வாட்டர் மெலன்(கன்னடம்) -கனகராஜ் பாலசுப்பிரமணியம், தமிழில் – நல்ல தம்பி


மறுபடியும் அதே சலங்கை ஒலி.

யாரோ நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.. உள்ளேயோ வெளியிலோ!?

திடுக் என்று எழுந்து உட்கார்ந்த லட்சுமி அங்குமிங்கும் பார்க்கும்போது – அதே அறையில் படுத்திருந்த ரிச்சர்ட் படபடவென்று துடித்துக் கொண்டிருந்தான்.

லட்சுமியின் பயம் இருமடங்காகி இது யார்? கருப்பாக குண்டுக்கல்லைப் போலான உருவமொன்று தரையில் விழுந்து துடித்துக் கொண்டிருக்கிறதே? எந்த இடமிது? ஒன்றும் புரியாமல் லட்சுமி எழுந்து நின்றபோது..

ரிச்சர்ட் “லீவ் மீ.. லீவ் மீ ப்ளீஸ்.. டோன்ட் கில் மீ..” என்று உளறிக்கொண்டே எழுந்து உட்கார்ந்து அங்குமிங்கும் பார்த்தான். தன் வலதுபுறம் நின்றிருந்த லட்சுமியைப் பார்த்து தனது ஊரகலத்து மூக்குத் துவாரத்தின் வழியாக மூச்சை வெளியே தள்ளினான்.

ரிச்சர்ட் முகத்தைப் பார்த்ததும் லட்சுமிக்கு எல்லாம் நினைவிற்கு வந்தன! பேச்சுத் தொடங்கிய பிறகோ எல்லாம் தெளிவானது!

காதுகளில் விழும் ஆங்கில வார்த்தைகளை ஜீரணித்துக் கொள்ள லட்சுமிக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது. அதிலும் ரிச்சர்ட் வேகத்திற்கு சிரமமாகவே இருந்தது. ஆப்பிரிக்கரின் ஆங்கில உச்சரிப்பை புரிந்துகொள்வது சிறிது சிரமம் தாயி என்றபடியே லட்சுமி உட்கார்ந்து கண்விரித்து ரிச்சர்ட் பேச்சுக்களை கேட்கத் தொடங்கியபோது –

“….கிணற்றுக்குள் விழுந்து நான் தவிக்கிறேன்.. மக்கள் என்னை தண்ணீரில் அழுத்துகிறார்கள், அவர்களுடன் நீயும் இருந்தாய்.. என் கழுத்தை இறுக்கினாய், திருடன் திருடன் என்று கத்திக்கொண்டு நீங்கள் என்னை தண்ணீரில் அழுத்தினீர்கள்.. நான் மூச்சை இழுத்துக்கொண்டே மூழ்கி எழுந்து கொண்டிருந்தேன்.. ஷிட்.. அது எப்படிப்பட்ட கெட்ட கனவு தெரியுமா!?” என்றான் ரிச்சர்ட்.

லட்சுமி மௌனமாக அவன் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தபோது –

“இந்தியர்கள் நீங்களும் கூட ரேசிஸ்ட்ஸ்.. கறுப்பாக இருப்பவர்கள் எல்லாம் கிரிமினல்ஸ், திருடர்கள் கயவர்கள் என்ற விக்டோரியன் யுகத்து ஐரோப்பிய மன நிலையிலேயே இன்னும் இருக்கிறீர்கள்…! என்னைப் போன்ற ஆப்பிரிக்க மாணவர்கள் பெங்களூரில் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் தெரியுமா!? காய்கறி வாங்கப்போன என் தோழியை உங்கள் ஆட்கள் நாயை அடிப்பதைப் போல அடித்தார்கள், போன வாரம்.. அவள் செய்த தவறு என்ன தெரியுமா? அவள் கன்ப்யூஸ் ஆகி தன் ஸ்கூட்டர் போலவே தெரிந்த மற்றொரு ஸ்கூட்டருக்கு சாவி போட்டது.. அவளுக்கு விவரிக்க அவகாசம் அளிக்காமல் ‘திருடி’ என்று அங்கே இருந்தவர்கள் எல்லாம் அடித்து, உதைத்து போலீசுக்கு ஃபோன் செய்து ரகளை செய்தார்கள்.. நியூஸ் பேப்பர்களில்  படித்திருப்பாயே நீ..””

