அமெரிக்க இலக்கியம் : ஒரு அறிமுகம்

மெரிக்காவின் முதல் இலக்கியம் 1620ல் மேஃப்ளவர் என்னும் கப்பலில் இங்கிலாந்தில் இருந்து வெளியேற்றப்பட்டு அங்கு வந்திறங்கிய  சீர்திருத்த சமயவாதிக ( Puritans) களால் எழுதப்பட்ட மதம் சார்ந்த பயணக்குறிப்பாகத்தான் இருந்தது ( Bradford, History of Plymoth Plantation). பின் வந்த ஸ்மித் மற்றும்  ஹிக்கின்சனின் எழுத்துக்களும் அவ்வாறே இருந்தன. இங்கிலாந்திலிருந்து மதக் காரணங்களுக்காக வெளியேற்றப்பட்ட தீவிர கிறிஸ்தவர்களை வரவேற்பதுமட்டுமே அவ்வெழுத்துக்களின் நோக்கமாக இருந்தது. அமெரிக்காவில் குடியேறிய ஆங்கிலேயர் தவிர்த்த முக்கியமான இதர ஆரம்பகாலத்தவர் டச், ஸ்வீடிஷ்,ஜெர்மானியர், ப்ரென்ஞ்ச், ஸ்பானியர், இத்தாலியர் மற்றும் போர்ச்சுகீசியர் ஆவர். இவர்களுள் இங்கிலாந்து நாட்டவரே பெரும்பான்மையினர். பூர்வீகக் குடிகளான செவ்விந்தியரின் இலக்கியம் எழுதப்படாத வாய்மொழி இலக்கியமாகவே இருந்தது.

       அமெரிக்காவின் வடகடற்கரையோரம் குடியேறிய ஆங்கிலேயர் அப்பகுதியை நியூ இங்கிலாந்து என அழைத்ததுடன் தங்கள் மத நம்பிக்கையை சுதந்திரமாக அனுசரித்தனர். அவர்கள் இங்கிலாந்து கிறித்தவ ஆலயங்களை சீரமைக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்களாகவோ வேறு புதியதொரு சபையை நிறுவ ஆசை கொண்டவர்களாகவோ இருந்ததோடு ப்யூரிடன்ஸ் என்று அழைக்கப்படுபவர்களாக மாஸெசூசெட்ஸ் என்னும் இடத்தில் வாழ்ந்தனர்.

17ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் அட்லாண்டிக்கின் வடக்கு மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகள் ஆங்கிலேயர் வாழும் காலனிகளாக அமைக்கப்பட்டன. காலனியர்களிடையே, கவிஞர்களும், கட்டுரையாளர்களும் பெருமளவு இருந்தனர். கதைகள் புனைவுகள் என்பதால் தடை செய்யப்பட்டவையாய் இருந்தன. கவிஞர்கள் வெகுவாக  ஐரோப்பிய எழுத்தாளர்களை பிரதிபலித்தனர். (உ.ம்) ஆன் ப்ராட்ஸ்ட்ரீட், பெஞ்சமின் ப்ராங்க்லின், ஜார்ஜ் இர்விங், ப்ரையன்ட் ஆகியோர். 18ம்நூற்றாண்டின் பிற்பகுதியில் புனைவுகள் எழுதப்படலாயின. எட்கர் ஆலன் போவின் துப்பறியும் கதைகள் காலம் கடந்து நிற்பவை. அவரின் சமகாலத்தவரான நதேனியல் ஹாத்தார்ன் கவிதை எழுதவில்லை யென்றாலும் அவரின் நவீனங்களும், சிறுகதைகளும் அன்றைய அமெரிக்க சமூகத்தின் நிலைப்பாட்டை பிரதிபலிப்பவையாகவும் இலக்கிய உலகில் தனித்தொரு அடையாளம் கொண்டவையாகவும் இன்றும் விளங்குகின்றன.

400 ஆண்டுகால அமெரிக்க இலக்கிய வரலாறு மிகப் பரந்ததும். ஆழமானதும், வீரியமிக்கதுமாகும். Melting Pot of Cultureஎன இன்றளவிலும் அழைக்கப்படும் அமெரிக்கா அது சுதந்திரமடைந்த 1776 ஆம் ஆண்டிலிருந்து வெவ்வேறு நாடுகளைச் சார்ந்தவர்கள் குடியேறும்  இடமாகவும் எல்லாவித நாகரிகத்துக்கும் இடமளிப்பதாகவும்  இருந்ததே அதன் இலக்கியத்தின் பன்முகத் தன்மைக்கு காரணமாகும். சுதந்திரத்திற்கு முன்; சுதந்திரத்திற்குப் பின் 1830 வரை; 1830 – 1870 வரை; 1870 – 1910; 1910 – 1945 மற்றும் 1945 – இன்றுவரை என வசதி கருதி வரையறுக்கப்பட்டுள்ள அமெரிக்க இலக்கியம், கருத்துப்படிவங்களைப் பொறுத்து

