“பத்து அமெரிக்கப் பெண் எழுத்தாளர்கள்”

மெரிக்க இலக்கியத்தைப் பற்றிப் பேசுமுன், Beecher சகோதரிகள் (பெண்கல்வி, அடிமை ஒழிப்பு குறித்து போராடியவர்கள்) Margaret Fuller (அமெரிக்காவின் முதல் பெண் போர்க்கள நிருபர்) Elizabeth Cady Standon (எழுத்தாளர், முதல் பெண்கள் சமஉரிமை மாநாடு நடத்தக் காரணமானவர்) போன்ற பல பெண்கள் பெயரை மட்டுமாவது சொல்லியாக வேண்டும். 1800-களின் ஆரம்பத்தில் பிறந்த பெண்கள் இவர்கள். பெண்கள் படித்திருந்தாலும் அலுவலகத்தில் எடுபிடி வேலைகள் செய்து கொண்டிருந்த காலம் அது. மத்தியவர்க்க வெள்ளையினப் பெண்கள் பலரும் கல்வி கற்கும் சூழல் இருந்ததால், படித்து முடித்தபின் அவர்களுக்கு வீட்டில் அடையப் பிடிக்கவில்லை, ஆனால் தகுதியான வேலைவாய்ப்புகள் பெண்களுக்கு குறைவாகவே கிடைத்தன.

பதிப்பகங்கள் படுவேக வளர்ச்சி கண்ட சூழ்நிலையில் படித்த பெண்களுக்கு எழுத்தாளராவதென்பது ஒரு கௌரவமான வாய்ப்பாகக் கருதப்பட்டது. இப்படி எழுத ஆரம்பித்த பெண் எழுத்தாளர்கள், தங்களுடைய முதல் இடத்தை இரண்டு நூற்றாண்டுகள் கடந்தும் விடவேயில்லை. அமெரிக்காவில் எழுதுவதும், வாசிப்பதும் அதிக அளவில் பெண்களே. வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவு இலக்கியத்தின் எல்லா வகைமையிலும் பெண்களின் ஆக்கிரமிப்பே இப்போதும், எப்போதும் அதிகம்.

அமெரிக்க இலக்கியத்தை சமுத்திரத்துடன் மட்டுமே ஒப்பிடமுடியும். Oral Tales-ல் இருந்து, Native American Literature, African American Literature என்பது மட்டுமல்லாமல், குடிபுகுந்தோர் படைக்கும் இலக்கியம், Asian-American Literature, Arab-American Literature, Anglo-American Literature என்று ஏராளமான பிரிவுகள்.  அமெரிக்க இலக்கியம் பதினேழாம் நூற்றாண்டில் இருந்தே எப்போதும் நவீனத்தன்மையைத் தக்கவைத்துக் கொண்டது. அதிலும் எத்தனைவிதமான எழுத்துகள், Poe மற்றும் Melville-ல் இருந்து Fitzgerald மற்றும் Proud வரை, Wallace and Stevens-ல் இருந்து Gwendolyn Brooks and Thomas Pynchon வரை என்று எத்தனைவிதமான எழுத்துகள்! ஒரு குறிப்பிட்ட Genre-ஐ மட்டும் எடுத்துக்கொண்டாலேயே நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் இருக்கும் அமெரிக்க இலக்கியத்தில், இந்தக் கட்டுரைக்காக குறிப்பிட்ட சில contemporary பெண் எழுத்தாளர்களை மட்டும் எடுத்துக் கொள்வோம். பத்துக்கு மேல் போகக்கூடாது, இருபதாம் நூற்றாண்டில் இருந்து மட்டும் என்று கட்டுப்படுத்திக் கொள்கையில் கூட Joyce Carol Oates, Edith Wharton, Anne Tylor போன்ற பல முக்கியமான எழுத்தாளர்கள் விடுபடுவது அமெரிக்க இலக்கியத்தின் பரந்த வீச்சுக்கு சான்றாகும்.

