நான் ஒரு சிறிய நகரத்தை வாங்கினேன்

ன்னவென்றால், டெக்சாஸில் இருக்கும் அந்த சிறிய நகரமான கெல்வெஸ்டனை நான் விலைக்கு வாங்கினேன். அனைவரிடமும், இங்கே ஒரு ராத்திரியில் எதையும் நான் மாற்றப்போவதில்லை, அனைத்தையும் மெதுவாக சாவகாசமாகத்தான் ஆற்றப்போகிறோம் ஆகவே உடனடியாக யாரும் எங்கும் நகரத் தேவையில்லை என்று அறிவித்தேன். அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஐயமும் கொண்டனர். நான் அங்கிருந்து துறைமுகத்தை நோக்கி நடந்தேன். பருத்திக் கிடங்குகள்,  மீன் சந்தை,  அவற்றின் கூடவே உலகம் முழுவதும்  பெட்ரோல் சுதந்திரமாக விரவியதன் காரணமாக உண்டான அனைத்தும் அங்கு நிலைகொண்டிருந்தன. இங்கே ஒன்றிரண்டு ஆப்பிள் மரங்களும் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நான் எண்ணிக் கொண்டேன். பின் இரு ஓரங்களிலும்  பனைமரங்கள்  சூழ இருக்கும்  அகன்ற  சாலையில் நடக்கத் துவங்கினேன். அந்த மரங்கள் நாற்பது அடி உயரம் இருக்கும். நன்கு தடித்திருந்தன. அதன் கீற்றுக்கள் இருபுறமும் படர்ந்திருந்தன. ஒன்றன் பின் ஒன்றான   தொகுப்புகளாக  அந்த மரங்கள் நின்றிருந்த அந்தப் பாதை பரந்து கிடந்த மெக்சிகோ வளைகுடாவில் முடிவடைந்தது. இருபுறமும் ஆடம்பரமான வீடுகளும், பார்வைக்கு மசூதி போல தோற்றமளித்த பெரிய கத்தோலிக்கத் தேவாலயமும், அதனருகே பாதிரியாரின் மாளிகையும் கூடவே  தேவாலய மக்கள் சந்தித்து உரையாட   ஒரு அழகிய செங்கல் கட்டிடமும் அங்கிருந்தன.  எவ்வளவு அருமையான  சிறிய நகரமாக இருக்கிறது. இதுவே எனக்கு மிகவும் பொருத்தமானது என்று எண்ணிக் கொண்டேன்

அதுவே எனக்கு மிகப் பொருத்தமானது என்பதால் நான் அவ்வாறே இதை மாற்றியமைக்கத் துவங்கினேன். ஏதும் தடாலடியாக அல்ல. மென்மையாக. மிகவும் மென்மையாக. முதலாம் தெருவில் வசித்த சிலரை நான் அந்த நகரை விட்டே வெளியேறச் சொல்லிவிட்டு அவர்களின் வீடுகளைப் பிய்த்தெறிந்தேன். அவர்களை கால்வேஸ் ஹோட்டலில்  தங்க வைத்தேன்.  கடற்கரையை ஒட்டி அமைந்த அந்த ஹோட்டல்தான் நகரிலேயே மிகச்  சிறந்த ஒன்று. ஒவ்வொரு அறையும் காண  அழகியதாக இருக்குமாறு பார்த்துக் கொண்டேன்.  கால்வேஸ் ஹோட்டலில் தங்குவது என்பது அம்மக்களுக்கு வாழ்நாள் கனவாக இருந்தது. ஆனால் அதற்கேற்ற வசதியில்லாததால் அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிட்டவில்லை. அவர்கள் பெருமகிழ்ச்சி கொண்டனர். அவர்களின் வீடுகளைப் பிய்த்தெறிந்து, அந்த காலியான இடத்தில் நான் ஒரு பூங்காவை அமைத்தேன். அங்கு புதிதாக ஏதும் நாங்களாக கற்பனை செய்து  அலங்கரிக்கவில்லை. அனைத்தையும் ஒழித்துக் கட்டிவிட்டு அங்கே மக்கள் அமர்வதற்கு பச்சை நிற  இரும்பு பென்ச்சுகள்,   சிறிய நீறுற்று, போன்று ஒரு   பூங்காவுக்குத் அடிப்படைத்  தேவையானவை  அனைத்தையும் அமைத்தோம்.

