சுகுமாரன் நேர்காணல்கள்: கவிதை குறித்த உரையாடல்

புனைகதைகளைவிடத் தன்வரலாறுகளும் வாழ்க்கை வரலாறுகளும் எப்போதும் வாசிக்க சுவாரஸ்யமானவை. விளிம்புநிலையிலுள்ள ஒடுக்கப்பட்டவர்கள், பாலியல் தொழிலாளிகள், திருநங்கைகள், திருடர்கள் உள்ளிட்டோர் வாழ்க்கை வரலாறுகள் இன்று அதிக அளவில் எழுதப்படுகின்றன. பதிப்புச் சூழலும் அதற்குச் சாதகமாக உள்ளது. இத்தகைய நூல்களினூடாக அவர்கள் சார்ந்த ஒட்டுமொத்தச் சமூகத்தையும் வாசிப்பவர்கள் கண்டடைய இயலும். சமூகத்தைப் புரிந்துகொள்ளவும் வாழ்க்கை குறித்த மதிப்பீடுகளைக் கட்டமைத்துக்கொள்ளவும் வாழ்க்கை வரலாற்று நூல்கள் உதவும். இதுபோன்ற நூல்களுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத வாசிப்புத் தகுதியுடையது நேர்காணல்கள்.

‘சிறுகதை எழுது என்று யாராவது என்னைக் கேட்டால் எனக்கு வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கிவிடும்’ (எழுதுவது எப்படி?) என்றார் தி.ஜானகிராமன். அதுபோல ‘நேர்காணல் என்று யாராவது அணுகினாலோ மேடையில் பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்டாலோ அடிவயிறு கலங்கும்’ என்கிறார் சுகுமாரன். ‘எது உனது பலவீனமோ அதற்குத்தான் சோதனை வரும்’ என்பதைப்போல நேர்காணலுக்கு அஞ்சும் சுகுமாரன்தான் தமிழ், மலையாளம், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் சுமார் ஐம்பது நேர்காணல்களை அளித்திருக்கிறார் என்பது ஆச்சரியமானது. சரியாகக் கடந்த ஐம்பது வருடங்களாக மூன்று மொழிகளின் இலக்கியத்திலும் இயங்கி வருகிறார்; அதன் நகர்வுகளைக் கவனித்து வருகிறார். அந்த வகையில் இது குறைவுதான். சுகுமாரன், தமிழில் அளித்த முப்பது நேர்காணல்களில் சரிபாதியை மட்டுமே தேர்ந்தெடுத்து ‘சுகுமாரன் நேர்காணல்கள்’ என்ற நூலாக்கியுள்ளார்.

 சுகுமாரன், 1973 முதல் எழுதத் தொடங்கியிருந்தாலும் முதல் நேர்காணல் 2008ஆம் ஆண்டுதான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கவிதை, கட்டுரை, நாவல், மொழிபெயர்ப்பு, இதழியல் என வெவ்வேறு இலக்கிய வடிவங்களில் இவரது செயல்பாடு இருந்தாலும் ‘கவிதைதான் எனக்குப் பிடித்தமான இலக்கிய வடிவம்’ என்கிறார். ஒட்டுமொத்தமாகப் பதினைந்து நேர்காணல்களையும் வாசிக்கும்போது கவிதை குறித்த காத்திரமான உரையாடலைச் சுகுமாரன் நிகழ்த்தியிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். கவிதை பற்றிய இவரது பார்வை தனித்துவமானது. தன் இலக்கிய இடத்தை வெகுவாகத் தாழ்த்திக்கொண்டே இந்த உரையாடலை நிகழ்த்தியிருக்கிறார். சுகுமாரனை நேர்கண்டவர்களும் அவரிடம் கவிதை குறித்தே விரிவாக உரையாடியிருக்கின்றனர். கலைக்கும் கலைஞனுக்குமான இடம் குறித்த இவரது கருத்துக்களும் வித்தியாசமானவை. ‘கலைஞனுக்குப் பிரத்தியேகச் சலுகைகள் ஏதுமில்லை’ என்கிறார்.

