நவீன ஹிந்தி கவிதையின் பிரம்மராக்ஷஸ், கஜானன் மாதவ் முக்திபோத் ( 1917 – 1964 ) தமிழில் – எம்.கோபால கிருஷ்ணன்.


கஜானன் மாதவ் முக்திபோத் ( 1917 – 1964 )

ஹிந்தி நவீன கவிதையின் முகங்களில் ஒருவர் கஜானன் மாதவ் முக்திபோத்.

‘சாயாவாத்’ (கற்பனைவாதம்) மரபிலிருந்து ஹிந்தி கவிதையை திசைதிருப்பிய முக்கியமான தொகுப்பு ‘தார் சப்தக்’ ( ஏழு நட்சத்திரங்கள் ). இங்கிருந்துதான் ‘நயி கஹானி’ என்று அழைக்கப்படும் நவீனத்துவத்துக்கு ஹிந்தி இலக்கியம் வந்தடைந்தது. 1943ம் ஆண்டு வெளியான இத்தொகுப்பில் இடம்பெற்ற கவிஞர்களில் ஒருவர் முக்திபோத்.

சிறுகதை, கவிதை, கட்டுரை, விமர்சனம், பத்திரிக்கைத் துறை என அனைத்திலும் நவீனத்துவத்தைப் புகுத்திய ஆளுமைகளில் ஒருவர் முக்திபோத்.
அவரது புகழ்பெற்றக் கவிதைகள் – பிரம்மராக்ஷஸ், நிலவின் முகம் கோணியிருந்தது ( சாந் கா முக் டேடா ஹே ), இருளில் ( அந்தேரே மே ), சூனியம் ஆகியன. இவரது எழுத்துகள் அனைத்தும் ஆறு தொகுதிகளாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன.
இவரைப் பற்றியும் இவரது கவிதைகளையும் வாசித்தபோது பிரமிளின் நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. மொழி, படிமங்கள், தொனி என கவிதையின் எல்லா அம்சங்களுமே இருவருக்கும் ஆச்சரியப்படத்தக்க வகையில் ஒன்றுபோல அமைந்திருந்தன. வாழ்க்கைமுறையும்கூட கிட்டத்தட்ட ஒத்திருந்தன. ‘பிரம்மராக்ஷஸ்’ என்ற பெயரில் பிரமிளும் ஒரு கவிதையை எழுதியுள்ளார்.

‘பிரம்மராக்ஷஸ்’ என்ற அவரது நீள்கவிதை, சோதனைவாதக் கவிதைகளில் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்தக் கவிதைக்கு இன்றுவரை விளக்கங்கள் எழுதப்பட்டு வருகின்றன. நடைமுறை உலகுக்குப் பொருந்திவரமுடியாமல் தமக்குள் சிதறுண்டுபோகும் நவீன சிந்தனைவாதிகளின் நிலையை ஆழ்படிமங்களின் வழியாக நுட்பத்துடன் சித்தரிக்கிறது இந்தக் கவிதை. 1957ல் எழுதப்பட்ட இந்தக் கவிதையின் மொழியும் படிமங்களின் பிரயோகமும் மிகவும் சிக்கலானது. மொழிபெயர்ப்பில் இதன் நுட்பத்தையும் ஆழத்தையும் அடைவது என்பது இன்னும் சவாலான ஒன்று. இருப்பினும் முக்திபோதின் கவிதையை சேர்க்காமல் நவீன ஹிந்திக் கவிதையைப் பற்றி பேசமுடியாது என்பதால் இக்கவிதை மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் புதிய சவால்களை புதிய அர்த்தங்களைத் தரும் இந்தக் கவிதையின் இந்த மொழிபெயர்ப்பு வடிவம் முழுமையானதாக இருக்க முடியாது.

பிரம்மராக்ஷஸ்
கஜானன் மாதவ் முக்திபோத்
ஊரின் எல்லையில்
பாழைடைந்த மாளிகையின் அருகில்
கைவிடப்பட்ட பாழுங்கிணற்றின்
குளிர்ச்சியான இருட்டில்
உறைந்துள்ளன நீரின் ஆழங்கள்.
அந்த அனாதிகாலத்தின் நீருக்குள்
மூழ்கிக் கிடக்கின்றன
எண்ணற்ற படிகள்.
எதுவரையிலும் உள்ளதென்று
அறியமுடியாதபோதும்
மிகுந்த ஆழம் கொண்டவை அவை.