இந்த வெட்டவெளிப் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு இதுநாள் வரை வாய்க்கப் பெறாத ஒன்று  இப்பொழுது வாய்த்திருக்கிறது. அதுதான் இந்தப் பூங்கா. எனக்கு அது மகிழ்ச்சியளித்தது. அவர்கள் அங்கே இனி அமர்வார்கள். அவர்களுக்கு அது மிகவும் பிடிக்கும் கூட. அவர்கள் அங்கு சென்று அமர்ந்திருப்பதைக் காணச்  சென்றேன். அங்கு ஒரு கறுப்பின மனிதன் போங்கோ டிரம்ஸ் வாசித்துக் கொண்டிருந்தான். எனக்கு போங்கோ டிரம்ஸ் சுத்தமாக பிடிக்காது. அவனிடம் அந்த பாழாய்ப்போன  போங்கோ  டிராம்ஸைவாசிப்பதை நிறுத்தும்படி சொல்லச் சென்றேன். ஆனால் என்னை நானே கடிந்து கொண்டேன். அது சரியல்ல. அவருக்குப் பிடித்திருந்தால்   அந்த பாழாய்ப்போன  போங்கோ  டிராம்ஸை அவர் வாசிப்பதை நீ அனுமதிக்க வேண்டும். அதுதான்  மக்களாட்சியின் துயரமான ஒரு  பகுதி.  நான் அதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

பிறகு நான் அங்கிருந்து கிளம்பி ஹோட்டலில் தங்கவைத்த மக்களுக்கான நிரந்தர இருப்பிடம் குறித்து யோசிக்கலானேன். அவர்களை அந்த ஆடம்பர ஹோட்டலில் அதிகநாட்கள் தங்க வைக்க இயலாது.

அந்த குடியிருப்பை  மிகையாக கற்பனைகள் ஏதும் செய்து கட்டாமல் மிகச் சாதாரணமாக கட்டினால்  போதும் என்பதைத் தவிர அது குறித்து வேறு  எண்ணம் ஏதும் எனக்கு இல்லை. ஆகவே அவர்களில் ஒருவரிடம் நான் இது குறித்து உரையாடத் துவங்கினேன். அதாவது நான் அங்கிருந்து வெளியேற்றியவர்களில் ஒருவன். அவன் பெயர் பில் கால்ஃபீல்ட், மெக்கானிக் தெருவின் உள்ளே இருந்த ஒரு புகையிலை மொத்தவிலை கடையில் வேலை பார்த்துவந்தான்,

“உங்களுக்கு எந்தமாதிரியான வீடு பிடிக்கும் ?” என்று அவனிடம் கேட்டேன்

‘அது… ரொம்ப பெருசா வேணாம்..”

“ஓ.. ஆஹான் ..”

“மூணு பக்கமும் சுத்தி நடுவுல ஒரு  முற்றம் இருக்கலாம்..’ என்றான். கூடவே, ” அப்படியே  திண்ணை வச்ச மாதிரி வீட்டின்  முகப்பு பகுதியும் இருக்கனும்.  திரை போட்டிருக்கனும்.. அதுல உட்கார்ந்து நாங்க வெளிய வேடிக்கை பார்க்கலாம்…”

” வெளியில அப்படி என்ன பார்ப்பீங்க..”

” ஏதாவது மரம்.. அப்புறம் காலியான இடம்.. இப்படி ஏதாவது..”

:அப்ப வீட்டைச் சுற்றி காலியான கொஞ்சம் இடமும் வேணும்.. அப்படித்தான?’

“ஆமாம்.. அதுதான்  நல்லா இருக்கும்.”

“எவ்ளோ பெரிய இடம் வேணும்னு நினைக்கிற?”

“ரொம்ப பெருசால்லாம் வேணாம்..”

