நான் “எறியுங்கள்” எனச் சொன்னபோது எனது உணவகத்தின் சமையல் தலைவன் “ஏன்?” எனத் தனது வெள்ளைச் சிரிப்பால் என்னைக் கேட்டான்.
“இறைச்சியினது மணம் என்னை வாந்தி எடுக்க வைக்கின்றது.”
“இதனை எறிவதா? இந்த இறைச்சியின் விலை அதிகம். இது தூரத்திலிருக்கும் மாட்டுப் பண்ணையிலிருந்து வருகின்றது. அங்கு உள்ள மாடுகள் செயற்கைத் தீனிகளை உண்பவை அல்ல.” எனச் சொல்லியபின் அவன் அவற்றைத் தனது எரியும் பாத்திரத்தின் முன் கொண்டு சென்றான். அவனது வெள்ளை முகம் கறுப்பாகியது.
“இது பல கிலோமீட்டர்களைக் கடந்து வந்தது என எனக்குத் தெரியும். Limousin நகர இறைச்சி. சுத்தமான இறைச்சியும் கூட என்பதும் எனக்குத் தெரியும். இது எப்போது வாங்கப்பட்டது?”
“சில தினங்களின் முன்னர்தான். இந்த இறைச்சியைத் தரும் மாடு 3 தினங்களின் முன்தான் கொல்லப்பட்டது, அறுக்கப்பட்டது, பாக்கெட்டுக்குள் வைக்கப்பட்டது. 18 நாள்கள் குளிர் அறைக்குள் காக்கப்படும்.”
“அதுவும் எனக்குத் தெரியும். கடந்த டிசம்பரில் நாம் சமைத்த இறைச்சி பிரேசில் நாட்டைச் சேர்ந்தது. எமது கடைக்கு வருகை தந்தோர் சாப்பிட்ட பின்னர் எமக்கும் இறைச்சிக்கும் நன்றி சொல்லினர். ஆனால் அந்த இறைச்சி தரும் மாடுகள் கொல்லப்பட்டன ஒரு மாதத்தின் முன் என்பதை பாக்கெட்டில் ஒட்டப்பட்டிருந்த தாளின் குறிப்புகளால் அறிந்தேன்.”
“நீ சொல்வது சரி! ஆனால் இது பிரெஞ்சு இறைச்சி. நான்கு மடங்கு விலை கூடியது. மாடுகள் கொல்லப்பட்டபின் ஒரு கிழமைக்குள் உணவகங்களுக்கு வந்துவிடும். இந்த இறைச்சியினது மணம் நீ சொல்லியதுபோல அசுத்தமானது. இதனை விற்றவரிடம் நான் இப்போதே பேசுவேன்.”
சமையல் தலைவன் தொலைப்பேசியின் முன்.
“வணக்கம். உங்களிடம் இருந்து வந்த இறைச்சியில் சிக்கல் உள்ளது.”
“வணக்கம், உங்களது வாடிக்கையாளர் இலக்கம்?”
“583691”
“பாரிஸ் 14 இல்…..”
“ஆம்! அங்குதான் எமது கடை உள்ளது.”
“இறைச்சியில் என்ன பிரச்சினை?”
“பாக்கெட்டைத் திறந்தபோது மோசமான மணத்தைத் தந்தது.”
“எங்களது இறைச்சி தொழிற்சாலை இறைச்சிகள் போல இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். நமது மாடுகள் பண்ணைகளில் மிகவும் கவனமாக வளர்க்கப்படுவன. உங்களது இறைச்சி வேண்டுதல் நமக்கு 12 ஆம் திகதி கிடைத்தது. நாம் அதனை 13 காலையில் அனுப்பி வைத்தோம். அது எப்போது உங்களுக்குக் கிடைத்தது?”
“14 காலையில்.”
“எமது இறைச்சி 18 நாள்கள் தரத்துடனும், சுவை மாறாமலும் இருக்கும். உங்களது குளிர் அறையில் இப்போதைய நாள்களில் பிரச்சினை ஏற்பட்டதா?”
“இல்லை. இறைச்சி மணக்கின்றது என எனது சமையல்காரர் சொல்கின்றார்.”
