினார்கள். கழிவுநீர் தேங்கியிருந்த குறுகலான படிக்கட்டுகளில் ஏறும்போது அவன் அந்த அழுகுரலைக் கேட்டான். ஏழெட்டு வயதுக் குழந்தையின் குரல்போல் தோன்றியது.அந்த அழுகை இதயத்தை நொறுக்குவதாக இருந்தது.வெடித்துக் கிளம்பும் அடக்கப்பட்ட தேம்பல்களையும்கூட வெல்ச்சேனினோ கேட்டான், அத்துடன் தரையை காலால் உதைப்பதும். கூடவே ஒருவிதமான கர்ணகடூரமான போலியான, நிச்சயம் யாரோ ஒரு ஆணின் ஆவேசமான கூச்சல்களும் கேட்டன. அந்த ஆள், அழுவதை நிறுத்தச்சொல்லி கத்திக்கொண்டிருப்பதாகத் தோன்றியது.அந்தக் குழந்தை அழுவது யாருக்கும் கேட்டுவிடக்கூடாது என்ற பதற்றத்தில் அவரே குழந்தையைவிட அதிகமாக சத்தம்போட்டுக் கொண்டிருந்தார். அந்தக் கத்தல்கள் இரக்கமற்று மிருகத்தனமாக இருந்தன.குழந்தை மன்னிப்புக் கேட்டு கெஞ்சிக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. அவன் வலது பக்கமும் இடது பக்கமும் இரண்டு வாசல்கள் இருந்த சிறிய நடையில் கால் வைத்தபோது, மிகவும் அகலமான, குண்டான, அழுக்கான ஒரு பெண்மணியைப் பார்த்தான்.அவளிடம் பாவெல் பாவ்லோவிச் எங்கு வசிக்கிறார் என்று வெல்ச்சேனினோ கேட்டான். அவள் தனக்குப் பின்னால் அழுகைச்சத்தம் கேட்டுக்கொண்டிருந்த கதவை சுட்டிக்காட்டினாள். அவளது பருத்த, இளஞ்சிவப்பான முகத்தில் ஒரு வெறுப்பான பாவனை படர்ந்தது.

“பாருங்கள், என்ன அட்டகாசம் செய்துகொண்டிருக்கிறார் அவர்…“ என்று அடித்தொண்டையில் முணுமுணுத்தபடி படிக்கட்டை நோக்கிச் சென்றாள்.

வெல்ச்சேனினோ முதலில் கதவைத் தட்ட விரும்பினான்.ஆனால் மனதை மாற்றிக்கொண்டு கதவை தள்ளித்திறந்து பாவெல் பாவ்லோவிச்சின் அறைக்குள் நுழைந்தான். அதிகம் பெரியதாக இல்லாத, மங்கலான அறைக்கலன்களுடன் அலங்கோலமாக இருந்த அந்த அறையின் மத்தியில் பாவெல் பாவ்லோவிச் மேல்கோட்டோ அல்லது உள்கோட்டோ எதுவுமின்றி வெறும் கைவைத்த சட்டை  அணிந்து நின்றிருந்தார். கோபத்தில் சிவந்திருந்த முகத்துடன் சத்தம் போட்டும், சைகை செய்தும், காலால் உதைத்தும் (அப்படித்தான் வெல்ச்சேனினோவுக்குத் தோன்றியது) பெரியவர்கள் அணிவதைப் போன்ற கருப்பு கம்பளி கவுன் அணிந்திருந்த பரிதாபமான எட்டுவயதுச் சிறுமி ஒருத்தியை மிரட்டிக் கொண்டிருந்தார். அவளுக்கு முற்றிய ஹிஸ்டீரியா நோய் இருப்பதைப்போல் தோன்றிற்று. வெறிபிடித்ததுபோல் அழுதுகொண்டே, பாவெல் பாவ்லோவிச்சின் உடையை இழுக்கவும், அவரை அணைத்துக்கொள்ளவும் விரும்பியவள்போல் கைகளை நீட்டி மன்றாடிக்கொண்டிருந்தாள்.  அன்னியன் ஒருவனைக் கண்டதும், ஒரே நொடியில் அனைத்தும் மாறின. அந்தச் சிறுமி, கூச்சலிட்டுக் கொண்டே பக்கத்து சிறிய அறைக்குப் பறந்தாள்.ஒருகணம் அச்சத்தில் திகைத்த பாவெல் பாவ்லோவிச்சின் முகம், உடனே புன்னகையாக மாறியது.நேற்றிரவு வெல்ச்சேனினோ கதவைத் திறந்து  அவரை  எதிர்கொண்டபோது இருந்த அதே புன்னகை.

“எப்படி இங்கே, அலெக்ஸி இவானொவிச்?“ அவர் உண்மையாகவே சந்தோஷத்துடன் கூவினார். “கொஞ்சம்கூட நான் உங்களை எதிர்பார்க்கவில்ல. வாருங்கள், இப்படி வாருங்கள், இப்படி உட்காருங்கள். அந்த சோபாவில் உட்காருங்கள் இல்லை, இங்கே  கைவைத்த நாற்காலியில்… அமருங்கள்.“ தன் உள்கோட்டை போடமறந்து, பதற்றத்தில் அவரசமாக மேல்கோட்டை போட்டார்.

“சம்பிரதாயமாக இருக்கவேண்டாம், இயல்பாக எப்போதும்போல் இருங்கள்“ என்று கூறியபடி வெல்ச்சேனினோவ் ஒரு நாற்காலியில் அமர்ந்தான்.

“ஓ, இல்லை. சம்பிரதாயத்தைக் கடைப்பிடிக்க அனுமதியுங்கள்,இங்கே உட்காருங்கள், இது கொஞ்சம் கௌரவமாக இருக்கும். கடவுளே, ஏன் அந்த வராந்தா நாற்காலியில் உட்காருகிறீர்கள்? இந்த வசதியான கைவைத்த நாற்காலியில் மேசை பக்கத்தில் வந்து அமருங்கள். ஆஹா, இந்தச் சந்திப்பை நான் எதிர்பார்க்கவேயில்லை!“

அவர் ஒரு பிரம்பு நாற்காலியின் முனையைப் பிடித்து இழுத்துவந்து, தனது ‘எதிர்பாரா விருந்தாளி’யின் பக்கத்தில் அல்லாமல், நேர்எதிரான கோணத்தில் போட்டு உட்கார்ந்தார்.

“ஏன் என்னை எதிர்பார்க்கவில்லை? இந்த நேரத்திற்கு வருவதாக நான் நேற்று உங்களிடம் சொன்னேன் அல்லவா?“

“நீங்கள் வரமாட்டீர்கள் என்று நினைத்தேன்.இன்று காலையில் விழித்துக்கொண்டபோது நேற்றிரவு நடந்தவற்றை நினைத்துப் பார்த்தேன்.உங்களை மீண்டும் காணும் மனோதிடம் எனக்கில்லை.“

வெல்ச்சேனினோ, சுற்றும்முற்றும் பார்த்தான். அறை அலங்கோலமாக இருந்தது, படுக்கை மடித்து வைக்கப்பட்டிருக்கவில்லை, துணிகள் இறைந்துகிடந்தன, மேசையில் கண்ணாடி கோப்பைகள் காபி அடிவண்டலுடன் இருந்தன, மேசைவிரிப்பில் ரொட்டித்துண்டுகள் சிதறியிருந்தன, பாதி முடிக்கப்படாத ஷாம்பெய்ன் புட்டி கார்க் மூடாமல் இருந்தது, அதனருகில் அருந்திய கோப்பை கிடந்தது. அவன் இரண்டாவது அறை இருந்த திசையை நோக்கி கடைக்கண்ணால் பார்வையைச் செலுத்தினான்.ஆனால் அங்கே முற்றிலும் நிசப்சமாக இருந்தது. அங்கே அடைக்கலம் புகுந்த சிறுமி எந்தச் சத்தத்தையும் எழுப்பக் காணோம்.

“இதையெல்லாம் காலையிலா குடித்துக்கொண்டிருந்தீர்கள்?“ என்று வினவினான் வெல்ச்சேனினோ.

“மிச்சம் மீதி ஐயா“ பாவெல் பாவ்லோவிச் சங்கடப்பட்டார்.

“அச்சோ, நீங்கள் உண்மையிலேயே மிகவும் மாறிவிட்டீர்கள்!“

“இந்தக் கெட்டபழக்கங்கள் எல்லாம் கொஞ்சநாளாகத்தான். நிஜமாகவே இதெல்லாம் அந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான், நான் பொய் சொல்லவில்லை. என்னால் தாங்கமுடியவில்லை. பயப்படாதீர்க்ள் அலெக்ஸி இவானோவிச், நான் இப்போது குடித்திருக்கவில்லை. உங்கள் வீட்டில் நேற்றிரவு பேசியதைப்போல் இப்போது முட்டாள்தனமாக பேசப்போவதில்லை. நான் உண்மையாகவே சொல்கிறேன், இதெல்லாமே அதற்குப்பிறகு வந்ததுதான். ஆறு மாதத்திற்குமுன் யாராவது என்னிடம் நான் இப்படிச் சீரழிந்துபோவேன் என்று சொல்லியிருந்தால், இப்போதிருக்கும் என் முகத்தை கண்ணாடியில் காட்டியிருந்தால் நம்பியிருக்கவே மாட்டேன்!“

“அப்படியென்றால், நேற்றிரவு நீங்கள் குடித்திருந்தீர்கள் இல்லையா?“

“குடித்திருந்தேன்.“ பாவெல் பாவ்லோவிச் அரைகுறை முணுமுணுப்புடன் ஒப்புக்கொண்டு நாணத்தோடு பார்வையைத் தழைத்தார். “ஆனால் முன்னால் குடிப்பதுபோல் அதிகம் இல்லை ஐயா, நான் விளக்கமாகச் சொல்கிறேன், ஏனெனில் முன்னெல்லாம் ரொம்ப மோசம்; போதை அதிகமிருப்பதில்லை ஆனால் ஒருவிதமான குரூரமும், அலட்சியமும் இருக்கும். அப்புறம் ரொம்ப துக்கமாக உணர்வேன். ஒருவேளை, நான் அதற்காகவேதான் குடிக்கிறேனோ என்னவோ. அந்தச் சமயத்தில் நான் கோமாளித்தனமாக ஏதாவது செய்துவிடுவேன், முழுக்கமுழுக்க முட்டாள்தனமாக,யாரையாவது அவமானப்படுத்திவிடுகிறேன். நேற்றிரவு நான் மிகவும் வினோதமாக நடந்து கொண்டிருந்திருப்பேன் அல்லவா?“

“உங்களுக்கு எதுவும் நினைவில்லையா?“

“இல்லாமல் என்ன ? இருக்கிறது, எல்லாமே நினைவிருக்கிறது…“

“சரிதான். நீங்கள் நடந்துகொண்டவிதத்தைப் பார்த்து நானே அப்படித்தான் புரிந்துகொண்டேன்.“ வெல்ச்சேனினோ சமாதானப்படுத்தும் தொனியில் பேசினான். அத்தோடு, நானே கொஞ்சம் எரிச்சலுடன் பொறுமையில்லாமல்தான் நடந்துகொண்டேன்.அதை வெளிப்படையாகவே ஒப்புக்கொள்கிறேன். சிலசமயம் நானும் சரியாக இருப்பதில்லை.மேலும் பாதி இரவில் உங்களுடைய திடீர் வருகைவேறு…“

