போர் நடனங்கள்

 1,எனது காஃப்கா மூட்டை முடிச்சுகள்

சில ஆண்டுகளுக்கு முன் லாஸ் ஏஞ்செலஸுக்குச் சுற்றுப்பயணம் செய்து திரும்பிய போது, எனது பயணப்பொதிகளை ஒவ்வொன்றாக வெளியே எடுத்து வைத்தபோது, அழுக்கான காலுறையைப் போர்த்தியது போல ஒரு கரப்பான்பூச்சி என் துணிப்பெட்டிக்குள் ஒரு மூலையில் இறந்து கிடந்தது.

’கருமம் கண்ட சனியனெல்லாம் என் பையில் பிரவேசிக்கிறது’ என்று நினைத்தேன்.

தொடர்ந்து வெளியே எடுத்து வைத்த துணிகள், நூல்கள், காலணிகள், கழிவறைப் பொருட்கள் என அனைத்தையும் மறுபடியும் பெட்டியிலேயே எடுத்துப் போட்டு திண்ணைக்குக் கொண்டு சென்று நடைமேடையில் கொட்டினேன். வேறு ஏதேனும் கரப்பான்கள் கண்ணில் தெரிந்தால் அவை ஓடுவதற்குள் நசுக்கிவிடத் தயாராக நின்றேன். ஆனால் அந்த ஒரேயொரு இறந்த, விரைத்த கரப்பானைத் தவிர வேறொன்றும் இல்லை. நடைபாதையில் கிடந்த அதை நெருங்கி கூர்மையாகப் பார்த்தேன். அதன் கால்கள் உடலுக்குக் கீழே குறுக்கிய நிலையிலிருந்தது. அதன் தலை சோகமான கோணத்தில் சாய்ந்திருந்தது. சோகம்? ஆம், சோகமேதான். தன் சுற்றத்தார் இல்லாமல் தனித்திருக்கும் ஒரு கரப்பானை விட வேறு எவர் இவ்வுலகில் அதிக சோகமாக இருந்திடமுடியும்? எனக்குள்ளேயே சிரித்தேன். இறந்த கரப்பானுடைய மனநிலையை உணர்ந்து, அதன் தற்போதைய நிலைக்கான காரணத்தைக் கற்பனை செய்தேன். எப்படி என் பைக்குள் புகுந்திருக்கும்? எங்கிருந்து வந்திருக்கும்? லாஸ் ஏஞ்செலஸ் விடுதியிலா? விமான நிலையத்தில் பைகளை வைக்கும் பகுப்பிலா? நிச்சயம் இது நம் வீட்டிலிருந்து வந்ததில்லை? பதினைந்து வருடங்களாக இந்த சிறிய சனியன்களை அண்டவிடாமல் பாதுகாத்து வைத்திருக்கிறோம். சரி, இந்த சிறிய பூச்சிக்கு என்னதான் ஆயிற்று? என் பையிலிருந்த நறுமண திரவியத்தையோ சாக்லெட் கட்டியையோ நுகர்ந்து, ஈர்க்கப்பட்டு, வந்து சேர்ந்திருக்குமோ? இந்த துணிப்பையாலும் ஊழாலும் நசுங்கிச் சாவதற்கென்றே, உள்ளே ஏறிக் குதித்திருக்குமோ? மரணிக்கையில் அச்சம், தனிமை, இருத்தலியத்தின் பீதி எதையேனும் உணர்ந்திருக்குமோ?

2.அறிகுறிகள்.

சென்ற கோடையில், எனக்கு இருந்த பல்வேறு ஒவ்வாமைகளுக்கு எதிர்வினையாகச் செவிக்குள் காப்பு மெழுகு நிறைய சுரந்த போது அது வலது காதை அடைத்தது. அச்சமும், குழப்பமும், தவிப்பும் எல்லாம் ஒரு சேர வந்தது. எளிமையாகச் சொல்லவேண்டுமெனில் எனக்கு வலது பக்க காதே கேட்கவில்லை, எட்டுப் பத்து வயதான என் இரு மகன்கள் சொல்வதைக் கேட்க என் தலையைத் திருப்பி இடது காதுவழியேதான் கேட்டாக வேண்டி இருந்தது.

’எங்களுக்குப் பசிக்கிறது. உங்களிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறோம்’ என்றனர் அவர்கள்.

அவர்களுக்கு உணவு தேவைப்பட்டது. எனக்கு அவர்கள் சொன்னது கேட்கவில்லை.

’அம்மா இருந்திருந்தால் இந்நேரம் எங்களுக்கு உணவு தந்திருப்பார்கள்.’

அவர்களது தாய் இரண்டு நாட்களுக்கு முன் தன் தாயுடன் இத்தாலி சென்றுவிட்டாள். இந்த வாரம் முழுவதும் நானும் மகன்களும் மட்டும், துவைக்காத காலுறைகள், மலையேற்றம், சகிக்காத பாஸ்தா குவியல்கள் ஆகியவற்றால் நிரம்பிய, ஆண்களின் வாரத்தைத் துய்த்தாக வேண்டும்.

‘நீங்கள் என்ன சமைக்கப் போகிறீர்கள்? ஏன் இன்னும் சமைக்கவில்லை?’ என்று மகன்கள் கேட்டனர்.

அவர்கள் விளையாடிய போது நான் அரைச்செவிடானதை உணராதவனாய், படுக்கையில் குப்பறப் படுத்து வாசித்தேன். எனவே தனித்துவமான கர்ஜனை ஒன்றைக் கேட்கும் வரை என்னைச் சூழ்ந்திருந்த மௌனத்தை என்னால் குறைகூற முடியவில்லை.

அதன்பிறகு தன் செவித்திறனை ஏறத்தாழ அல்லது முற்றிலும் இழந்துவிட்டதற்காக அவசர சிகிச்சைக்குச் சென்ற ஒரு மனிதனை நினைவுகூர்ந்தேன். மருத்துவர் ஒரு காதைப் பார்த்து அதில் தடுப்பு இருப்பதைக் கண்டறிந்தார். அதற்குள் நுண்ணிய கிடுக்கியை விட்டு ஒரு கரப்பானை வெளியே எடுத்தார். பிறகு மறுசெவிக்குள் நுழைத்து இன்னும் பெரிய கரப்பானை வெளியே எடுத்தார். கரப்பான்களுக்குச் செவிமெழுகைச் சுவைக்க அதிக விருப்பமுண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?

நான் மகன்களுக்கு உணவு சமைத்து, என் குற்ற உணர்வு மீளும் வரை அதிகமாகச் சாப்பிட வைத்தேன். பின் வீட்டை அங்குலம் விடாமல் தூய்மை செய்தேன். பிறகு குளியலறைக்குச் சென்று கண்ணாடி முன் நின்றேன். என் தலையையும் உடலையும் விகாரமான கோணங்களில் ஆட்டி திருப்பி மெழுகு படிந்திருந்த என் செவியைப் பார்க்க முயன்றேன். செவிக்குழாயில் இருக்கும் சிறிய தேவதையிடம் என்னைப் பாதுகாக்கக் கோரி மந்திரங்களையும் பிரார்த்தனைகளையும் சொன்னேன். அந்தத் தேவதையை நான் விடுவிப்பேன்; அவள் உடல் நீண்டு, தன் இறகுகளை அசைத்து உலர்த்தி சிதறிவிட்டு, என் உதடுகளை நோக்கிப் பறந்து வந்து, அவளது உருமாற்றத்திற்கு உறைவிடம் அளித்ததற்கு நன்றிக்கடனாய் இனிய முத்தமிடுவாள்.

3.அறிகுறிகள் மோசமடைதல்.

காலை மூன்று மணிக்கு என் அடைபட்ட வலது செவி முற்றிலும் கேட்கும் திறனற்று போனபோது, அதற்குள் ஏகப்பட்ட பூச்சிகள் அடைந்துகிடப்பது உறுதியானது. மருத்துவரிடம், அவரது அலுவலகத்திற்கு வெளியே நான் காத்திருப்பேன் என்பதைத் தெரிவித்து ஒரு செய்தி அனுப்பி இருந்தேன்.

எனது தந்தையின் இறுதி அறுவைச் சிகிச்சைக்குப் பின் இப்போதுதான் முதல்முறை சுகாதார நிலையத்திற்குள் அடியெடுத்து வைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

4.போர்வைகள்

என் தந்தையின் இடது காலின் மூன்று விரல்களோடு, வலது காலை அறுவை சிகிச்சை மருத்துவர் வெட்டி அகற்றியபோது (இல்லை வலது காலின் ஒரு பகுதியை மட்டும்), வியாதி மீட்பு அறையில் அவருக்குத் துணையாக அமர்ந்திருந்தேன். அதை அறை என்பதை விட மீட்புக்கூடம் எனலாம். அங்கு அந்தரங்கம் என்று ஒன்றும் இல்லை. ஒரு சிறிய திரைச்சீலை கூட தொங்கவிடப்படவில்லை. செவிலியர்களுக்கு, அறுவை சிகிச்சைக்குப் பின்னான நோயாளிகளின் முன்னேற்றத்தை எளிதாகப் பார்வையிடுவதற்கான ஏற்பாடாக அது இருந்திருக்கலாம் என்று கருதினேன், ஆயினும் என் தந்தையின் சில பத்தாண்டு உடல் நலிவையும் மோசமான பழக்கங்களும் எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரிந்தது. வெள்ளை விரிப்பில் வெண்ணிற ஒளியின் கீழ் அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது இன்னும் வெளிச்சம் போட்டுக் காட்டியதுபோல் இருந்தது.

‘நன்றாக இருக்கிறீர்களா?’ என்று கேட்டேன். எத்தனை மடமையான வினா. இந்த நிலையில் யாரால் நன்றாக இருக்க முடியும். நேற்று மருத்துவமனைக்கு நடந்து வந்தவர் என் தந்தை. ஆம், சற்று நிலைதடுமாறி இரண்டு ஊற்றுக்கழிகளால் சமநிலை பேணி வந்தாலும் அதற்கு நடந்து வருதல் என்றுதானே பெயர். சில மணி நேரங்கள் முன்புவரை அவரிடம் ஒரு ஜோடி பாதங்கள் இருந்தன. அவை கருமையாகவும் நோயுற்று அழுகியும் தான் இருந்தன என்றபோதும் தர்க்கப்பூர்வமாக அவை அவருடைய பாதங்களாகவும் விரல்களாகவுமே இருந்தன. ஆனால் இப்போது அவை வெட்டி எறியப்பட்டுவிட்டன. எங்கே அவை? வலது பாதத்தையும் இடது பாதத்திலிருந்து வெட்டியெடுத்த மூன்று விரல்களையும் வைத்து என்ன செய்தார்கள்? எரிதொட்டியில் எறிந்துவிட்டனரா? அவற்றின் சாம்பல் நகரமெங்கும் படர்ந்து பரவிவிட்டதா?

என் தந்தை ’டாக்டர், குளிர்கிறது’ என்றார்.

நான் ‘அப்பா, நான் தான் இங்கிருக்கிறேன்’ என்றேன்.

’தெரிகிறது, நீ யாரென்று. நீ என் மகன்.’ ஆனால் அவர் விழிகளிலிருந்த வெறுமையை வைத்துப் பார்த்தால் அவர் என் அடையாளத்தை ஊகித்தே சொல்வது தெரிந்தது.

’அப்பா, உங்களுக்கு அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. நீங்கள் மருத்துவமனையில் இருக்கிறீர்கள்.’

‘நான் எங்கிருக்கிறேன் என்று அறிவேன். எனக்குக் கடுமையாகக் குளிர்கிறது.’

’உங்களுக்கு இன்னொரு போர்வை வேண்டுமா?’ அடுத்த மட வினா. கண்டிப்பாக அவருக்கு இன்னொரு போர்வை தேவை. அநேகமாக அவர் இங்கு நெருப்பை மூட்டிக் குளிர்காயும் விறகுகளை எரிக்கவோ அல்லது என்.எஃப்.எல். கால்பந்து விளையாட்டுகளில் கயிற்றுக்கு வெளியே இருக்கும் பெரிய புரோப்பேன் சூடேற்றிகளை எடுத்து வரவோ கூடச் சொல்லலாம்.

நான் மீட்புக்கூடத்தில் நடந்து சென்று செவிலியர் இருந்த அறையை அடைந்தேன். அங்கு இருந்த மூவரில் இருவர் வெள்ளையர், ஒருத்தி கருப்பி. நான் பூர்வகுடி ஸ்போகேன் அமெரிக்கனாகவும் கோர் டி அலென் இந்தியனாகவும் இருந்தமையால் என் தோலின் நிறத்திற்குக் கவனம் கிடைக்கும் என்று நேரடியாக அந்த கருப்பு செவிலியரிடம் சென்று பேசினேன்.

‘என் தந்தை குளிரில் நடுங்குகிறார். இன்னொரு போர்வை கிடைக்குமா?’

தனது தாள்களிலிருந்து கவனத்தைத் திருப்பி என்னைப் பார்த்த அவளது வெளிப்பாடு சினமோ கருணை அற்ற வெறுமையாக இருந்தது.

