தீஞ்சுவை

வீட்டில் பெண் பார்க்கத் துவங்கியும் பெண் பற்றிய எந்தத் தேடலும் பரமசிவனிடம் இல்லை. அக்காக்களையும் தங்கைகளையும் அவரின் அப்பாவே கரையேற்றிவிட்டார்.தான் பெற்ற ஏழு பெண் பிள்ளைகளுக்கும் பரமசிவன் தான் ஒரே சகோதரன் என்பதால் தன் காலம் வரையில் மகனுக்கு எந்தச் சுமையையும் ஏற்றாமல் கடமைகளை முடித்து விட்டார். மகனின் திருமணம் மட்டும்தான் பாக்கி. மகனுக்கு ஏற்ற பெண்ணைத் தேட ஆரம்பித்திருந்தார்.

ஆலங்குடியில் ஆட்டுக்கறி துள்ளத் துடிக்கக் கிடைக்கும். வடசேரியில் கடல் மீன்கள் நல்ல விலைக்குக் கிடைக்கும்.பாமனியில் முளைக்கீரை தள தளவெனக் கிடைக்கும். இப்படியாகத்தான் பெண் தேடும் ஊர்களைக் குறித்துக் கொள்வார் பரமசிவனின் அப்பா.

“ஒம் புள்ள கலியாணத்த நீ பாக்க மாட்ட ராமு” என்று கடைசியாகச் சொன்ன கும்பகோணம் ஜோசியர் வீட்டு ஏலக்காய் டீயைச் சப்புக்கொட்டியபடியே திண்ணை இறங்கிய பரமசிவனின் அப்பா நெஞ்சைப் பிடித்துக்கொண்டு வாசலில் சரிந்தார்.

மகனுக்கென்று எந்தத் தொழிலையும் விட்டுச் செல்லவில்லை. குந்தித் தின்னச் சொத்து சுகமும் இல்லை. என்றாலும் பத்தாம் வகுப்பு வரை படிக்க வைத்து மெட்ராசில் ஆங்கிலேயக் கம்பெனி ஒன்றில் சிபாரிசில் வேலை வாங்கிக்
கொடுத்து விட்டார்.
எந்த வேளைக்கு எதைச் சாப்பிட வேண்டும் எந்த ஊரில் எதைத் தேடி உண்ண வேண்டும் என்ற ருசி மட்டும் அப்பாவிடமிருந்து பரமசிவனுக்கு அப்படியே ஊறிவிட்டது.

அப்பாவின் பூத உடல் வாசலில் கிடத்தப்பட்டிருக்கும்போதும் சரியான நேரத்திற்குப் பசியெடுத்து விட்டது. சுற்றியுள்ள அனைவரும் துக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும்போதும் வயிறு சத்தம் போட ஆரம்பித்து விட்டது. பரமசிவனின் பசியைப் பற்றி அக்காக்களுக்கும் தங்கைகளுக்கும் வானம் போலவும் பூமி போலவும் மாறாததாகத் தெரியும். சம்பந்தி புரத்திலிருந்து வந்திருந்த பயத்தங்கஞ்சியை பெரியக்கா ஒரு டம்ப்ளர் கொடுத்தார். வாங்கி ஒரு மடக்கு ஊற்றி விட்டு “இதுல வெல்லம் போடலியா! பயத்தங்கஞ்சிக்கி சீனி போட்ற கூமுட்டத்தனத்த ஒன் ஊருதான் செய்யும்” என்றார் பரமசிவன்.

பரமசிவனின் பக்கத்தில் அமர்ந்திருந்த பெரியக்கா கணவர் கனைத்துவிட்டு எழுந்து மாற்று இடத்தில் உட்கார்ந்தார்.

பழைய சோறாக இருந்தாலும் கெட்டித் தயிரும், குறுத்த அரிந்த சின்ன வெங்காயமும் மணக்க வேண்டும். சோறு கிடக்கும் மட்டம் தாண்டி குண்டானிற்குள் தண்ணீர் நிற்கக் கூடாது. நொறுங்கப் பிணைந்து சாப்பிட்டதும் ஒரு உள்ளங்கை குழிவிற்கு மட்டுமே நீராகாரம் பருக்கைகளற்று மீந்திருக்கும். அதைப் பரமசிவன் உறியும் சத்தம் சோத்துக்காகக் காத்திருக்கும் தெரு நாய்களையும் கூசிவிடும்.

