பழுப்பு நிறப் பெட்டி

வன் வாழ்ந்த முதல் வீட்டின் இரண்டாவது மாடியில் அந்த மரப்பெட்டி உட்கார்ந்திருந்தது. அது அப்படி ஒன்றும் ஒதுக்குப்புறமான இடமில்லை. தன் வாழ்வில் வேறு எங்கும் வாழப் போவதில்லை என்று அவன் நினைத்திருந்த அந்த வீட்டில் பிரபலமான மகிழ்ச்சியான இடங்களும் உண்டு. வானொலி பாட்டு பாடிக்கொண்டிருக்கும் ,  பெரியவர்களின் பாதங்கள் நடமாடிக் கொண்டிருக்கும் இடங்கள். அமானுடமான கெட்ட இடங்களும் உண்டு. உலைக்குப் பின்னாலிருந்த கரிக்கலன் போலவோ அல்லது சிலந்திகளும் பழைய தரைவிரிப்பின் நெடியும் நிறைந்த மேல்மாடிப் பரண் போலவோ. அவனுடன் நெருக்கமான பெரியவர்கள் துணை இல்லாமல் இந்த இடங்களுக்கு அவன் போவதில்லை.

இரண்டிற்கும் இடைப்பட்ட இடங்களும் உண்டு.  மைய ஓட்டத்திற்கு வெளியே இருந்தாலும் அச்சம் தந்துவிடாத, நடுநிலையான ஆனால் புறக்கணிக்கப்பட்ட இடங்கள் அவை. அந்த வீட்டின் மொத்த முன்பகுதியும் இப்படி ஒதுக்கி வைக்கப் பட்டது தான். எப்போதோ விருந்தினர் வந்து தங்கும் அறை அப்படிப்பட்ட இடம்தான்.அங்கே ஒரு சாம்பல் வண்ணக் கட்டில்  படுக்கையும் அதன் தலைப்புறப் பலகையில் வெள்ளி பதித்த நிலவு வடிவங்களும் விளிம்புத் தூண்களின் உச்சியில் காளான் வடிவ வேலைப்பாடுகளும் இருக்கும்.

அங்கே ஜன்னல் ஓரத்தில் ஒரு சிறிய மேசை மேல் வைத்து அவன் அம்மா சில நேரங்களில் , எப்போதும் இல்லை, கடிதங்கள் எழுதிக் கொண்டோ அல்லது பின்புறம் சாய்ந்த தன் கையெழுத்தில் நாட்குறிப்பை ரகசியமாகப் படித்துக் கொண்டோ இருப்பாள்.

அவளும் அந்த அறைக்குள் வராமல் இருந்திருந்தால் நிச்சயம் பேய் தான் பிடித்திருக்கும். என்னதான் அந்த அறை தொலைப்பேசிக் கம்பிகளுக்கும் விரையும் கார்களுக்கும் சாட்சியாக இருந்தாலும் அம்மாவின் பேனாக் கிறுக்கல் கொடுத்த அழுத்தம் தான் பேய்களை ஓட்டி இருக்க வேண்டும்.  நெடுங்காலம் மாறாமல் இருந்த சம்பவங்களில் அடைபட்ட சோகமான ஆவிகளும் அச்சுறுத்தும் நிழல்களும் விலகி ஓடி விட்டிருந்தன.

விருந்தினர் படுக்கை அறைக்கு வெளியில் மாடிப்படி ஏறியதும் ஒரு அறை. அதன் பின் தாத்தா பாட்டியின் படுக்கை அறை. அதன்முன் ஒரு குறுகிய வழி. அது விரிந்து கொண்டே சென்று அகலமாகிறது. அங்கே தனித்திருந்த ஜன்னலின் கைப்பிடிச் சுவரில் வீட்டுப் பெண்கள் தண்ணீர் ஊற்ற மறந்துவிட்ட நாட்களில் தன் பழுப்பு இலைகளை உதிர்க்கும் ஜெரேனியம்.

அவன் புள்ளியிட்ட ஸ்விஸ் திரைச்சீலைகளின் வழியாகத் தொலைப்பேசிக் கம்பிகளைப் பார்த்துக் கொண்டிருப்பான். துணிக் கந்தல் பின்னல்களால் ஆன ரயில் தடங்களில் அவனுடைய லியொனில் பொம்மை ரயில் கிறிஸ்துமஸ் மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கும்.

