கனவுப் போர்வீரன்


கனவுகள் உறையும் கடுங்குளிரான ஒரு நாளில்,

நான் ஒரு பயங்கரமான கனவு கண்டேன்

நண்பகல் கடந்த பொழுது

எனது கனவு தன் தொப்பியை அணிந்துகொண்டு வெளியேறியது

நான் கதவைப் பூட்டினேன்..’

 

து சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு நடந்தது. உண்மை காலமற்றது என்பார்கள். ஆனால், இக்கதைக்கு ஒரு காலமுண்டு. அது ஓர் உண்மையற்ற காலம்.

முந்தைய இரவிலிருந்து அந்த மாவட்ட எல்லையை ஒட்டிய மலைத்தொடரின் ஊடாகவிருந்த அந்த சிறிய கிராமம் பயங்கர பனிப்புயலில் மூழ்கியிருந்தது.

எங்கும் துயரமான ஊளைக்காற்று. அதிகாலையில், மலைமுகட்டின் மேல்பகுதியிலிருந்த நகரத்திலிருந்து இராணுவ வீரர்களின் ஒரு குழு குளிர்காலத்தினைத் தாங்கும் பயிற்சியில் தடுமாறியபடி அந்த கிராமத்திற்குள் வந்தது. கனத்த பனிப்பொழிவின் ஊடாக சீரான இராணுவ கீதத்தோடு தங்களது பெரிய காலணிகளை இழுத்தவாறு மீண்டும் அந்த பனிப்புயலில் வெறும் நிழல்களாக மறைந்து போவதற்காக வலிமையற்று அந்த கிராமத்தைக் கடந்தனர்.

மாலை வேளையானதும் காற்று அடங்கியது. கிராமத்திற்குள் நுழையும் வழியிலிருந்த துணைக் காவல் நிலையத்தில் ஒரு வயதான காவல் அதிகாரி செஞ்சூடான ஒரு கணப்படுப்பில் தன் உள்ளங்கால்களை வெதுவெதுப்பாக்கிக் கொண்டே தனைமறந்து சில உருளைக்கிழங்குகளைத் தோலுரித்தவாறு தனியாக உட்கார்ந்திருந்தார். வானொலி எதையோ பற்றி இரைந்துகொண்டிருக்க, அவர் அதையும் கவனிக்கவில்லை, ஏதோ ஓர் இனிய கனவில் தொலைந்து போனவராக இருந்தார்.

“நமக்குத் தெரியாமல் ஒன்றும் நடந்து விடாது..” என்று சிந்தனையில் ஆழ்ந்தார். “ஊர்த் தலைவரும் அவருடைய உதவியாளரும் பொதுப் பங்கீட்டிற்கான பொருட்களைச் சட்ட விரோதமாக விற்பதில் மும்முரமாக இருக்கிறார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும், ஆலயத்தின் தலைமை பூசகரும் இதில் உடந்தை தான், அந்தப் பொருட்களை ஆலயத்தின் தரைப் பலகைகளுக்கு அடியில்தான் ஒளித்து வைக்கிறார். ஆனால், நான் இதைப் பற்றி ஒரு வார்த்தை சொல்வதில்லை, நான் அப்படியிருப்பது இந்த கிராமத்தில் எல்லோருக்கும் தெரிந்ததுதான். அவர்கள் எனக்குக் கொண்டு வரும் பரிசுகள் என்னை வாய்மூடி இருக்கச் செய்வதற்காக இல்லை, மரியாதை நிமித்தமாகத்தான். நான் ஓய்வு பெறும்போது, மற்ற அதிகாரிகளைப் போல ஓடிப்போக வேண்டியதில்லை. என்னால் தொடர்ந்து இங்கே தங்கியிருக்க முடியும், நிலையாகக் குடியிருக்க முடியும், கொஞ்சம் சொத்துகளுடைய ஒரு விதவையை மணமுடித்து என் முதுமைக் காலத்தை அமைதியாக அனுபவிக்க முடியும். ஆடம்பரமான இரசனைகள் உங்களுக்கு இல்லாதவரை, ஒரு விவசாயியின் வாழ்வைப்போல சுகமான வாழ்வு வேறெவர்க்கும் கிடைக்காது. எனது மகன் இராணுவத்திலிருந்து திரும்பி வரும்போது அவன் தங்குவதற்காக எனக்கொரு வீடும் தேவைப்படும். இந்தப் போரினால் புண்ணியமாகப் போயிற்று, இப்போது இந்த கிராமத்தில் சொத்துகளுடைய மூன்று விதவைகள் இருக்கிறார்கள். ஆனால், நிலைமை என்னவென்றால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மகன் இருக்கிறான், ஆனால், நமக்கென்ன தெரியும், இந்த மகன்களில் யார் வேண்டுமானாலும் இந்த நாட்டிற்காக எந்த நேரத்திலும் உயிரிழக்கக் கூடும். எப்படியிருந்தாலும் என் திட்டம் சரியாக நடக்கும், அது எனக்கு உறுதியாகத் தெரியும். இந்த கிராமத்தினர் எனக்கெதிராக மாறும்படி நான் ஒருபோதும் எந்த ஒரு காரியத்தையும் செய்ததில்லை, விதவைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கத்தான் போகிறது. ஒன்றும் அவசரமில்லை. நான் சாவகாசமாக உட்கார்ந்து, எவ்வளவு நேரம் வேண்டுமோ அவ்வளவு நேரம் நன்றாக ஆழ்ந்து யோசிப்பேன். வயல்களின் அளவு, அதனுடன் குடும்பம், இரண்டால் வகுத்து….”

