Sunday, Jun 26, 2022

கவிஞனின் எழுதுமேசை


அதுவொரு பழைய மர எழுதுமேசை, என்னுடைய பாட்டனாரிடமிருந்து முதுசமாகக் கிடைத்தது.

என்னுடைய பாட்டன் ஒரு ‘விஞ்ஞான’  மனிதர்.அவர் ஒரு போதும் தன்னுடைய மகனை ஒரு கவிஞனாகக் கற்பனை செய்திருக்க மாட்டார். பல வருடங்களூடு நடந்து வ​ந்​திருக்கும் எழுதுமேசையின் ஒவ்வொரு துணிக்கையையும் என்னால் உணர முடிகிறது, மரவாசனையை நுகர முடிகிறது,எழுதுதாளைத் தொடவும், தூசியை உணரவும் முடிகிறது. என்னால் எல்லாவற்றையும் உருவகிக்க முடிகிறது, இன்​​னொரு தேசத்தில், என்னுடைய எழுதுமேசையிலிருந்த​ வண்ணம்.​

பழைய எழுது மேசையின் பின்னால் நிழலாடிய அ​ந்த  மனிதர் என் த​ந்தை.

​நா​​ன் அவரைத் தெளிவாகக் காண்கிறேன். மூக்குக் கண்ணாடி அணிந்தவராக  ஒழுங்கற்ற குப்பைகளுக்குப் பின்னால் அமைதியாக உட்கார்ந்திருக்கிறார். . நானும் என்னுடைய துணைவரும் அவருடைய கவிதைகளை ஒழுங்கு படுத்தவும் அந்த இடத்தைச் சுத்தப்படுத்தவும் பலமுறை முன்வ​ந்​து கேட்டாயிற்று. கவிதைகள், அவை வெறும் கோட்டுத்தாள்களில், எல்லா இடங்களிலும் சீரற்ற குவியல்களில் ​ ​மித​ந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் அதைத் தொடுவதை அவர் கண்டிப்பாக தடைசெய்தார். ‘அவரது பைத்தியக்காரத்தனத்தில் ஒரு முறை இருந்தது’ என்று நினைக்கிறேன். தூசி நிறைந்த ஆனால் அர்த்தமுள்ள படைப்பாற்றலால் சூழப்பட்ட அறை நடுவில் உறுதியாக அமர்ந்திருந்த பழைய தட்டச்சுப்பொறிக்கு அவ்வப்போது நாடா மாற்றம் தேவைப்பட்டது.

அங்கு திறந்த பக்கங்கள் கொண்ட புத்தகங்களும் இருந்தன, தனது கவிதைகளைப் படிக்க அவர் அழைக்கப்பட்ட ஒவ்வொரு நாடுகளிலிரு​ந்த​தும்  கவிஞர்களினதும் கையெழுத்துகள் அதில் பதிந்திருந்தன.  அவர் படித்துக்கொண்டிருந்த புத்தகமொன்றில், புத்தக அடையாளமாக பழைய  காசோலையை ஒன்றைக் கண்டேன், எப்போதோ  காலாவதியானது! புதிய மற்றும் பழைய சில கடவுச் சீட்டுக்கள் தங்கள் முகங்களைக் காட்டின, காகிதங்களுக்கிடையில் எட்டிப் பார்த்தன, சில்லறைக் காசுகளை வைப்பதற்கான ஆமை வடிவ நாணயப் பெட்டி, என் மகள் அவரிடமிருந்து பரிசாகப்பெற்றது, மற்றும் கவிதைகளுக்கு இடையில் சில ரூபாய் தாள்கள். தூசு அவரது கவிதைகளை விரும்புவதாகத் தோன்றியது, சொற்களிலும் வரிகளிலும் அது தாராளமாகவும்  நிரந்தரமாகவும்  குடியேறி விட்டிருந்தது. . ஒரு தேவதை தனது மந்திரக்கோலிலிருந்து ​.நட்சத்திரத்துகள்களை அள்ளித் தெளித்ததைப் போல ஜன்னலிலிருந்து வெளிச்சம் தூசித் துகள்களை​ப்​ பற்​றிப் பிடித்​திருந்தது.