‘ஐயா, என்ன உதவி வேண்டும் உங்களுக்கு?’ என்றாள்.

’என் தந்தைக்கு இன்னொரு போர்வை தந்தால் பரவாயில்லை. அவர் குளிரில் நடுங்குகிறார்.’

‘ஒரு நொடியில் உங்களிடம் வருகிறேன், ஐயா.’

அவள் மீண்டும் தன்னிடமிருந்த தாள்களில் ஆழ்ந்து சில குறிப்புகளை எடுத்தாள். அதன் பின் செய்வதறியாதவள் போல் சற்று நேரம் உறைந்து இருந்தாள். நான் காத்திருந்தேன்.

’ஐயா’ என்ற கருப்பு செவிலி ‘விரைவிலேயே உங்களிடம் வருகிறேன்’ என்றாள்.

அவள் எரிச்சலடைந்திருந்தாள் என்பது புரிந்தது. இதற்கு முன் பல ஆயிரம் முறை கூடுதல் போர்வை கேட்டு அவளிடம் எத்தனை பேர் வந்திருப்பார்கள்? அவள் படித்த செவிலி, குற்றேவல் புரிபவள் அல்லள். போர்வை மட்டுமே பிரச்சனை என்று சொல்லிவிட முடியாது? ஆட்கள் போர்வை கேட்கையில் அவளிடம் காலத்தையும் கொஞ்சம் கடன் கேட்பதாகத்தானே பொருளாகிறது. தானொரு மருத்துவத்துறை பணியாள் என்பதும் தான் கருணையுள்ளம் கொண்டிருக்க வேண்டும் என்பதும் அவளுக்கு நிச்சயம் தெரியும். ஆனால் என் தந்தை ஒரு குடிகாரர்; சர்க்கரை நோயாளி; அதில் கடைசி நிலைக்குச் சென்று அழுகிய சிறுநீரகம் கொண்ட இந்தியர்; இப்போதுதான் பெருந்தொகை செலவு செய்து ஒரு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார், எதற்கு? மீண்டும் தன் மோட்டார் வாகனத்தில் ஏறி அருகில் இருக்கும் குடிகூடங்களுக்குச் சென்று தன் வெட்டுப்பட்ட காலைக் காட்டி சூதாடி வருவதற்கு. அவள் கொடூரமாக நடந்துகொள்ள விரும்பவில்லை, எனினும் தன்னைத் தானே அழித்துக்கொள்ளும் அகஉந்தம் கொண்டவர்களைக் காப்பாற்றும் வழமையை மருத்துவர்கள் கைவிட வேண்டும் என்று கருதுகிறாள். அதை என்னாலும் மறுக்க முடியாது, ஆயினும் அடிப்படை வசதிகளுக்காக நான் சிலவற்றைக் கோரலாம் இல்லையா?

’என் தந்தைக்குப் போர்வை.’ மீண்டும் கேட்டேன்.

’சரி.’ சொல்லிவிட்டு எழுந்தவள் போர்வைகள் அடுக்கியிருந்த கூண்டினருகே சென்று வெள்ளை நிற போர்வையை எடுத்து என்னிடம் தந்தாள். ’வேறேதும் தேவையென்றால் சொல்லுங்கள்.’

அவள் சொற்றொடரை முடிக்கும் வரை நான் காத்திருக்கவில்லை. என் கையில் போர்வை கிடைத்ததும் தந்தையிடம் சென்றேன். அது மெல்லியது, கிருமி நீக்கம் செய்யும் பொருட்டு பல நூறு முறை துவைக்கப்பட்டு நைந்திருக்கும். உண்மையில் அது மிக மிக மெல்லியதாக இருந்தது. அது ஒரு பெரிய அளவு கடற்கரை துண்டு, அவ்வளவுதான். அதற்குக் கூட பயன்படாது. உலகின் மிகப்பெரிய காஃபி வடிகட்டி என்று சொல்லலாம். கடவுளே, மருத்துவ வசதிகள் இப்படி ஆகிவிட்டனவே. அனைவரும் காப்பீடற்றவர்களாகவும் போர்வையற்றவர்களாகவும் ஆகிவிட்டனர்.

‘அப்பா, நான் வந்துவிட்டேன்.’

வெளிர்ந்திருந்த அவர் மருத்துவ படுக்கையில் படுத்திருந்த போது மிகச்சிறியவராகக் காட்சி தந்தார். எப்படி அந்த மாற்றம் நிகழ்ந்தது? தன் வாழ்வின் முதல் அறுபத்தேழு வருடங்கள் பெரிய, கருமையான ஆளாக இருந்தவர், இப்போது மற்ற வெளிர் வியாதியஸ்தர்களிடையே இவரும் இன்னொருவர். தேன்கூடு! இந்த இடமே சீர்மை இழந்த தேனீக்கூட்டங்கள் இருக்கும் தேன்கூடு என்று தோன்றியது.

’அப்பா, வந்துவிட்டேன்.’

‘எனக்குக் குளிர்கிறது.’

’என்னிடம் போர்வை இருக்கிறது.’

என் தந்தையைச் சுற்றிப் போர்த்தி அவர் உடல் மேல் அதைச் செருகிய போது முதல்முறை வருத்தத்தை உணர்ந்தேன். இந்த தருணத்தைப் பற்றி மருத்துவ இதழ்களில் வாசித்திருந்தேன். காலச்சக்கரம் சுழன்று ஒரு புள்ளியில் பிள்ளைகள் பெரியவராகித் தம் நோயுற்ற பெற்றோரைப் பராமரிக்கும் நிலை வரும். வாழ்க்கைச் சக்கரம்! எத்தனைக் கவித்துவமான பொய்கள்.

’எனக்குச் சூடேறவில்லை. நான் குளிரால் உறைகிறேன்’ என்று சொன்னார் என் தந்தை.

’ ஒரு போர்வை எடுத்துவந்து உங்கள் மீது போர்த்தி இருக்கிறேன் அப்பா.’

’இன்னொன்று வேண்டும். எனக்குக் கடுமையாகக் குளிர்கிறது. எனக்கு இன்னொன்று நிச்சயம் வேண்டும்.’

இதுபோன்ற மலிவான போர்வைகள் பத்து இருந்தாலும் போதாது என்று எனக்குத் தெரியும். என் தந்தைக்கு உண்மையான, தடிமனான போர்வைதான் தேவை.

கூடத்தை விட்டு வெளியேறி வெவ்வேறு வகை கூடங்களையும் கட்டிடங்களையும் தாண்டி ஒவ்வொரு அறையாகத் தேடினேன். ஒரு குறிப்பிட்ட வகை நோயாளிகளும் அவர்களது குடும்பமும் இருக்கிறார்களா என்று தேடினேன்.

அவசர சிகிச்சை, இதயம், புற்றுநோய், நரம்பியல், எலும்பியல், பெண் சுகாதாரம், குழந்தைகள், அறுவை சிகிச்சை என்று அனைத்து அறைகளுக்கும் சென்றேன். யாரும் என்னைத் தடுக்கவில்லை. நோயுற்ற தந்தையின் மகனது தோற்றத்தையும் உடல்மொழியையும் ஏற்றிருந்தேன்.

அதன் பிறகு கடையில் ஒரு பூர்வகுடியினன் நிற்பதைக் கண்டேன். அவன் ஆசியனாக இருக்கக்கூடும். சியாட்டிலில் அவர்கள் அதிகம். சிறிய உருவினன். வெளிர் பழுப்புநிறம், தசைப்பிடிப்பான கைகளும் மென்வயிறும் கொண்டிருந்தான். அவன் மெக்ஸிகனாகவும் இருக்கலாம். அதுவும் ஒருவகை இந்திய இனமே. ஆனால் நான் தேடிய இனம் அதுவல்ல. யார் எந்த இனம் என்பதைக் கண்டறிந்து சொல்வது சில நேரங்களில் கடினமானது. பழுப்பு மக்களே பிற பழுப்பினத்தவரின் அடையாளத்தை ஊகித்துக் கண்டறிய வேண்டி நிலை.

‘ஐயா’ என்றேன்.

’சொல்லுங்கள்’ என்றான்.

’நீங்கள் இந்தியனா?’

’ஆம்.’

’எந்த இனம்.’

’லும்மி.’

’நான் ஸ்போகேன்.’

‘என் முதல் மனைவியும் ஸ்போகேன் தான். அவளை நான் வெறுக்கிறேன்.’

’என் முதல் மனைவி லும்மி. அவள் என்னை வெறுத்தாள்.’

புதிய துணுக்குகளைச் சொல்லிச் சிரித்த போது சடுதியில் அவை பழையனவாகத் தோன்றின.

’நீங்கள் இங்கு எதற்காக வந்தீர்கள்’ என்று வினவினேன்.

’என் சகோதரிக்குக் குழந்தை பிறக்கிறது’ என்றான். ‘பயப்படாதீர்கள், அது எனதல்ல.’

’அய்ய்ய்யோ.’ இன்னொரு இந்திய மரபுத்தொடர். சிரித்தோம்.

’நான் இங்கு இருக்க விரும்பவில்லை. ஆனால் என் அப்பா இந்த புதிய இந்திய பழக்கத்தைத் தொடங்கியிருக்கிறார். அதற்கு ஆயிரமாண்டு மரபு இருக்கிறது என்கிறார் அவர். ஆனால் அது சும்மா, பொய். அவர் தன்னைத் தானே பெருமை காண்பதற்காக ஏற்படுத்திக்கொண்டது. ஒட்டுமொத்த குடும்பமும் அவர் இழுப்புக்குச் செல்கிறது. அது பொய் என்று அறிந்தும் அவருக்கு ஒத்துழைக்கிறார்கள். அவர் மகப்பேறு அறையிலிருந்தபடி பருந்தின் இறக்கைகளால் விசிறிக்கொண்டிருக்கிறார். கடவுளே!’

’இது என்ன மரபு?’

’அதுவா. பெயர் சூட்டுதல், அதை மருத்துவமனையிலேயே செய்கிறார். இந்த தொழில்நுட்பத்தில் இருந்தெல்லாம் அது குழந்தையைக் காக்கப் போகிறதாம். கருமம். மருத்துவமனைதான் அவருக்குப் பிரச்சனையே என்பது போலாகிறது. நமக்கு நல்ல மருத்துவமனைகள் கிடைப்பதற்கு முன் எத்தனைக் குழந்தைகள் இறந்திருக்கின்றன தெரியுமா?’

‘எனக்குத் தெரியாது.’

’எல்லாமே! இல்லை இல்லை. குறைந்தபட்சம் அநேகமானவை இறந்திருக்கின்றன.’

இவன் வாயில் வந்தது பேச்சு, பின்னால் வந்தது வாயு என்கிற ரீதியில் பேசுகிறான், எனினும் அவனை உடனே பிடித்துவிட்டது.

’அதாவது’ என்று தொடர்ந்தான். ‘என் தந்தையை இப்போது நீ பார்க்க வேண்டுமே. சன்னதம் வந்தவரைப் போல என் தங்கையின் படுக்கையைச் சுற்றி ஆடியபடி இருக்கிறார். அதன் வழியே அவர் கருவிற்குள் சென்று பிள்ளையின் உண்மையான வருங்காலத்தை முன்பே அறிந்துவிடுவாராம். அதற்கேற்ப அது பிறக்கும் முன்பே, ஒரு பாதுகாப்பு வளையம் போல பெயரைத் தீர்மானித்துச் சூட்டுவாராம்.’

தாங்கமுடியாமல் சிரித்து தலையை ஆட்டி பின்னால் இருந்த சுவரில் இடித்துக்கொண்டான்.

‘அய்யோ, நானொரு மடையன்’ என்று புண்பட்ட மண்டையைத் தேய்த்தபடி சொன்னான். ’என் மொத்த குடும்பமும் மடையர்களால் நிரம்பியது.’

பூர்வ இந்தியர்களின் உலகம் ஆண் பெண் பாகுபாடின்றி – தம்மைப் புனிதமானவர்களாக நம்பும் – மேதாவிகளால் நிரம்பியது. சென்ற ஆண்டு வாஷிங்டன் பல்கலைக்கழகத்திற்குச் சொற்பொழிவுக்குச் சென்றேன். ஒரு முதிய பெண்மணி சியோ மொழி பண்டிதர், அவரும் ஒரு போலி மேதாவி, இந்திய இறையாண்மை பற்றியும் இலக்கியம் பற்றியும் பேச வந்திருந்தார். அவர் தனித்த, உள்ளார்ந்த ஒரு இலக்கிய அடையாளம் தம் இனத்திற்கு இருப்பதாக வாதிட்டார். இதில் முரண் என்னவென்றால் அவர் ஆங்கிலத்தில் வெள்ளை இன பேராசிரியர்களிடம் சொற்பொழிவாற்றினார். ஆனால் நான் அப்பெண்மணி மீது சினமோ சலிப்போ கொள்ளவில்லை.

அவளுக்காகப் பரிதாபம் கொண்டேன். அவள் நினைவேக்கத்தினால் அழிகிறாள் என்று உணர்ந்தேன். அவள் நினைவேக்கத்தைத் தனக்கான போலி வழிபாட்டுச் சிலையாக, மெல்லிய போர்வையாகத்  தேர்ந்தெடுத்து மெல்ல மெல்ல அழிகிறாள்.

