மனதின் ஒரு துளியிலிருந்து பிரபஞ்சத்தைச் சமப்படுத்துதல் :

                                                                                     

“நான் எப்பொழுதும் என்னுடன் நடந்து கொண்டிருக்கிறேன்” – நகுலன்.

னிமையின் சிறு சிறு அலகுகளில் படிந்திருக்கும் எண்ணற்றச் சுயதேடல்களின் பொருண்மையான வடிவங்களை அடிப்படையாகக் கொண்டிருப்பவை நகுலனின் படைப்புகள். தனக்குள்ளும், புறமுமாக சேகரமாகியிருந்த அனுபவங்களின் குவியல்களை – உளவியல் சார்ந்த நுண்ணியதும், ஆன்ம ரீதியிலானத்  தத்துவார்த்தப் பரப்புடையதுமான விசாலமான அடித்தளத்தில், மரபின் நீட்டப்பட்ட நேர்த்திகளினாலான அடுக்குகளால் கட்டமைக்கப்பட்டிருந்தவை அவரது எழுத்துகள். நனவிலி மனவோட்டத்தின் சிறு சிறு புள்ளிகளுக்கும், தீவிரகதியிலான சுய அனுபவத்தின் அடுக்கான மனநிலைகளின் புள்ளிகளுக்கும் இடையே மலர்ந்திடும் அசலான காலமொன்றின் தத்துவ சாரம்சங்களையே அவரது படைப்புகள் முழுமையாக உணரத்தருகின்றன. ஒவ்வொருவருடைய மனதின் தனிமையான ஒரு துளியின் இருளிலிருந்து இப்பிரபஞ்சம் துவங்கி, இத்தனை பெரியதாக விரிந்து கடைசியில் எதுவுமற்றதான ஒரு தூசியைப் போல் ஆகிக்கொள்ளும் இன்மையின் வெற்றிடத்தையே தனது படைப்புகளில் பெரும் சவால்கள் நிறைந்திருக்கும் சாளரங்களாகத் திறந்துவிட்டிருக்கிறார் நகுலன். அவரின் தனிமை நினைவுகளின் சேகரங்கள் முழுவதையும், தன் முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கும் எல்லாச் செயல்களின் மீதும் பரவச் செய்து, அவ்வுலகில் அதன் மனிதர்களில் ஏற்பட்டுக் கொள்ளும் மாறுதல்களைத் தீர்க்கமாகவும், தன்னிலை விலக்கியும் அடுத்தடுத்துப் பார்க்க வைத்திடும் நவீனவகைப் புனைவு அழகியலின் வசீகரங்களை வலுவான தளத்திலும் கைக்கொண்டிருந்தவை அவரது படைப்புகள். தமிழ் படைப்புகளில், ஆழ்மனதின் தேடல்களை, அதன் உளவியல் ரீதியிலான சவால்களை, நோய்மையின் வேதனைகளை, ஞாபகங்களின் தீர்ந்திடாத மகிழ்ச்சிகளை, தன்னிருப்பின் வழியே பிரபஞ்சத்தை அளந்திடும் தத்துவங்களின் பிரமிப்புகளை பெரும் பரப்பிலாலான படைப்புகளின் வழியே நிகழ்த்திக் காண்பித்தவர்களின் நகுலனே முன்னோடியாகயிருக்கிறார். நிகழ்வுகளைக் காட்சிகளாக விரித்து, அவை சார்ந்த மனிதர்களை உலவவிட்டு நேரடியான கதைகளாகச் சொல்லிக்கொண்டிருந்த