இவ்வளவு சம்பவங்கள் நிகழும் அந்த உப்பரிகையில் ஒரு புறமாகத் தனது முன்னங்கால்களைக் கந்தலில் பதித்து அறைக்கதவு திறக்குமளவு இடம் விட்டு உட்கார்ந்திருந்தது அந்தப் பெட்டி.

அவன் உள்ளே படுத்துக்கொள்ளும் அளவிற்கு விசாலமாக இருந்தது. ஆனால் அவன் அதற்கு ஒருபோதும் துணிந்ததில்லை. அது பழுப்பு நிறம் பூசப்பட்டிருந்தது. மரத்தின் வளையங்கள் வெளியே தெரிந்துகொண்டிருந்தன. மிகவும் நீர்த்துப்போன டர்பன்டைன் கலந்த பூச்சு பயன்படுத்தி இருப்பார்கள் போல. பக்கவாட்டில் அலை அலையாகக் கோடுகள் ஓடின. பெரிய ஒரு தள்ளாடும் சீப்பினால் சீவி விட்டது போல ஓடின அந்தக் கோடுகள். அதன் மூடி மேல் மஞ்சள் திட்டுகள் இருந்தன. கீல்கள் சிறியதாக , கருப்பாக இருந்தன. சாவி பொருத்தப் படாத ஒரு சாவித்துவாரமும் இருந்தது.

இவை எல்லாம் சேர்ந்து அந்தப் பெட்டியை வினோதமானதாக, புராதனமானதாக ஏன் அச்சமே ஊட்டுவதாக ஆக்கிவிட்டன. அவனோ வேறு பெரியவர்களோ மூடியைத் தூக்கும் போது ஒரு வினோதமான நெடி வீசியது. ஆழமான , இனிமையான முடை வீச்சம். பாச்சை உருண்டைகள்,  தேவதாரு மற்றும் ஏதோ ஒன்றின் நெடி. அந்த நாற்றம்  உள்ளே இருந்த பொருட்களுக்கும் உரியது தான்.

பெட்டியில் மேலே இருந்த மென் துளைத்துகிலில் நெய்த மேசை விரிப்புகள், கம்பளிப்

போர்வைகளின் நெடி. அதனடியில் இருந்தவற்றின் நெடி. மொத்த பொருட்கள் எப்போதுமே அவனுக்கு முழுமையாகப் புரியவில்லை.

அவன் பெற்றோரின் கல்லூரி சான்றிதழ்கள் போர்வைக்கடியில் இருந்தனவா? மேலும் பழைய காலத்தைச் சார்ந்த,  அவன் தாத்தா பாட்டியின் அல்லது அவர்களுக்கும் முன்னோர்களின் திருமணம் தொடர்பான பொருட்களும் இருக்கலாம்.

மடிக்கப்பட்ட ஒரு பழைய காகிதத்துண்டில் இதயங்களும் வேறு வடிவங்களும் ஜெர்மானிய சொற்களும் எழுதப் பட்டிருந்தன. அவன் தாய் ஒருமுறை அந்தக் காகிதத்தை அவனுக்கு விளக்க முயன்றாள். அவன் கவனிக்க விரும்பவில்லை  அவ்வளவு பழைய ஒரு பொருள் அவனுக்கு அசுயயை அளித்தது.

பெரிய அளவிலான பைபிள்கள் இருந்தன   வேறு புத்தகங்களும். பகட்டான அட்டைகளுடன் மங்கிப்போய்விட்ட சிறிய கண்ணாடிகள் பதிக்கப்பட்ட தங்க ரேக்குகளில் முனைகள் செய்யப்பட்ட தடிமனான பக்கங்கள் கொண்ட புத்தகங்கள். கனத்த பழுப்பு நிறப்  படங்கள் நீள்வட்டத்திலிருந்தன. பெரும்பாலும் இறந்து போனவர்களுடையவை.