பெரியக்காவின் சின்ன மாமியார் வழியில் பெண் துவைந்தது. பரமசிவனின் நிறத்திற்கு அப்படியே மாற்று நிறம். அவர் மைக்கறுப்பு அந்தப் பெண் சந்தனம் படிந்த வெள்ளிக்கிண்ணம். எல்லோருக்கும் பெண்ணைப் பிடித்து விட்டது. பெண்ணிற்கு ‘கோங்குரா சட்டினி’ வைக்கத் தெரியுமா என்றார் பரமசிவன். “எல்லாம் கத்துக்கும் மாப்ள. என் பொண்ணு சமச்சா அது கைருசி தனி ரகம்” என்றார் பெண்ணின் தகப்பனார். பட்டணத்து மாப்பிள்ளைக்கு எப்படியும் தன் மூத்த மகளைக் கொடுத்துவிட வேண்டும் என்ற தவிப்பு அவருக்கு. “மாப்ளைக்கு வயக்காடெல்லாம் இல்லன்னா என்னா என் பொண்ணு வயக்காட்டுலயா வாழப்போவுது? மட்ராசுல வாழப்போவுது மாப்புள்ளக்கி நல்ல கொணமாம் வெசாரிச்சுட்டன்” என்றார் பங்காளிகளிடம்.

” ஒங்க பொண்ண நாளக்கி மீன் கொழம்பு வைக்க சொல்லுங்க சாப்டுட்டு முடிவு பண்ணுவோம்” என்றார் பரமசிவன். “நண்டு நல்லா வைக்குமுங்க” என்று புடவையைப் போர்த்தியபடி கதவோரம் நின்று சொன்னார் பெண்ணின் அம்மா.
“நண்டு யாரு வச்சாலும் ருசியாப் போய்ரும். மீனுக்குதான் பக்குவம் வேணும். அசைவத்துல மீனுக்கும் சைவத்துல அவரக்காய்க்குந்தான் தனியா தெறம வேணும்” என்று பரமசிவன் சொன்னதும் “சோத்துக்குப் பொறந்த பய மானத்த வாங்குறான் பாரு” என்று தங்கைகளிடம் முணுமுணுத்தாள் பெரியக்கா.

“மீன் கொழம்பு ஒரே இனிப்பு. வெல்லக்கட்டி போட்ருக்கீங்க. புளி காட்டமா இருக்கு அதான் வெல்லம் துண்டா தெரியுது” என்று குழம்பு சட்டியின் பித்தலாட்டங்களைக் கொண்டு சந்தனக் கிண்ணத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். “சமயல் தானடா? நம்ம ஊட்டுக்கு வந்தா பக்குவம் தானா வரப்போவுது, இல்ல நீயே ஒன் நாக்குக்கு ஒனக்கையா சொல்லிக் குடுத்துக்க. அதுக்குன்னு கண்ணுக்கு நெறவா குடும்பத்துக்கு ஏத்த பொண்ண வேணாம்னா சொல்றது!” என பெரியக்கா எடுத்துச் சொன்னார்.

“சமையலுங்குறது கூடவே பொறக்குற கைரேகை மாதிரி. செலருக்குதான் கைப்பக்குவம் அமையும். நம்ம அம்மா ஒரு பிடி பச்சரிசி போட்டு பொங்குனா கூட ருசியா இருக்கும். நம்ம அப்பா சும்மா ஏனோ தானோன்னு பொண்ணு கட்டுனாருன்னு நெனச்சியா?” வாசலில் செருப்பைப் போட்டுக்கொண்டு அம்பாசிடரில் ஏறி உட்கார்ந்தார் பரமசிவன்.

“இனி இவன யாராலயும் நிறுத்த முடியாது வாடி வண்டியில ஏறு” என்று மூத்தவளை இழுத்தாள் அவளுக்கு நேர் இளையவள். பின்னிருக்கையில் மூன்று அக்காக்கள் ஏறியதும் வண்டி நகர ஆரம்பித்தது. “அம்புட்டு ருசியா திங்கனும்னா நீதான் சமச்சிக்கனும் இனி. அம்மாக்கு வயசாயிட்டு அது இதுன்னு ஒன் வாய்க்கு ஒனக்கயா ஆக்க முடியாது” மூன்றாம் அக்கா சொன்னாள்.