காலத்தில், மனிதனின் ஆன்ம மனநிலையின் குவியத்தையும் அதன் வழியே விரிந்திடும் தனிமையான அகவுலகின் வாழ்வுகளையும், வலிகளையும், சந்தோசங்களையும் அசலான படைப்புகளாகச் செய்து காண்பித்ததில் தான் நகுலனது படைப்புகள் சார்ந்த செயலலகுகள் முற்றிலுமாகத் தனித்துத் தெரிகின்றன மேலும் எல்லா நிலைகளிலும் வெற்றியும் அடைந்திருக்கின்றன. உள்மனதின் அடுக்குகளில் நிறைந்திருக்கும் சலிப்பற்ற வாழ்வுகளின் பல முனைகளை இழுத்து வந்து நிகழ்காலச் செயல்களின் படிகளில் நிற்க வைத்து அதன் வழியே உடலும் அது சார்ந்திருக்கும் பெரும்வாழ்வும் உரையாடிக் கொள்வதான நெகிழ்ச்சியான தருணங்களையே அவர் தன் எட்டு நாவல்களிலும் குவியமாக்கிக் காணத்தருகிறார். இப்படைப்புகளின் வழியே நகுலனின் தனிமைச் சொற்களின் பன்முக அர்த்தங்களைக் கண்டடைவதென்பதும், புரிந்து கொள்வதென்பதும், நம் ஒவ்வொருவரின் ஆழ்மனதில் தங்கிக்கிடக்கும் கசடுகளை, வன்மங்களை, நோய்மைகளை, சிக்கல்களை,  நினைவுகளின் பேரன்புகளை நமக்கு நாமே கண்டடைந்து கொள்வதும், தீவிரமாக அனுபவித்துக் கொள்வதும் போலானதுமேயாகும். மனதிற்குள் உருவாகிக்கொள்ளும் ஒரு உருவம், ஒரு மனவோட்டம் அம்மனதிலிருந்து வெளியேறி அது சார்ந்திருக்கும் உடலின் நிகழ்கால வாழ்வில் கலந்து கொள்ளும் அசாதாரண நிலைகளின் தொகுப்பே நகுலனது படைப்புகளின் முழுச்சுதந்திரமாக, நிதர்சனத்தின் அழகியலுடன் விரிந்து கொள்கின்றன. வாழ்வின் சகலவிதமான பரிமாணங்களையும், சூழல்களையும் எழுத்தில் கரைத்துக்கொள்ளத் தொடர்ச்சியாக முயன்றுகொண்டிருந்தவனின், சுயத்தின் மீதான விரிவான மீளாய்வைப் பகுத்துக்கொண்டிருந்தவனின் பேரமைதியான மனதின் வர்ணங்களைக் கொண்டிருப்பவையாக நகுலனது எழுத்துக்களை வரையறுக்கலாம். காலத்தின் ஒரு நொடியிலிருந்து விடுபட்டு ஓடிடும் ஒரு தனிமை சுதந்திரத்தின் பேருவுவகையே அது. மேலும் சிறிய, தனித்த மனதினுள் நீண்டு கொண்டிருந்த வெறுமைகளின் ஒன்றுபடுத்தப்பட்ட ஒரு நிழல் வடிவமது. மனிதனின் மனம் மற்றும் உடல் சார்ந்த தகவமைப்புகள் எவ்வாறு ஒவ்வொரு உணர்ச்சிகளின் சூழலிலும், ஓர் நிலையமைதியுடன் ஒன்றிக்கொள்வதற்கும், விடுபடுவதற்கும் முயல்கின்றன என்ற நுட்பமான பாகுபாடுகளின், விவரணைகளின் தொகுப்புகளாகவே நகுலனது – கதைமாந்தர்களது – படைப்புகளின் வழியேயான அவரது உரையாடல்களை நீட்டிப்பார்க்கலாம்.