அவன் அம்மா விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுதுகளில் இந்த ஆல்பங்களைப் பார்த்துக் கொண்டிருக்க அவனுக்கு விருப்பமில்லை. பெட்டி,  கடந்து போன சம்பவங்கள் வழியாக காலத்தின் ஆழத்திற்கு இழுத்துச் சென்றது.  பொருட்களின் இனிய ஆழ்ந்த நெடி மீட்டுத்தரும் காலக்கிணற்றை அவன் வெறுத்தான். சலனமற்ற , காத்துக் கிடக்கும் , பாசம் பிடித்த , எவரேனும் தொடும் வரையில் நகராமலேயே இருக்கும் காலத்தின் நெடியை அவன் வெறுத்தான்.

அப்புறம் எல்லாமே நகர்ந்தன. நிரந்தரமான இடம் கொண்டவை என்று நினைத்துக் கொண்டிருந்த எல்லாமே ஒரு நாள் நகர்த்தும் ஆட்கள் வந்ததால் துரிதமாக அனாயாசமாக மேலெழும்பி கதவு வழியாக வெளியில் போயின.

இது நடப்பதற்கு முந்தைய வாரத்தின் அமளியில் அவன் குழந்தையாக இருக்கும்போது வரைந்த ஓவியங்களும்

அந்தப் பெட்டியில் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தான். அவனது ஆரம்பப் பள்ளி மதிப்பெண் அட்டைகளும் ஸ்டுடியோவில் ஐந்து வயதில் எடுக்கப்பட்டு சாம்பல் புறா நிறத்து மென் மரச் சட்டகத்தில் பகட்டான விளிம்புகளுடன் அன்புடன் பொருத்தப்பட்ட அவன் படமும் பெட்டியில் புகுந்து விட்டிருந்தன. இப்போது அவனுக்கு பதிமூன்று.

புதிய வீடு சிறியதாக இருந்தது. சுற்றி விசாலமாக இடம் இருந்தது. அதை அவன் இரு  காரணங்களுக்காக வெறுத்தான்.ஒன்று, கிராமப்புற வெளி அவனை அச்சுறுத்தியது, நிலக்கரிக் கலனும் அட்டத்து சாய்வறைகளும் பரணின் கீழே இருந்த கருப்பு முக்கோணங்களும் அச்சுறுத்தியது போலவே. மனிதர்களுக்கு அவ்வளவாக உபயோகமில்லாத வெளிகள் அவை.  மற்றொரு காரணம் வசந்த காலத்தின் ஒருநாளில் விதைத்து இலையுதிர் காலத்தின் ஒரு நாளில் அறுவடை செய்யும் வயல்களையும் இறந்த இலைகள் குவிந்து யாருமே காணாமல் மெதுவாக அழுகிப்போகும் குறுங்காடுகளையும் அவனுக்கு முன் யாரும் சென்றிராத பிரதேசங்களையும் அவன் அஞ்சினான்.

தாறுமாறாக வரிசை குலைந்திருந்த  நடைபாதைக் கற்களும் துருவேறிய குப்பிகளும் கொள்கலங்களும் இங்கு மனிதர்கள் இருந்திருப்பார்கள் என்று சான்று  கூறின. மனிதர்கள்!  பளபளப்பான ஆல்பங்களில் பகட்டாக அவன் பார்த்தவர்களை ஒத்தவர்கள். ஆனால் அவர்கள் விட்டுச் சென்ற தடங்கள் பயன்படுத்த முடியாதவை. நகரின் சாலையோர நடை பாதைகளும் வண்டி செல்லும் வழிகளும் உண்டாக்கிய தடங்கள் பயனுள்ளவை.

கடினமான சுவர்கள் கொண்ட அந்த கிராமத்து வீட்டில் தங்கி , படித்து, தானே வேர்க்கடலைப் பசையும் உலர் திராட்சையும் சேர்த்துச் சமைத்த சான்ட்விச்சுகளைச் சாப்பிட்டபடி வாழ்வின் இந்தப் பகுதி கடந்து செல்லும் வரை காத்திருக்க அவன் இயல்புணர்ச்சி அவனைத் தயார் செய்தது. முதல் வீட்டை விட்டு வெளியே வந்தது, வாழ்வில் பல கட்டங்கள் இருப்பதை அவனுக்கு கற்றுத் தந்திருந்தது.