சீர்திருத்த கிறித்தவம் ( Puritan Christanity),

ஆழ்நிலை (transcendentalism),

யதார்த்தவாதம் ( Realism ),

இயற்கை வாதம்  (Naturalism),

மனிதாபிமானம் (Humanitarinism ) மற்றும் மிகச் சமீபகால கருத்துக்களான வர்க்க, பாலின, அரசியல் வேறுபாடுகளை ஆதாரமாகக்  கொண்டும் உள்ளது

அதிலும் முக்கியமாக இன அளவுகோல்களைப்  பொறுத்தவரை எழுத்தாளர்கள் பல இனங்களை சார்ந்தவர்களாக இருப்பதால் எழுத்துக்கள் அவர்கள் சார்ந்த இனத்தை அடிப்படையாகக் கொண்டு பகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் அறியப்படவேண்டியவை –  லத்தீன்-அமெரிக்கன், ஸ்பானிஷ்-அமெரிக்கன், ஆப்பிரிக்க-அமெரிக்கன், ஆசிய – அமெரிக்கன், யூத – அமெரிக்கன், செவ்விந்தியர் இலக்கியம் ஆகியவை. மேலும், அமெரிக்க பெண்ணியவாதம் மற்றும், இலக்கிய கோட்பாடுகள் உலக இலக்கியம் மற்றும் சிந்தனைகளுக்கு அடித்தளமாகவும் இருக்கின்றன.

 

தனித்துவம்,இலட்சியவாதம்,இயற்கையின் தெய்வீகம் ஆகியவற்றை கருப்பொருளாக கொண்டிருந்த அமெரிக்க இலக்கியம் இனவெறி, மனிதனால் உண்டாக்கப்பட்ட பேரழிவு, இனப்படுகொலை, புலம்பெயர்ந்தோர் மனவெளி, ஒடுக்கப்பட்டோரின் குரல் ஆகியவற்றை எதிரொலிப்பதாக ஆனது வரலாறு. எமர்சன், விட்மன், தோரோ தொடங்கி ஹென்றி ஜேம்ஸ், கார்சியா மார்க்கி, டான்டெலிலோ, சொஜர்னர் ட்ரூத், டோனி மாரிசன், ஆலிஸ் வாக்கர், ஸ்காட் மாமடே, லாசன்இனாடா,ஜோசஃப் ஸ்டைரன், எலி வீசல் என நாவல், கவிதை, கட்டுரை, நாடகம் என்ற தளங்களில் நவீனத்துவ, பின்நவீனத்துவ எழுத்தாளர்கள் ஏராளம்.

சீர்திருத்த சமயவாதிகளால் இது ஏற்புடையது, இது ஏற்புடையது அல்ல என கட்டமிடப்பட்ட 17ம் நூற்றாண்டு இலக்கியம் தொடங்கி ‘All is permitted’ என்ற சித்தாந்தத்துடன் வாழும் 21ம் நூற்றாண்டு எழுத்தாளர்கள் வரை அமெரிக்கர்களின் எழுத்துக்கள் ஏற்படுத்திய / ஏற்படுத்தும் அலைகள் பிரம்மாண்டமானவை. பல விதங்களில் உலக அளவிலான சித்தாந்தங்களுக்கும், அழகியலுக்கும், இலக்கிய கோட்பாடுகளுக்கும் அடித்தளமாய் விளங்கும் அமெரிக்க இலக்கியம் தொட்டுச்செல்லாத பொருளோ, உத்தியோ இல்லை எனலாம். அதன் அடிநாதமாய் விளங்கும் கருத்து சுதந்திரம் வியக்க வைக்கும் ஒன்றாகும்.

இதற்கு ஒரு சிறந்த உதாரணம் 1797ம்வருடம் அடிமைத்தளையில் பிறந்த இசபெல்லா பாம்ப்ரீ (Isabella Baumfree) என்னும் கருப்பினப் பெண்மணி 1851ம்வருடம் ஒஹையோ மாகாண ஆக்ரானில் நடந்த பெண்கள் மாநாட்டில் நிகழ்த்திய உரை. அடிமைத்தளையிலிருந்து விடுதலை  அளித்த சட்ட பாதுகாப்பை மறுத்த தன் முதலாளியிடமிருந்து வெளியேறி தன் பெயரை சொஜர்னர் ட்ரூத் (Sojourner Truth) என மாற்றிக்கொண்ட அவர் அடிமைத்தன ஒழிப்புவாதியாவார். அவர் ஆற்றிய நான் பெண் இல்லையா? (Ain’t I a Woman) என்னும் உரை குறிப்பிடத்தக்கது.

Isabella Baumfree

 

நான் பெண் இல்லையா?

“நல்லது குழந்தைகளே, எங்கே இவ்வளவு களேபரம் உள்ளதோ அங்கே ஏதோ ஒன்று சரியில்லை என்று அர்த்தம். நான் நினைக்கிறேன்,  ‘தெற்கில் உள்ள கருப்பர்களும் வடக்கில்  உள்ள பெண்களும் தத்தம் உரிமைகளைப்பற்றி பேசுவதைப்பார்த்தால் வெகு சீக்கிரம் வெள்ளை ஆண்கள் ஏடாகூடமான பிரச்சினையில் சிக்கிக்கொள்வார்கள் என்று. ஆனால் இங்கு இருப்பவர்கள் பேசுவது என்ன?