’நினைவேக்கம்’ என்று மருத்துவமனையிலிருந்த அந்த நபரிடம் சொன்னேன்.

’என்ன?’

’உம் தந்தை. அவர் நினைவேக்க நோயினால் பாதிப்படைந்திருப்பதாகத் தெரிகிறது.’

’ம். பழைய பள்ளித் தோழிகளைப் புணர்ந்தது பற்றிச் சொன்னதை வைத்து நீ அப்படி நினைக்கிறாய்’ என்றான். ‘சரி, நீ இங்கு எதற்காக வந்தாய், சொல்லவே இல்லையே.’

’என் தந்தைக்கு இப்போதுதான் பாதத்தை வெட்டி எடுத்தார்கள்.’

‘சர்க்கரை?’

‘அதோடு வோட்காவும்.’

’வோட்கா போதுமா கூடவே நினைவேக்கத்தையும் பின் தொடர்பவரா?’

‘இரண்டும்.’

’இந்தியன் ரத்தத்தில் ஊறியது.’

’ஆம்.’

அதற்குப் பின் சொல்லப் பெரிதாக ஏதுமில்லை.

’சரி, நான் திரும்பிச் சென்றாகவேண்டும். இல்லையெனில் என் தந்தை பருந்து இறக்கையை ஆட்டி என் பெயரை மாற்றிவிடுவார்.’

’கொஞ்சம் பொறுக்க முடியுமா?’ என்றேன்.

‘ம்?’

‘ஒரு உதவி.’

’என்ன?’

’என் அப்பா. மீட்புக் கூடத்தில் இருக்கிறார். அது திறந்தவெளிபோலப் பரந்த அமைப்பாக இருக்கிறது. அவருக்குக் கடுமையாகக் குளிர்கிறது. அங்கு மோசமான மெல்லிய போர்வைதான் தருகிறார்கள். இங்கு யாரேனும் இந்தியர்கள் இருந்தால் அவர்களைச் சந்தித்து ஒரு போர்வை கேட்கலாமே என்றுதான் வந்தேன்.’

’அதாவது, எங்களிடம் போர்வை இருந்தால் இரவல் வாங்கலாம் என்று.’

’ஆம்.’

‘அதாவது நீயாகவே இந்தியர்கள் யாரும் கண்டிப்பாக இருந்தால் கூடுதலாக ஒரு போர்வை வைத்திருப்பார்கள் என யோசித்துக்கொண்டாய்.’

’ஆம்.’

’என்னவொரு அபத்தம்.’

‘புரிகிறது.’

’அதுமட்டுமில்லை இது மோசமான இன உணர்ச்சி.’

’ஆம்.’

’உன் இனத்தையே முன் முடிவுகளால் அவமதிக்கிறாய்.’

‘ஆம். புரிகிறது.’

’ஆனால், நீ நினைத்தது உண்மைதான். எங்களிடம் நல்ல தரமான, புதிய போர்வைகள் நிறைய இருக்கின்றன. கடவுளே, என் சகோதரி என்ன ஒரு டஜன் பிள்ளைகளா பெற்றெடுக்கப் போகிறாள்.’

ஐந்து நிமிடத்திற்குப் பின் தன் தந்தையுடன் சகோதரியின் அறையிலிருந்து உயர்தர போர்வையுடன் வெளியே வந்தான். அவன் தந்தை இளைஞர் போல் சட்டை அணிந்து தன் நரைத்த தலையில் பருந்தின் இறகைச் செருகி இருந்தார்.

‘நாங்கள் உன் தந்தைக்கு இதைக் கொடுக்க விரும்புகிறோம்’ என்றார் அம்முதியவர். ’அது என் பெயரனுக்கானது, இருப்பினும் உன் தந்தைக்கு அது உதவட்டும்.’

’நன்றி.’

’அதற்கு ஆசி தருகிறேன். உன் தந்தைக்கும் போர்வைக்கும் ஒரு குணப்பாடலைப் பாடுகிறேன்.’

நான் கண் சிமிட்டினேன். இந்த நபர் பாட்டுப் பாட விரும்புகிறாரா? அது ஆபத்தானது. அது இரண்டு நிமிடமும் ஆகலாம், இரண்டு மணி நேரமும் ஆகலாம். யாருக்கும் தெரியாது. தன்னைப் புனிதராகக் காட்ட விரும்பும் ஆர்வம் கண்களில் மின்னும் இந்த முதியவர் ஒரு வாரம் கூட பாடலாம். தடை நிபந்தனை ஆணை வழங்காமல் இந்த நம்பிக்கையாளரைப் பாட விடுவது அத்தனை உசிதமல்ல.

’என் தந்தை மிகவும் நொந்திருக்கிறார். நான் அவரைச் சென்று பார்த்தாக வேண்டும்.’

’அஞ்சாதே’ என்று சொல்லி கண்ணடித்தார் பெரியவர். ‘என்னிடம் உள்ள சின்ன பாடலைப் பாடுகிறேன்.’

கடவுளே, இதற்கு முன் தன்னை அறிந்த அடிப்படைவாதி என்று ஒருவரைக் கேள்விப்பட்டதே இல்லையே. கடந்த ஐம்பது ஆண்டுகளில் சிறந்த ராக் இசைப்பாடல்களின் பட்டியலில் வருவனவற்றைப் போல மூன்று நிமிடம் நாற்பது நொடிகளில் இப்பாடல் முடிந்தது. அவருக்குப் பின் நின்று துணைகீதம் இசைத்தான் அவரது மகன். அவன் முன்பு தன்னை வெளிப்படுத்தியது போல அத்தனைப்  பகுத்தறிவுவாதி இல்லையோ என்று தோன்றியது. ஆனால் கேலிக்குரிய விசயங்கள் சில இருந்தன. அந்த முதியவருக்கு நன்றாகப் பாடத் தெரியவில்லை. நீங்கள் மருத்துவமனைகளில் குணப்பாடல்களைப் பாடப்போகிறீர்கள் எனில் குறைந்தது உங்களுக்கு நற்குரல் இருக்கவேண்டும் இல்லையா? ஆனால் இவருக்கு சுருதி விலகியே பாடமுடிகிறது. அவர் குரல் உடைந்து தழுதழுக்கிறது. திறனின்றி பாடப்படும் போது புனிதப்பாடல் அதற்கான பலனை இழந்துவிடுமா இல்லையா?

பாடி முடித்ததும் ‘அதுதான் உன் தந்தைக்கான பாடல்’ என்றார் முதியவர். ’நான் அதை அவருக்குத் தந்துவிட்டேன். இனி ஒருபோதும் அதைப் பாட மாட்டேன். அது அவருடையதாகிவிட்டது.’

அவருக்குப் பின் இருந்த மகன் தன் விழிகளைச் சொக்கி தன் சகோதரியின் அறைக்குள் சென்றான்.

‘சரி. மிக்க நன்றி’ என்றேன்.

போர்வையையும் அவரது ஆசியையும் பெறும் அதேசமயம் மனத்திற்குள் அவரைக் கேலி செய்வது குறித்துக் குற்ற உணர்வு எழாமல் இல்லை. ஒருவேளை உண்மையாகவே அம்முதியவரிடம் சில ஆற்றல், மருத்துவ குணம் இருக்கலாம். அவரால், என் மனத்தில் நுழைய முடிந்திருக்கிறதே.

’நீ அதை நம்புகிறாயா இல்லையா என்பது பொருட்டே அல்ல. போர்வைக்கு அந்த பாடல் கேட்டிருக்க வேண்டும் அவ்வளவுதான்’ என்றார்.

என் தந்தை ’எங்கே போயிருந்தாய்?’ என்று திரும்பி வந்த என்னைக் கேட்டார். ‘எனக்கு நடுங்குகிறது.’

’தெரியும். தெரியும். உங்களுக்கு ஒரு நல்ல போர்வை வாங்கி வரத்தான் போனேன். இது உங்களைக் கதகதப்பாக வைத்திருக்கும்.’

தரமான போர்வையால் அவரைச் சுற்றினேன். தடித்த முனைக் குஞ்சத்தை அவர் தாடையருகே இழுத்து வைத்தார். அதன் பின் பாடத் தொடங்கினார். அதுவும் ஒரு குணப்பாட்டே. நான் இப்போது கேட்ட பாட்டு இல்லை எனினும் வேறொன்று. என் தந்தைக்கு அழகாய் பாட வரும். ஒரு மனிதன் தனக்குத் தானே குணப்பாட்டு பாடிக்கொள்வது சரியா என்று அறியேன். அந்த பாடலுக்குத் துணை செய்ய வேண்டுமா என்றும் அறியேன். பல ஆண்டுகளாய் அதைப் பாடி இருக்கவில்லை என்ற போதும் அவரோடு இணைந்தேன். இந்த பாடல் என் தந்தையின் வெட்டுண்ட பாதத்தைக் கொண்டுவராது, அவரது சிறுநீர்ப்பை, நுரையீரல், இதயம் எதையும் சரி செய்யாது என்றும் அவரால் எழுந்தமர முடிந்த அடுத்த கணமே அவர் ஒரு குடுவை வோட்காவைக் குடிக்கப் போவதைத் தடுக்காது என்றும் தெரியும். இந்த பாடல் மரணத்தைத் தடுக்காது. தற்காலிகமானது; ஆனால் போதுமானது. இது ஒரு நல்ல பாடலும் கூட. எங்கள் குரல்கள் மீட்புக்கூடத்தை நிரப்பியது. நோயாளிகளும் நோயற்றவர்களும் நின்று கேட்டனர். செவிலிகள், தொலைவிலிருந்த கருப்புச் செவிலி உட்பட தன்னையறியாமல் எங்களை நோக்கி ஓரிரு அடிகள் வைத்தனர். கருப்பு செவிலி பெருமூச்சு விட்டுப் புன்னகைத்தாள். நான் பதிலுக்குப் புன்னகைத்தேன். அவள் என்ன யோசித்தாள் என்பதை அறிந்திருந்தேன். சிலநேரங்களில் இத்தனை வருடங்களுக்குப் பிறகும், தன் பணியில் வியக்கும் தருணங்கள் இருப்பதையும், மக்களின் முடிவற்ற அபத்தமான நம்பிக்கைகளின் அற்புதங்களையும் வியந்திருப்பாள்.

5,மருத்துவரின் அலுவலகம்.

என் மகன்களுடன் எனது மருத்துவரைச் சந்திக்கச் சென்றேன். அவர் அழகர், அமைதியானவர், பண்பானவர். இரண்டு ஈராக் யுத்தங்களிலும் பங்கெடுத்தவர். என்னால் கேட்க முடியவில்லை என்று அவரிடம் சொன்னேன். செவிலி என் செவிக்குழாயில் உள்ள மெழுகையும் திரவத்தையும் தூய்மையாக்குவார் என்று தெரிவித்தார். ஆனால், அவர் உள்ளே பார்த்தபோது ஒன்றுமே இருக்கவில்லை.

அவர் ‘உள்ளே எல்லாம் உலர்ந்து இருக்கிறது’ என்று தெரிவித்தார்.

கட்டிடத்தின் மறுபகுதியில் இருந்த செவி நிபுணரிடம் என்னை அழைத்துச் சென்றார். நான் அஞ்சியிருந்த போதும், என் மகன்கள் அமைதியாக இருக்க வேண்டுமென விரும்பியதால் சமநிலை பேணினேன். எல்லாவற்றையும் விட என் மனைவி அருகிலிருந்து உதவினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.

கேள்வி ஆராய்ச்சித் தேர்வின் போது என்னால், சொடுக்குகள், மணியொலிகள், சொற்கள் ஆகியவற்றில் முப்பது சதவீதத்தை மட்டுமே கேட்க முடிந்தது.  எனக்கு நரம்பு மற்றும் எலும்பு பகுதிகளில் கடத்து செவிடு இருந்ததாகத் தோன்றியது. என் உட்செவியில் தொடர்ந்து செவிப்பறைகளில் குத்துவதை உணர முடிந்தது.

என் தலையில் எத்தனை கரப்பான்கள்தான் குடியிருக்கின்றன?

மருத்துவர் ‘உங்கள் செவியையும் மூளையையும் எம்.ஆர்.ஐ. பரிசோதனைச் செய்து பார்க்க வேண்டும். பிறகு ஒருவேளை என்ன பிரச்சனை என்ற முடிவிற்கு வரலாம்.

ஒருவேளையா? அந்த சொல் என்னை இன்னும் அச்சுறுத்தியது.

என் தலையின் என்னதான் பிரச்சனை? குருதிக்காக ஹைட்ரோசெபாலஸ் மீண்டும் வந்திருக்கிறதா? என் மண்டையில் ஓட்டை விழுந்துவிட்டதா?

நான் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்படுவேனா?

6.மூளைநீர்த்தேக்கம் (ஹைட்ரோசெபாலஸ்).