தன்னை நகர்த்தி வந்த அன்று பெட்டி புதிய பரணில் இடம் பிடித்துக் கொண்டது. இந்த முறை பரண் இனியதாகவும் அதிகம் அச்சுறுத்தல் இல்லாமலும் இருந்தது. ஒருவேளை தேவதாரு மரக் கூரை வழியே வந்த பகல் வெளிச்சம் காரணமாக இருக்கும். கூரையைப் பழுதுபார்த்த அன்று மொத்த வெளியும் வானத்திற்குத் திறந்து விடப்பட்டது. உள்ளே மழை பொழிந்தது. பரணிலும் கொட்டகையிலும் இடம் கிடைக்காத மரச்சாமான்கள் மேலே எல்லாம் மழை நீர். கொட்டகைக்கு அனுப்பும் அளவுக்கு இழிவுபட்டதில்லை நம் பெட்டி. பரணின் விளிம்பில் குத்த வைத்து உட்கார்ந்து விட்டது. அவன் இதுவரை பார்த்திராத , அதன் வண்ணம் பூசாத பின்பகுதியைப் பார்த்தான். இரண்டு பெரிய வெளிறிய பலகைகள் அதன் பின்புறத்தை ஆக்கி இருந்தன . பலகைகளில் கவனமில்லாமல் தெளிக்கப்பட்ட பழுப்பு சிதறல்கள் ,அவை உண்மையில் சொல்லப்போனால் கறைகள், தச்சனின் கைவண்ணத்தைக் காட்டின.

பெட்டியில் அவன் பார்த்திராத பொருட்கள் மனதை இருளச் செய்தன. எப்போதாவது அவன் அம்மா எதையோ தேடும்போதோ அல்லது ஒரு பொக்கிஷத்தை ஆழப் புதைக்கும்போதோ எட்டிப் பார்த்து, தான் நினைத்ததை விட பெட்டி எவ்வளவு பெரியது என்று வியப்படைவான். புள்ளியிட்ட ஸ்விஸ் திரைச்சீலைகளும் கொக்கிப் பின்னல் தைத்த விரிப்புகளும் மென் மரப்பலகையில் பதிந்த படங்களும் நிறைந்த, கற்பூரமும் தேவதாருவும் மணக்கும் பெட்டி.

அங்கே இருந்தது பெட்டி. பரணின் இறங்கு படிக்கட்டிலிருந்து ஓரங்குல தொலைவில். நாற்பது ஆண்டுகளைத் தாண்டி.

மீண்டும் இடம் மாறியது. அவனது வளர்ந்துவிட்ட குழந்தைகள் கடைசியாக அவர்கள் பாட்டி இறந்து போனபோது தொலைவிலிருந்து வந்து இணைந்து கொண்டார்கள். அவர்கள் மரச் சாமான்களைப் பங்கிட்டுக் கொண்டார்கள். சிலவற்றை எடுத்துச் செல்வது, சிலவற்றை உள்ளூர் ஏலக்காரர் மூலம் விற்பது என முடிவாகியது. நீளமான அறைகளும் பேய் வாழும் இடங்களும் நிறைந்த அந்த முதல் வீட்டின் மிச்சமிருக்கும் ஒரே ஜீவனாகிய அவனுக்கு என சில பொருட்கள். இப்போது நூற்றுக் கணக்கான மைல்கள் தள்ளி இருக்கும் அவனது சொந்த வீட்டிற்குச் சாமான்களை அவன் நகர்த்த வேண்டும்.

மூன்று குழந்தைகளில் திருமணமான இருவர் பொறுப்புச் சுமைகளால் விரைவில் கிளம்பி விட்டனர். அவனுடன் வேலை இல்லாத , மனைவி இல்லாத இளைய மகன் வீட்டை காலி செய்வதற்காகத் தங்கி விட்டான்.  சாமான்களைக் கட்டி சரக்கு வண்டியில் ஏற்ற வேண்டும் . வெளியில் உணவு வாங்கி உண்டு, எலிகளை நச்சு வைத்து, பூனைகளைப் பிடித்து, நிலவறைக்கும் அட்டத்துக்கும் இடையே ஒரு நோயாளி படுக்கையில் இடம் மாறுவது போல அல்லாடிக்கொண்டு , அவ்வப்போது இறந்த காலத்தின் அழுத்தத்திலிருந்து தப்பிக்க வீட்டை விட்டு ஓடிச் சென்று காலம் கழித்தனர்.

