பால் திரியும் காலம்(மலையாளம்) -என்.எஸ்.மாதவன், தமிழில்- இரா. முருகன்


12615 சென்னை – புதுதில்லி கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் சரியான நேரமான இரவு ஏழு மணி இருபது நிமிடங்களுக்கு போபால் சந்திப்பின் மூன்றாம் பிளாட்பாரத்துக்கு வந்து சேர்ந்தது. புகைவண்டியில் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களும் குறைவுதான். காலியாக இருந்த எஸ் 4 ரயில் பெட்டியின் வாசலில் சாபு, போர்ட்டருக்காகக் காத்திருந்தான்.    போர்ட்டரின் கையைப் பற்றியபடிதான் அவன் ரயில் பெட்டிக்குள் ஏறினான்.

இருக்கை எண் 33-ஐத் தேடி  ரயில் பெட்டியின் மங்கிய வெளிச்சத்தில், இடைவழி ஊடாக மேலடுக்குப் படுக்கைகளையும் அவற்றில் ஏறிப் படுக்க நீண்டிருக்கும் ஏணிப்படிகளையும் பிடித்தபடி மெல்ல நடந்தபோது தானொரு பெரிய கம்பளிப் போர்வைக்குள்  துளைத்து இறங்குவதுபோல் தோன்றியது அவனுக்கு. ரயில் பெட்டிக்குள் டிசம்பர் குளிர் அகன்றிருக்க, தொலைதூரப் பயணிகள் இளம் சூட்டை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். இரவு கவிந்துவர, சோம்பலோடு தம் இருக்கைகளில் சுருண்டு கிடந்தபடியும் படுத்தபடியும் இருந்த பயணிகள் ஆளாளுக்கு ரயில் பெட்டியை சுவாதீனமாகப் பங்கு போட்டிருந்தார்கள். அழைக்காமல் வந்து சேர்ந்த விருந்தாளி போல தட்டுத் தடுமாறி அவன் தன் இருக்கையை அடைந்தான்.

இருக்கை முன் நின்ற சாபுவுக்குச் சட்டென்று ஒரு நிமிடம் கண் இருண்டு வந்தது. தொடர்ந்து சைரன் ஒலி போல் காதுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் முணுமுணுவென்ற இரைச்சல். அவன் கைகள் கொண்டு தலையை மூடினான். மோதிர விரல்களால் செவியடைத்துக் கொண்டான்.  உள்ளிருந்து வரும் சத்தத்தை அப்படிச் செய்து மௌனமாக்க முடியுமா?  மனதில் சிரிப்பு அடக்கி கைகளால் பற்றிப் பிடித்து நிற்க முடியாமல் முன்னால் சரிந்து விழத் தொடங்கினான்.

போர்ட்டர்தான் சாபுவுக்கு உதவி செய்தான். அவன் சாபுவை  மெல்ல இருக்கையில் அமர்த்தினான்.  ரயில் நிலையத்துக்கு சாபு வந்து சேர்ந்தது முதல் போர்ட்டரோடு புது நட்பு கிளைத்திருந்தது. போர்ட்டர் விரைவாக பிளாஸ்டிக் போத்தலைத் திறந்து சாபுவின் உதடுகளுக்கிடையே வைத்தான். கீழ் உதடு வழியே கொஞ்சம் தண்ணீர் வழிந்து போக, அடுத்து சாபு இரண்டு மிடறு நீர் குடித்தான். சட்டென்று தலைக்கு ஏறிய குளிர்ச்சி அவனுக்கு ஆறுதலை நல்கியது.

புகைவண்டி கிளம்பியது. போர்ட்டர் புறப்பட்டான். சாபு போர்ட்டர் பக்கமாகக் கழுத்தை நீட்டினான். போர்ட்டர் அவன் தோள் மேல் கை போட்டு அவனை அணைத்துக் கொண்டான், ரயில் பிளாட்பார வாயு விளக்குகள் ரயில் பெட்டிக்குள் ஜன்னல்கள் வழியே வீசியெறிந்த  ஒளிரும் மஞ்சள் சதுரங்கள் வேகம் கொண்டன, தோளில் அன்போடு கை வைத்த பிறகு போர்ட்டர் திரும்பிப் போனான். அந்த நிமிடத்தில் சாபு கொடிய  தனிமை அனுபவித்தான்.

