ஆஷஸ் அண்ட் டைமண்ட -எம்.கே.மணி

ன்று ஆஷஸ் அண்ட் டைமண்ட்ஸ் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்குப் பிடித்த இயக்குனர். புல்வெளியில் மல்லாந்து படுத்துக் கொண்டிருக்கிறான் ஹீரோ. தன்னுடைய கூட்டாளியுடன். அங்கே இருக்கிற இடிந்து போன சர்ச்சுக்கு பூங்கொத்துடன் வருகிற பெண் குழந்தை ஒன்று சர்ச்சின் கதவை திறக்க இவர்களிடம் உதவி கேட்கிறது. கதவைத் திறக்க முடியாமல் முகப்பில் இருந்த சிறிய சிற்பத்தின் அருகே அந்த பூங்கொத்தை வைக்க உதவி செய்து அவளை அனுப்பி வைக்கிற கணம் எதிரிகள் வர அங்கே சிட்டிகை போடுவதற்குள் ரத்தப் பெருக்கு. தொடர்ந்து படத்தைப் பார்ப்பதை நிறுத்தி நான் வாழ்க்கையை பற்றி சிந்திக்க முயன்றேன். இது எனக்கு ஒரு பழக்கம் தான், எனினும் இப்போது மறைவாகப் பதுங்கியிருந்த குடியின் ஆசை எழும்பி வருவதை உணர்ந்தேன். இதற்கு மேலே படம் பார்க்க மாட்டேன் என்றும் பட்டுவிட்டது. இரவல் வாங்கி வந்த பிளேயரை நாளை திருப்பிக் கொடுத்தாக வேண்டும். இரவு எட்டாகி விட்டது. இன்னும் அரை மணி நேரத்தில் பெருமாளு வருவான் என்றால், அவனிடம் பாட்டில் இருந்தது என்றால் ஒன்பது ஒன்பதே கால் வரையில் குடிக்கலாம். நானும் டேவிட்டும் சமைத்திருந்தோம். தக்காளிக் குழம்பு தான். முட்டை அவித்து, அப்பளம் பொரித்திருக்கிறோம். சாப்பிட்டு விட்டு எப்படியும் பதினொன்றுக்குள் அவர்கள் தூங்கி விட்டால் படத்தை பார்த்து முடித்து விட்டு தூங்கிக் கொள்ளலாம்.

கொஞ்சம் எரிச்சலுடன் காத்திருந்தேன்.

டேவிட் இல்லையென்றால் தனிமை தெரியும். எங்கேயோ கிளம்பிப் போனான். அவன் இல்லையெனில், குடிக்கிற ஆசை இன்னும் பலமாகி விடுவது சகஜம். காலையில் கிளம்பும்போது ஏற்கனவே பெருமாளிடம் இன்று இரவு நான் குடித்தே ஆக வேண்டும் என்பதை வற்புறுத்தி சொல்லித்தான் அனுப்பி வைத்திருந்தேன். அவன் அதை பொருட்படுத்தியே சென்ற மாதிரி தான் இருந்தது. என்னைக் காட்டிலும் பெருமாள் மிகவும் வயதில் குறைந்தவன். படிக்காதவன். பிளம்பர், எலக்ட்ரிஷியன், பெயிண்டர், கார்பெண்டர் என்று குழப்பலாக சொல்லலாம். அப்பா அம்மா யாருமில்லை. அப்படி இப்படி என்று இருந்த பழக்கத்தில் எப்படியோ எங்களிடம் கரையொதுங்கினான். சாப்பிட்டு விட்டு படுத்துக் கொள்ள அவன் இடம் தேடினால் அவனுக்கு பல இடங்கள் இருக்கின்றன. மழை வரும், போலீஸ் வரும் போன்ற சில்லறைக் காரியங்களுக்கு அவன் அஞ்சுவதில்லை. வேலையால் தாமதம் நேர்ந்தால் பஸ் கிடைக்காது, ஒருவேளை அவன் வராமலிருக்கவும் கூடும். நான் என்னை தேற்றிக் கொள்ள முயன்றேன். சாப்பிடலாம். படம் பார்க்கலாம். கொஞ்ச நேரம் அதை அசை போட்டுக் கொண்டிருந்தால் தூக்கம் வந்து விடப் போகிறது?