1,Harper Lee (1926-2016):  

Harper lee

ஒரே ஒரு புத்தகம் மூலம் உலகத்தின் சிறந்த நாவல்கள் வரிசையில் இடம்பெற்ற வெகுசில எழுத்தாளர்களில் ஒருவர் Lee. இவரது மரணத்திற்கு சற்றுமுன் வந்த இரண்டாவது நாவல் Go and set a watchman முதல்நாவலின் Spoiler எனவே அதை விட்டுவிடலாம்.  1960-ல் அமெரிக்கா வியட்நாம் அவமானத்தைச் சந்திக்குமுன் எழுதப்பட்ட நாவல் இது. மோசமான வார்த்தைப் பிரயோகங்கள், பாலியல் உறவு வர்ணனைகள், அமைப்பிற்கு எதிரான கருத்துகள் என்று எல்லா மீறல்களையும் செய்த நாவல். பள்ளியில் பாடமாக வைத்ததற்கான பெற்றோர் எதிர்ப்புக்கு அமெரிக்க அரசாங்கம் சொன்ன பதில் “மகத்தான நாவல்கள், மகத்தான உண்மைகளைக் கொண்டிருக்கும், மாஸ்டர்பீஸ்கள் வார்த்தைப் பிரயோகங்களாலோ அல்லது மீறல்களாலோ ஒதுக்கப்பட வேண்டியவையல்ல”. மனிதாபிமானம், நிறவெறியை அழுத்தமாக பதிவு செய்த நூல்களில் இதுவும் ஒன்று. வாழ்வில் ஒரே ஒரு நாவலை மட்டும் படிக்கமுடியும் என்றால் அது எது என்ற கேள்விக்கு பலநாட்டினரும் சொன்ன பதில் ‘To Kill a Mockingbird”

 

2.Erica Jong (1942-1989):

Erica Jong

The Fear of Flying பெண்ணிய நாவல்களின் முன்னோடியாகக் கருதப்படுகிறது. அமெரிக்காவில் பெண்கள் எழுச்சி அதிகமாக எழுந்த காலத்தில் வந்த நாவல் இது. 1973-ல் அமெரிக்க உச்ச நீதிமன்றம் கருக்கலைப்பு செய்வதை சட்டபூர்வமாக்கிய அதே 1973-ல் தான் இந்த நாவலும் வெளியானது. எழுபதுகளின் ஆரம்பத்தில் வெளியான இந்த நூல், ஒரு முழுமையான பெண்ணிய நாவல் மட்டுமல்ல, பெண்கள் எதைப்பற்றி எழுதலாம், அதை எப்படி சொல்லலாம் என்ற பெண் எழுத்து மற்றும் ஆண்எழுத்துக்கிடையேயான கோட்டை அழித்துவிட்டது. இந்த நாவலில் நான் என்னைக் கண்டேன், என் விவாகரத்து முடிவுக்கு இந்த நாவல் உதவியது என்பது போல் பின்னர் ஏராளமான பெண்கள் கூறியிருக்கிறார்கள். நவீனயதார்த்தத்தில் ஒரு பெண்ணின் பேன்டஸி இந்த நாவல் என்று பத்திரிகைகள் விமர்சித்தன. திருமணபந்தத்தில் துணையுடன் செய்யும் கலவி போல் போரடிக்கும் சமாச்சாரம் வேறில்லை, கலவி வேறு நபர்களுடன் செய்கையில் தான் சுவாரசியம் என்பாள் இந்த நாவலின் நாயகி. Fear of Flying ஆரம்பித்துப்பின் பல நாவல்கள் எழுதிய இவரது கடைசி நாவல் Fear of Dying. கவிதைத்தொகுப்புகள், அல்புனைவுகள், நாவல்கள் என சுவாரசியமான இலக்கியப் பயணம் Erica-வின் எழுத்து.

3,Alice Walker:

Alice Walker

Alice Walker-ன் The Colour Purple தமிழில் பரவலாக வாசிக்கப்பட்டது போலவே உலகமெங்கும் வாசிக்கப்பட்ட நாவல். அவருடைய மற்றுமொரு சிறந்த, இங்கே அதிகம் படிக்கப்படாத நாவல் Meridian. Meridian, அவள் வாழ்க்கையில் புயல் வீசும் போதில் கடவுளின் குரலைக் கேட்கிறாள். The Colour Purple பெரும்பகுதி கடவுளுக்கு எழுதும் கடிதங்கள். கறுப்பினப் பெண்எழுத்தாளர் என்ற காரணத்தினால் அதிகம் வாசிக்கப்படாமல் இருந்த இவருக்கு ஒரே வருடத்தில் கிடைத்த புலிட்சர் மற்றும் National Book award இரண்டும் பரவலான கவனத்தைப் பெற்றுத் தந்தன. அதன் பிறகு இவர் உலகமெங்கும் அதிகம் வாசிக்கப்படும் எழுத்தாளர்களில் ஒருவராகி விட்டார். கறுப்பர்கள் ஒடுக்கப்படுவது, பெண்ணியம், கடவுள் இந்த மூன்றும் Walker-ன் படைப்புகளில் விரவி இருக்கும். இவர் இந்த நூற்றாண்டில் அமெரிக்க இலக்கியத்தில் பல நல்ல சிறுகதைகளை எழுதியிருக்கிறார்.

ஆனால் சராசரிக்குக் கீழான பல சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். சிறுகதைகளைப் பொறுத்தவரை நாவல்களில் இவருக்கு இருக்கும் Consistency இல்லை என்றே சொல்வேன். இவரது பெண்ணியக் கருத்துகள் In search of Mother’s Garden போல பல கட்டுரைகளில் வந்திருக்கின்றன. ஒருமுறை இவர் கூறியது “நான் கறுப்பினத்தவராக, நான் பெண்ணாக, ஏழ்மையான சூழலில் வளர்ந்ததால், நான் தெற்குப்பகுதியில் பிறந்ததால், நான் உலகைப் பார்க்கும் பார்வை மற்றவர்கள் பார்க்கும் பார்வையில் இருந்து பெரிதும் வேறுபட்டது.” Alice Walker-ஐ படிப்பவர்கள் இதை முற்றிலும் உண்மை என ஒப்புக் கொள்வார்கள்.

4,Toni Morrison:

Tony Morrison

நோபல் பரிசு பெற்ற இவரது Masterpiece ‘Beloved’ நாவல். இவருடைய முதல் நாவல் Bluest Eye 1970-ல் அமெரிக்க நடுத்தரவர்க்கப் பெண்களின் எழுச்சி ஏற்பட்ட காலத்தில் வெளிவருகிறது. அவர்கள் தங்கள் கறுப்பின ஏழை சகோதரிகளின் பிரச்சனைகள் குறித்தும் புரிந்து கொள்ள முயன்ற காலமது. Bluest Eye நாவல் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள், நிறப்பாகுபாடு, அடையாளத்தை தொலைத்து நிற்பது, அவமானம், ஏழையாய் இருப்பதன் இன்னல்கள் முதலியவற்றைப் பேசும் நாவல். Bluest Eye, Sula இரண்டுமே கறுப்பினப் பெண் குழந்தையாக இருப்பதில் இருந்து பெண்ணாக மாறும்வரை சந்திக்கும் வாழ்வியல் அனுபவங்கள். Song of Solomon ஆப்பிரிக்காவின் நாட்டுப்புறக் கதைகளின் நீட்சி. Beloved ஆழ்மனதில் இருந்து அகழ்வாராய்ச்சி செய்து எடுத்த நினைவுகள்.  இந்த நாவலில் இருக்கும் மொழிநடை இந்த நூற்றாண்டின் வெகுசிறந்த மொழிநடைகளில் ஒன்று.  Toni Morrison-ன் நாவல்கள் ஏற்படுத்திய தாக்கத்தை அவரது சிறுகதைகள் ஏற்படுத்தியதாக யாரும் சொன்னதில்லை. விரல் விட்டு எண்ணும் சிறுகதைகளே நான் படித்திருக்கிறேன். கவிதைகள், நாடகம், இலக்கிய விமர்சனம் போன்றவற்றிலும் இவருடைய முயற்சிகளை செய்திருக்கிறார். பிறரது பல நூல்களைத் தொகுத்தும் இருக்கிறார். எட்டு நாவல்களே தன்னுடைய ஐம்பதுவருட இலக்கிய வாழ்க்கையில் எழுதியிருக்கிறார். African – American இலக்கியத்தைப் பேசுபவர்கள் எவ்வளவு காலம் ஆனாலும் Toni Morrison-ஐ விட்டுவிட்டுப் பேசமுடியாது என்பது புதிதாகப் பூசிய சிமெண்ட் தரையில் பதிந்த பாதச்சுவடுகள் போல் இவர் அழுத்தமாக விட்டுச் செல்லும் இலக்கியத்தடம்.