“இப்ப பார்த்தேன்னா.. அங்க கொஞ்சம்  இடம் இருக்குன்னு வச்சுக்கோ.. தாந்தான் அதை  பார்க்கணும்னு எல்லாரும் அதை வச்சுக்க விரும்புவாங்க. அக்கம்  பக்கத்து வீட்டு ஆளுங்களைக் கூட பார்க்க விரும்ப மாட்டாங்க. தனக்குன்னு கேட்பாங்க அதான விஷயம்..”

“ம்ம்.. சரி .. ஆமாம்.. தனிப்பட்ட ஒண்ணாத்தான் இருக்கணும்னு விரும்பறேன்..”

“சரி.. அப்ப ஒரு பென்சில் கொண்டுவா.. நாம இதை எப்படி செய்யலாம்னு யோசிப்போம்..”

அங்கே பார்ப்பதற்கு என்ன இருக்க வேண்டும் என்பதிலிருந்து  நாங்கள் துவங்கினோம். அதை  வரையறுப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஏனெனில் நீங்கள் ஒன்றைப்  பார்க்கும்போது அந்த ஒன்றே  ஒன்றை மட்டுமே பார்க்க இயல்வதை  நீங்கள் விரும்புவதில்லை. நீங்கள் உங்கள் பார்வையை மாற்றிக் கொண்டே இருக்க விரும்புகிறீர்கள். குறைந்த பட்சம் மூன்று அல்லது நான்கு விஷயங்களை நீங்கள் காண வேண்டியிருக்கிறது. அதுதான் பிரச்சனை. பில் கால்ஃபீல்ட் அந்தப் பிரச்சனையை தீர்த்து வைத்தான். அவன் என்னிடம் ஒரு பெட்டியைக் காண்பித்தான். நான் அதை திறந்து பார்த்தேன். அது ஒரு கலைத்து அடுக்கும் துண்டுகள் கொண்ட  ஜிக்ஸா புதிரும் உள்ளே ஒரு மோனாலிஸா சித்திரமும் இருந்தது

“இங்க பாரு..” என்றவன் தொடர்ந்து,” ஒவ்வொரு துண்டு நிலமும் இந்த புதிர்ல  இருக்கிற ஒவ்வொரு துண்டுன்னு வச்சுக்கிட்டா, வீட்டுக்கு வெளிய மரங்கள் வரும் வரிசைங்கிறது இந்த ஒவ்வொரு  துண்டோட வெளிமுனைகள்தான்.. சரியா.. அதுதான் விஷயம்.  நம்ம பண்ண வேண்டியது இதுதான்..”

“சரிதான்.. அப்ப எல்லாரும் காரை எங்க நிப்பாட்டுவாங்க..”

“எல்லாம் கீழ்தளத்துல வரும் வண்டி நிறுத்தும் இடத்துலதான்..” என்றான்

“ஓகே.. ஆனா ஒவ்வொரு வீட்டு ஆளுங்களும்  தன்னோட வீட்டுக்கு எப்படிப் போவாங்க..”

“ரெண்டு வரிசையா இருக்கும் மரத்துக்கு நடுவுல உள்ள அழகான பாதையில தான். மரம் அங்க  நிழல் கொடுக்கும். முடிஞ்சா பாதையோரத்துல அழகழகான பிகோனியா செடிகள் கூட வைக்கலாம்”

“திருடனும் ரேப் பண்றவனும் பதுக்கியிருக்க எதுவா..” என்று நான் சுட்டிக்காட்டினேன்

“அதுக்கெல்லாம் வாய்ப்பு இல்லை” என்றான் கால்ஃபீல்ட். ” நீங்க மொத்த நகரத்தையும் வாங்கிடீங்க.. அப்படிப்பட்ட ஆளுங்க எல்லாம் இங்க திரிய நீங்க அனுமதிக்க மாட்டீங்க..”

ஆம். அது சரிதான். நான் மொத்த நகரத்தையும் வாங்கியிருக்கிறேன். அதை என்னால் செய்ய முடியும்தான். இதை நான்  மறந்துவிட்டேன்.