அந்த கறுப்பு ரிச்சர்டை இறுக்கமாகத் தழுவிக்கொண்டு அவன் உடம்பு முழுவதையும் கொஞ்சவேண்டும் போல இருந்தது லட்சுமிக்கு. உன் எல்லா வலிகளையும் கொடு, அவைகளை விழுங்கி உன் தேகம் முழுவதும் நான் அமிர்தத்தை ஊற்றுகிறேன்.. வா ரிச்சர்ட் வா..

 

“ல்யாக்ஷ்மி.. எனக்கு அடிக்கடி இந்த வீட்டுக்குள் தண்ணீர் சொட்டும் சத்தம் கேட்கிறது. இது பேய்வீடு என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.. இந்த வீட்டிற்கு வந்தவர்கள் எல்லாம் இறந்து போனார்களாம்.. சிலமாதங்களாக இந்த வீடு காலியாகவே இருந்திருக்கிறது.. நான் வந்தபோது இது குப்பைத்தொட்டியாக இருந்தது.. தேடித்தேடி வீடு கிடைக்காமல் இதையே தேர்ந்தெடுத்தேன்.. ஆரம்ப நாட்களில் சிறிது பயமாக இருந்தது உண்மை.. சிலநாட்கள் இந்த வீட்டின் இருட்டை தனியாகவே கழித்திருக்கிறேன்.. அப்போது கேட்கத் தொடங்கிய சத்தம் இன்றுவரை நிற்கவில்லை.. யாரிடமும் நான் இந்த விஷயத்தை சொல்லவில்லை, உன் ஒருவளிடம்தான் சொல்கிறேன். நான் என்ன சொன்னாலும் நீ என்னைத் தேடிக்கொண்டு வருவாய் என்பது தெரியும்..”

”எனக்கும் சிலதடவை ஏதேதோ சத்தம் கேட்கும், ரிச்சர்ட்.. சலங்கைச் சத்தம் அதிகமாகக் கேட்டிருக்கிறது..”” லட்சுமி சொன்னபோது ரிச்சர்ட் வியப்பாகப் பார்த்தான். அவன் தொடர்ந்து:

“கிணற்றுக் கனவு என்று இப்போது சொன்னேன் அல்லவா, அதேபோன்ற கனவு மாதம் ஒருமுறை வந்துகொண்டே இருக்கும்.. கிணற்றுக்குள் ஒரு வெற்று சத்தம் என் காதுகளில் தொனிக்கத் தொடங்கி சட்டென்று எழுந்து உட்காருவேன்.. தண்ணீர் மீது உட்காருவதுபோலத் தோன்றி பயந்த நொடிகளும் உண்டு! எதற்காக இப்படி என்று யோசித்துக் கொண்டே போனேன்.. அந்த யோசனைகளை காகிதத்தில் படங்களாய் வரைந்துகொண்டே போனேன்.. ஒருநாள் அதற்கு விடை கிடைத்தது..”” என்று சொல்லி லட்சுமியைப் பார்த்தான்.

அவன் எதிர்பார்த்த ஆர்வம் லட்சுமியின் கண்களில் தென்படவில்லை. லட்சுமி சிரித்து “உன் பால்யத்தின் மைனிங் அனுபவங்கள்.. நீளமான மண் குகைக்குள்  உன் தாத்தாவும், நான்கு பேரும் சிக்கிக்கொண்டு இறந்து போன நினைவுகள் மனதில் உட்கார்ந்து இப்போது கனவாக உன் முன்னால் வந்து வதைக்கிறது, ஆம் ஐ ரைட்!?” என்ற போது ரிச்சர்ட் திறந்த கண்ணை திறந்தபடியே இருந்தான்.

