விஜயராவணனின் ’இரட்டை இயேசு’படைப்புக்களின் ஊடாடும் கற்பனை வாதமும் கதை செறிவும்

ரு படைப்பாளன் தனது படைப்பை யாருக்கு எடுத்துச் சொல்ல அவன் கொள்கிற களங்கள் மிக முக்கியமாக உள்ளது. யாரும் சொல்லாத செய்தியை, களத்தை, நிகழ்வை அல்லது சம்பவத்தை வெளிப்படுத்தும் நோக்கமாகக் கொண்டுதான் ஒவ்வொரு படைப்பாளிகளும் இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள். அவ்வாறாக இயங்கும் கதைஞர்கள் மட்டுமே அடுத்த தளத்திற்கு நகர்ந்துச்  செல்ல முடிகிறது. 100 ஆண்டுகளுக்கு மேல் கடந்த சிறுகதைப் படைப்புலகத்தில் கதைக்கான களத்தை, வெளியை நிகழ்வைச் சொல்லிச் சென்றவர்கள் ஏராளமாக உள்ளனர். சொல்லத் துடிப்பவர்களாக இன்றைய காலத்தில் கே.என்.செந்தில்,  நரன், போகன் சங்கர், அகரமுதல்வன், சுனில் கிருஷ்ணன், சுரேஷ் பிரதீப், ஜீவ கரிகாலன், கணேச குமார், ஆண்டனூர் சுரா,அரிசங்கர்,விஜயராவணன், கார்த்திக் பாலசுப்ரமணியன் கார்த்திக் புகழேந்தி என்று ஏராளமான படைப்பாளிகள்  தற்போதைய துணைக்கதை உலகில் பயணிக்கின்றனர்.

நட்சத்திர வாசிகள்- கார்த்திக் பாலசுப்ரமணியன், ராஜீகாந்தி சாலை- விநாயக முருகன், கொட்டு முழக்கு, இரவல் காதலி-  செல்லமுத்து குப்புசாமி, இடைவேளை- ஆ.வெங்கடேஷ், மூன்றுவிரல்- இரா. முருகன், தந்திர வாக்கியம்- எம்.ஜி.சுரேஷ், இன்னும் பல  மென்பொறியாளர் சார்ந்த வாழ்வைக் கூறும் புதினங்களின் மத்தியில்  மென்பொறியாளராகப் பணியில் இயங்கிக் கொண்டு, அதிலிருந்து சற்று விலகிப் பொறியியல் துறை  வாழ்வோடு அங்குப் பயணிக்கும் மனிதர்களுக்குள்ளும் கதைகள் உண்டு வாழ்க்கை உண்டு அவர்களிடம் தேங்கிக் கிடக்கும் பதிவுகள் உண்டு என்பதை விஜய ராவணனின் பதிவுகள் வெளிப்படுத்தி நிற்கின்றது.  நயமாக மொழியில்  மொழிபெயர்ப்பு கதைகளைப் போலத் தந்திருக்கும் விஜயராவணனின் இரட்டை இயேசு ஊடாடும் கதை வெளியில் கற்பனை வாதத்தையும் பலமரபு கதை வெளியையும் ( நாட்டார் கதை பாணியும் )  காண முடிகிறது

இரட்டை இயேசு சொல்லும் செய்தி 

விஜய ராவணன் படைப்புகளில் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது மூன்று புத்தகங்கள் எழுதியுள்ளார். முதல் புத்தகம்  நிழற்காடு இரண்டாம் புத்தகம் இரட்டை இயேசு மூன்றாம் புத்தகம் பச்சை ஆமை. இரட்டை இயேசு 163 பக்கங்கள் கொண்ட ஒரு சிறுகதைத் தொகுப்பு வெறும் ஆறு கதைகள் மட்டுமே இதில் இடம்பெற்றிருக்கிறது. கதைஞர்கள் கட்டுப்பாடு இன்றி கதைக்கான  பக்க வரையறை என்பது இணையதளத்தில் எழுதுவதற்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. சிற்றேடுகளை எழுதுவதில் பக்க வரையறை ஒரு படைப்பாளியைச் சுருக்கிக்கொள்ளுவது உண்மை

விஜய ராவணனின் கதை தலைப்புகள் அனைத்தும் தேர்ந்து வைக்கப்பட்டுள்ளதைக் கதையை வாசித்து முடிக்கையில் தெரிந்து கொள்ள முடியும். ”ஆரஞர் உற்றன கண்” இது திருக்குறள் 1179 ஆம் குறளில் இடம் பெறும் இரண்டாம் அடியாகும். இந்தச் சொல்லுக்குப்  பெருந்துன்பம், வருத்தம், பெருந்துயர், அரிய துயர்  அதாவது பெரும் துயர் உடையவரின் கண் என்பதாகும்.