“சரி.. நல்லது, என்ன ஒண்ணு.. இது கொஞ்சம் கற்பனை கொண்டு யோசிச்சு  செய்ய வேண்டியதா இருக்கு.. அதுதான் எனக்குப் பிடிக்கலை.. ஆனாலும் நாம இதை முயற்சித்துதான் பார்ப்போமே.. ” என்றேன் இறுதியாக

நாங்கள் அவ்வாறே செய்தோம். அது ஒன்றும் அவ்வளவு அதிருப்தி அளிக்கக் கூடியதாகவும் இல்லை. ஆனால்  ஒரு புகார் இருந்தது. ஏ.ஜீ .பார்டீ  என்பவர் என்னைப்  பார்க்க வந்தார்

“நான் சொல்றதைக் கேளுங்க…” என்றார். அவர் கண்கள் பளபளத்தனவா அல்லது சுட்டெரித்தனவா என்பதை அந்த மேகமூட்டமாக நாளில் என்னால் சரியாக கவனிக்க இயலவில்லை. ஆனால் அவர் சொன்னது இதுதான். ” நான் இந்த மிகப்பெரிய கேனத்தனமான ஜிக்ஸா  புதிருக்குள்ள வாழ்கிற மாதிரியே இருக்கு”

அவர் சொன்னது சரிதான். மேலிருந்து  பார்த்தால்  மிகவும்  பெரிதாக உருவாக்கிய ஒரு  மோனலிசா படத்திற்குள் அவர்  வாழ்வது போலத்தான் இருக்கும். ஆனால் அதை  அவரிடம் சொல்லாமல் இருப்பதுதான் சிறந்ததென்று எனக்கும் தோன்றியது. எனவே நாங்கள் அவரது இடத்தை 60X100 அடி என்கிற அனுமதிக்கப்பட்ட அளவிற்குள்  சதுரமாக்கிக் கொள்ள நாங்கள் அனுமதித்தோம்.  அவரைத் தொடர்ந்து அவ்வாறே இன்னும் சிலரும் செய்து கொண்டனர். அதில் சிலர் செவ்வகமாகவும் ஆக்கிக் கொண்டனர் என்று நான் அனுமானிக்கிறேன். அது அந்தக் குடியிருப்பின் கருத்தாக்கத்தை இன்னும் செம்மை படுத்தியது என்றுதான் நான் சொல்லவேண்டும். ஓக்  மர நிழலில் ( அதிகம் கற்பனை தேவைப்படுவதால் இதன் வளர்ச்சி குறித்து  சொல்ல ஏதும் இல்லை)   எப்பொழுதாவது  ஒரு  செவ்வகத்தை  நீங்கள் கடக்கும்போது அது உங்களை வியப்பிலாழ்த்தும். அது சிறந்த ஒன்றாகவும் இருக்கும்

நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன்

எனக்கு ஒரு நகர்  உண்டு;

அதற்கு நிறைந்த அழகுண்டு ;