பெருமாளு எனக்கு நண்பனா என்றால், அதை விளக்க முடியாது.

ஆந்த்ரே வஜ்டா என்றால் யாரென்று அவனிடம் சொல்ல முடியாது. தமிழில் எழுதி இருந்தாலும் பெருமாளின் இடுக்கு சந்துக்கு எல்லாம் புதுமைப்பித்தன் கூட வந்திருக்க மாட்டார். ஆனால் நான் அசிஸ்டெண்டாக வேலை செய்யும் படத்தின் காமெடிகள் போல பல விஷயங்களை அவனிடம் பேச முடியும். அவனும் நிறைய பேசுவான். கொட்டாவி விட வேண்டிய அவசியம் இல்லாத பல அனுபவங்களை அவனிடம் இருந்து நான் கேட்டிருக்கிறேன். பெற்றவர்கள் போன பிறகு அண்ணன் வீட்டில் இருந்து சகிக்க முடியாமல் ஒருமுறை புகைவண்டி ஏறி விட்டான். வயது ஒரு பதினைந்து இருக்கலாமா அப்போது? தனியாக பசியுடன் நடந்து பலமுறை போகிறவன், வருகிறவன் எல்லோரிடமும் அடிபட்டு, மெல்ல மெல்ல தெருவிற்கு வந்து ஆளான பையன்களுடன் இணைந்து கொண்டு, காகிதம் பொறுக்கி ரயில்வே ஸ்டேஷன்களில், அதையொட்டிய தண்டவாளப் பகுதிகளில் ராஜா மாதிரி வாழ்ந்திருக்கிறான். அவ்வப்போது திருடுவதுமுண்டு. ஓய்வு நேரங்களில் எல்லாம் வித்அவுட்டில் நண்பர்களுடன் ரயிலில் சென்று கொண்டே இருப்பதுதான். விலை உயர்ந்த உணவுகளை எல்லாம் இலக்கு வைத்து சாப்பிட்டு பார்த்திருக்கிறார்கள். சிக்கன் தின்ன ஆசைப்பட்டு அன்றைக்கு அது நடக்காது என்று தெரிந்ததால் காக்கையை அடித்து பிரியாணி பண்ணி சாப்பிட்டு இருக்கிறார்கள். தெருவில் சண்டை போட வந்து மண்டை உடைந்து அரசு ஹாஸ்பிட்டலில் படுத்துக் கிடந்திருக்கிறான். கிட்னி ப்ரோக்கர்களுடன் இருந்து அப்புறம் மயிரிழையில் தப்பித்திருக்கிறான். தெலுங்கு, இந்தி, மராட்டி போன்ற மொழிகள் வசப்பட்டன. ஓரிரு பலவான்களால் பலமுறையும் குதம் கிழிபட்டிருக்கிறது. மூன்றாம் பாலின மக்களோடு இருந்து கொஞ்ச காலம் ஆண் என்பதையே மறந்து இருந்திருக்க முடிந்திருக்கிறது. அதில் ஸ்வீட்டி என்கிற திருநங்கைக்கு ஆள் பிடித்துக் கொடுத்திருக்கிறான். ஆண் உறுப்பை விலக்கி விட வேண்டும் என்கிற ஆசை கூட இருந்திருக்கிறது. இறுதியாக ஹைதராபாத்தில் காய்ச்சல் வந்து படுத்துக் கிடந்து தேறி எலும்பும் தோலுமாக வேறு ஒரு காயிதம் பொறுக்கி உதவியுடன் சென்னை வந்து சேர்ந்த பிறகு சொந்தக்காரர்களை அப்புறம் திரும்பிப் பார்க்கவில்லை. உழைப்பாளியாகி விட்டான். நான் அவனிடம் நாஞ்சில் நாடனின் எட்டுத் திக்கும் மதயானை பற்றி சொல்லியிருக்கிறேன். “ஆமா தாஸ் அண்ணா! அப்டியே போனீங்கன்னா ரோட்டு மேல எவ்ளோ பசங்க? நான் கூட்டினு போயி காட்டவா? நீங்களும் எழுதறீங்களா? சின்மா கூட எடுக்கலாம். உள்ளத்தை உருக்கும் கதை!“

அவன் பாட்டிலுடன் வரவில்லை.