 

உடல் – தனிமை – வலி – வாழ்க்கை :

தனக்கு நேர்ந்துகொண்டிருக்கும் எல்லாவற்றின் அடிப்படையாக இந்த உடலேயிருக்கிறது வாழ்வென்பதன் அர்த்தத்தின் பருமனான பொருள் என்பது உடலிலிருந்து தான் துவங்கிக் கொள்கிறது, ஆனால் அது வெறும் கருவி மட்டுமே, மனதின் கட்டளைகளுக்கேற்பவே அது தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களே நகுலனின் கதைமாந்தர்கள். – இன்னும் சில குறியீட்டு வடிவங்களில் பிற உயிர்கள் மற்றும் சுற்றியிருக்கும் பொருட்கள் – இத்தகைய மனிதர்களால், அவர்களின் சூழல்களால் ஒன்றுடனொன்று இணைக்கப்பட்டிருக்கும் கண்ணிகளால் உருவாக்கப்பட்டிருப்பவையே அவரது கதைகளின் அடிப்படையிலான பொதுத்தன்மையாக இருக்கிறது. உடலிலிருந்தே இந்த வாழ்வு துவங்கிக்கொள்கிறது. இதில் படியத்துவங்கும் தனிமை ஒரு நினைவையும், மகிழ்ச்சியையும் ஆவலாகச் சேகரித்துக் கொள்கிறது. பிறகு அதுவே தீர்ந்திடாத வலியாகவும், வேதனையாகவும், வடுவாகவும் மாறிக்கொள்கிறது. இதற்குள் மூழ்கிக்கொண்டிருக்கும் வடிவமற்ற மனமோ இவையெல்லாவற்றையும் அமைதியான நித்தியத்துவமாக உணர்ந்து கொள்ள முற்படுகிறது. ஆனாலது அவ்வளவு எளிதாக ஒரு போதும் சமன் அடைந்திடுவதில்லை. துயரங்களின் வாசனைகள் உடலை மெல்ல மெல்ல அரிக்கத்துவங்கி பிறகு அது சார்ந்திருக்கும் மனதையும் வெறுமையாக்கி விடுகிறது. உடல் உணரும் வலியும், மனம் உணரும் வலியும் எப்படி வேறு வேறு தளங்களில், அடிப்படை நிலைகளில் முற்றிலுமாக வேறுபட்டு மொத்தமாக ஒரு காலத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பவற்றையே தன் கதைகளில் அசலான விவாதப் பொருளாக்கியிருக்கிறார் நகுலன். நிகழ்காலத்தில் இயக்கம் கொள்ளும் உடலானது தன் தேவைகளைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்கிறது, ஆனால் மனம் இவற்றைக் கட்டுப்படுத்திடும் பெரும் ஆற்றல் கொண்டதாக மாறிக்கொள்ளும் தத்துவார்த்தப் பார்வையையே அவர் தன் படைப்புகளில் முழுவதுமாகக் கடத்தியிருக்கிறார். உடலும், மனமும் வெற்றிடமாகும் போது உருவாகும் எதுவுமற்ற சூன்யத்தையே அவர் தீவிரமாக நேசிக்கச் செய்கிறார். தினசரிகளில் உலர்ந்து போகும் வாழ்வின் ஒரு துளியின் பெரும் வடிவத்தை, அகவுலகின் தரிசனத்தின் மூலமாகத் திரும்பவும் அனுபவிக்கக் கொடுத்திடும் பேருவுவகையையே தன் எழுத்தில் நுட்பமாகச் செய்திருக்கிறார். வாழ்தலைப் போலவே மரணமும், – இருத்தலும் / இல்லாமல் போதலும் – ஏதோவொரு கைகளுக்குள் இருந்திடும் ரகசியமான வெம்மையும், ஈரமும் போலானதாகவே நம்மை அழுத்தமாக நம்பவைக்கிறார். சதா நிகழ்ந்து கொண்டிருக்கும் எல்லாவற்றின் பிறப்பும், வாழ்வும், மரணமும் எவ்விதமான பிரமிப்புகளையும், சலுகைகளையும் கொண்டிருப்பதில்லை, அது அதன் வழியில் வெறுமனே தொடர் நிகழ்வாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. மேலும் அவைகள் எவ்வித தனியான அர்த்தங்களையும், புராணீக, தெய்வக் காரணங்களின் தொடர்ச்சிகளையும் கொண்டிருப்பதில்லை எனத் தீர்க்கமாகத் தன் கதைகளில் சொல்லிச் செல்கிறார். மேலும் சகமனிதனை, சக உயிர்களை நேசிப்பதற்கும், வெறுப்பதற்குமான காரணங்கள் மிக எளியவை. அது நமது மனதின் மூலமான சேகரங்களின் வழியே தேர்வு செய்யப்படுகின்றன என்ற நிதர்சனத்தின் பார்வையை இன்னும் கூர்மையாக்கி, பௌதீகத்தின் தட்டையான வரையறைகளைக் கடந்து நேசங்களின் உண்மையான பிரவாகத்தையும் அவை சார்ந்திருக்கும் வாழ்வையும் தத்துவார்த்தப் புள்ளியில் இணைக்க முற்பட்டவராகவே நகுலன் இருக்கிறார். ஞானி தனக்கு முன் இருக்கும் பாதைகளின் திசைகளை தன்னிடத்திலிருந்து அறியத்தருகிறான், ஆனால் – நகுலனோ – கலைசார்ந்த மனநிலையில் இயங்கிடும் படைப்பாளியோ அப்பாதைகளில் சிதறுண்டு கிடக்கும் காலத்தை, அதிலிருக்கும் நிச்சயமற்ற வாழ்வுகளைக் குவியப்படுத்துகிறான், தொடர்ச்சியாகப் பிரதிபலிக்கிறான். தனிமைச் சொற்களின் உரையாடல்களின் வழியே இப்பிரபஞ்சத்தை, மனிதர்களை மற்றும் அனைத்து உயிர்களையும் அளந்திடுவதற்கான, புரிந்து கொள்வதற்கான ஒரு கலையின் நுட்பமான வடிவத்தையே நகுலனது எழுத்துகள் பிரமிப்பாகச் சொல்லித்தருகின்றன.

 