 “அகாலம்” என்பது மரணம் அல்லது இளம்வயதில் இறப்பது என்பதாகப் பொருட்படும். ”இரட்டை இயேசு” கதையில் இரண்டு இயேசுவா என்று எண்ணி வாசிக்கையில்  இயேசுவும் இயேசுவுக்குப் பின்னால் குற்றவாளியாக அறையப்பட்டவர். இது அந்த நாட்டில் இருக்கும் நாட்டார் கதையா என யோசிக்க வைத்தது. 

”என்றூழ்”  என்கிற வரியைப் புறநானூற்றிலிருந்து எடுத்தாண்டு உள்ளார். ’என்னூழ் வாடுவறல் போல’ என்பதாக இருக்கின்றது. மேலும் என்று+ ஊழ்= வெப்ப வாழ்வு வதைக்கும் கோடை, என்றும்  எல்(ஒளி)+ஊழ்= சூரியன், என்றும் பொருட்படுகிற நிலையில் கதையும் அமைத்துள்ளார்.  இன்னொருவன், தங்கமீன் ஆகிய இரண்டு கதைகளும்  கதைக்கு ஏற்ப பொருத்திய தலைப்பாகவே உள்ளது.

கதை தொனி புலம்

மொத்தம் ஆறு கதைகள் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு இணைய தள ஊடகத்தைச் சுமந்து  ( தமிழினி அக்டோபர் 10-2022, அகழ் செப்டம்பர்/ அக்டோபர், வனம் அக்டோபர் 2- 2021, அரூ- களவுருப்புனைவு மின்னிதழ் மே 10- 2021, ஓலைச்சுவடி இதழ் நவம்பர்15-2021, அகழ் ஜீலை 2023) வந்திருக்கின்றது.   

முதல் கதையான ”ஆரஞர் உற்றன கண்” மிகு துயர் என்கிற பெயரில் இந்தக் கதையைக் கொண்டு வந்திருக்கிறார். ஹன்னா என்ற ஓவிய கல்லூரி மாணவிக்குப் புத்தாண்டு வரவு கொண்டாட்ட நாளில், அதே நேரத்தில் கருப்பு வெள்ளை   நிறங்கள் மட்டும் தெரியும் அகமது அரீஃப் என்கிற அகதி வாழ்வையும், அவர்களுக்குள் இருக்கும் நிறங்களால்  நேசத்தால் ஒரு இணக்கமாக மாறும் காதல்  உறவைச் சொல்லும் கதையாக இது விளங்குகிறது. .கதையில் அகதிகளின் வாழ்வு, தன் பிறந்த நாட்டில் வாழ்ந்த நிலை, போர், துயரம், இடப்பெயர்வு பிற நாட்டில் அகதிகளின் சமூக மதிப்பீடு என விரித்துக் கூறப்பட்டுள்ளது. மேலும் கதைக்குள் மீபியல்பு சார்ந்த பழமரபுக் கதை ஒன்றும் காட்டப்பட்டுள்ளது. இது எல்லாக் கதைகளிலும் விஜய ராவணன் படைத்திருப்பது கதைக்கு வலு சேர்ப்பதாகவே உள்ளது. 

அகாலம் என்ற கதை அதிகார வர்க்கம் தனது சுயத்தைக் கொடுங்கோல் முறையில் அந்நாட்டு வரலாற்றுப் பக்கங்களை அழித்துக் கொள்வதற்கான வேலைகளைச் செய்கின்றனர். புகைப்படங்கள் அடுத்து புத்தகங்கள், அகழாய்வுகள்  நினைவுகள் என முழுவதும் எடுத்துத் தூர எறிவதற்கான முயற்சியாக, முதலில் புகைப்படங்களை எடுத்து விடுவதற்கான ஆணை வருகிறது. மக்களின்  சாதக பாதகப் பேச்சு, பேராட்டகாரர்கள், எதிர்ப்புகள் அதன் எதிர் வினைகள் என்று  ஊடாகவே கதை  பயணிக்கின்றது. ஆளும் அரசு தொடர்ந்து மக்களை அடிமையாக்கும் என்ற எண்ணத்தில் இவ்வாறான செயல்களைச் செய்து கொண்டிருப்பதைக் குறிப்பிடுகிறது..