தனியாக சாப்பிடும்போது ஆத்திரமாக இருந்தது. மனதில் வரிசையாக வந்த வசைகளை தொகுத்துக் கொண்டேன். படம் முடிந்ததும் இன்னதென்று பகுத்து விட முடியாத அதன் ஸ்டைலை பொறாமையுடன் வயிறெரிந்து கொண்டு தூங்கி விட்டேன். வழக்கம் போல எனக்குத் தெரிந்த மக்களின் நடமாட்டம் கனவு போல வந்தாலும் அதில் நான் செய்து கொண்டிருந்த திரைக்கதை என்னவோ இருந்தது. யாரோ கதவைத் தட்டுகிற சப்தம் கேட்டு விழித்துக் கொண்டேன். பெருமாளாக இருக்க முடியாது. டேவிட் இப்படித்தான் பல திசைகளிலும் இருந்து பல காரணங்களை சொல்லிக் கொண்டு திரும்பி வருவான். கதவைத் திறந்தேன். 

போலீஸ்.

என்னை ஸ்டேஷனுக்கு கொண்டு போனார்கள். அவர்கள் குடித்த லெமன் டீ, ஏலக்காய் டீ எல்லாம் நானும் குடித்து விடிந்த தருவாயில் பெருமாள் எங்கே என்று கேட்டார்கள்.

தெரியாது என்றேன்.

அவர்கள் கேட்க, கேட்க எனக்குத் தெரிந்ததை எல்லாம் சொன்னேன். அவர்களுக்கு தூக்கம் தூக்கமாக வந்தது. நான் சினிமாவில் இன்ன வேலை செய்கிறேன் என்பதை மிகவும் துச்சமாக எடுத்துக் கொண்டார்கள். என்னிடம் இருந்து பறித்துக் கொள்ள ஒன்றுமில்லை என்பதை அறிந்து நீ போகலாம் என்று விட்டார்கள். நான் சும்மா விடவில்லை. திரும்பிச் செல்ல பஸ்சிற்கு காசு கேட்டேன். பெருமாளு வந்தால் அவர்களிடம் செய்தி சொல்ல வேண்டும் என்று எச்சரிக்கை செய்தார்கள். அவன் குண்டு சுரேசை குத்திப் போட்டிருக்கிறான்! ஆளு காலி!

கொஞ்ச நாளாகவே ஒரு விவகாரம் சென்று கொண்டிருந்தது.

குடித்து டைட் ஆகி விட்டால் ஆரம்பித்து விடுவான்.

“தாஸ் அண்ணா!“

“ஒரு மயிரும் வேணா. ஆரம்பிக்காத!“

“இருங்களேன். இன்னைக்கு நான் பாட்டுக்கு ஸ்டெப்பு பக்கம் வைட்டு அடிச்சிகிட்டு அடிச்சிகிட்டு இருந்தேன்.“

“ஷோபி வந்து தல மேல இருந்த மல்லி சரத்த கழட்டி உன் மேல அடிச்சாளா?“

“அது அன்னைக்கு நடந்துச்சி. இன்னைக்கு டீ வேணுமான்னு கேட்டா! நான் தான் அந்தப் பழக்கத்தையே வுட்டுட்டேனே?“

“டேய், நீ உடறதா இருந்தா சரக்கு அடிக்கறத விடுறா. டீ குடிக்கறத எல்லாம் விட்டுட்டேன்னு வெளிய வேற சொல்லிகிட்டு இருக்க!“

“ப்ச். கேக்கறியா நீ? வேல செய்ற பசங்களுக்கு எல்லாம் டீ வந்துச்சி. நான் நோ தாங்க்ஸ்னு சொல்லிட்டேன்! தண்ணி மட்டும் குடும்மான்னு கேட்டுகிட்டேன்!“

பெருமையாக என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தான்.

“மோரு வந்துச்சு தாஸ்ண்ணா!“

“நேத்து மிச்சம் ஆயிட்ட தயிரா இருக்கும்டா. கீழ ஊத்தறதுக்கு உனக்கு குடுத்துட்ருப்பா. காஞ்ச பூவ குப்பைல போடாம உன் மூஞ்சி மேல போட்டாளே, அது மாதிரி?“

அவன் என்னை லட்சியம் செய்யவில்லை.