திடீரென, தொலைப்பேசி அடித்தது. அவர் உரித்துக் கொண்டிருந்த உருளைக்கிழங்கு அவரது பிடியிலிருந்து நழுவி சாம்பலில் விழுந்தது. அவர் அதை எடுத்து, தனது சட்டையின் விளிம்பில் துடைத்தவாறு எழுந்து நின்றார், வலியில் இருப்பதைப் போல நெட்டி முறித்துவிட்டுக்கொண்டு வாயிலை நோக்கி நடந்தார். தன் தொழிலுக்கே உரிய விசித்திரமான அலட்சிய தோரணையில் தொலைப்பேசியை எடுத்து, சோர்வான குரலில் பேசினார், ஆனால், அப்போது அவரது முகபாவனை தீவிரமானது, உருளைக்கிழங்கைப் பற்றியிருந்த விரல்கள் நடுங்க ஆரம்பித்தன.

கிராமத்தைக் கடந்ததும், இராணுவ வீரர்கள் நேராக மலைத்தொடரை நோக்கி அணிவகுத்துச் சென்றனர். செல்லும் வழியில் அவர்கள் சிறு குன்றுகளையும், பள்ளத்தாக்குகளையும் காடுகளையும் கடந்து சென்றனர், திட்டமிட்ட பயிற்சிகளையும் செய்தனர். அவர்கள் கடைசி மலைவிளிம்பை அடைந்தபோது, மூன்று மணிக்கு மேல் ஆகிவிட்டிருந்தது. காற்று மேலும் தொடர்ந்து தீவிரத்துடன் சீறியது, மூச்சு விட முடியாத அளவிற்குப் பனியை அவர்களைச் சுற்றியும் சுழற்றியடித்தது. இவ்வளவு நேரமும் அவர்கள் ஏதும் உண்டிருக்கவும் இல்லை, போதாதென்று திரும்பும் போது அவர்கள் இருமடங்கு விரைவாக அணிவகுப்பு (டபுள் டைம் மார்ச்) செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். பின்தங்கி வருபவர்களுக்கு கடும் தண்டனைகள் காத்திருந்தன, இருந்தாலும் ஆறு பேர் பின்னடைந்து நடந்தனர்.  இது பசி, தளர்ச்சி மற்றும் குளிரின் கூட்டு விளைவுகளைப் பரிசோதிப்பதற்காகத் திட்டமிடப்பட்ட ஒரு சிறப்புப் பயிற்சியாதலால், அவர்கள் தனித்து பின்தங்கிப் போவது எதிர்பார்க்கப்பட்டது தான், அதனால் ஒரு மருத்துவக் குழுவும் அவர்களைத் தொடர்ந்து வந்தது. ஆனால், மருத்துவர்கள் முதன்மை இராணுவக் குழுவுடன் வந்து இணைந்தபோது பின்தங்கியவர்களில் ஐந்து பேர் மட்டுமே அவர்களுடன் இருந்தனர். ஓர் இராணுவ வீரன் காணாமல் போய்விட்டான்.

காணாமல் போன வீரன் மிகவும் பசியாக இருப்பான். அவன் நிச்சயமாக அந்த கிராமத்தை நோக்கித்தான் செல்வான். சூழ்நிலை சாதகமாக இருந்தால் அவன் தனக்குத் தேவைப்படும் ஆடைகளையோ அல்லது அவன் விரும்பும் எதை வேண்டுமானாலும் தன் வலிமையால் பிடுங்கிக் கொள்வான்.

