Saturday, May 28, 2022
Homeஅறிவிப்புகள்கனலி – ஜப்பானியக் கலை இலக்கியச் சூழலியல் சிறப்பிதழ்

கனலி – ஜப்பானியக் கலை இலக்கியச் சூழலியல் சிறப்பிதழ்


கனலி-யின் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் !

 

 நீர்ப்பறவைகள்

போகின்றன வருகின்றன.

அவற்றின் தடங்கள் மறைகின்றன

ஆனாலும் அவை

தம் பாதையை மறப்பதில்லை

ஒருபோதும்.

 

~டோஜென்

 

 கனலி-யின் ஜப்பானியக் கலை இலக்கியச் சூழலியல் சிறப்பிதழ் வழியாக மீண்டும் உங்கள் அனைவருடன் உரையாடுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கனலியின் தி.ஜானகிராமனின் நூற்றாண்டுச் சிறப்பிதழிற்குப் பிறகு எப்படிப்பட்ட சிறப்பிதழை கொண்டுவரலாம் என்று பல்வேறு விதமான குழப்பமான எண்ணங்கள் ஒவ்வொரு நாளும் மனதில் வந்து வந்து போய் கொண்டிருந்தன. அதே நேரத்தில் மறுபுறம், அப்படி வெளிவரும் சிறப்பிதழ், தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழ் அளவிற்கு சிறப்பாக இருக்க வேண்டுமே என்கிற அலைக்கழிப்பும் மனதில் இருந்தது. 

இந்த நேரத்தில் ஹாருகி முரகாமி ஜப்பானிய நவீன இலக்கியம் பற்றி எழுதிய ஒரு கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. அந்த கட்டுரை வாசித்த இறுதி கட்டத்தில் ஏன் கனலி இணையதளம் வழியாக ஜப்பானியக் கலை, இலக்கியச் சிறப்பிதழ் ஒன்றைக் கொண்டு வரக்கூடாது என்கிற எண்ணம் மனதில் உருவாகியது. ஏற்கனவே ஜப்பானிய நவீன இலக்கியம் மற்றும் ஜப்பானியக் கவிதை வடிவங்களான ஹைக்கூ போன்றவை இங்கு பரவலாக நிறைவான அறிமுகம் பெற்றுள்ளதை நாங்கள் அறிவோம். ஆகவே அதன் தொடர்ச்சியாக, ஜப்பானியச் சிறப்பிதழ் ஒன்றை உருவாக்கலாமே என்று மனதில் நினைக்கத் துவங்கிய புள்ளியிலிருந்து இன்று இந்தக் குறிப்பை எழுதிக் கொண்டிருக்கும் காலகட்டம் வரை நிகழ்ந்தததை எல்லாம் மறுபடியும் எண்ணிப் பார்க்கையில் மிகவும் வியப்பாகயிருக்கிறது. ஒவ்வொரு நாளும் இதற்கான திட்டமிடல், படைப்புகள் கேட்டுப் பெறுதல், மொழிபெயர்ப்புக்குச் சிறுகதைகள் மற்றும் கவிதைகள், கட்டுரைகள் தேர்வு செய்தல், வந்து சேர்ந்த படைப்புகளை பிழை திருத்தம் செய்தல், கடைசியாக படைப்புகளை இணையத்தில் வடிவமைப்பு செய்தல் என்கிற அனைத்து வேலைகளையும் நினைத்துப்பார்த்தால் சற்றே பெருமித உணர்ச்சி மேலிடுகிறது. எதற்காக இதை செய்கிறோம், ஏன் செய்கிறோம் என்கிற பெரிய கேள்விகள் எல்லாம் மனதில் இல்லை. மனதிலிருப்பது இது ஒன்றே.  ‘இது ஒரு இலக்கிய பணி. நிச்சயம் இதை நாம் செய்யத்தான் வேண்டும்’. இந்த ஜப்பானியச் சிறப்பிதழின் வழியாக வரும்காலத்தில் முகமறியா யாரோ ஒரு இலக்கிய வாசகர் ஜப்பானிய இலக்கியத்தைத் தேடிப் போனால் அதுவே எங்களுக்குப் போதும் என்றுதான் நினைக்கிறோம். ஆமாம் யாரோ முகமறியா இலக்கிய வாசகர்களுக்காக உழைக்கிறோம் என்பதில் தான் எவ்வளவு பெருமிதமும் மகிழ்ச்சியும் தன்னாலேயே வந்துச் சேர்கிறது. 