“எனக்குத்தான் அந்தப் பக்குவம் அமையலியே. மூணாவது படிக்கும்போதே அம்மாவோடயே அடுப்படிலதான் கெடந்தேன். அப்பா வார எடுத்து வெலாசிட்டாரு. பொட்டச்சிக தர்பார்ல ஆம்பளக்கி என்னடா சோலின்னு”

“அவரு கடக்காரு பழய ஆளு. நாட்டை ஆள்றது ஆருன்னு தெரியும்ல! இந்திராகாந்தியாக்கும்” மூத்தவள் அவரைக்காய் பொரியலுடன் அரசியலிலும் கெட்டி என்பது பரமசிவனுக்கு நன்றாகவே தெரியும்.

தன் காலத்திற்கு பிறகு மகனை யார் பார்த்துக் கொள்வது என்ற கவலை அம்மாவிற்கு. மெட்ராசில் தனிக்கட்டையாய் வாழ்ந்து கொண்டு ஆந்திரா மெஸ் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பரமசிவனுக்கு அன்றைய சாம்பாரில் சுவை இல்லை.
“இன்னிக்கி யாரு மாஸ்டரு? சாம்பாரு சரியில்லயே” என்றார்.

“மாஸ்டருக்கும் மொதலாளிக்கும் பிரச்சன. இனி அந்த மாஸ்டரு இல்ல. வேற ஆளப் போட்டாச்சு. அவரு வச்ச சாம்பாருதான் இது” இலை எடுப்பவன் சொன்னான்.

அந்த மாஸ்டர் மயிலாப்பூரில் இருப்பது தெரிந்து அண்ணா நகரில் இருந்த தன் அறையை மயிலாப்பூருக்கு மாற்றிக் கொண்டார்.

ஊரில் தன் ஒரே மகனுக்கு அம்மா பெண் தேடிக் கொண்டிருக்க எந்த ஓட்டலில் எது சிறந்த உணவு என பரமசிவன் தேடிக்கொண்டிருந்தார். மதிய உணவு இடைவேளையில் சக அலுவலர்களின் சாப்பாட்டு அடுக்குகளை நோட்டமிடுவதற்காகவே அவர்கள் அருகில் உட்கார்ந்து ஏதோ ஒரு பேச்சை எடுப்பார்.

அலுவலகத்திலேயே அதிக சம்பளம் வாங்கும் தேவதாசின் சாப்பாட்டுக் கூடை பிசுக்குப் பிடித்து கலவை சாதங்களை மட்டுமே எடுத்து வரும். சாதங்கள் நிறம் மாறினாலும் பூண்டு ஊறுகாய் மாறுவதே இல்லை.
வாட்ச்மேனின் கூடைதான் கம்பெனியிலேயே செல்வாக்கான கூடை. சுட சுட சோறு அவனைத் தேடி வரும். ஒரு மாலையில் வாட்ச்மேனின் மகன் சிறிய வாளி ஒன்றை வாட்ச்மேனிடம் கொடுத்துச் சென்றான். வேலை முடிந்து வெளியேறிக் கொண்டிருந்த பரமசிவன் அவனருகே சென்று “வாளியில சூடா என்னமோ வந்திருக்கே!” என்றார்.

“வாளியத் தொடவே இல்ல சூடு எப்டிங்க தெரிஞ்சிது” என்று ஆச்சர்யப்பட்டார் வாட்ச்மேன். “அதான் பாதி வாளிக்கு ஆவி ஏறி நெறம் மாறிருக்கே” என்றார் பரமசிவன்.

வாளியைத் திறந்து உள்ளிருந்து சுட சுட மரவள்ளிப் பணியாரம் எடுத்துக் கொடுத்தார் வாட்ச்மேன். மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக் கொண்டார் பரமசிவன். பணியாரத்தின் ருசி அன்று முழுவதும் அவரைப் பாடாய்ப் படுத்தி விட்டது. தண்ணீரைக் கூட நாக்கை நனைக்காமல் இரண்டே முறை குடித்திருந்தார். பணியாரத்தின் மணத்தையும் ருசியையும் இழக்க மனமே இல்லை. நாவில் கரைந்து அவருள் சென்ற அந்தக் கைமணம் ஒரு பெண்ணுருவைத் தேடிக் கொண்டிருந்தது. ஏனோ தெரியவில்லை சிறு வயது முதலே பெண்களைச் சமையல் கட்டோடு மட்டுமே மையப்படுத்திப் பார்த்த அவருக்கு உள்ளங்கையோடு முடிந்திருந்தது பெண் அங்கம். பெண் வாடை என்றாலே தேங்காய்ப் பாலும் கடுகு தாளிப்பும் என்றாக இருந்தது அவருக்கு. ஆனால் இந்தப் பணியாரம் அவரை முன்னேற்றிக் கொண்டிருந்தது.