மூளைக்குழியில் உள்ள மூளைத் தண்டுவட திரவத்தின் அளவில் அதீத பெருக்கு ஏற்பட்டு, அதனால் மூளை வெண்ட்ரிக்கிள்கள் விரிவடைகையில், கபாலம் – குறிப்பாக முன் நெற்றிப் பகுதி பெரிதாதல், மூளைசெல்கள் சிதைவடைதல் ஆகிய நிகழ்வுகளும் மேலதிகமாக நிகழ்வதையே ஹைட்ரோசெபாலஸ் என்று மெர்ரியம் வெப்ஸ்டர் அகராதி வரையறை செய்துள்ளது. நான் ஹைட்ரோசெபாலஸை இப்படி வரையறை செய்கிறேன் :  ‘எனக்கு ஆறு வயதாக இருக்கையில், என்னைக் கிட்டத்தட்ட கொன்றுவிட்ட பருத்த, ஏகாதிபத்திய தர்பூசணி ராட்சஷன்.’

என்னை மரணத்திலிருந்து காத்து இந்த ராட்சஷனை வெல்லும் பொருட்டு 1967ல் நான் ஆறுமாத சிசுவாக இருந்தபோது மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நான் இறந்திருக்க வேண்டியவன். இறக்கவில்லை. நான் கடுமையான மூளை வளர்ச்சி குறைவினால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். மூளையில் மிகச்சிறிய பிரச்சனைகளோடு தப்பிவிட்டேன். எனக்கு வலிப்பு தொடர்ந்து வந்திருக்க வேண்டும். ஏழுவயது வரை வரவும் செய்தன. ஆறு ஆண்டுகள் வலிப்பு எதிர்மருந்தான ஃபினோபார்பிட்டாலை உட்கொண்டு வந்தேன்.

ஃபினோபார்பிட்டாலுக்கு – உறக்கநடை, பதற்றம், குழப்பம், மனச்சோர்வு, கொடுங்கனவுகள், மருட்காட்சிகள், உறக்கமின்மை, கோபம், சிறுநீர்ப்பை குலைவு, மூச்சடைப்பு, தோலில் அழற்சி போன்ற – நிறைய பக்கவிளைவுகள் உண்டு. அவை அனைத்தையும் நான் குழந்தையாக இருக்கையில் அனுபவித்தேன்.

உங்களுக்குக் கரப்பானை எவ்வளவு பிடிக்கும்?

இப்போது பெரியவனாக முப்பத்து மூன்று வருடங்களாக ஃபினோபார்பிட்டால் உட்கொள்ளாமல் இருந்த போதும் அவ்வப்போது, உறக்கநடை, பதற்றம், குழப்பம், மனச்சோர்வு, கொடுங்கனவுகள், மருட்காட்சிகள், உறக்கமின்மை, கோபம், சிறுநீர்ப்பை குலைவு, மூச்சடைப்பு, தோலில் அழற்சி போன்றவற்றை அனுபவித்து வருகிறேன்.

ஃபினோபார்பிட்டாலுக்குப் பிந்தைய மன உளைவு நோய்க்குறி என்று ஏதும் வியாதி இருக்கிறதா என்ன?

ஹைட்ரோசெபாலஸ் நோயாளிகள் பலரும் திசைதிருப்பு சிகிச்சை செய்துகொண்டிருப்பார்கள். திசைமாற்று என்பது அடிப்படையில் மூளைக்குள் குழாய் சரிசெய்யும் பணிதான். அதன் வழியாக அதிகப்படியான மூளை தண்டுவட திரவத்தை வெளியேற்றுவது அதன் சாராம்சம். அத்தகைய திசைதிருப்பிகள் அடிக்கடி சிதைந்து வேலை செய்யாமல் போவதுண்டு. நூற்றுக்கணக்கில் திசைதிருப்பிகளில் பழுது தீர்க்கப்பட்ட, புதிய திசைதிருப்பிகள் வைக்கப்பட்ட பல ஹைட்ரோசெபாலஸ் நோயாளிகளைக் கண்டிருக்கிறேன். அதாவது நூறுக்கும் மேற்பட்ட மூளை அறுவை சிகிச்சை. எந்த அறுவை சிகிச்சையாளர் கையிலும் பத்து விரல்கள் உண்டு. ஒரு மூளைக்கு இரண்டு அல்லது மூன்று பேர் சிகிச்சை செய்வதுண்டு என்று கொண்டாலும் அந்த ஒரு நோயாளியின் மூளையை ஏறத்தாழ மூவாயிரம் விரல்கள் தொட்டுத் தடவி விளையாடி இருக்கும்.

நான் அதிர்ஷ்டக்காரன். எனக்குத் தற்காலிக திசைதிருப்பு சிகிச்சை மட்டுமே தரப்பட்டது. ஏழு வயதிற்கு மேல் மூளைநீர்க்கட்டியின் அறிகுறிகள் எதுவும் என்னைத் தொந்தரவு செய்யவில்லை.

அதன் பிறகு 2008ல், என் நாற்பத்து ஒன்றாம் வயதில், வலது செவி கேட்கும் திறனை இழந்தது.

7.உரையாடல்.

மருத்துவமனையில் வண்டிகள் நிறுத்துமிடத்தில் மகிழுந்தில் அமர்ந்தவாறு, என் வீட்டிற்கு வந்து, மகன்களைப் பராமரித்துக்கொள்ளும் என் மைத்துனனை அழைத்துப் பேசினேன்.

‘நான் தான் பேசுகிறேன். என் தலையில் எம்.ஆர்.ஐ. செய்தாயிற்று.’

புரிந்துகொள்ள முடியாதபடி என் மைத்துனன் எதையோ சொன்னான். நான் என் மோசமான காதில் தொலைப்பேசியை வைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்து நல்ல காதுக்கு மாற்றினேன்.

’எம்.ஆர்.ஐ. உதவியாள் அத்தனை மகிழ்ச்சியாக இருக்கவில்லை’ என்றேன்.

’அது நல்லதல்ல’ என்றான் என் மைத்துனன்.

’ஆம் நல்லதில்லைதான். ஆனாலும் அவன் வெறும் தொழில்நுட்பவாதி மட்டுமே. அவன் மூளை பற்றி நிபுணத்துவம் கொண்டவனல்ல, சரிதானே? அவன் வெறும் புகைப்படம் எடுப்பவன். உண்மை அதுதான். செவி, கேட்கும் திறன் பற்றியெல்லாம் அறியாதவன். எனக்குத் தெரியவில்லை. அவனுக்கு என்ன தெரியும் என்று எனக்குத் தெரியாது. என்னைப் படமெடுத்ததும் அவன் முகத்தில் தெரிந்த பாவம் எனக்குப் பிடிக்கவில்லை, அவ்வளவுதான்.’

’ஒருவேளை உன்னை அவனுக்குப் பிடிக்கவில்லையோ என்னவோ?’

’நான் பயந்து அவனிடம் எனக்குச் சிறுவயதிலிருந்த ஹைட்ரோசெபாலஸ் பற்றிச் சொன்னேன். ஒன்றும் புரிந்ததாகத் தெரியவில்லை.’

’யாருக்குமே அதுபற்றி தெரியாது.’

’உண்மைதான். பையன்கள் சாப்பிட்டார்களா?’

’ஆமாம், சுரண்டி வழித்துத்தான் போட்டேன். இங்கு பெரிதாக ஒன்றுமில்லை.’

‘சரி, அப்படியானால் நான் கடைக்குச் சென்று வருகிறேன்.’

’முடியுமா? உனக்காக நான் வேண்டுமாயின் கடைக்குப் போகிறேன். டிரேடர் ஜோவைக் குடைந்து பொருட்களைப் பேரம் பேசி வாங்கத் தெரியும் எனக்கு.’

’இல்லை, என்னால் முடியும். நான் நன்றாகத்தான் இருக்கிறேன். எம். ஆர். ஐ. யின் போது உறங்கினேன். அவ்வப்போது தசையிழுப்பு ஏற்பட்டது. அதனால் இரண்டு முறை செய்யவேண்டியதானது. இல்லையென்றால் இன்னும் சீக்கிரம் முடிந்திருக்கும்.’

’அது பரவாயில்லை. நாங்கள் நலம்.’

’எம்.ஆர்.ஐ. க்குள் நுழைப்பதற்கு முன் உனக்கு ஜாஸ், செவ்வியல், நாட்டுப்புற அல்லது ராக் வகைமைகளில், எந்த பாடல் வகைமை பிடிக்கும் என்று கேட்கிறார்கள். தன் வாழ்வின் அந்திமக்காலத்தை என் தந்தை முழுவதும் எம்.ஆர்.ஐ. குழாய்களின் அருகிலேயே கழித்தது நினைவுக்கு வந்தது. எந்த வகை இசையை அவர் தேர்ந்தெடுத்திருப்பார் என்று நினைத்து, நானும் நாட்டுப்புற வகைமையையே தேர்ந்தெடுத்தேன்.’

‘நல்ல நாட்டுப்புற இசையை ஒலித்தார்களா?’

’அது ஷானியா ட்வைனின் நம்பிக்கைக் குன்று தொகுப்பு, கருமம். ஜார்ஜ் ஜோன்ஸோ லொரெட்டா லின்னோ குறைந்தபட்சம் ஜார்ஜ் ஸ்ட்ரெய்ட்டோ ஒலிப்பார்கள் என்று நினைத்தேன். சார்லி ப்ரைடையோ ஃப்ரெட்டி ஃபென்டரையோ ஒலித்திருந்தால் நான் அழுதிருப்பேன்.’

’நீ குடிகார இந்திய தந்தைத் தொகுப்பை விரும்பி இருக்கிறாய்?’

’அது என் மேற்கோள், என்னுடையதை எனக்கே மேற்கோள் காட்டுவது சரியல்ல.’

’ஏன்? நீ எப்போதும் அதைத்தானே செய்வாய்.’

’எருமை! சரி, ஆகமொத்தத்தில் நான் நலம், என்றே நினைக்கிறேன். கடைக்குப் போகிறேன். ஏற்கனவே அதைச் சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன். சீக்கிரம் வந்து சந்திக்கிறேன். உனக்கு ஏதும் வேண்டுமா?’

’எனக்கு டிரேடர் ஜோவைப் பிடிக்கும். அவர்களிடம் மோசமானது என்னவென்று தெரியுமா? அவர்களிடம் இருக்கும் ஒரு பொருள் மீது ஆழ்ந்த பற்று கொள்வீர்கள். ஒரு வருடமாக அதை வாங்கி வைத்துப் பழகிவிடுவீர்கள். திடீரென்று அது இருப்பில் இல்லாமல் மறைந்துவிடும். அவர்களிடம் எனக்குப் பிடித்த வோண்டோன்கள் நிறைய இருந்தன, இப்போது இல்லை. உனக்கும் பையன்களுக்கும் வாங்கி வரத் தயாராக இருக்கிறேன். ஆனால், எனக்கென்று எதுவும் வேண்டாம். நான் அவர்களுடைய எதையும் துய்க்காமல் ஒரு மனித உண்ணாவிரதப் போராட்டத்தில் இருக்கிறேன்.’

8.உலகத் தொலைப்பேசி உரையாடல், காலை 3 மணி.

பாலாடைக்கட்டி, இறைச்சி துண்டங்கள், லவங்கம் ஆகியவற்றோடு வீட்டிற்கு வந்த போது என் மைத்துனன் கிளம்பி இருந்தான். ஜார்ஜ் ரோமிரோவின் டைரி ஆஃப் தி டெட் திரைப்படத்தைப் பார்த்தேன். டஜன் கணக்கில் சோம்பிகளை நடுநெற்றியில் சுட்டுக் கொன்று வந்தார்கள். இந்த படத்தைத் தேர்வு செய்ததற்காக என்னை நானே நொந்துகொண்டேன்.

படம் முடிந்தபின் ஒன்பது மணி நேரம் முன்னால் இருக்கும் இத்தாலியில் இருந்த என் மனைவியிடம் பேசினேன்.

அவள் ‘நான் வீட்டிற்கு வர வேண்டும்’ என்றாள்.

’இல்லை, வேண்டாம். நான் நன்றாகவே இருக்கிறேன். நீ ரோமில் இருக்கிறாய்! அங்கு இன்று என்ன பார்த்தாய்?’ என்றேன்.

’வாடிகன்.’

’நீ இப்போது அங்கிருந்து வரக்கூடாது. நீ சென்று எதையாவது திருடிக்கொள். அதுவே இந்தியர்களின் சரியான வஞ்சம் தீர்த்தலாக இருக்கும். அல்லது பருந்து சிறகை எங்காவது நட்டு வைத்துவிட்டு கத்தோலிக்கத்தைக் கண்டடைந்தேன் என்று சொல்.’

’நான் கவலையுற்றிருக்கிறேன்.’

‘ஆம். கத்தோலிக்கம் என்றாலே கவலைதான்.’

‘விளையாடாதீர்கள். இன்று அம்மாவை அழைத்துக் கொண்டு விமானம் ஏற முடிகிறதா என்று பார்க்க வேண்டும்.’

’வேண்டாம். வேண்டாம். பொறு. உம் அம்மாவிற்கு வயதாகிவிட்டது. அநேகமாக இது அவருடைய கடைசி சுற்றுலாவாக இருக்கலாம். நீயும் உன் அம்மாவுடன் சுற்றுலா செல்வது இதுவே கடைசியாக இருக்கலாம். எனவே அங்கிருப்பதே சரி. போப்பை நான் விசாரித்ததாகச் சொல். அவரது காலணிகள் எனக்குப் பிடிக்கும் என்று சொல்.’