இந்நூலின் நேர்காணல்கள் அனைத்தும் ஒரே தன்மையில் அமைந்தவை அல்ல. நேர்கண்டவரின் ஆளுமையைப் பொறுத்து உரையாடல் நீளவும் குறுகவும் செய்திருக்கிறது. இவரது கவிதை முயற்சிகள், நாவல்கள், தொகுப்பாக்கம், மொழிபெயர்ப்பு என வெவ்வேறு பொருண்மை சார்ந்தும் ஒட்டுமொத்த இலக்கியச் செயல்பாடுகள் பற்றியும் நேர்காணல்கள் அமைந்துள்ளன. இலக்கியம் தவிர்த்து தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் சுகுமாரன் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். சுகுமாரனின் முதல் கவிதைத் தொகுப்பான ‘கோடைக்காலக் குறிப்புகள்’ கவிதையாக்கத்தில் அவர் தந்தையின் மீதான இளமைக்காலக் கோபமும் வெறுப்பும் வெவ்வேறு வடிவங்களில் ஊடாடியிருக்கின்றன. அதுவரையிலான கவிதை மரபில் பெரிய உடைவை ஏற்படுத்திய தொகுப்பு ‘கோடைக்காலக் குறிப்புகள்.’ ஆகவேதான் அவர் தந்தையைப் பற்றிய கேள்விகள் நேர்காணல்களில் தவறாமல் இடம் பிடித்திருக்கின்றன. இயல்பிலேயே தன்னை முன்னிறுத்திக்கொள்ள விழையாத கூச்சச் சுபாவம் கொண்டவர் சுகுமாரன். இந்நூல் அந்த அடையாளத்தைத் தகர்க்க முயன்றிருக்கின்றன. அவ்வகையில் நேர்கண்டவர்கள் அனைவரும் பாராட்டத்தக்கவர்கள்.

மரபுக்கவிதை எழுதத் தெரிந்தவர் சுகுமாரன் என்பது முக்கியமான தகவல். அவருக்குப் புதுக்கவிதை ஆர்வத்தை உருவாக்கியதில் புலவர் குழந்தை எழுதிய ‘யாப்பதிகாரம்’ நூலுக்கு முக்கிய பங்குண்டு. அந்நூலின் வழியாகத்தான் ந.பிச்சமூர்த்தியின் கவிதையாழத்தை உணர்ந்து கொண்டிருக்கிறார். மரபு தெரியாமல் அதனை மறுத்துப் பேசுபவர்கள் இன்று அதிகரித்திருக்கிறார்கள். ஆனால் சுகுமாரனுக்கு சங்க இலக்கியம் முதல் பிற்கால மரபுக்கவிதைகள் வரையான முறையான வாசிப்புப் பயிற்சி இருக்கிறது. ‘பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின்’ என்ற திருக்குறளும் ‘சுடர்தொடி கேளாய்’ என்ற கபிலரின் கலித்தொகைப் பாடலும் சுகுமாரனை வெகுவாகப் பாதித்திருக்கின்றன. தமிழுக்கு வளமான கவிதை மரபுண்டு; அது காலந்தோறும் தன்னை மொழிரீதியாகப் புதுப்பித்துக்கொண்டே வருகிறது என்பது சுகுமாரனின் பார்வை. மரபுக்கவிதைகளைப் போன்று சமகாலக் கவிதைகளையும் அவர் தொடர்ந்து வாசிக்கிறார். பிரம்மராஜன், ஆத்மாநாம், முகுந்த் நாகராஜன், இசை, போகன் சங்கர் என இவரது தேர்வு நீள்கிறது.

