“ஓரிகாமி என்பது மக்களிடமிருந்து வந்த ஒரு மரபுக்கலை” – ‘ஓரிகாமி’ கலைஞர் தியாகசேகர்


  “என்னைப் பொறுத்தவரையில், நான் நம்பும் புரட்சி என்பது ஆயுதங்களால் வருவது அல்ல. காகிதங்களால் உருவாவது! அன்பையும் அமைதியையும் தன்னுள் ஏந்தியிருக்கும் இந்த வெற்றுக் காகிதம் தான் எனது ஒரே பற்றுக்கோல்.”  என்று எப்போதும் சொல்லும் தமிழகத்தின் ஒரே ஒரு  ஓரிகாமி  (ஜப்பானியக் காகிதம் மடிப்பு கலை) கலைஞரான தியாக சேகர் அவர்களிடம்  கனலியின் ஜப்பானியக் கலை இலக்கியச் சூழலியல் சிறப்பிதழிற்காக ஒரு நேர்காணல் கேட்டிருந்தோம்.

 “சரிங்க தோழர் .   நிச்சயம் பேசலாம்” என்று இயல்பாகப் பேச ஆரம்பித்தார்.
இனி நேர்காணல்…


வணக்கம். ஓரிகாமி கலையில் உங்களுக்கு ஆர்வம் எப்படி, எப்போது ஏற்பட்டது?

கிண்டர்கார்டன் படிக்கும்போதிலிருந்தே இதன் மேல் எனக்கு ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. இதுதான் ஓரிகாமி என்று அப்போது தெரியாது. பேப்பரில் கப்பல், pop up card போன்ற paper crafts செய்துகொண்டிருந்தேன். பள்ளி வாழ்க்கையிலும் அது தொடர்ந்தது. பள்ளியில் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற கொண்டாட்டங்களின்போது தாள்களில் அலங்கார வேலைப்பாடுகள் செய்வேன். ஊரில் ஏதேனும் விழா, பிறந்தநாள் கொண்டாட்டம் என்றால் அலங்காரம் செய்ய என்னை அழைப்பார்கள். கல்லூரியில் science group எடுத்துப் படித்து வேறு வேலையில் இருந்தேன். ஓரிகாமியில் பயிற்சியாளராக ஆனது 26 வயதில்தான்.

 

இது ஓரிகாமி, ஜப்பானின் கலை என்பதை எப்போது தெரிந்துகொண்டீர்கள்?

இயல்பாகவே பயணத்தில் எனக்கு ஆர்வம் அதிகம். கல்லூரிக் காலத்திலிருந்தே விடுமுறை கிடைக்கும்போதெல்லாம் மலைக்கிராமங்கள், அங்கே இங்கே என்று தமிழகம் முழுவதும் நண்பர்களுடன் சுற்றுவேன். ஒரு முறை திருவண்ணாமலையில் ஒரு NSS camp நடந்துகொண்டிருந்தது. அறிவியல் இயக்கம் சார்பாக ஒரு பள்ளி ஆசிரியர் இந்த காகித மடிப்புக்கலை பற்றி சொல்லிக்கொடுத்தார். அவர் பெயர் காத்தவராயன். இயற்பியல் ஆசிரியர். என் நண்பரும் கூட. பேப்பரை மடித்துச் செய்யும் இந்தக் கலைக்குப் பெயர் ஓரிகாமி என்ற அறிமுகம் எனக்கு அங்கே அவரால்தான் கிடைத்தது.

 

அதற்குப் பிறகு இந்த ஓரிகாமி பற்றிய மேலதிகத் தகவல்களை எப்படித் தெரிந்துகொண்டீர்கள்? அது குறித்து ஏதாவது புத்தகங்கள் வாசித்தீர்களா? யாரிடமாவது முறையாக கற்றுக்கொண்டீர்களா?

வாழ்க்கைப் போராட்டத்தில் பல தொழில்களில் ஈடுபட்டாலும் குழந்தைகள் தளத்தில் இயங்கவேண்டும் என்ற உந்துதல் உள்ளுக்குள் இருந்தது. அதனால் சென்னைக்குச் சென்று குழந்தைகள் சார்ந்து இயங்கும் சிறப்புக் கலைஞர்களுடன் இணைந்தேன். அப்போது ஓரிகாமி தொடர்பான பல புத்தகங்களை வெளிநாடுகளிலிருந்து வரவழைத்து வாசித்தேன். தமிழ்நாட்டில் இந்தக்கலை எந்த அளவுக்கு இருக்கிறது என்று தேடியபோது, இதை முழுநேரக் கலையாகக் கொண்டுசெல்லக்கூடியவர்கள் யாருமில்லை என்று தெரியவந்தது. ஓரிகாமி என்பது just a fun craft, பேப்பரில் பொம்மை செய்வது என்ற அளவில்தான் பொதுவான புரிதல் இருந்தது. ஆனால் புத்தகங்களில் வாசிக்கும்போதுதான் அது அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த ஒரு கலை என்பது போன்ற புதிய தகவல்கள் கிடைத்தன. குழந்தைகளுக்கான தளத்தில் இயங்கவேண்டும் என்றால், அவர்களுக்குப் பிடித்தமான activity ஏதாவது  செய்தால் அவர்களோடு எளிதில் கலந்து பழகமுடியும் என்றும் அவர்களுடைய உளவியல், கல்வி சார்ந்து செயல்பட முடியும் என்றும் மூத்தக் கலைஞர்கள் மூலம் அறிந்துகொண்டேன். ஆகவே நான் ஓரிகாமியைத் தேர்ந்தெடுத்தேன்.

சிறார் புத்தகங்கள் எழுதுவது, சிறார் கதை சொல்வது என சிறார் சார்ந்த பல விஷயங்கள் உள்ளன. நீங்கள் ஓரிகாமியைத் தேர்ந்தெடுத்ததற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா?