அன்றிரவு என் மகன்கள் என்னோடு படுக்கையில் சேர்ந்துகொண்டார்கள். பனிப்புயலில் நாய்க்குட்டிகள் என ஒருவரை ஒருவர் அணைத்து உறங்கினோம். மணிக்கொருமுறை விழித்து எழுந்து என் தலையையும் கழுத்தையும் – ஏதேனும் உணர்கொம்புகள் முளைத்துவிட்டதா என்று – தொட்டு அதன் அளவையும் வடிவத்தையும் உறுதி செய்தேன். சில பூச்சிகள் தன் உணர்கொம்புகள் மூலமாகக் கேட்கும் திறன் பெற்றவை. ஒருவேளை எனக்கு அதுதான் நிகழ்கிறதோ?

9.பிரியா.விடை

மார்ச் 2003ல் பகுதிநேர கட்டுமானப் பணியாளராகிய என் தந்தை முழுநேர குடிகாரராக இருந்ததன் காரணமாக இறந்தார். தன் மரணப்படுக்கையில் இருந்தபோது என்னிடம் ‘அந்த விளக்கொளியை தயவுசெய்து நிறுத்து’ என்று கோரினார்.

’எந்த விளக்கை?’ என்று கேட்டேன்.

’உத்திரத்தில் இருப்பது.’

’அப்பா, அங்கே எந்த விளக்குமில்லை.’

’அது என்னை எரிக்கிறது. அதன் அதீத வெளிச்சம் என் தோலை எரிக்கிறது மகனே.’

’அப்பா, சத்தியமாக அங்கு எந்த விளக்கும் இல்லை.’

‘பொய் சொல்லாதே மகனே. இறைவன் என் மீது தீர்ப்பொளியை வழங்குகிறார்.’

’அப்பா, நீங்கள் 1979லிருந்து நாத்திகர். நீங்கள் உங்கள் பிறப்பை நினைவுகூர்கிறீர்கள். உங்கள் கடைசி நாளில் முதல் நாளை நோக்கிச் செல்கிறீர்கள்.’

’இல்லை மகனே. கடவுள் என்னிடம் என் அழிவை அறிவிக்கும் செயல்தான் இது. பிரபஞ்சத்தின் செறிந்த ஒளியினால் பாதையமைத்து என்னை எனது தீக்கனல் நிரம்பிய கல்லறைக்குச் செல்ல பணிக்கிறார்.’

’இல்லை அப்பா. அது நீங்கள் பிறந்த அறையின் ஒளி.’

’அது உண்மையெனில் என் அம்மையின் கருப்பையின் செயல்பாட்டை நிறுத்திடு.’

எங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடுகாட்டில், கத்தோலிக்க கல்லறையில் எங்கள் தந்தையைப் புதைத்தோம். அவரது பெயரே எனக்கும் இடப்பட்டதால், என் பெயர் பொறிக்கப்பட்ட அவர் கல்லறையைக் கூர்ந்து கவனிக்க வேண்டியதாயிற்று.

10.போர் களைப்பு.

என் தந்தை இறந்து இரண்டு மாதங்களுக்குப் பின் எங்கள் குடும்பத்தினருக்கும் போருக்கும் இடையிலான தொடர்பைப் பற்றிய ஒரு நூலை ஆராய்ச்சி செய்தேன். என் அத்தைமகன் ஒருவன் 1991ல் ஈராக் போரின் போது சமையற்காரனாக சேவை புரிந்திருக்கிறான். இன்னொருவன் 1964-65ல் வியட்நாம் போரில் சமையற்காரனாகவே இருந்திருக்கிறான். என் தந்தையின் தந்தை அடோல்ஃப் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்று ஓகினாவா தீவுகளில் போரில் இருந்தபோது 1946 ஏப்ரல் 5 அன்று கொல்லப்பட்டார்.

அந்த வியட்நாமில் இருந்தவனோடு பணியாற்றிய பதிமூன்று பேரை என் ஆய்விற்காகப் பேட்டி எடுத்தேன். ஆனால் என் தாத்தாவோடு பனியாற்றியதில் ஒருவர் மட்டுமே உயிருடன் இருந்தார். 2008 ஜனவரி, 14 அன்று ஐபாடையும் நுண்பேசியையும் வைத்து அவரிடம் பதிவு செய்த பேட்டியின் ஒரு பகுதியை மட்டும் கீழே தந்திருக்கிறேன்.

நான் : ஐயா, வணக்கம். நான் லினோவியா, மிச்சிகனிலிருந்து பேசுகிறேன். உங்களைப் பேட்டி எடுக்க வந்திருக்கிறேன். நீங்கள் உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளத் தயாராக உள்ளீர்களா?

லியோனார்ட் எல்மோர் : என்ன?

நான் : மன்னிக்கவும். நீங்கள் உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள முடியுமா என்று கேட்டேன்.

லி.எல். : நீங்கள் சத்தமாகப் பேச வேண்டியிருக்கிறது. என் செவிக்கருவியின் மின் தேக்கம் குறைந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

நான் : உங்கள் செவியில் அழகாக இருக்கிறது.

லி.எல். : ஆம். அதை என்னால் பயன்படுத்த முடியும். என்னிடம் உள்ள ரிமோட்டை வைத்து, இதன் வழியாகத் தொலைக்காட்சி, ஒலிபெருக்கி, தொலைப்பேசி ஆகியவற்றோடு தொடர்பு கொள்வது சாத்தியம். நவீனத் தொழில்நுட்பம். ப்ளூடூத் செவியுணர்கருவி. எனக்காக, என் பெயரன் வாங்கித் தந்தது. பொறு, சரியாகிவிட்டது. நாம் தொடங்கலாம். என்னால் இப்போது கேட்க முடிகிறது? முன்பு, நீ என்ன கேட்டுக்கொண்டிருந்தாய்?

நான் : எனது பதிவு கருவியில் உங்களை அறிமுகம் செய்துகொள்ளுங்கள் என்றேன்.

லி.எல். : கண்டிப்பாக, என் பெயர் லியோனார்ட் எல்மோர்.

நான் : உங்களுக்கு என்ன வயதாகிறது?

லி.எல். : 85 அரையாகிறது (சிரிக்கிறார்). என் கொள்ளுப் பெயர, பெயர்த்திகள் எப்போதும் ஏழரை, எட்டரை என்று சொல்கிறார்கள். என் வயதிலும் அதுபோலச் சொல்லிப் பார்த்தால் சிரிப்பு பொத்துக்கொள்கிறது.

நான் : நல்லது. நான் எனது தாத்தாவைப் பற்றி உங்களிடம் சில கேள்விகள் கேட்க விழைகிறேன்.

லி.எல். : அடோல்ஃப். இப்படியொரு பெயரை மறப்பது எளிதல்ல. இந்திய முதலாளி என்று அழைப்பது அத்தனை நல்லதல்ல என்றபோதும் நாங்கள் அப்படித்தான் அழைத்தோம். நான் சில இந்தியர்களோடு சேர்ந்து ராணுவ சேவை புரிந்தேன். கருப்பர்களைப் போல இந்தியர்களை அந்த பையன்கள் பிரிப்பதில்லை பாரேன். பையன்கள் என்று இப்போது சொல்ல முடியாது எனினும் அப்போது பையன்களாகத்தானே இருந்தனர். நாங்கள் எல்லோருமே சிறுவர்கள்தானே. விசயம் என்னவெனில் இந்திய பையன்கள் வெள்ளை பையன்களுடனே சேர்ந்து உண்டு, உறங்கி வாழ்ந்தனர். எங்களுடனேயே அணுக்கத்தில் இருந்தனர். எது எப்படியோ அவர்கள் அனைவரையுமே இந்திய முதலாளி என்றே அழைத்தோம். உன்னையும் ஒரு சிலர் நிச்சயம் அப்படி அழைத்திருப்பார்கள் என்று அறிவேன்.

நான் : ஒரேயொரு முறை.

லி.எல். : உனக்கொரு பிரச்சனையும் இல்லையா, அதனால்?

நான் : அழைத்தவன் முகத்தில் கூடைப்பந்தை எறிந்தேன்.

லி.எல். : (சிரிக்கிறார்.)

நான் : நாங்கள் வாழ்வது வேறு காலத்தில்.

லி.எல். : ஆம். ஆம். உண்மைதான்.

நான் : சரி, என் தாத்தாவைப் பற்றி ஏதேனும் செய்திகளைச் சொல்லுங்களேன்.

லி.எல். : அவர் எப்படி இறந்தார் என்பதைச் சொல்கிறேன்.

நான் : உண்மையாகவா?

லி.எல். : ஆம். ஒகினோவா. நாங்கள் கடற்கரையில் இறங்கினோம். அதைப் பற்றிப் பேசுவதே கடினமானது. அது நரகம். நரகத்தினும் கொடியது. நான் எழுத்தாளன் இல்லை. உன்னைப் போல வார்த்தைகளைக் கச்சிதமாகச் சொல்ல கவிஞனும் இல்லை. நான் இப்படிச் சொல்ல முயல்கிறேன். அந்த கடற்கரையில், தீவில், மகன்களும் தந்தைகளும் நிறைந்திருந்தனர். அன்பு செய்பவர்களும் அன்புக்குரியவர்களும். அமேரிக்கர்கள். ஜப்பானியர்கள். ஓகினோவர்கள். நாங்கள் எல்லோரும் இறந்தோம். பிற இனத்து தந்தைகளாலும் மகன்களாலும் அன்புசெய்யப்படுவர்களாலும் கொல்லப்பட்டோம்.

நான் : இது ஒரு கவிதையென்றே படுகிறது எனக்கு. துயரக்கவிதை.

லி.எல். : ஆம், அப்படித்தான் இருந்தது. எங்கும் தீ. எங்கள் அணியில் ஜோன்சி, ஓ நெல் இருவரும் வீழ்ந்தனர். திறந்தவெளியில் மணலில் காயம்பட்டனர். அப்போது உன் தாத்தா, சராசரியாக ஐந்தடி உயரம் அறுபத்தைந்து எழுபது கிலோ எடை இருந்திருப்பான், ஓடிச் சென்று அவர்கள் இருவரையும் தூக்கி தோளுக்கொருவராகப் போட்டுக்கொண்டு மறைவுக்கு ஓடி வந்தான். மகனே, என்ன ஆயிற்று உனக்கு?

நான் : மன்னிக்கவும். உணர்ச்சிவயப்பட்டு விட்டேன்.  என் தாத்தா போரில் நாயகனாக இருந்தார் என்பதையும் 12 தங்கப்பதக்கங்கள் வாங்கினார் என்பதையும் அறிவேன். ஆனால் அவர் எதற்காகப் பதக்கங்கள் வாங்கினார் என்று தெரியாது.

லி.எல். : பதக்கங்களைப் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. நான் பார்த்ததை மட்டுமே சொல்கிறேன். அந்த இருவரையும் காப்பாற்றிய உன் தாத்தாவின் முதுகில் குண்டடிபட்டது. அவர் அங்கேயே மணலில் சரிந்து விழுந்தார். நான் அவருக்கு அருகிலேயே இருந்தேன். அவர் அங்கேயே மரணித்தார்.

நான் : அவர் இறப்பதற்கு முன் ஏதேனும் சொன்னாரா?

லி.எல். : கொஞ்சம் பொறுங்கள். நான் …

நான் : என்னவாயிற்று ஐயா?

லி.எல். : இல்லை… என்னால்… தாங்க…

நான் : மன்னியுங்கள். ஏதும் பிரச்சனையா?

லி.எல். : இல்லை. உன் புத்தகம்… மற்றவை எல்லாம் தான்… நினைவுகள்… நீ இங்கு ஏதோ ஒரு பெரிய விசயத்தை எதிர்பார்க்கிறாய். உன் தாத்தாவிடமிருந்து பெரிய கொடுப்பினையை நோக்கிக் காத்திருக்கிறாய். அவர் கவித்துவமாக, தத்துவார்த்தமாக ஏதேனும் சொல்லி இருக்கவேண்டும் என்று நினைக்கிறாய், உண்மையில் உன்னிடம் பொய் சொல்லலாமா என்று கூட யோசித்தேன். என்னால் முடிந்தவரை எதோ ஒரு அழகான சொற்றொடரைக் கட்டமைத்து விடலாமா என்று கூட நினைத்தேன். அன்பு, திண்ணம், மன்னிப்பு என எதையோ இட்டுக்கட்டிச் சொல்ல விரும்பினேன். ஆனால் என்னால் அத்தகைய மேன்மையான ஒன்றை உருவாக்கவே முடியவில்லை. உன்னிடம் பொய் சொல்லவும் நான் விரும்பவில்லை. ஆகவே நான் நேர்மையாக இருந்து உன் தாத்தா எதையுமே கடைசியாகச் சொல்லவில்லை என்று சொல்லியாக வேண்டும். அவர் மணலில் அப்படியே செத்துப் போனார். மௌனமாக.