“சரி! எமது இறைச்சியை உங்களிடம் கொண்டு வந்த தொழிலாளருடன் தொடர்பு கொண்டதின் பின் நான் உங்களை அழைப்பேன்.”
இறைச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நிச்சயமாக அதனை எமக்குத் தந்தவரிடம் விசாரிப்பார். கேள்விகள் என் முன் இப்போது தெளிவாகத் தெரிந்தன.
- எத்தனை மணிக்கு நீ இறைச்சியைக் கொடுத்தாய்?
- நீ அங்கு சென்றபோது உணவகம் திறக்கப்பட்டு இருந்ததா?
- பொருள்களின் பொறுப்பாளனா, சமையல்காரனா அல்லது வேறுயார் வாங்கினர்?
- வாங்கியவர் இறைச்சியின் வெப்பநிலையைப் பரிசோதித்து எழுதினாரா?
- பரிசோதித்தவர் சுத்தமான உடுப்போடுதானா இருந்தார்?
- இறைச்சியை நீ அவதியில்தான் கொடுத்தாயா?
இந்த விஷயத்தை முதலாளி சாப்பாட்டுப் பொருள்களது அரச கண்காணிப்பாளருக்கு அறிவித்திருந்தால் அவர் இறைச்சிக் கடைப் பணிப்பாளரிடம் கேட்க நினைக்கும் சில கேள்விகளும் என் முன்.
- ஆம்! பிரான்சு மாடுகள்தாம். இவை கொல்லப்படுவன இங்குதான். இவை எப்போது கொல்லப்பட்டன?
- கொல்லப்பட்ட தினத்தில் இறைச்சி உடனடியாக உறைபதனப் பெட்டியில் வைக்கப்பட்டதா
- சுத்தமானதா இறைச்சியைக் கொண்டுபோன வாகனம்?
- கிராமத்தில் வளர்ந்த இந்த மாடுகள் எந்த உணவுகளைச் சாப்பிட்டன?
- மாட்டைக் கொலை செய்தவர் சுத்தமானவரா? கொலைசெய்யும்போது அவர் அணிந்திருந்த உடைகள் சுத்தமானவையா?
- கொலையைச் செய்யும்முன் அவர் கழிவுத்தொட்டி அறைக்குச் சென்றாரா? திரும்பி வரும்முன்னர் அவரது கை மிகவும் கவனமாகக் கழுவப்பட்டதா?
- கிராமிய மாடு இங்குள்ள கிராமத்திலிருந்து வந்ததா அல்லது வேறு நாட்டின் கிராமத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு இங்கு வந்ததா?
நிச்சயமாக நிறையக் கேள்விகள் கேட்கப்படும் என்பதை எனது 20 வருடச் சமையல் அனுபவத்தால் அறிவேன். கேள்விகள் வாங்குபவனுக்கும், விற்பவனுக்கும், பரிசோதனையை அபூர்வமாகச் செய்யவரும் அரச மிருக நிபுணருக்கும் தெரியும்.
ஆனால் இந்தக் கேள்விகளைக் கவனம் எடுக்காமல் மணக்கும் இறைச்சியை நிச்சயமாகச் சிறப்பாகச் சமைக்கும் வித்தைகள் எனக்குத் தெரியாதா? செய்யாமைக்குக் காரணம் முதலாளியே.
காலை, மத்தியானம் , மாலை வேலைகளில் என்னிடம் நிறையப் புன்னகைகளைக் காட்டுபவர். பலரிடமும் எனது சமையல் திறத்தைப் பாராட்டுவதற்கும் அவர் தவறுவதில்லை.