சிறுவயதிலிருந்தே எனக்கு மிகவும் பிடித்த கலை இது. கல்லூரிக் காலத்திலிருந்தே குழந்தைகள் தளத்தில் இயங்கவேண்டும் என்ற உந்துதல் இருந்ததாகச் சொன்னேன் அல்லவா? அதனால்தான் நான் சோஷியாலஜி எடுத்துப் படித்தேன். குழந்தைகளிடம் மிகவும் அறிவாகவோ ஞானமாகவோ பேசிக்கொண்டிருந்தால் அவர்கள் நம்மோடு எளிதில் கலந்து பழகமாட்டார்கள் என்பது அவர்களுடனான பயணத்தில் தெரிந்துகொண்ட விஷயம். ஓரிகாமி எனக்குப் பிடித்த விஷயம் என்றாலும் அதற்கு தமிழ்நாட்டில் போதிய அறிமுகம் இல்லாமல் இருந்தது. அதைக் குழந்தைகளுக்கு கொண்டு செல்வதன் மூலம் ஓரிகாமியை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டுபோகலாம், குழந்தைகளிடமும் ஆசிரியர்களிடமும் ஓரிகாமி குறித்தப் புரிதலை உண்டாக்கலாம் என்பதால் இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டேன்.

 

ஓரிகாமி என்ற இந்த காகித மடிப்புக் கலை குழந்தைகளுக்கு எந்த அளவுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது? ஜப்பானின் கலையான இதை, இங்கே நம் குழந்தைகளிடம் செய்து காட்டும்போது உண்மையிலேயே அந்த ஓரிகாமி வடிவம் அவர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறதா? அப்படி அவர்கள் மிகவும் சந்தோஷப்பட்ட ஏதாவது ஒரு நிகழ்ச்சியைப் பற்றி சொல்லமுடியுமா?

கண்டிப்பாக. நிறைய இருக்கின்றன. இந்தப் பதிமூன்று வருடங்களில் நிறைய பார்த்திருக்கிறேன். நான் இந்த மீடியத்தை அவர்களுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணுவதை விடவும் வேறு எதுவும் பெரிதாகச் செய்துவிடவில்லை. சில ஆரம்பப்பள்ளிகளுக்குச் சென்றால் ஓரிகாமி சார் வந்துவிட்டார் என்று பத்துப் பையன்கள் ஓடிவந்து மேலே தொத்திக்கொள்வார்கள். அவர்களுடைய அம்மா அப்பாவை விடவும் நான் எதுவும் பெரிதாக செய்திருக்கமாட்டேன். இந்த கைவினைக் கலையை ஒரு மணிநேரமோ இரண்டு மணிநேரமோ அவர்களுக்கு கற்றுத்தருவது ஒன்றுதான் நான் செய்வது. அப்படி இந்த ஓரிகாமி வகுப்புகளால் குழந்தைகள் மகிழ்ச்சியடைந்த அனுபவங்கள் ஆயிரக்கணக்கானவை உண்டு, எனக்குள்ளும் வெறுமை வரும். நம்மைச் சுற்றியிருக்கிற எல்லாரும் materialistic-ஆக வெற்றிகரமாக இருக்கிறார்கள். நான் materialistic-ஆகவும் பெரிதாக success ஆகவில்லை. என்னதான் செய்துகொண்டிருக்கிறேன் என்ற கேள்வி எழும்போது குழந்தைகளுக்கு இது உண்மையிலேயே சந்தோஷத்தைக் கொடுக்கிறது என்ற விஷயம்தான் என்னைத் தொடர்ச்சியாக இதில் பயணிக்கச் செய்கிறது.

பன்னிரண்டு பதிமூன்று வருடங்களாக இதைச் செய்வதாக சொன்னீர்கள். இதுவரை எத்தனைப் பள்ளிகளுக்குப் போயிருப்பீர்கள்? எத்தனைக் குழந்தைகளுக்குக் கற்றுத்தந்திருப்பீர்கள்? தோராயமாக சொல்லமுடியுமா?

அந்த எண்ணிக்கையெல்லாம் கணக்கில் இல்லை. ஆரம்பத்தில் எண்ணிக் கொண்டிருந்தேன். பிறகு விட்டுவிட்டேன். ஒரு மாதத்தில் முப்பது நாட்களுமே பயணித்த காலமும் இருக்கிறது. எல்லைகளற்ற பயணம் இது.

 

இந்தக் கலை உங்களுக்குள் ஏற்படுத்திய மாற்றங்கள் பற்றி சொல்லமுடியுமா? ஒரு எழுத்தாளரோ இயக்குநரோ ஒரு படைப்பைப் படைக்கும் தருணம் அப்படைப்பாகவே மாறுகிறார் என்பார்கள். ஒரு கலைவடிவத்துக்குள் நீங்கள் போகும்போது அதுவும் குழந்தைகளுக்கான கலைவடிவம் என்னும்போது எப்படி உணர்கிறீர்கள்? நிச்சயம் ஆத்மார்த்தமாக உணர்ந்திருப்பீர்கள். அதைத் தாண்டி இந்தக் கலைவடிவத்தை உங்கள் வாழ்க்கையோடு இணைத்து எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்தக் கலைவடிவத்தைக் குழந்தைகளிடம் நிறைய கொண்டுபோகிறேன் என்றாலும் இது குழந்தைகளுக்கானது மட்டும் என்று சொல்லிவிட முடியாது. இதில் விருப்பமுள்ள யார் வேண்டுமானாலும் இதைக் கையாளலாம். IT professionals கூட ventilation-க்காக இரண்டு மணி நேர வகுப்புகளுக்கு வருவார்கள். பெரியவர்களும் வருவார்கள். அறுபது வயது கல்லூரிப் பேராசிரியருக்கும் கூட சொல்லிக்கொடுத்திருக்கிறேன். குழந்தைகளுக்கு focussed ஆக கொண்டுபோகிறேன். ஆனால் விருப்பமுள்ள யாருக்கு வேண்டுமானாலும் கற்றுத்தரலாம் என்றுதான் கொண்டுபோகிறேன். நான் ஒரு ஆர்டிஸ்ட், நான் ஒரு ஆக்டிவிடி செய்கிறேன் என்ற புளகாங்கிதத்தைத் தாண்டி இந்தக் கலையை ப்ராக்டிகலாக செய்யச்செய்ய அது கொடுத்த அனுபவங்கள் எல்லாமே வேறுமாதிரி இருந்தன. கடமைக்காக ஒரு ஆக்டிவிடி செய்கிறோம் என்பதைத் தாண்டி குழந்தைகள் இதனால் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்ற விஷயம்தான் தொடர்ச்சியாக இன்னும் இயங்கவேண்டும் என்ற தீவிரத்தைத் தந்துகொண்டிருக்கிறது.