அந்த வாரத்தின் ஞாயிறில் வாட்ச்மேன் வீட்டை விசாரித்துப் போய்விட்டார். வாசலில் பரமசிவனைப் பார்த்ததும் வாட்ச்மேனுக்கு அதிர்ச்சி. “என்ன சார் இங்கல்லாம் வந்துருக்கீங்க. சொன்னா நானே ஓடியாந்துருப்பனே” என்றார். “இல்ல போனஸ் விசயமா ஸ்ட்ரைக் நடக்கப்போவுது அதப் பத்தி பேசுவோம்னு வந்தன்” என்று சொல்லிக் கொண்டே அந்தக் குடிசையைக் கண்களால் கொட்டிக் கவிழ்த்துக் கொண்டிருந்தார் பரமசிவன்.

“உள்ள வாங்க சார். ஒக்காருங்க” என்று கயிற்றுக் கட்டிலைக் காட்டினார். “என்ன சார் குடிப்பீங்க டீ? காபி?..” என்று இழுத்தார் வாட்ச்மேன். “எதுன்னாலும் பரவால்லயா. பச்சத்தண்ணின்னாலும் குடிப்பேன். கொண்டா” என்று கயிற்றுக் கட்டிலில் தன் முழு கனத்தையும் அமிழ்த்தி உட்கார்ந்தார் பரமசிவன்.

“இந்தா ஏய் தங்கம்! சாரு வந்துருக்காரு காபி ஒன்னு கொண்டா” என்றார் வாட்ச்மேன். தட்டியில் மறைந்திருந்த அடுப்படியிலிருந்து புகை மட்டும் வந்து கொண்டிருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் காபி டம்ப்ளர் மட்டும் வெளியே வந்தது. வாட்ச்மேன் அதை வாங்கி பரமசிவனிடம் கொடுத்தார். முதல் உறிஞ்சிலேயே தெய்வீகத்தை உணர்ந்து விட்டார். இரண்டாம் உறிஞ்சிற்கெல்லாம் தட்டியைத் தகர்த்துத் தங்கத்தைப் பார்த்துவிட வேண்டும் என்று பூரிப்படைந்தார்.

“காபி அருமையா இருக்குய்யா. கருப்பட்டி காபியாட்டம் இருக்கே” என்ற கேள்வியைத் தட்டிக்கு அப்பால் வீசினார் பரமசிவன்.

“எதாச்சும் போட்ருப்பா சார். அவளுக்கு வேறென்ன சோலி. இப்படித்தான் கண்டதையும் வாங்கி காசக் கரியாக்குவா” என்றார் வாட்ச்மேன்.

“என்னய்யா இப்புடி சொல்ற இந்தக் காபிக்கு மெட்ராசையே எழுதி வக்கலாம்யா. நீ என்னான்னா அடுப்புல போட்டு அவதிப்படுத்துற. கேசடுப்பு இல்லயா?” என்ற பரமசிவனின் கேள்விக்குத் தட்டியிலிருந்து முழுவதுமாக வெளிப்பட்டு ” இல்லீங்க” என்றாள் தங்கம்.

அவளும் மாநிறம் என்றாலும் பரமசிவனை விட துளி கறுப்பு குறைவு.
அடுப்பில் வெகுநேரம் வெந்த முகமே அல்ல அது. நல்ல மினுமினுப்பான முகம். குங்குமத்தைக் குழைத்து வைத்திருந்த அரக்குப் பொட்டு உற்றுப்பார்த்தால்தான் தெரியும். “நான் ஏற்பாடு பண்றேன்யா கேசடுப்புக்கு” என்று சொல்லிக் கொண்டே வெளியேறினார் பரமசிவன்.