சுகுமாரனுக்குத் தாய்மொழி மலையாளம்; ஆனால் அவர் சிந்தனை தமிழ் சார்ந்தது. ‘என்னுடைய கவிதைகளை என்னால் மலையாளத்திற்குக் கொண்டுபோக முடியல. ஏனெனில் என்னுடைய சொற்களஞ்சியம் தமிழ் சார்ந்தது’ என்கிறார். தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளின் இலக்கியப் போக்குகளைக் காய்தல் உவத்தல் இன்றி இந்நேர்காணல்களில் விரிவாக உரையாடியிருக்கிறார். ‘தமிழ்க் கவிதை எவ்வளவு செறிவாகவும் சுருக்கமாகவும் இருக்கிறதோ, அதற்கு எதிராக மலையாளக் கவிதை விரிவாகவும் சமயங்களில் அரட்டையாகவும் இருக்கிறது’ என்ற கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். தமிழ் இலக்கியத்தின் பலவீனங்களையும் அவர் சுட்டாமல் இல்லை. ‘சித்திரப்பாவை’ நாவலுக்கு 1975ஆம் ஆண்டு ஞானபீட விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து அந்நாவல் இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. தமிழ் இலக்கியத்தின் அடையாளமாகச் ‘சித்திரப்பாவை’ மலையாள மொழிக்குச் செல்லும்போது, அந்நாவல் குறித்து எதிர்மறையான விமர்சனங்களே அங்கு எழுந்தன. தமிழ்ப் புனைகதைகளின் தரம் இப்படித்தான் இருக்கும் என்ற எண்ணத்தை அந்நாவல் விமர்சகர்களிடையே உருவாக்கிவிட்டது. அதனால்தான் தமிழிலிருந்து அதிகப் படைப்புகள் மலையாளத்துக்குச் செல்லவில்லை என்ற தகவலைச் சுகுமாரன் பதிவு செய்திருக்கிறார். அரசு சார்ந்து உயரிய விருதுகள் கொடுக்கும்போது மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்பதையே இச்சம்பவம் காட்டுகிறது.

சுகுமாரன் குறைவாகப் பேசக்கூடியவர்; குறைந்த அளவே எழுதியும் இருக்கிறார். ஆனால் மொழிபெயர்ப்பு, தொகுப்புப்பணி என ஒட்டுமொத்தமாக அவரது இலக்கியப் பங்களிப்பைத் திரட்டிப் பார்க்கும்போது அதிகம்தான். ‘எழுத்து என்பது உடனடியாக எதிர்வினைக் காட்டுகிற விஷயமல்ல’ என்பதுதான் இவர் குறைவாக எழுதியிருப்பதற்குக் காரணம். தன் இளமைக்கால வெல்லிங்டன் வாழ்க்கையையே மிகப் பிற்காலத்தில்தான் புனைவாக எழுதியிருக்கிறார். 1994இல் ஜஹனாரா கல்லறையைப் பார்க்கிறார். 2017இல்தான் இது ‘பெருவலி’ நாவலாக வெளிவருகிறது. இதுதான் சுகுமாரனின் பாணி. சுந்தர ராமசாமியின் தாக்கம் சுகுமாரனிடம் உண்டு. சு.ரா.வைப் போன்று பெரிய விஷயத்தையும் சில வரிகளில் எழுதிவிடுகிறார். சுகுமாரனிடம் வெளிப்படும் கூர்மையான மொழிதான் இதற்குக் காரணம். நேர்காணல்களிலும் இது பிரதிபலித்திருக்கிறது.