5,Marilynne Robinson:

Marilynne Robinson

Introverted and bookish child ஆக வளர்ந்த Robinson னது ஒன்பதாவது வயதில் Moby Dick-ஐ படிக்க முயற்சித்தார். இவரது எழுத்து பள்ளிச்சிறுமியாக கவிதைகளில் ஆரம்பித்தது. எழுத்தாளர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு, ஆங்கிலத்தை பட்டப்படிப்பாக பின்னர் முனைவர் படிப்பாக முடித்த பின்னரே இவரது முதல் நாவல் Housekeeping-ஐ எழுதினார். இவர் தனது முதல் நாவலில் பெரிதாக நம்பிக்கை வைத்திராத போதும் அது வெற்றிகரமான நாவலாகிறது பின்னர் திரைப்படமாகிறது. 1980-ல் முதல் நாவல் வெளியிட்ட இவர் இரண்டாவது நாவலை வெளியிட 24 வருடங்கள் ஆகிறது. இதுவரை ஐந்து நாவல்களே எழுதியுள்ளார். இவருடைய கட்டுரைகள், குறிப்பாக The Death of Adam இவருடைய இலக்கிய அந்தஸ்தை உயரக் கொண்டு சென்றன. பெரும்பான்மையான அமெரிக்க எழுத்தாளர்கள் outmoded என்று ஒதுக்கிய அமெரிக்க கலாச்சாரத்தை தனது படைப்புகளில் கொண்டு வந்ததால் Robinson தனித்து நிற்கிறார். அமெரிக்க ஜனநாயகம்,

காஸ்மோபாலிட்டன்னில் இருந்து விலகிய பிராந்தியம், Protestant நம்பிக்கைகள், சமூகநீதி இவற்றையே அமெரிக்கக் கலாச்சாரமாக நம்பியவர். கல்லூரி விரிவுரையாளராக மட்டுமில்லாமல் IOWA’s writer workshop-ல் பல புதிய எழுத்தாளர்களுடன் முரண்பட்டு, விவாதம் செய்து, புதியவகை இலக்கியத்தை என்னுள் ஊக்குவித்த இன்றியமையாத சக்தி அவர் என பின்னாளில் பல எழுத்தாளர்கள் சொல்லும் ஆளுமை இவர். நாவலில் மட்டுமன்றி, தனது அல்புனைவுகள் மற்றும் பயிற்சிப்பாசறை மூலம் அமெரிக்காவின் எதிர்கால இலக்கியத்தில் பாதிப்பு ஏற்படுத்திய சக்தி Robinson.

6,Maya Angelo:

Maya Angelo

Maya Angelo-வின் ஆறு சுயசரிதைத் தொகுப்புகள் அந்தப்பெரிய ஆளுமையைத் தெரிந்து கொள்ள உதவுபவை. ஒவ்வொன்றிலும் Theme ஒன்றாக இருந்தாலும் நடையிலும், சொல்லும் விதத்திலும் மாறுபடுபவை. இவருடைய மூன்று வயதிலிருந்து பதினாறு வயதுவரையான நிகழ்வுகளைச் சொல்லும் முதல் நூல் I Know Why The Caged Bird Sings இவருடைய Masterpiece ஆகக் கருதப்படுகிறது.  A Song Flung Up To Heaven என்ற 2002-ஆவது வருட நூல் ஆறாவது.