அந்த முதிய அதிகாரி தொலைப்பேசியை வைத்துவிட்டு, தோள்கள் குறுக கணப்படுப்பின் அருகிலிருந்த தன் இடத்திற்கு மெதுவாகச் சென்றார். சிறிது நேரம் மூக்கை உறிஞ்சியவாறு தன் வழுக்கைத் தலையை வருடினார். கடிகாரத்தைப் பார்த்தார், ஏழரை. வெளியே மிகவும் குளிராக இருந்தது, அவர் எங்கும் செல்ல விரும்பவில்லை. அது போக, அந்த நபர் காணாமல் போனது பற்றி தெளிவான தகவல்களும் இல்லை. அதற்கும் மேலாக இந்த நீண்ட பனிப்புயல் வேறு. இந்தப் பனியில் அந்த ஆள் வழிதவறி தன் நண்பர்களிடமிருந்து  பிரிந்து சென்றிருப்பான். மற்றபடி இப்படி ஒரு வானிலையில் எந்தவொரு முட்டாளும் இப்படி தனித்துப் போக மாட்டான். பனியில் தெரியும் கால்தடங்களை வைத்து நாம் ஒன்றும் யூகிக்க முடியாது. அவன் தொலைந்து போயிருப்பான். கல்லாக உறைந்து போயிருக்கவும் கூடும். ஆனால், காற்று வீசிக்கொண்டிருக்கும் வரை இப்பனி பாதுகாப்பானதாகத்தான் இருக்கும். ஒரு பலத்த காற்று காலடித் தடங்களை அழித்துவிடும். ஒருவேளை, அவனே அப்படித் திட்டமிட்டிருப்பானோ என்னவோ? இது ஒரு திட்டமிடப்பட்ட குற்றமாகவும் இருக்கலாம்.  ஆனால், இப்போது காற்று அடங்கிவிட்டது, அவன் தன் பொறியில் தானே மாட்டிக் கொண்டிருப்பான். தீமை செய்தால் நன்மையா விளையப் போகிறது!

சரி, எனக்குத் தகவல் சொல்லியிருக்கிறார்கள், உத்தரவு ஒன்றும் வரவில்லை. இது இராணுவக் காவல் படையினருக்கான வேலை தான். அது போக, ஒரு தப்பியோடிய கைதியைப் போலன்றி இந்த மாதிரி பிரிந்துபோனவன் நிச்சயமாக ஒரு தோற்றுப்போன கோழை தானே! சரி, அதை விடு, அடுத்தவர் பிரச்சினையில் மூக்கை நுழைப்பதால் ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. எனக்குத் தெரிந்து இப்படிப் பிரிந்துபோன யாரும் பிழைத்ததுமில்லை.

முன் வாசல் கதவில் யாரோ மெதுவாகத் தட்டியதைப் போலச் சத்தம் கேட்கிறதே என அவர் திரும்பினார். கூர்ந்து கவனித்தார்,  மீண்டும் எந்தச் சத்தமும் கேட்கவில்லை. அது அவரது கற்பனையாக இருக்கும். ஏனோ, புதிரான ஒரு குழப்பநிலை அவரைச் சூழ்ந்திருந்தது. அதையும் தாண்டி, திகிலடைந்தது போன்ற ஓர் உணர்ச்சி, அவருக்கே புரியாத சிக்கலான பயங்களின் முடிச்சுகளில் ஆழ்ந்தார். தனித்து விடப்பட்டவனை நினைத்தெல்லாம் பயமில்லை. பொதுவாக வழக்கமான குற்றவாளிகளின் மேல் ஏற்படும் ஓர் அபரிமிதமான வெறுப்பு இந்த முறை அவரிடத்தில் தோன்றவில்லை. இப்போது அப்படியொரு வெறுப்பு தோன்றாமல் போனது முதல்முறையாக அவருள் ஒரு வித விழிப்பை ஏற்படுத்தியது, அவருள் அப்படி வெறுப்பை உருவாக்கும் நபர்கள் யார், அமைப்பு எது, இதைச் செய்யச்சொல்பவரையும் செய்பவரையும் பிரிக்கும் அந்த இடைவெளி எப்படிப்பட்டது, அப்படிச் செய்பவர்களில் மிகவும் பாதுகாப்பான நிலையில் இருக்கும் தன் சொந்த பதவியே இந்த இடைவெளியைத் தான் இதற்கு முன் உணராமல் தடுத்திருக்கிறது என்பதை உணர்ந்தார்.

குற்றவுணர்ச்சியின் வேதனைகள் தாக்க, துள்ளியெழுந்தவர், “அவன் எப்படித் தப்பிக்கிறான் எனப் பார்க்கிறேன்!” என்று முரட்டுத்தனமாகக் கத்தினார். ஆனால், அப்படிக் கத்தியதால் அவரது குழப்பமான மனநிலையில் எந்தத் தெளிவான மாற்றமும் ஏற்படவில்லை. இப்போதும் ஏதோ பெரியவொரு பயவுணர்ச்சியினால் சூழப்பட்ட ஒரு ஆழ்மன குழப்பநிலையாகத்தான் அது இருந்தது. மனதின் ஆழத்தில், தான் அந்த குற்றவாளியின் கூட்டாளியாகப் பார்க்கப்படக்கூடிய சாத்தியத்தை நினைத்துக் கவலைப்பட்டார், அந்தக் கவலை கிராமத்தினர் ஒவ்வொருவருக்கும் இருப்பதுதான். அந்தக் கவலையிலிருந்து வெளிவர முடியாமலிருந்தது தான் அவரது ஆழ்ந்த பயத்திற்கு மூல காரணம். ‘எனக்கு வயதாகி விட்டது’ என அவர் நினைத்தார். பின், அவருக்கு பயங்கரமாகக் கோபம் வந்தது.  நேரம் வரும்போது எல்லாவற்றையும் கணக்குப் பார்த்து சரி செய்து விடலாம் என்று நினைத்தார். இதற்கு நான் மட்டுமே பொறுப்பேற்க முடியாதில்லையா? அவரது குரல்வளையின் பின்புறம் அசாதாரணமாக ஈரமாக இருந்தது. அவர் அடுப்பின் திருகை மூடிவிட்டு, தனது வாளை எடுத்துச் சொருகி, தனது மேலங்கியின் கழுத்துப்பட்டையை நிமிர்த்தி விட்டுக்கொண்டு வெளியேறினார்.