ஆம்! நட்டத்தில் ஓடுவதல்ல எமது உணவகம். நிறையச் சாப்பிடுபவர்கள் வருகின்றனர். நான்கு பேர்தான் சமையல் அறையில்.. சர்வீஸுக்கு இருவர்… காசுகளை எண்ணும் வேலைதான் முதலாளிக்கு…
எங்கள் உணவகத்தில் ஓடுவதுதான் எங்களுக்கு வேலை. கழுவல் வேலை அமாதுவிற்கு. ஆபிரிக்காவின் செனெகல் நாடு. நிறைய வேலை அவனுக்கு இருந்தாலும், காலையில் உணவகத் தலைவர், நான் கொடுக்கும் மரக்கறிகளைத் துப்பரவாக்கி, மிகவும் கவனமாக வெட்டவேண்டும். அமாது சிறப்பான முஸ்லீம். அடிக்கடி விரதம் செய்வான்… நோன்பையே … விரதம் என்கின்றேன். புகையின் எதிரி, சமையல் புகையின் எதிரியல்லன், எங்களது சிகரெட் புகைகளின்…/ எனக்கும், சமையல் தலைவனுக்கும், இரண்டு சேர்விஸ்காரிகளுக்கும் புகைக்காது விட்டால் மூளைகள் இயங்குவது சிறிய வேகத்தில்தான்… காலையில் அமாது மரக்கறிகளை வெட்டும் வேளையில் நாம் வெளியே சென்று அமைதியாகப் புகைப்பதுண்டு. சமையல் தலைவர் தனது கட்டையில் எமக்கு சில இழுவைகளை இலவசமாகத் தருவதால் எங்களுக்கு உணவகத்தில் ஓடுவது இலகுவானதாக இருக்கும்.
நாங்கள் உள்ளே வரும்போது அமாது தனது அழகிய சிரிப்பையே காட்டுவான். நான் அல்லது சமையல் தலைவன் அவனது மரக்கறி வெட்டுதல்களுக்கு சிறிய உதவி செய்வோம்.
“சுந்… “ என என்னை அழைப்பவன்தான் எரிக். அவன்தான் சமையல் தலைவன். நான் அவனை எரியன் என்றும் சிலவேளைகளில் அழைப்பதுண்டு, எரிக் என்று அல்ல. பல வேளைகளில் அவன் எரிந்துகொண்டே இருப்பான். எனது பெயர் சுந்தர். எரிக் என்னை சுந் என அழைத்ததால் எனது முகப்புத்தகத்தில் எனது பெயர் சுந்தே.
“எரியனே, நான் 5 சாப்பாடு போட வேண்டும். என்னை ஏன் அழைக்கின்றாய்?”
“இந்த இறைச்சியை நீ உனது விதத்தில் தயாரி… விற்பவரிடம் இருந்து ஒரு பதிலும் இப்போது இல்லை.”என வேகமாகச் சொன்னான்.
“நான் தயாரிக்க முடியாது.”
“ஏன்?”
“நான் 17 வருடங்கள் இங்கு வேலை செய்வது உனக்குத் தெரியும். கடந்தவாரம் முதலாளியிடம் சம்பளத்தைக் கொஞ்சம் உயர்த்துமாறு கேட்டேன். உணவகம் நட்டத்தில் ஓடுவதாகவும், இப்போது உயர்த்த முடியாது என்றும் சொல்லி விட்டார்… இந்தப் பொய்யைக் கேட்டு அவருக்கு உதவ முடியுமா?”
“நீ சொல்லுவது சரி! என்னிடமும் கடந்த மாதம் அப்படித்தான் சொன்னார்.”
எரிக்குடன் நான் பல வருடங்கள் தொழில் செய்கின்றேன். தொடக்கத்தில் அவன் கொஞ்சம் எரிச்சலுடன்தான் என்னிடம் கதைத்தான். நான் தக்காளிகளை வெட்டியபோது, வெட்டும் கலையை அவன் எனக்கு விளக்கிய வேளையில் அவனது விளக்கம் எனக்குப் பிடிக்காமல் நாம் கோபத்துடன் மோதுப்பட்டோம். அவன் உடனடியாகக் கீழே விழுந்தான். அப்போதிலிருந்து அவனுக்கு என்மீது பயம் வந்தது.
“நாம் எப்படி வெட்டினாலும், அவைகள் வாடிக்கையாளரது வயிறுகளுக்குள்தாம் போவன.” என்றேன்.
“நீ சொல்லுவது சரிதான் … பிரெஞ்சுக் கலாச்சாரம் ஓர் வியாபாரக் கலாச்சாரம்… எதனையும் அழகாகச் செய்யவேண்டும் “ எனப் பயத்துடன் அமைதியாகச் சொன்னது அவனது சின்ன வாய்.