இதுநாள் வரை நான் என்னுடைய இந்த சொத்துரிமையை ஏதும் உபயோகமில்லாமல் தான்  கையாண்டிருக்கிறேன். நான் போதுமான அளவு அனுபவித்து வாழ்கிறேனா என்று என்னை நானே தந்திரமாக கேட்டுக் கொண்டேன் ( மேலும் நான் என்னுடைய செல்வத்திலிருந்து பாதிக்கும் மேல் இதற்காக செலுத்தியுள்ளேன்). எனவே நான் வெளியே வந்து அங்கே தெருக்களில் இருந்த ஆறாயிரம் நாய்களைச் சுட்டுக் கொன்றேன். இது எனக்கு பெரும் மனநிறைவை அளித்தது. மேலும் இது எந்தளவு சிறப்பாக நகரத்தை முன்னேற்றியது என்பதை உங்களால்  எண்ணிப் பார்க்கவியலாது. அதன்பிறகு நாய்களின் எண்ணிக்கை 165000  ஆக குறைந்தது. அதற்கிணையான மக்கள் தொகை கிட்டத்தட்ட  89000 வரை இருந்தது. அதன்பின்னர் அங்கிருந்து நேராக ‘கால்வெஸ்டன் செய்திகள்’ என்னும் காலை நாளிதழ் அலுவலகத்திற்குச் சென்று, எனக்குக்  கண்டனம் தெரிவிக்கும் ஒரு தலையங்கத்தை நானே எழுதிக் கொடுத்தேன். அதில், நல்லவரான கடவுள் இதுவரை புவியில்  படைத்தவற்றிலேயே  ஒரு இழிவான பிறவியாக என்னை சித்தரித்தேன். நிறம் மதம் என்கிற பாகுபாடு ஏதும் இல்லாத இந்த அமெரிக்கச் சுதந்திர தேசத்தின் மென்மையான இந்த சமூகத்தில் வாழும் நாம், இந்த ஒரு மனிதனைக் கண்டு வெறுமனே அமர்ந்திருக்கத்தான் போகிறோமா? இந்த ஜந்துவை மனிதன் என்று அழைப்பதும் தகுமோ.. என்றெல்லாம் எழுதி அதை நகர்ப் பிரிவில்   அளித்தேன். இது முதற்பக்கத்தில் பதினான்கு அளவை கொண்ட பெட்டிச் செய்தியாக வரவேண்டும் என்பதையும் கூறினேன். இதை அவர்கள் செய்யத் தயங்குவார்களோ என்று எண்ணித்தான் அதை நானே முன்வந்து செய்து கொடுத்தேன். மேலும் நான் ஆர்சன் வில்ஸ் -னுடைய திரைப்படத்தையும் பார்த்திருந்தேன். அந்தப் படத்தில்  அவன் தன் மனைவியின் கொடூரமான பாடலைபற்றி ஒரு மோசமான  பதிவை  எழுதுவான்.  எப்படிப் பார்த்தாலும் அது அவனது ஒரு நாகரீகமான செயல் என்றும் நான் கருதினேன்.

நான் சுட்டுக்கொன்ற ஒரு நாயின் சொந்தக்காரர் என்னைப்  பார்க்க வந்தார்

“நீ புட்ச்சைக் கொன்று விட்டாய் ” என்றார்

“புட்ச்சா? அந்த கும்பல்ல  புட்ச் ங்கிறது எதனுடைய பெயர்?”

“ஒரு காது வெள்ளையாகவும் ஒரு காது பழுப்பு நிறமாகவும் இருக்கும். ரொம்ப பாசமா இருந்தது”

“மிஸ்டர்.. நான் சுட்டுத் தள்ளினது மொத்தம் ஆறாயிரம் நாய்களை.. அதில் புட்ச்சையெல்லாம்  நான் ஞபக்கத்துல வைத்திருக்க வேண்டுமா?”

“எனக்கும் நான்சிக்கும் எல்லாமுமாக இருந்தது அந்த புட்ச்தான். எங்களுக்கு   வேறு குழந்தைகள் ஏதும்  இல்லை..”

“சரி.. அதற்கு என் அனுதாபங்கள்.. ஆனால் நான் இந்த நகரத்தின் சொந்தக்காரன்..” என்றேன்

“தெரியும்”

“முழு உரிமையாளனும் நான்தான். இங்கே நான் வைத்ததுதான் சட்டம்”

“அவர்கள் சொன்னார்கள்” என்றார் அவர்

” புட்ச் க்காக வருந்துகிறேன்.. அவன் ஒரு பெரிய செயல்திட்டத்தில்  வந்து   மாட்டிக் கொண்டவன்.  நீங்கள் அவனுக்கு கழுத்துல  ஒரு பட்டை  போட்டிருந்திருக்கலாமே..”

” ஆம் போட்டிருந்திருக்கலாம். நான் அதையும் மறுக்கப் போவதில்லை ”

‘நீங்கள் அவனை வீட்டிற்குள் வைத்திருக்க வேண்டும்..”