பாழுங்கிணற்றைச் சூழ்ந்து
பின்னிக்கிடக்கும் கிளைகளுடன்
மௌனமாய் நிற்கிறது அத்திமரம்.
அதன் கிளைகளெங்கும் தொங்குகின்றன
ஆந்தைகளின் கூடுகள்.
கூடுகளைவிட்டு நீங்கிப் போய்விட்டன
ஆந்தைகள்.

நூற்றாண்டுகளின்
புண்ணியச் சுவடுகள்
வனத்தின் பச்சை வாசனையில் உறைந்து
காற்றில் நீந்தி வந்து
பலத்த சந்தேகத்தை எழுப்புகின்றன
யாருமறியாத காலாவதியான அந்தப் பழஞ்சிறப்பை
பெரும் கவலையைப்போலப்
பாய்ச்சுகிறதோ
இருதயத்தில்?

பாழுங்கிணற்றின் கைப்பிடிச் சுவரின் மீது
அழகிய பசுமையான கிளையைச் சாய்த்து
நட்சத்திரங்களைப்போல் பூக்கள் மலர்ந்த
மல்லிகைக் கொடி
குன்றினைப்போல் வீற்றுள்ளது.

அதனருகே
சிவப்பு மலர்கள் காற்றில் அசைந்திருக்கின்றன
எனது அந்த செம்பருத்தி
அபாயத்தை நோக்கி அழைக்கிறது
அங்கே
பாழ்கிணற்றின் இருண்ட வாய் பிளந்து கிடக்கிறது
எதுவுமற்ற ஆகாயத்தை நோக்கி

பாழ்கிணற்றின் ஆழத்தின் வெறுமையில்
உட்கார்ந்திருக்கிறான் ஒரு பிரம்மராக்ஷஸ்.
பைத்தியத்தைப்போல்
உள்ளிருந்து அவன் உச்சரிக்கும் சொற்கள்
மோதி எதிரொலிக்கின்றன.
ஆழமான உத்தேசங்களையும்
உடலின் மலினங்களையும்
விலக்கி விடுவதற்காக ஒவ்வொரு கணமும்
பாவத்தின் நிழல்களைத் துடைப்பதற்காக இரவும் பகலுமாய்
சுத்தம் செய்துகொண்டிருக்கிறான் பிரம்மராக்ஷஸ்
உள்ளங்கைகளைக் கொண்டு
உடம்பைத் தேய்த்துக் கழுவுகிறான் நன்றாக
தோள்களிலும் மார்பிலும் முகத்திலும் இருக்கும்
முத்திரைகளை அழிக்க
நன்றாக சுத்தம் செய்கிறான்
ஆனாலும் இருக்கிறது அழுக்கு
ஆனாலும் போகவில்லை அழுக்கு.

உதடுகளிலிருந்து ஒலிக்கின்றன
வினோதமான ஸ்தோத்திரங்களும்
யாரோ கற்பித்த மந்திர உச்சாடனங்களும்
பொங்கிவரும் வசைகளும்.
சிந்தனைகளின் பிரகாசிக்கும் வரிகளென
நெற்றிக்கோடுகள் படிந்திருக்கின்றன.
முடிவற்ற அந்தக் குளியலின்
பித்துப்பிடித்த பிரவாகம்
உயிரினில் மூண்டெழும் உணர்ச்சிப்பெருக்கு.

ஆனால்
ஆழமான பாழுங்கிணற்றின்
உட்புறச் சுவரில்
கோணலாய் சரிகின்றன சூரிய கிரணங்கள்
அதில் எழுந்து பறக்கும் தூசிகள்
அடியாழத்தை அடையும்போது
பிரம்மராக்ஷஸ் நினைத்துக்கொள்கிறான்
சூரியன் தலை பணிந்து அவனை வணங்குகிறான் என.

நிலவின் ஒளிக்கற்றைகள்
பாதை மறந்து
எங்கோ சுவரின் மீது
படியும்போது
பிரம்மராக்ஷஸ் எண்ணிக்கொள்கிறான்
தன்னை ஞானகுருவாக எண்ணி
நிலவு பணிந்து வணங்குவதாய்.