+++
+++
அன்று எமது சேர்விஸ் முடிந்தபோது வழமையாக முதலாளி எம்மை பியர் குடிக்க அழைத்தார். ஆம்! அவர் எமது சேர்வீஸூக்குத் தரும் காணிக்கை இது. குடி முடிந்து வெளியே போனபின் … “இன்னொரு பியர் குடிக்க விருப்பமா?” எனக் கேட்டான் எரிக். மறுப்பது கலாச்சாரமா?
எமது கடையின் அருகில் நிறைய பார்கள் உள்ளன. அவன் என்னை 15 நிமிடங்கள் நடமாட வைத்தான். கட்டையை (போதைத் தூள் சிகரெட்) எனக்கும் புகைக்கத் தந்து…. எனக்கு ஏறியது… அவன் சாதாரணமாக…
“உனக்கு ஏறவில்லையா?”
“ஏறும்!” என மீண்டும் ஓர் கட்டையைத் தயார் செய்யத் தொடங்கினான்
இந்தக் கணத்தில்தான் நான் சீதனம் அதிகம் இல்லை என்பதால் கையை விட்ட சுமந்தி எனும் பெண்ணின் உருவம் என் முன் வந்தது.
நான் பிரான்சில், அவள் யாழில். யாழ் எனும் இசைக் கருவியில் அல்ல. யாழ்ப்பாணம் என்ற கோடைத்துவ நிலத்தில். அது ஓர் பேச்சுக் கலியாணத் திட்டம். என்னை அவளுக்குத் தெரியாது… அவளுக்கும் என்னைத் தெரியாது… எங்களுக்குள் ஓர் காதலாம்! சீதன மேடையில் ஏறியபோது எமது காதல் முறிந்தது.
சுமந்திக்கு முன்பும் பல திட்டங்களை நான் மிதித்தேன்.
காவேரி எனும் பெண்ணை எனக்குப் பார்த்தனர். படம் வந்தது. மூடியே இருந்தது அவளது ஓர் விழி. எனக்கு 11 விரல்கள் கால்களில் இருந்தது என்பதை அவள் தனது ஓர் விழியால் காணவில்லையென்பது வேறு விஷயம்….. அவளது மூடாது இருந்த ஒரு விழியில் வெறிவந்து…. எரிந்தேன். ஆனால் அவளது ஓர் விழியோ மூடப்பட்டு… நல்ல காலம் எனது குறியின் ஆண்மையின்மை அவளுக்குத் தெரியுமா?
என் முன் கட்டை. இழுத்தேன். ஏறியது. “நன்றி எரிக்!” எனச் சுழன்றபடி என் வாய் சொல்லியது.
கடைசியில் எனது பெற்றோர் ஓர் தீர்வை எனக்குள் சர்வாதிகாரமாகத் தீத்தினார்கள்.
“முடி!”
யாரை?
காவேரியைத்தான்.
சீதனத்தைக் கேட்டபோது எனக்குள் மயக்கம் வந்தது. பல வருடங்கள் தொழில் செய்யாதிருப்பதைத் தூண்டும் சீதனம்.
“முடி!” எனும் கட்டளைக்கு “ஆம்!” என்றேன்.
அவள் வந்தாள் இங்கு. அவளது ஒரு விழியினதும் எனது இரு விழிகளினதும் தொடர்புகளுக்குள் என்னை அவளும், அவள் என்னையும் விரும்பாதிருப்பது தெரிந்தது.
விருப்பத்தில் என்ன உள்ளதாம்?
மீண்டும் கட்டையில் பல இழுவைகள் செய்தேன்.
நானும் அவளும் சில மாதங்கள் வாழ்ந்தோம். அவளை நான் எப்போதும் நிமிர்ந்தே பார்த்தேன். நான் சின்னன் என்பதில் அவளுக்கு இடைஞ்சல் உள்ளது என அவள் விழி காட்டியது.
உண்மையிலேயே நான் அவளைக் கற்பழிக்கவில்லை.
இங்குதான் எல்லாமே ஈஸி. சில மாதங்களில் நாம் விவாகரத்தால் பிரிந்தோம்.