பதினாறாவது வயதில் பக்கத்து வீட்டுப் பையனுடன் தற்செயலான உறவில் குழந்தை பெற்றவர். தன்னுடைய சுயசரிதையில், திருடியதை, போதைக்கு அடிமையாய் இருந்ததை, விபச்சாரியாக இருந்ததை பதிவுசெய்திருக்கிறார். Maya Angelouவை உலகில் பலரும் கவிஞராகவே அடையாளம் காண்கிறார்கள். என்னைப் பொறுத்த வரையில் இவரது கவிதைகளை நான் அதிகம் படிக்கவில்லை, அதனால் இவரை வெகுநேர்மையான சுயசரிதைகள் எழுதியவர் என்ற வகையிலேயே அடையாளம் காண்கிறேன். இவருடைய பிற்கால எழுத்துகளான கற்பனை மகளுக்கு எழுதிய Letter to my daughter மற்றும் Mom and Me இரண்டும் அவர் நெருங்கிப்பழகிய பெண்களின் நினைவுக்குறிப்புகள். பெரிய ஆளுமைகள் மறைந்து விட்டுச்செல்லும் பெரிய வெற்றிடத்தைப் பற்றி அழகாகச் சொல்லும் இவரது கவிதை When Great trees fall, பின்னாளில் இந்தியாவில் ராஜீவ் காந்தியால் மிக மோசமான முறையில் Quote செய்யப்பட்டது. ஒரு வகையில் இந்தக் கவிதை, Maya Angelou-வையும் குறிக்கும், அமெரிக்க இலக்கியத்தில் Vast, empty space-ஐ விட்டு சென்றிருக்கிறார்.  இவரது ஆறு சுயசரிதைகள் மட்டுமாவது வாசகர்கள் தவறாது படிக்கவேண்டியவை.

7,Flannary O Connor:

Flannary O Connor

முப்பத்தொன்பது வயது வரையே வாழ்ந்த, பதினெட்டு வருடங்கள் எழுத்துலக வாழ்க்கையில் இருந்த Connor இரண்டு நாவல்கள், பல கட்டுரைகள் எழுதிய போதிலும், தன் வாழ்நாளில் எழுதிய முப்பத்தி இரண்டு சிறுகதைகள் மூலமே அமெரிக்க இலக்கியத்தில் நீங்காத இடம் பெற்றிருக்கிறார். கத்தோலிக்க கிறித்துவத்தில் பெரும்பற்று கொண்ட Connor-ன் படைப்புகளில் அடிக்கடி அந்தக் கொள்கைகள் இருக்கும். இவருடைய Goodman is hard to find-ல் இயேசு இறந்தவர்களை உயிர்த்தெழவைத்த குறிப்பு வரும். சிறிதும் Sentiment-க்கு இடம் தராத கதை அது. Good country People நவீனத்திற்கு எதிரானது. Everything That Rises Must Converge நிறவெறிக்கு எதிரானது. ஒரு White Southerner-ஆகப் பிறந்து வளர்ந்த Connor, gender, class and race discrimination-ல் நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் வாழ்க்கை நீண்டிருந்தால் மிகக்கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டிருப்பார். ஆனால் பலருக்கு உதவிய Posterity, Connor-க்கும் உதவியது. தன் வாழ்நாளில் படிக்கப்பட்ட வாசகர் எண்ணிக்கையை விட இறந்தபின் அதிக வாசகர்களால் படிக்கப்பட்டார். இன்று நிற பேதமின்றி அமெரிக்காவின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். முப்பத்திஇரண்டு கதைகளே எழுதிய ஒருவர் அமெரிக்க இலக்கியம் போன்ற மிகப்பரந்த வெளியில் இடம்பெறுவது சாதாரண காரியமில்லை. 1971-ல் வெளியான இவரது ‘Complete Stories’ இவரது திறமைக்கு சான்றாக இருந்து கொண்டே இருக்கும்.

8,Donna tartt:

Donna tartt

Donna-வின் நாவல்களுக்குள் புகுவது எப்போதுமே Parallel Universe-க்குள் நுழைவது. பெரும்வாசிப்பு வேட்கை கொண்ட தாய்தந்தைக்குப் பிறந்த Donna ஐந்து வயதில் இருந்தே வாசிப்பு பழக்கத்தை ஆரம்பித்து விட்டார். எட்டு வயதில் கவிதை எழுத ஆரம்பித்த இவரது கவிதை இவரது பதிமூன்றாவது வயதில் பத்திரிகையில் பிரசுரமானது. இவருடைய பதினேழாவது வயதில் Willie Morris-ஆல் இவரது அபார திறமை கண்டுபிடிக்கப்பட்டு, Bennington கலைக்கல்லூரிக்கு மாற்றப்பட்டார். ஆரம்பத்தில் கவிதைகள், சிறுகதைகள் எழுதிய இவர் என்னுடைய கதைகளைச் சொல்லக் குறைந்தது 800 பக்கங்கள் வேண்டியிருக்கும் என்றிருக்கிறார்.  இவருடைய முதல்நாவல் கல்லூரி காம்பஸில் நடக்கும் Whydunnit நாவல். 1990-ல் $4,50,000 என்பது முதல்நாவலுக்கு பெரும்தொகை. ஆனால் பதிப்பகத்தாரே எதிர்பாராவிதமாக அவர்கள் வரலாற்றிலேயே குறுகிய காலத்தில் இரண்டாவது பதிப்பைக் கண்டது. இவரது இரண்டாவது நாவலான Little Friend வெளியிட பத்து வருடங்கள் எடுத்துக் கொண்டார். அடுத்த பத்துவருடங்கள் கழித்து இவரது மூன்றாவதும், தற்போதைக்கு கடைசியுமான Goldfinch வெளியாகிறது. இது மாஸ்டர்பீஸ், இதைப் படிக்காதவர்கள் வாழ்வின் அற்புதமான தருணங்களை இழக்கிறார்கள். 1963-ல் பிறந்த இவர், தன்னுடைய சொந்த வாழ்க்கையை மிக இரகசியமாக வைத்துக் கொள்பவர். Goldfinch 2013-ல் வெளியாகியது. பழைய Pattern -இன் படி 2023 அல்லது 2024-ல் இவரது நான்காவது நாவலுக்காக உலக வாசகர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

9,Sylvia Plath:

Sylvia Plath

Sylvia anglo-american இலக்கியத்தின் தவிர்க்க முடியாத எழுத்தாளர். அவருடைய வாழ்நாளில் The Colossus என்ற கவிதைத் தொகுப்பும், The Bell Jar என்ற நாவலும் மட்டுமே வெளியாகின. இந்த நாவலும் கூட அவருடைய பல கவிதைகள் போலவே Confessional mode-ல் அமைந்தது. Sylvia-வின் Johnny Panic, Bible of dreams, The Shadow போன்ற சிறுகதைகள் இரண்டாம் உலகப்போரின் பாதிப்புகள். சிறுகதைகளில் Sylvia பெரிதாக சாதித்ததாகத் தோன்றவில்லை. தனது முதல்நாவலை அமெரிக்காவில் வெளியிட தாய் மற்றும் கணவனிடமிருந்து வந்த தடைகளால் இவரால் அங்கே வெளியிட முடியவில்லை. Bell Jar இங்கிலாந்தில் மிகச்சாதாரண வரவேற்பையே பெற்றது. தன்னை நாவலாசிரியராக நிர்மாணித்துக்கொள்ள இவர் செய்த முயற்சிகள் இவரது வாழ்க்கை மற்றும் மனநலச் சிக்கல்களால் நிறைவேறாமலேயே போனது. பாதி எழுதிக் கொண்டிருந்த இரண்டாவது நாவலின் பிரதியை இவரே எரியூட்டிவிட்டார். தன்னுடைய வாழ்வின் பெரும்பகுதியில் மனச்சிதைவை அனுபவித்த Sylvia தனக்குத் தானே 1963-ல் விடுதலை அளித்துக் கொண்டார். Bell Jar உண்மையான நான் மற்றும் பொய்யான நான் இருவருக்கும் நடக்கும் துவந்த யுத்தம். சுயசரிதைக் கூறுகள் நிரம்பியது. அடிப்படையில் கவிஞராகிய இவரது அற்புதமான மொழிநடையில் எழுதப்பட்டது. பின்னாளில் நான் கன்னி நாவலைப் படிக்கையில் சம்பந்தமேயில்லாத இரண்டுநாவல்களின், எழுத்தாளர்கள் இடையே இருக்கும் பல ஒற்றுமைகளைக் கண்டு ஆச்சரியம் அடைந்தேன். ஒரே நாவல் மூலம் அமெரிக்க இலக்கியத்தின் சிறந்தநாவல்கள் பட்டியலில் இடம்பெற்ற Sylvia-வின் உச்சபட்ச சாதனை இவரது மரணத்திற்குப்பின் வந்த Ariel என்ற கவிதைத் தொகுப்பு. கவிதை விரும்பிகள் தவறாது படிக்க வேண்டியது.