கனலி கலை இலக்கிய இணையதளம், ஜப்பானியக் கலை இலக்கியம் மற்றும் சூழலியல் சிறப்பிதழ் ஒன்றை தொகுத்ததின் பின்னணியாக அமைந்த, நாங்கள் கணக்கில் கொண்ட, சிலவற்றை மட்டும் முடிந்தவரைக்கும் கீழே எளிமையாக வகைமைப்படுத்தியுள்ளோம். 

ஒவ்வொரு சமூகத்தின் முக்கியமான பண்பாட்டு அசைவுகளான கலை, இலக்கியம், மொழி, சமூகம் போன்றவை இரண்டு சமூக சூழலிலும் (தமிழ் மற்றும் ஜப்பானிய) நிறையவே ஒத்துப் போகிறது. அவற்றைப் பற்றி ஏற்கனவே இங்கே சில ஒப்பிலக்கிய ஆய்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன (இந்த சிறப்பிதழில் கூட அவற்றைத் தெளிவாக விளக்கும் இரண்டு கட்டுரைகள் வெளிவந்துள்ளன). 

இரண்டாவது ஜப்பானின் நெருக்கடியான போர் வரலாறு. உலக வரலாற்றில், ஜப்பான் அளவிற்கு போர்களின் வழியாக இடர்பாடுகளை எதிர்கொண்ட, அதிக இழப்புகளைப் பெற்ற நாடு எதுவுமில்லை. இரண்டு உலகப்போர்கள். அணுக்குண்டு தாக்குதல்கள் அதன் நேரிடையான விளைவுகளில் ஒன்றான கொடூரமான கதிர்வீச்சு பரவல் என்பதையெல்லாம் நாம் இன்னும் கதைகளாகவும் கட்டுரைகளாகவும்தான் படித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவை உண்டாக்கிய நீண்ட கால விளைவுகள் நிறைய உண்டு.  பருவநிலை மாற்றம், சமூக அமைப்பின் உள் முரண்பாடுகள், தனிமனித கூட்டு நெருக்கடிகள் என்று இன்று ஜப்பானில் பிறக்கும் புதிய தலைமுறை வரைக்கும் இந்த நீண்ட கால பாதிப்புகள் தொடர்கின்றன. அதே நேரத்தில் வரலாற்றுக்கு ஜப்பான் அளித்த மனிதநேயமற்ற பங்களிப்புகளையும் நாம் தனியாக குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.   நாங்கிங் படுகொலைகள் என்று வரலாற்றில் குறிக்கப்படக்கூடிய, ஜப்பானிய போர் வீரர்கள் சீனப் படையெடுப்பின் போது நிகழ்த்திய போர் குற்றங்கள். இதுவும் ஜப்பான்தான்.