11.அநாதைகள்

எனக்கு மூளையில் புற்றுக்கட்டி இருக்குமோ என்று அஞ்சினேன். அல்லது என் ஹைட்ரோசெபாலஸ் மீள வந்திருக்கக்கூடும். நான் இறந்து என் மகன்கள் அநாதையாகப் போகிறார்கள் என்று பயந்தேன். இல்லை, அவர்களது அம்மா இத்தாலியிலிருந்து வந்துகொண்டிருக்கிறாள். எனக்கு என்ன நடந்தாலும் அவள் என் பிள்ளைகளைப் பாதுகாப்பாள்.

என் மனைவி ‘இன்னும் பதினாறு மணி நேரத்தில் அங்கிருப்பேன்’ என்று தொலைப்பேசியில் சொன்னாள்.

’நான் இங்கே இருப்பேன்’ என்றேன். ‘மருத்துவரிடமிருந்து வரவிருக்கும் செய்திக்காகக் காத்திருக்கிறேன்.’

12.காஃபியகச் செய்தி.

காத்திருப்பின் போது எனது மைத்துனனை அழைத்து மறுபடியும் என் மகன்களைப் பார்த்துக்கொள்ளச் சொன்னேன். கெட்ட செய்தி வரும்போது அவர்களுடன் ஒரே அறையில் இருப்பதை நான் விரும்பவில்லை.

என் செல்பேசி அடிக்கும் கணத்திற்காகக் காத்திருந்தபோது தனித்து பீதியடைந்தவனாக பேரங்காடியில் நடந்து, புதிய ஆடைகளைப் பார்த்தபடி இருந்தேன்.

இரண்டு மணி நேரங்களுக்குப் பின் கடும் உட்தவிப்பு உடையவனாகி, அனைத்தையும் கொன்று தரைமட்டமாக்கும் விழைவு உள்ளில் எழக் கண்டேன். அதை மறக்க, டர்டி ஜோ என்றழைக்கப்பட்ட காஃபியகத்திற்குச் சென்றேன்.

இந்த நிலையில் ஒரு காஃபி என் வெடிப்பை அணைக்கும் என்று கருதியது மிகவும் அற்பமாகத் தோன்றாமல் இல்லை.

மர நாற்காலியில் வெளியில் அமர்ந்து காஃபியை ஒரு மிடறு உட்செலுத்திய போது, விகாரமாக என் செவிப்பறையில் கேட்ட செல்பேசியின் சலசலப்பை நொந்தேன். அப்போதும் என் செவிட்டுக் காதிலேயே அதை வைத்தேன்.

’ஹலோ, ஹலோ’ என்று சொல்லி பதில் வராததால், ஒருவேளை யாரேனும் விளையாட்டு செய்கிறார்களோ என்று நினைத்து, பின் என் செவிடு நினைவுக்கு வந்தவனாய் இடது காதில் மாற்றி வைத்தேன்.

என் மருத்துவர் ‘ஹலோ’ சொன்னார். ‘இருக்கிறீர்களா?’

‘ஆம்’ என்றேன். ’என்ன நடந்தது, சொல்லுங்கள்.’

’உங்கள் தலையில் சில பிரச்சனைகள் உள்ளன.’

‘என் தலையும் தலையெழுத்தும் எப்போதும் கோணலானவை.’

’நகைச்சுவைத் தன்மையைத் தக்க வைத்துக்கொள்வது நல்ல பழக்கமே. மெனிஞ்சியோமா என்றழைக்கப்படும் சிறிய கட்டி இருக்கிறது. கபாலத்திற்கும் மூளைக்கும் இடையே மூளையைச் சுற்றியுள்ள சருமச்சவ்வில் உண்டாகும் கட்டி இது.’

‘கொடுமையே. எனக்குப் புற்றுநோய்!’

’ம். இந்தவகை கட்டிகள் பெரும்பாலும் புற்றுநோயல்ல. ஆறுமாத காலம் எடுத்து மெதுவாக வளரும் கட்டிகள் இவ்வகை. அப்போது, இன்னொரு எம்.ஆர்.ஐ. எடுக்க வேண்டி வரும். பயப்படாதீர்கள். நலமாகிவிடுவீர்கள்.’

‘என் செவி பிரச்சனை பற்றி?’ என்று வினவினேன்.

’செவித் திறனைக் குறைக்கும் காரணி எது என்று இன்னும் தெளிவில்லை. ஆனால், நீங்கள் ப்ரெட்னிசான் என்ற ஸ்டீராய்டு மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படியே விட்டுவிட்டால் உங்கள் செவி இயல்பு நிலைக்குத் திரும்பும் வாய்ப்புண்டு, ஆனால் ஸ்டீராய்டு எடுத்ததால் பலமுறை செவித்திறன் மீள வந்தவர்களை நாங்கள் அறிவோம். உறக்கமிழப்பு, பருத்தல், இரவு வியர்வை, மனச்சோர்வு போன்ற சில பக்கவிளைவுகள் ஏற்படலாம்.’

’அடப்பாவிகளா’ என்று பொதுவாகச் சொன்னேன். ‘இந்த பக்கவிளைவுகள் எல்லாம் ஏற்கனவே என் வாழ்வின் அங்கமாகவே இருக்கின்றனவே. சீக்கிரம் தீர்ப்புகள் வழங்க இந்த ஸ்டீராய்டு உதவுமா? நிறைய சரும மச்சங்களும் புள்ளிகளும் வேண்டும் என்றே நான் விரும்பியிருக்கிறேன் எப்போதும்.’

மருத்துவர் சிரித்து ‘நீங்கள் ஒரு விளையாட்டு மனிதர்’ என்றார்.

நான் செல்பேசியைச் சுவரில் எறிய விரும்பிய போதும், அந்த எண்ணத்தைக் கைவிட்டு பிரியாவிடை சொல்லி வைத்தேன். சுற்றிலும் தோன்றிய கட்டியில்லாத மனிதர்களையும் அவர்களது கட்டியில்லா தலையின் அழகையும் வெறுமனே பார்த்தேன்.

13.மெனிஞ்சியோமா

மயோக்ளீனிக்.காம் இணையதளத்தில் மெனிஞ்சியோமாவிற்கு வரையறை தரப்பட்டுள்ளது : ’மூளையையும் தண்டுவடத்தையும் சுற்றி இருக்கும் சருமச்சவ்விலிருந்து உண்டாகும் கட்டியே மெனிஞ்சியோமா எனப்படும். பெரும்பாலான மெனிஞ்சியோமா நோய் புற்றுத்தன்மையற்றது (தீங்கற்ற வகை) எனினும் அரிதாக மெனிஞ்சியோமாவில் புற்றுக்கட்டியும் (கொடிய வகை) உருவாகலாம்.’

இருக்கட்டும். இது அச்சமூட்டுவதாக இருந்தாலும் நேர்மறையான ஒரு வரையறை. சார்லஸ் டிக்கின்ஸ் நாவலில் வரும் ஏதோவொரு கெட்ட நிலக்கிழார் கதாபாத்திரத்தைப் பற்றிய விவரிப்பின் போது ‘கொடிய’ என்ற சொல்லைப் படிப்பதைத் தவிர வேறெங்கும் அச்சொல்லைக் கேட்பது அத்தனை இன்பமாய் இருப்பதில்லை. ஆனால் ‘தீங்கற்ற’ என்ற சொல்லும் ‘பெரும்பாலான’ என்று சொல்லும் ஒரே தொடரில் இருப்பது ஆறுதலானது.

வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளி இணையத்தில் மெனிஞ்சியோமா கட்டிகளைப் பற்றிக் கொஞ்சம் வாசித்தேன். வழக்கமாகத் தீங்கற்ற வகைக் கட்டிகளான அவை, மெதுவாக வளரக்கூடியது; மூளைத் திசுக்களில் பரவாதது. பொதுவாக அது உள்நோக்கி வளர்ந்து மூளையையோ தண்டுவடத்தையோ அழுத்தக்கூடும். ஆனால் அரிதாகக் கபாலத்தை நோக்கி வெளிமுகமாக வளர்ந்து தடிமனாகக் கூடும்.

என்ன? இதென்ன கொடுமை? மெனிஞ்சியோமாவால் மூளை தண்டுவட திரவத்தில் அழுத்தம் கூடுமா? கருணையற்ற கொடூரனே, ஹைட்ரோசெபாலஸே. ஏற்கனவே நீர் ராட்சசன் என் மூளையை அழுத்திக் கொல்லப்பார்த்ததைப் போலவே மீண்டும் இன்னொரு ராட்சசனா? இந்த செய்திகளின் துணையோடு, புதிய வினாக்களுடன் என் மருத்துவரை அழைத்தேன்.

’எப்படி இருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். ‘உங்களை நாங்கள் மிகக் கூர்மையாக அணுகி கவனிக்கவிருக்கிறோம். உங்கள் மெனிஞ்சியோமா மிகச் சிறியதாக உள்ளது.’

’சரி. இப்போதுதான் அது பற்றி வாசித்தேன்.’

’வலைத்தளத்திலா?’

‘ஆம்.’

’எந்த தளம்?’

’மயோ க்ளினிக்கிலும் வாசிங்டன் பல்கலைக்கழகத்திலும்.’

’சரி. அவை நல்ல தளங்களே. நானும் பார்க்கிறேன்.’

மருத்துவர் தட்டச்சு செய்வதைக் கவனிக்க முடிந்தது.

’சரியே. இவை துல்லியமான தகவல்களே.’

’துல்லியமென்றால், என்ன சொல்ல வருகிறீர்கள்?’ எனக் கேட்டேன். ’இதன் அறிகுறிகள், குறிப்பாக மூளையை அழுத்துதல் என்பது ஹைட்ரோசெபாலஸைப் போலவே உள்ளதே.’

’உங்கள் எம்.ஆர்.ஐ.ல் சில ஒழுங்கின்மைகள் இருந்தன. எந்திரத்தால் துளையிட்டது போல காயத்தின் வடுக்கள் இருந்தன. அநேகமாக உங்களுக்கு அடிபட்டிருந்து அதனால் திசுக்கள் நசுங்கி இருக்கலாம். அதைத் தவிர மற்றபடி எல்லாம் நலமே.’

’செவிடு பற்றி சொல்லுங்களேன். நீங்கள் சொன்னவற்றுக்கும் அதற்கும் தொடர்பே இல்லையா?’

’ஆம். செவியுணர் நரம்பின் அருகில் கட்டி இருந்தால் மட்டும் அப்படி நிகழ வாய்ப்புண்டு. ஆனால் உங்களுக்கு அப்படி ஏதும் இல்லை.’

’என் மூளைக்கு இது அழுத்தம் ஏற்படுத்துமா?’

‘ஏற்படுத்தலாம். ஆனால் உங்கள் கட்டி மிகச்சிறியதாகவே இருக்கிறது.’

’என் செவியைப் பற்றி ஏதும் தெளிவில்லாத நிலையில் கட்டி குறித்து மட்டும் உங்கள் மீது நான் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்கிறீர்களா?’

’எம். ஆர்.ஐ. மெனிஞ்சியோமாவைக் காட்டி இருக்கிறது. அது ஒரு படம் மட்டுமே. உங்கள் செவித் திறன் குறைவுக்கும் இந்த கட்டிக்கும் இடையே எவ்வித உடலியல் தொடர்பும் இல்லை. இருபது நாள் ப்ரெட்னிசோன் எடுத்த பிறகு நானும் செவி நிபுணரும் உங்கள் செவி, கேட்புத்திறன் குறித்து ஆய்வை மேற்கொள்வோம். அப்போதும் எந்த முன்னேற்றமும் இல்லையெனில் சிகிச்சையை மறுபரிசீலனை செய்வோம்.’

’நீங்கள் கட்டிக்காக எந்த மருத்துவமும் செய்யப்போவதில்லையா?’

‘நான் முன்பு சொன்னதைப் போல ஆறு முதல் ஒன்பது மாதங்கள் கழித்து இன்னொரு எம்.ஆர்.ஐ….’

’முன்பு ஆறு என்றுதான் சொன்னீர்கள்.’

’சரி. இன்னும் ஆறு மாதத்தில் உங்களுக்கு இன்னொரு எம்.ஆர்.ஐ. எடுப்போம். அப்போது நிறைய வளர்ந்திருந்தாலோ, ஆபத்தான இடத்தில் படர்ந்திருந்தாலோ உரிய சிகிச்சைகளை முன்னெடுப்போம். அதனிடையே இதைப் பற்றிய அதீத ஆர்வத்தினால் – அது ஒன்றும் பிழையில்லை – நிறைய இணையங்களில் வாசிப்பீர்கள். அதில் என்ன இருக்கும் என்பதைச் சுருக்கமாக இங்கு தெரிவித்துக்கொள்கிறேன். 5 சதவீத மெனிஞ்சியோமா ஆட்கள் தமக்கு இருப்பதை உணராமலேயே, கண்டறியாமலேயே வாழ்கின்றனர்.  அது தொந்தரவு தராமல் நெடுங்காலமாய் பெரியதாக வளர்ந்து இருந்தாலும், மரணக்காரணத்தை அறிவதற்கான திசுத் துண்டமிடும் போதே கண்டறியப்படுவதும் உண்டு. இவ்வகை கட்டிகள் நீண்டு, ஆபத்தான நிலையை அடைந்தாலும் பெரும்பாலும் உயிருக்கு ஊறுவிளைவிக்காதவை. உங்கள் கட்டி வேகமாக வளர்ந்தாலும் பல ஆண்டுகள் தசாப்தங்கள் கூட தொந்தரவு தராமல் இருக்கும். இதுதான் இப்போதைக்கு என்னால் சொல்ல முடிந்தவை. எப்படி உணர்கிறீர்கள்?’