சிதறுண்டுகிடக்கும் வாழ்வின் சிறுசிறு வடிவத்தில் மின்னிக்கொண்டிருக்கும் உயிர்களின் கதைகளையே நகுலன் எப்போதும் சொல்ல முயன்று கொண்டிருந்தார். அவ்வொவ்வொன்றிற்குள்ளுமிருந்திடும் சிறு ஒளி, ஒலிகளின் சாகசங்களை மனதிற்குள் படரவிட்டிருந்தார். அவரது பார்வையில், அனுபவத்தில், வாசிப்பில், சுயதேடல்களில் கிடைத்திட்ட எண்ணற்ற நிகழ்வுகளின் சாராம்சங்களை எப்போதும் தனக்கான மொழியில், தன் நிழலை எழுதிப்பார்ப்பது போலவே எழுதிக்கொண்டிருந்தார். அதன் மீதிருந்த நிலையாமையை அவர் அனுபவித்து ரசித்து வந்தார். தான் சந்திக்க நேர்ந்த எல்லாவற்றின் புதிர்களையும் அதன் மூலமே விடுவித்துக் கொண்டார். அல்லது இன்னும் சிக்கல் நிறைந்த புதிராக மாற்றிக்கொண்டார். கண்டுகொண்டிருக்கும் ஒரு தோற்றத்திற்குள் இருந்திடும் எண்ணற்ற மனச்சித்திரங்களை அவர் மீண்டும் மீண்டும் வரைந்து பார்த்தார், (ஏறக்குறைய தன் நாவல்கள் முழுவதிலும்) அவற்றின் ஆழங்களிலிருந்த பிரகாசத்தை, இருண்மையை கைகளில் ஏந்திக்கொண்டு, அதன் நிதர்சனத்தை, வெளிச்சத்தை அப்படியே படைப்பாக்கினார். முதுமையில் படர்ந்திடும் அகத்தனிமையின் சிக்கல்கள் நிறைந்த வாழ்வை விட்டு மிக விருப்பமாக வெளியேறிட முயலும் ஒரு மனதின் பகுதியையும், குழந்தைமையின் பாசாங்கற்ற, சிறு நெருடலுமற்ற பசுமையான மனவெளியையும் அவர் எழுத்தில் உயிர்ப்புடன் காண முடியும். அவை அவரது நிகழ்கால மனவோட்டத்தின் உள்ளுணர்வுடன் மிக நெருக்கமானதாகவும், வெளிப்படையானதாகவும் தோன்றியும் கொள்கின்றன.

 

நினைவு ஊர்ந்து செல்கிறது
பார்க்க பயமாக இருக்கிறது
பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை!
– இந்த நிலைதான் எப்போதும் நகுலனது புனைவுகளிலிருந்த மன அடுக்கைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. அவரால் இந்த நிலைகளை ஒரு போதும் நினைக்காமல், பார்க்காமல், எழுதாமல் இருக்க முடியவில்லை. மேலும் தன்னைக் கடந்து கொண்டிருக்கும் ஒரு நிழலின் மெல்லிய தவிப்பை, குரூரத்தை, தன்னிருப்பின் மீது அது நிகழ்த்தும் குறுக்கீட்டை அவர் விவரித்து – பெரும்பாலும் உரையாடல்களின் மூலம் – அனாந்தர உலகின் சுதந்திரங்களை, அதன் நுட்பமான விழிப்பின் நிலைகளைக் கவனிக்கவும், அனுபவிக்கவும் கொடுக்கிறார். அவரின் அறையில் கரையான்கள் அரித்துக்கொண்டிருந்த புத்தகங்களுக்குள்ளும், பொருட்களுக்குள்ளும் இருந்திட்ட ஒரு நிழல் மனதின் ரேகையையே எப்போதும் அவர் கட்டற்று வெறித்துக்கொண்டிருந்தார். அல்லது அவ்வளவு நிச்சயமாகத் தன்னையே மிகுந்த நிதானமான ஒரு தளத்தில் முழுவதுமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அது அவருக்கு அத்தனை லேசாகயிருந்தது.

 

காலம் – அகாலம் – நித்தியத்துவம் :

யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது?
எல்லாம்!  