மீண்டும் மீண்டும் படங்கள் எனக்கு முன் வந்தன. இவை கொடுமைகளாகப் பட்டதால்தான் நான் இப்போது தொழுகையையே செய்யாத ஓர் ஈரானியப் பெண்ணோடு வாழ்கின்றேன். இது ஒப்பந்தம் இல்லாத வாழ்வு. இதில் நான் எப்போது வருவேன் அல்லது அவள் எப்போது வருவாள் எனும் கேள்விகள் இல்லை. பல வேளைகளில் நான் முந்திப் போகும் வேளையில் அவள் பிந்தி வருவது சிக்கல்தான். அவள் முந்தி வருகையில் நான் பிந்திப் போவதில் அபத்தங்கள் இல்லையா?
நான் அவளை வெறித்தேன். அவளும் என்னை வெறிப்பதுபோல காட்டிக்கொண்டாள். நான் சிறிய ஏழை போலவே நடித்தேன். என்னிடம் சீதனக் காசு உள்ளது எனச் சொல்லாமல் எனது வீட்டில் அவள். எனது வங்கியும் அவளது வங்கியும் அருகருகில் இருக்கவில்லை.
மீண்டும் கட்டையை என் முன் நீட்டினான் எரிக்.
“நான் முதலில் கம்யூனிஸ்ட்டாக இருந்தேன்.” எனச் சிறிது ஆட்டத்துடன் அவன் சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“இந்த செய்தி உன்னிடம் இருந்து பிந்தி வருகின்றது. நானும் உனக்கு ஓர் உண்மையைச் சொல்லவா?”
“சொல்! இந்த நாட்டில் நீ எதனையும் சொல்லலாம்… நீ சுரண்டப்படுவாய் என்பதை மறக்க வேண்டாம்…”
“அது எனக்குத் தெரியும்…. நானும் இலங்கையின், யாழ்ப்பாணத்தில் ஓர் கம்யூனிஸ்ட்டாக இருந்தேன். பல இரவுகளில் சுவர்களிலே சிவப்புக் கோஷங்களை ரகசியமாக எழுதுவது எனது கலையாக இருந்தது.”
“கம்யூனிசம் எப்படி அங்கு வந்தது?”
“சீனாவாலும் மாஸ்கோவாலும் …”
“கம்யூனிசம் பல நாடுகளில் தோன்றியதும் பின்பு இறந்ததும் என்பதை நான் அறிவேன்.”
“சரி, ஏன் நாம் எமது முதலாளிக்கு எதிராக வேலை நிறுத்தம் செய்யக் கூடாது?”
நடுங்கியது அவனது உடல்.
“ஏன் நடுக்கம்?”
“இங்கு எதுவும் செய்யலாம். ஆனால் இது அப்போதைய பிரான்ஸ் அல்ல. அப்போது ஓர் தொழிற்சங்கம் வேலை நிறுத்தம் செய்தால் தொழிலாளர்களுக்கு லாபம். இப்போது … இப்போது நம்மை வெளியே தள்ளும் சட்ட உரிமை முதலாளிக்கு உள்ளது. இப்போதைய தொழிற்சங்கத் தலைவர்கள் முதலாளிகள் போல…”
“இது எனக்கும் தெரியும்.”
“பிரான்ஸ் உலகின் மிகப் பெரிய முதலாளித்துவ நாடுகளில் ஒன்று. ஆனால் இப்போது இங்கு வேலைகள் எடுப்பது கடினம். இது காரணமாகவே எனக்குப் பிள்ளைகள் இல்லை.”
“நீ சொல்லுவது சரிதான். எனக்கும் பிள்ளைகள் இல்லை. சரி, உனக்குப் பிள்ளைகள் தேவை என்ற எண்ணம் வந்ததா?”
“நான் ஒருபோதுமே திருமணம் செய்யவில்லை. இப்போது எலிசபெத்துடன். எமக்குப் பிள்ளைகள் தேவை என்ற விருப்பம் உள்ளது. ஆனால்…. இந்த முதலாளித்துவ அடக்குமுறையால் எப்படிப் பிள்ளைகளைப் பெறுவது?”
“அமைதியான மதுச்சாலை” எனும் பெயரைக் கொண்ட குடிகடைக்குள் நுழைகின்றோம்.
