Saturday, Oct 23, 2021

ஷந்தொரா தனிக்கா கவிதைகள்


தனிமையின் இரண்டு பில்லியன் ஒளி ஆண்டுகள்

 

மனித இனம் இந்தச் சிறிய கோள வடிவிலான

விண்பொருள் மீது

உறங்கி, விழித்து, வேலை செய்து

மேலும் சில நேரங்களில் 

செவ்வாய்க் கிரகத்தில் இருக்கும் நண்பர்களுக்காக

வாழ்த்தும் தெரிவிக்கிறது

 

நான் தனிப்பட்ட கருத்து எதுவும் கொண்டிருக்கவில்லை

செவ்வாய்க் கிரக வாசிகள் அவர்களுடைய 

கோள வடிவிலான விண்வெளிப் பொருளின் மீது

என்ன செய்வார்களென்று

ஆனால் ஒரு வேளை அவர்கள் 

பூமியில் வசிப்பவர்களை நண்பர்களாக்கிக் கொள்ள ஆவல் கொண்டவர்களாக இருக்கலாம்

அதில் எந்த சந்தேகமுமில்லை

 

தனிமையின் ஆற்றலே

ஒவ்வொருவரையும் இழுக்கின்ற 

பிரபஞ்சத்தின் ஈர்ப்புசக்தி

 

ஏனெனில் பிரபஞ்சம் என்பது உருக்குலைந்தது

அதில்

நாம் ஒருவர் மற்றொருவரைக் கண்டுபிடிக்க முயல்கிறோம்

 

ஏனெனில் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே செல்கிறது

நாம் சஞ்சலமடைகிறோம்

 

தனிமையின் இரண்டு பில்லியன் ஒளி ஆண்டுகளுடைய கடுங்குளிர்ச்சியுடன்

நான் திடீரென்று தும்முகிறேன்.

 

ஒரு நதி

 

எது கடந்த காலமாக இருக்கிறதோ

அது

மீண்டும் என்னை நோக்கிப் பாய்ந்து வருகிறது

நான் ஒரு நதியாகிறேன்.

சற்றும் அறிமுகமில்லாத நினைவொன்று

தனது இரவின் உணர்வுகளைப் பற்றிப் பேசத்துவங்கும் பொழுது

நான் வெடித்துச் சிதறுகிறேன்

மேலும் 

அதனுள்ளாகப் பாய்ந்து செல்கிறேன்

 

மாலைப்பொழுது

 

அருகிலிருக்கும் காலி அறையில் 

யாரோ ஒருவர் சத்தம் போட்டு அழைக்கிறார்

நான் செய்ததைப் போலவே

 

நான் வெடுக்கென்று

கதவைத் திறக்கிறேன்

இங்கே இருள் அப்பியிருந்தாலும்

சூரிய வெளிச்சம் அறையில்

கரைபுரண்டோடுகிறது.

அது இரகசியமாக புலம்பெயரும் ஒரு நிழலை யாரோ ஒருவர் சற்றுமுன்னர்தான்

விட்டுச்சென்றதைப் போல தோற்றமளிக்கிறது.

மேலும் அதைப் பின்தொடர்ந்து செல்ல நான் தலைதெறிக்க ஓடியபோது

அங்கே ஒருவரும் இல்லை

அது ஒரு வழக்கமான மாலைப்பொழுது மட்டுமே.

 

பூ ஜாடியை

தூசு சூழ்கிறது

நான் வானின் மீதிருந்த சன்னல் கதவைத் திறக்கிறேன்

அங்கிருந்தும் கூட

யாரோ ஒருவர் சத்தம் போட்டு அழைக்கிறார்

நான் செய்ததைப் போலவே


– ஷந்தொரா தனிக்கா

தமிழில் : விருட்சன்

 

ஆசிரியர் குறிப்பு :

ஜப்பானை சேர்ந்த கவிஞரான ஷந்தொரா தனிக்கா 1931 ல் டோக்கியோவில் பிறந்தவர். இவர் ஒரு மொழிபெயர்ப்பாளரும் கூட.இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலக்கட்டத்தில் எழுதத் துவங்கியவர். இவருடைய கவிதைகள் தனக்கென்று தனித்த அடையாளத்தைக் கொண்டவை. இவருடைய கவிதைகள் ஆங்கிலத்தில் William I. Eliott,Kazuo Kawamura போன்றவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு 1989 ஆம் ஆண்டிற்கான அமெரிக்கன் புத்தக விருதை பெற்றுள்ளது. மிக எளிமையான சொற்களால் வாசகனின் மனதில் மாயத்தை நிகழ்த்திவிடக் கூடியவர்.இங்கு தேர்ந்தெடுக்கப்பட்டு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள கவிதைகள் ”ALONE IN TWO BILLION LIGHT YEARS” என்ற தொகுப்பில் உள்ளவை.

மொழிபெயர்ப்பு: விருட்சன்

விருட்சன் என்ற புனைப்பெயரில் எழுதிவரும் கார்த்திகேயன் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திப்பிரஜபுரத்தில் வசிப்பவர். இந்தோனேசிய கவிஞர்களான சபார்டி ஜோக்கோ தமனோ, ஜோக்கோ பினர்போ போன்றோரின் கவிதைகளை தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். தென்கிழக்கு ஆசிய கவிதைகளை தொடர்ந்து மொழிபெயர்த்தும் வருகிறார்.

பகிர்:
No comments

leave a comment