தன் தனிமையின் மீது மிகுந்த நம்பிக்கையும், சந்தோசமும் கொண்டவராகயிருந்தார் நகுலன். தன்னிலிருந்து துவங்கும் கையடக்கமான ஒரு உலகினிலே எப்போதும் வாழ்ந்து கொண்டிருந்தார். நிம்மதியின் ஒரு வடிவத்தை தன்னிலிருந்தே அர்த்தப்படுத்திக்கொள்ள முற்பட்டுக்கொண்டிருந்தார். அதுவே உண்மையின் வெளிக்கு வெகு அருகிலிருப்பதாகவும், தொடர்ந்து நம்பும்படியிருப்பதாகவும் தீர்க்கமாக நினைத்துக்கொண்டிருந்தார். தன் அகத்தின் தொடர்ச்சியான தேடல்களைக் கவிதை மொழியில் வெளிப்படுத்தும் போது – ஆரம்பத்தில் சில புராண, பிரச்சார வடிவிலிருந்த போதும் – அவற்றை நவீனத்தின் நுட்பமான ஓர்மைகள் நிறைந்த பன்முகப்புரிதல்களின், தத்துவப்பார்வைகளின் அம்சங்கள் கொண்டதாக மட்டுமே அமைத்துக் கவனப்படுத்தியிருக்கிறார். வனாந்தரத்தில் தனிமையில் கிடந்திடும் ஒரு கல்லின் பொருண்மையை உள்ளடக்கியிருந்தவை அவரது கவிதை மொழியின் சாகசங்கள். ஒரு அமைதியின் உலகிலிருந்து துவங்கி எதையோ தேடிக்கொண்டிருக்கும் தீவிர அலைச்சலின் நிர்மூலமான தன்மைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தவை அவரது கவிதைகள். காட்சி நிலைகளை, உணர்ச்சி விழுமியங்களைப் பாடுபொருளாகக் காட்டிக்கொண்டிருந்த தமிழ் நவீனக் கவிதைகளின் மொழியை, அசலான நவீன பார்வையின் வீச்சோடு அயர்ச்சியற்ற மொழியில், சுயவிவரனைகளைக் கைவிட்டு, தீர்க்கமான சொற்கட்டுமானத்துடன், அகவுலகின் தரிசனங்களைப் பிம்பங்களாகவும், அன்பின், வலியின் சிதறல்களாகவும் முன்னிறுத்தியவர் நகுலன். சிதறுண்ட ஒரு கனவின் பல வண்ணங்களைத் தொகுத்துக் காண்பிப்பதில் அவரிடமிருந்த லாவகமும், கச்சிதமான மொழிவளமும் அவரை அக்காலப் படைப்பாளிகளிடமிருந்து தனித்துவம் மிக்கவராகக் காண்பிக்கிறது. நீரினுள் உறைந்து கொண்டிருக்கும் சிறு கற்களின் பேரமைதியையும், வாழ்விலிருந்து உதிர்ந்து நகர்ந்து கொண்டிருக்கும் சருகுகளில் படர்ந்திருக்கும் நினைவுகளின் சேகரத்தையும், தன் தோற்றத்திலிருந்தே தன் காலத்தின் மீதியைக் கடந்து கொண்டிருக்கும் தியான உணர்வுகளின் உச்ச வடிவத்தையும் அடர்த்தியான தளத்தில் உள்ளடக்கியிருப்பவை அவரது கவிதை மொழிச் சொற்கள்.

 

நகுலனது ஒலிநாடாவில் அனைவருக்குமான இசையிருந்தது. அது நெகிழ்ச்சியான மன அமைதியில், தனிமையில் சுற்றிக்கொண்டிருந்தது. அதன் நெருக்கமான கவிதை மொழியின் லயமானது ஸ்தூலமான ஒரு வடிவத்தின் உலகினை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு, எந்த வடிவமுமற்ற ஒரு உலகின் வனாந்திர சுதந்திரத்திற்குள் சஞ்சாரமிட்டுக்கொண்டிருந்தது. இரக்கமற்று நகர்ந்து கொண்டிருந்த காலத்தின் மீது அது திரும்பத்திரும்ப ஒரு பாய்ச்சலை நிகழ்த்திக்கொண்டிருந்தது. வெறுமையில் படர்ந்திடும் ஒரு உருவத்திற்கான அரூப நிழலாகவும் அது மாறிக்கொண்டே வந்தது. உணர்த்துதலின் கச்சிதமான இவ்வடிவ பிரக்ஞையை, அவரது தீவிரமான கலை சார்ந்த மனநிலையிலிருந்தும், வாசிப்பிலிருந்தும், வாழ்விலிருந்தும் அவர் தேர்ந்து கொண்டார். சமநிலையை அடைய முடிந்திடாத வாழ்வெளியின் மீது அவருக்கிருந்த விமர்சனங்களும், நடைமுறைச் சிக்கல்களும் ஒரு வழியில் அவரின் கவிதைக்கான எளிய செயல்பாடாக, வடிவமாகத் தொடர்ந்து மாறிவந்துகொண்டிருந்தன. வெற்றிடத்தில் மலர்ந்து மணம் வீசும் ஒரு மலரின் பரிசுத்தமான எளிய வாழ்வையும், அது இப்பிரபஞ்சத்தின் சவால்களைக் கடந்திடும் மௌனமான ஒரு யுத்தத்தின் அவதானிப்புகளையும் ஆகக்கடைசியில் அது இல்லாமல் போகும் வெறுமைகளையும் அடுத்தடுத்து சொல்லிச் செல்லும் பிரமிப்பின் சாகசங்களை உள்ளடக்கியிருப்பவை அவரின் கவிதை மனம். நகுலனது சொற்களைத் தீர்க்கமாக உள்வாங்கிக்கொள்வதற்கு நாம் சில தூரம் பயணம் செய்யவேண்டியிருக்கிறது. அது நமது பௌதீக உடலிலிருந்து, நமது மனதின் தனிமையான எல்லையற்றச் சுதந்திர வெளிக்குச் சென்று திரும்பும் நிறைவான தூரமே ஆகும்.

 

திரும்பிப் பார்க்கையில்
காலம் ஓர் இடமாகக் காட்சி அளிக்கிறது.