அவன் நிலவறையின் ஈரத்தில் துருப்பிடித்த ஒரு தராசைக் கண்டான். அதில்தான் அவன் பாட்டி உருளை எடைக்கற்களுக்குச் சமமாக அஸ்பாரகஸ்  தண்டுகளை நிறுத்திக் கொடுப்பாள். எடைகள் அவன் கையை அழுத்தின. துரு கையில் படிந்தது.

அவன் கண்கள் வெள்ளை மற்றும் சாம்பல் பட்டைகள் பூசிய அண்டா ஒன்றை உற்று நோக்கின. அவனது தாத்தா  தன் வெண்காகிதம் போன்ற பாதங்களால் நுரைகளைக் கிளப்பி நீரில் ஊறுவது இப்போதும் கண்முன் விரிந்தது.

சுருட்டிய பழைய விரிப்புகளும் உடைந்த மூங்கில் இருக்கைகள் கொண்ட ஆடும் நாற்காலிகளும் முப்பதுகளைச் சேர்ந்த தொப்பி வைக்கும் பெட்டிகளும் நாற்பதுகளின் காகித அட்டையிட்ட மர்மக்கதைப் புத்தகங்களும் நிறைந்த பெட்டி, தூக்க முடியாததாக இருந்தது.

மகனும் அவனுமாக அடுக்கடுக்கான கம்பளிகளையும் பகட்டான ஆல்பங்களையும் பின்னல் நூல் மேசை விரிப்புகளையும் கைத்தறித் துவாலைகளையும் வெளியே எடுத்தார்கள். ஒரு நீளமான மர அட்டைப் பெட்டியில் அவன் அம்மாவின் கையெழுத்தில் “மண நாள் உடை 1925” என்று எழுதி இருந்தது. அதனுள் கசங்கிய பட்டாடை ஒன்று. அந்த நூற்றாண்டு இளமையாக இருந்தபோது ஒரு சிறு பெண் அணிந்திருந்த ஆடை.  அத்துடன் தோலில் செய்த குழந்தைக் காலணிகளும் தங்கம் பூசிய குதிரை லாடம் ஒன்றும் அவன் தாத்தா கையெழுத்தில் சிரத்தையுடன் எழுதப்பட்ட சென்ற நூற்றாண்டின் காலநிலைக்குறிப்புகள் கொண்ட சிவப்புத் தோல் உறையிட்ட நாட்குறிப்பும் ஒரு குதிரை சாட்டையும் இருந்தன.

அவன் அம்மாவின் கையெழுத்தில் “முடி வெட்டல் 1919 ” என்று குறித்த சிறிய பெட்டகத்தில் , மென் காகிதத்தில் பட்டுப் போன்ற செம்பொன் சுருள் முடிகள் இருந்தன.

அவன் அப்பாவின் கல்லூரிக் கால்பந்தாட்ட அணியின் தடிமனான பழுப்பு நிறப் படம். அதில் அவர் வலது தாக்குதல் புள்ளியில் பட்டை இல்லாத தலைக்கவசம் அணிந்து குத்த வைத்து உட்கார்ந்திருந்தார்.

ஒரு மேடை நிறையக் காட்சியளித்துக் கொண்டிருந்த இளையவர்கள் கூட்டத்தில் அவன் அம்மாவைக் கண்டு விட்டான். மெல்லிய தேவதை உடை அணிந்து அழுவது போன்ற முகத்துடன் இருந்தாள்.

மேலும் மேலும் பொருட்கள். இனி முடியாது என்ற நிலையில் மகனிடம் பாதி காலியான பெட்டியைத் தூக்கச் சொன்னான்.