“ஆம், பாதி இரவில்! பாதி இரவில்!“ பாவெல் பாவ்லோவிச் ஆச்சரியத்தோடும், கண்டனத்தோடும் தலையை உதறிக்கொண்டார். “ஏன்தான் அப்படிச் செய்தேனோ! நீங்களே கதவைத் திறக்காமல் இருந்திருந்தால் நான் திரும்பப் போயிருப்பேன். ஒரு வாரத்துக்குமுன் உங்கள் வீட்டுக்கு வந்திருந்தேன், அலெக்ஸி இவானோவிச். ஆனால் நீங்கள் வீட்டிலில்லை.அதன்பிறகு நான் வந்திருக்கவேமாட்டேன்… எல்லாத்துக்கும் மேலாக, நான் அந்த… அந்த நிலைமையில் இருந்தும் நீங்கள்… நான் உங்களை நினைத்துப் பெருமையடைகிறேன், அலெக்ஸி இவானோவிச். நாம் ஒருவரை ஒருவர் தெருவில் நேருக்குநேர் பார்த்துக் கொண்டோம், ஆனால் நீங்கள் என்னை அடையாளம் காணமாட்டீர்கள், அவமானப்படுத்துவீர்கள் என்று பயந்தேன். ஒன்பது வருடங்கள் என்பது விளையாட்டில்லை அல்லவா!அதனால்தான் உங்களை அணுகத் தைரியமில்லை. நேற்று இரவு நான் பீட்டர்ஸ்பர்க்ஸ்க்யா ஸ்டோரோனாவிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன்.நேரம் என்ன என்பதையே மறந்துவிட்டேன். இதெல்லாம் இதனால்தான் (அவர் அந்தப் புட்டியைச் சுட்டினார்). அப்புறம் என் உணர்ச்சிகள், முட்டாள்தனம்! ரொம்ப முட்டாள்தனம்! நீங்களாக மட்டும் இல்லாதிருந்தால் யாரும் இங்கே வந்திருப்பார்களா – நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள் என்றால் அது கடந்தகால நினைவால்தான்.நேற்றிரவு நடந்த விஷயங்களுக்குப் பிறகு – நமது தொடர்பைப் புதுப்பிக்கும் நம்பிக்கையையே நான் சுத்தமாக இழந்திருந்தேன்.“

வெல்ச்சேனினோ அவரை உற்றுக் கவனித்தபடி இருந்தான். அந்த மனிதர் உண்மையாகப் பேசுவதுபோலத்தான் தோன்றியது.கண்ணியமாகவும் பேசுகிறார்.இருந்தும் அவர்கூறிய ஒரு வார்த்தையைக்கூட அவன் நம்பவில்லை, அவரது அறையில் நுழைந்த கணத்திலிருந்து அவர்மீது அவநம்பிக்கை  ஏற்பட்டிருந்தது.

“சொல்லுங்கள் பாவெல் பாவ்லோவிச், இந்த அறையில் நீங்கள் தனியாக இல்லை அல்லவா? அந்தச் சிறுமி யார், நான் உள்ளே வந்தபோது உங்களோடு இருந்தாளே?“

“எந்தச் சிறுமியைச் சொல்கிறீர்கள்? அது லிசா!“அவர் இணக்கமான புன்னகையுடன் சொன்னார்.

“லிசாவா?“ வெல்ச்சேனினோ முணுமுணுத்தான். சட்டென்று அவனது இதயம் நடுங்கியது. அந்தத் தாக்கம் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அவன் அறையில் நுழைந்தசமயம், லிசாவைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். ஆனால் நிச்சயமாக எந்தவிதமான தீய அறிகுறியையும் உணரவில்லை.அவன் மனதிற்கும் எதுவும்  விசேஷமாகத் தோன்றவில்லை.

“ஏன், எங்கள் லிசா, எங்கள் மகள் லிசா!“ பாவெல் பாவ்லோவிச் பிரகாசமான புன்சிரிப்பை உதிர்த்தார்.

“உங்கள் மகளா?  உங்களுக்கு…..…அதாவது உங்களுக்கும் மறைந்த நதாலியா வேஸிலேய்வ்னாவுக்குக் குழந்தை பிறந்ததா?“ வெல்ச்சேனினோ நம்பிக்கையற்று பீதி நிறைந்த, ஒருவிதமான பலகீனமான குரலில் வினவினான்.

“ஏன் சார்? ஓ, புரிகிறது.உண்மையிலேயே உங்களுக்கு யார் சொல்லியிருக்கப் போகிறார்கள்?நான் ஒருத்தன், நீங்கள் போனபிறகு கடவுள் எங்களுக்கு அளித்த பரிசு அவள்.“

மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டே பாவெல் பாவ்லோவிச் நாற்காலியிலிருந்து துள்ளி எழுந்தார். அவர் உண்மையிலேயே பரவசத்தில் இருப்பது தெரிந்தது.

“நான் ஒருபோதும் இந்த விஷயத்தைக் கேள்விப்படவேயில்லை“ வெளிறிப்போயிருந்த வெல்ச்சேனினோ கூறினான்.

“கண்டிப்பாக, கண்டிப்பாக.யாரிடமிருந்து நீங்கள் கேள்விப்பட்டிருக்க முடியும்.“ என்று பாவெல் பாவ்லோவிச் அலட்சியமாக, மெல்லிய குரலில் திரும்பவும் கூறினார். “நாங்கள் முற்றிலும் நம்பிக்கையிழந்து விட்டிருந்தோம், நானும் மறைந்த என் மனைவியும். உங்களுக்கே ஞாபகமிருக்கும்,அப்புறம் திடீரென்று கடவுள் ஆசீர்வதித்தார். அப்போது நான் எத்தனை பேருவகை அடைந்தேன் என்று கடவுளுக்குத்தான் தெரியும். ஆம், சரியாக நீங்கள் சென்று ஒரு வருடம் கழித்துதான். இல்லை, ஒரு வருடம்கூட இல்லை.அதற்கும் குறைவுதான், இருங்கள் சொல்கிறேன்: என் நினைவு பழுதாகவில்லை என்றால் நீங்கள் சரியாக அக்டோபர் மாதம் கிளம்பினீர்கள், அல்லது நவம்பரா?“

“நான் செப்டம்பர் தொடக்கத்திலேயே கிளம்பி வந்துவிட்டேன்.செப்டம்பர் பன்னிரெண்டு. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.“

“நிச்சயமாக  செப்டம்பர்தானா, என் ஞாபகம் பழுதடைந்துவிட்டதா? பாவெல் பாவ்லோவிச் மிகவும் ஆச்சரியமடைந்ததைப் போல் தோன்றியது. “நல்லது.அதுதான் சரியென்றால், அப்படியே வைத்துக்கொள்வோம் – நீங்கள் செப்டம்பர் பன்னிரெண்டு புறப்பட்டீர்கள். அப்புறம் லிசா மே எட்டாம் தேதி பிறந்தாள்.எனவே  செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் – ஆக எட்டு மாதம் சொச்சம் ஐயா! மறைந்த என் மனைவி எவ்வளவு மகிழ்சியடைந்தாள் என்று நீங்கள் மட்டும் அறிந்திருந்தால் …“

“குழந்தையை நான் பார்க்க வேண்டும், கூப்பிடுங்களேன்…“ வெல்ச்சேனினோ விசித்திரமான உடைந்த குரலில் அரற்றினான்.

“கண்டிப்பாக!“ பாவெல் பாவ்லோவிச் இரைந்தார், தான் சொல்லவந்த ஏதோ முக்கியமான விஷயத்தை அவசியமில்லாததைப் போல மொத்தமாக அப்படியே நிறுத்திக்கொண்டார். “இதோ, இப்போதே அவளை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்!“ அவர் லிசாவின் அறைக்கு விரைந்து சென்றார்.

மூன்று,நான்கு நிமிடங்கள் கடந்தன. வெல்ச்சேனினோ அவர்கள் கிசுகிசுப்பாகவும் வேகமாகவும் அந்த அறைக்குள் பேசிக்கொள்வதைக் கேட்டான்.பின்னர் பலவீனமான லிசாவின் குரலைக் கேட்டான்: ‘வெளியே அழைக்கவேண்டாம்‘ என்று அவள் கெஞ்சுவதாக அவன் எண்ணினான். இறுதியில் அவர்கள் வெளியே வந்தனர்.

“இதோ, வந்துவிட்டோம் நாங்கள்…“ என்றார், பாவெல் பாவ்லோவிச். “இவளுக்கு எப்போதுமே ரொம்பக்கூச்சம், ரொம்ப கர்வம். அப்படியே இறந்துபோன என் மனைவியின் அசல் பிரதி!“

லிசா, இப்போது அழுவதை நிறுத்தியிருந்தாள். ஆனால் அவள் தந்தை அவளது கையைப் பிடித்து முன்னால் தள்ளியபோது தனது கண்களை உயர்த்தவேயில்லை. அவள் நல்ல உயரமான, மெலிந்த, மிகவும் அழகான சிறுமி. தனது பரந்த நீலநிற விழிகளால் புதியவனை நோக்கி ஆர்வமும்,  வெறுப்புமான பார்வையை மின்னல்வேகத்தில் வீசிவிட்டு,உடனே கண்களைத் தழைத்துக் கொண்டாள்.  அவளது அந்தப் பார்வையில் குழந்தைமையான சுயஅபிமானமும்,  சிறுமியர்க்கேயுரிய அச்சமும் இருந்தன, இதற்குமுன் வீட்டிற்கு வந்திராத நபருக்கு எதிரே விடப்பட்டதால், அறையின் மூலையிலிருந்து மறைவாக, திருட்டுத்தனமாக அவனைப் பார்த்தாள். ஏனோ  வெல்ச்சேனினோவுக்கு அது ஒரு குழந்தைக்கான பார்வையே இல்லை என்று தோன்றிற்று. அவளுடைய அப்பா அவளை அருகே கூட்டிவந்தார்.

“இவர், உன் அம்மாவுக்குத் தெரிந்தவர், எங்களுடைய நண்பர்.வெட்கப்படாதே, கை குலுக்கு…ம்…“

அந்தச் சிறுமி மெதுவாக தலைவணங்கி, தயக்கத்துடன் கையை நீட்டினாள்.

“யாரையாவது வணங்கும்போது பாரம்பரியமான முறையில் வணங்கும் முறையை கற்றுக் கொடுக்க நதாலியா வேஸிலேய்வ்னாவுக்கு விருப்பமில்லை. ஆங்கில முறைப்படி சும்மா கொஞ்சம் குனிந்து விருந்தினரிடம் கையைக் குலுக்க மட்டும் கற்றுக்கொடுத்திருக்கிறாள்,“ பாவெல் பாவ்லோவிச் விளக்கிக் கூறிக்கொண்டே வெல்ச்சேனினோவை உற்றுப்பார்த்தார்.