காலத்தைப் பார்த்துக்கொண்டிருப்பதென்பதும், அதில் பயணம் செய்து கொண்டிருப்பதென்பதும் சற்றேறக்குறைய வாழ்ந்து கொண்டிருப்பதுவே என்ற எளிய பொருள் நிறைந்ததான ஒற்றைப் புரிதலின் வடிவத்தை மிக எளிதாக மறுத்து, அது வெறும் உருவகத்தின் சாயல் கொண்ட பரப்பு மட்டுமே என நிரூபித்து, இங்கிருக்கும் எல்லா உயிர்களின் தனித்தனியான மனநிலைகளின், இயக்கங்களின் கூட்டான, ஒட்டுமொத்தமான பெரும் வடிவத்தின் தொகுப்பான சாராம்சமே அது எனத் தன் கவிதைகளின் மெய்மைத்தன்மை வழியாக உணர்த்துகிறார் நகுலன். இங்கு ஒவ்வொருவருக்கும் ஒரு காலமெனத் தனியாக எதுவும் இருப்பதில்லை. காலமும் வெளியும் பொதுவானது. ஆனால் தனித்தனியான உயிர்களின் செயல்பாடுகளின் வரிசைகளினாலும், சூழ்நிலைகளினாலுமே அதன் ஒற்றை அர்த்தமானது பன்முகத்தன்மை கொண்டதாக நிலைமாறிக்கொள்கிறது என்ற நிரூபணத்தையே அவரின் கவிதைகள் தர்க்கங்களெனக் கொண்டுள்ளன. உருவகத்தாலும், புதிர்களின் முடிச்சுகளாலும் நிகழ்ந்து கொண்டிருந்த நவீனக் கவிதைகளின் அர்த்தத்தளங்களை, நிகழ்காலத்தின் அப்பட்டமான ஒரு வாழ்வியலின் இணக்கமான செயல்பாடுகளின் மூலமாக மன அடுக்குகளின் ரகசியங்களுடன் இணைத்து அசலான வழியொன்றில் தத்துவப் பார்வையின் பரப்பில் ஏற்றிக்காண்பித்ததுவே நகுலனது ஒட்டுமொத்தக் கவிதைச் செயற்பாட்டின் மிக முக்கியமான அம்சமாகத் தெளிவாகின்றன. தமிழ் நவீனக் கவிதையின் சூழலில் மிக நம்பிக்கையான இத்தகைய வடிவத்தின் மூலமாகவே தன் காலத்தில் ஒரு திருப்பு முனையை அவர் உருவாக்கிவிட்டிருந்தார்.  பேரமைதியின் வனப்பும், தத்துவப்புள்ளிகளின் ஆன்ம நிலைகளையும் கொண்டிருந்த இக்கவிதைகளை வாசிப்பதற்கென ஒவ்வொரு நாளும் புதுப்புது வாசகர்கள் வந்து கொண்டிருப்பதுவே அதற்கான எளிய சாட்சியாக இருக்கிறது. மேலும் நூறு வருடங்கள் என்ற வாழ்வின் பெரும் பரப்பிற்குள் அவரது படைப்புகளின் வழியே மட்டுமே தொடர்ச்சியாகக் கவனத்தையும், பேசு பொருள்களையும் உருவாக்கிக் கொண்டிருப்பவராக நகுலன் இருக்கிறார்.

 

தியானத்தின் ஒரு நம்பகமான வடிவத்தை, நகுலனது கவிதைகளை ஒவ்வொன்றாக வாசிப்பதிலிருந்தும் துவங்கலாம். அதன் நித்தியத்துவம், வாழ்வின் அத்தனை பிரம்மாண்டங்களையும் மிக எளிதாகக் கடந்து, கடைசியில் மீதமாகி நம்முடன் வந்திடும் வெறுமையின் ஆற்றல்களை நிறைவாகச் சொல்லித்தந்திடும் நுட்பங்கள் நிறைந்திருப்பவையே.

 

சில கவிதை வரிகள்:

முக்கோணம்
முடிவில்
ஒரு ஊசி முனை ஞானம்!
 

ஆர்ப்பரிக்கும் கடல்
அதன் அடித்தளம்
மௌனம்; மகா மௌனம்!

 

*

 

நீயிருக்க
நானிருக்க
நேற்று
இன்று
நாளை
என்ற நிலை
ஒன்றும் இல்லை
ஒன்றுமே இல்லை!

 

*

வேளைக்குத் தகுந்த
வேஷம்
ஆளுக்கேற்ற
அபிநயம்
இதுதான்
வாழ்வென்றால்
சாவதே சாலச் சிறப்பு!
எனக்கு
யாருமில்லை
நான்
கூட!