உடலை முழுக்கத் திருப்பி உள்ளே இழுப்பதுபோல் அவன் வயிற்றுக்குள்ளிருந்து உக்கிரமான வேதனை தோன்றியது. கண்களை மூடி அந்த வேதனையைப் புறக்கணிக்கத் தீர்மானித்தான் அவன்.  ஜாதிக்காய்ப் பொடியும் சீரகப் பொடியும் இட்டு வறுத்த பருப்பு உசிலியின் மணம்தான் அவன் கண்களைத் திறந்தது. எதிர் வசத்து இருக்கைகளில் இருந்த குடும்பம் ஸ்டெயின்லெஸ் பாத்திரங்களைத் திறந்து வைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சாபு சுற்றிப் பார்த்தபோது புகைவண்டித் துறை வழங்கும் அலுமினிய சருகுப்பாத்திரங்களில் அடைத்து வரும் உணவை உண்டபடி இருக்கும் மற்றப் பயணிகளையும் கண்டான்.

எஸ் 4 ரயில் பெட்டி உறங்கத் தயாராகிக் கொண்டிருந்தது. பல விளக்குகள் அமர்த்தப்பட்டன. சாபு இருக்கும் இருக்கைக்கு மேல் நடு பெர்த்தை இறக்கி கொக்கிகளைப் பொருத்திப் படுக்கையாக்கத் தொடங்கினார் அருகில் உள்ள பயணி. சாபு எழுந்து நின்றான்.  ஜன்னல் ஓர இருக்கையிலிருந்த இளம் பெண்ணும் எழுந்தாள். அவள் தன்னை நோக்கிக் கண்கள் மலர அழகாகச் சிரித்த காரணம் என்ன என்று சாபுவுக்குப் புரியவில்லை. அவள் சாபுவின் அருகில் இடைவழியில் சென்று நின்றாள்.

“சார்”, அவள் அழைத்தாள். இப்போது அவனுக்கு வலி இல்லை. எனினும் நடு பர்த் படுக்கை விரிக்கப் பட்டதால் தன் இருக்கையின் ஓரத்துக்கு சாபு முன்னே நகர்ந்து இருக்க வேண்டி வந்தது.

”சார்”, பொறுமையில்லாமல் அவள் அழைத்தாள். சாபு நிமிர்ந்து பார்த்தபோது அவள் உருவம் அவன் கண்களில் பதிந்தது.  ஜீன்சும் டிஷர்ட்டும் உடுத்தியிருந்த ஒரு மெலிந்த இளம்பெண்.  சிவந்த கழுத்தில் – சீன மொழியில்,   நீல நிறத்தில் மேலிருந்து கீழாகக் குத்தப்பட்ட – பச்சை. அது ஆரம்பமாவது சிறியதாக வெட்டியிருந்த அவள் தலைமுடிக் கற்றையின் விளிம்பில்.

”சார்” அவள் ஷூ அணிந்த கால்களால் தரையில் சத்தமுண்டாக்கி அவனுடைய கவனத்தை ஈர்க்க முற்பட்டாள்.

“முடியாது” சாபு கை உயர்த்திச் சொன்னான்.

“எது முடியாது?”

“நீங்கள் கேட்கப் போகிற விஷயம்”

“நான் என்ன கேட்கப் போறேன்னு நீங்க நினைக்கறீங்க சார்?”

அந்தப் பெண் அவன் இருக்கைக்கு எதிர் சீட் ஓரத்தில் நின்றபடி கேட்டாள்.

“லோயர் பெர்த்” சாபு சொன்னார்.

 

”அதே தான். இல்லாம கல்யாணம் கட்டிக்கலாமான்னா கேட்கப் போறேன்?”

“கேட்டா பதில் உண்டு. நான் கல்யாணம் ஆகாதவன்.. ஹஹஹ… ஆனா இன்னிக்கு என்னாலே அப்பர் பெர்த்துலே ஏறிப் படுத்துக்க முடியாது. லோயர் பர்த் கிடைக்காம இருந்தா நான் இந்த பயணமே வந்திருக்க மாட்டேன்”

“நீங்க  ஒரு ஆண் இல்லையா? இளைஞர் இல்லையா? ஒரு பெண்ணை மேல் பர்த்துக்கு அனுப்ப உங்களுக்கு எப்படி மனசு வந்தது?” அவள் அவனை ஒரு விசித்திர ஜந்துவைப் பார்ப்பது போல முறைத்துப் பார்த்தாள்.

“அப்படிப் பார்த்து ஒரு பிரயோஜனமும் இல்லை. எனக்கு நாலு மாசம் முன்பு பெரிய சுகக்கேடு ஏற்பட்டது. மூணு வாரம் முன்பு என் உடம்பில் பெரிய அறுவை சிகிச்சை நடந்தது. ஒரு பகுதியை வெட்டி அகற்றினாங்க. என் வயிற்றிலே இப்பவும் வலி இருக்கு. இதை எல்லாம் சொல்றபோதே எனக்கு தளர்ந்து போகுது” சாபு குரல் நடுங்கியது.