இலேசான நுண்ணிய பனி அவரது காலடியில் இதமாக நொறுங்கியது. காலடித்தடங்கள் அதில் தெரிந்தன, ஆனால் தெளிவாக இல்லை. அந்த கிராமத்திலேயே மேற்கத்திய பாணியிலான சன்னலைக் கொண்ட ஒரே வீடு என்ற பெருமையுடைய கிராமத் தலைவரின் வீடு மீன்கடையின் அருகே இருந்தது. அங்கே ஒளிமிகுந்த விளக்குகள் தெரிந்தன, ஒரு கமுக்கமான இனிய சிரிப்பொலிச் சத்தம் தெரு வரையிலும் வந்தது. அது தலைமை பூசகராக இருக்கும். வழக்கம்போல சுற்றி பின்புறமாகச் செல்வதற்குப் பதிலாக, அந்த அதிகாரி முன்வாசல் கதவைப் படாரெனத் திறந்தார்.

அந்த திடுக்கிடலில் அந்த அறையில் ஓர் இறுக்கமான சூழ்நிலை ஏற்பட்டது. சடுதியில் ஒதுக்கிவைக்கப்பட்ட சீனப் பீங்கான் பாத்திரங்களின் சத்தத்தின் ஊடே கிராமத் தலைவரின் நடுங்கும் குரல் நீண்டு கேட்டது, “யாரது இந்த நேரத்தில்?”.

‘நீயே பார்க்கும் வரை காத்திரு’ என்று நினைத்தவாறு வேண்டுமென்றே பதிலளிக்காமல் தன் தொண்டையைச் சரி செய்தார் அதிகாரி. உட்புற அறைக்கதவு பாதியளவு திறந்தது, கிராமத் தலைவரின் உதவியாளர் அந்தத் திறப்பின் வழியாக தன் தலையை வெளி நீட்டினார்.

“அது சரி! யார் வந்திருக்கிறார்கள் பாருங்கள்! வேறு யார்? நமது காவல் அதிகாரிதான்!”

“உள்ளே வாருங்கள்! உள்ளே வாருங்கள்!” என்றவாறு தலைமைப் பூசகரும் கதவை முழுதாகத் திறந்துகொண்டு வந்தார்.

மூவரும் குடித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது.

“ஒரு சிறிய பிரச்சினையாகிவிட்டது…” என்றார் அதிகாரி.

“பிரச்சினையா? என்ன அது?”

“அட, அவர் பொறுமையாகச் சொல்லட்டுமே, முதலில் கதவை அடைத்துவிட்டு உள்ளே வாருங்கள், சிறிது குடியுங்கள்.”

“ஓர் இராணுவ வீரன் தனியாகப் பிரிந்துபோய் தப்பி விட்டானாம்..வடதிசை மலைத்தொடர்களை நோக்கி…” என்றார் அதிகாரி.

“இராணுவத்திலிருந்து தப்பியவனா?” தனது மூக்குக் கண்ணாடியின் இடுக்கின் வழியாகப் பார்த்தார் பூசகர். “அவன் அந்த வழியாகச் செல்வதென்றால், எப்படிச் சுற்றினாலும் இங்கே வந்துதான் ஆகவேண்டும்.”

“ஆம். அவன் நம்மைக் குறி வைத்து வருவதாகத்தான் சொன்னார்கள்.”

“குறிவைத்தா?” கிராமத் தலைவர் எரிச்சலடைந்தவராக புடைத்திருக்கும் தன் மூக்கின் மேல் பகுதியில் விரலால் தேய்த்தார்.

“அவன் அகோரப் பசியில் இருப்பதாகவும் கேள்விப்பட்டேன்.” என்று தொடர்ந்தார் அதிகாரி.

“ஓ..அது வேறா? பிரச்சினை போலத்தான் தெரிகிறது..சரி, பார்ப்போம்.”

“என்ன பேசுகிறீர்கள்?” உதவியாளர் கோபத்தில் உரக்கக் கேட்டார். “இராணுவத்திலிருந்து தப்பியவர்கள் தேசத் துரோகிகள். படு மோசமான கீழ்த்தரமான கோழைகள். நாம் இப்போதே சென்று அவனைப் பிடித்து விடலாமா?”