தான் கூர்ந்து கவனிக்கப்படுவது வெல்ச்சேனினோவுக்குத் தெரிந்தது.ஆனால் அவன் தனது சஞ்சலத்தை அதற்குமேலும் மறைக்க எத்தனிக்கவில்லை. அவன் இன்னமும் லிசாவின் கரங்களைப் பற்றியபடி, அவளை ஆவலுடன் கவனித்துக்கொண்டு தனது நாற்காலியில் கச்சிதமாக உட்கார்ந்திருந்தான். லிசாவை ஏதோ ஒன்று ரொம்ப கஷ்டப்படுத்திக்கொண்டு  இருந்தது, தன் கைகளை புதிய மனிதரிடமிருந்து விலக்கிக்கொள்ள மறந்து, அவள் தன் தந்தையின்மீது கண்களைப் பதித்து, பயந்தபடி அவர் சொல்வதைக் கவனித்துக் கொண்டிருந்தாள். வெல்ச்சேனினோ, அந்தப் பெரிய நீலநிறக் கண்களை உடனே அடையாளம் கண்டுகொண்டான்.ஆனால் அவனை அதிகம் கவர்ந்தது அவளது முகத்தின் அசாதாரணமான வெண்மையும், தலைமுடியின் நிறமும்தான்.அந்த இரண்டு விஷயங்களும் அவனுக்கு மிக விசேஷமாகத் தெரிந்தன. அவளது முகம் மற்றும் உதடுகளின் வடிவமும் நேர்மாறாக அப்படியே நதாலியா வேஸிலேய்வ்னாவை போலவே இருந்தன. இதற்கிடையில், பாவெல் பாவ்லோவிச் ரொம்பநேரமாக ஏதோ, அசாதாரண தீவிரத்துடன் உணர்ச்சிகரமாக சொல்லத் தொடங்கியிருந்தார், ஆனால் வெல்ச்சேனினோ ஒரு வார்த்தையைக்கூட கவனிக்கவில்லை.கடைசி வாக்கியம் மட்டும் காதில் விழுந்தது:

“அலெக்ஸி இவானோவிச், கடவுள் தந்த இந்தப் பரிசால் நாங்கள் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தோம் என்பதை நீங்கள் கற்பனைகூட செய்யமுடியாது.இவள் பிறந்தபின், இவளே என் மொத்த உலகமுமாக ஆனாள்.என்னிடமிருந்து களங்கமற்ற மகிழ்ச்சியை கடவுள் எத்தனைதூரம் கவர்ந்துகொள்ள விரும்பினாலும் எனக்கு  லிசா இருக்கிறாள் இன்னும் என்று நான் எண்ணிக்கொள்வேன். குறைந்தபட்சம் அதை மட்டும் நான் உறுதியாகச் சொல்வேன் !“

“நதாலியா வேஸிலேய்வ்னாவுக்கு?“ வெல்ச்சேனினோ வினவினான்.

பாவெல் பாவ்லோவிச்சின் முகம் சுணங்கியது. “அவளை உங்களுக்குத் தெரியுமே, ஞாபகமில்லையா?அவள் அதிகம் பேசமாட்டாள்.தன் உணர்வுகளை எப்போதும் வார்த்தைகளில் சொன்னதில்லை, ஆனால் அவள், தன் மரணப்படுக்கையில் லிசாவிடம் எப்படி விடைபெற்றாள் தெரியுமா? அந்தச் சமயத்தில்தான் எல்லாவற்றையும் வெளியே கொட்டினாள்! அவள் மரணப்படுக்கையில் இருந்தாள் என்று இப்போது சொன்னேனல்லவா, அதற்கு முன்தினம் திடீரென்று அவள் பயங்கரமாக பதற்றமானாள், கோபப்பட்டாள்.அவளுக்கு சாதாரண காய்ச்சல்தான் ஆனால் மருந்துகள் கொடுத்தே அவளை மோசமாக்கிவிட்டார்கள் என்றாள், எங்களது இரண்டு மருத்துவர்களுக்கும் ஒன்றுமே தெரியவில்லை என்றாள், கோச், (எங்களது அலுவலக மருத்துவர், உங்களுக்கு நினைவிருக்கிறதா? குள்ளமான மனிதர்)  வந்துவிட்டால் இரண்டே வாரங்களில் சரியாகிவிடுவேன் என்றாள். அதுமட்டுமல்ல; இறந்துபோவதற்கு ஐந்து மணிநேரத்துக்கு முன்பு, மூன்று வாரங்கள் கழித்து நடக்கவிருந்த புனிதப்பெயர் திருநாளுக்கு அவளது அத்தையைச் – லிசாவின் ஞானத்தாய்- கட்டாயம் சென்று பார்க்கவேண்டும் என்றெல்லாம் சொன்னாள். “

லிசாவின் கையைப் பற்றிக்கொண்டே வெல்ச்சேனினோ நாற்காலியிலிருந்து சட்டென்று எழுந்தான். குழந்தை, தன் தந்தையின்மேல் வீசிய அனல் பார்வையில் ஏதோ ஒரு வெறுப்பு இருப்பதாக அவனுக்குத் தோன்றியது.

“இவளுக்கு உடம்பு சுகமில்லையா?“ அவன்  விசித்திர பதற்றத்துடன் கேட்டான்.

“அப்படித் தெரியவில்லை. ஆனால் எங்களது சூழ்நிலை இங்கே கொண்டுவந்து சேர்த்துவிட்டது“ பாவெல் பாவ்லோவிச் துயரார்ந்த அக்கறையுடன் சொன்னார்.

“அவள் மிகவும் விநோதமான குழந்தை. அத்தோடு பயந்த சுபாவம், அவளுடைய அம்மா மரணமடைந்தபிறகு இரண்டு வாரங்கள் அவளுக்கு ஹிஸ்டீரியாவால் உடம்பு சரியில்லாமல் போனது. இப்போதுகூட எங்களுக்கிடையில் ஒரு அழுகை போராட்டம் நடந்தது.நீங்கள் வீட்டுக்குள் நுழைந்தீர்களே அப்போதுகாதில் விழுந்திருக்கும் . லிசா காதில் விழுகிறதா? ம்?  எல்லாம் எதற்காக?  நான் அவளை இங்கே தனியாக விட்டுவிட்டு வெளியே போய்விட்டேனாம் .அதாவது, அவள் அம்மா உயிரோடு இருந்தபோது  அவள்மீது அன்பாக இருந்ததுபோல் இப்போது இல்லையாம் – அப்படித்தான் அவள் என்மீது பழி சுமத்துகிறாள்.  சின்னக்குழந்தைதானே, பொம்மை வைத்து விளையாட வேண்டியதுதானே. இந்தமாதிரி கற்பனைகளை ஏன் மண்டைக்குள் போட்டு குழப்பிக்கொள்கிறாள்! ஆனால் இங்கே அவளோடு விளையாடவும் யாருமில்லை.“

“ஆனால் எப்படி? அதாவது, நீங்கள் இரண்டே பேர்தான் இங்கே இருக்கிறீர்களா?“

“ஆம், நாங்கள் முற்றிலும் தனியாக இருக்கிறோம்.ஒரு பெண் வேலை செய்வதற்காக தினமும் ஒருவேளை வருவாள்.“

“நீங்கள் வெளியே செல்லும்போது அவளை மட்டும் இங்கே தன்னந்தனியாகவா விட்டுச் செல்கிறீர்கள்?“

“வேறு எப்படி? நேற்று நான் வெளியே சென்றபோது அவளை அந்தச் சின்னஅறையில் பூட்டி வைத்துவிட்டுச் சென்றேன், இன்று அதற்காகத்தான் இந்தக் கூச்சல். ஆனால் நான் என்ன செய்வது, நீங்களே யோசித்துப் பாருங்கள்? நேற்றைக்கு முன்தினம் நான் வெளியேபோயிருந்த சமயம் இவள் கீழே தனியாகச் சென்றிருக்கிறாள்.யாரோ ஒரு பையன், அவள் தலைமீது கல்லை எறிந்திருக்கிறான். இதுபோக, ஒவ்வொரு சமயம் இவள், கீழ்முற்றத்தில் எல்லோரிடமும் ’நான் எங்கே, எங்கே’ என்று கேட்டு அழுதுகொண்டிருக்கிறாள். ஆனால் நான் செய்வதும் சரியில்லைதான்.ஒருமணிநேரம் என்று சொல்லிவிட்டு, அடுத்த நாள் காலையில் வருவேன் – அப்படித்தான் நேற்று நடந்தது. நல்லவேளை, நான் இல்லாத சமயம் வீட்டுக்கார அம்மாள் இவளை வெளியே திறந்துவிட்டிருக்கிறாள்.பூட்டுத் திறப்பவனை அழைத்துவந்து கதவை உடைத்துத் திறந்திருக்கிறாள்.அது இன்னும் அவமானமாகிவிட்டது.நிஜமாகவே நான் ஒரு அரக்கன்போல உணர்ந்தேன். இதெல்லாமே முட்டாள்தனம்தான்.“

“பப்பா…“ லிசா பயத்துடனும், பதற்றத்துடனும் அழைத்தாள்.

“என்ன மறுபடியும் ஆரம்பித்துவிட்டாயா, திரும்பவும் அதே விஷயத்தை! சிறிதுநேரத்துக்கு முன் நான் என்ன சொன்னேன்?“

“மாட்டேன் பப்பா மாட்டேன்!“ லிசா பயத்தோடு, கரங்களைப் பற்றிக்கொண்டு பீதியுடன் மீண்டும் மீண்டும் அரற்றினாள்.

“இந்தச் சூழ்நிலையை இதேபோலவே தொடரமுடியாது.“ வெல்ச்சேனினோ திடீரென்று பொறுமையிழந்தவனாக, அதிகாரம் தொனிக்கப் பேசினான். “இத்தனைக்கும், இத்தனைக்கும் நீங்கள் வசதியான மனிதர், இந்தமாதிரியான மோசமான அறைகளுள்ள வீட்டில் இப்படிப்பட்ட நிலையில் எவ்வாறு வசிக்கமுடியும்?“

“மோசமாகவா இருக்கிறது? ஆனால் பாருங்கள்,  இன்னும் ஒரு வாரத்தில் நாங்கள் இங்கிருந்து கிளம்பிவிடுவோம். நான் எவ்வளவு வசதியானவக இருந்தாலும், பணத்தைப் பொறுத்தவரையில் ஏற்கனவே  அதிகமாக செலவழித்துவிட்டேன்…“

“நல்லது, அதிகம் பேசத் தேவையில்லை.“ வெல்ச்சேனினோ அதிகரித்துக் கொண்டிருந்த  எரிச்சலுடன் இடைமறித்தான்.“பேசிப் பிரயோஜனமில்லை, நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்று நன்றாகத் தெரிகிறது.என்ன உள்நோக்கத்துடன் சொல்லவருகிறீர்கள் என்பதும் புரிகிறது.“ அவனது வார்த்தைகள் தெளிவான குறிப்பை உணர்த்தின. “கவனியுங்கள்“ அவன் தொடர்ந்தான்.“நான் உங்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன், இன்னும் ஓரிரு வாரம் இங்கே இருக்கப்போவதாக கொஞ்சநேரத்திற்கு முன்பு சொன்னீர்கள். எனக்குத் தெரிந்த இடம் ஒன்று இருக்கிறது.இருபது வருடங்களாக என் சொந்த வீடு போல எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம். போகோரெல்ட்ஸேவ் என்பது அவர்களது குடும்பப் பெயர். அலெக்ஸான்டர் பாவ்லோவிச் போகோரெல்ட்ஸேவ் ஒரு கவுன்சிலர், உங்களுக்கு மாற்றல் கிடைப்பதற்குக்கூட அவர் உதவி புரிவார். அவர்கள் குடும்பத்துடன் அவர்களது கோடை வாசஸ்தலத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு கிராமப்புறத்தில் ஒரு பிரமாண்டமான பங்களா இருக்கிறது. க்ளாவ்டியா பெட்ரோனவா போகோரெல்ட்ஸேவ் என் சகோதரி போல, தாய் போல. அவர்களுக்கு எட்டுக் குழந்தைகள்.நான் லிசாவை அங்கே கூட்டிச் செல்கிறேன்,  இப்போதே. நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். அவர்கள் இரண்டு வாரங்களுக்கு இவளை சந்தோஷமாக பார்த்துக்கொள்வார்கள். அன்போடும், பாசத்துடனும், அவர்களது மகள்போலவே நடத்துவார்கள். சொந்த மகள்போலவே!“

தன்னை மறைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு அவன் மிகப் பதற்றமாக இருந்தான்.