“வேணாம். லோயர் பர்த்தை விட்டுக் கொடுக்காமல் இருக்க இவ்வளவு பெரிய கதையா?” அவள் எழுந்தாள்.  அந்த இடத்தில் பயணச்சீட்டு பரிசோதிக்கும் டி.டி.ஈ வந்தமர்ந்தார். சாபுவும் அந்தப் பெண்ணும் தத்தம் அலைபேசிகளையும், அடையாள அட்டைகளையும் அவரிடம் கொடுத்தார்கள்.

“N.சாபு. ஆண், ஆண் தான் போல. வயசு 31” அந்தப் பெண் நின்றபடி சொன்னாள்.

” ஓ! அவர் கையில் வச்சிருக்கற சார்ட்டை பாத்தீங்க இல்லே?”

”சாபு? முஸ்லீமா?”

”இல்லை”

அவள் சந்தேகத்தோடு புருவம் உயர்த்தினாள்.

“மல்லு?”

“ஆமா, மலையாளி”

அவள் மறுபடி சாபுவின் எதிர் இருக்கையின் ஓரத்தில் அமர்ந்தாள். சட்டென்று அவள் முகபாவம் மாறியது. அவள் சாந்தமானாள். அவனுடைய கண்களுக்குள் பார்த்து அவளுடைய இமைகள் அடைத்தும் திறந்தும் கொண்டிருந்தன. அவள் சாபுவின் வலது கையை வருடிக்கொண்டு தணிந்த குரலில் சொன்னாள் :

 

”விஷயம் என்னன்னா, எனக்கு ஒரு மனோதத்துவப் பிரச்சனை உண்டு. குறுகலான இடங்களைப் பற்றிய பயம். மேல் பர்த்லே ஏறிப் படுத்தால் எனக்குத் தாங்க முடியாமல் வாந்தி வரும்.  சவப்பெட்டியில் கிடக்கிறது போல தோணும்.  அதனால், ப்ளீஸ்” சாபுவை மறுபடி ஒரு நிமிட இருட்டு ஆக்ரமித்துக் கொண்டது. அவனுக்கு அந்தப் பெண் சொன்னது எதுவும் கேட்கவில்லை.

”போ, தொணதொணக்காமல் போய்ப் படுத்துத் தூங்கு. போ” அவன் சத்தமாகச் சொன்னான்.

உடல் நடுங்க அவள் எழுந்து நின்றாள். உறங்கிக் கொண்டிருந்த சக பயணிகளில் சிலர் எழுந்து அவர்களைப் பார்த்த பிறகு திரும்பப் படுத்துக் கொண்டார்கள். லோயர் பர்த்தில் நீட்டி நிமிர்ந்து படுத்த சாபுவின் பக்கம் போய் அவன் காதோடு அவள் சொன்னாள்: “இந்த உலகத்திலேயே  நான் பார்த்த மகா துஷ்டர் நீங்க தான். எனக்கு உங்களை கொல்லணும் போல கோபம் வருது. கொல்லுவேன்”

”போ பெண்ணே, போய்த் தூங்கற வழியைப் பாரு” அவன் போர்வையைத் தலையிலிருந்து கீழே இழுத்து முகத்தை மூடிக்கொண்டான்.

உறக்கத்தில் மூழ்கத் தொடங்கும் போதெல்லாம் மேலே அப்பர் பெர்த்தில் இருந்த அந்தப் பெண்ணுக்கு வாட்ஸப் செய்திகள் அவள் மொபைலில் வரும்போது ஏற்படுத்தும் ஒலிகள்  அவனை விழிக்கச் செய்தன.

சாபுவின் மொபைல் ஒலித்தது. மிருணாளினி.

அவள் நேரடியாக விஷயத்துக்கு வந்து விட்டாள் : “சாபு எதுவும் முன்னால் இருந்தது போல இல்லே. அப்படி நினைச்சு இங்கே வரவேண்டாம். அதை ஞாபகப் படுத்தத்தான் இந்த நேரம் கெட்ட நேரத்திலே உன்னைக் கூப்பிடறேன். நிறைவேற முடியாத ஆசை எதுவும் உனக்கு ஏற்பட வேண்டாம். அது உன் மனசிலே டென்ஷனைத்தான் அதிகரிக்கும். நோய் குணமாகறது தாமதப்படும்.”

“ மினி,  நீ தானே என்னைக் கட்டாயப்படுத்தி உன்னாண்டை என்னை இழுக்கறே”. அடுத்த பெர்த்களில் உறங்குகிறவர்களை உத்தேசித்து சாபு குரல் தாழ்த்தினான்.