 

*

அம்மாவிற்கு
எண்பது வயதாகிவிட்டது
கண் சரியாகத்தெரியவில்லை
ஆனால் அவன் சென்றால்
இன்னும் அருகில் வந்து
உட்காரக் கூப்பிடுகிறாள்
அருகில் சென்று உட்காருகிறான்
அவன் முகத்தைக் கையை
கழுத்தைத் தடவித்
தடவி அவன் உருக்கண்டு
உவகையுறுகிறாள்
மறுபடியும் அந்தக்குரல்
ஒலிக்கிறது
நண்பா அவள்
‘எந்த சுவரில்
எந்தச் சித்திரத்தைத்
தேடுகிறாள் ?`

*

அதற்குப்
பல கிளைகள்
ஒரு சொல் தொடர்
அதில் / அதனுள்
பல வளைவுகள்
சில நேர்த்திகள்
ஆழங்கள்
நுணுக்கங்கள்
சப்த விசேஷங்கள்
நிசப்த நிலைகள்
நேரஞ் சென்றது அறியாமல்
அதனுள் நான்.

*

ரயிலை விட்டிறங்கியதும்
ஸ்டேஷனில் யாருமில்லை
அப்பொழுதுதான்
அவன் கவனித்தான்
ரயிலிலும் யாருமில்லை
என்பதை;
ஸ்டேஷன் இருந்தது,
என்பதை
“அது ஸ்டேஷன் இல்லை”
என்று நம்புவதிலிருந்து
அவனால் அவனை
விடுவித்துக் கொள்ள
முடியவில்லை.

நகுலன் தனது புனைவையும், தன் கவிமனதின் நீட்டப்பட்ட ஒரு செயலலகின் நிச்சயத்தன்மையுடனே அணுகவும், படைக்கவும் செய்திருக்கிறார். அவரது படைப்பு மனதின் அடிப்படையாக, கவிதையில் மெய்மைத் தனத்தை உற்றுநோக்கும் பார்வைகளின் சற்று விரிவகன்ற ஒரு வடிவம் தான் இருந்திருக்கிறது என நிச்சயமாகச் சொல்ல முடியும். சில நீள் கவிதைகளில் இயங்கிக்கொண்டிருந்த அவரது மனமானது அவரைச் சுற்றிலுமிருந்த உயிருள்ள, உயிரற்ற பொருட்களின் மீதிருந்து துவங்கிடும் வாழ்வு மீதான தனித்த பார்வைகளின் வெளிப்பாடாகவே தெரிகின்றன.

தன்நிழலைத் துரத்தும் சாகசக்காரன் :

தன் காலம் முழுவதும், தான் விரும்பிய தனிமையும், வாசிப்பும், நட்பும், எழுத்துமாக நிரம்பியிருந்தது அவரது வாழ்வு. அவரின் தேவைகள் மிக எளியவைகளின் வரிசையிலிருந்தன. படைப்புகளின் வழியே வாசகர்களின் மனங்களில் நிறைந்திடும் ஆன்ம ரீதியிலான சேகரங்களை மிக நுட்பமாக அவர் வகைப்படுத்தியிருந்தார். விருதுகள், பரிசுகள், மற்றும் புகழ் சார்ந்த லௌகீக விழுமியங்களின் கூசிடும் ஒளிகளின் மீது எந்த விருப்பமுமற்றிருந்தார். கலையின் ஆதாரமான எளிய உண்மைகளுக்கும், செயல்பாடுகளுக்கும் வெகு அருகில் தன்னையும், தன் படைப்புகளையும் நிலைநிறுத்திக்கொண்டார். சுயசிந்தனையின் ஒரு படித்தான அலகுகளை அவர் தீவிரப்படுத்தினார். அதன் வழியே கிடைத்த எல்லா சந்தோசங்களையும், வேதனைகளையும் படைப்புகளாக்கினார், கிட்டத்தட்ட அவரெழுதிய எல்லா வகைமைகளிலும் இந்தத் தத்துவார்த்த தொடர்ச்சிகளின் சாராம்சத்தையே வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தப் பிரபஞ்சமும், காலமும், மனிதர்களும், அவர்களின் வடிவமற்ற மனமும் தங்களுக்குள் எவ்வாறு பொருந்திக்கொண்டிருக்கின்றன அல்லது எவ்வாறு எல்லாவற்றாலும் கைவிடப்பட்டுத் தனித்தனியாகச் சுழன்றுகொண்டிருக்கின்றன என்ற தர்க்கத்தின் மீளாய்வையே அவரது தனிமை மனம் சேகரித்துக் கொண்டிருந்தது. சுசீலாவின் இருப்பும், இல்லாமையும் உருவாக்கும் சிறு நினைவின் பொறி அவருக்குள் சதா கனன்று கொண்டிருந்தது. அது, ஒரு தேடலின் முற்றுப்பெறாத பேரன்பின் வடிவமாக அவருக்குள் மாறிப் போயிருந்தது. எல்லையற்ற நேசத்தையே அவர் சுசீலாவெனப் பெயரிட்டு நினைத்துக் கொண்டார். தன்னை முழுவதுமாக ஏந்திக்கொண்டிருந்தவளாக, அவர் சுசீலாவை எண்ணிக்கொண்ட போதும் அவரே அவரது வேதனையில், மகிழ்ச்சியில் சுசீலாவை எல்லோருக்கு முன்பாகவும் ஏந்திக் கொண்டிருந்தார். மனதின் சில நினைவுகளின் விடுபடல்களும், சிதறல்களும், ஆழ்ந்த தேடல்களும் நோய்மையின் ஒரு புள்ளியென கணித்துக் கொண்டிருக்கும் நம் சூழலில் அதன் சுதந்திரமான வெளியை அறிமுகப்படுத்தி, அதன் ஆழத்தில் நிறைந்து கொண்டிருந்த பொருண்மையான வடிவமொன்றின் ஆகிருதியைக் கண்டடையச்செய்திருக்கிறார் நகுலன். தான் படைத்துக் கொண்டிருந்தவைகளின் வழியே காலத்திலிருந்து மிகவும் முன்னோக்கிப் பாயும் பார்வையின் கூர்மையைப் பிரதானப்படுத்துகின்றார். அது அவரது தீவிர வாசிப்பும், தனிமை வாழ்வனுபவமும் அவருக்குக் கொடுத்திருந்தது. காலத்தை இடைமறிக்கும் ஒரு பயணத்தின் வேகமும், லாவகமும், அமைதியும், தனக்கானத் தனிவடிவமும் கொண்டிருந்தவை நகுலனது வாழ்வும் எழுத்துக்களும்.

