Saturday, Oct 16, 2021
Homeபடைப்புகள்நூல் விமர்சனம்கதிர்வீச்சின் நாயகி “மாயி-சான்”

கதிர்வீச்சின் நாயகி “மாயி-சான்”


ப்பானியர்களின் எழுச்சி நிலையைப் பற்றி எங்கேயாவது, எப்போதெல்லாம் பேசப்படுகின்றதோ, ஜப்பானிய உற்பத்திப் பொருட்கள் பற்றி உன்னத நற்சான்றிதழ் எங்கெல்லாம் வழங்கப்படுகின்றதோ, அப்படியான ஒவ்வொரு சம்பவங்களின் பின்னாலும் ஒரு கதிர்வீச்சு படிமம், ஒரு எண்ணெய் பிசுபிசுக்கும் கருப்பு மழை, ஆறாத நாட்பட்ட புண், ஊனமடைந்த அவயங்கள் இப்படியான ஏதாவது ஒன்றின் சுருங்கிய கதை காணப்படும். அக்கதையை ஒரு, இரு வரிகளுக்குள் முடித்துவிடலாம், அவன் அல்லது அவள் அல்லது அவனது உறவினர்கள் அல்லது அயலவர்கள் அணுகுண்டு கதிர்வீச்சால் இறந்துபோனார்கள் அல்லது ஊனமானார்கள் என்று.

அளவில்லா மனிதகுல வரலாற்று மாதுயரத்தின் கதையை ஒற்றை வரிக்குள் அடக்கிவிடலாம். ஆனால் அந்தக் கதையின் வலியினதும், ரணத்தினதும் கணத்திற்கு எதை ஈடாக்கலாம்.  அதுபோன்ற வெறுமனே 20 பக்கங்களுக்குள் உள்ளடக்கிய சிறுவர் இலக்கிய கதைதான் “மாயி- சான்”

ஜப்பானிய எழுத்தாளரும், ஓவியருமான தோசி மாருகியால் ஜப்பானிய மொழியில் “ஹிரோஷிமா நோ பிக்கா” என்று வெளியிடப்பட்ட இப்புத்தகத்தைத் தமிழில் பல சிறுவர் புத்தகங்களை வெளியிட்ட கொ.மா.கோ. இளங்கோ அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

தோசி மாருதியும் அவரது கணவரும் அக்காலத்திலேயே ஹிரோஷிமா மக்களுக்குக் களத்தில் உதவிகளைச் செய்தது மட்டுமல்லாமல், அதன்பின் அணுகுண்டு பயன்பாட்டிற்கும் மற்றும் கதிர்வீச்சு ஆயுதங்களுக்கு எதிரான நடவடிக்கையில் செயல்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் நேரில் கண்ட ஹிரோஷிமா, நாகசாகி கோரச் சம்பவங்களைச் சித்தரிக்கும் இரத்தங்களற்ற, கண்ணீர் சிந்தும் நூற்றுக்கணக்கான ஓவியங்களை வரைந்து அதற்கான கண்காட்சிக் கூடத்தினை அமைத்திருக்கின்றார்கள்.

அப்படியொரு நாள் கண்காட்சியைப் பார்வையிட வந்த முதிர்ந்தவள் சொன்ன கதைதான் இது.

தோசி மாருகி கதையின் முதல் பக்கங்களில் ஹிரோஷிமாவின் காலை வானமும், காட்சியும் எப்படி இயற்கை பொதிந்த விடியலாக இருந்தது என்பதையும், அதுவே கடைசியாகப் புலர்ந்த, சுவாசித்த நச்சுக்களற்ற காலையாகவும், ஹிரோஷிமாகவும் இருந்தது என்பதைக் கதை முடிவடையும் போது வாசகர்களால் உணர முடியும்.

“மாயி-சான்” ஏழு வயது சிறுமி தனக்குப் பிடித்த மரவள்ளிக்கிழங்கை காலை உணவாக தன் பெற்றோருடன் அவசர, அதிகமாக தின்று தீர்த்திட வேண்டுமென்று உண்டு கொண்டிருக்கும் போதுதான் அந்த மாதுயரம் நடந்தேறுகிறது. அன்றைய காலைப் பொழுதின் பின் மா-சாயினின் வயதின் எண்ணிக்கையில் அதிகரிப்பு மட்டும் காணப்பட்டது தவிர, அவள் அதே ஏழு வயதிலேயே இறக்கும் வரை இருந்தாள்.