“நிச்சயமாக, ஆனால் அவனிடம் ஒரு துப்பாக்கி இருக்கிறது!” அதிகாரி சுட்டிக் காட்டினார். “அதற்கும் மேல், அந்த ஆள் மிகவும் பசியோடிருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்வான்.”

கிராமத் தலைவர் பெருமூச்செறிந்து சொன்னார், “சீனாவில் ஒவ்வொரு கிராமத்தையும் சுற்றியும் ஒரு கோட்டைச் சுவர் இருக்கிறதாம்.”

“அதொன்றும் கோட்டைச் சுவரில்லை.” என்று மறுத்தார் உதவியாளர்.

“சரி, கோட்டைச் சுவரில்லை.”

“வெறும் மண் சுவர்தான்.”

“சரி, மண் சுவர்.”

சங்கிலிகள் உராய்வது போன்ற ஒரு சத்தத்தினால் திடுக்கிட்ட அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்க்க, சுவர்க் கடிகாரத்தில் மணி எட்டு அடித்தது. பூசகர் இருமிக்கொண்டே திரும்பினார், “சரி, இப்போது நாம் என்ன செய்யப் போகிறோம்?” என்று கேட்டார்.

“நாமே சென்று அவனைப் பிடித்து அடித்து நொறுக்கி விடுவோம்.” அந்த உதவியாளர் அவ்வளவு தைரியமாகப் பேசியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அந்த மொத்த கிராமத்திலும் முப்பது வயதான ஆண்களில் இராணுவத்தில் சேராமலிருந்த ஒரே நபர் அவர்தான். இருந்தாலும் கூட, அவரது குரலில் முன்பிருந்த உறுதி சற்று குறைந்திருந்தது.

அவரை உற்சாகப்படுத்துவதற்காக அதிகாரியும் தலையை ஆட்டி, “நல்ல யோசனை, அந்த ஆள் துரோகம் செய்த ஒரு நாய் தானே, இருந்தாலும்..” தன் தலையை ஒருபுறம் சாய்த்துக்கொண்டு மெதுவான குரலில் அவர் எச்சரித்தார், “அவனிடம் ஆயுதம் இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். பசியோடிருக்கும் ஒரு தனித்துவிடப்பட்ட கிறுக்கனின் கையில் ஒரு துப்பாக்கியைக் கொடுத்தால் அவன் என்ன செய்வானென்று யாருக்குத் தெரியும்?”

“அதுவும் சரிதான்.” என்று ஆமோதித்தார் பூசகர். “அது வெறிபிடித்த ஒருவனிடம் ஒரு வாளைக் கொடுத்தது போலாகிவிடும்.” என்று உதவியாளரை நோக்கி கையை ஆட்டி அவரது யோசனையை நிராகரித்தவராக, அதிகாரியை நோக்கி, “நாம் என்ன செய்யலாம்?” என்று கேட்டார்.

“என்ன செய்வதா?” மூக்கைச் சொறிந்துகொண்டே கேட்டார் கிராமத் தலைவர். “சரி…நாம்…” என்றவர் ஏதோ யோசனையில் சட்டென, “தப்பியோடியவன் நமது கிராமத்தைச் சார்ந்தவனென்று நீங்கள் நினைக்கவில்லை, இல்லையா?” என்று கேட்டார்.

“வாய்ப்பேயில்லை” என்று தன் முகத்தை முன்னால் துருத்திக்கொண்டு சத்தமாகவும் உறுதியாகவும் சொன்னார் உதவியாளர். “இப்படிப்பட்ட ஒரு கோழை ஒரு வெப்பமான காலநிலையுள்ள இடத்தைச் சார்ந்தவனாகத்தான் இருக்க முடியும்.”

“அப்படியென்றால் எல்லா இடத்தையும் விட்டுவிட்டு அவன் இங்கே இந்தக் குளிரில் ஏன் தப்பியோடினான்?”

“யாருக்குத் தெரியும்! அவன் தப்ப முடியாது. பாவப்பட்ட அவனது பெற்றோரை நினைத்துப் பாருங்கள்.”

“ஆனால், உங்களுக்கு நினைவில்லையா? இங்கே ஏதோ ஒரு கிராமத்தில் விதவைப் பெண்ணொருத்தி தப்பியோடிய ஒருவனுக்கு இரண்டு மாதங்களுக்கும் மேல் அடைக்கலம் கொடுத்த சம்பவம் நடந்ததே!”

“அது நீண்ட காலத்திற்கு முன்பு நடந்தது. இப்போதெல்லாம் அப்படியொரு துரோகச் செயலை யாரும் செய்ய மாட்டார்கள்.”

“உண்மை, உண்மை.”