மனம் முழுக்கக் குவிந்த நினைப்புடன் கோணலாகிறது அவனுடைய முகம். ஓல்டு மாங்கை நக்கிக் கொண்டான்.  

“எனக்கு தெரியும் தாஸ்ண்ணா. அது என்னா பார்வ பாக்குதுன்னு எனக்கு மட்டும் தான் தெரியும். அங்க மட்டும் யாரும் இல்ல, மார்ல சாஞ்சு அழ்துரும்!“

அவன் நாங்கள் சொல்லுவதை எடுத்துக் கொள்ளவில்லை. அவளுக்கு இவனைக்காட்டிலும் ஏழெட்டு வயது அதிகம். புருஷன் தொல்லை இல்லை, இறந்து விட்டான். ஆனால் அவளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன. என்னதான் நடுத்தரக் குடும்பம் என்றாலும், இவனை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவன் ஒரு கூலியாள் என்கிற நினைப்பு மட்டுமல்ல, சாதி இளக்காரம் ஒன்று எழும்பும்போது நிறைய அவமானம் கொள்ள வேண்டியிருக்கும். இதை நானும் டேவிட்டும் சொல்லியவாறு இருந்த போது தான் ஒருநாள் தனது மார்பில் ஷோபி என்று பச்சை குத்திக் கொண்டு வந்தான்.

இன்னும் அதன் போக்குகள் வேறு மாதிரி வளர்ந்தன.

ஷோபியின் கணவன் கடன் வைத்து விட்டு செத்துப் போனான். அண்ணன் வீட்டில் ஒரு குடும்பத்துக்கு நடுவே இருக்கிற ஷோபிக்கு எவ்வளவோ தலைவலிகள். சிறிதாக சம்பாதிக்கிற பணத்தை பிச்சி பிச்சி கொடுத்து தன்னுடைய குழந்தைகளை கரையேற்றி விட அவள் அலை பாய்வதை யாரும் புரிந்து கொள்ள முடியும். அவளுடைய ரோதனைகள் கணக்கிலடங்காதவை. அப்படி இருக்க வீட்டில் ஆட்கள் இல்லாத போதெல்லாம் பழைய கடனை வசூலிக்கிற சாக்கில் குண்டு சுரேசு வந்து போவதாக அவள் பெருமாளிடம் குறை சொல்லி அழ ஆரம்பித்திருக்கிறாள். இவைகளை அறியும்போது அவளுக்கு பெருமாளு குறிப்பிடத்தக்கவனாக மாறிக் கொண்டு வருகிறான் என்கிற ஒரு அச்சம் எங்களுக்கு உருவாயிற்று.

ஒரு நாள் பெருமாளு பதட்டமாக இருந்தான்.

“விஷயத்த சொல்லுடா மயிரு!“

“குண்டு சுரேசு தப்பா நடந்துகிட்டிருக்கான்.“

“ஷோபி ஏதாவது கத குடுக்கறாளோ என்னமோ?“

“வீட்ல யாரும் இல்ல, அப்றமா வாங்கன்னு உள்ள போறதுக்கு திரும்பி இருக்கறா. எட்டிப் புடிச்சிருக்கான் அவன்!“

நாங்கள் மெளனமாக அதை கற்பனை செய்கிற முயற்சியில் இருந்திருப்போம் என்று நினைக்கிறேன்.

“தாஸ் அண்ணா. ஷோபி என் கைய புடிச்சி இழுத்துகிட்டு தரதரன்னு சமைய ரூமுக்கு இழுத்துகிட்டு போனா. முந்தானைய வீசிப் போட்டு ஜாக்கெட்ட ரெண்டு பக்கமும் புடிங்கி அப்டியே எனக்கு அவ மார காமிச்சாண்ணா. இந்த சைடில ரத்தம். அவன் அவள புடிச்சு இழுத்து நிக்க வெச்சான் இல்ல. அவன் நகம் கிழிச்சதால வந்த ரத்தம். ஓன்னு அழுதா தெரியுமா? நானும் அழுதேன்.“

டேவிட்டும் நானும் பார்த்துக் கொண்டோம். வேதனையாக இருந்ததை எப்படி மடை மாற்றுவது என்பதே புரியவில்லை.