 

குழந்தைகளுக்கு இது ஒருவிதமான மன அமைதியைத் தருகிறது, பெரிய அளவில் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்று ஒரு இடத்தில் படித்தேன். இந்தக் கலையை குழந்தைகள் தொடர்ந்து செய்யும்போது மருத்துவரீதியாக ஏதாவது பயன்கள் இருக்கிறதா? அதற்கான தரவுகள் ஏதேனும் இருக்கின்றனவா?

நிறைய பயன்கள் இருக்கின்றன. சிறப்புக்குழந்தைகளுடன் உளவியல்ரீதியாக நிறைய பணியாற்றியிருக்கிறேன். குழந்தைகளுக்கு இது ஒரு நல்ல companionship ஆக இருக்கும். தனியாக இருப்பவர்களுக்கு மிகவும் துணையாக இருக்கும். கோயம்புத்தூரில் ஒரு பள்ளிச்சிறுவன் சொன்னான், ஓரிகாமியை நீங்கள் கற்றுக்கொடுத்த பிறகு வீட்டில் என்னுடைய பெஸ்ட் ஃப்ரெண்ட் ஆக என்னுடைய ஓரிகாமி பொம்மைகள் எல்லாம் மாறிவிட்டன என்றான். புத்தகம் வாசிப்பது போலத்தான் இதுவும். இந்தக் கலையில் பத்திருபது மாடல் கற்றுக்கொண்டுவிட்டால் போதும், சும்மா இருக்கும்போது, ஏதாவது பேப்பரைப் பார்த்தாலே நாமும் ஏதாவது செய்யவேண்டும் என்ற ஆர்வம் வந்துவிடும். குழந்தைகளுடைய உளவியல்ரீதியாக பார்த்தீர்கள் என்றால், இது ஒரு தட்டையான சதுரமான பேப்பர். இந்த பேப்பரை குறைந்தபட்சம் 3,4,5 ஸ்டெப்பிலிருந்து பல்லாயிரக்கணக்கான ஸ்டெப் வரை நாம் மடிக்கலாம். மடித்துதான் உருவங்களை உருவாக்குவோம். அது அவர்களுக்கு மன ஒருங்கமைப்பைக் கொடுக்கும். கல்வித்துறையில் அதை Mind coordination என்று சொல்வார்கள். மனிதனின் இயல்பு அடிப்படையில் காட்டுத்தனமாக இருக்கும். Coordinate பண்ணிதான் சமூகக் கட்டமைப்புகளை உருவாக்கி வைத்திருக்கிறோம், இல்லையா? மனத்தை ஒருமுகப்படுத்தி ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்னும்போது ஓரிகாமி அதற்கு மிகவும் உதவும்.

இந்தக் கலையின் வளர்ச்சிக்காக நம் அரசாங்கத்திடமிருந்தோ, பிற தன்னார்வல அமைப்புகளிடமிருந்தோ ஏதாவது ஆதரவு கிடைக்கிறதா?

அரசு தரப்பிலிருந்து பெரிதாக எதுவும் ஆதரவு இல்லை. பாடத்திட்டத்தில் அறிவியல், கணிதம், மொழி போன்ற பாடங்கள் தவிர பிற கைவினைப் பயிற்சிகளுக்கு எந்த அளவுக்கு ஆதரவு கிடைக்கும் என்று எனக்குப் புரியவில்லை. மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. அதிலும் ஓரிகாமி இன்னும் பெரிய அளவில் பேசப்படாத ஒன்றாகத்தான் இருக்கிறது. குழந்தைகளுடைய உளவியல், மன ஒருங்கமைப்பு, அறிவியல், கணிதம் எல்லாமே அடங்கியிருக்கும் கைவினைத் திறன் இது. ஆசிரியர்கள் மட்டத்திலேயே இன்னும் பலரைச் சென்றடையவில்லை.

 

ஓரிகாமி என்ற கலைவடிவத்தைப் பயன்படுத்தி எவ்வளவு பொம்மைகள் செய்யமுடியும்? தோராயமாக இவ்வளவு பண்ணலாம் என்ற வரையறை இருக்கிறதா?

இது ஒரு வரையறைகளற்ற கலைவடிவம். எத்தனை என்பது நம் கற்பனையைச் சார்ந்தது. ஒரு ஓவியன் இவ்வளவு ஓவியங்களைத்தான் வரைவான் என்று சொல்லமுடியாது. அவன் தன் கண்முன்னால் பார்க்கும் உயிருள்ள, உயிரற்ற பொருட்களை ஏராளமாய் வரையமுடியும். அதைப் போலத்தான் இதுவும். மடிக்கிற டெக்னிக்கை மட்டும் கற்றுக்கொண்டோம் என்றால், நம் கற்பனையை வைத்துக்கொண்டு நம்மைச் சுற்றியிருக்கிற எந்தப் பொருளை வேண்டுமானாலும் மடிப்புகள் மூலம் கொண்டுவரமுடியும். கற்பனையும் ஆர்வமும்தான் முக்கியம்.

ஓரிகாமி ஜப்பானில் எப்போது, எப்படி உருவானது? யார் இதை முதலில் உருவாக்கினார்கள் என்பது பற்றி சொல்லுங்களேன்?