அதனுள் நிறையச் சத்தம் கேட்டது. அது ஓர் பிரெஞ்சு மதுச்சாலை. பணப்பெட்டியின் முன் ஓர் வயோதிப முதலாளி. சேவை செய்பவளுக்கும் அவரது வயது போல இருந்தது. சில வேளைகளில் அவரது மனைவியோ? அவள் எங்கள் முன் சிரிப்பது “உங்களுக்கு எது தேவை “ எனும் கேள்வி போல இருந்தது.
“எனக்கு ஓர் பெல்போர்ட் பியர்” இது எரிக்.
“குரானேன்பெர்க் எனக்கு.” இது நான்.
தூள் எனது தலையை ஆட்டியது. சிலோனில் நான் ஒருபோதுமே தூளைப் புகைத்ததில்லை. இங்குதான் யாவும். இங்குதான் எதனையும் சுதந்திரமாகச் செய்யலாமே. நான் ஒருபோதுமே அதனை வாங்கியதில்லை. சில நண்பர்கள் தந்தால் புகைப்பேன். எனக்குள் சில புரட்சி வெறிகள் இருந்தாலும் , நப்பித்தனம் கொஞ்சம் உள்ளது.
“சுந்… நீ அந்த இறைச்சியைத் தயாரிக்கமாட்டாயா?”
“இறைச்சி கொஞ்சம் பழுதானது. உனது நட்பின் காரணமாக அதனை நாளை சமையல் செய்வேன். ஆனால் நீ இறைச்சி மீது முறைப்பாடு செய்துள்ளாய் அல்லவா?”
“விற்பவரை நான் சமாளிப்பேன். சில நாள்கள் கழிந்ததால் அது அதிகம் மணந்தது என எறிந்தேன் எனச் சொன்னால், அவர் மீண்டும் இலவசமாகத் தருவார். சமை. முதலாளியுடன் எதிரியாக நாம் ஒருபோதும் இருக்கக் கூடாது.” என்றவுடன் அவனது கிளாஸ் வெறுமையாகியது.
மீண்டும் அவனது கிளாஸை நிரப்புமாறு அன்புடன் அம்மையாருக்குச் சொன்னேன்.
அந்த மதுச்சாலையில் சில அழகிய பெண்கள் இருந்தனர். ஆனால் அவர்களது அழகுக்கு மயங்கும் என்னால், அப்போது மயங்க முடியாமல் இருந்தது. காரணம் என் முன் இறைச்சி ஞாபகம்.
ஆம், நாம் இறைச்சிகளே எனும் தத்துவ விழிப்பு ஏன் இப்போது எனக்குள் வருகின்றது? பல வேளைகளில் நான், எனது உடல் மாமிசமாகவே எனக்குப் படுகின்றது. தினம் தினம் மரக்கறி சாப்பிடுபவர்கள் எல்லாம் மாமிசங்கள் இல்லையா? மாமிசம் புசிக்காத அனைவரும் மரக்கறி புசித்தாலும்… அவர்கள் இறைச்சிகளே. அனைத்து இறைச்சிகளும் எமது வயிறுகளில் நுழைந்து பின்பு தூசியாகப் போவதில்லையா?
மீண்டும் நான் இரண்டு பியர்களைத் தருமாறு சொன்னேன்.
“சுந் … உனக்கு நன்றி.”
“ஏன் நன்றி? இந்த பியருக்காகவா?”
“இல்லை, இறைச்சிக்காக… நாளை நீ தயாரிக்கும் இறைச்சியைச் சாப்பிடும் விருப்பம் இப்போது எனக்குள். உனது சமையல் கலையை நான் எப்போதும் விரும்புபவன் என்பது உனக்குத் தெரியும்தானே?”
“தெரியும், உனது சமையல் சுத்தமான பிரெஞ்சுச் சமையல்… ஆனால் எனது சமையலும் பிரெஞ்சுச் சமையல்தான் இந்திய மசாலாத் தூள்களின் சிறிதான கலவைகளோடு…”
“உன்னால்தான் இப்போது சாப்பாட்டுக்கு வருவோர் உறைப்பு சோசினைக் (Sauce) கேட்கின்றார்கள்.”
சில நிமிடங்களில் நாம் பிரிந்துகொண்டோம்.