ஆனால் அவன் எங்களிடம் அப்புறம் எதுவும் பேசவில்லை. படுத்துக் கொண்டான். தூங்கிப் போனான். இன்று வஞ்சம் வைத்துக் காத்திருந்து குண்டு ரமேசை முடித்தே விட்டானா? நம்ப முடியாமலே தான் இருந்தது அது. அதெல்லாம் இல்லை என்று அவன் வந்து விடுவான் என்று நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால் பெருமாளு வரவில்லை. எனக்கு அருளப்பட்ட வாழ்வில் நான் எந்தக் கருமத்தை மறந்தாலும் அது நல்லது தான் என்றிருப்பவன். அப்படி எவ்வளவோ விஷயங்கள் நடந்தன. சினிமாவில் எத்தனையோ முகங்கள் சாமி. அதற்கு ஒரு முடிவில்லை. அந்த திரில்லர் வாழ்வில் எதற்கு நான் பெருமாளை நினைத்துக் கொண்டிருக்கப் போகிறேன்? டால்ஸ்டாயின் போரும் வாழ்வும் படிக்கும்போது அதன் இறுதிப்பகுதியில் பியர் பிரான்சின் கைதியாக கொடுங்காவலில் இருக்கும்போது ஒரு கைதி செய்யாத குற்றத்துக்கு வருடங்களாக ஜெயிலில் கழித்த கதை ஒன்றை சொல்லுவான். அல்லது The shawshank redemption  படத்தை அவ்வப்போது பார்க்க வேண்டியிருந்தது அல்லவா? குண்டு ரமேசு கொலைக் கேசில் யாரோ ஒரு நிரபராதி தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பது பற்றின அவலம் ஒரு நிமிடம் நெஞ்சைப் போட்டு அமுக்கும். இதற்கெல்லாம் நாம் என்ன செய்ய முடியும் என்று நழுவுவதை தவிர வேறு என்ன செய்திருப்பேன்? சில சமயம் தோன்றுவதுண்டு, எல்லாம் மாயையோ? பெருமாளு இந்தக் கொலையை ஒருவேளை செய்யாமலே கூட இருந்திருக்கலாம்.

“ஆமாம், நான் அந்தக் கொலையை செய்யவில்லை“ என்றான் பெருமாளு.

அந்த நேரத்தில் தொடர் ஒன்றின் படபிடிப்பில் இருந்தேன். நாயகி தனது காரில் சென்று வேறு ஒரு காரை நிறுத்தி அந்தக் காரில் ஏறி அதில் மறைக்கப்பட்டிருந்த டைம் பாமை எடுத்து அதை செயலிழக்க செய்து அதைத் தனது கைப்பையில் வைத்துக் கொள்கிறாள். காரில் இருந்தவர்களுக்கு அவள் இப்போது என்ன சாகசம் செய்தாள் என்று தெரியாது. விழிக்கிறார்கள். அந்த ஆண் அவளுடைய பழைய காதலன். அவனது மனைவி நாயகி செய்த அத்துமீறலுக்கு வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகிறாள். நான் இருக்கும் போதே எனது கணவனை இப்படி முற்றுகை இடுகிறாயே, அந்த அளவிற்கு காதல் உன் கண்ணை மறைக்கிறதா என்பது ஐடியா. அவர்களுடைய கார் கிளம்பிப் போன பிறகு தனது தியாகம் தெரியாமல் பழிக்கிற உலகின் போக்குக்காக அவள் நின்று பீல் செய்ய வேண்டும். நான் அத்தொடருக்கு வசனம் எழுதுகிறவன் என்கிற வட்டத்துக்குள் இருந்து அவளது ஒரு கண்ணில் இருந்து ஓரமாக ஒரு கண்ணீர் துளி எட்டிப் பார்க்கிறது என்று எழுதியிருக்க, அசோசியேட் ஒரு கண்ணு, ஒரு துளிப்பா என்று மேக்கப் மேனிடம் ஜாலி பேசிக்கொண்டிருந்த எரிச்சலில் கொஞ்சம் தள்ளி வந்தேன். ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைக்க முனையும்போது ஒரு கார் வந்து நின்றது. டேவிட் இறங்கி வந்தான். மேலும் இருவரும் இறங்கி வந்தார்கள்.