 மூன்றாவது ஜப்பானியர்களின் மனோபாவம்.  ஒவ்வொரு ஜப்பானியர்களும் அதிகமாகவே தங்களது அலைவுறும் ஆன்மாவை சுமந்து அலைகிறார்கள் என்பதே உண்மை. மானுடவியல் அடிப்படையில் ஜப்பானியர்கள் சீனப் பழங்குடியினர் மற்றும் கொரிய பழங்குடியினர் இணைந்து உருவாகிய ஒர் இனம். ஜென்னுக்கும் சாமுராய் மரபுக்கும் மத்தியில் இருந்து எழுந்து வந்தவர்கள் ஜப்பானியர்கள்.  நான்கு பக்கமும் கடல் கொண்ட அவர்களின் வரலாற்றை வாசிக்கும்போது எப்படி ஒரு நாடு இவ்வளவு விதமான போர்கள், உள்நாட்டுச் சிக்கல்கள், இயற்கைப் பேரிடர்கள் போன்றவற்றைச் சந்தித்த பிறகும் இன்னும் உறுதியாக மீண்டெழுந்து கொண்டேயிருக்கிறது என்பது ரகசியமான ஒன்றுதான். வரலாறுதோறுமான இந்த இடர்கள் ஜப்பானியர்கள் வாழ்வை எதிர் கொள்ளும் விதத்தை ஒரு மாபெரும் சாகசமாக அமைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும் . மேலும் ஆரம்பகாலத்திய மன்னராட்சியின் பழக்க வழக்கங்கள், சாமுராய் மற்றும் மரபின் மீதான மிதமிஞ்சிய பெருமிதம் இவற்றிலிருந்து அவர்களால் வெகுகாலமாக மீள முடியவில்லை. மேற்கத்திய  கலாச்சார ஊடுருவலுக்கு எதிர்வினையாக இருநூறு ஆண்டுகளுக்கு தங்களது நாட்டின் எல்லைகளை பூட்டி வைத்தது. நவீன உலகிற்கும் அவர்களுக்கும்  தொடர்புகளே இல்லாமல் செய்துவிட்டது. பிறகு திடீரென்று நவீன உலகை நேருக்குநேர் அவர்கள் சந்திக்கும்போது தாங்கள் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம் என்று அவர்கள் படிப்படியாக உணர்ந்து கொண்டார்கள். இந்த உணர்ந்து கொண்ட புள்ளியானது ஜப்பானியர்களிடம் ஒரு மாபெரும் நெருக்கடியை உருவாக்கியது எனலாம். தனிமனித விடுதலைவாத கருத்துக்களின்  தொட்டிலாக மேற்கு இருந்த சமயத்தில் ஜப்பான் அதற்கு மாறான ஒரு நிலையில் இருந்துகொண்டிருந்தது. இந்த காலகட்டத்தில்தான் ஜப்பானிய சமூகம் இரண்டு உலகப் போர்களைச் சந்திக்கிறது. இந்த உலகப் போர்களின் உடனடி விளைவாக ஜப்பானியர்கள் தங்கள் மரபின் நிறை குறைகள் என்ன என்பதை நேர்கொண்டு கண்டார்கள். அதன் நீண்ட கால விளைவாக தனிமனித விடுதலைவாத  கருத்துகள் எழுந்து வரத்தொடங்கின.. அதாவது இன்றைய ஜப்பான்.

  ஹாருகி முரகாமி சொல்வது போல  ஒவ்வொரு ஜப்பானியரும் இரண்டு விதமான வாழ்க்கையை வாழ்கிறார்கள் அவர்கள் மரணத்தை வாழ்வின் ஒரு நிலையாகத்தான் பார்க்கிறார்கள். இந்த அகம் மற்றும் புற முரண்பாடுகளைத் தான் ஜப்பானின் பழம்பெரும் இலக்கியங்கள் முதல் நவீன இலக்கியம் வரை பதிவு செய்து கொண்டேயிருக்கின்றன. 

  கடைசியாக ஜப்பானிய சமூகத்தின் மீண்டெழும் தன்மை. இவ்வளவு இடர்களையும் சந்தித்த பிறகும் ஜப்பானிய சமூகம் ஒவ்வொரு முறையும் ஒரு  மீண்டெழும் அற்புதத்தைச் செய்திருக்கிறது. அதன் சமூகம், அரசியல், கலாச்சாரம், நவீன இலக்கியம், அறிவியல் எல்லாவற்றிலும் இந்த மீண்டெழும் தன்மையையும் அதற்கான போராட்டங்களையும்  நீங்கள் பார்க்கலாம்.

  இப்படி பல்வேறு காரணிகளின் பின்னணியில், ஜப்பானியக் கலை, இலக்கியம் மற்றும் சூழலியல் பொருண்மையுள்ள படைப்புகளை தமிழ் இலக்கிய வாசகர்களுக்கு இன்னும் மேலதிகமாக அறிமுகம் செய்ய நினைத்தோம். அந்த செயல்பாடுகளின் பின்விளைவுகள் தான் கனலியின் இந்த ஜப்பானியச் சிறப்பிதழ். 