அதிகாரி தனக்குள் நினைத்தார். ‘பார்த்தாயா, நான் ஒருவன் மட்டுமல்ல, இவர்கள் எல்லோருமே சாவைக் கண்டு பயப்படுகிறார்கள். எப்படியோ தங்கள் மேல் களங்கம் ஏற்பட்டு விடுமோ என எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவன் இவர்களுக்குத் தெரிந்தவனாக இருந்தாலே போதும், இவர்களது கைகள் அசுத்தமாவதைத் தவிர்க்க முடியாது, இவர்கள் தங்கள் காதுகளை மூடிக்கொண்டால் கூட உதவிக்கான அவனது மன்றாடலை இவர்களது சொந்தக் கைகளே கேட்கும். மேலும், காதுகளைப் பொத்திக்கொள்ளும் செயலும் ஒருவகையில் குற்றத்திற்கு உடந்தையாக இருத்தலின் அறிகுறிதான்.’

அவர் “சரி, என்னிடம் கேட்டால்..” மூக்கை உறிஞ்சியவாறு முகத்தில் எவ்வித உணர்ச்சியுமின்றி உறுதியான குரலில் சொன்னார், “உடனடியாக நாம் வீடு வீடாகச் சென்று அவசர அறிவிப்பு செய்து கிராமத்தினரை எச்சரிக்க வேண்டும். தப்பியோடிய ஓர் இராணுவ வீரன் இவ்வழியாக வருகிறான் என்று அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும், அவர்கள் தங்கள் வீட்டுக் கதவுகளைப் பாதுகாப்பாகப் பூட்டிவிட்டு உள்ளேயே இருக்க வேண்டும் என்று புரிந்துகொள்வார்கள். ஒரு வான்வழித் தாக்குதலின் போது செய்யப்படும் முன்னேற்பாடுகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும், எந்த இடுக்கிலும் சிறிது வெளிச்சம் கூட கசியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். யார் அழைத்தாலும் கூட பதிலளிக்கக் கூடாது. அவர்கள் அவனுடன் பேச முற்பட்டால், அவர்களது இரக்கவுணர்வை அவன் பயன்படுத்திக் கொள்வான். முதலில் தண்ணீர் கேட்பான், அவர்கள் நினைப்பார்கள், ‘ஒரு கோப்பை தண்ணீர் கொடுப்பதால் என்ன ஆகிவிடப் போகிறது?’. தண்ணீர் கொடுப்பார்கள், பின் அவன் உணவு கேட்பான். அவர்கள் அதையும் கொடுத்ததும், அடுத்து மாற்றிக்கொள்ள உடை கேட்பான். உடைக்குப் பிறகு, பணம்…அடுத்து என்ன நடக்குமென்று நினைக்கிறீர்கள்? எல்லாவற்றிற்கும் நன்றி, ஆனால், நீங்கள் என் முகத்தைப் பார்த்துவிட்டீர்கள், நிலைமை கொஞ்சம் சிக்கல் தான் என்று அவன் கூறுவான். கிளம்புவதற்கு முன், இன்னொரு விசயம் என்று சொல்லி அவர்களுக்கு நன்றாகத் திருப்பிக் கொடுப்பான்….படார்….”

அந்த மூவரும் அதிகாரி அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்பதற்காக மூச்சடக்கிக் காத்திருந்தனர். ஆனால், ஒரு வார்த்தையும் வெளிவருவதாகத் தெரியாததால் கிராமத் தலைவர் பயந்தவாறு, “அப்புறம்?” என்று கேட்டார்.

“மற்ற விசயங்களை இராணுவக் காவல் படையினர் பார்த்துக் கொள்வார்கள்.”

பூசகர் எழுந்து முகத்தில் சலிப்போடு, “சரி, எனது வீடு இங்கிருந்து தூரமில்லையா, நான் இப்போது கிளம்பினால்தான் சரியாக இருக்கும்.” என்று கூறினார்.

கிராமத் தலைவர் அவசரமாகக் குடிமைப் பாதுகாப்புப் பிரிவின் காவல் நிலையத்திற்கு அழைக்க முனைய, அவரது உதவியாளர் எழுந்து, பூசகர் சொன்னதை ஆமோதிக்கும் விதமாக, “நாம் நினைப்பது போல அவன் இந்த கிராமத்தில் தான் இப்போது சுற்றிக் கொண்டிருப்பான்.” என்று கூறினார்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் அந்தச் செய்தி கிராமம் முழுதும் பரவியது. ஒரு புயல் எச்சரிக்கை விடப்பட்டதைப் போல, ஒவ்வொரு வீட்டிலும் புயலுக்கான மூடுதிரைகளை அவற்றின் இடத்தில் இழுத்துப் பொருத்தினார்கள், கூடுதல் பாதுகாப்பிற்காக அவற்றின் குறுக்காக பலகைகளை வைத்து ஆணியடித்தனர். சிலர் உறங்கச் செல்லும்போது கூட மூங்கில் ஈட்டிகளையும் கோடரிகளையும் தயாராக வைத்திருந்தனர். பத்து மணி கழிந்த போது துணைக் காவல் நிலையத்தைத் தவிர அந்த மொத்த கிராமமும் ஓசையற்ற ஆழ்ந்த இருளில் மூழ்கியது. எங்கும் ஒரு மிருகத்தனமான அமைதியின்மை நிலவியது.