“உனக்கு ஆபரேஷன் நடந்து முடிஞ்ச அப்புறம் தான், நீ எங்கே இருக்கே, உனக்கு ஏற்பட்ட நோய் என்னன்னு எனக்கு எல்லா விவரமும் தெரிஞ்சது. கொஞ்ச நாள் அதிர்ச்சியிலே என்னாலே எதுவும் செய்ய முடியலே.  அப்புறம் உன் அம்மா கிட்டே இருந்துதான் உன் மொபைல் நம்பர் கிடைச்சது”

“அம்மாவுக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும்”, சாபு சொன்னான்.

”அண்டை வீட்டுக் குட்டிப் பெண் இல்லே நான்? நீ ஒரு காலை நேரத்திலே,  இல்லே ராத்திரியிலே என்னைப் புறக்கணித்துத் தூக்கி எறிஞ்சுட்டு போன விஷயமும் உன் அம்மாவுக்குத் தெரியும். வேண்டாம். பழைய சமாசாரம் எதுக்குள்ளேயும் போக வேண்டாம். சாபு நரி மாதிரி ஒரு குறுக்கு புத்திக்காரன்னு எனக்குத் தெரியும்.  அடுத்தவங்களை ஆட்டி வைக்கிற சூத்ரதாரி நீ. பேசியே என் மனசைக் கரைச்சுடுவே. அப்புறம் நீ என்னை பழைய காலத்துக்குக் கூட்டிப் போயிடுவே.   அதெல்லாம் மறுபடி அனுபவிக்க என்னாலே முடியாது.  அதைச் சொல்லத்தான் இந்த நடுராத்திரி அழைப்பு”.

“நான் சூத்ரதாரியா மினி? நீ தானே நான் வரணும்னு பிடிவாதம் பிடிச்சது?”

“நான் இந்தியாவிலே மிகப் பெரிய மருத்துவமனையில் வேலை பார்க்கிறேன்னு உனக்குத் தெரியுமில்லே? இங்கே சீனியர் டாக்டர் உன் நோய்க்கு சிகிச்சை செய்யறதிலே நிபுணர் அப்படீன்னு உலக அளவிலே அறியப்பட்டவர். நான் அவரிடம் உன் விஷயமா பேசினேன். உன்னை போபாலிலே வச்சு அடிச்சு பிடிச்சு அவசரமா ஆப்பரேஷன்  செஞ்சது அவருக்குக் கொஞ்சமும் பிடிக்கலே. இனி மேற்கொண்டு சிகிச்சை டில்லியிலே நடக்கணும்னு அவர் சொன்னார். தினம் கோவிலுக்கு சாமி கும்பிடப் போகிற உன் அம்மா செஞ்ச புண்ணியம் தான் அவரை அப்படிச் சொல்ல வச்சது. அதை நடத்தித் தருவது என் கடமைன்னு தோணிச்சு. அதுனாலே தான் உன்னைக் கட்டாயப்படுத்தினேன். இன்னும் ஒண்ணு, சாபு,  நாளை முதல் நீ என் குவாட்டர்ஸ்லே தங்கி இருக்கும்போது நம்மோட உறவு முழுக்க தொழில்முறையில் மட்டும் இருக்கும். நீ நோயாளி. நான் நர்ஸ்”.

”மினி, நீ என்னைப் பற்றி நினைக்கறது உண்டா?” சாபு கேட்டான்.

”உனக்கு இந்த ரயில் பயணத்திலே சிரமம் ஏதும் ஏற்படலே தானே? வலி?”

“மினி”, சாபு தன்னை அறியாமல் குரல் உயர்த்தினான்.

”இல்லே. நீ முன்பெல்லாம் என் கனவுகளிலே எப்பொழுதும் கூடவே இருந்தே. இப்போ கொஞ்ச நாளாக அதுவும் இல்லே. இப்போது என் வாழ்க்கையிலே ஒரு பெரிய வெறுமை ஏற்பட்டிருக்கு. அதிலே குழந்தைப் பருவமும், வாலிபப் பருவமும் எதுவும் இல்லை. தொப்புள்கொடி அறுத்ததுமே எனக்கு வயசாயிடுச்சு”.

”சரி, குட்நைட் மிருணாளினி”. சாபு ஃபோனை ஸ்விட்ச் ஆப் செய்யத் தொடங்கினான்.

”வச்சுடாதே. இன்னும் ஒண்ணு கேட்கணும். நீ என்னைப் பற்றி நினைச்சுக்கறியா?”