இந்தச் சிறப்பிதழில்   நவீன ஜப்பானிய எழுத்தாளர்களின் (நிறைய புதிய எழுத்தாளர்களின்) சிறுகதைகளை நிறைய கொண்டு வந்திருக்கிறோம். அ-புனைவுகள், அபுனைவு மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளன. செவ்வியல் மற்றும் நவீன ஜப்பானியக் கவிதைகளின் மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளன. இதுவரை தமிழில் வெளிவந்துள்ள ஜப்பானிய மொழிபெயர்ப்பு ஆக்கங்கள் குறித்த விமர்சனக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. சில நாவல் பகுதிகளும் புதிதாக வெளிவரயிருக்கிற புதிய நாவல் ஒன்றின் ஒரே ஒரு பகுதியும்  (காஃப்கா கடற்கரையில்  ஹருகி முரகாமி. தமிழில்: கார்த்திகைப் பாண்டியன்.) வெளிவந்துள்ளன. நேர்காணல்கள் சூழலியல் மற்றும் ஜப்பானியத் திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளையும் இதில் இடம் பெறச் செய்துள்ளோம். இந்த சிறப்பிதழில் இருக்கும் ஒவ்வொரு பங்களிப்பும், நல்ல வாசிப்பு அனுபவத்தை அளிக்கக்கூடியது என்ற வகையில் முக்கியமானது என்றே நாங்கள் நம்புகிறோம். அதனால் நாங்கள் இதைப்பற்றி தொடர்ந்து எழுதுவதை விட கனலியின் வாசகர்களான நீங்கள் அனைவரும் இந்தச் சிறப்பிதழில் இருக்கும் படைப்புகளை வாசித்து, உங்களது மேலான கருத்துக்களையும், விமர்சனங்களையும் எங்களுக்கு எழுதுங்கள். அதுவே கனலியின் ஆசிரியர் குழு நண்பர்கள் உங்களுக்கு வைக்கும் கோரிக்கை. நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்கள்தான் எங்களுக்குத் நீங்கள் தரும் அன்பின் சன்மானம். 

கடைசியாக, இந்த ஜப்பானியக் கலை இலக்கியச் சூழலியல் சிறப்பிதழில் மொழிபெயர்ப்புகளையும், படைப்புகளையும்  தந்து பங்குபெற்ற (அதுவும் குறைந்த கால இடைவெளியில்) ஒவ்வொரு மொழிபெயர்ப்பார்களுக்கும் , எழுத்தாளர்களுக்கும் கனலி ஆசிரியர் குழு தனிப்பட்ட விதத்தில் தனது நன்றியை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறது. 

ஜப்பானிய எழுத்தாளர் கென்சாபுரொ ஓயெவின் நேர்காணல் ஒன்றைத் தந்து உதவிய திசை எட்டும் சிற்றிதழ் ஆசிரியர் திரு.குறிஞ்சிவேலன் அவர்களுக்கும் நன்றி. 

எப்போதும் உடன் பயணிக்கும் கனலியின் நண்பர்கள் கீதா மதிவாணன், மகேஸ்வரன், சாருலதா சரவணன், அனிதா ராஜேந்திரன் மற்றும் இந்த முறை தட்டச்சு செய்வதில் உதவிய தேவராஜ் விட்டல் மற்றும் ரா. பாலசந்தர் அவர்களுக்கும் நன்றியும் அன்பும். 

அன்புடன், 

 என்றும் இலக்கியத்தில் உங்களுடன் இணைந்தே பயணிக்க விரும்பும்

 கனலி ஆசிரியர் குழு. 

தொடர்புக்கு:

அலைப்பேசி: +91 90800 43026

மின்னஞ்சல் : [email protected]

 

 

நன்றி : 

இப்பதிவில் இடம்பெற்ற கவிதை: 

ஜென் கவிதைகள்  (தமிழில்: யுவன் சந்திரசேகர்),

நூல்  : பெயரற்ற யாத்ரீகன்

பகிர்:
Latest comments
  • அன்புள்ள ஆசிரியருக்கு,

    வணக்கம்.
    ஆம். எத்தனையோ இதழ்கள் வந்தவண்ணம் போய்க்கொண்டியிருக்கும், ஆனால் இந்த ஜப்பான் சிறப்பதழை எல்லா வாசகர்களும் மறக்காமல் இருப்பார்கள். என் மனதிற்கு நெருக்கமான ஜப்பானின் இலக்கியப் பார்வைகளைப் புரிந்துக்கொள்ள அரிய வாய்ப்பு. வாசித்துவிட்டுத் தொடர்புக் கொள்கிறேன். நன்றி

  • amazing

  • இலக்கியத்திற்கு நல்ல பங்களிப்பு. நிச்சயம் வாசகர்களுக்கு ஜப்பான் பற்றி சரியான புரிதலை ஏற்படுத்தும். தங்கள் பங்களிப்பிற்கும் முயற்சிக்கும் நன்றிகள்

leave a comment

error: Content is protected !!