ஆகாயமும்கூட
அவனது மேன்மையை
பணிவுடன் ஒப்புக்கொண்டு
வணங்குவதாய்
குதூகலம் பொங்கும் உடலும் மனமுமாய்
எண்ணியிருந்தான் அவன்.

இருமடங்கு அதி வீரியத்துடன்
அறிந்திடக்கூடிய அவன் மனம்
சுமேரிய பாபிலோனிய நாட்டார் கதைகளிலிருந்து
இனிய வைதீக மந்திரங்கள் வரை
அன்றிலிருந்து இன்று வரையிலான
பாடல்கள், சந்தங்கள், மந்திரங்கள், தேற்றங்கள்
மார்க்ஸ், ஏங்கல்ஸ், ரஸ்ஸல், டாயென்பி,
ஹைடெக்கர், ஸ்பெங்க்ளர், சார்த்தர், காந்தி என
எல்லோரது கச்சிதமான கொள்கைகள் வரை
எல்லாவற்றுக்கும்
புதிய விளக்கங்களைத் தருகிறான்
நீராடும் அந்த பிரம்மராக்ஷஸ்
இருண்ட படிகள்கொண்ட பாழ்கிணற்றின்
அடர்ந்த ஆழத்தின் சூனியத்தில்.

முழங்குகிற, எதிரொலிக்கிற, கலகம் செய்கிற
இந்த ஓசைகள்
ஆழங்களிலிருந்து மேலெழுகின்றன.
அலைந்திருக்கும் சொற்களின் புதிய காலகட்டத்தில்
ஒவ்வொரு சொல்லும் தனது எதிர்சொல்லை
வெட்டிக் கடக்கின்றன
அந்த ரூபம் தனது பிம்பத்துடனே பொருதி
உருக்குலைந்த ரூபமாகிட
ஒலி சண்டையிடுகிறது தனது எதிரொலியுடன் இங்கு.

பாழ்கிணற்றின் கைப்பிடிச் சுவரில்
நட்சத்திரங்களைப்போன்ற வெண்ணிறப் பூக்களைச் சொரியும்
அழகிய பசுமையான கொடிகள் படர்ந்து கேட்கின்றன
அந்தக் குரல்களை.
கலாக்காய் புதரின் சுகந்தமான மலர்கள் கேட்கின்றன
புராதனமான அத்தி மரமும் கேட்கிறது
நானும் கேட்டுக்கொண்டிருக்கிறேன் அங்கே.
பாழுங்கிணற்றில் சிக்கிக்கிடக்கும்
பித்துற்ற சங்கேதங்களுடன் சொல்லப்படுகிற
அந்த துயரத்தை

•••
உள்ளிருக்கும் அதன் படிகள்

மிக உயரமானவை
கருநீலமானவை
தனித்துவமான உலகத்தினுடையவை

மேலே ஏறுகிறது இறங்கிறது
மீண்டும் ஏறுகிறது இறங்குகிறது
பாதங்களில் சுளுக்கு பிடிக்கிறது
மார்பில் விழுகின்றன சாறுகாயங்கள்
நன்மைக்கும் தீமைக்குமான போராட்டத்தைவிட
தீவிரம் அதிகம்
நன்மைக்கும் மேலும் நன்மைக்கும் இடையிலான போராட்டம்.
வெற்றி சிறிதென்றாலும் ஆழமானது.
மிகப் பணிவானது தோல்வி.
தேவைக்கு அதிகமான முழுமைகொண்ட
இத்துயரங்கள் மிகவும் அன்பானவை
ஜியோமிதியுடனான கணிதத்தால்
கச்சிதமாக கணிக்கப்பட்ட
பணிவான அறமதிப்பீடுகளைக்கொண்டு
மனசாட்சியின் நுட்பமான அறவுணர்வுகளை
அதீத முழுமைகொண்டு பணியச் செய்வது
எப்போதுதான் எளிதாக இருந்தது?
மனிதர்கள் உள்மனக் கதைகள் மிகவும் பிரியமானவை.