“இதுதான்னு இல்லே. சில சமயம் என் ஃப்ளாட்டிலே சாத்தி வச்ச பாத்ரூமுக்கு உள்ளே போகிறபோது குப்புன்னு சிகரெட் வாடை அடிக்கறதா தோணும். அப்போ நான் திரும்பி நிற்பேன். சிகரெட் புகைக்கறது பிடிக்காத என் கண்ணை ஏமாத்திட்டு நீ குளியல் அறைக்குள்ளே ஒளிஞ்சிருந்து சிகரெட் பிடிச்சதைப் பற்றி எல்லாம் நான் நினைச்சுக்குவேன்”.

கொஞ்சம் கூடுதலான மௌனத்தைத் தொடர்ந்து மினி கேட்டாள்: “அப்புறம் ஒரு விஷயம். அங்கே டாக்டர்கள் உன் உடம்பிலே இருந்து வெட்டியெடுத்த பாகத்தை ஸ்பிரிட்டில் வச்சுத்தானே கொடுத்து விட்டிருக்காங்க? இங்கே அதை பரிசோதிக்கணும்.”

”பொருள் கையிலுண்டு” அவர்கள் டிவியில் பல தடவை சேர்ந்து  பார்த்த ஒரு திரைப்படத்தில் வரும் உரையாடலைச் சொல்லி அவன் பலமாகச் சிரித்தான்.

“வேணாம்” என்று சொல்லி மிருணாளினி அழைப்பைத் துண்டித்தாள்.

காலையில் எழுந்து ஜன்னல் வழியே பார்த்தபோது அன்றைய தினம் தொடங்கியிருப்பது தில்லி பிராந்தியத்தில்தான் என்று சாபுவுக்குத் தெரிந்தது. மேல் பர்த்திலிருந்து இளம்பெண்ணும் கீழே இறங்கி தன் இருக்கையில் அமர்ந்தாள். சரிவரத் தூக்கமில்லாததால் அவளுடைய கன்னம் வீங்கியிருந்தது.

”குட் மார்னிங்” சாபு சொன்னான். உதட்டைச் சுழித்துக்கொண்டு அவள் மொபைல் போனில் தோண்டிக்கொண்டிருந்தாள்.

”குட் மார்னிங் அல்கா நேகி. பெண். வயது 21”. சாபு மீண்டும் கூறினான்.

“ஓ புத்திசாலி தான். உங்களுக்கு என்ன வேணும்?” அல்கா நேகி கேட்டாள்.

“கஷ்டம் ஏதும் இல்லேன்னா அல்கா என்னைக் கொல்லப் போறது எப்படின்னு சொல்ல முடியுமா?”

சற்று நேரம் யோசித்த பிறகு அல்கா சொன்னாள் : ”சுற்றுச்சூழலை வச்சு”

”ஙே? தில்லியிலே சுற்றுச்சூழல் நச்சு மயமானதுன்னு   தெரியும். அது அல்காவுக்கும் பாதகமான ஒண்ணு தானே.  ஏன் என்னை மட்டும் சுற்றுச் சூழல் கொல்லணும்?’

ரயில் பெட்டிக்குள்ளே நிழல் படரத் தொடங்கியது. பிளாட்பாரம் வந்து கொண்டிருக்கிறது. அல்கா எழுந்து நின்று சொன்னாள் : “அதில்லேய்யா, நான் யோசிச்சது. சுற்றுப்புறச் சூழல்லே மாசு பெருகுவதைப் பற்றி இல்லே. அங்கே காண முடியாத கிருமிகளைப் பற்றித்தான் நினைச்சேன். அந்தக் கூட்டத்திலே பாலை திரியச் செய்யற கிருமிகளும் அடக்கம். பால் திரிஞ்சா, தெரியும்தானே, அப்புறம் திரும்ப பாலாக்க முடியாது. ரெண்டும் ரெண்டு தான் பிறகு. அப்படியான கிருமிகள் காற்றில் பிறந்து பெருகிக் கொண்டிருக்கற காலம் இது. நான் நினைச்சா நீங்க சுவாசிக்கும் இதே வாயுவை வச்சு உங்களைக் கொல்ல என்னால் முடியும்.”.

 

அல்கா பெட்டியை இழுத்தபடி இடைவழியில் நடந்தாள். சட்டென்று அவள் திரும்பி வந்து சாபுவை நோக்கினாள். சிரித்தபடி கை வீசிச் சொன்னாள் : “பை”.

சாபு ரயில் பெட்டியிலிருந்து இறங்கக் காத்திருந்தபோது  மிருணாளினியின் தொலைபேசி அழைப்பு வந்தது. “சாபு, நான் அசோகா வீதியில் மாட்டிக்கிட்டேன். விஐபி யாரோ வர்றதாலே போக்குவரத்து நெரிசல். உன் ரயில் எந்த ப்ளாட்பாரத்தில் இருக்கு?”

”நாலாவது பிளாட்பாரம்”, சாபு சொன்னான்.