ஓரிகாமி என்பது மக்களிடமிருந்து வந்த ஒரு மரபுக்கலைதான். இது தனிமனிதனின் கண்டுபிடிப்பு கிடையாது. இது மக்களிடம் இயல்பாகத் தோன்றிய கலை. நம்மூரில் பாய் முடைவது, பனையோலை பின்னுவது என்று கைவினைக்கலைகள் இருக்கின்றன அல்லவா? அதைப் போலதான் இதுவும். ஓரிகாமி கலையில் எனக்குத் தூண்டுதலாக இருந்தவர் Akira Yoshizawa. அவரை நவீன ஓரிகாமி கலையின் தந்தை என்கிறார்கள். காரணம், அவர்தான் ஓரிகாமி கலைக்கு ஒரு முறையான வடிவம் கொடுத்தார். அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்து உலக நாடுகளுக்கு இந்தக் கலை பரவுவதற்கும் அவர்தான் காரணம். ஓரிகாமியை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் செய்யவேண்டும் என்ற ஆசை வரும். ஆனால் எப்படி செய்வது என்று தெரியாது. அதற்கு Diagram language என்ற கோட்டு வரைபடம் ஒன்றை அவர்தான் முதன்முதலில் உருவாக்கினார். ஓரிகாமிக்கான வரைபட மொழியை அவர் உருவாக்கினார். இந்த வரைபட மொழி உருவானதற்குப் பிறகு ஓரிகாமி உலகம் முழுவதும் வெகு விரைவாகவே பரவ ஆரம்பித்துவிட்டது. அதனால்தான் அவர் ஓரிகாமியின் தந்தை எனப்படுகிறார். நாம் அப்துல்கலாமைப் பார்ப்பது போல அந்நாட்டில் அவரைப் பார்க்கிறார்கள். பாரத ரத்னா போன்று ஜப்பானின் மிக உயரிய விருதை அந்நாட்டு அரசு அவருக்கு அளித்துப் பெருமைப்படுத்தியுள்ளது. அவர் தனது 13 வயதில் காகிதங்களை மடிக்கத் தொடங்கி 90 வயதைக் கடந்தும் கிட்டத்தட்ட 70, 80 வருடங்கள் ஓரிகாமி கலைக்காகவே வாழ்ந்திருக்கிறார். Living legend என்று பார்த்தால், அவருக்கு அடுத்தபடியாக இன்று உலகம் முழுவதும் பார்ப்பது ஒரு அமெரிக்கரை. அவர் இயற்பியல் மற்றும் கணித ஆய்வுமேதை. அவர்தான் application science-ஆக ஓரிகாமியை ஆய்வுக்கூடங்களில் பயன்படுத்தி நிறைய ஆய்வுகள் செய்திருக்கிறார்.

 

ஓரிகாமியைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு எந்தெந்த புத்தகங்களைப் பரிந்துரைப்பீர்கள்

ஓரிகாமி குறித்த அடிப்படையான இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். கொக்குகளுக்காகவே வானம் என்ற புத்தகம் 2017-ல் தமிழில் வெளியானது. ஓரிகாமி பயிற்சி குறித்த புத்தகம் அது. ஓரிகாமிக்கான அடிப்படையான அறிமுகம், அதன் வரலாறு தொடர்பான செய்திகள் போன்றவற்றோடு ஒரு பயிற்சிப்புத்தகம் போல 20 மாடல்கள் கொடுத்திருக்கிறோம். மற்றொன்று காகிதக் கொக்குகள். இரண்டும் திருவண்ணாமலையில் உள்ள தன்னறம் பதிப்பகம் மூலம் வெளியாகியுள்ளன.

இதைத் தவிரவும் ஓரிகாமி கலை குறித்து கற்றுக்கொள்ள வேறு புத்தகங்கள் இருக்கின்றனவா? உங்களைப் போலவே செயல்படுகின்ற வேறு நபர்கள், அமைப்புகள் இருக்கின்றனவா?

நானும் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். எனக்குத் தெரிந்து அப்படி யாரும் இல்லை. முழுநேர ஓரிகாமிக் கலைஞர்கள் தமிழகத்தில் யாருமே இல்லை. எங்காவது ஏதாவது ஒரு பள்ளி ஆசிரியர் பகுதிநேரமாக கைவினை வகுப்பில் சொல்லிக்கொடுப்பார் அல்லது வேறு அலுவல் மூலமாக வருமானம் பெறக்கூடியவர்கள் பகுதிநேரமாக பயிற்சி அளிப்பார்கள். நுண்கலை (Fine art) படித்த இரண்டொருவர் பகுதிநேரமாக கற்றுத்தருவதாக அறிகிறேன். மற்றபடி முழுநேரப் பணியாக நான்தான் எடுத்துப் போய்க்கொண்டிருக்கிறேன்.

 

ஜப்பானில் ஹிரோஷிமா, நாகசாகியில் குண்டு போடப்பட்ட பிறகு குழந்தைகள் எல்லாரும் ஓரிகாமி கொக்குகள் செய்து சமர்ப்பணம் செய்ததாக இணையத்தில் வாசித்தேன். அதைப் பற்றி சொல்லுங்களேன்.

ஹிரோஷிமா துயர சம்பவம் உங்களுக்கு நினைவிருக்கிறது அல்லவா? அந்தக் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு புற்றுநோய்க்கு ஆளாகி இறந்துபோன சிறுமி சடாகோ சசாகியின் நினைவுதினம் அக்டோபர் 25. உலகம் முழுவதும் அமைதிக்கும் அன்புக்குமான நாளாக அதைக் கொண்டாடுகிறார்கள். கடந்த நான்கு வருடங்களாக பள்ளிக்குழந்தைகளை வைத்து நாங்கள் அதைக் கொண்டாடி வருகிறோம். உண்மையில் நடந்த அந்நிகழ்வை ஒரு கதை போல சொல்லி ஆவணப்படுத்துகிறோம்.

 

அந்தக் கதையை சுருக்கமாக எங்களுக்கு சொல்ல முடியுமா?

இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்கா ஹிரோஷிமாவின் மீது அணுகுண்டுத் தாக்குதல் நடத்தியது. அப்போது சடாகோ சசாஷி இரண்டுவயதுக் குழந்தை. அணுகுண்டின் கதிர்வீச்சுத் தாக்குதலுக்கு உட்பட்ட எல்லையில்தான் அவளும் வசித்துவந்தாள். அவளுடைய உடலிலும் அக்கதிர்வீச்சு பாய்ந்தது. பாதிக்கப்பட்ட அவள் பல போராட்டங்களைக் கடந்துவருகிறாள். அச்சிறுமிக்கு பன்னிரண்டு வயதாகும்போது பள்ளியில் சிறந்த விளையாட்டு வீராங்கனையாகத் திகழ்கிறாள். ஏராளமான பரிசுகளை வெல்கிறாள். ஒருநாள் ஒரு போட்டியில் கலந்துகொண்டு ஓடும்போது அந்தத் தடகளத்திலேயே அவள் மயங்கி விழுந்துவிடுகிறாள். அவள் மயக்கத்துக்கு காரணம் கண்டறியும்போதுதான் அவள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. புகைபிடித்தல் போன்ற எந்தப் பழக்கமும் இல்லாத ஒரு சிறுமிக்கு புற்றுநோய் எப்படி வந்திருக்கும் என்று ஆராய்ச்சி நடைபெறுகிறது. ஏற்கனவே அணுகுண்டு வெடித்ததால் ஏற்பட்ட கதிர்வீச்சின் பாதிப்பு குறித்து பெரிய ஆய்வு ஜப்பானில் நடந்துகொண்டிருந்தது. இப்பெண்ணுக்கும் புற்றுநோய் தாக்கியதற்கான காரணம் அக்கதிர்வீச்சுதான் என்ற உண்மை தெரியவருகிறது. அதற்கான சிகிச்சையை மேற்கொள்கின்றனர். மேற்கொண்டு ஆய்வு செய்கையில் இவளைப் போல லட்சக்கணக்கானவர்கள் அப்பகுதியில் கதிர்வீச்சின் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. இச்சிறுமியின் உடல் நோயால் பெரிமளவு பாதிக்கப்படுகிறது. அவளுடைய பெற்றோர் பெரும் மனவேதனைக்கு ஆளாகின்றனர். அந்த மருத்துவமனையில் அவள் கண் முன்னாலேயே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உயிர் பிரிகிறது. ஒரு நாள் சடாகோவின் பள்ளித்தோழி அவளைப் பார்க்க வருகிறாள், அவள் சடாகோவிடம் ஆயிரம் பேப்பர் கொக்குகள் செய்யச் சொல்கிறாள், ஜப்பானில் ஆயிரம் கொக்குகள் செய்வது என்பது பழக்கத்திலிருக்கும் ஒன்று. பாசிடிவான myth அது. நம் ஊரில் தொட்டில் கட்டுவது, கல் அடுக்குவது போல ஜப்பானில் வெகு காலமாகவே கொக்கு செய்வது என்பது பாசிடிவான விஷயம். நமக்குப் பிடித்த நண்பர்களுக்கு கொடுக்கும் பாசிடிவான பரிசாக அதைப் பார்க்கிறார்கள். ஆயிரம் கொக்குகள் செய்தால் நீண்டநாள் வாழலாம் என்ற நம்பிக்கை அங்கு இருக்கிறது. சடாகோவின் தோழியும் அதைத்தான் சொல்கிறாள். சடாகோவும் தான் நீண்ட நாள் வாழவேண்டும் என்ற ஆசையில் தினமும் கையில் கிடைக்கிற பேப்பர்களைக் கொண்டு கொக்குகள் செய்ய ஆரம்பிக்கிறாள். கொக்கு செய்யும்போது அவளுக்கு நம்பிக்கை வருகிறது. ஆனால் ஐநூறு கொக்குகள் செய்திருக்கும் நிலையில் உடல்நிலை மறுபடியும் மோசமாகிறது. மறுபடியும் சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறாள். மீண்டுவந்து மறுபடியும் கொக்குகள் செய்கிறாள். ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு இருபது முப்பது என்ற கணக்கில் கொக்குகள் செய்கிறாள். நாட்கள் செல்லச்செல்ல ஒரு நாளைக்கு இரண்டு கொக்கு, மூன்று கொக்கு செய்வதற்கே மிகவும் சிரமப்படுகிறாள். மிகவும் கஷ்டப்பட்டு 644 கொக்குகள் செய்கிறாள். சடாகோ அவள் கையால் செய்தவை மொத்தம் 644 கொக்குகள். அத்துடன் அவள் இயற்கையோடு கலந்துவிடுகிறாள். அவள் வாழ்க்கை முடிந்துவிட்டது. அவள் விட்டுச்சென்ற மீதி 256 கொக்குகளையும் அவளுடைய பள்ளித்தோழிகள் செய்து முடித்தனர். சடாகோவின் நண்பர்கள் மற்றும் ஜப்பானில் உள்ள சேவை நிறுவனங்கள் ஓரிகாமி கொக்குகள் செய்து, நிதி திரட்டி ஹிரோஷிமா அமைதிப்பூங்கா என்ற ஒன்றை உருவாக்கி அதில் சடாகோ இந்தக் கொக்கை கையில் பிடித்துக்கொண்டிருப்பதைப் போன்று சிலை வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 25-ஆம் நாளை அவர்கள் கொண்டாடுகிறார்கள். வருடா வருடம் அந்த நாளன்று அவள் நண்பர்கள்  ஆயிரம் கொக்குகள் செய்து அவள் சிலைக்கு மாலை போல அணிவிக்கும் சடங்கை நிகழ்த்துகிறார்கள். உலகம் முழுவதிலிருந்தும் ஓரிகாமி கொக்குகள் வந்துகொண்டிருக்கின்றன.