இரட்டை இயேசு இதுவே கதைப் புத்தகத்திற்கான தலைப்பும் கூட. இது வனம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.  இந்த உலகம் கொரோனா (காலங்களால் சந்தித்த நிலை ) வரப்போகிறது என்ற அறிகுறி தெரிவதற்கு முன்னால் ஏற்படும் கதை வழியாக இருக்கிறது. இந்தோனேசியாவில் வேலைச் செய்யப் பயணப்பட்டு இருக்கும் இருவர் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர் மற்றொருவர் ஐரோப்பியர் இருவருக்குமான உரையாடலோடு தொடங்குகின்றது. வயது முதிர்ந்த ஐரோப்பியர் இந்தியப் பின்புலங்களைப் பற்றிப் பேசுவதும் , கொரோனா பாதிப்பு குறித்தான உலக வெளியைக் கதையாகவும் பேசுகின்றது. இந்தக் கதைக்குள்ளும் ஒரு பழமரபு கதையை மீட்டுச்  செல்வதைக் காண முடிகிறது. இயேசு சிலுவையில் அறைப்பட்டதை நாம் அனைவரும் அறிவோம், ஆனால் அவர் பின்னால் அறியப்பட்ட சவப்பெட்டிச் செய்யும் ஒருவரைப் பற்றிய கதையைக் கூறுகிறார். இந்தக் கதை ஐரோப்பியத் தேசத்தில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இவ்வாறான பழமரபு கதைகள் கண்டிப்பாக மக்களோடு வழங்கப்பட்டு இருக்கலாம். அதுவே தனது கதைக்கான உயிர் மூலமாகக் கொண்டு எழுதி இருக்கிறார் என்பதாகவே தோன்றுகிறது

 “என்றூழ்” கதை இயந்திர மனிதர்களால் உருவாகி இருக்கும் உலகம் பற்றியான கதை. 50 வயதான ஆபிரகாம் என்ற இயந்திரத்துறையில் வேலை பார்ப்பவர் ஏழாம்  தலைமுறைகளைக் கடந்த நிலையில் இருக்கும் இயந்திர ரோபோக்கள் பரிமாண வளர்ச்சி கண்டறிந்த நிலையில், எட்டாம் தலைமுறை சார்ந்த சாரா  என்ற இயந்திர ரோபோவை வாங்கி அதனோடு வாழ்கின்றார். அவை கேட்ட கேள்வியின் ஊடாகவே இந்தக் கதையை நகர்த்திக் கொண்டு சொல்கிறார்.  ரோபோவை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ளுவதும் அது ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வோம் என்று கூறுவதாகக் கேட்கிறது. என்றூழ் என்பது சூரியன் அல்லது ஒளி என்று பொருள்படும் அதற்கு ஏற்பவே இந்தக் கதை வெளியைக் கட்டமைத்திருக்கிறார். 

 ”இன்னொருவன்” என்கிற கதை, பூடகத்துக்கான கதை வெளி அமைப்பில் இருக்கின்றது.  விஜய ராவணனின் கதை வெளியில் இந்தக் கதை நம்பகத்தன்மை அமைந்து வரவில்லை என்பதைப் போன்ற சாயலை ஏற்படுத்துகிறது. கதை பெருவெளி போக்கில் வாழ்க்கை இருப்பை நிதர்சனத்தோடு அணுகும் போக்கு உள்ள நிலையில், மீபியல்பு சார்ந்த போக்காக இக்கதை அமைந்துள்ளது. பெரு நகர வாழ்க்கையில் வாழும் பொருள் சார்ந்த பண்பாட்டில் கூட வீடு என்பது அத்தியாவசியத் தேவையின் பார்ப்பட்டது. வீடு தேடல் செய்வதற்கான பகுதியில் விளைந்திருக்கும் தரகர்கள். வீடு கிடைத்த பின்னால் அல்லது வீட்டுக்குள் குடி வந்த பின்னால் அந்த வீட்டைப் பற்றிச் சொல்லும் அமானுஷ்யங்கள் கதை பூடகத்தினுள் இன்னொரு ஊடாட்டத்தைச் செய்து கொண்டு விடுகிறது. கண்ணாடி உலகத்துக்குள் நாம் வாழ்வதைப்  பொய் என்ற பிம்பச் சறுக்குக்குள், கனவுலக எதார்த்த பின் புலங்களோடு இந்தக் கதை மொழிகின்றது