இருவருமாகக் குறுகலான படிக்கட்டுகளில் பெட்டியை இறக்கி வந்தனர். தலைமுறைகளாக மிதிக்கப்பட்டு வந்த மரப்படிகளில் இறங்கி வந்த பெட்டி பல பத்தாண்டுகள் விரிப்பைக் காணாத அகன்ற படிகளில் பயணித்து பின் வாசல் கதவு வழியே சரக்கு வண்டியை அடைந்தது. ஆனால் வண்டிக்குள் நுழைய முடியவில்லை. பத்து மைல் தொலைவில் உள்ள நகருக்குத் திரும்பவும் சென்று பெரிய வண்டி ஒன்றைப் பிடித்தார்கள்.

அதிலும் எல்லாவற்றையும் நுழைப்பது போராட்டமாக இருந்தது. ஒரு கட்டத்தில் தளர்ச்சி அடைந்துவிட்ட அகன்ற முதுகை உடைய மகன் கூனிக்குறுகி வண்டிக்குள் சென்று, ஒருவனாகவே பெட்டியை உயர்த்தித், தலைகீழாகத் திருப்பி, மூடியைத் திறக்க, சில சிறிய சாமான்களுக்கு இடம் கிடைத்தது. அந்தப் பழைய மரம் ஒரு மெல்லிய கிரிச் ஒலியை வெளியிட்டது . காயத்தின் ஒரு அவசர ஓலம்.

பெட்டி  கொட்டகைக்கு ஓய்வெடுக்க வந்துவிட்டது. அவன் இப்போது ஒரு கொட்டகைக்கு உரிமையாளன். கொட்டகை என்றால் அடுக்கிய சுவர்களும் ஓக் மர விட்டங்களும் கொண்ட பெனிசில்வேனிய கொட்டகை அல்ல. தட்டையான, தார் பூசிய கூரைகளும் கைவிடப்பட்ட குதிரை லாயமும் கொண்ட குறுகலான நியூ இங்கிலாந்து கொட்டகை. பெட்டியின் மூடிக்கு அருகில் சிறிய கருத்த கீல்கள் பக்கத்தில் ஒரு விரிசலைக் கண்டான்.கவனமாக சில ஆணிகளை இறக்கி சேதத்தை நன்றாக சரி செய்தான். அவன் மகனை, கார்டன் அவன் பெயர், தந்தை வழித்தாத்தாவின் பெயர், குற்றம் சாட்ட முடியவில்லை.

ஹார்டிங் அதிபராக இருந்த ஒரு வெளிச்சமான இலையுதிர் கால நாளில் கால்பந்தாட்ட அணியுடன் படத்திற்குக் காட்சி தந்த அதே கார்டிங் பெயர் தான் மகனுக்கு.

ஒரு மழைக்கால இரவில் கார்டிங் வண்டியை ஓட்ட அவன் தந்தை வரைபடத்தைப் படிக்க முயன்று கொண்டிருந்தான்.  மங்கலான வெளிச்சத்தில் சரியாகக் கவனிக்காமல்  வெஸ்ட்செஸ்டர் கவுண்டிக்குச் செல்லாமல் தவறாக வழிகாட்டி,  ஹட்சன் நதிக்குக் குறுக்கே கண்ணைப் பறிக்கும் ஒளியில்,  வெளியேற வழி இல்லாத திசை தெரியாத நெடுஞ்சாலையில் சிக்கிக் கொண்டனர்.  அந்த அதிர்ச்சியூட்டும் தவறான வரைபட வழிகாட்டுதலுக்குப்பின்னால் அவன் மகனைக் குற்றம் சாட்டுவதே இல்லை. வேலை தேடுவதில் தோற்று , பாஸ்டன் நகரத்துப் போலி விடுதிகளில் டார்ட் விளையாட்டில் கவனம் செலுத்திக் கொண்டிருந்ததற்கும் கூட குற்றம் சாட்ட முடியாது.

அப்போது உடனடியாகப் புரிந்து கொள்ள முடியாத விதத்தில்,  அவன் வழிகாட்டியதில் செய்த தவறு அப்பா மகனிடையில் சமநிலையை மீட்டு விட்டது. அவன் பாட்டியின் காய்த்துப் போன கைகளின் இன்னுமொரு அஸ்பாரகஸ் கட்டு துருப் பிடித்த எடைக்கற்கள் தாங்கிய தட்டினை சிறிதாக உயர்த்தி சமம் செய்வது போல.