சிவந்த கவலை ரேகைகளை
சுவர்களின் மேல் பரப்பியபடி
உதித்தான் சூரியன்.
கிளறும் கற்றைகளின்மேல்
வெண்ணிற பட்டைகளை
கம்பிகளின்மேல் கட்டியபடி
மேலெழுந்தது நிலவு.
எண்ணற்ற தசமங்களைப்போல்
ஆகாயத்தின் எல்லைகள் வரையிலும்
விண்மீன்கள் இறைந்திருந்தன.
எண்ணற்ற புள்ளிகளைப்போல எங்கும்
சிக்கலான கணித மைதானத்தில் விழுந்திருந்தன
சிதைந்துபோனவையும் அடையமுடிந்தவையும்
அனைத்துமே கிடந்திருந்தன.
மார்பையும் தோள்களையும் விரித்தபடி
ஒரு சுத்திகரிப்பாளனைப்போல் கிடந்திருந்தது
மென்மையான பளிங்கு அரண்மனை போன்ற
மனிதத்துவம்.
அரண்மனையில் வசிப்பதும்
வாழ்வின் படிகளில் தனியாக ஏறுவதும்
மிகவும் கடினமானது.
உணர்ச்சிகளுடன்
வாதங்களுடன்
காரிய காரணங்களுடன்
கூடிய கணிதப் படிகளை
விட்டுவிடுவோம் அவனிடம்.
உணர்ச்சிகளும் வாதங்களும்
காரிய காரணங்களும் திட்டங்களும் உண்டு
எல்லா பண்டிதர்களிடத்திலும்
சிந்தனையார்களிடத்திலும்.
தனது குருவை அடையும் நோக்கத்தில்
அவர்களிடையே அலைகிறான் அவன்.

ஆனால்
யுகங்கள் மாறின.
புகழைத் தரும் தொழில்கள்
லாபகரமான வேலைகளில் செல்வம்
மனத்தைக் காட்டிலும் பணமே பிரதானம்
மனசாட்சியை மூட்டமிடுகிறது செல்வத்தின் நிழல்
நிரந்தரமாக எரிந்துகொண்டிருந்தது.
சத்தியத்தின் நிழல்

மனசாட்சியுடனான
இந்தக் காரியத்தில்
உலகளாவிய வலை அமைந்து
வாழ்வின் அமைதி குடிகொண்டிருந்தது
மனமற்ற மனம்
மகத்துவங்களின் காலடியில் கிடக்கிறது.
அந்த நாட்களை அவனுக்கு காட்டமுடியுமானால்
அவனது சுயத்தின் மதிப்பை
அவனுக்கு நானே எடுத்துரைப்பேன்
அந்த மகத்துவத்தை
நம்மைப் போன்றவர்களுக்காக
பயன்படுத்தும்படி கேட்பேன்
அவ்வாறான அந்தகரணத்தையே நான் மகத்துவம் என்கிறேன்

நழுவிப்போய்விட்டான் உள்ளே அவன்
வெளியிலிருக்கும் இரண்டு கடினமான பாடங்களுக்கு நடுவே
ஆழத்தில் உள்ளது அப்படியொரு துன்ப நாடகம்
பாழ்கிணற்றுக்குள் எப்போதும் அவன் பிதற்றுகிறான்
அரண்மனையில் எவ்வாறு அவன்
தன் கணிதத் திறனைக் காட்டியிருந்தபடி
செத்துப்போனான் என்று.
அடர்ந்த முட்புதரின் அடிவயிற்றில்
செத்துப் போன பறவையைப் போல
விடைபெற்றுப் போய்விட்டான் அவன்

அந்த ஒளி எப்போதைக்குமாக யாருமறியாது
உறங்கிப்போய்விட்டது.
ஏன் இவ்வாறு நிகழ்ந்தது?
இவ்வாறு எப்படி நடந்தது?
பிரம்மராக்ஷஸின் நெருக்கமான சிஷ்யனாக
ஆகிவிட வேண்டும் நான்.
அவனது வேதனைகளின் ஊற்றாக விளங்கும்
அவன் பூர்த்திசெய்யாது விட்டுப்போன காரியங்கள்
முழுமையான உண்மையினை
எட்டும்படி செய்திடுவேன்.


  • தமிழில்: எம்.கோபால கிருஷ்ணன் Gopala krishnan

2 COMMENTS

  1. யுகங்களின் பலபடிமங்களை தனியாக பேசிச்செல்கிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.