பெரும்பாலான வீடுகள் அச்சத்தினால் இருளில் பதுங்கி தூக்கத்தில் ஆழ்ந்தன. அந்த முதிய காவல் அதிகாரி மட்டுமே விழித்திருந்தார், எதற்காகவோ காத்துக்கொண்டிருப்பதைப் போல வெளிப்புறத்தின் சிறு சத்தங்களைக் கூட கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். வீடுகளுக்குள் அடைபட்டிருந்த அந்த கிராமத்தவர்களுக்கு இதைப்பற்றித் தெரிய வழியில்லை.

அடுத்தநாள் காலை, பொழுது புலர்ந்த போது அந்த மலை விளிம்பிலிருந்து தெற்காக விரையும் ஒரு புகைவண்டியின் கீச்சிடும் சீழ்க்கைச் சத்தம் நீண்டு தொடர் வெடிச்சத்தம் போலக் கேட்டது. தாழ்ந்து அலைந்த மேகங்கள் அந்த பயங்கர அலறலை கிராமத்திற்குள் இழுத்துச் சென்றன. அதனால் பெரும்பாலான கிராமத்தவர்கள் விழித்தெழுந்தனர். அவர்களில் பலர், அது என்ன சத்தம் என்பது புரிந்ததால், தங்கள் மூடுதிரைகளைத் திறந்தனர்.

தூக்கமின்மையால் கண்கள் சிவந்திருந்த அந்த முதிய அதிகாரி தென்புற சன்னல் பக்கமாகத் திரும்பி மலைத்தொடரைப் பார்த்தார். மலை விளிம்பின் மேல்பகுதியை நோக்கிச் சென்ற ஒரு மெல்லிய சாம்பல் நிறக் கோடு பனியில் தெளிவாகத் தெரிந்தது. புகைவண்டியின் சீழ்க்கையொலி நின்றது. அப்போது, கிராமத் தலைவரின் உதவியாளர் ஒரு சோடி பனிச்சறுக்குக் கட்டைகளை தன் கைகளுக்கிடையில் வைத்துக்கொண்டு இரண்டு நபர்களுடன் அங்கே வந்தார்.

“யாரோ சென்று இரயிலின் முன் விழுந்துவிட்டார்களாம்.” என்றார் அவர். “அந்தத் துரோகியாகத்தான் இருக்கும். நாங்கள் சென்று பார்க்கப்போகிறோம். நீங்களும் வருகிறீர்களா?”

“இல்லை, நான் இங்கேயே இருக்கிறேன். ஒருவேளை, நகரத்திலிருந்து ஏதும் செய்திகள் வரலாம்.”

அந்த மூவரும் விரைந்து மலைவிளிம்பின் மேலாகச் சென்ற அந்த சாம்பல் கோட்டைக் கண்டுபிடித்து, சரிதானென தங்களுக்குள் தலையாட்டியவாறு அதை நோக்கிச் சென்றனர். முதிய அதிகாரி சன்னலிலிருந்து விலகிச் சென்று கணப்படுப்பின் முன்னால் குனிந்து அமர்ந்து தன் முழங்கால்களைக் கட்டிக்கொண்டார்.

கிராமத் தலைவரின் உதவியாளர் திரும்பி வந்தபோது, அதிகாரி அங்கேயே அதே நிலையில் உறங்கிக் கொண்டிருந்தார். உதவியாளர் அவர் விழிப்பதற்காக அமைதியாகக் காத்திருந்தார், ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. காத்திருந்து பலனில்லை, கிளம்பலாம் என்று நினைத்து உதவியாளர் புறப்பட்ட போது, அதிகாரி தன் கண்களைத் திறந்து மெதுவாகக் கேட்டார், “என்னவாயிற்று? நீங்கள் அவனைப் பார்த்தீர்களா?”

“ஆமாம். பார்த்தேன்.”

“ஓ..” என்று பெருமூச்சு விட்டார் அதிகாரி.

“இதைப்பற்றி ஏற்கெனவே உங்களுக்குத் தெரியும். இல்லையா?”

“ஆம். எனக்குத் தெரியும்.”

“அவனை அவ்வாறு செய்ய வைத்தது நீங்கள் தானே?”

“ஆம்…ஆனால், நான்……அய்யோ….இப்படி அவமானமாகப் போய்விட்டதே! அவன் ஏன் இந்த இடத்தைத் தேர்வு செய்தான்? என்னை அவமானப்படுத்துவதற்காகவே அவன் அப்படிச் செய்திருக்கிறான். அவன் என் மகனே இல்லை.” சிறிய மௌனம். “இருந்தாலும், நீ இதைப்பற்றி கிராமத்தில் மற்ற யாரிடமும் சொல்ல மாட்டாய், அல்லவா?”