பரமசிவனுக்கு இப்படியொரு தடுமாற்றம் முப்பத்தைந்து வயதில் வந்திருக்க வேண்டாம் என்றிருந்தது. அவளின் முகம் நெருப்பில் வாட்டி ஒட்டிய சுவரொட்டி போல் அவருள் ஒட்டிக் கொண்டது. இரண்டு பிள்ளைகள் பெற்றும் கட்டுக் குலையவே இல்லையே என்ற எண்ணம் உதித்த போது பரமசிவனுக்கு நெற்றியெல்லாம் வியர்த்திருந்தது. அடுத்தவன் பொண்டாட்டியை இப்படியெல்லாம் கற்பனிப்பது எவ்வளவு கீழ்த்தரமான செயல் என்று ஒரு மனம் கடிந்த போது “ஆனாலும் என்ன! அவள் அழகுதானே!” என்று அடுத்த மனம் அதன் மீதே படிந்தது.

பரமசிவனின் கால்கள் ஓயாமல் வாட்ச்மேன் வீடு நோக்கிச் செல்வதும் வருவதுமாக இருந்தது. மீன் வாங்கிச் செல்வது பிரண்டை வாங்கிச் செல்வது என ஏதேனும் ஒரு பையுடன் சென்று ஒரு வேளை உணவை அங்கேயே முடித்து விட்டுதான் வருவார். வாட்ச்மேன் அவ்வப்போது கேட்கும் சில்லறைப் பணங்களைக் கணக்கேதும் வைக்காமல் கொடுத்தனுப்புவார் பரமசிவன். “அவரு கேக்குறாருன்னு குடுத்துட்டே இருக்காதீய குடிச்சிட்டு வந்து என்னத்தான் தொந்தரவு பண்ணுவாரு” என்றாள் தங்கம். ஒன்றும் சொல்ல முடியாமல் இஞ்சி சட்னிக்குள் தோசையை முக்கி வாய்க்குள் போட்டார் பரமசிவன்.
“வேணும்னா இன்னிக்கி ராத்திரி இங்க தங்கி பாருங்க அவரு அடிக்கிற கூத்த” என்றாள் தங்கம்.

அன்றொரு நாள் தங்கியதுதான். அடுத்தடுத்த நாள்களின் இரவு உணவு தங்கத்திடம்தான் என்றானது. சம்பளத்தைப் பிரிக்காமல் அப்படியே தங்கத்திடம் கொடுத்து விடும் அளவிற்கு வாயும் வயிறும் பரமசிவத்திற்கு வளர்ந்திருந்தது. இரவில் வாட்ச்மேன் திண்ணையில் படுத்துக் கொண்டார். பரமசிவத்திற்கு பிடித்தமான உணவுகள் மட்டுமே சமைக்கப்பட்டது.

வித விதமாகச் சமைப்பதோடு நிறுத்தாமல் நல்ல நிறங்களில் புடவைகள் உடுத்த ஆரம்பித்திருந்தாள் தங்கம். தெருக்குழாயில் தண்ணீர் எடுத்துத் திரும்பும் அவளை நின்று பார்க்காத ஆளே இல்லை எனலாம். வறுமை ஓரளவிற்கு வடிந்தாலே பொலிவும் வனப்பும் பெண்ணைச் சீராட்டிவிடுகிறது. பரமசிவனின் ஆங்கிலப் பேச்சுக்களைக் கேட்டதிலிருந்து அவளுக்குள் பட்டாம்பூச்சிகள் மேய்ந்து கொண்டிருந்தன. பரமசிவனுக்கென்றே பார்த்துப் பார்த்து சமைத்தாலும் வாட்ச்மேனுக்கும் பரிவுடனேயே பரிமாறினாள்.