“அது சரிப்படாதே“ என்ற பாவெல் பாவ்லோவிச், முகத்தை அஷ்டகோணலாக்கி வெல்ச்சேனினோவின் கண்களை வஞ்சகமாக ஊடுருவிப் பார்த்தார்.

“ஏன், ஏன் சரிப்படாது?“

“ஆனால் எப்படி ஐயா, குழந்தையை அதுபோல அனுப்ப முடியும், அதுவும் திடீரென்று? நீங்கள் உண்மையான அக்கறை கொண்டவர்தான், அதைக் குறைசொல்லவில்லை.இருந்தாலும் ஒரு அன்னியக் குடும்பம், அதுவும் ரொம்பப் பெரிய இடத்தைச் சேர்ந்தவர்கள், இவளை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரியவில்லை…“

“ஆனால் நான் சொன்னேனல்லவா, அவர்கள் என்னை தங்கள் குடும்பத்தில் ஒருவனாக நடத்துபவர்கள் என்று“ என்றான், வெல்ச்சேனினோ கோபத்துடன்.  “க்ளாவ்டியா பெட்ரோவ்னா இதை ஒரு உதவியாக எனக்காக மகிழ்ச்சியுடன் செய்வாள். லிசாவை என் சொந்த மகளைப் போலவே கருதி……….அதைவிடுங்கள் நீங்கள் ஏதோ பேசவேண்டும் என்பதற்காகவே உளறுகிறீர்கள் என்று உங்களுக்கே நன்றாகத் தெரியும். ஆகவே, பேசுவதற்கு இனி எதுவுமில்லை“ அவன் காலால் தரையை உதைத்தான்.

“அதாவது, இது ரொம்ப வித்தியாசமாக இருக்குமல்லவா? அத்தோடு நானும் அவளை அங்கே வந்து ஓரிரு முறை பார்க்கவேண்டும்? அவள் அப்பா இல்லாத குழந்தையாகவும் ஆவிடக்கூடாது, இல்லையா? ஹி ஹி“ என்று இளித்தார், “அதுவும் ஆடம்பரமான வீட்டுக்கு போய்…“

“அது ஒன்றும் ‘ஆடம்பரமான‘ வீடல்ல மிகவும் எளிமையான வீடு“ என்று வெல்ச்சேனினோ கத்தினான். “அங்கே நிறைய குழந்தைகள் இருப்பார்கள் என்கிறேன். இவள் அங்கே புத்துணர்ச்சி அடைவாள், அதுதான் மொத்த நோக்கமே. மேலும் நீங்கள் விரும்பினால் நாளைக்கே நான் உங்களை அங்கே அழைத்துச் செல்கிறேன். எப்படியிருந்தாலும் நீங்கள் அவர்களுக்கு நன்றி சொல்வதற்காக அங்கே போகத்தானே வேண்டும். நீங்கள் பிரியப்பட்டால் தினமும் கூட நாம் போவோம், …“

“இருந்தாலும் இதெல்லாம் ஏதோ…“

“உளறாதீர்கள்! எல்லாவற்றுக்கும்மேல்  உங்களுக்கே தெரியும்! சொல்வதைக் கேளுங்கள், இன்று மாலை என் வீட்டுக்கு வந்து இரவு தங்குங்கள்.காலையில் சீக்கிரமே நாம் கிளம்பி மதியத்திற்குள் அங்கே போய்விடலாம்.“

“எனது ரட்சகரே! இரவு உங்கள் வீட்டில் தங்க வேண்டுமா?“ பாவெல் பாவ்லோவிச் சட்டென இளகிய உணர்ச்சி மேலிட ஒப்புக்கொண்டார்.“ தாங்கள் மிகவும் அருளார்ந்த வள்ளல்தான். அவர்களது  பங்களா எங்கே உள்ளது? “

“அது லெஸ்னோயில் இருக்கிறது.”

“அவளது உடைகள்பற்றி மட்டும்தான் எனக்குக் கவலையாக இருக்கிறது. அந்தமாதிரி வசதியான வீட்டுக்குப் போகும்போது, அதுவும் பங்களாவுக்கு ,உங்களுக்குத் தெரியும் ஒரு தந்தையின் மனம்!“

“அவள் உடையில் என்ன தவறு? அவள் துக்கம் அனுஷ்டிக்கிறாள். வேறு எந்தமாதிரி உடையணிவாள்?  இதுதான் சரியான உடை என்று சொல்லலாம். ஒரேயொரு விஷயம்,  அவளது உள்ளாடைகள் இன்னும் சுத்தமானதாக இருக்கலாம், மேலும் அவளது சால்வை…..“ (அவளது சிறிய சால்வையும் ,உடைகளுக்குக்கீழ் தெரியும்  உள் பாவாடையும் உண்மையிலேயே மிகவும் அழுக்காக இருந்தன.)

“இந்த நிமிடமே அவள் உடை மாற்றிவிடுவாள், நிச்சயமாக மாற்றிவிடுவாள்“, பாவெல் பாவ்லோவிச் வீண் பரபரப்படைந்தார். “அவளுக்குத் தேவையான மற்ற உள்ளாடைகளையும் நாம் எடுத்துக்கொள்வோம், அவையெல்லாம் மரியா சிஸோயெவ்னாவிடம் இருக்கின்றன, அவள்தான் துவைக்கிறாள்.“

“யாரையாவது அனுப்பி ஒரு வண்டியை அழைத்துவரச் சொல்லுங்கள்,“ வெல்ச்சேனினோ அவரை இடைமறித்துச் சொன்னான். “முடிந்தால் வேகமாக வரச் சொல்லுங்கள்.“

ஆனால் ஒரு தடை ஏற்பட்டது. லிசா வருவதற்கு அறவே மறுத்தாள், இரண்டு ஆட்களும் பேசிய முழுவதையும் அவள் பயத்தோடு கேட்டுக்கொண்டிருந்தாள்.பாவெல் பாவ்லோவிச்சை சம்மதிக்கச் செய்துகொண்டிருந்தபோது, அவளை ஒரு பார்வை பார்த்திருந்தால் அப்பட்டமான அவநம்பிக்கை, அவள் முகத்தில் பெரிய எழுத்தில் எழுதியிருப்பதை வெல்ச்சேனினோ கண்டு கொண்டிருப்பான்.

“நான் போகமாட்டேன்,“ அவள் உறுதியான குரலில் அமைதியாகச் சொன்னாள்.

“பார்த்தீர்களா, இதுதான், அப்படியே அவள் அம்மாவைப் போலவே!“

“நான் அம்மாவைப் போல இல்லை, அம்மாவைப் போல இல்லை!“ லிசா, தன் அம்மாவைப் போல இருப்பது பயங்கரமான குற்றம் என்பதைப்போல், மனச்சோர்வுடன் தனது சிறு கைகளை கெஞ்சுவதைப்போல் நீட்டி தன் தந்தையிடம், தான் அப்படி இல்லை என்பதை பிரகடனப் படுத்தும்விதமாக கிறீச்சிட்டாள். “பப்பா, பப்பா, நீங்கள் என்னை விட்டுப்போனால்…“ திடீரென்று அவள் அதிர்ந்துபோயிருந்த வெல்ச்சேனினோவின் பக்கம் ஆத்திரத்துடன் திரும்பினாள். “நீ என்னைக் கூட்டிக்கொண்டு போனால், நான்…“

அவள், மேலே எதையும் பேசுவதற்குள் பாவெல் பாவ்லோவிச் அவளது கையையும் பிடரியையும் பற்றி, இனியும் மறைக்க அவசியமில்லை என்பதுபோல் வன்மத்துடன், அவளை அருகிலிருந்த சிறிய அறைக்குள் இழுத்துச் சென்றார். பல நிமிடங்களுக்கு அங்கிருந்து கிசுகிசுப்பு கேட்டது, அதன்பின்னர் அடங்கிய அழுகை. வெல்ச்சேனினோ, தானே உள்ளே போகலாம் என்று நினைத்தபோது, பாவெல் பாவ்லோவிச் அவராக வெளியே வந்து, ஒரு இளிப்புடன் லிசா சம்மதித்துவிட்டதாகவும், இன்னும் ஒருநிமிடத்தில் வந்து விடுவாள் என்றும் கூறினார். வெல்ச்சேனினோ அவரது பார்வையைத் தவிர்ப்பதற்காக, கண்களை விலக்கிக் கொண்டான்.

வராந்தாவில் அவன் பார்த்த அந்தக் குண்டுப் பெண்மணி -மரியா சிஸோயெவ்னா – உள்ளே வந்தாள். தன்னோடு கொண்டுவந்திருந்த லிசாவின் உள்ளாடைகளை எடுத்து அழகான சிறிய பையில் வைக்கத் தொடங்கினாள்.

“நீங்கள் குழந்தையை அழைத்துப் போகப்போகிறீர்கள் இல்லையா?“ அவள் வெல்ச்சேனினோவைக் கேட்டாள். “உங்களுக்குக் குடும்பம் இருக்கிறது இல்லையா? நீங்கள் செய்வது நல்ல காரியம் ஐயா! அவள் மிகவும் அமைதியான குழந்தை, இந்த துரதிர்ஷ்டத்திலிருந்து அவளை காப்பாற்றிவிடுங்கள்.“

“அப்படியா, மரியா சிஸோயெவ்னா.கொஞ்சம் அதிகமாகத்தான் பேசுகிறாய்“ பாவெல் பாவ்லோவிச் முணுமுணுத்தார்.