“அவன் ஒரு பாவப்பட்ட ஜீவன்.. அவனுக்கும் கொஞ்சம் வெளிய போகணும்னு இருக்கும்”

“போய் வீதியில் அசிங்கம் பண்ணி வைப்பது.. அதுதானே ?”

“சரி அது ஒரு பிரச்சனைதான். நான் என்னுடைய உணர்ச்சிகளைச்  சொல்லத்தான் வந்தேன்”

“அதை நீங்கள் சொல்லவில்லையே.. சரி இப்பொழுதாவது சொல்லுங்கள். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள்?’

“எனக்கு உன் மண்டையை உடைக்கணும் போல இருக்கு..” அவர் தன் கையோடு கொண்டுவந்திருந்த சின்ன பைப்பையும் காண்பித்தார்

“பண்ணலாம்தான்.. ஆனால்  அதற்கான பின்விளைவுகளை நீங்கள் உங்கள்  புட்டங்கள் வழியாகவே  சந்திக்க வேண்டியிருக்கும்..”

“எனக்குப் புரிகிறது  ”

“இது உங்களுக்கு ஆசுவாசமாக வேணுமானால் இருக்கலாம் ஆனால் இங்கே இருக்கும் சிறை, நீதிபதி, காவல்துறை, அப்புறம் இங்க இருக்கும் அமெரிக்க குடியுரிமை சங்கம்  அனைவரும் என்னுடைய  கட்டுப்பாட்டில்தான்  இருக்கின்றனர். என்னால் உங்களை சட்டத்தின் வாயிலாகவே நசுக்க முடியும்”

“நீங்கள் அப்படி ஏதும் செய்ய மாட்டீர்கள் ”

“நான் எந்த எல்லைக்கும் போவேன்”

“நீ ஒரு இரக்கமில்லாத கல்நெஞ்சக்காரன். ” என்கிறார் அவர்.. ” நீ நரகத்தின் தீயில்தான்  வெந்து போவாய். கருணையே குளுமையோ எதுவும் ஒரு துளிகூடக் கிடைக்காது உனக்கு.. என்னால் இதை நன்கு அனுமானிக்க முடிகிறது ”

இந்த விளக்கத்துடன் அவர் மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றார். அவர் மனதில் ஒரு கல்நெஞ்சக்காரனாகவே நான் இருப்பதில் எனக்கும் மகிழ்ச்சிதான். அந்த இரும்பு பைப்பை விடவும் இவ்வாறு எங்கள் பிரச்சனை முடிவுக்கு வருவதே நல்லது. மேலும்  நான் அடுத்த ஆறாயிரம் நாய்களுக்கான ஆட்டத்தையும் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆகவே, நான் கொண்ட இந்நகர், மிக மிக அழகான நகர். ஆனால் லூசியானாவின் முன்னாள் கவர்னரான மறைந்த ஹூய் பி. லாங்கைப் போல  புதிய கண்டுபிடிப்புகளைப் பற்றி என்னால் ஏதும் யோசிக்க முடியவில்லை. விஷயம் என்னவென்றால், நான் சாம் ஹாங்கின் மனைவியிடம் காதலில் விழுந்துவிட்டேன்.  அவர்கள் ட்ரெமொன்ட் தெருவில் உள்ள  கடையில் கிழக்கத்தியப்  புதுமைகள், காகித லாண்டேர்ன் விளக்குகள், மலிவான சீன மூங்கில் பறவைக் கூண்டுகள்,  மூங்கில் முக்காலிகள்  மற்றும் அந்த வகையான எல்லாவற்றையும் விற்றார்கள். நான்  அந்தக் கடையிலேயே அலைந்து திரிந்தேன். அவள் என்னை விடச்  சிறியவள். இதற்கு முன்பு அத்தகைய நற்பண்புகள் கொண்டிருந்த ஒரு பெண் முகத்தை ஒரு  நான் பார்த்ததே  இல்லை என்றே எனக்குத் தோன்றியது. அது நம்ப முடியாத அளவிற்கு உண்மையாகவும் இருந்தது.  நான் பார்த்த மிகச் சிறந்த முகம் அது.