அமெரிக்கா தனது செல்ல அரக்கனான “லிட்டில் பாய்” ஐ 1945 ஆகஸ்ட் 6ஆம் திகதி அன்று காலை 8 மணி 15 நிமிடத்தில் ஹிரோசிமா என்ற திண்மத்தை வாயுவாக மாற்றி திரவமாக வடிய வைத்தது.

இந்த குறிப்பை எழுதும் போதே நான் என் மொத்த உடல்நிலை நிறையில் நூறு மடங்கு  கனத்தினால் கனப்பதை உணர்கிறேன்.

மா-சாயினின் ஒவ்வொரு வரிகளும் அம்மக்களின் மன ஓலத்தைப்  பிரதிபலிக்கின்றது.

ஓலமிடும் வரிகள் சில…

“நாலா பக்கமும் ஒரே புகைமூட்டம்….”

“ராட்சத காலங்களாக கதிர்வீச்சு புகைமண்டலம்….”

“தீயிலிருந்து தப்பிக்க மூச்சிரைக்க ஓடி வருவார்கள்…

“மேலாடை முழுவதும் எரிந்து, ஒட்டுத்துணியில்லாமல்….”

“நதிக்கரையில் துணியில்லாமல் தீப்புண்ணுடன் நடமாடிய மக்கள் இருட்டில் பயமுறுத்தும் பேய், பிசாசுகள் மாதிரி கருப்பு பூச்சுடன் அலைந்தார்கள்.”

“சக்தி இழந்து போரில் தோற்றுப்போன படைவீரர்களைப் போலப் பலர் சுடுமணலில் சரிந்தார்கள், மீதியுள்ள சிலர், சரிந்த படைவீரர்கள் மீது சாய்ந்து விழுந்தார்கள்.”

இப்படியான ஒவ்வொரு எழுத்துக்களும் அந்த கோரத்தைக் காண்பிக்கின்றது.

அந்த சின்ன அரக்கன் இரத்தமில்லா வெறியாட்டத்தைச் செய்து முடித்திருந்தான்.

அவர்கள் இரத்தம் சிந்தவில்லை, ஆனால் காயமுற்று இருந்தார்கள்,

அவர்கள் இரத்தம் சிந்தவில்லை, ஆனால் உடல்கள் கருகிப்போய் இருந்தன,

அவர்கள் இரத்தம் சிந்தவில்லை ஆனால் சதைப் பிண்டங்கள் கசிந்து ஒழுகியது,

அவர்கள் இரத்தம் சிந்தவில்லை, ஆனால் எலும்புகளுடன் மாத்திரமே தப்பித்து ஓடினார்கள்,

அவர்கள் இரத்தம் சிந்தவில்லை, ஆனால்  மரண வலியை அனுபவித்தார்கள்,

அவர்கள் இரத்தம் சிந்தவில்லை, ஆனால் குவியல் குவியலாக இறந்து கிடந்தார்கள். இருந்தாலும் அவன்தான் பிரபஞ்ச கருணையாளன், ஏனென்றால் இரத்தம் சிந்த வைக்கவில்லை. இக்கதையின் ஒவ்வொரு சொற்களையும் ஈர்த்துக் கொள்ளும் போது, எனக்குள்ளேயே சிலதைத் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டேன்.

“வரிகள் மீதான ரணங்களையே என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை, அந்த மக்கள் இந்த அவலத்தை எப்படி நேரடியாகத் தாங்கிக் கொண்டு இருப்பார்கள்?

“மனிதன் ஏன் இவ்வளவு கொடூரமானவனாக இருக்கிறான்,

எந்தப் புள்ளியில் தன்னை அவன் மிருகமாக உணர்கின்றான்?”

“மாயி-சான்” கதை ஒரு ஏழு வயது சிறுமிக்கு நேரிட்ட கொடுமைகளும், அவள் அனுபவித்துக் கடந்து சென்ற வேதனைகளும் மட்டுமல்ல, மா-சாயினின் தாய், ஒரு பெண் எப்போது தன்னை அதி சக்தி மிக்கவளாக பரிணமிக்கிறாள் என்பதையும் பற்றியதாகும்.

தீக்காயங்களால் சூழப்பட்ட தன் கணவனையும், குழந்தையையும் காப்பாற்றுவதற்காக கணவனைத் தோளில் சுமந்து ஹிரோஷிமாவின் ஏழு நதிகளைக் கடந்து கடலை அடைகிறாள்.

“படுவேகமாக தீப்பிழம்பினுள் குதித்து நுழைவதைப் பார்த்துத் திகைத்து நின்றாள் மாயி சான்.”