“நான் மரியா சிஸோயெவ்னா என்று எனக்குத் தெரியும். இங்கே நீங்கள் வைத்திருப்பது ஒரு துரதிர்ஷ்டமான குகை இல்லையா? எதையும் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு சின்னக்குழந்தை இந்த வெட்கக்கேட்டையெல்லாம் பார்ப்பது முறையா? அதோ வண்டி வந்தாகிவிட்டது ஐயா, நீங்கள் லெஸ்னோயிக்குத்தானே போகவேண்டும்?“

“ஆமாம்,  ஆமாம்…“

“நல்லது, இனி நல்லதே நடக்கட்டும்.“

லிசா, வெளிறிப்போன முகத்துடன் கண்களைத் தாழ்த்தியபடி வெளிளே வந்து தன் பையை எடுத்துக்கொண்டாள். வெல்ச்சேனினோவை ஏறிட்டும் பார்க்கவில்லை; அவள் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டாள், தன் தந்தையைக் கட்டியணைக்கவோ, போய்வருகிறேன் என்று விடைபெறவோகூட இல்லை. அவளது தந்தை அவளை மென்மையாக நெற்றியில் முத்தமிட்டு, மெதுவாக தட்டிக் கொடுத்தார்; அப்போது அவளது உதடுகள் துடித்தன, முகவாய் நடுங்கியது, ஆனாலும் அப்போதும் அவரை நிமிர்ந்து பார்க்கவேயில்லை. பாவெல் பாவ்லோவிச் வெளிறிப் போயிருப்பதுபோல் தோன்றியது. அவரது கைகள் உதறின – வெல்ச்சேனினோ அதைத் தெளிவாகப் பார்த்தான். இருந்தாலும், அவன் வேறெங்கோ பார்வையைத் திருப்ப சிரமப்பட்டு முயற்சித்தான். அவன் விரும்பியதெல்லாம் அங்கிருந்து வெளியேறுவதை மட்டும்தான். ‘வேறுவழியில்லை, என்னைக் குறைசொல்ல ஏதுமில்லை. இப்படித்தான் செய்யவேண்டும்.’ என்று எண்ணிக்கொண்டான். அவர்கள் படியிறங்கி வந்தபோது மரியா சிஸோயெவ்னா குழந்தையை முத்தமிட்டு வழியனுப்பி வைத்தாள்.வண்டியில் ஏறி அவர்களது இருக்கைகளில் உட்கார்ந்தபோது லிசா, தன் தந்தையை முழுதாக நிமிர்ந்து பார்த்தாள், கைகளைப் பலமாக ஆட்டி கத்தினாள்: அடுத்த விநாடி அவள் வெளியே குதித்து அவரிடம் ஓடியிருப்பாள், ஆனால் அதற்குள் குதிரைகள் வேகமெடுத்திருந்தன.

 

***

அடுத்தநாள் காலையில் போக்ரேல்ட்ஸேவைக் காண ஒன்றாகச் செல்லவேண்டும் என்பதால்,  சீக்கிரம் வருவதாக வாக்களித்திருந்த பாவெல் பாவ்லோவிச்சுக்காகக் காத்துக்கொண்டிருக்கையில் காபியை உறிஞ்சிக்கொண்டும், புகைத்துக்கொண்டும் வெல்ச்சேனினோ அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தான். முதல்நாள் அடி வாங்கியதை அடுத்தநாள் ஒவ்வொரு கணமும் மறக்கமுடியாத மனிதனைப் போன்ற உணர்வுடன் இருந்தான். ‘ஹும்…விஷயம் என்னவென்று அவருக்கு நன்றாகவே புரிந்துவிட்டிருக்கிறது. லிசா மூலமாக என்னை பழிவாங்கக் கூடும்‘ என்று அவன் அச்சத்துடன் சிந்தித்தான்.

அவன் மனக் கண்முன் அந்த பரிதாபக் குழந்தையின் அன்பான உருவம் சோகமாக நிழலாடியது. இன்றே, மிக விரைவில், இன்னும் இரண்டு மணிநேரங்களில், அவன் தன்னுடைய லிசாவை பார்க்கப்போகிறான் என்ற எண்ணத்தில் அவனது இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. ‘வேறெதுவும் சொல்வதற்கு இல்லை.‘ அவன் தனக்குத்தானே உணர்ச்சிமிகு தீர்மானமாக சொல்லிக் கொண்டான். ‘என் மொத்த வாழ்க்கையும்,  மொத்தக் குறிக்கோளும் இப்போது அவளிடம் இருக்கிறது! முகத்துக்கு நேராக ஏற்பட்ட அவமானங்களையும் , நினைவுகளையும் பற்றி எனக்கு எந்த அக்கரையும் இல்லை. இதுவரை எப்படி நான் வாழ்ந்து கொண்டிருந்தேன்? ஒழுங்கீனமான, துயரம்  நிறைந்த வாழ்க்கை………..ஆனால் இப்போது….. இப்போது…………இப்போது  எல்லாமே மாறிவிட்டது, முற்றிலும் மாறிவிட்டது!‘

ஆனால்,  வெற்றிக் களிப்பையும் மீறி, அவனுக்கு ஆழ்ந்த வருத்தமும் தோன்றியது.

‘அவர் என்னை லிசா மூலமாக சித்ரவதை செய்வார்! லிசாவையும் வதைப்பார். அப்படித்தான் அவர் எல்லாவற்றுக்கும் சேர்த்து என்மீது பழி வாங்குவார். ஓ, இருக்கட்டும். நிச்சயம் நேற்று இரவுபோல எந்த முட்டாள்தனத்தையும் இனி நான் அனுமதிக்கக்கூடாது.‘ அந்த நினைவுகளில் கூசிக் குறுகினான். ‘இப்போதே மணி பதினொன்றாகிவிட்டது. இன்னும் அவர் வரவில்லை!‘

அவன் பனிரெண்டரை மணி வரை காத்திருந்தான்.அவனது வருத்தம் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. இன்னமும் பாவெல் பாவ்லோவிச்சின் சுவடுகூட தென்படவில்லை. நேற்றுபோலவே அத்துமீறி போய், அவர் வேண்டுமென்றே வராமல் இருக்கிறார் என்று  நினைக்க நினைக்க அவனுக்குக் கோபம் அதிகரித்துக்கொண்டே வந்தது. ‘நான் அவரை எதிர்பார்த்து இருக்கிறேன் என்று அவருக்குத் தெரியும், லிசா இதை எப்படி எடுத்துக்கொள்வாள்? அவர் இல்லாமல் அவளை நான் எவ்வாறு சந்திக்க முடியும்?‘

ஒரு மணிக்கு மேல் அவனால் காத்திருக்க முடியவில்லை.பாவெல் பாவ்லோவிச்சின் அறைக்கு விரைந்தான். அவர் இரவு உறங்க அங்கே வரவேயில்லை என்று சொல்லப்பட்டது.காலை எட்டு மணிக்குமேல் சிறிதுநேரம் தென்பட்டதாகவும், பிறகு மீண்டும் சென்றுவிட்டதாகவும் கூறினார்கள். வெல்ச்சேனினோ பாவெல் பாவ்லோவிச்சின் அறைக்கு வெளியே நின்று பணியாளர் சொல்வதைக் கேட்டுக்கொண்டே மறதியாக கதவுக் கைப்பிடியை இழுத்தான். அதில் எந்த அர்த்தமுமில்லை என்று உணர்ந்து, கைப்பிடியை விட்டுவிட்டு மரியா சிஸோயெவ்னாவிடம் தன்னை கூட்டிச் செல்லும்படி கேட்டுக்கொண்டான். அவனது வரவைப் பற்றி அறிந்த அந்தப் பெண்மணி, தானாகவே  அங்கே வந்தாள்.

அவளுடனான உரையாடலைப் பற்றி பின்பு க்ளாவ்டியா பெட்ரோவ்னாவிடம் பகிர்ந்துகொண்டபோது, அவள் மிகவும் அன்பானவள், நல்லெண்ணம்கொண்ட பெண்மணி என்று கூறினான். மரியா சிஸோயெவ்னா எடுத்தவுடன் கேட்டது,  அந்தப் பரிதாபமான சிறுமியை நண்பர் வீட்டில் பத்திரமாக அவன் சேர்த்துவிட்டானா என்றுதான். பிறகு பாவெல் பாவ்லோவிச் பற்றிய வதந்திகளுக்கு உடனே தாவிவிட்டாள். அந்தக் குழந்தை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அவள்,  அவரை எப்போதோ விரட்டியடித்திருப்பாள். அவர், ஹோட்டலிலிருந்து துரத்தியடிக்கப்பட்டதே இதுபோன்ற கட்டுப்பாடற்ற நடவடிக்கைகளால்தான். இப்போது, எல்லாவற்றையும் புரிந்துகொள்ளக்கூடிய வயதில் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு, நடுஇரவில் தெருவில் போகிற ஒரு வேசியை வீட்டுக்குள் அழைத்துவருவது பாவமில்லையா! ‘‘நான் விரும்பினால் அவள் உனக்கு அம்மாவாக இருப்பாள்!“ என்று, அந்தப் பரிதாபமான வாயில்லாப்பூச்சியிடம் கத்தினார். அந்த கேடுகெட்ட வேசிகூட இந்த ஆள் மீது காறித் துப்பினாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! அப்புறம் இவர் என்ன சொன்னார் தெரியுமா , “நீ என்னுடைய மகளே இல்லை, நீ ஒரு வேசிமகள்!“ என்றார்.

“என்ன சொல்கிறீர்கள்?“ என்றான், வெல்ச்சேனினோ திடுக்கிட்டு.

“அவர் சொன்னதை நானே என் காதால் கேட்டேன். அவர் போதையில் இருந்திருக்கலாம்,   அதனால் புத்தி பேதலித்திருக்கலாம். இருந்தாலும் குழந்தையின் முன்னால் இதுபோல நடந்திருக்கக் கூடாது. அவள் சிறுமியாக இருந்தாலும்,  அவளுக்கும் கண் தெரியுமல்லவா, அறிவுக்கு எட்டாதா. அவள் அழுதுகொண்டிருந்தாள். பாவம்,ரொம்ப அனுபவித்து விட்டாள். ஒரு நாள் இங்கே, எங்கள் ஹோட்டலில் ஒரு மோசமான சம்பவம் நடந்துவிட்டது: மாலை ஒரு ஆள் அறையை வாடகை எடுத்து தூக்குப் போட்டுக் கொண்டான்.  காலையில்தான் அவனைப் பார்த்தார்கள். அவன் அரசாங்கப் பணத்தை அளவுக்கு அதிகமாக சுருட்டிவிட்டான் என்று சொன்னார்கள். கூட்டம் கூடிவிட்டது. பாவெல் பாவ்லோவிச் வீட்டில் இல்லை. இந்தக் குழந்தையைக் கண்காணிக்க யாருமில்லை. நான் என்ன செய்வது, அந்தக் கூட்டத்தில் அவளும் இருந்திருக்கிறாள். ஜனங்களுக்குப் பின்னாலிருந்து ரொம்ப சுவாரஸ்யமாக தற்கொலையை எட்டிப்பார்த்திருக்கிறாள். உடனடியாக, நான் அவளை அந்த இடத்திலிருந்து அழைத்து வந்துவிட்டேன். அப்புறம் அவளுக்கு என்ன ஆனது தெரியுமா?உடம்பு முழுவதும் நடுங்கிக் கொண்டிருந்தது, முகம் வெளிறிப் போய்விட்டது. அவளை அழைத்துவந்த மறுவிநாடி வலிப்பு வந்து கிழே விழுந்துவிட்டாள். வெட்டி வெட்டி இழுத்துக் கொண்டிருந்தது, அவள் பிழைக்கவே மாட்டாள் என்று நினைத்தேன். கீழே விழுந்ததாலோ அல்லது எதனாலோ, அந்த நிமிடத்திலிருந்து அவள் மிகவும் நோய்வாய்ப்பட்டாள். திரும்பிவந்தவர் இதைக் கேள்விப்பட்டவுடன், அவளைப் பிடித்து திருகினார். அவர் எப்போதும் அவளைத் திருகுவாரே தவிர  அடிக்கமாட்டார். அதன்பிறகு, அவர் போதையில் ஊறிப்போய் அவளை பயமுறுத்தத் தொடங்கிவிட்டார். “உன்னால் நானும் தூக்குப் போட்டுக்கொள்ளப் போகிறேன், இந்தத் திரைச்சீலை கயிற்றால்  என்னை தூக்கிட்டுக் கொள்வேன்“ என்று சொல்லிவிட்டு, அவள் கண் முன்னாலேயே சுருக்குப் போட்டுக்  காண்பித்தார். அந்தப் பரிதாப பூச்சி, அலறிக்கொண்டே அவரை தன் ஒல்லியான சிறிய கைகளால் பற்றிக்கொண்டு தேம்பினாள்: “நான் இனி தப்பு செய்யமாட்டேன்.இனி, திரும்பவும் தப்பு செய்யவே மாட்டேன்!” என்று. அதைக் கேட்டிருந்தால் உங்கள் இதயமே நொறுங்கிவிடும்.“

விபரீதமாக எதையோ கேட்கப்போகிறோம் என்று எவ்வளவுதான் வெல்ச்சேனினோ எதிர்பார்த்திருந்தாலும், இந்தக் கதை பயங்கரமாக அவனை திடுக்கிடவைத்து,  நம்புவதற்கே கடினமாக இருந்தது. மரியா சிஸோயெவ்னா சொல்வதற்கு இன்னும் நிறைய இருந்தது. உதாரணமாக, ஒரு சம்பவம்.ஒருவேளை, அன்று மரியா மட்டும் இல்லாதிருந்தால் லிசா  ஜன்னலிலிருந்து குதித்திருப்பாள்.