“என்னால் முடியாது.. நான் ஏற்கனவே சாமை மனம் செய்து கொண்டேன்..” என்றாள்  அவள்

“சாம் ?”

அவள் கல்லாவைச் சுட்டிக் காட்டினாள். அங்கு ஒரு  அறிவார்ந்த  இளம் சைனீஸ் இளைஞனாக பார்வைக்கு தெரிந்த  அவன், அந்த அறிவார்ந்த பார்வையுடனே என்னை நோக்கிக் கொண்டிருந்தான். ஒரு நட்பின்மையும்  அதில் போதுமான அளவு கலந்திருந்தது

‘ அது ஒரு வருத்தமான செய்திதான்’ என்றேன்..’ நீ சொல்லு உனக்கு என்னைப் பிடித்திருக்கிறதா?’

“ஓரளவு பிடித்திருக்கிறது.” என்றாள் அவள். ‘ஆனால் சாம் மிகவும் கனிவானவர். புத்திசாலியும் கூட. எங்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கவிருக்கும் இன்னொரு குழந்தையும் கூட இருக்கின்றனர்..”

அவளைப் பார்த்தால் கர்ப்பவதியாக தெரியவில்லை. இருந்தாலும் நான் அவளுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். அதன்பின் தெருவில் இறங்கி நடந்தேன். எதிர்ப்பட்ட ஒரு போலீஸ்காரரை அழைத்து அவரை ‘எச்’ ஸ்ட்ரீட்டிற்கு அனுப்பினேன். அங்கிருந்து ஒரு பக்கெட்  கர்னல் சாண்டர்ஸின் கென்டக்கி ஃப்ரைட் சிக்கனை கூடுதல் முறுவலாக வேண்டும் என்று சொல்லி வாங்கி வரச்சொன்னேன். நான் சும்மா  ஏதும் உள்நோக்கம் இல்லாமல்தான்   சொன்னேன்.  அவர் சற்று அவமானமாக உணர்ந்தாலும் அவருக்கு வேறு வழி இல்லைதான். அப்பொழுது எனக்கு இவ்வாறு தோன்றியது,

எனக்கு சொந்தமாக ஒரு நகர் உண்டு;

அதற்கு பரிதாபம் கொண்ட  அழகுண்டு; 

மக்களுக்கு உதவிகளை அளிக்க முடியாது;

உதைகளை  தாராளமாய்  அளிக்கலாம்;

அவர்களின் நாய்களை சுட்டு வீழ்த்து; 

அவர்களை நன்றாக குழப்பியடி;

கற்பனையில் திளைத்திரு;

மரங்களை நடு;

அவர்களை தனியாக விட்டுவிடுவதா  சிறந்தது?

யாரிதை  முடிவு செய்கிறார்கள்?

துராசை நல்லது அல்ல;

சாமின் மனைவி சாமின் மனைவி தான்.