அவர்கள்  ஒருமணி தாமதமாக வந்து சேர்ந்தனர்.பெட்டியை காலி செய்வதும் பின்னர் நிரப்புவதும் எல்லாம் ஒளிர் விளக்கின் வெளிச்சத்தில் தட்டைக் கூரை மீது மழையின் முரசொலியுடன் நடந்து முடிந்தது.

இப்போது கொட்டகை பேய்வீடு போல அவனுக்குத் தெரிந்தது. முந்தைய உரிமையாளர் விட்டுச் சென்ற சொத்துக்களை ஆராய அவனுக்கு நேரம் இருக்கவில்லை. நாற்காலிகள், அலமாரிகள், பீங்கான்கள், மக்கிப்போன புகழ்பெற்ற புத்தகங்கள், பழைய பாணியிலான தூக்கு விளக்குகள்,  இவையெல்லாம் இலை வெட்டிகளுக்கும் பனி விலக்கும் கருவிகளும் முந்தைய உரிமையாளரின் கடைசிமகன்  விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள் டயர்களுக்கும் அப்பால் குவிந்திருந்தன.

இவ்வளவு பொருட்களுக்கு உரிமையாளன் ஆவான் என்று குழந்தைப் பருவத்தில் ஒரு நாளும் நினைத்துப் பார்த்ததில்லை. அவன் மனைவியால் பல பொருட்களுக்கு வீட்டில் இடம் தர முடியவில்லை. அவன் அம்மாவின் அரிய சொத்துக்களாக இருந்த சுருள் மேப்பிள் கட்டையில் செய்த சமையலறை மேசைக்கும் வால்நட் மர அலமாரிக்கும் கூட இடமில்லை.

கொட்டகையில் இந்தப் பகுதி பழைய கரிக்கலன் போல அச்சுறுத்தவில்லை என்றாலும் அவன் தவிர்த்து வந்தான். அவன் மழலைக் கண்களால் ஆராய்ந்த, அவன் பெற்றோரின் வாழ்வைச் சட்டகமாக வரையறுத்த இந்தச் சாமான்கள் வருத்தத்திற்குரிய விதத்தில் அலங்கோலமாகத் தோன்றின  காலத்தால் தூக்கி எறியப்பட்டு , பழம் பொருள் மதிப்பும் இல்லாத அவற்றை வீசிவிட அவன் துணியவில்லை.

அதனால் அவர்கள் வழிமாறிப் பயணித்த வடக்கு நோக்கிய பயணம் நடந்து இரண்டு வருடங்கள் கழித்து  ஒரு மழைக்கால நாளில் கார்டன் கொட்டகைக்கு வந்து பார்க்கச் சொன்ன போது அவன் மகிழ்ச்சி அடைந்தான். அவனுக்கு ஒரு வேலை கிடைத்திருந்தது. நகருக்கு வெளியே ஒரு பெரிய வீட்டிற்குச் செல்லப் போகிறான்.

ஒரு நண்பரை அழைத்து வரப் போவதாகத் தெளிவில்லாமல் கார்டன் சொல்லி இருந்தான். ஒரு வேளை பொருட்களை ஏற்றிச் செல்ல ஒரு ஆண் நண்பன் வந்திருப்பான் என நினைத்திருந்தான்.

அந்த நண்பர் ஒரு பெண். சிறியவளாக, நேர்த்தியானவளாக, கவரும் பெரிய கண்களுடன் பீங்கான் போல வெண்மையானவளாக இருந்தாள். இறக்கை தெரியாத ஹம்மிங் பறவையாகத் துள்ளிக் குதித்து வந்தாள். எதைப் பார்த்தாலும் “ஓ” என்று வியந்தாள். கார்டனிடம் பெருமூச்சு கலந்த சிறிய குரலில் இது எப்படிப் பயன்படும், அது எங்கே பொருந்தும் என்று விளக்கினாள் . “விளக்குகள். எனக்கு மிகவும் பிடிக்கும் ” என்றாள்.