வெல்ச்சேனினோ, தானே ஒரு குடிகாரனைப் போல் தள்ளாடியபடி வெளியே வந்தான். “அவனை தெருநாயைப் போல் கொல்வேன், அவன் தலையை  கட்டையால் அடித்துப் பிளப்பேன்!“ என்று எண்ணிக் கொண்டான். நீண்டநேரத்துக்கு அவன் தனக்குத்தானே இதையே திரும்பத் திரும்ப  சொல்லிக்கொண்டிருந்தான்.

அவன், கோச் வண்டியை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு போகோரெல்ட்ஸ்க்குச் சென்றான். நகர எல்லையைத் தாண்டுவதற்குள்ளாகவே மாபெரும் இறுதி ஊர்வலம் ஒன்று கழிவுநீர் கால்வாய்மீது கட்டப்பட்டிருந்த பாலத்தின்வழியாக கடந்துபோனதால்,  வண்டியோட்டி வண்டியை சாலையோரத்தில் நிறுத்தவேண்டி வந்தது. பாலத்தின் இருபக்கமும் ஏகப்பட்ட கோச் வண்டிகள் காத்து நின்றன, வழிப்போக்கர்கள் வேடிக்கை பார்க்க கும்பல் கூடியிருந்தனர். அதுவொரு பிரமாண்டமான இறுதி ஊர்வலம். பிரேதத்தைத் தொடர்ந்த கோச் வண்டிகளின் வரிசை மிக நீண்டதாயிருந்தது.திடீரென்று ஒரு வண்டியின் ஜன்னலில் பாவெல் பாவ்லோவிச்சின் முகத்தை வெல்ச்சேனினோ பார்த்துவிடடான்.  பாவெல் பாவ்லோவிச்சும் ஜன்னல் வெளியே தலையை நீட்டி, அவனைப் பார்த்து தலையசைத்து, புன்னகைக்காமல் இருந்திருந்தால் வெல்ச்சேனினோ தன் கண்களையே நம்பியிருக்கமாட்டான். வெல்ச்சேனினோவைக் கண்டதற்காக அவர் பயங்கரமாக சந்தோஷமடைந்ததைப் போல் தோன்றியது, கையை வேறு ஆட்டினார். வெல்ச்சேனினோ, தன் வண்டியை விட்டுக் குதித்து நெரிசலையும், காவலர்களையும் கடந்து சளைக்காமல், ஏற்கனவே பாலத்தின்மீது ஓடத் தொடங்கியிருந்த பாவெல் பாவ்லோவிச்சின் கோச் வண்டியின் ஜன்னலைப் பற்றி பிடித்தான். வண்டிக்குள் அவர் மட்டுமே இருந்தார்.

“என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் வரவில்லை? இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?“

“கூச்சல் போடாதீர்கள்.நான் அஞ்சலி செலுத்த வந்தேன், சத்தம் போடவேண்டாம் – நான் அஞ்சலி செலுத்த வேண்டும்“ பாவெல் பாவ்லோவிச் குஷியாக கண் சிமிட்டி கிளுகிளுத்தார்.

“என் உண்மையான நண்பன் ஸ்டீஃபன் மிகைலோவிச்சின் உடலுக்கு ஒரு இறுதி அஞ்சலி.“

“இது ரொம்ப அபத்தம்.நீங்கள் குடித்திருக்கிறீர்கள்.பைத்தியக்காரனே!“ வெல்ச்சேனினோ ஒரு விநாடி திகைத்தான்.பிறகு முடிந்தவரை உரக்கக் கத்தினான். “இந்த நிமிடமே இறங்கி என்னோடு வாருங்கள்:  இந்த நிமிடமே!“

“என்னால் முடியாது, நான் அவனுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன், புரிந்துகொள்ளுங்கள்…“

“நான்  உங்களை வெளியே இழுத்துவிடுவேன்“ – வெல்ச்சேனினோ மிரட்டினான்.

“அப்படிச் செய்தால் நான் ’கொலை… கொலை…’ என்று அலறுவேன்!“ பாவெல் பாவ்லோவிச் கேலிச் சிரிப்புடன் குஷியாகச் சொல்லிவிட்டு, வெல்ச்சேனினோவோடு கண்ணாமூச்சி விளையாடுவதைப் போல் கோச் வண்டியின் மறுமூலைக்குச் சென்று பதுங்கிக் கொண்டார்.

“பின்னால் செல்லுங்கள், வழியைவிட்டு நகருங்கள்!“ என்று, ஒரு காவலர் வெல்ச்சேனினோவை எச்சரித்து கத்தினார். வெளியிலிருந்து வந்த கோச்வண்டி, எதிர்ப்பக்கத்திலிருந்து கூட்டத்துக்குள் நுழைந்து பெருங்குழப்பத்தை விளைவித்தது. வெல்ச்சேனினோ வழியைவிட்டு விலகும்படி கண்டிக்கப்பட்டான். விரைவில் இன்னொரு இறுதி ஊர்வல வண்டியும் கும்பலும் அவனை இன்னமும் பின்னுக்குத் தள்ளின. ‘அவரிருக்கும் நிலையில் எப்படியும் அவரை என்னுடன் அழைத்துச்செல்ல முடியாது‘  திகைப்பும், அதிர்ச்சியும் விலகாத அவன் தனக்குள்ளாக சொல்லிக்கொண்டான்.

அவன் க்ளாவ்டியா பெட்ரோவ்னாவிடம், மரியா சிஸோயெவ்னா தன்னிடம் சொன்னதையும்,இறுதி ஊர்வலத்தில் துக்கம் அனுஷ்டிப்பவர்களுள் ஒருவராக பாவெல் பாவ்லோவிச்சுடன் நடந்த விசித்திர சந்திப்பைப் பற்றியும் கூறியபோது, அவள் புருவங்களை சுருக்கியபடி யோசனையில் ஆழ்ந்தாள்.பிறகு சொன்னாள்: “உன்னை நினைத்தால் பயமாக இருக்கிறது.அவரை நீ சுத்தமாக  புறக்கணிக்க வேண்டும், எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு  நல்லது.“

“இவன்  சரியான ஒரு குடிகாரக் கோமாளி!“ வெல்ச்சேனினோ கோபமாகக் கத்தினான். “அவனைக் கண்டு நான் ஏன் பயப்படவேண்டும்? லிசா, இருக்கையில் அவனது உறவை நான் துண்டித்துக்கொள்ளவும் முடியாது, லிசா இருக்கிறாள் நினைவிருக்கட்டும்!“ என்று எண்ணிக் கொண்டான்.

அதேசமயம், லிசா அங்கே காய்ச்சலுடன் படுத்திருந்தாள். முந்தைய நாள் மாலையிலிருந்தே அவளுக்குக் காய்ச்சல் அடித்துக்கொண்டிருந்தது. நகரிலிருந்து குறிப்பிட்ட பிரபலமான மருத்துவர் ஒருவரை அழைத்துவர ஒரு வேலையாள் அனுப்பப்பட்டிருந்தான். அவர் வரவை எதிர்நோக்கி க்ளாவ்டியா பெட்ரோவ்னா கவலையுடன் காத்திருந்தாள். க்ளாவ்டியா பெட்ரோவ்னா குழந்தையின் அறைக்கு அவனை அழைத்துக் சென்றாள்.

“நேற்று நான் அவளைக் கூர்ந்து அவதானித்தேன்“ அவள் லிசாவின் அறைவாசலில் நின்றுகொண்டு சொன்னாள். “அவள் அகம்பாவமும், கடுகடுப்பான சுபாவமும் கொண்ட ஒரு குழந்தை. இங்கே எங்கள் வீட்டில் இருப்பதற்காகவும் அவளது தந்தை தன்னைக் கைவிட்டுவிட்டதற்காகவும்  அவமானப்படுகிறாள். அவளது உடல்நிலை கெட்டதற்கு மொத்தக் காரணமே அதுதான் என்று நினைக்கிறேன்.“

“அவளைக் கைவிட்டுவிட்டாரா? அவர் கைவிட்டுவிட்டார் என்று எதை வைத்துச் சொல்கிறாய்?“

“ அப்படி இல்லாவிட்டால், அவளை முழுக்க முழுக்க ஒரு அந்நியர் வீட்டுக்கு அனுப்பியிருப்பாரா? ஏறக்குறைய அந்நியருடன், அதுவும் அவரோடு இந்தளவுக்கு முரண்படுகிற ஒரு மனிதருடன்…“

“ஆனால் நான்தான் அவளை இங்கே அழைத்துவந்தேன். பலவந்தமாக அவளைக் கூட்டிவந்தேன்.  எனக்கெதுவுமே விளங்கவில்லை.“

“ஓ, கடவுளே! உனக்கு வேண்டுமானால் புரியாமலிருக்கலாம் , ஒரு குழந்தையான லிசாவுக்கே தெரிந்திருக்கிறது……… அவர்  இங்கே வரவேமாட்டார் என்று நான் நினைக்கிறேன்.“

வெல்ச்சேனினோ மட்டும் தனியாக வந்திருந்ததைப் பார்த்த லிசா ஆச்சரியமடையவில்லை. அவனைப் பார்த்து துயரார்ந்த ஒரு புன்னகையை மட்டும் புரிந்துவிட்டு, காய்ச்சலான தன் முகத்தைச் சுவர் பக்கமாகத் திருப்பிக் கொண்டாள். அவளைச் சமாதானப்படுத்த அவன் செய்த கோழைத்தனமான முயற்சிகளுக்கு அவள் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. போலவே, அவளது தந்தையை நாளை கட்டாயம் அழைத்துவருவேன் என்று அவன் செய்த தீவிரமான சத்தியத்திற்கும். அவளது அறையைவிட்டு வெளியே வந்தபோது வெல்ச்சேனினோ உடைந்து அழுதான்.