 

நீங்கள் ஏதாவது இங்கிருந்து அனுப்பியிருக்கிறீர்களா

நாங்கள் பயிற்சி அளித்த பள்ளிகளிலிருந்து நிறைய அனுப்பிவிடுவார்கள். வருடா வருடம் அக்டோபர் 25 அன்று ஏதாவது ஒரு குழந்தைகள் தளத்தைத் தேர்வு செய்து அங்கே ஆயிரம் கொக்குகள் செய்து அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். போன தடவை ஜவ்வாது மலையில் அரசுப்பள்ளிக் குழந்தைகளோடு கொண்டாடினோம். அதற்கு முன்பு பொள்ளாச்சியில் ஒரு அரசுப்பள்ளியில். இந்த வருடமும் அதுபோல.. இப்படி ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு இடத்தைத் தேர்வு செய்து இந்த விஷயத்தை மக்களிடம் கொண்டுசெல்கிறோம். சடாகோ தன் கையால் செய்த 644 கொக்குகளையும் ஜப்பானிய அரசு பாதுகாத்து வைத்திருக்கிறது. அணு ஆயுதப்போருக்கு எதிரான பெரியதொரு நினைவுச்சின்னமாக உலகத்துக்கே தெரியவேண்டும் என்பதால் அதை அவர்கள் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்.

 

நீங்கள் ஜப்பான் பயணித்திருக்கிறீர்களா?

இதுவரை இல்லை. போகவேண்டும் என்ற திட்டம் இருக்கிறது.

உங்கள் குடும்பப் பின்னணி பற்றி சொல்லமுடியுமா?

தஞ்சாவூரில் காவிரிக்கரையில் அமைந்த குக்கிராமத்தில் வசிக்கும் ஆள்தான் நான்.  என்னுடைய அப்பா ஒரு சர்வீஸ்மேன். இப்போது அவர் இல்லை. என் அம்மா விவசாயம் மற்றும் அப்பாவின் ஓய்வூதியம் இவற்றை வைத்துக்கொண்டு வாழ்கிற சிறு விவசாயக்குடும்பம்தான் எங்களுடையது. ஒரு அண்ணன், ஒரு அக்கா திருமணமாகி அவரவர் குடும்பத்தோடு வசிக்கிறார்கள். குழந்தைகள் மற்றும் கலை சார்ந்து என்னுடைய பயணம் போய்க்கொண்டிருக்கிறது.

 

ஓரிகாமி தவிர வேறு ஏதாவது கலை சார்ந்து செயல்படுகிறீர்களா? எழுத்து, இசை போன்ற மாற்றுமுயற்சிகள் ஏதேனும் இருக்கின்றனவா?

எல்லாக் கலைகளின் மீதும் ஆர்வம் முயற்சி எல்லாமும் இருக்கிறது. ஆனால் ஓரிகாமி கலையில் மட்டும்தான் என் கவனக்குவிப்பு பெருமளவில் இருக்கிறது.

 

பன்னிரண்டு பதிமூன்று வருடங்களாக இதில் பயணிக்கிறீர்கள். திரும்பிப் பார்க்கும்போது எப்படி உணர்கிறீர்கள்? பெரிய சாதனை என்று நினைக்கிறீர்களா? இந்தக் கலை சார்ந்து இன்னும் நிறைய செய்யவேண்டும் என்று எண்ணுகிறீர்களா? இன்னும் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று கனவு வைத்திருக்கிறீர்கள்?

இந்தக் கலை இப்போதைக்கு ஒரு விளையாட்டுக்கலை என்ற அளவில்தான் மக்களிடம் புரிதல் இருக்கிறது. இதை அறிவியல்ரீதியாக கொண்டுசேர்க்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இது ஒரு ஒழுங்கமைவுள்ள, விஞ்ஞானபூர்வமான கலை என்பதை மக்களுக்கு உணர்த்த இது குறித்த புத்தகங்கள் நிறைய வெளியிடவேண்டும். R&D அளவில் நிறைய இளம் கலைஞர்களை உருவாக்கியிருந்தோம். Robotic technology-ல் ஓரிகாமியின் பங்கு மிக முக்கியமானது. Box making என்பது முழுக்க முழுக்க ஓரிகாமியிலிருந்து வந்த விஷயம்தான். எந்தப் பொருளாக இருந்தாலும் அதை ஒரு அட்டைப்பெட்டியில் வைத்துதான் launch பண்ணுகிறோம். காகிதப்பெட்டி என்பது ஓரிகாமியிலிருந்து வந்தது. Box making என்பது என்ஜினியரிங் அடிப்படையிலானது. தீப்பெட்டியாக இருந்தாலும் ஆப்பிள் ஐஃபோனாக இருந்தாலும் அதற்கு அட்டைப்பெட்டி இருக்கும். அது ஓரிகாமியிலிருந்து வந்ததுதான். எந்த ஒரு பெரிய பொருளானாலும் சின்னதாக ஒழுங்கமைவுடன் சுருக்கி மறுபடி பெரிதுபடுத்தும் டெக்னிக் ஓரிகாமியுடையதுதான். செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் நூறு இருநூறு வருடங்களுக்கு முன்பு செயற்கைக்கோள் கண்டுபிடித்த சமயத்திலேயே ஓரிகாமி நுட்பத்தைதான் அப்ளை செய்திருக்கிறார்கள். ஏனென்றால் செயற்கைக்கோளை பெரிய ஆய்வுக்கூடத்தில் மிகப்பெரிய அளவில் செய்துவிடுவார்கள். அதை ராக்கெட்டுக்குள் சுருக்கிவைத்து விண்வெளிக்கு அனுப்பி அங்கேதான் என்லார்ஜ் பண்ணுவார்கள். சுருக்கி மறுபடியும் என்லார்ஜ் பண்ணும் டெக்னிக்கை ஓரிகாமியிலிருந்துதான் எடுத்திருக்கிறார்கள். காரில் இருக்கும் safety balloon அமைப்பு, மருத்துவத்துறையில் அறுவை சிகிச்சையின்போது கத்தரிக்கோல் போன்ற பெரிய பெரிய கருவிகளை சின்ன குழாய்க்குள் மடித்து அனுப்பி உள்ளே விரியச்செய்வது எல்லாமே ஓரிகாமி டெக்னாலஜிதான். பயோடெக்னாலஜியில் செல்களை ப்ளாஸ்ட் பண்ணுவதற்கு, robotic technology –ஐ பயன்படுத்துவார்கள். உட்கரு, உட்கருவின் உள்ளே உள்ள டிஎன்ஏ-வை உடைப்பது போன்ற நுட்பமான செய்முறைகளுக்கும் ஓரிகாமி டெக்னாலஜி உபயோகமாகிறது.