*****
அந்த இரவு நான் மயக்கத்துடன் தூங்கியபோது மஞ்சள், ஏலம், கராம்பு போன்றவைதான் எனது நினைவுக்கு வந்தன. இவற்றால் நிச்சயமாக மோசமான மணத்தை நீக்க முடியும். சில வேளைகளில் நான் எனது ரூமில் குடல் சமைப்பதுண்டு. இதனது மணம் நான் வாழும் கட்டிடத்தையே அதனது மணமாக்கிவிடும். தொடக்க அவியலில் நான் அதிக மஞ்சளையும், கொஞ்சக் கொத்தமல்லிப் பவுடரையும் கலப்பேன். குடலின் குடல் மணம் குறைந்துவிடும்.
சமையல் ஓர்சுவையான கலைதான். நல்ல சமையல்காரனால் கூடாததையும் நல்லதாக ஆக்கி விடலாம். மன்னிக்கவும்… நான் ஓர் நல்ல சமையல்காரன்தான். சோமோன் மீனின் தோலை நான் உரிப்பதைக் கண்டால் முதலாளியும், சமையல் தலைவனும் நடுங்கி விடுவார்கள். இந்தச் செம்மீனை நான் அமைதியுடன்தான் தடவுவேன். இதனை மெல்லிய தாள்போல வெட்டுவது ஓர் கலைதான். நான் ஒருபோதும் கை விரல்களை வெட்டியதில்லை. இங்கே சமையல் கலைக்குள் நுழையும் வெள்ளையர்கள் எப்படியோ ஒரு விரலையோ அல்லது இரண்டு விரல்களையோ வெட்டியிருப்பார்கள். நான்கு விரல்கள் இல்லாத சமையல்காரனோடும் நான் வேலை செய்துள்ளேன்.
நான் அந்த இரவில் தூங்கவேயில்லை. டிவி யைத் திறந்தேன். ஒரு நிகழ்வும் பிடிக்கவேயில்லை.
காலையில் தொழிலுக்குப் போக மெத்ரோவுள் இருந்தபோது நான் செய்யவிருக்கும் இறைச்சிக் குழம்பு ஓர் பெரிய ருசிப்பைத் தந்து மணத்தது. யாழ்ப்பாணத்தில் இருந்தபோது நான் ஒன்றையும் சமைக்கவில்லை. அப்போது சமைக்கவும் தெரியாது. தெரியும் என்றால் சமைக்க விடுவார்களா? ஆனால் அங்கே சாப்பாட்டுக் கடைகளில் நான் ஓர் பெண் சமையலாளியையும் காணவில்லை. கண்டது ஆண்களே. அவர்களின் சமையல் ருசியை எனது நாவு ஒருபோதுமே மறந்ததில்லை.
உணவகம் வந்தது.
உள்ளே போனால் முதலாளியின் “வணக்கம்”, உண்மையிலேயே வணக்கம் இல்லாது இருந்தது என்பதை அறிந்துகொண்டேன்.
குளிர் அறைக்குள் சென்று எனது கனவைத் தடவிய இறைச்சியைத் தேடினால் அது இல்லாமலிருந்தது. பல தடவைகள் தேடினேன். காண முடியவில்லை. சீஸ் அறைக்குள் சென்றேன். சில வேளைகளில் நாம் பல சாத்தியப்படாத உணவு வகைகளை அங்கு மறைப்பதுண்டு. அங்கும் இல்லை. எனது மனம் சிறிது சிறிதாக உடைந்தது. நான் முதலாளியிடம் சென்றேன்.
“அசுத்த மணம் தந்த இறைச்சியைக் காணவில்லை.” என்றேன்.
“அதனைக் குப்பையில் எறிந்துவிட்டேன்.” என்று கத்திவிட்டு தனது முகத்தைத் திருப்பினார்.
அவரது பதிலால் உடையும் எனது கனவில் பல பச்சை முத்துகள் விளைவதைக் கண்டேன்.
புலம்பெயர்ந்த நாடுகளில் சிதைந்துபோகும் உளப்பாங்கை இறைச்சி கதையில் உணரமுடிகிறது.வாழ்த்துகள் கலாமோகன்.