அதில் ஒருவன் “போத்தாமா?“ என்று கேட்டான். 

டேவிட் “பெருமாளு வந்த்ருக்கான்! நம்மள பாக்கணுமாம்!“ என்றான். அவனது முகத்தில் இருந்த மலைப்பை வியந்தேன்.

தாஜ் ஹோட்டலில் ரூம் போட்டிருந்தார்கள். உள்ளே நுழைந்தபோது அங்கே இருந்த ஆட்கள் யாருமே எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பதையே யோசிக்க முடியவில்லை. கட்டை கட்டையாக இருந்து தங்களுடைய வேலையை அவர்கள் பார்த்திருக்க மையத்தில் நாற்காலி போட்டு அமர்ந்திருந்த பெருமாளிற்கு முன்னால் ரூபாய் நோட்டுக்கள் குவிந்து கிடந்தன. சுற்றி இருந்த அத்தனை பேரும் அதைதான் எண்ணிக் கொண்டிருந்தார்கள். ஒரு விதமான எண்ணை வாசனை அந்த நோட்டுக்களில் இருந்து வருவதாகப் பட்டது. என்னையும் டேவிட்டையும் பார்த்த பிறகு கூட பெருமாள் தன்னுடைய வேலையிலேயே கவனமாக இருந்தது ஒரு நல்ல தோரணை இல்லையா? தலை முடி எல்லாம் கொட்டிப் போயிருக்க வேண்டும். உலகிலேயே இருக்க முடியாத ஒரு கறுப்பில் விக் வைத்திருந்தான். வானவில் கலரில் ஒரு கூலிங்கிளாஸ் தொங்கியது. முகம் உப்பியிருந்தது. வயிறு வளர்த்திருக்கிறான். எப்படி அழைக்க வேண்டும் என்கிற சந்தேகம் வந்தாலும் அதைப் போட்டு அமுக்கிக் கொண்டு டேய் என்றேன்.

“தாஸ் அண்ணா!“

பணத்தை சூட்கேசில் கட்டி முடித்து அல்லக்கைகள் பக்கத்து அறைக்கு சென்ற பிறகு விஸ்கி வந்தது. நீங்கள் இன்னும் அந்த நாய் பிழைப்பை விடவில்லையா என்று கேட்டான். உங்களுக்கு ஒரு சினிமா படம் எடுக்க எவ்வளவு செலவாகும் என்று கேட்டான். நானே ஒரு தயாரிப்பாளராகி படத்தை எடுத்து விடுகிறேன் என்றான். நாம் எடுக்கக் கூடிய அந்தப் படத்திற்கு என்ன கதை என்று கேட்டான். நான் அதை சொல்லாமல் தட்டி விட்டதற்கு அவன் கவலைப்படவில்லை. படத்தின் ஹீரோயினாக ஒரு நடிகையை சொல்லி அவளைப் போடலாமா என்று கேட்டான். வழக்கம் போல நான் அவளைப் போட முடியுமா என்பதையும் கேட்டான். நீங்க தான் சொல்லி சிபாரிசு செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டான். 