இல்லாமையில் தோன்றிடும் வெறுமைகளின் மீது அவர் கொண்டிருந்த மிகுபற்று அவரது மனதின் பெரும் ஆசுவாசத்திற்கு எப்போதும் உதவியாக இருந்து வந்தது. அதுவே அவரின் மனநிலையைச் சமப்படுத்தியது. வாழ்வின் சிறு நொடியை ஆழமாகப் பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவனது விழிகளிலிருந்து துவங்கிடும் ஒரு உலகினை பிரதிபலித்துக் காண்பிப்பது மாதிரியானதும், அவ்விழிகளையே தீர்க்கமாகப் பார்த்துக் கொண்டிருப்பது போலானதுமானவையே நகுலனது இத்தகைய தீவிர எழுத்துகள். நகுலனின்

எழுத்துகளை வாசித்து அனுபவிப்பதென்பது இப்பிரபஞ்சத்தின் ஒரு துளியின் மிகத்தனிமையான இரகசியத்திற்குள் ஊடுருவிப் பார்ப்பதும், வாழ்ந்து திரும்புவதுமானதான பிரமிப்புடன் எப்போதும் இருக்கிறது.

 

பயன்படுத்தப்பட்ட புத்தகங்கள் :

  1. நகுலன் கவிதைகள் – தொகுப்பாசிரியர் – காவ்யா சண்முகசுந்தரம் – காவ்யா.
  2. நகுலன் தேர்ந்தெடுத்த கவிதைகள் – கிளாசிக் வரிசை – காலச்சுவடு.
  3. அந்த மஞ்சள்நிறப் பூனை – நகுலன் – காவிரி சிற்றிதழ்.
  4. நகுலன் கதைகள் – தொகுப்பாசிரியர்- காவ்யா சண்முகசுந்தரம் – காவ்யா
  5. நகுலன் நாவல்கள் – முழுத்தொகுப்பு – காவ்யா.
  6. ‘நகுலனின் விலகல் கண்ணோட்டம்’ கட்டுரை – .இலக்கியக் குரல்கள் – வெளி ரங்கராஜன் – தமிழ்வெளி.

  

Previous articleஅந்த மஞ்சள் நிறப் பூனையைக் காணவில்லை
Next articleதங்கக்குடம்
ஜீவன்பென்னி
ஜீவன் பென்னி (1982) இயற்பெயர் – பீ. மதார் மைதீன், தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர். இளங்கலை இயற்பியல் முடித்தவர். பணியின் காரணமாகத் தொடர்ச்சியாக வாழ நேர்ந்த பிற மாநிலங்களின் நகரங்களிலும், கிராமங்களிலும் தெரிந்திடாத மக்களிடையே செய்த பயணங்களும், சூழல்களும், கிடைத்த நட்புகளுமே எல்லாவற்றையும் கவனிக்கவும் நேசிக்கவும் கற்றுக் கொடுத்தது என நம்பிக்கொண்டிருப்பவர். வாழ்வின் ஒவ்வொரு திருப்பத்திலும் உதிர்ந்திடும் மகிழ்ச்சிகளையும், கசப்புகளையும் தீர்ந்திடாத சொற்களாக மாற்றிட முயன்று கொண்டிருப்பவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.