அதோ அங்கே இருப்பவர் பெண்கள் வண்டியில் ஏறுவதற்கு உதவி தேவைப்படுபவர் என்றும், சேற்றுப்பள்ளங்களின் மேல் தூக்கிச்செல்லப்படவேண்டியவர்கள் என்றும், எங்கும் நல்லதொரு இடம் தரப்பட வேண்டியவர்கள் என்றும் கூறுகிறார். யாரும் எனக்கு  ஒரு பொழுதும் வண்டியில் ஏறுவதற்கு உதவியதில்லை, பள்ளத்தை தாண்டவும் உதவுவதில்லை. மற்றும் எனக்கு நல்ல இட வசதியும் செய்து கொடுப்பதில்லை! நான் பெண் இல்லையா? என்னைப்பாருங்கள்! என் தோள்களைப்பாருங்கள்! நான்உழுதிருக்கிறேன், நடவு செய்திருக்கிறேன், அறுவடை செய்து அதை வீடு கொண்டு சேர்த்திருக்கிறேன். எந்த ஆணாலும் என்னை  முந்த முடிந்ததில்லை. ஆனாலும் நான்பெண் இல்லையா? ஆண்போலவே உழைக்கவும் செய்து, சாப்பிடவும் செய்திருக்கிறேன் – அதாவது கிடைத்தால் – அத்துடன் சவுக்கடிகளையும் வாங்கியிருக்கிறேன். நான் பெண்ணில்லையா? நான் பதிமூன்று குழந்தைகளை பெற்றிருக்கிறேன், எல்லாக்குழந்தைகளும் அடிமைகளாக விற்கப்படுவதையும்  பார்த்திருக்கிறேன. ஒரு தாயாக நான் அழுது புலம்பியபோது கடவுளைத்தவிர வேறு யாரும்கேட்கவில்லை. ஆனாலும் நான் பெண் இல்லையா?

பிறகு அவர்கள் இந்த தலையிலிருப்பதைப்பற்றி பேசுகிறார்கள். அதை என்னவென்று அவர்கள் சொல்கிறார்கள்? (கூட்டத்தில் இருப்பவர்கள் ‘அறிவு’ என்று முணுமுணுக்கிறார்கள்). அதுதான் என் தேனே. அதற்கும் பெண்களின் உரிமைகளுக்கும் அல்லது நீக்ரோக்களின் உரிமைகளுக்கும் என்ன சம்பந்தம்? என்னுடைய கிண்ணம் ஒரு ஆழாக்கு பிடிக்குமென்றால், உன்னுடையது ஒருபடி பிடிக்குமானால் நீ ஏன் என்னுடைய ஆழாக்கை கொடுக்கத்தயங்க வேண்டும்?

அதோ கறுப்பு உடுப்பு போட்டிருக்கும் அந்தக் குள்ளமான மனிதர்  ஆண்களுக்கு சமமான உரிமை பெண்களுக்கு இல்லாததற்குக் காரணம் கிறிஸ்து பெண் அல்ல என்பதால் என்கிறார். எங்கிருந்து உங்கள் கிறிஸ்து வந்தார் என்று கேட்கிறேன்.கடவுளிடமிருந்தும்,பெண்ணிடமிருந்தும்.ஆணுக்கு அங்கே ஒரு வேலையும் இருக்கவில்லை.

கடவுள் படைத்த முதல் பெண்மணி உலகை புரட்டிப்போடும் அளவிற்கு வல்லமை படைத்தவளாக இருந்தாள் என்றால் இங்கு உள்ள எல்லாப் பெண்களும் ஒன்று சேர்ந்து  உலகைத்திருப்பிப் போடலாம்! இப்பொழுது அவர்கள் அதை செய்ய வேண்டும் என்கிறார்கள, ஆண்கள் நகர்ந்து கொள்ளட்டும்

நான் சொல்வதை கேட்டதற்கு நன்றி. இந்த வயதான சொஜர்னரிடம் சொல்வதற்கு வேறொன்றும் இல்லை”.

அமெரிக்க இலக்கியம் என்னும்  கடலில் இக்கட்டுரையில் உள்ளது சிறு துளி மட்டுமே. எந்தக்காலவரையறைக்குள்ளும் அடக்கிவிட முடியாத, இயக்கங்களும், ‘இசம்’ களும் அடுத்தடுத்து ஒன்றை ஒன்று அனுசரித்தும், மறுதலித்தும்  முதிர்ந்த சிந்தனைகளாக உருமாறி விளங்கும் அமெரிக்க இலக்கியத்தை வாசிப்பது அனுபவ அறிவாகும் என்றால் மிகையல்ல.

 

வி.காதம்பரி,

பேராசிரியர் (ஓய்வு)

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.