மூவருமாக இரண்டாம் ஆட்டம் சினிமாவுக்குச் செல்வர். வாட்ச்மேன் படம் ஆரம்பிக்கும்போதே தூங்க ஆரம்பித்து விடுவார். பரமசிவன் சுற்றத்தை மறந்து முற்றிலுமாக திரைக்குள் புதைந்து விடுவார். பெரும்பாலும் ஆங்கிலப் படங்களும் இந்திப் படங்களும்தான். தங்கத்திற்கு எதுவுமே புரியாது. முதல் இரண்டு படங்களுக்கு மட்டும் விளக்கங்கள் கொடுத்துக் கொண்டிருந்தார் பரமசிவன். ஆனால் அடுத்தடுத்த படங்களுக்குத் தங்கத்தையே புரிந்து கொள்ளச் சொன்னார். “என்ன சொல்றா அந்தப் புள்ள இப்ப?” என இரண்டு முறை ஒரு காட்சியைப் பார்த்துக் கேட்ட தங்கத்திடம் சிடுசிடுவென முகத்தைச் சிலுப்பினார். ” தத்தி தத்தி! அறிவு கெட்ட முண்டம். புரியலன்னா சும்மா உக்காந்து வேடிக்க பாரு” என்று கத்தினார்.

வீட்டிற்கு வந்ததும் சூடாக சப்பாத்தியும் கொண்டைக் கடலை குருமாவும் கேட்பார். பசியாறிய பரமசிவன் பத்து நிமிடங்களுக்கெல்லாம் குறட்டை விட ஆரம்பித்து விடுவார். சோறு கண்ட இடம் சொர்க்கம் எனச் சும்மாவா சொன்னார்கள். ஒரு முறை உள்ளம் என்ற வகை மீனை வாங்கி வந்து ” உள்ளதை விற்றாவது உள்ளம் வாங்கலாம்” என்றார். கறியும் மீனுமாக ஆக்கிப்போட்ட தங்கத்திற்கு ஒரு வளையல் போட வேண்டும் என நினைத்தாரே ஒழிய அதற்கான வகையே அமையவில்லை.

பீட்ருட் பொரியலில் காரம் போட்டிருந்த அன்றைய சமையல் பரமசிவனின் நாக்கைப் புண்படுத்தி விட்டது. “பீட்ரூட்ல எவளாச்சும் காரம் போடுவாளா?” கையை உதறிவிட்டு சாப்பாட்டில் இருந்து எழுந்தார் பரமசிவன். “ஏன் ருசியாத்தானா இருக்கும்!” என்று குளித்து முடித்த ஈரத்துணியுடன் வீட்டிற்குள் புகுந்தாள் தங்கம். “இனிப்புக் காய்ல காரம் போட்டா நல்லாவா இருக்கும். தேங்காத் துருவலும் சீரகத்தூளும் போட்டு எறக்குனா பிரம்ம பதார்த்தமா இருக்கும்” என்றார் பரமசிவன்.

அடுத்தடுத்த நாள்களில் உப்பில்லை காரமில்லை எனக் குறைகள் வளர்ந்து கொண்டே இருந்தன. “கொழம்ப சூடு பண்ணாம கொண்டாந்து வச்சிருக்க?” என்று கண்களில் விழாத தங்கத்திடம் கூவிச் சொன்னார். “அதனால என்னா சாப்புடுங்க” என்று வீட்டின் பின்புறத்தில் இருந்து குரல் அனுப்பினாள் தங்கம்.
“சூடே சுவைன்னு எங்கப்பன் சொல்லி வளந்தவன் நானு, சூடாக்கிக் கொண்டாறியா எழுந்து போய்றவா?” என்றார் பரமசிவன். பதில் ஏதும் இல்லை. சாப்பிடாமலேயே வெளியேறினார் பரமசிவன்.

“ஏன் சார் சாப்புடாமலயே எந்துருச்சிட்ட?” என்று அப்போதுதான் வீட்டிற்குள் வந்த வாட்ச்மேன் கேட்டார். “பசி இல்லய்யா” என்று சொல்லிக்கொண்டே தெருவில் இறங்கி மறைந்து விட்டார் பரமசிவன்.

“அந்தாள ஏன் டி நோவடிக்கிற? பச்ச புள்ள மாதிரி தீனிக்கு ஏங்குற மனுசன் டி” என்று பரமசிவத்திற்காக தங்கத்திடம் வக்காளத்து வாங்கினார் வாட்ச்மேன். “நாக்கையும் வவுத்தயும் நெரப்ப மட்டுமா பொம்பள! ஒன்ன எடத்துலயும் அந்தாள வலத்துலயும் வக்கலாம். நல்ல கூட்டணி ஒங்களது” என்று ஈரத்துணிகளை உதறிக் கொடியில் தொங்க விட்டாள் தங்கம்.