’பீதியடைந்தவனாக. புண்பட்டவனாக.’

நான் உத்திரவாதத்தை விரும்பினேன், ஆனால் எனக்கோ மூளையில் கட்டி. எப்படி மூளைக்கட்டி ஒருவனுடைய மூளையை நசுக்குவதிலும் புற்றுக்கட்டியாக மாறுவதிலும் ஆர்வமின்றி இருந்தபோதும் கூட, அக்கட்டி இருப்பதாக அறிந்த ஒருவனால் நேர்மறை எண்ணங்களோடு இருக்க முடியும்?

14.மருந்துகடையில் இந்தியன்.

எனது ப்ரெட்னிசான் பரிந்துரைச் சீட்டை பார்டெல் மருந்தகத்திலிருந்த மருந்தாளுநரிடம் நீட்டினேன்.

’இதுதான் நீங்கள் எங்களிடம் வாங்கும் முதல் முறையா?’ எனக் கேட்டாள்.

’இல்லை. இதுவே கடைசியாகவும் இருக்கப் போவதில்லை.’

நான் வீணான ஜென்மமாக உணர்ந்தேன். அவள் சலிப்படைந்தவள் போல இருந்தாள்.

’அரை மணி நேரமாகும். தயாரானதும், உங்களுக்கு ஒலிபெருக்கியில் அழைப்பு அறிவிப்போம்.’

இத்தனை பலவீணனாகவும் அபத்தமானவனாகவும் நொந்தவனாகவும் என்னை நான் இதற்கு முன் உணர்ந்ததில்லை. மந்தையில் உள்ள வலுவற்ற நொண்டி மான் தன் நெற்றியில் ‘என்னை உண்ணுங்கள். நானொரு நொண்டி’ என்று எழுதி வைத்துத் திரிவதைப் போல என்னை உணர்ந்தேன்.

ஆகவே, முப்பது நிமிடங்கள் மறுமையில் இவற்றையெல்லாம் கொண்டு செல்லப் போகிறவனைப் போல, பற்பசை, சுவிஸ் ராணுவ கத்தி, களிம்பு, வாய் மணநீர், காயத்திற்கான ஒட்டி, செரிமான நீர், புரத இனிப்புகள், சவரக்கத்தி என நிறைய பயன்பாட்டுப் பொருட்களைக் கூடையில் அள்ளிப் போட்டபடியே நடந்தேன். பேனா தாள்களை எடுத்தேன். அத்தோடு பனிக்கட்டி வைக்கும் பையையும் சூரிய களிம்பையும் சேர்த்து எடுத்துக்கொண்டேன். சுவணத்தில் எத்தகைய தட்பவெப்பநிலையை எதிர்கொள்ளப் போகிறோம் என்று யாரறிவார்?

இந்த பொருட்டற்ற பொருள் சேகரிப்பு சில நிமிடங்கள் என்னை அமைதியாக்கியது. அங்கிருந்து விளையாட்டுப் பொருட்கள் இருக்கும் பகுதிக்குச் சென்றேன். என் மகன்களுக்கு ஏதேனும் வாங்க வேண்டும். லீகோ கார்கள், எதையாவது தூக்கிச் செல்லும் தூக்கிகள், ஒருவகையான ஏகாதிபத்திய சந்தோசம் பிள்ளைகளுக்கு. ஆனால் சரியான விளையாட்டு சாமானைத் தெரிவு செய்வது பெருங்கலை. ஏமாந்த மகன்களின் கீதத்தைப் பலமுறை கேட்டிருக்கிறேன்.

நான் இறந்தாலும் என் மகன்கள் வாழ்வார்கள், இன்னும் சொல்லப்போனால் நலமாக வாழ்வார்கள் – காரணம் அவர்களுக்கு அன்பார்ந்த அன்னை இருக்கிறாள் – என்ற எண்ணம் வந்ததும் அத்தனை அமைதியில்லை மனதில்.

என் தந்தையின் வாழ்வு பற்றி சிந்தித்தேன். அவரது தந்தை இரண்டாம் உலகப் போரில் இறந்த போது ஆறு வயது. ஒரு சில திங்கள்களுக்குப் பின் அவரது அன்னையும் உருக்கி நோயால் இறந்துவிட்டார். ஆறு வயதிலேயே மனத்தில் ஏகப்பட்ட வலிகள் ஏற்பட்டு உடைந்திருக்க வேண்டும் அவர். எந்த மாயமும் மதமும் பாடலும் நடனமும் அவருக்கு நிம்மதி தரவில்லை.

எனக்குத் தாகமெடுக்கவே, கடவுளே குழாய் நீரைப் பிடித்து அருந்தினேன், அருந்தினேன். மருந்தாளுநரிடம் என் பெயரை அழைக்கும் வரை அருந்தினேன்.

’இதற்கு முன் இவற்றை உட்கொண்டிருக்கிறீர்களா?’ என்று அவள் கேட்டாள்.

’இல்லை’ என்றேன். ’ஆனால் அவை என்னைப் படுத்தி எடுக்கப் போகின்றன, சரியா?’

அது அவளைப் புன்னகைக்க வைத்தது. நான் சுருக்கமாகவும் சோகமாகவும் அந்த புன்னகையின் அழகை உணர்ந்தேன். அடுத்தவர் விசயத்தில் மூக்கை நுழைக்கும் விதமாக இன்னொரு வயதான பெண்மணி ‘உங்களுக்கு நிறைய உறக்கமற்ற இரவுகள் காத்திருக்கின்றன’ என்றாள்.

நான் துணுக்குற்றேன். நான் பேச்சு நடுங்க, அவளை நோக்கி ’ஏன் பெண்மணியே இதற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு? கொஞ்சம் வேலையை மட்டும் பார்த்துவிட்டு இடத்தை விட்டு அகல்கிறீர்களா?’ என்று கேட்டேன்.

என்ன சொல்வதென்று அறியாதவளாய் திரும்பி நடந்து அங்கிருந்து அகன்றாள் அப்பெண்மணி. அதன் பின் பற்று அட்டையை எடுத்து விளங்காத ஸ்டீராய்டுகளுக்கு அதிகப் பணம் தந்துவிட்டு என் மகன்களின் விளையாட்டுச் சாமான்களை மறந்து அங்கேயே வைத்துவிட்டு வந்தேன்.

15.என் தந்தையிடம் நிகழ்த்தப்பட்ட பணிவெளியேற்ற பேட்டி

 • சரியா? தவறா? இடஒதுக்கீட்டினால் வளர்ந்த ஒரு பூர்வ அமேரிக்கன் குடியினால் கெட்டு இறந்தால் அதை இயற்கையான மரணம் என்று கருதலாம்.
 • யாத்திரகாமம் என்றால் என்ன என்று அறிவீரா? ஆம், எனில், இருபத்தைந்து சொற்களுக்கு மிகாமல் நீங்கள் அதிகபட்ச யாத்திரகாமத்தை உணரும் இடம் பற்றிச் சொல்லவும்.
 • எப்போதேனும் நீங்கள் குடித்துவிட்டு, வண்டியில் வாயு நிரப்பாமல், ஆயிரம் மைல் தொலைவுக்கு குடும்பத்தை வைத்து ஓட்டி சென்றதுண்டா?
 • பூர்வ அமேரிக்கரின் வாழ்வில் அர்த்தமுள்ள ஒரேயொரு இலக்கிய சொல்லாக ‘சாலை திரைப்படத்தைக்’ குறிப்பிடலாமா?
 • கடைசியாக நீங்கள் பார்த்த சாலை திரைப்படத்தில் எத்தனை முறை கதாபாத்திரங்கள் ‘போகவேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்தாயிற்றா?’ என்று கேட்டன? மேலும் உங்கள் சாலைப் பயணத்தின் போது உங்கள் பிள்ளைகள் எத்தனை முறை ‘போகவேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்தாயிற்றா?’ என்று கேட்டனர்?
 • அங்கே என்பதை இருபது வார்த்தைகளுக்கு மிகாமல் விளக்குக.
 • உங்கள் 39 ஆண்டு பெற்றோர் வாழ்வில் 612 முறை பிள்ளைகளை மனமுடையச் செய்திருக்கிறீர்கள். அந்த காலத்தில் யார் மீதும் சினந்து அடிக்கவில்லை. இந்த வன்மமற்ற போக்கு வேறு வகையில் நீங்கள் நடந்துகொண்டிருக்க சாத்தியமுள்ள நிலையை விடச் சிறந்ததாக உள்ளது என்று கருதுகிறீரா?
 • மனிதன், நல்ல ஆகிய இரு சொற்களையும் பயன்படுத்தாமல் நல்ல மனிதன் என்றால் என்ன என்பதை வரையறுக்க இயலுமா?
 • உங்கள் மரணத்திற்குப் பிறகு தேவதை வந்து சுவணத்திற்குத் துணையாக அழைத்துச் செல்லும் என நம்பிக்கை உண்டா? அப்படி அழைத்துச் செல்கையில் எத்தனை முறை அந்த தேவதையிடம் நீங்கள் ‘போகவேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்தாயிற்றா?’ என்று கேட்பீர்கள்?
 • வாசிங்டன், ஃப்ரீமேனில் இருக்கும் ஒரு பெரிய அங்காடியில் நின்ற போது உங்கள் மகனுக்கு நீங்கள் பல்வேறு வண்ணங்களில் பனிக்கூழ் வாங்கித் தந்ததையும், உங்களுக்காக பன்றிக்கறியை வாங்கிக்கொண்டதால் பன்றியின் கால்விரல் நகங்களையும் முடிக்கற்றையும் பார்த்ததாகவும் தெளிவற்ற நினைவில் உங்கள் மகன் ஞாபகம் வைத்திருக்கிறான். இது நிகழ சாத்தியம்தானா? உண்மையில் இத்தகைய கொடூரமான உணவையெல்லாம் சாப்பிடுகிறீர்களா?
 • உங்கள் தலைமுறை பூர்வ அமேரிக்கர்களில் நீங்கள் ஒருவர்தான் தன்னிச்சையாகக் கத்தோலிக்க பாடசாலைக்குச் சென்றதாக ஒருமுறை உங்கள் மகன் நகைச்சுவையாகச் சொல்லி இருக்கிறார். ஆயிரக்கணக்கான பூர்வ அமேரிக்கச் சிறுவர்களைக் கத்தோலிக்க, புரோட்டஸ்டண்ட் விடுதிகளில் வைத்து உடல் ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் வதைத்த சம்பவங்களை எல்லாம் மிக மேலோட்டமாகக் கடந்து செல்லும் நகைச்சுவைத் துணுக்கு அது. எது சிரிப்பதற்குரிய துணுக்கு என்று கணிக்கத் தெரியாத தங்கள் மகனின் இந்த துணுக்கைத் தொடர்ந்து, பொதுவாகவே நகைச்சுவையின் மீது தடைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவது அவசியம் என்று நம்புகிறீர்களா?
 • உங்கள் மூத்த மகனும் இரண்டு மகள்களும் முப்பத்தாறு வயதைக் கடந்த பின்னும் உங்கள் இல்லத்திலேயே வசிக்கிறார்கள். இதை பூர்வகுடி பண்பாட்டின் அழகியல் கூறு என்று நினைக்கிறீர்களா அல்லது இல்லத்தை அதிகப்படியாகச் சார்ந்திருக்கும் மனக்கூறு என்று நினைக்கிறீர்களா? அல்லது ஒரே சமயத்தில் இரண்டு பண்புகளும் இதில் உள்ளதாகக் கருதுகிறீர்களா?
 • உயர்நிலை மனம் என்பது ‘ஒன்றுக்கொன்று எதிரான திசைகளில் செல்லும் சிந்தனைகளை ஒரே நேரத்தில் கையாளும் திறன்’ என்று ஸ்காட் ஃபிட்செரால்ட் வரையறுக்கிறார். இது உண்மையெனக் கருதுகிறீரா? ’வெள்ளையர்கள் தம் வாயை அடைத்துக்கொள்ளும் தருணங்களில் மட்டுமே உண்மை பேசுபவர்கள்’ என்று நீங்கள் ஒரு முறை சொன்னதும் உண்மையே என்று கருதுகிறீர்களா?
 • ஒரு கவிஞன் ‘வலியோடு வலி கூடுவதில்லை, மாறாகப் பெருக்கமடைகிறது’ என்றார். இருபத்தைந்து சொற்களுக்கு மிகாமல் நாம் இந்த கணித ரீதியான அச்சுறுத்தும் தந்திரங்களை எவ்வளவு வெறுக்கிறோம் என்று சரியாகச் சொல்ல முடியுமா?
 • உங்களை வரையறுத்துச் சொல்லும் முயற்சியில் தன் வாழ்வின் வெகு முக்கியமான இரவொன்றை உங்கள் மகன் கவிதையாக எழுதியுள்ளார். அது கீழே தரப்பட்டுள்ளது.