“நீ சோஷியாலஜி ஸ்காலர் அல்ல சைகாலஜி ஸ்காலர்!” என்று உரக்கச் சிரித்து “என் வாழ்க்கையின் விவரங்களை உனக்கு சொல்லி இருக்கக்கூடாது.. திருடி.. எல்லாவற்றையும்  கலோனியல் நிலையிலிருந்தே கிரகித்துக் கொள்கிறாய்.. ஆங்கிலேயர்கள் கற்றுக்கொடுத்த முறைகளின் வழியாகவே நம் கனவுகளைப் பார்க்கிறாய்.. நானும் முன்பு உன்னைப் போலத்தான் இருந்தேன்.. இப்போது என் முப்பாட்டி சொன்ன விவரங்கள் என் கண்முன்னே  வருகின்றன.. இந்த இடத்திற்கும் தண்ணீருக்கும் ஏதோ ஒரு உறவு இருக்கிறது என்று தோன்றுகிறது. இங்கே ஆழ்துளைக்கிணறு போட்டால் தண்ணீர் நிறையக் கிடைக்கலாமோ என்னமோ..” ”

”உன் அந்த பொணந்தின்னி ஓனர் கிட்ட சொல்லு.. போர் போட்டு நான்கைந்து தண்ணீர் டேங்கர் வண்டிகளை விட்டு பணம் சுருட்டிக்கொள்வான்,”” லட்சுமியின் உதட்டில் நடனமாடிய சிரிப்பை அப்படியே ஒரேடியாக விழுங்கிவிட ரிச்சர்டுக்குத் தோன்றியது.

ரிச்சர்டின் நெஞ்சைப் பார்த்துக்கொண்டே லட்சுமி “சரி, அதை விடு, அருகே வா.. உன்னை இறுகத் தழுவிக் கொள்ளவேண்டும்.. உனக்குள் இருக்கும் வலி முழுவதையும் நான் உறுஞ்சிக்கொள்ள வேண்டும்.. முதல் முறை உன்னை எம்.ஜி.ரோடில் பார்த்த நொடியே முடிவு செய்தேன் உன்னுடன் அளவில்லா இரவுகளைக் கழிக்க வேண்டுமென்று..”

ரிச்சர்ட் கண்கள் தாமரையைப்போல மலர்ந்தன. லட்சுமிக்கு கோபம் தலைக்கு ஏறியது. “உன் கண்களைப் பிடுங்கி எறிந்துவிடுவேன், அவ்வளவு அகலமாக்காதே..” என்றபோது,

ரிச்சர்ட் லட்சுமியின் அருகே வந்து – குனிந்து முத்தமிட்டு “இந்த விளையாட்டுப் போதும் லட்சுமி, போரடிக்கிறது.. சிலநாட்களாக இதே விளையாட்டை விளையாடுகிறோம்.. இப்படி விளையாடுவதால் நான் ஒன்றும் ஆணாகப் போவதில்லை நீ ஒன்றும் பெண்ணாகப் போவதில்லை! நீ எவ்வளவுதான் மனதால் பெண்ணாக  விரும்பினாலும் நீ மாதவிலக்காக  முடியுமா!?” என்று உரக்கச் சிரித்தாள் ஜாம்பியா நாட்டு பந்தியா செலா ரிச்சர்ட்.

அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு மாகடி என்னும் பெங்களூரின் அடுத்துள்ள ஊரைச் சேர்ந்த லட்சுமிபதி “இப்போது புதுவிளையாட்டு விளையாடலாமா!? பார்க்கலாம் யார் தோற்றுப் போவார்கள் என்று.. இரண்டு விளையாட்டிலும் நீதான் தோற்றிருக்கிறாய்.. மூன்றாவது விளையாட்டிலாவது வெல்வாயா?  முயற்சி செய்” என்றான்.

பந்தியா அவன் விலாக்கள் முறிந்து விடுமளவுக்கு இறுக்கமாகத் தழுவி “என்ன விளையாட்டு என்று சொல் தலைவா, முதலில்”” என்றாள்.