 

ஆக எல்லாவற்றுக்குமே அடிப்படையாக ஓரிகாமிதான் இருந்திருக்கிறது என்று சொல்கிறீர்கள்.  

ஆமாம். Folding mechanism எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் ஓரிகாமி அப்ளை பண்ணியிருக்கிறார்கள். உலக அளவில் எல்லா ஆய்வுக்கூடங்களிலும் இது ஒரு application science –ஆக இருக்கிறது. நம்முடைய ஏரியாவில் இது அந்த அளவுக்கு வளர்ச்சி அடையவில்லை. Just பேப்பரில் கப்பல் செய்வது என்பதைத் தாண்டி வரவில்லை. அதற்கு நிறைய zones-ஐ உருவாக்க வேண்டும். மக்களிடம் இதை ஒரு அறிவியல்பூர்வமான கலையாக கொண்டுபோகவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.

திரும்பிப் பார்த்தால் நிறைய திருப்தி இருக்கிறது. சடாகோ சசாகியின் நினைவுதினத்தன்று பல குழந்தைகளுக்கு ஓரிகாமி கொக்கு செய்வதைக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறேன். அதன் மூலமாக அணு ஆயுதம் தவறு என்னும் எண்ணத்தைக் குழந்தைகளிடம் விதைக்கிறேன். இந்தக் கொக்கு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் அணு ஆயுதத்தின் பாதிப்பு பற்றிக் கட்டாயம் தெரிந்திருக்கும். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நிறைய இளம் கலைஞர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். இந்தப் பதிமூன்று வருடங்களில் நிறையக் குழந்தைகளுக்கு இந்தக் கலையைக் கற்றுக்கொடுத்திருக்கிறேன். ஆசிரியர்களுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறேன். கற்றுக்கொடுத்திருக்கிறேன் என்பதை விடவும் கைமாற்றியிருக்கிறேன் என்று சொல்லலாம். மொத்தத்தில் நிறைய திருப்தி இருக்கிறது.

 

தற்போது கொரோனாவால் ஒரு நெருக்கடியான காலகட்டம் உருவாக்கியிருக்கிறது. அது இந்தக் கலையைப் பயிற்றுவிப்பதில் எப்படியான சிக்கலைக் கொடுத்திருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? New normal என்று சொல்கிறார்கள். நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பள்ளிகள் இன்னமும் திறக்கப்படவில்லை. ஒரு பொருளைக் கையாள்வதும் பெரும் சவாலுக்குரிய செயலாக இருக்கிறது. அதனால் இக்கலையில் பாதிப்பு இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

கண்டிப்பாக பாதிப்பு இருக்கிறது. இந்த ஆறு மாதங்களில் பெரிய பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது. தனிப்பட்ட முறையில் சொல்வதானால், நான் பயணம் செய்யாமல் இருக்கமாட்டேன். அந்தப் பயணத்தைத் தடைபண்ணியிருக்கிறது. ஒரு மாதத்தில் சராசரியாக இருபது பள்ளிகளுக்காவது செல்வேன். அரசுப்பள்ளி, தனியார் பள்ளி, சர்வதேசப்பள்ளி என கலவையாக பல பள்ளிகளுக்கும் போவேன். அது முற்றிலுமாக தடுக்கப்பட்டிருக்கிறது. உலகத்துக்கே பாதிப்பு என்றாலும் என்னைப் போன்ற கலைஞர்களுக்கு பெரும் பாதிப்பு. ஆன்லைன் மீடியம் கொஞ்சம் ஆறுதலாக உள்ளது. அமெரிக்கா, லண்டன் போன்ற நாடுகளில் உள்ளவர்களுடன் zoom meet மூலமாக தொடர்புகொள்கிறேன். தவிரவும் தமிழ்நாட்டிலும் பல இடங்களில் உள்ளவர்கள், IT துறையில் உள்ளவர்கள் என பலரோடும் இணையம் வழியாக தொடர்பில் இருக்கிறேன்.

 

தவறாக நினைக்காவிடில் ஒரு கேள்வி. இந்தக் கலைப் பயணத்தினூடாக உங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கான வருமானம் ஏதாவது கிடைக்கிறதா? ஏன் கேட்கிறேன் என்றால் பொருளாதார பலம் இல்லையென்றால் ஒரு கட்டத்தில் சோர்வு வந்துவிடும். வாழ்வதற்கு கட்டாயம் பணம் வேண்டும் அல்லவா? அதனால்தான் இக்கேள்வி.

கண்டிப்பாக. எந்த ஒரு கலையானாலும் வாழ்வாதாரத்துக்கு ஏதாவது வழி வகுத்தால்தான் அந்தக் கலையையே சமூகம் ஏற்றுக்கொள்ளும். அதுதான் யதார்த்தம். என்னைப் பொறுத்தவரை நான் ஏற்கனவே ஓரளவு பொருளாதார வசதியோடு இருந்தவன். நான் இந்தக் கலைக்குள் என்னுடைய 26-ஆம் வயதில்தான் நுழைந்தேன். இப்போது எனக்கு 38 வயதாகிறது. முன்பு சென்னையில் ஒரு ஹோட்டலை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருந்தேன். NGO-வில் ஒரு கோஆர்டினேட்டராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். அதனால் அடிப்படைப் பொருளாதாரம் என்பது எவ்வளவு முக்கியம் என்பது தெரியும். பணம் சம்பாதிப்பது எவ்வளவு கஷ்டம், அது எந்த அளவுக்கு இந்த சொசைட்டியில் தேவைப்படும் என்று நன்றாகவே தெரியும். அந்தப் புரிதலோடுதான் இதற்குள் வந்தேன். தமிழ்நாட்டில் இல்லாத ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு பயணிக்கிறோம், கண்டிப்பாக இதனால் வாழ்வாதாரத் தேக்கம் வரும், அதை சமாளிக்கவேண்டும் என்ற மனத்துணிவோடுதான் இதற்குள் நுழைந்தேன். அதனால் அந்த சிரமத்தையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