பின் மாலை நேரத்தில்தான் மருத்துவர் வந்தார். நோயாளியை பரிசோதித்த பிறகு அவரை முன்பே ஏன் அழைக்கவில்லை என்றுகூறி அனைவரையும் கலவரப்படுத்தினார். முதல் நாள் இரவுதான் அவளுக்குக் காய்ச்சல் வந்தது என்று அவரிடம் சொன்னபோது, முதலில் அதை நம்ப மறுத்தார். “இன்றிரவு கடந்தால்தான் எதையும் சொல்லமுடியும்“ என்று அறிவித்தார். என்னென்ன செய்ய வேண்டுமென்று க்ளாவ்டியா பெட்ரோவ்னாவிடம் கூறிவிட்டு, நாளை எவ்வளவு சீக்கிரம் வரமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் வருவதாக வாக்களித்துவிட்டுப் புறப்பட்டார். அன்றிரவு அங்கே தங்கவேண்டுமென்று வெல்ச்சேனினோ விரும்பினான். ஆனால் க்ளாவ்டியா பெட்ரோவ்னா ‘அந்தப் பைத்தியக்கார மனிதரை‘ அழைத்துவர இன்னொருமுறை முயற்சிசெய்து பார்க்கும்படி அவனை கேட்டுக் கொண்டாள்.

“இனிமேலும் முயற்சியா?“ வெல்ச்சேனினோ பெருமூச்சுவிட்டான். “ஏன், அவனை நானே என் கைகளாலேயே கட்டி இங்கே இழுத்துவருகிறேன்!“ அவனது பொறுமை எல்லை மீறி வெறிபிடிக்கச் செய்தது. “அவனிடம் தவறு இருப்பதாக இப்போதும் கூட சிறிதும் நான் உணரவில்லை.நான் எல்லா வெத்து விஷயங்களையும் நேற்று  உன்னிடம் சொன்ன கண்ணீர் நிறைந்த விஷயங்கள் உட்பட அனைத்தையும் விட்டுவிடுகிறேன்!“ என்றான், க்ளாவ்டியா பெட்ரோவ்னாவிடம்.

லிசா, கண்களை மூடி படுத்திருந்தாள், வெளித்தோற்றத்துக்கு உறங்குவதைப் போலிருந்தாள். அவள் கொஞ்சம் நன்றாக இருப்பதாகத் தோன்றியது. விடைபெறுகையில் முத்தமிடுவதற்காக வெல்ச்சேனினோ அவளை நோக்கிக் குனிந்து, அவளது தலையணையை உதடுகளால் தொட்டமாத்திரம், அதற்காகவே காத்திருந்தவள்போல அவள், சட்டென்று கண்களைத் திறந்து கிசுகிசுத்தாள்: “இங்கிருந்து என்னைக் கூட்டிச் செல்!“

அது, முந்தைய தினம் அவள் வெளிப்படுத்திய வெறுப்பின் சுவடேயில்லாத, ஒரு பலகீனமான, சோகம் கவிந்த கோரிக்கையாயிருந்தது. மேலும் அந்தக் கோரிக்கை ஏற்கப்படாது என்பதை அறிந்திருந்ததையும் அந்தக் கிசுகிசுப்பு வெளிப்படுத்தியது. வெல்ச்சேனினோ, முற்றிலும் நம்பிக்கையிழந்தவனாய், அது சாத்தியமில்லை என்று அவளுக்குப் புரியவைக்க முயன்றான். அவன் பேசத்தொடங்கிய விநாடியே, அவள் கண்களைத் திரும்பவும் மூடிக்கொண்டாள். அதன்பின் அவனைப் பார்க்கவோ, கேட்கவோ இல்லை. மேலே ஒரு வார்த்தைகூட அவள் பேசவில்லை.

 

*****

மருத்துவரின் பயங்கள் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதைப் போல் லிசாவின் நிலை மிகவும் மோசமடைந்தது. வெல்ச்சேனினோவும், க்ளாவ்டியா பெட்ரோவ்னாவும் முந்தைய தினம் ஊகித்திருந்ததை விடவும் மிகவும் மோசமடைந்தது. அன்று காலை வெல்ச்சேனினோ சென்றபோது காய்ச்சல் கொதித்துக் கொண்டிருந்தாலும் குழந்தை  பிரக்ஞையோடுதான் இருந்தாள். அதன்பிறகு அவள், தன்னைப் பார்த்துப் புன்னகைத்தாள் என்றும், தனது கொதிக்கும் கரங்களை தன்னிடம் நீட்டினாள் என்றெல்லாம் அனைவரிடமும் உறுதிபடக் கூறினான். அது, உண்மையா அல்லது அவனாகவே தன்னை ஆறுதல்படுத்திக்கொள்ள சொன்னானா என்பதை உறுதி செய்துகொள்ள வாய்ப்பே கிட்டவில்லை ! ஏனெனில், இரவு கவியும் நேரம் லிசா நினைவிழந்து அதன்பின் கடைசிவரை அந்த நிலையிலேயே  இருந்தாள். அந்த வீட்டிற்க்கு வந்த பத்தாவது நாள் அவள் இறந்துபோனாள்.

வெல்ச்சேனினோவுக்கு அது துக்கம்தோய்ந்த காலம். போகோரெல்ட்ஸேவ் குடும்பத்தினரும் அவனது பித்துநிலையைக் கண்டு அஞ்சினர். அந்த வலிமிகுந்த காலகட்டத்தின் பெரும்பகுதி அவன் அவர்களுடனேயே தங்கியிருந்தான். லிசா, நோய்வாய்ப்பட்டிருந்த கடைசி தினங்களில் அவன் முற்றிலும் வெளியுலகை மறந்தபடி. மணிக்கணக்காக தன்னந்தனியாக ஏதாவது ஒரு மூலையில் உட்கார்ந்திருப்பான். க்ளாவ்டியா பெட்ரோவ்னா அவனது கவனத்தைத் திசைதிருப்ப அவ்வப்போது அவனருகே வருவாள், ஆனால் அவன் உரையாடுவதற்கே மிகவும் சிரமப்படுவான், மிக அபூர்வமாகவே பதில் சொல்வான். இவையெல்லாம் அவனிடம் இத்தனை பாதிப்பை ஏற்படுத்தும்  என்று ஒருபோதும் க்ளாவ்டியா பெட்ரோவ்னா எதிர்பார்க்கவில்லை. அவன் கவனத்தைக் கொஞ்சமேனும் ஈர்த்தவர்கள் என்றால் அது குழந்தைகள் மட்டும்தான். சிலசமயம், அவர்களோடு சேர்ந்து சிரிக்கக்கூட செய்தான், ஆனால் ஒரு மணிநேரத்துக்கொரு முறை நாற்காலியில் இருந்து எழுந்து பூனைநடை போட்டு லிசாவின் அறைக்குச் சென்று அவளை எட்டிப் பார்ப்பான். அதுபோன்ற சமயங்களில் அவள், தன்னை அடையாளம் கண்டுகொண்டதாகக் கற்பனை செய்துகொண்டான். மற்ற எல்லேரையும்போலவே அவனும் லிசா குணமாகப்போவதில்லை என்று அறிந்திருந்தான். ஆனால் அவன், லிசா மரணத்துடன் போராடிக்கொண்டிருந்த அறையைவிட்டு தூரவிலகாமல் இருந்தான், பெரும்பாலான சமயம் அறைக்கு வெளியிலேயே உட்கார்ந்திருந்தான்.

அந்த நாட்களில், ஓரிரு சமயம் அவன் திடீரென்று பரபரப்பாகிவிடுவதுண்டு: மிகப் பிரபலமான மருத்துவர்களைக் கண்டு, அவர்களை சிகிச்சைக்காக அழைத்துவர பீட்டர்ஸ்பர்கிற்கு விரைவான். லிசா இறப்பதற்கு ஒருநாள் முன்பாக இரண்டாவது மற்றும் இறுதி சிகிச்சை நடைபெற்றது. அதற்கு மூன்று நாட்கள்முன்னர் திரு.ட்ருஸோட்ஸ்கியை எப்படியாவது கண்டுபிடிப்பது பற்றி க்ளாவ்டியா பெட்ரோவ்னா, வெல்ச்சேனினோவிடம் பேசினாள். அதன் தேவை மிக அவசியமானதாக இருந்தது.  ஏனெனில், ‘ஏதாவது விபரீதமாக‘ நடந்தால் அவரில்லாமல் பரிதாபத்துக்குரிய லிசாவை அடக்கம் செய்யக்கூட இயலாது. அதுசம்பந்தமாக வெல்ச்சேனினோ அவருக்குக் கடிதம் எழுதுவதாக முணுமுணுத்தான். திரு.போகோரெல்ட்ஸேவ் நேரில் சென்று எங்கிருந்தாலும் அவரைக் கூட்டிவர காவலர் உதவியைக் நாடுமாறு அவனுக்கு அறிவுறுத்தினார். இறுதியாக வெல்ச்சேனினோ, தானே சுருக்கமாக ஒரு கடிதம் எழுதி அதை பாவெல் பாவ்லோவிச் தங்கியிருந்த வீட்டுக்கு எடுத்துச் சென்றான். வழக்கம்போல் பாவெல் பாவ்லோவிச் வெளியே சென்றிருந்ததனால் அவனிடம் சேர்ப்பிக்கும்படி மரியா சிஸோயெவ்னாவிடம் அந்தக் கடிதத்தைக் கொடுத்துவிட்டு வந்தான்.

கோடைகாலத்தின் அழகான ஒரு மாலையில் லிசா இறந்துபோனாள். சூரிய அஸ்தமனத்துடன் அவள் மறைந்துபோனாள். அப்போதுதான் வெல்ச்சேனினோ சுயநினைவுக்கு வந்தான். நடனஅரங்கின் மேசையின்மேல் லிசா கிடத்தப்பட்டிருந்தபோது, அவளுக்கு க்ளாவ்டியா பெட்ரோவ்னாவின் மகள்களில் ஒருத்தியினுடைய சிறப்பான வெள்ளை உடை அணிவிக்கப்பட்டு, மடித்த கைகளில் மலர்களுடன்  கிடத்தப்பட்டிருந்தாள். வெல்ச்சேனினோ கலங்கிய விழிகளுடன் க்ளாவ்டியா பெட்ரோவ்னாவிடம் வந்து, தான் சென்று அந்தக் ‘கொலைகாரனை‘ உடனடியாக அழைத்துவருவதாகக் கூறினான். நாளை வரை பொறுத்திருந்த பார்க்கலாம் என்று அவள் அறிவுறுத்தியதைக் கவனத்தில் கொள்ளாது, அவன் உடனடியாகப் புறப்பட்டான்.