“மயிராண்டி, நீ அவள போடறது இருக்கட்டும். குண்டு சுரேசை நீ போட்டியா, இல்லியா?“

“இல்ல!“

“அப்றம் என்ன எழவுக்கு ஊர விட்டு ஓடின?“

அவன் என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தான். உடனடியாக பேச முடியாததில் மௌனம் தொடர, அவனது சிரிப்பு ஒவ்வொரு துளியாக ஆவியாவதை நான் பார்த்தவாறு இருந்தேன். அது மிகவும் தர்மசங்கடமாக இருந்தது. பெருமாளு அன்று மிகுந்த அற உணர்வுடனும், பொங்கி வந்த காதலுடனும் அவள் வீட்டுப் பக்கம் போனபோது அவளையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ஓடுவதற்கு எவ்வளவு செலவாகும் என்கிற கணக்குக்குள் அமிழ்ந்திருந்தான். நிச்சயமாக, சோபியும் குண்டு சுரேசும் ஒரு கட்டிலில் படுத்துக் கொண்டிருப்பார்கள் என்பதை எதிர்பார்த்திருக்கவில்லை. மேலும் அந்த மறைவிடத்தில் இருந்து நகராமல் அவன் அங்கேயே உறைந்ததற்கு முக்கியமான காரணம் காணாத பொக்கிஷத்தை கண்டெடுத்த மாதிரி அவள் அவனை ஆசையாக கொஞ்சிக் கொண்டிருந்தது தான். பிறகு பெருமாளு அவனுக்குப் பழக்கமான கடைத்தெருவில் வலிக்கிற நெஞ்சைப் பிடித்து கொண்டு தூங்க முடியாமல் திருதிருவென விழித்துக் கிடந்தபோது குண்டு சுரேசு பைக்கில் வந்ததும், இப்போது ஜெயிலில் கிடக்கிறவன் அதை வழி மறித்து அவனைக் குத்திப் போட்டதும் நடந்ததை நேரில் பார்க்கிற பாக்கியம் கிடைத்தது. அவனுக்கு அப்போது எதுவும் சரிவர புரியவில்லை. அப்பா போனபிறகு அம்மா அப்படியே உள்ளுக்குள் இறங்கி ஓடாகி ஒருநாள் நோயில் படுத்தாள். கேன்சர். மருத்துவர்கள் எல்லாம் கைவிட்ட பின்னால் வீட்டில் வெகுநாள் கட்டையாகப் படுத்துக் கிடந்தாள். முதுகில் புண்கள் வந்து விட அதைக் கழுவித் துடைத்து பவுடர் போட்டு பீ மூத்திரம் அள்ளி கஞ்சி புகட்டி சாகிற வரை அத்தனை பராமரிப்பையும் பார்த்துக் கொண்டவன் அவன் தான். எப்படிடா இதெல்லாம் என்று நானே கூட திகைப்பாகக் கேட்டிருக்கிறேன். எனக்குதான் வேற யாரும் இல்லையே என்றிருக்கிறான்.  “தாஸ்ண்ணே, அது சாவத்தான் போவுது தெரியும். இது வரிக்கும் அது வாழ்ந்தது ஒரு வாழ்க்கையா? ஆனா போறப்ப ஏன் புள்ள என்னப் பாத்துகிச்சின்னு ஒரு சந்தோசம் இப்ப கெடைச்சிருக்கும் இல்ல? அப்டியே போவட்டும், என்ன சொல்றே?“ பெருமாளு தனது அம்மாவைப் பற்றி யோசித்துக் கொண்டுதான் டிரெயின் ஏறிவிட்டிருக்கிறான். பழைய ஸ்நேகிதக்காரங்களை அடைந்திருக்கிறான். அவனுக்கு இப்போ ஷோபி மீது எந்த நெருடலுமில்லை. பாவம், பொழைக்க வேணாமா என்று விட்டான். ஆனால் போதை உச்சிக்கு ஏறின பிறகு, படுத்துக் கொண்டு தூக்கத்திலோ, விழிப்பிலோ ஒன்றை சொன்னான்.

“இந்தத் தேவ்டியா பசங்களோட மொத்த ஊரையும் நான் வெலைக்கு வாங்கறனா இல்லையா பாருங்க தாஸ்ண்ணா!“

அதெல்லாம் நடக்கவில்லை. அடுத்த வருடத்திலேயே அவன் கத்தியால் குத்தப்பட்டு ஒரு சாக்கடைக்குள் விழுந்து செத்திருக்கிறான். பிணம் கண்டுபிடிக்கப்பட்டு அடையாளம் தெரிந்ததால் இங்கிருந்த அண்ணன் உள்ளிட்ட சில ஆட்களுக்கு அங்கிருந்த சிலர் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். யாரும் அதற்கு பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. அது என்னவாக முடிந்தது தெரியவில்லை. நான் அவன் இறந்து விட்டான் என்பதை நாலு மாதத்துக்கு அப்புறம் தான் தெரிந்து கொண்டேன். ஒரு கணம் அதிர்ந்து உட்கார்ந்து, ஒரு டீ சாப்பிட்டு, சிகரெட் பிடித்து டேவிட்டுக்கு போன் பண்ணி சொல்லி நான் எனது வேலையைப் பார்த்தேன் என்பது தான் சரி. இன்று அவனைப் பற்றி இவ்வளவு நினைத்துக் கொள்ள ஒரு காரணம் இருக்க வேண்டுமில்லையா? 