அவரது படுக்கை, அவரது மேசைக்கு அருகில், இதேபோன்ற தோற்றத்தையே அணிந்திருந்தது, அவர் அவர் படுத்துக் கொண்டே வார்த்தைகள்  வரும் வரை காத்திருந்தபோது கண்களை மூடிக்கொண்டிருந்த கைக்குட்டைகளைத் தவிர.

இங்கே என் மேசையில்- அது அவருடையதை ஒரு போதும் ஒத்திருக்கவில்லை-  உட்கார்ந்து, ஒரு மனிதன் தனது மேசையை வைத்திருக்கும் விதத்தை வைத்து ஏன் தீர்மானிக்கப்படுகிறான் என்று யோசித்தேன்.

அவரது மேசை பற்றி, சக எழுத்தாளர்கள் மற்றும் மற்றவர்களிடமிருந்து, ஒழுங்கீனம் மற்றும் தூசி பற்றி நான் பல கருத்துக்களைக் கேட்டிருக்கிறேன். ‘ஒரு புத்தகத்தை அதன் அட்டையை வைத்து தீர்மானிக்க வேண்டாம்  என்ற பழமொழியை இது எனக்கு நினைவூட்டுகிறது.

பழைய மேசை தரும் உணர்வு

மேசை அதன் சொற்களையும் வரிகளையும் எழுதுகிறது

‘இங்கே ஒரு கவிஞர் அமர்ந்தார்’


குறிப்பு : ஹைபன்( Haibun (俳文 ) என்பது ஜப்பானிலிருந்து உருவாகிய ஒரு இலக்கிய வடிவம். உரை​நடையையும் ஹைகூவையும் கலந்து உருவாகும் இந்த ஹைபன்கள் சுயசரிதை, நாட்குறிப்பு, கவிதை, சிறுகதை பயணக் கட்டுரை போன்ற பல விதமான இலக்கியங்களில் பயன்படுத்தப்படுகின்றன.


ஆங்கிலத்தில் :  கவிதா எசெக்கியேல் மென்டொன்கா 

தமிழில்:  ஷமீலா யூசுப் அலி

ஆசிரியர் குறிப்பு :

கவிதா எசெக்கியேல் மென்டொன்கா (Kavita Ezekiel Mendonca) மும்பாயிலுள்ள யூத குடும்பம் ஒன்றில் பிற​தது வளர்​​ந்தவர். ஆங்கிலத்திலும், கல்வித்துறையிலும் இங்கிலா​ந்திலும் இந்தியாவிலும் முதுகலை​ப்​ பட்டங்கள் பெற்றுள்ள கவிதா 40 வருடங்களாக ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் இஸ்பானிய மொழியைக் கற்பித்து வருகிறார். அவரது முதல் புத்தகமான ‘பெமிலி சன்டே அன்ட் அதர் பொயம்ஸ்’ 1989 இல் வெளிவ​​ந்த​து​. கவிதா, புகழ்பெற்ற இந்திய யூதக் கவிஞரான நிஸ்ஸிம் எசெக்கியேலின் மகளாவார்.

 

மொழிபெயர்ப்பாளர்:

ஷமீலா யூசுப் அலி ஒரு எழுத்தாளர், ஊடகவியலாளர், ஓவியர் மற்றும் ஆய்வாளர். இவரின் பூர்வீகம் இலங்கை. தற்போது இங்கிலாந்தில் வசிக்கிறார். ஃபெம் ஏசியா (www.femasiamagazine.com) ஆங்கில இணைய இதழின் பிரதம ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இவருக்கு ஆங்கில-தமிழ் மொழிபெயர்ப்புத் துறையிலும் ஈடுபாடுள்ளது.

 

Latest comment
  • கவிஞனின் எழுது மேசை சிறப்பான கவிதை மொழி பெயர்ப்பு இக்கவிதை புதிய வியூகம் அருமை அருமை

leave a comment

error: Content is protected !!