 

தந்தையின் காலை வெட்டியதொரு  கொடிய ரம்பம்

குருதி கொட்ட, என அகவை ஒன்பது ஆரம்பம்

இன்னொரு மரமும் வெட்டி வீழ்ந்தது – அவரை அதிகாரி

பின்னே வண்டியில் சிகிச்சைக்குத் தூக்கிச் செல்ல தலை தாழ்ந்தது.

 

பீரும் மார்ஃபினும் மயக்கின பின்னிரவில்

காரும் அவரோடு தடுமாறியது தன்னளவில்

வனம் செல்ல துணைகோரி ‘மான் தோன்றும் பாரென்றார்’

மூச்சிழுத்து மீண்டும் ‘மாயம் போல் தாவிவரும் கூரென்றார்.’

 

அப்போது அழகிய கோடைக்காலம்

வெப்ப மழை வெப்ப இடியிடையில் எங்கள் வலம்

படுத்திருந்த பைன் பக்கம் கிடந்தது அந்த ரம்பம்

விடுத்து திரும்பினால் மீண்டும் திகைப்பு ஆரம்பம்

 

தடுமாறும் கால்களும் கச்சிதமான கைத்துப்பாக்கியுமாய்

ரம்பத்தைச் சுட்டார்; ‘ஏன் இப்படி?’ எனக் கேட்டேன்

இனியமகனே ‘காரணம் உண்டைய்யா?’ என்றார் தந்தை – தாகம்

’தனிய ஒருமுறை குருதிகுடித்த எதுவும் மீண்டும் வரும்!’

 

 • இந்த கவிதையின்படி, அன்றிரவு நீங்கள், ரம்பத்தினால் உங்கள் காலை அறுத்துக்கொண்டீர்கள் என்பது தெளிவாகிறது. ஆனால், உங்கள் மகனின் கவிதையில் உள்ள சம்பவங்களுக்கு மாறாக நீங்கள்…
 1. காயம்பட்ட உடனேயே நீங்களாக அவசரச் சிகிச்சைப் பிரிவுக்குச் சென்றுவிட்டீர்கள்.
 2. உங்கள் அதிகாரி உங்கள் மனைவிக்குத் தெரிவிக்க அவர் வந்த பின்னர் உங்களை மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.
 3. உங்களுக்கு மார்பின் கொடுக்கப்பட்ட பின் ஆல்கஹாலை உட்கொள்ளும் அளவுக்கு நீங்கள் முட்டாள் இல்லை.
 4. நீங்களும் உங்கள் மகனும் அன்று மறுமுறை சம்பவ இடத்திற்குப் போகவில்லை.
 5. அப்படியே போயிருந்தாலும் உங்கள் மகன் வண்டியோட்டி உதவ வேண்டிய நிலையில் நீங்கள் இருக்கவில்லை.
 6. ’தோன்றும்’ ‘மாயம்’ என்ற சொற்களை நீங்கள் ஒருபோதும் உங்கள் வாழ்வில் பயன்படுத்தியதில்லை.
 7. இந்திய கவிஞர் இந்திய கோடை என்ற பதத்தைக் கவிதையில் பயன்படுத்துவது கேள்விக்குரியது என்றே நீங்களும் கருதுகிறீர்கள்.
 8. வெப்ப மழையும் இடியும் என்றால் என்ன பொருள்? வெப்ப மழை சரி, எல்லோருக்கும் தெரியும். அதென்ன வெப்பமான இடி?
 9. ஸ்போகேன் இனத்தைச் சேர்ந்தவருடைய ரம்பம் என்பதால் அதைப் பார்க்க மீண்டும் சென்றிருக்கவில்லை. எந்த ஒரு அறிவிலியும் தனது முழங்காலை வெட்டிய ரம்பத்தைத் தேடிச் செல்ல மாட்டார்.
 10. மூன்றாம் பத்தி புரூஸ் ஸ்பிரிங்க்ஸ்டன் பாடலைப் பிரதி எடுத்தது போல இருக்கிறது. அதுவும் நல்ல பாடலின் பிரதி இல்லை என்றும் தோன்றுகிறது.
 11. கனமான கால்களும் கச்சிதமான கைத்துப்பாக்கியும் என்பது உங்கள் மகன் எழுதியதிலேயே சிறப்பான ஒரு படிமம் என்று நினைக்கிறேன். அதுவே இந்த கவிதையைக் காப்பாற்றுகிறது.
 12. ஒரு சில ரிவால்வர்கள் இருந்தாலும் கைத்துப்பாக்கி ஏதும் உங்களிடம் இல்லை.
 13. நீங்கள் ஒருபோதும் ’ஒருமுறை குருதி குடித்த எதுவும் மீண்டும் வரும்’ என்று ஏதும் சொன்னதில்லை.
 14. ஆனாலும் வாசிக்கும் போது மிகச்சரியானதாகவே தோன்றும் இந்த கவிதை, உங்கள் வாழ்வின் மெய்மையைப் போலவே சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது.
 15. உங்கள் வாழ்வின் மற்ற இயல்புகள் : ‘அடுத்த கண்ணீர்த் துளி கன்னத்தில் வீழும் முன் அங்கே இருப்பேன்.’ என்பதும்,
 16. ’கடவுளுக்கு இந்தியர்கள் மேல் உண்மையில் அன்பிருக்குமாயின், அவர்களை வெள்ளையர்களாகவே படைத்திருப்பார்.’ என்பதும்
 17. ’என்.பி.ஏ. முத்திரையில் ஆஸ்கார் ராபர்ட்ஸனே இருந்திருக்க வேண்டும். ஆனால் வெள்ளையன் என்ற ஒரே காரணத்திற்காக ஜெர்ரி வெஸ்டை பொறித்திருக்கிறார்கள்.’ என்பதும்
 18. ’வெண்ணெய், வெங்காயம், பட்டாணி இணைத்து உண்பதே அற்புதம்.’ என்பதும்
 19. ’நல்ல ஆப்பிள் அல்லது பேரி அல்லது ஆரஞ்சு இருக்கும் போது மாதுளை எதற்கு. காய், பழங்களைப் பொறுத்தவரை தங்களால் எதை விளைவிக்க முடியுமோ அவற்றை மட்டுமே உண்டு பழக வேண்டும்.’என்பதும்
 20. ’ஒரு பெண் உன்னை விரும்ப வேண்டுமென நினைத்தால் உனக்கு நடனமாடத் தெரிய வேண்டும். இல்லையெனில் அதைச் சரிகட்ட வாழ்க்கை முழுதும் கடுமையாக உழைத்தபடியே இருக்க வேண்டும். அப்போதும் கூட டாங்கோ ஆடத் தெரிந்த ஒருவனோடு அவள் சென்றுவிடக்கூடும் என்ற ஆபத்து இருந்தவாறே இருக்கும்.’ என்பதும்
 21. ’கே மார்ட்டில் இருந்த காஃபியகத்தை ஏன் மூடினார்கள் என்று தெரியவில்லை. சொர்க்கம் என்றால் அதுவே.’ என்பதும்
 22. ’தன் மகன் என்ன செய்வான் என்பது எப்போதும் தந்தைகளுக்குத் தெரியும். உதாரணமாக என் அறையிலிருந்த ஹஸ்லர் இதழைப் பார்த்தாயே நினைவிருக்கிறதா? அதில் கேப்டன் கிரிக் போலவும் தளபதி உஹுரா போலவும் இருந்த இருவர் பொது இடத்தில் புணர்வதைப் போன்ற புகைப்படம் கூட இருந்தது. அதுவேதான். அதை எடுத்துப் பதுக்கிக்கொண்டாய் என்பதும் எனக்குத் தெரியும். நான் தெரிந்துதான் அதை அனுமதித்தேன். அது எனக்குத் தெரியாது என்று நினைக்காதே. நினைவில் கொள்க. ஆண்களும் போர்னோகிராபியும் தாவரமும் சூரியஒளியும் போல. எனக்கு போர்ன் ஒளிச்சேர்க்கை.’ என்பதும்
 23. ’உன் தாய் என்னை விடச் சிறந்த ஆண், எப்போதும் ஆண்களை விட அம்மாக்களே சிறந்த ஆண்கள்’ என்பதும் உங்கள் வாழ்வின் மெய்யறிவுகள்.
 24. மறு இணைவு.

இத்தாலியிலிருந்து திரும்பி வந்த என் மனைவி என் மஞ்சத்தில் என்னோடு சேர்ந்தாள். பல ஆண்டுகளாக நிம்மதியாகத் தூங்கியிராதவனைப் போல உணர்ந்தேன்.

’எனக்கு மூளையில் கட்டி வளர்வதாக ஒரு வெட்டிப் பேச்சு இருக்கிறது. அதைச் சிரித்தே நெட்டித் தள்ளிவிட்டேன்’ என்றேன்.

’என்னிடம் அதைச் சொல்லாமல் எவ்வளவு காலமாக மறைத்து வைத்தீர்கள்?’ என்றாள்.

‘என் மூளையில் ஒரு மருத்துவர் முதல்முறையாக விரல்களை வைத்ததிலிருந்தே மறைத்து வைத்திருக்கிறேன்.’

நாங்கள் புணர்ந்தோம். உறங்கினோம். ஸ்டீராய்டின் விளைவாக இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து மணிகளில் விழித்து விழித்து உறங்கினேன். மெத்தையில் என் முதுகு வலிக்கவே தரையில் தட்டையாகப் படுத்தேன். நான் அவ்வளவு சீக்கிரம் இறக்கப் போவதில்லை, கண்டிப்பாக என் குட்டி நண்பன் கட்டியால் இறக்கப் போவதில்லை என்ற எண்ணம் என்னை எந்த விதத்திலும் திருப்திகொள்ளச் செய்யவில்லை. உலகிலிருந்து -என் மனைவி, மக்கள், தாய், உடன்பிறந்தோர் என்று அனைவரிடமிருந்தும் – வெகு தொலைவில் இருப்பதாக உணர்ந்தேன். எப்போதும் தன் மூளைகளில் விரல்கள் பட்டுக்கொண்டிருப்பவர்களோடு மட்டும் அணுக்கமாக உணர்ந்தேன்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு என் கட்டி அளவில் பெரிதாகவும் இல்லை உருமாற்றம் அடையவும் இல்லை என்பதை, இன்னொரு எம்.ஆர்.ஐ. தெரிவித்த போதும் கூட என்னால் உலகத்துடன் அணுக்கமாக இருக்க முடியவில்லை.

‘நன்றாக இருக்கிறீர்கள்’ என்றார் மருத்துவர். ‘உங்கள் செவி எப்படி இருக்கிறது?’

’ஏறத்தாழ 90 சதவீத கேட்கும் திறன் மீண்டுவிட்டது என்றே நினைக்கிறேன்’ என்றேன்.

’அப்படியானால் ஸ்டீராய்டுகள் நன்கு வேலை செய்திருக்கிறது. நல்லது.’

ஒன்பது மாதங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட இன்னொரு எம்.ஆர்.ஐ.யைப் பார்த்து மெனிஞ்சியோமாவாகக் கருதப்பட்டது ஹைட்ரோசெபாலஸால் உண்டான ஒரு வடுவாக அன்றி வேறேதுமின்றி இருக்கலாம் என்று என் மருத்துவர் ஒரு கருத்தை முன்வைத்த போது கடவுளுடனும் அணுக்கமின்றி உணர்ந்தேன்.

‘வெளிப்படையாகச் சொன்னால் உங்கள் மூளை அழகாக இருக்கிறது’ என்றார் மருத்துவர்.

நான் கேட்டதிலேயே விகாரமான புகழுரை இதுதான் என்று நினைத்தபடியே ’நன்றி’ என்றேன்.

என் தந்தையை அழைத்து ஒரு வெள்ளைக்காரன் என் மூளை அழகாக இருப்பதாகக் கருதுகிறான் என்று சொல்ல விரும்பினேன். ஆனால் அவரிடம் என்னால் எதுவும் சொல்ல முடியாது. அவர் இறந்துவிட்டார். நான் நன்றாக இருப்பதை என் மனைவியிடமும் மகன்களிடமும் அம்மாவிடமும் சகோதரர்களிடமும் சொன்னேன். நண்பர்களிடமும் சொன்னேன். ஆனால் அவர்களில், என் அழகான மூளை பற்றி கேட்ட ஒருவரும் என் தந்தை அதைக் கேட்டு எப்படிச் சிரித்திருப்பாரோ அந்த அளவுக்குச் சிரிக்கவில்லை. அந்த குடிகாரப் பரதேசியை நான் இழந்ததை உணர்கிறேன். என்னை அதிகப்படியாக ஏமாற்றிய அந்த மனிதனிடம் மட்டும்தான் நான் அதிகப்படியான அணுக்கத்தை எப்போதும் உணர்ந்திருப்பேன்.

 • ஷெர்மன் அலெக்ஸி
 • தமிழில் : கோ.கமலக்கண்ணன்

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.