அதைச் சொல்லியாக வேண்டும்.

ஷைன் குமார் என்னுடைய இயக்குனர். அவர் ஒரு கதையை படமாக செய்ய பெயர் கேட்ட ஒரு கம்பனியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறார். பெரிய பட்ஜெட். படம் ஜேம்ஸ்பாண்ட் தினுசு. அது கிளிஷே எதுவும் இல்லாமல் நீட்டாக இருக்க வேண்டும் என்பது அவருடைய நோக்கம். “  சிவதாசன் சார், கத நடக்கறது இந்தியா தானான்னு ஒவ்வொருத்தரும் மண்டைய பிச்சிக்கணும், யூ நோ?“ அதான், அதான் என்று நானும் என் பங்குக்கு ஆமாம் சாமி வாசித்து வைத்திருந்தேன். ஆனால் இன்று ஒரு ஹோட்டலில் விவாதம் நடந்து கொண்டிருந்த போது ஒரு காயிதம் பொறுக்கி கேரக்டரை தெரியாமல் கொண்டு வந்து பேசி விட்டேன். ஷைன் மிகவும் சிணுங்கி விட்டான். சார் என்று எனது மார்பில் செல்லமாக அடித்தான். “ என்ன சார், சொல்லிட்டே இருக்கேன், நம்ம படத்துல அழுக்கு சட்ட வரக்கூடாது சார்!“ அவன் சொன்னதில் இருக்கிற உண்மை சுட்டதில் தொடர்ந்து வந்த விழிப்புணர்ச்சியுடன் இம்மீடியட்டாக மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்.

முன்பு ஒரு நாள் இரவுபகலாக ஒரு வீட்டுக்கு மராமத்து பணி செய்ய வேண்டி வந்து பெருமாளு ஒரு வாரமாக அல்லாடிக் கொண்டிருந்தான். வேலையாட்களை வைத்து செய்யும் வேலை என்றாலும், அவன் உடலுழைப்பு செய்ய அலுப்பதில்லை. மற்றவர்களைக் காட்டிலும் அதில் அவன் அலட்டிக் கொண்டிருப்பான். எல்லாம் முடிந்த பிறகு அறையில் வந்து விழுந்தே விட்டான். உடல்வலி தாங்காமல் ஐயோ அம்மா என்று கத்திக்கொண்டு கிடந்தான். நானும் டேவிட்டும் சாவுடா என்று வெறுப்பேற்றிக் கொண்டிருந்தோம். வலி நிவாரணிகள் எல்லாம் நமக்குக் கேட்குமா? ஆசுவாசமாக எழுப்பி உட்கார வைத்து அவனுக்கு ஒரு தொண்ணூறு மில்லி பிராந்தியை, அதே தொண்ணூறு மில்லி தண்ணீருடன் கலந்து குடிக்க வைத்து விட்டு, கொஞ்சம் பூண்டு ஊறுகாயை நக்கக் கொடுத்து விட்டு கேட்டேன். “உங்கப்பா செத்த ஒடனே உங்கண்ணன் திருத்தணி ஆஸ்டல்ல சேத்து விட்டான் இல்ல. ஒழுங்கா படிச்சு பாஸ் பண்ணி அங்கேயே இருந்துருக்கணும். நல்லபடி படிச்சு மேல மேல போயிருந்தா இன்னைக்கு இப்டி சூத்து கிழிஞ்சு படுக்க வேண்டி வந்துருக்குமா? எதுக்கு ஓடிப் போன? ஜாலியா இருக்கத்தானே? இப்ப நல்லா அனுபவிடா!”

“தாஸ்ண்ணே“

“என்ன லவடா?“

“சோறு போட மாட்டாங்கண்ணே, பசி தாங்காம ஒடனேன்!“


      – மணி எம் கே மணி 

        

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.