‘பாருங்கள் அப்பா” பையன் தொடங்கினான். மெலிதாக உச்சரித்த போதும் வார்த்தைகள் வீரியமாக வந்தன. கொட்டகையின் அத்தனை காற்றையும் எடுத்துக்கொண்டு வந்து விழுந்த வார்த்தைகள். “மோர்னாவும்  நானும் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டிருக்கிறோம்”.

மோர்னா.

ஒரு செல்டிக் பெயர். இந்தக் குறுகுறுக்கும் பட்டாம்பூச்சிக்கு பொருத்தமான பெயர்.

இந்தப் பெண் ஒரு மாயக் கவர்ச்சி கொண்டவள். உளுத்துப்போன கொட்டகையில் புகை புகையாக மூச்சு விட்டுக்கொண்டு, குப்பைகளுக்கு இடையே உயிர்ச்  சொடுக்கலுடன் நகர்ந்து டெனிம் அணிந்த கால்களுடனும் வெண்ணிறக் கைகளின் வீச்சுகளுடனும் பேசிக் கொண்டிருந்தாள்.

அவள் கார்டனிடம் மட்டும் பேசினாள். அவனது பழைய தந்தையிடமிருந்து ஒரு வெட்கத்திரை விலக்கி வைத்திருந்தது போல.

வீச்சமும் அருவருப்பும் நிறைந்த  ஒரு பழைய வீட்டின் உரிமையாளனாகிய, தன் வாழ்வின் கடைசிக் கட்டத்தில் இருக்கும் ஒரு பூச்சாண்டியிடம் இருந்து விலக்கி வைத்த வெட்கத்திரை.

“இது என்ன கார்டன் ” என்றாள். பையன் அவளது அதீத ஆர்வத்தால் நாணினான்.

“அவளிடம் சொல்லுங்கள் அப்பா”.

“அது எங்கள் பழைய விருந்தினர் படுக்கை”. அதில்தான் அவன் அம்மாவின் பேனாக் கிறுக்கல்களின் சத்தத்தைக் கேட்டுக் கொண்டே  அவன் குறுக்காகப் படுத்திருப்பான். அம்மாவின் நாட்களை இழுத்துப் பிடிக்க நாட்குறிப்பு முயன்று கொண்டிருக்கும். அது முடியாத செயல் என்பதை அப்போதே அவன் அறிவான்.

“இந்த அசிங்கத்தைக் கிழித்து விடலாம்” பையன் ஒத்துக் கொண்டான். அந்த வேலையின் சுமையை எண்ணி வெறுத்துக் கொண்டான்.

“நமக்கு ஒரு படுக்கை இருக்கிறது”என்று அவளுக்கு நினைவூட்டினான்.

“அப்புறம், இது என்ன? ” என்று தாவினாள். படுக்கையை ஒரு எதிர்கால சாத்தியத்தில் தத்தளிக்க விட்டுவிட்டு.

அவள் தலைக்குட்டைத் துணி நழுவியது. பொன்னிறத் தலைமுடி அவள் மூச்சுக் காற்றின் ஆவிக்கு மேலே விரைந்தோடும் நிகழ்காலத்தில் மின்னியது.

பெட்டியைப் பார்த்து நின்றாள். பார்வை கார்டனிடம் சென்றது. அங்கே எதிர்வினை இல்லாததால் வீட்டின் தற்போதைய உரிமையாளரிடம் சென்றது. முதல் முறையாக அவன் கண்களைப் பார்க்கிறாள். பூச்சாண்டி சிரித்தது.

“அதைத் திற”

“இதில் என்ன இருக்கிறது?

“நான் உண்மையில் மறந்து விட்டேன்” என்றான் அவன்.

லாவகமாக ஆனால் பயமில்லாமல் மூடியைத் தூக்கினாள்.

வெளியே பாய்ந்தது இனிய ஆழமான தேவதாரு மணம். மரமும் கற்பூரமும் காகிதமும் துணியும் குறையாமல் வீசும்  முடிவே இல்லாத  குடும்பத்தின் மணம்.  குழந்தையாக இருந்தபோது அவன் நாசித் துளைகளை வியப்புறுத்தி எச்சரித்த மணம்.

 

ஜான் அப்டைக்

தமிழில் :ராகவேந்திரன்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.