 தன்னைப் பாதித்த எழுத்தாளர்களாகப் பாரதியார், சுந்தர ராமசாமி, ஆத்மாநாம் ஆகியோரைப் பல இடங்களில் சுகுமாரன் நினைவுகூர்ந்திருக்கிறார். இலக்கிய உலகிற்குள் தான் நுழையக் காரணமாக இருந்த தமிழாசிரியர்கள் புலவர் ச.மருதவாணன், ந.சுந்தரராசன், சோமசுந்தரம், கமலேஸ்வரன் ஆகியோர் குறித்து ஒவ்வொரு நேர்காணலிலும் மறக்காமல் பெருமையுடன் பதிவு செய்திருப்பது சுகுமாரனின் குணத்தைக் காட்டுகிறது. தனக்குச் சிறிய உதவி செய்தவர்களையும் பெரிய அளவில் பாராட்டிப் பேசும் அவரது பண்பை அவரது முன்னுரைகளில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். இந்நூலில் இடம்பெற்றுள்ளவற்றில் ‘உங்கள் நூலகம்’, ‘தடம்’, ‘காலச்சுவடு’, ‘இலக்கியவெளி’ ஆகிய இதழ்களில் வெளிவந்த நேர்காணல்கள் குறிப்பிடத்தக்கவை. வாசிக்கத் தவறவிடக் கூடாதவை. கவிதை, மொழிபெயர்ப்பு, இசை, சினிமா, இலக்கிய ஆளுமைகள் குறித்த விரிவான பார்வையைச் சுகுமாரன் இந்நேர்காணல்களில் முன்வைத்திருக்கிறார். ‘உங்கள் நூலகம்’ நேர்காணல் கேள்விகளற்ற தன்னிலை உரையாக அமைந்துள்ளது. இதுவொரு வித்தியாசமான முயற்சிதான்.

 இளமைக்கால அனுபவங்கள் திரும்பத் திரும்ப இடம்பெற்றிருப்பதை நேர்காணல்களில் தவிர்ப்பது கடினம்தான். நேர்கண்டவர்களைப் பற்றிய குறிப்புகள் புத்தகத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் இந்நூலைப் படிக்கக்கூடிய வாசகனுக்கு நேர்காண்பவர்களின் அரசியல் பின்புலத்துடன் வைத்துக் கேள்விகளையும் சுகுமாரனின் பதில்களையும் புரிந்துகொள்வதற்கு வசதியாக இருக்கும். கடந்த ஐம்பது வருடங்களில் மூன்று மொழிகளில் நடந்துள்ள இலக்கிய முயற்சிகளை இந்நூலை வாசிக்கும் ஒருவர் உள்வாங்கிக்கொள்ள முடியும். நேர்காணலும் வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதிதான். சுகுமாரன் என்ற ஓர் எழுத்தாளரின் இலக்கிய வாழ்க்கையை அறிந்துகொள்ளும்போது அவர்காலச் சமூகத்தையும் புரிந்துகொள்கிறோம். அந்த நிறைவை இந்நூல் அளிக்கிறது. அதேபோல் சுகுமாரன் எடுத்த நேர்காணல்களையும் தொகுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் இந்நூல் ஏற்படுத்துகிறது. ‘இலக்கியம் என்பது மரபின் காரணமாக வருவதில்லை’ என்று உறுதியாக நம்பும் சுகுமாரன், எழுத வரும் இளம் தலைமுறைக்கு இந்நேர்காணல்கள் வழி பெரும் நம்பிக்கையை அளிக்கிறார்.

– சுப்பிரமணி இரமேஷ்

Previous articleகூப்பிய கரம்
Next articleதீஞ்சுவை
சுப்பிரமணி இரமேஷ்
நவீன இலக்கியங்கள் குறித்த விமர்சனக் கட்டுரைகளை எழுதுகிறார். சென்னை, இந்துக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். எதிர்க்கதையாடல் நிகழ்த்தும் பிரதிகள், தொடக்க காலத் தமிழ் நாவல்கள், தமிழ் நாவல்: வாசிப்பும் உரையாடலும், படைப்பிலக்கியம் ஆகிய கட்டுரை நூல்களும் ஆண் காக்கை என்ற கவிதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. காலவெளிக் கதைஞர்கள், தமிழ்ச் சிறுகதை: வரலாறும் விமர்சனமும், பெருமாள்முருகன் இலக்கியத்தடம், பத்ம வியூகம் ஆகிய தொகைநூல்களும் இவரது பங்களிப்புகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.