“ஆனால், மற்ற இருவருக்கு ஏற்கெனவே தெரியுமே.”

“ஓ..ஆம், அவர்களுக்குத் தெரியும் இல்லையா? எப்படியும் இதற்கு நான் பொறுப்பேற்க வேண்டி வரும்.”

“அவன் நல்ல சாவு தான் அடைந்திருக்கிறான். அவனது துப்பாக்கி தொலைவில் ஒரு மரக்கிளையில் தொங்கவிடப்பட்டிருந்தது.”

“அப்படியா?”

“இன்னொரு விசயம். உங்கள் சன்னலின் கீழ்புறமாக இருக்கும் அந்த காலடித்தடங்களை ஏதாவது செய்தால் நல்லது, இல்லையா? என்ன நினைக்கிறீர்கள்?”

“ஆமாம். அதைச் செய்யாமல் விட்டுவிட்டேன்.”

பத்து நாட்களுக்குப் பிறகு அந்த முதிய காவல் அதிகாரி தன் பின்னால் ஒரு வண்டியை இழுத்துக்கொண்டு அந்த கிராமத்தை விட்டுச் சென்றார்.

கனவுகள் உருகும் கடுஞ்சூடான ஒரு நாளில்

நான் ஒரு விசித்திரமான கனவு கண்டேன்

நண்பகல் கடந்த பொழுது

எனது தொப்பி மட்டும் திரும்பி வந்தது


கோபோ அபே

தமிழில்:  சுஷில் குமார்

 

[tds_info]

ஆசிரியர் குறிப்பு: 

கோபோ அபே

எழுத்தாளர், கவிஞர், புகைப்படக் கலைஞர், மற்றும் நாடக ஆசிரியர் என பன்முகத்தன்மையுடைய கோபோ அபே 15 நாவல்கள், 19 நாடகங்கள், பல சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளைப் படைத்திருக்கிறார்.

முதலில் கவிஞராக தன் எழுத்துப் பயணத்தைத் தொடங்கியவர் தனது நாவல்கள் மற்றும் நாடகங்களின் மூலம் ஜப்பானிய இலக்கியத்தில் மிக முக்கியமான ஓர் இடத்தைப் பிடித்தார். 1951-ல் அகுதாகவா பரிசும் 1962-ல் யோமியுரி பரிசும் பெற்றார். அவரது ‘மணற்குன்றுகளில் பெண் (The Woman in the Dunes) உலகளாவிய வரவேற்பைப் பெற்றது. இது தமிழிலும் கிடைக்கிறது. ஜப்பானிய இயக்குனர் ஹிரோஷி தெஷிகாஹராவுடன் இணைந்து தனது நான்கு நாவல்களை திரைப்படங்களாக உருவாக்கினார்.

1971-ல் டோக்யோவில் ஒரு நடிப்புப் பயிற்சி மையத்தை தொடங்கினார். பல்வேறு கலைஞர்களுக்குப் பயிற்சி வழங்கியதோடு நாடகங்களையும் இயக்கினார்.

இரண்டாம் உலகப் போரின் பிந்தைய நாட்களில் டோக்யோவின் வறுமையான பகுதிகளில் தொழிலாளர்களை ஒருங்கிணைப்பதில் ஜப்பானிய கம்யூனிச கட்சியுடன் இணைந்து செயல்பட்டார். பிற்காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக அக்கட்சியிலிருந்து விலகினார்.

இவரது படைப்புகள் பொதுவாக நவீனத்துவ, சர்ரியலிஸத் தன்மை கொண்டவை, பிரான்ஸ் காப்கா மற்றும் ஆல்பெர்ட்டோ மொராவியாவின் படைப்புகளோடு ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டன.

மொழிபெயர்ப்பாளர்:

சுஷில் குமார் நாகர்கோவிலைச் சார்ந்தவர். கிராமப்புற மாணவர்களின் கல்விப் பணியில் இருக்கிறார். இவரது சிறுகதைகள் கனலி, யாவரும், பதாகை, சொல்வனம் இதழ்களில் வெளிவந்துள்ளன. ‘ தெருக்களே பள்ளிக்கூடம் ‘ எனும் மொழி பெயர்ப்பு நூலும் வெளி வந்துள்ளது. தற்போது கோவையில் வசிக்கிறார்.

[/tds_info]

1 COMMENT

  1. தேச பக்திக்கும் சமுதாய அழுத்தத்திற்கும் இடையில் உள்ள மெல்லிய பனிப் படலத்தில் நடக்கும் கதை. ஜப்பானிய துன்பியல் உளவியலை துலக்கிக் காட்டும் சுசில்குமாரின் மொழிபெயர்ப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.