லட்சுமிபதி நொடி கண்ணை மூடிக்கொண்டு பந்தியாவின் உடல் மணத்தை உறிஞ்சி “தழுவிக்கொண்டே இருக்கலாம், யார் போதுமென்று விடுவித்துக் கொள்கிறார்களோ அவர் தோற்ற மாதிரி, ஓகேவா!?” என்றான்.

பெங்களுரின் புறநகரில் இருக்கும் கல்லூரி ஒன்றில் பயோடெக்னாலஜி பட்டம் படித்துக்கொண்டிருந்த ஜாம்பியா நாட்டின் பந்தியா செலா செங்க்யூ ரிச்சர்ட் “யெஸ்..” என்றாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் இறுக்கமாக தழுவிக்கொண்டே போனார்கள். வெளியே இருட்டாகிக் கொண்டிருந்தது. தோல்கள் சூடாகிக்கொண்டும் குளிர்ந்தபடியும் ஆனது.

கதவு மூடியே இருந்தது.

 

இரவு பகல்கள் கடந்து ஒரு இறங்கும் மாலை அந்த வீட்டு ஓனர் கதவைத் தட்டினான், தட்டிக்கொண்டே இருந்தான். சோர்ந்து போய் ‘மறுபடியும் தொடங்கியது தலைவலி’ என்று புலம்பிக்கொண்டே புறப்பட்டான். இது நடந்த ஒரு வாரத்தில் அவன் வீட்டுக்கு முன்னால் போலீஸ் ஜீப் வந்து நின்றது.

2

 “வீதிக்கொரு சிவில் எஞ்சினீயர் இருக்காங்க, ஏதோ பெரிய ஆபீசர் மாதிரிப் பேசறீங்களே!  கேட்டதுக்கு பதில் சொல்லுங்க.. எப்.ஐ.ஆர் போட்டு விசாரியுங்கன்னு அந்தப் பையன் வீட்டார் சொல்றாங்க.. போடட்டுமா?”

“என்ன சொல்லணும் சார், நான்?”

“எத்தனை தடவை சொல்றதுங்க உங்களுக்கு? உங்க வீட்டில வாடகைக்கு இருந்த நீக்ரோ பெண்ணோட லட்சுமிபதிங்கர பையன் வந்ததுக்கு சாட்சி இருக்கு.. நினைவிருக்கட்டும்”.”

“இது நல்ல கதையாச்சே சார், அந்தப் பையன் காணமப் போனதுக்கு நான் எப்படி சார் பொறுப்பு? அந்த நீக்ரோப் பொண்ணு நடத்தை சரியில்லைன்னு வீட்டைக் காலி பண்ணச் சொன்னேன். காலி செய்து எங்கே போனாளோ தெரியாது.. நீங்க போலீஸ்தானே.. தேடுங்க.. சம்பந்தம் இல்லாம என்னை விசாரிச்சா எப்படி சார்..”!”

“பாருங்க, ஐயா, சம்பந்தம் இருக்குங்க.. உங்க வீட்டு இடத்தில முதல்ல என்ன இருந்தது? அதுக்குள்ள யார் யார் விழுந்து செத்துப் போனாங்கங்கற விவரத்தை நீங்க வேண்டுமானாலும் மறந்து போயிருக்கலாம், எங்க ஃபைலுங்க இன்னும் மறக்கலை..!””

“ஓ! அந்த பசங்க காணாம போனதுக்கும் என்வீட்டு விஷயத்துக்கும் என்ன சார் சம்பந்தம்…!? தலைகால் புரியலை.. கிணத்தை மூடி வீடு கட்டறதே பெரிய குற்றம் மாதிரிப் பேசறீங்களே, கிணத்தை மூட பெர்மிஷன் வாங்கிக்கிட்டுத்தான் நான் வீடு கட்டுனது. கிணறு இருந்தப்போ பொம்பளைங்க யாரோ அதில் விழுந்து செத்தா அதுக்கு நான் என்ன செய்யமுடியும் சார்?”