”நான் வந்து சேரும் வரைக்கும் நீ அங்கேயே இரு. உடம்பை  ரொம்ப வருத்திக்க வேணாம்”, மிருணாளினி சொன்னாள்.

சாபு பிளாட்பார பெஞ்சில் அமர்ந்தான். பயணம் முடித்த கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் நாலாவது பிளாட்பாரத்திலிருந்து செல்வதைப் பார்த்தபடி இருந்தான் அவன். ஒன்றிரண்டு போர்ட்டர்கள், தெரு நாய்கள், ஒரு போலீஸ்காரர், கொஞ்ச தூரத்தில் ஒரு கடையில் குளிர்பானம் குடித்துக் கொண்டிருந்த அல்கா நேகி.

பிளாட்பாரத்தில் அதிகம் நெரிசல் இல்லை. அவனைப் போல் அல்காவும் யாருக்காகவோ காத்திருக்கிறாள் என்று சாபு ஊகித்தான். அவன் கண்மூடி டிசம்பர் வெய்யில் காய்ந்தான்.

நாய்களின் குரைப்பு கேட்டு சாபு விழித்துக் கொண்டான். அவை அவனைச் சுற்றிச் சூழ்ந்து நகராமல் நின்றன. தொலைவிலிருந்து அல்கா நேகி அவனை நோக்கி நடந்து வந்தாள். அவன் அவளைப் பார்த்துச் சிரித்தாலும் அவள் பார்வையைத் தவிர்த்து, அவன் முன் சற்றே விலகி நிற்கும் போலீஸ்காரரை நோக்கி உரத்த குரலில் சொன்னாள்:

“ஆபீசர், என்ன இது? நாய்களுக்கு இங்கே என்ன வேலை?”

போலீஸ்காரர் அவள் சொல்வதைக் கேட்காததுபோல் நின்றிருந்தார்.

“ஆபீசர், உங்க கிட்டே தான் கேட்கறேன். எதுக்காக இந்த நாய்கள் இங்கே சுத்தி சுத்தி வந்துட்டு இருக்கு?” அல்கா கேட்டாள்.

”அல்கா, அதுங்க பாவம் வாயில்லா பிராணிகள். கொஞ்ச நேரத்திலே இங்கேயிருந்து ஓடிடும். எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லே அதுங்களாலே” சாபு கூறினான்.

“நாய்களை பார்க்கறீங்க இல்லே ஆபீசர்?, அல்கா கேட்டாள்.

“நீங்கள் எல்லாம் வந்து போயிட்டிருக்கீங்க. ஆனா இந்த பிளாட்பாரம் அந்த நாய்களோட வசிப்பிடம்.  நூறு வேலை கிடக்கு. நாய் பிடிக்கறதா முக்கியமான காரியம்? மேடம், நீங்க போய்க்கிட்டிருங்க”

”இதோ இருக்காரே, இவர் பெட்டியில் ஏதோ இருக்கு. அதோட வாடையை மோப்பம் பிடிச்சுத்தான் நாய்கள் இங்கே வந்து உட்கார்ந்திருக்கு ஆபீசர் சார். அவரோட பெட்டியை சோதனை போடுங்க”.

அப்போது ஒரு சிறு கூட்டம் அங்கே சேர்ந்தது. போலீஸ்காரர் சொன்னார் : “அந்த ஆளை சும்மா விடுங்க. பார்த்தா உடம்பு முடியாதவர்னு தெரியுது”.

”நீங்க சோதனை போட்டா என்ன குறைஞ்சு போயிடுவீங்க?” அல்கா கேட்டாள். இன்னும் இரண்டு நாய்கள் அங்கே வந்து நின்றன. அவையும் சாபுவை வட்டமிட்டு நின்றன.  கூடி நின்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

“பெட்டியை திறந்து செக் பண்ணுங்க” என்று போலீஸ்காரரிடம் கூட்டத்தில் நின்ற யாரோ சொன்னார். மற்ற பலரும் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்கள்.

போலீஸ்காரர் வேண்டா வெறுப்பாகப் பெட்டியைத் திறந்தார். அவரது கைகள் சாபுவின் அடுக்கி வைத்த சட்டைகள், பேண்டுகள், ஸ்வெட்டர்கள், உள்ளாடைகளுக்கு ஊடே புகுந்து தேடுவதைப் பார்த்தபோது சாபுவுக்குத் தன் அந்தரங்கம் கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் போவதாகத் தோன்றியது.