ஆகவே,  கூடுதல் முறுவலான கர்னல் சாண்டர்ஸின் கென்டக்கி ஃப்ரைட் சிக்கனை உண்டு முடித்துவிட்டு டெக்சாஸில் இருக்கும் அந்த சிறிய நகரமான கெல்வெஸ்டனை நான் ஆர்வமிருப்பவர்களிடம் விற்று விட்டேன். அதில் எனக்கு நஷ்டம்தான் என்றாலும் அதில் ஒரு புத்திக்கொள்முதலும்  எனக்கு உண்டாயிற்று. ‘கடவுளாக எண்ணி ஆடாதே!’  என்பதுதான் அது. நிறைய பேர் ஏற்கனவே அறிந்திருந்த ஒன்றுதான்,   என்னை விட நிறைய பேர் புத்திசாலிகள் என்பதிலும், ஒரு விஷயத்தை விரைவாகக் கண்டறிவதில்  அவர்களின் பக்கம் சாதகமான புள்ளிவிவரங்களும்  அதற்கான அருளும்  உள்ளன என்பதிலும்  நான் ஒரு நிமிடம் கூட சந்தேகம் கொள்ளவில்லை.  உண்மையில் நான்  கற்பனையில் ஆழ்ந்து விடக்கூடாது என்றுதான் கவனமாக இருந்தேன்.  ஆனால் இறுதியில்   நான் மிகவும் கற்பனையில்தான்  மிதந்து விட்டேன். அதுதான் தவறாகி விட்டது.  நான் மிகவும் கட்டுப்படுத்திக் கொண்டு, மிகக் குறைவாகவே செயலாற்றினேன்.  அந்த முழு நகரத்திலும் நான் செய்ததை விடவும் மோசமான காரியங்களைத்தான் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு குடும்பத்திலும் கடவுள் செய்து வருகிறார். ஆனால் அவர் என்னை விட சிறந்த கற்பனை வளம் கொண்டவராக இருக்கிறார்.  உதாரணமாக, நான் இன்னும் சாம் ஹாங்கின் மனைவியை விரும்புகிறேன். அதுவே மனவேதனை அளிக்கிறது. இருந்தாலும் சாம் ஹாங்கின் மனைவி மீது உள்ள துராசை நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. இது ஒரு பல் பிடுங்கப் படுவதைப்  போன்றது. அதாவது ஒரு வருடம் முழுவதும் ஒரே பல்லைப் பிடுங்கிக் கொண்டிருப்பது போல. இதுவே அது அவருடைய கற்பனை சக்திக்கான  ஒரு உதாரணம். இது பெரும் சக்தி  வாய்ந்ததாக இருக்கிறது.

அதனால் என்னதான் நடந்தது? நடந்தது என்னவென்றால், நான் எனது செல்வத்தின் மற்றொரு  பாதியை எடுத்துக்கொண்டு டெக்சாஸின் கலேனா பார்க் பகுதிக்குச்  சென்று அங்கு ஏனோதானோவென்று வாழ்ந்து வந்தேன்.  அங்கே அவர்கள் என்னை பள்ளிக் கல்வி நிறுவனத்திற்காக போட்டியிடச் சொன்னபோது, எனக்குக் குழந்தைகள் இல்லை என்று சொல்லிவிட்டேன்.

டொனால்ட் பார்தெல்ம் 

தமிழில்: காளிப்ரஸாத்


டொனால்ட் பார்தெல்ம் (ஏப்ரல் 7, 1931 – ஜூலை 23, 1989) ஒரு அமெரிக்க சிறுகதை எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியர் ஆவார். தனது சுவாரசியமான, பின்நவீனத்துவ பாணி எழுத்துக்களுக்காக மிகவும் கவனிக்கப் பட்டவர். தன் மாணவப் பருவம் முதலே எழுதி வந்த இவர், நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், நான்கு நாவல்களும் மேலும் பலவகை அபுனைவுகளும் எழுதியுள்ளார். மரபான எழுத்து நடையை மீறிச் செல்வதும், கேள்விக்கு உள்ளாக்குவதும், பகடி செய்வதும் இவர் புனைவுகளின் இயல்பாக இருந்தன. ஒரு நவீனத்துவ எழுத்தாளருக்கான இயல்புகளாக இருந்தாலும் அவரது அடிப்படை ஐயமும் முரண்களும் அவரை நவீனத்துவத்தின் நம்பிக்கைகளிலிருந்தும் விலக்கியே வைத்தன. இன்றைய இலக்கிய விமர்சகர்கள் அவரை பின்நவீனத்துவவாதியாகவே வகைப் படுத்தியுள்ளனர்.

டொனால்ட் பார்தெல்ம் பல ஊடகங்களில் நிருபராகவும் ஆசிரியராகவும் பணியாற்றியவர். “Contemporary Arts Museum Houston” ன் இயக்குநராகவும் (1961-1962), “Fiction” என்னும் அமெரிக்க இலக்கிய இதழின் நிறுவனர்களில் ஒருவராகவும், மேலும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகவும் விளங்கினார். அவரது சகோதரர்களான ஃபிரடெரிக் பார்தெல்ம் மற்றும் ஸ்டீவன் பார்தெல்ம் ஆகியோரும் நன்கு அறியப்பட்ட புனைகதை எழுத்தாளர்கள் ஆவர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.