 

கடைசிக்கேள்வி. ஓரிகாமி கலை குறித்து இரண்டு புத்தகங்கள் எழுதியிருப்பதாக சொன்னீர்கள். கலையும் இலக்கியமும் எப்போதும் ஒன்றாகவே இருக்கும். இலக்கியத்தோடு இணைந்து செயல்படுவது போல, இந்தப் புத்தகங்களை இன்னும் நிறைய அறிமுகப்படுத்தப்படுவது போல ஏதேனும் திட்டங்கள் வைத்திருக்கிறீர்களா?

கண்டிப்பாக. சடாகோவின் வரலாறு, கொக்கு செய்தல் போன்றவற்றை ஒரு இலக்கிய வடிவமாகத்தான் எடுத்துப் போய்க்கொண்டிருக்கிறேன். அணு ஆயுதத்துக்கு எதிராக இடதுசாரி சிந்தனையில் ஒரு போராட்டமாக இல்லாமல் குழந்தைகளிடம் இலக்கிய வடிவமாக எடுத்துப்போவதுதான் சடாகோவின் கதையே.

 

உங்களிடம் பேசியதில் மிகவும் மகிழ்ச்சி. சிறிய நேர்காணல் என்றாலும் திருப்தியோடு நன்றாக இருந்தது. நன்றி.

நன்றி.


நேர்கண்டவர் :

              க.விக்னேஸ்வரன் 

 ‘கனலி’ கலை-இலக்கிய இணையதளம்

நன்றி : தட்டச்சு உதவி: கீதா மதிவாணன்

8 COMMENTS

  1. குழந்தைகளின் அகமலர்ச்சி பயணத்தில் இருக்கும் ஓரிகாமி கலைஞர் குறித்த நிறைவான நேர்காணல். ஓரிகாமி கலையின் தோற்றம், வளர்ச்சி, பள்ளி மாணவர்களின் உளவியல் தரிசனம் என குழந்தைகளின் களத்தில் இயங்கும் தியாகசேகர் குறித்தும் ஓரிகாமி கலை குறித்தும் தெரிந்து கொள்ள உதவிய கனலியில் வாழ்த்தி வரவேற்க வேண்டிய நேர்காணல். பெற்றோர், ஆசிரியர்கள், கதைசொல்லிகள், மற்றும் குழந்தைகளின் அக மலர்ச்சி விரும்புவோர் வாசிக்க வேண்டிய பதிவு…

  2. அத்தனையுமே புதிய தகவல்கள். தேவையான தகவல்களை பெரும் படியான கேள்விகளை எழுப்பிய நேர்காணல் மிக அருமையாக இருக்கிறது. சடகோவின் நிஜக்கதை மனதை கலங்க வைக்கிறது. தனக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து கலை சார்ந்த வாழ்க்கையை வாழ்வது மகிழ்ச்சியே. வாழ்த்துகள்.

    • Origami கலை பற்றிய நல்ல முதல் அறிமுகம்..
      நன்றி கனலி…..

  3. உங்கள் வாழ்வும் ஓரிகாமி கலை குறித்த முன்னெடுப்பும் மிகவும் பாராட்டத் தக்கது.

  4. ஒரிகாமி என்பது காகித மடிப்புக்கலை என்ற அளவில் மட்டுமே அறிந்திருந்த என் போன்ற பலருக்கும் ஒரிகாமியின் வரலாறு, பாரம்பரியம், முக்கியத்துவம் போன்றவை குறித்த நல்ல புரிதலைத் தந்துள்ள நேர்காணல். நன்றி விக்னேஷ்வரன். குழந்தைகளை அவர்களின் வழியிலேயே சென்று அரவணைத்து வழிநடத்தும் உத்தி மிக அற்புதமான ஒன்று. ஒரிகாமி கலைஞர் தியாகசேகர் அவர்களுக்குப் பாராட்டுகள்.

  5. ஜப்பானியக் கலை இலக்கிய சூழலியல் சிறப்பிதழ் நேர்த்தியாக வடிவெடுத்திருக்கிறது. வாழ்த்துகள்.

    ஒரிகாமி கலைஞரோடு நேர்காணல் படித்து முடித்தேன். நிறைவாக உள்ளது. ஒரிகாமி மையப்படுத்தப்படும் ஆயிரம் கொக்குகள் – சடாகோ – புனைவு/நிகழ்வு பற்றிக் கேட்கவில்லையே என்று நினைத்தபடி படித்து வந்தால், சரியான இடத்தில் அந்த ஆயிரம் கொக்குகளும் பறந்து வந்து அமர்கின்றன.

    way to go…

  6. ஆச்சர்யம், சுமார் 13 வருடங்களாக திரு. தியாகசேகர் ஓரிகாமி கலைக்கான அர்ப்பணிப்பும், அதற்கான எண்ணற்ற குழந்தைகளை சந்தோஷப்படுத்த முடிந்ததை தன் கலையின் மூலமாக சாதிக்கிறார். அவரது “காகித கொக்குகள்” கொக்குகளுக்காகவே வானம்” புத்தகங்கங்களை என் உறவின பிள்ளைகளுக்கு பரிசளிக்க உள்ளேன். அப்பிள்ளைகள் காகித்த்தில் எண்ணற்ற உயிரோட்டமான icon களாக இந்த லாக்டவுன் நேரத்தில் செய்தார்கள். 644 கொக்குகள் எவ்வாறு அரசு சரித்திரமானது என்பதைத் தெரிந்துக் கொண்டேன். நன்றி திரு விக்னேஸ்வர் அவர்களுக்கு. வாழ்க வளமுடன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.