“இது என்ன?” போலீஸ்காரர் பெட்டியில் இருந்து ஒரு சிறு குப்பியை உயர்த்திப் பிடித்தபடி சாபுவைக் கேட்டார். அவன் அந்தக் குப்பியை முகத்துக்கு அருகில் வைத்துப் பார்த்த பிறகு சொன்னான் :

“இது மாமிசம். திராவகத்தில் வைத்த மாமிச சாம்பிள்”

“சார், எனக்கு இந்த ஆளைத் தெரியும். அல்கா நேகி முன்னால் வந்து சொன்னாள். “இவர் பெயர் என்.சாபு. கேரளத்துக்காரர்”. அவள் சாபுவை நோக்கிச்   சிரித்த பின் அங்கிருந்து நடந்து போனாள்.

“பெயர் சாபு, கேரளக்காரன். சொல்லு. இதென்ன இறைச்சி?”, கூட்டத்தில் இருந்து ஒருத்தன் கேட்டான். அதோடு கூட சாபு முகத்தில் முதல் அடி விழுந்தது.

“இது என் மாமிசம்”, சாபு கைகளால் முகத்தில் விழுந்த அடிகளைத் தடுத்தபடி சொன்னான். “நிஜம்தான் நான் சொல்றது. இது என் இறைச்சி”.

“உன் இறைச்சியா? இதை பொறிச்சு வச்சா நல்லா சுவையா இருக்கும் தானே. நீ எல்லோரையும் முட்டாளாக்கப் பார்க்கறியா?”

முதல் அடி அடித்தவன் கேட்டான்.

கூட்டம் கூவியது : “ நீ பொய் சொல்றே”. அவர்கள் அவனை அடிக்கவும் ஆபாசமாகத் திட்டவும் தொடங்கினார்கள். போலீஸ்காரர் சாபுவைக் காப்பாற்ற அவனைக் கட்டிப் பிடித்தபடி உரக்கச் சொன்னார்: “நிறுத்துங்க. எல்லா தே பசங்களையும் நான் உள்ளே தள்ளுவேன்”.

“ஐயாக்களே, அக்கா தங்கச்சிங்களே” சாபு அழுது கொண்டு கை கூப்பியபடி சொன்னான் : “நான் நோயாளி. இது எனக்கு   ஆப்பரேஷன் செய்து வெட்டி எடுத்த, உடம்புக்கு உள்ளே இருந்த பாகம். தில்லியில் டாக்டர்களிடம் காட்ட எடுத்து வந்தது. நம்பிக்கை இல்லைன்னா என்னை ஆஸ்பத்திரியிலே இருந்து டிஸ்சார்ஜ் செய்த போது கொடுத்த பேப்பர் என்னிடம் இருக்கு”.

”பொய்”, போலீஸ்காரரை தள்ளி  விட்டுக் கூட்டம் கூச்சலிட்டது. சிலர் அவன் தலையில் அடித்தார்கள். தலையில் கை வைத்து சாபு உரக்க அழுதான்.

சட்டென்று அங்கே நிசப்தம் ஏற்பட்டது. கூட்டத்தை விடப் பல மடங்கு இரைச்சலை ஏற்படுத்திக்கொண்டு 12555 கோரக்பூர் – நியூதில்லி  கோரக்தாம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் காலியாக இருந்த நாலாவது ப்ளாட்பாரத்தில் வந்து நின்றது. அதிலிருந்து பயணிகள் இறங்கும் சத்தம் ஓய்ந்த பிறகு ரயிலை அடுத்து  நடந்து வந்த ஒருவன் தொடர்ந்து கூப்பிட்டுச் சொல்வது கேட்டது. “கோரக் பாபாவின் நாட்டில் இருந்து கோரக்தாம் எக்ஸ்பிரசில் வந்த கோரக்பூர் காரர்களே. தென்னிந்தியாவில் இருந்து வந்த ஒரு பசு மாமிச வியாபாரியை மாமிசத்தோடு கையும் களவுமாக பிடித்திருக்கிறார்கள். பொருள் அவன் கையில் உண்டு”.

“பொருள் கையில் உண்டு”. புகைவண்டியின் பல பாகங்களிலிருந்து பயணிகள் கூவிக் கொண்டு சாபுவைச் சூழ்ந்த கூட்டத்தில் கலந்தார்கள். தன் முன் பாய்ந்து அடிக்கிறவர்களின் சகஜ நிலை சாபுவை ஆச்சரியப்படுத்தியது. அவன் தலையில் அடிக்க காலி கோகோ கோலா பாட்டில்களோடு இரண்டு பெண்கள் ஓடி வந்தபோது அங்கே விலையுயர்ந்த செண்ட் நறுமணம் கமழ்ந்தது.