10,Lydia Davis:

Lydia Davis

வேறெப்போதையும் விட தமிழ் இலக்கியத்தளத்தில் Lydia Davis இப்போது அடிக்கடி Quote செய்யப்படுகிறார். Flash Fiction மாஸ்டர்களில் ஒருவர் Lydia. எழுத்தாளர்களின் எழுத்தாளர். Lydia-வின் அதிகம் வெளியில் தெரியாத முகம் Proust முதற்கொண்டு பிரெஞ்சில் இருந்து ஆங்கிலத்திற்கு இவர் செய்த பல மொழிபெயர்ப்புகள். தன்னுடைய 24-ஆவது வயதில் படித்து அவ்வளவாகப் பிடிக்காத Madame Bovary-ஐ பின்னர் திரும்ப வாசித்து  ஏற்கனவே பதினெட்டு மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்ப்பு செய்திருந்த போதிலும் தானும் செய்திருக்கிறார். Lydia-வின் பல கதைகள் பரிட்சார்த்தமானவை, பொதுவான கதை சொல்லும் பாணியில் இருந்து விலகி இருப்பவை.  Beyond the hand holding this book that I’m reading, I see another hand lying idle and slightly out of focus—my extra hand. என்று இவர் எழுதியதற்கும் இந்தக் கைகள் வெறுந்தோள், முனைத்தொங்கல், தாங்காத உறுத்தல்

வடிவத் தொல்லை என்ற சி.மணியின் கவிதை வரிகளுக்குமுள்ள ஒற்றுமையைப் பாருங்கள். The Collected Stories of Lydia Davis 800 பக்கங்கள் கொண்ட தொகுப்பு. Lydia-வின் ஆகிருதியைத் தெளிவாகப் புரிந்து கொள்ள உதவும் நூல். இப்போது எழுதிக் கொண்டிருக்கும் மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவர் இவர். ஆனால் Alice Munro போல் எல்லோருக்குமான எழுத்தாளர் அல்ல Lydia. ஒரளவு இலக்கிய வாசிப்பனுபவம் உள்ளவர்கள் மட்டுமே இவரை ரசிக்க முடியும்.

பத்தென்ற எண்ணிக்கை அமெரிக்க இலக்கியத்தில் எந்தப்பிரிவை எடுத்தாலும் போதாது. Fable Stories-க்கு லட்சக்கணக்கான வாசகர்களைக் கொண்ட நாடு அமெரிக்கா. இந்தக் கட்டுரையும் கூட அமெரிக்கப் பெண் எழுத்தாளர்களுக்கு முழுமையான Justice செய்யவில்லை என்பதைத் தெரிந்தே முடிக்கிறேன். ஆர்வமுள்ள வாசகர்கள் தவறாது படிக்க வேண்டிய அமெரிக்க இலக்கியம் என்று நான் நினைப்பது இணைப்பில்:

American Must-read books:

 1. To Kill A Mockingbird-Harper Lee
 2. Of Mice And Men- John Steinbeck
 3. Little Women- Louisa May Alcott
 4. East Of Eden- John Steinbeck
 5. Gone With The Wind- Margaret Mitchell
 6. The Great Gatsby-F. Scott Fitzcerald
 7. In Cold Blood -Truman Capote
 8. Breakfast At Tiffany’s – Truman Capote
 9. A Streetcar Named Desire- Tennessee Williams
 10. 1984- George Orwell
 11. The Color Purple- Alice Walker
 12. The Big Sleep- Raymond Chandler
 13. The Complete Stories and Poems-Edgar Allen Poe
 14. The Adventures Of Huckleberry Finn- Mark Twain
 15. The Legend Of Sleepy Hollow- Washington Irving
 16. Little House In The Big Woods- Laura Ingalls Wilder
 17. The Turn Of The Screw- Henry James
 18. The Haunting Of Hill House- Shirley Jackson
 19. Fried Green Tomatoes at the Whistlestop Cafe- Fannie Flagg
 20. Something Wicked This Way Comes- Ray Bradbury
 21. The Thin Man- Dashiell Hammett
 22. The Wonderful Wizard Of Oz- L. Frank Baum
 23. Catcher intheRye – J D Salinger
 24. In Watermelon Sugar- Richard Brautigan
 25. O Henry complete stories
 26. The Drifters- James A Michener

 

 -சரவணன் மாணிக்கவாசகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.