“தனது கணவரைத் தூக்கி தோளில் படுக்க வைத்துக்கொண்டாள்.”

“அம்மாவுக்கு அபூர்வ சக்தி எப்படிக் கிடைத்ததோ!”

 

மாயி-சானின் உணர்வுகளை மட்டுமல்லாமல் முழு ஜப்பானியர்களின்  அத்தாக்குதல் மீதான உணர்வுகளைத்  தோசி மாருகி அச்சுப்பிசகாமல் ஓவியத்தில் செதுக்கியது போல் வரிகளில் செதுக்கியதை, தமிழில் மொழிபெயர்ப்பாளர் இளங்கோ அவர்கள் அதன் வழியிலேயே மொழிபெயர்த்து இருப்பது பாராட்டத்தக்கது.

ஒரு மாதுயரத்தின் குறுங்கதையை எழுதுவதற்குப் பல வருடங்களைச்  செலவிட்டுள்ளார், காரணம் இக் கதையானது, இக்கதையைச் சமர்ப்பித்துள்ள இவ்வுலகத்திலுள்ள  அனைத்து பேரன், பேத்திகளும் புரிந்து கொள்ளும் எளிமை மிக்க அதே உணர்வுகளுடன் இருக்கக் கூடியதாக இருப்பதற்காகவே இத்தனை வருடங்களை அவர் செலவிட்டுள்ளார். அத்துடன் அச்சமர்ப்பித்தலில், இக்கதையைப் படிக்கும் சிறுவர்கள் மனிதகுலத்திற்கு ஆபத்தான போரைத் தடுத்து நிறுத்துவதற்கும், உலக அமைதிக்காக உறுதி மொழியும் எடுக்க வேண்டும் என்பதே.

 

மாயி-சானுக்காக ஒரு சொட்டு கனவு…

 

மாயி-சான் !

உன் பக்கங்களைப் புரட்ட முடியவில்லை வரிகளின் இரத்தப் பிசுபிசுப்பு விரல்களில் ஒட்டிக்கொள்கிறது.

முனகல்களினாலும், கீச்சல்களினாலும், அழுகையினாலும்,

ஓலங்களினாலும் ஹிரோஷிமாவோடு சேர்த்து நான்-நிலமும் தீக்குழம்பாகக் கொதிக்கிறது

மாயி-சான் இன்னமும் ஏழு நதிக்கரைகளையும் தாண்டி விளையாடுகிறாள்

கடல் அலைகளில் மேல் மிதந்த குட்டித் தீவில்

அவள் இளைப்பாறக் கூடும்

அந்த வானம்பாடி

தலையைச் சுற்றி வட்டமிடக்கூடும்

கலப்பற்ற

எண்ணெயில்லாத மழைத்துளிகள் தேகத்தைத் தொட்டுச் செல்லும் ஆவலில் குதுகலிக்கக் கூடும்.

 

கதிர்வாடையை மறந்து போன உப்பிழந்த காற்றை

தான்மானமிழந்து

வாரி இறைக்கக் கூடும்.

உவர்ப்பு விழுங்கிக் கொண்ட சிட்டு தாய்ப்பால் உறிஞ்சும் இச்சா கொட்டலில்

தன்னை மறந்திருக்கக் கூடும் தீராத பொரியுருண்டையுடன்

அவளின் வயதை மீறிய வளர்ச்சியால் சகாப்தங்களைத் தொட்டு உயர்ந்து நிற்கிறாள்

தட்டுத் தடுமாறி உரையாடி முடித்தவுடன்

தழம்பும் குரலால் என் ஆன்மாவிடம் நானே கேட்டுக் கொள்கிறேன்

மனிதன் ஏன் இவ்வளவு கொடூரமானவன்.

ஆனால்,

மாயி-சான் இன்னமும்

விளையாடிக் கொண்டே இருக்கிறாள்.


  • ஹனீஸ் முஹம்மட்

நூல் : மாயி-சான்: ஹிரோசிமாவின் வானம்பாடி

ஆசிரியர்: தோசி மாருகி.

மொழிபெயர்ப்பு : கொ. மா. கோ. இளங்கோ

வெளியீடு : பாரதி புத்தகாலயம்

 

பகிர்:
Latest comment
  • மாயிசான் ஒரு உணவுமிக்க கதை, சிறப்பானதொரு விபரிப்பு.
    மாயிசானுக்காக எழுதிய கடைசி வரிகள் ஏக்கத்தை உருவாக்கிறது.

leave a comment