வாட்ச்மேன் வீட்டிற்கு பரமசிவன் செல்வது குறைந்து விட்டது. ஆனாலும் வாட்ச்மேன் விடாப்பிடியாக அவரை சாப்பிட அழைப்பார். ஒரு மாதமாகியும் தங்கத்தின் கையால் எதுவுமே சாப்பிடவில்லை பரமசிவன். “அவ என்னய கேக்குறதே இல்லயா?” என்று உடைந்த குரலில் வாட்ச்மேனிடம் கேட்பார் பரமசிவன். “பொட்டச்சிகள அவ்ளோ சுலுவா எட போடாதீய சார். மொத்தமா கொட சாச்சி உட்ருவாளுக. அவ மேல பைத்தியமா திரியாதீங்க. வேற நல்ல கைப்பக்குவமா ஒன்னு பாத்துக்குங்க அதான் நல்லது” என்று ஒரு குடிபோதையில் வாட்ச்மேன் சொன்னார்.

தனியாகச் சினிமாவுக்குச் சென்ற போது பக்கத்தில் தங்கம் இல்லாத வெறுமை ஏதோ செய்தது.அசோகா ஓட்டலின் கார போண்டாவில் தங்கத்தின் கன்னங்களை நினைத்துக் கொண்டார்.

அம்மாவைப் பார்க்க ஊருக்குச் சென்றுவிட்டு மெட்ராசுக்குத் திரும்பிய பரமசிவனுக்கு அதற்கு மேலும் வீம்பு பிடிக்கச் சக்தி இல்லை. விரால் மீனை வாங்கிக் கொண்டு காலையிலேயே தங்கத்தைப் பார்க்கச் சென்றார். திண்ணையில் வாட்ச்மேன் முதல் நாளின் குடியில் வாயொழுக தூங்கிக் கொண்டிருந்தார். வீட்டிற்குள் ஆணொன்றும் பெண்ணொன்றுமாய் இரண்டு பிள்ளைகள் ஒரே பாயில் தூங்கிக் கொண்டிருந்தன. வீட்டைச் சுற்றி வந்து விட்டார் பரமசிவன். எங்குமே தங்கம் இல்லை.

வாட்ச்மேனை எழுப்பி “தங்கம் எங்க போய்ருக்கு?” என்றார். தூக்கக் கலக்கமும் அரைப் போதையும் வாட்ச்மேனை விழிக்க விடவில்லை. பரமசிவனுக்கு அதற்கு மேல் பொறுமை இல்லை. ஒரு குவளை தண்ணீரை மூஞ்சில் அடித்து வாட்ச்மேனை எழுப்பினார்.

“சார் வா சார், இப்பதான் வாரியா” என்றார் வாட்ச்மேன்.

“தங்கத்த எங்க காணோம்?”

“ஆமா சார். நம்ம தங்கத்த மூனு நாளா காணோம்”.

“யோவ் என்னாயா ஒளறாம சொல்லு”

“ஆமா சார் அவளையும் காணோம். நம்ம பிசுக்கு கூடை தேவதாசு சாரையும் காணோம். இவ ஒரு மாசமா அந்தாளு மூக்கு பட பலகாரம் சுட்டு குடுத்தப்பவே எனக்கு சந்தேகந்தான். ஆனா இப்புடி நம்ம ரெண்டு பேரயும் கழுத்தறுத்துட்டு போய்ட்டாளே சார். என் புள்ளையள கூட நெனக்காம ஓடிட்டா சார்” என்று மேங்குரலெழுப்பி அழுதார் வாட்ச்மேன்.

வாசலில் நின்ற பரமசிவன் வீதிக்கு வந்தார். வீதியின் ஓரம் சாக்கடை ஒன்று ஓடியது. வாங்கி வந்த விரால் மீன்களைச் சாக்கடையில் கொட்டி நீந்துகிறதா எனப் பார்த்தார். மீன்கள் நீந்தி சாக்கடையின் போக்கில் சென்றன. பரமசிவனின் பின் வாட்ச்மேனும் வந்து சேர்ந்து நீந்திப்போன மீன்களையும் கையிலிருக்கும் வெறும் பையையும் பார்த்தார்.

1 COMMENT

  1. கதை நல்லாருக்கு. பீட்ரூட் ல காரம் நிறைய போட்டுருக்கும் போதே புரியாம போயிருச்சு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.