 ”தங்கமீன்”  கதையின் ஊடாடும் வாழ்க்கை என்பது போர்க்காலச் சூழலில்,  வீரர்கள் எப்போது வேண்டுமானாலும் போரிடத் தயாராக இருக்கும் நிலை,  பேராளி ஆகிய இருவருக்குமான சம்பாசனைகள் தான். தங்க மீன் பெத்து விற்பனைச் செய்யும் பெண்ணுடனான யதார்த்தம் அல்லாத மாய நிலை போக்கோடு தொடங்கி,  தங்களது பேச்சு முடிந்து விடை பெறும் போது எதிராளிகளான தங்கள் இருவரும் ஒவ்வொரு தோட்டக்களைப் பகிர்ந்து கொண்டு பிரிவதாக முடிந்து விடும், போர் தோற்றம், போர் நிகழ்வால் ஏற்படும் அவலப் பதிப்பு, சக மனிதர்களின் வாழ்க்கை, பூமி யாருக்கான சொந்தம் என்பதாக நீதி போன்றவற்றைக் கேள்வி கேட்கும்  நிலையாக இக்கதையைப் பார்க்க முடிகிறது.

கதையினுள் கதை

எல்லாக் கதைகளையும் நகர்த்தும் நாட்டார் பண்புடனான மாய யதார்த்தப் பாணியிலான கதைக்குள் கதையைப் புதைத்துக் கூறி இருக்கிறார். முதல் கதையான ஆரஞர் உற்றன கண் கதையில்  ஒரு சிறுவன்  நம்பமுடியாத  நீளமுள்ள மூங்கில் ஏணியில் ஏறுவது வானவில் தட்டி கீழே விழுவது. அகாலம் கதையில் சிறுவனுக்கும் பெண்ணுக்குமான பாச நெகிழ்வு அன்பு, இரட்டை இயேசு கதையில் இயேசுவுக்குப் பின்னால் அறையப்பட்ட சவப்பெட்டிச் செய்பவனின் நீட்சியாகக் கதை விரிந்திருக்கும்.  என்றூழ் கதை எட்டாம் தலைமுறை ரோபோக்களுடன்  வாழ்வைப்  பேசும் கதை இதில்  பழமரபு கதையாகப் பழங்காலத்தில் பத்துச் சூரியன் இருந்ததாகவும் கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படியாது போனதால் தேர்ந்த வில் வித்தைக்காரியான இளவரசி இப்போது  இருக்கும் சூரியனைத் தவிர மற்ற சூரியன்களை அழித்துவிடுவதாக உள்ளது. இன்னொருவன் கதையில் கண்ணாடிக்குள் மாட்டிக் கொண்ட மாய யதார்த்தப் போக்கை உணரலாம். தங்க மீன் கதையில்  தங்க மீனைப் பெத்து விற்பனைச் செய்யும் ஓர் அழகிய இளம்பெண் இவ்வாறு எல்லாக் கதைகளிலும் பழமரபு கொண்ட ஏதோ ஒரு கதை இடம் பெறாமல் இல்லை.     விஜய ராவணனின் கதை வெளிக்குள் மாறுபட்ட புதிய களங்களை அறிமுகப்படுத்துகிறார் மேலும் இவர் திருநெல்வேலிக்காரராக இருந்தாலும் திருநெல்வேலி மொழி என்பது தெரியாத அமைப்பில் பொதுவெளி மனிதர்கள் படிக்கும் அமைப்பாகவே இடம்பெற்று இருக்கிறது. ஒரு கதைசொல்லிக்குத் தேவையான முதல் தகுதி, தான் கதை சொல்லும் யுக்தியைப் பிறர் சரியாகப் புரிந்து கொள்வது தான். இதைச் சரியாகச் செய்திருக்கின்றார்.  கதையின் சூட்சமம் கதையை நேர்த்தியோடு சொல்வதோடு புதிய கதை வெளியை வாசகனுக்கு அறிமுகப்படுத்துவதாகும். இது சாலச் சிறந்த பாணியில் விஜய ராவணனிடம் பொருந்தி இருக்கிறது. இவர் கதை  பழமைக்கு வெள்ளையடிப்பு,  ”எம். கோபாலகிருஷ்ணன் கூறுவதைப் போலப் புனைவின் புதிய சாத்தியங்கள்”  என்பதாகக் கூறலாம். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.