பாவெல் பாவ்லோவிச்சை எங்கே பிடிக்கமுடியும் என்று அவனுக்குத் தெரியும்.ஏனெனில்,  துயரமான அந்நாட்களில்  மருத்துவரை அழைத்துவர மட்டும் அவன் பீட்டர்ஸ்பர்கிற்குச் செல்லவில்லை. இறந்துகொண்டிருந்த குழந்தைக்கு அவளது தந்தையின் குரலைக் கேட்டால் நினைவு திரும்பும் என்று அவன் நம்பிய தருணங்கள் அவை. அப்போதுதான் அவரைத் தேடி அவன் நம்பிக்கையில்லாமல் அலைந்துகொண்டிருந்தது. பாவெல் பாவ்லோவிச் இப்போதும் அதேவீட்டில்தான் வசித்தார். ஆனால் அவரை அங்கே தேடுவதில் எந்த உபயோகமும் இல்லை. மரியா சிஸேயெவ்னா சொன்னதைப் போல் அவர் மூன்று இரவுகள் தொடர்ச்சியாக உறங்க வருவதில்லை.வந்தாலும் எப்போதும் போதையில்தான் இருப்பார், அரை மணிக்குமேல் தங்குவதில்லை. மீண்டும் புறப்பட்டு விடுவார், ‘அவர் மிகவும் தளர்ந்து போய்விட்டார்‘ என்றாள். ஹோட்டல் சிப்பந்தி வேறுசில விஷயங்களைப் பற்றி வெல்ச்சேனினோவிடம் கூறினான். அங்கு பாவெல் பாவ்லோவிச் தங்கியிருந்தபோது வோஸ்னெஸ்ன்ஸ்கி ப்ராஸ்பெக்ட்டுக்கு வேசிகளைத் தேடிவருவார் என்றான். வெல்ச்சேனினோ நேரத்தை விரயம் செய்யாமல் அவர்களை உடனே கண்டுபிடித்துவிட்டான். வெல்ச்சேனினோ அவர்களுக்குக் கொடுத்த ஒயினாலும், பரிசுப் பொருட்களாலும் அவர்கள் வாயைப்  பிளந்தனர். அவர்களது விருந்தினரை அவர்கள் சட்டென அடையாளம் கூறினர் – குறிப்பாக, கிரேப் வைத்த அவரது தொப்பியை – அவர் மீண்டும் வராததற்காக சபிக்கவும் செய்தனர். அந்தப் பெண்களில் ஒருத்தியான காத்யா அவரைக்  கண்டுபிடிக்க அவனுக்கு வழி சொன்னாள்.‘ இரவுபகல் எந்த நேரமாயிருந்தாலும் அவர் அந்த மாஷ்கா ப்ரோஸ்டகோவாவுடன்தான் இருப்பார். அவரிடம் கட்டுக்கட்டாக பணம் இருக்கிறது. இந்த வேசி மாஷ்கா அம்மை நோய் வந்து மருத்துவமனையில் இருந்தவள். என்னால் மட்டும் முடிந்தால் அவளை சைபீரியா சுரங்கத்தில் குண்டுக்கட்டாக வீசிவிடுவேன்‘ என்றும் கூறினாள் காத்யா. இந்தமுறை, அவளால் பாவெல் பாவ்லோவிச்சை பார்க்க முடியவில்லை என்றும் அடுத்தமுறை பிடித்துவிடுவேன் என்றும் சூளுரைத்தாள். அவளது உதவியைத்தான் தற்போது அவன் நாடி வந்திருந்தான்.

பத்து மணிக்கு ஊருக்குள் வந்தவன் உடனடியாக காத்யாவைக் கண்டான். அவளது தலைவியிடம் அனுமதி பெற்று அவளுடன் பாவெல் பாவ்லோவிச்சை தேடிப் புறப்பட்டான். அந்த மனிதனைக் கண்டவுடன் என்ன செய்யப்போகிறோம் என்று வெல்ச்சேனினோவுக்கு அந்த நிமிடம் வரை தெரியாது: அவனைக் கொல்லப்போகிறானா அல்லது அவனது மகள் இறந்துவிட்டாள், இறுதிச் சடங்கில் அவனது உதவி தேவையென்று அறிவிக்கப்போகிறானா? அவர்களது முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. ‘பாவெல் பாவ்லோவிச் மூன்று நாட்களுக்குமுன் மாஷ்காவுடன் சண்டை போட்டதாகவும், யாரோ ஒரு காசாளர் கட்டையால் பாவெல் பாவ்லோவிச்சின் மண்டையை உடைத்துவிட்டதாகவும்‘ தெரியவந்தது. பயனற்ற நீண்ட தேடுதலுக்குப்பின் கடைசியாக, காலை இரண்டு மணியளவில் வெல்ச்சேனினோ, அவனுக்கு சொல்லப்பட்டிருந்த ஒரு நிறுவனத்திலிருந்து வெளியே வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவரையே பார்த்துவிட்டான்.

பாவெல் பாவ்லோவிச் வயிறுமுட்டக் குடித்திருந்தார். அந்த நிறுவனத்திற்குள் இரண்டு பெண்கள் அவரைத் தள்ளிக்கொண்டு சென்றனர். அந்தப் பெண்களில் ஒருத்தி, அவரது கையைப் பிடித்திருந்தாள். அதற்குப்பின்னால் பெரிய கட்டுமஸ்தான ‘உரிமையாளர்‘ உச்சஸ்தாயியில் கூவிக்கொண்டு பாவெல் பாவ்லோவிச்சை ஏதோ பயங்கரமாக மிரட்டிக்கொண்டு வந்தார். பேச்சுவாக்கில் பல விஷயங்களுக்கு நடுவே, பாவெல் பாவ்லோவிச் தன்னைச் சுரண்டிவிட்டதாகவும், தன் வாழ்க்கையையே பாழாக்கிவிட்டதாகவும்  கத்தினார். பணம் சம்பந்தப்பட்டிருப்பதைப் போல் தோன்றிற்று. பெண்கள் மிகவும் பயந்துபோனவர்களாகத் தெரிந்தனர். பாவெல் பாவ்லோவிச் வெல்ச்சேனினோவைக் கண்டவுடன் அவனை நோக்கி கையை நீட்டியபடி ஓடிவந்து அவரது தொண்டை கிழிந்துவிடும்படி கதறினார்:

“நண்பரே, என்னைக் காப்பாற்றுங்கள் நண்பரே!“

வெல்ச்சேனினோவின் விளையாட்டு வீரனைப் போன்ற உருவத்தைப் பார்த்த ‘உரிமையாளர்‘ உடனடியாக தனது பலவீனத்தை உணர்ந்தார். பின்வாங்கிய அவரிடமிருந்து பாவெல் பாவ்லோவிச் வெற்றிகரமாக தனது மணிக்கட்டை உதறிக்கொண்டே வெற்றிக் கூச்சலிட்டார். இப்போது வெல்ச்சேனினோ, ஆத்திரத்துடன் இரண்டு கைகளாலும் அவரது தோள்பட்டையைப் பிடித்து உலுக்கத் தொடங்கியதில் அவருடைய பற்கள் கிடுகிடுத்தன. பாவெல் பாவ்லோவிச் கத்துவதை நிறுத்திவிட்டு உடனே தன்னைத் துன்புறுத்துபவரை குடிபோதை கலந்த திகிலுடன் வெறித்துப் பார்த்தார். அநேகமாக, அடுத்து என்னசெய்வதென்று தெரியாமல் வெல்ச்சேனினோ அவரை நடைபாதை கம்பத்த்துக்கருகே அமிழ்த்தி அமரச் செய்தான்.

“லிசா இறந்துவிட்டாள்,“ என்று கூறினான்.

பாவெல் பாவ்லோவிச் அப்போதும் அந்தப் பெண்களில் ஒருத்தி தாங்கிப் பிடித்திருக்க, கம்பத்தில் உட்கார்ந்தபடி அவனை வெறித்துப் பார்த்தார். இறுதியாக, அவர் புரிந்துகொண்டார்,அவரது முகம் சட்டென்று வெளிறியது.

‘அவள் இறந்துவிட்டாள்…‘ அவர் முணுமுணுத்தார். அவர் குடிவெறியில் காதுவரை நீண்ட,அருவருக்கத்தக்கவிதமாக, நயவஞ்சகமாக, இளித்துக்கொண்டிருந்தாரா அல்லது அவர் முகம் உதறிக்கொண்டு இருந்ததா என்று வெல்ச்சேனினோவால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு விநாடி கழித்து, பாவெல் பாவ்லோவிச் சிலுவைக்குறி போட நடுங்கிய தன் வலது கையை பிரயத்தனப்பட்டு உயர்த்தினார். ஆனால், அவரால் சிலுவைக்குறி போடமுடியவில்லை, நடுங்கிய கரங்களைத் தொங்கப் போட்டார். சிறிதுநேரம் கழித்து, தன்னை ஒன்றுதிரட்டி எழுந்து நின்று, தன்னுடன் வந்திருந்த பெண்மணியைப் பற்றிக்கொண்டு அவள்மீது சாய்ந்தவண்ணம், எந்தப் பிரக்ஞையுமின்றி, அந்த இடத்தில் வெல்ச்சேனினோ இருப்பதையே அறியாததுபோல் தன்போக்கில் தொடர்ந்து நடந்தார். ஆனால் வெல்ச்சேனினோ, அவர்தோள்பட்டையைப் பற்றி இழுத்து மீண்டும் மூச்சிறைக்கக் கூச்சலிட்டான் :

“சொல்வது புரியவில்லையா, குடிகாரப் பிசாசே…நீ வரவில்லையென்றால் அவளை அடக்கம் செய்யக்கூட முடியாது!“

பாவெல் பாவ்லோவிச் தலையைத் திருப்பிக் கொண்டார்.

“அந்த… இளம்… பீரங்கிப்படை அதிகாரியை…நினைவிருக்கிறதா?“ அவர் அவதூறாக பிதற்றினார்.

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?“ வெல்ச்சேனினோ ஜுர உதறலுடன் கத்தினான்.

“அந்த அப்பா இருக்கிறானே, அடக்கம் செய்ய… அவனைக் கண்டுபிடி…“

“நீங்கள் பொய் சொல்கிறீர்கள்!“ வெல்ச்சேனினோ வெறியோடு கத்தினான். “துவேஷத்தினால் இப்படிப் பேசுகிறீர்கள்! எனக்குத் தெரியும். இதையெல்லாம் எனக்காக வேண்டுமென்றே செய்கிறீர்கள்!“

ஆத்திரத்துடன் அவன், தனது முஷ்டியை அந்த மனிதரின் தலைக்குமேல் உயர்த்தினான். ஒரு விநாடிதான், அவன் ஒரே குத்தில் அந்த மனிதரைக் கொன்றிருப்பான். பெண்கள் அலறிக்கொண்டே பக்கவாட்டில் பறந்தனர், ஆனால் பாவெல் பாவ்லோவிச் கண் இமையைக்கூட அசைக்கவில்லை. அவரது மொத்த முகமும்  வெறிமிகுந்த இழிவான பகையுணர்ச்சியால் உருக்குலைந்திருந்தது.

“எப்படி செய்யவேண்டும் என்று உங்களுக்கே தெரியுமே.…“ மிகவும் அழுத்தமான குரலில் அவர் மிகவும் உறுதியாக, ஏறக்குறைய போதையில் இல்லாமல் நிதானமாக, “ நம் ரஷ்யர்கள்………….?“ (அச்சேற்ற முடியாத கீழ்த்தரமான வசைச்சொல் ஒன்றைக் கூறி)  “ நீங்களே அங்கே எடுத்துக் கொண்டு போகலாம் !“ என்று சொல்லிவிட்டு மூர்க்கமாக தன்னை வெல்ச்சேனினோவின் பிடியிலிருந்து பிய்த்துக் கொண்டு, தடுமாறி ஓடி, ஏறக்குறைய விழுந்தார். அந்தப் பெண்கள் அவரை தூக்கிப்பிடித்து, இந்தமுறை உண்மையில் அலறிக்கொண்டே ஓடினர், கூடவே பாவெல் பாவ்லோவிச்சையும் இழுத்துக்கொண்டு. வெல்ச்சேனினோ அவர்களைத் தொடரவில்லை .

 

ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் 

‘நிரந்தரக் கணவன்

(நாவலிலிருந்து ஒரு பகுதி)

தமிழில்: நர்மதா குப்புசாமி

வெளியீடு :பாதரசம் பதிப்பகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.