அப்போது ரயில் நிலைய மேல்பாலங்களில் நெரிசல் அதிகமானது.12393 பட்னா – நியூதில்லி சம்பூர்ண கிராந்தி எக்ஸ்பிரஸ்ஸில் வந்து சேர்ந்த பல பயணிகள் பயணக் களைப்பைப் பொருட்படுத்தாமல் பிளாட்பாரம் ஒன்பதில்  இருந்து குதித்தார்கள்.  பின்னர்  மேல் பாலத்தில் ஓடி ஏறியவர்கள் 12957 அகமதாபாத் – நியூதில்லி ஸ்வர்ண ஜயந்தி ராஜ்தானி எக்ஸ்பிரஸில் வந்தவர்கள். தாமதமாக வந்து சேர்ந்த 14257 காசி விஸ்வநாத் எக்ஸ்பிரஸ், 18215 துர்க் – ஜம்மு தாவி எக்ஸ்பிரஸில் ஆரம்பித்து வந்து சேர்ந்த, புறப்பட்ட ரயில்களில் இருந்து பயணிகள் இறங்கி ஓடத் துவங்கினார்கள். மேல்பாலத்தில் இருந்து தூரப் பார்வையில் நான்காம் பிளாட்பாரத்தில் கூட்டம் ஆட்டக்காரர்கள் போல் வட்டமிட்டுச் சுழன்று தரையில் கிடக்கும் ஒருவனை மிதிப்பதையும் குத்துவதையும் கண்டபோது சிலர் ஆவேசமாக அலறிக்கொண்டு முன்னால் ஓடினார்கள் சிலர் கண்ணை மூடிக்கொண்டு திரும்பிப் போனார்கள்.

உதை. குத்து. அடி. வெட்டு. எரி. கீறு. ஒடி. பிளந்திடு. கொல். சுடு.  செய்து முடி. ராப் இசைப் பாடல் பாடுவது போல் மூச்சு விடாமல் கூட்டம் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தது. தான் கிடக்கும் தரையில் ஈரப் பிசுபிசுப்பு  தன் ரத்தத்தால் ஏற்பட்டது என்று சாபுவுக்குப் புரிந்தபோது அவனுக்கு நடுங்கக்கூட உடலில் தெம்பு இல்லை. அல்கா நேகி தன் கொலைத் திட்டத்தை நடப்பாக்கிக் கொண்டிருக்கிறாள். சட்டென்று சாபு  சிகரெட்டின் பலமான வாடையை நுகர்ந்தான். அவனை இருட்டு ஆக்கிரமிக்கத் தொடங்கியது. அது இனி எப்போதும் இருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது.

(மலையாள வாரப் பத்திரிகை மாத்ருபூமியில் ஜனவரி 26 – பிப்ரவரி 1 இதழில் பிரசுரமானது. மலையாளத் தலைப்பு – பால் பிரியுன்ன காலம்

எழுத்தாளரின் அனுமதியோடு மொழிபெயர்க்கப்பட்டுப் பிரசுரமாகிறது)

 

 

 

 

 

 

 

 

தமிழ் மொழிபெயர்ப்பு – இரா.முருகன்

என்.எஸ்.மாதவன்

என்.எஸ்.மாதவன் மலையாளப் புனைகதை இலக்கியத்தைப் புதுப்பித்தவர்களில் முக்கியமானவர், இலக்கியப் போக்கை நவீனத்துவத்துக்கு மடை மாற்றியவர் என்ற பெருமை அவருக்கு உரியது.

1948-இல் எரணாகுளத்தில் பிறந்தார். 

 

1975-இல் ஐ.ஏ.எஸ் அதிகாரியானார். பீகார் மாநிலத்திலும், கேரளத்திலும் உயர் நிர்வாகப் பொறுப்புகள் வகித்து ஓய்வு பெற்றார்.

 

1970-இல் மாத்ருபூமி பத்திரிகை கல்லூரி மாணவர்களுக்காக நடத்திய சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு பெற்ற ‘சிசு’ மூலம் மலையாளத்தில் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர் என்ற இடத்தைப் பிடித்தார்.

 

கேரள மாநில சாகித்ய அகாதமி, ஓடக்குழல், மாத்ருபூமி மற்றும் பல விருதுகள் பெற்றவர். மூன்று முறை சிறந்த சிறுகதைக்கான கதா விருது பெற்றவர்.

 

லந்தன் பத்தேரியிலெ லுத்தினியகள் இவருடைய முதல் நாவல். மலையாள இலக்கியத்தில் சிறப்பிடம் பெற்று விரிவாக வாசிக்கவும் பேசவும் படும் இந்த நாவல் ‘பீரங்கிப் பாடல்கள்’ என்ற தலைப்பில் எழுத்தாளர்  இரா.முருகனால் மொழிபெயர்த்து வெளியிடப் பட்டிருக்கிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.