“ஹஹஹ.. இந்தக் கிணத்துல செத்துப் போனவங்க மொத்தம் மூனு பொம்பளைங்க. அதில ஒருத்தங்க கதையைச் சொல்லவா..!?.. என்ன பேச்சையே காணோம், எஞ்சினீயர் ஐயாவுக்கு..”

 

3

அந்த வீட்டில் தண்ணீர் சொட்டுவதைப்போல சத்தம் கேட்டபோது அந்த இரு ஈரானியப் பையன்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சிரித்தார்கள். ப்ரோக்கர் சொன்ன விவரங்கள் அவர்கள் காதுகளில் இறங்கியது போலத் தெரியவில்லை. இருவரும் கூர்ந்து பார்த்துக்கொண்டு கண்களுக்குள் நீந்தினார்கள். கைகால்களை நீட்டி எவ்வளவு முடியுமோ அவ்வளவு மகிழ்ச்சியாக நீந்தினார்கள்.

தொட வந்த அவனிடமிருந்து தப்பித்துக்கொள்ள இவன் முன்னால் சென்றான். அவன் விடாமல் தண்ணீரை உதைத்துக்கொண்டே இவனுடைய கால்களை பிடித்து இழுத்தான்.

முடிவில் இருவரும் ஒன்றாக நீந்தத் தொடங்கினார்கள்.

தொலைவில் நாய் குரைப்பது தெளிவில்லாமல் கேட்டு ப்ரோக்கர் ஈரானியப் பையன்களின் பக்கமாகத்  திரும்பி “ம்.. வாட்? லைக் இட்?”  என்று கேட்டான்.

 

(கன்னடத்தின் முக்கியமான நாளிதழான “பிராஜாவாணி” யின் ஞாயிறு சிறப்பிதழில் வெளிவந்த கதை. )

கன்னடம் : கனகராஜ் பாலசுப்பிரமணியம்

தமிழில் : நல்ல தம்பி

 

கனகராஜ் பாலசுப்பிரமணியம்

தமிழ் தாய் மொழியாக கொண்டு கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்தவன். கன்னடத்தில் கதைகள், கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கும் நான் தற்போது தமிழில் எழுத ஆரம்பித்திருக்கிறேன்.

கர்நாடகத்தின் முக்கிய இலக்கிய கூடமான சிவமொக்கா கன்னட சங்கம் வழங்கும் ”யு.ஆர். அனந்தமூர்த்தி கதா விருது”  ‘சிலோன் சைக்கிள்” என்ற என்  சிறுகதை தொகுப்புக்கு கிடைத்துள்ளது. இதுவரை கன்னடத்தில் இரண்டு சிறுகதை தொகுப்புகள் வெளிவந்திருக்கிறது. ”பிராஜாவாணி” என்கிற முக்கிய கன்னட நாளிதழில் தொடர்ச்சியாக இலக்கிய கட்டுரைகள் எழுதி வருகிறேன். தமிழிலிருந்து இந்திரா பார்த்தசாரதி அவரின் ”ஔரங்கசீப்” நாடகத்தை கன்னடத்தில் மொழிபெயர்த்துள்ளேன். கர்நாடக சாகித்ய அகாடெமி ஆண்டு தோறும் கொண்டுவரும் சிறந்த கன்னட சிறுகதை புத்தகங்களில் எனது கதைகள் தேர்ந்தெடுக்கபட்டிருக்கினறன. மொழி பெயர்ப்பாளர் கே நல்லதம்பி என் கதைகளை தமிழுக்கு மொழி பெயர்த்து அது புத்தகமாக விரைவில் வர உள்ளது.  

தமிழில் எழுத ஆரம்பித்திருக்கும் நான் அரேபியா வாழ்க்கையை குறித்து ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  இதோடு அமேசானின் Kindle  லில் “பாலைவனத்தின் ஐந்தாம் சுவர்”  என்கிற குறுநாவல் விரைவில் வரவுள்ளது. சவுதி அரேபியாவின் ப்ரின்ஸ் சத்தாம் பின் அப்துல் அஸீச் பல்கலை கழகத்தில் ஆங்கில இலக்கியம் கற்பித்துக் கொண்டிருக்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.