எந்த நூற்றாண்டிலும் அணைந்து விடாத மெழுகுவர்த்தி அவன்  தஸ்தயெவ்ஸ்கி 200ம் ஆண்டுச் சிறப்பிதழிற்கு ஒரு முன்னுரை -க.விக்னேஸ்வரன்

ந்தத் தலைப்பை வைத்த பின்பு வெகுநேரம் சிந்தித்துக் கொண்டிருந்தேன். உண்மையில் தஸ்தயெவ்ஸ்கி 200-வது ஆண்டுச் சிறப்பிதழிற்கு முன்னுரை என்கிற பெயரில் என்ன எழுதிவிடப் போகிறேன் என்று. கடந்த ஆறு மாதங்களுக்கு மேல் இந்தச் சிறப்பிதழிற்காக என்னால் இயன்ற அளவில் பல்வேறு முயற்சிகளைச் செய்திருக்கிறேன். இது ஒரு பெரும் கனவாகத் தான் இருந்தது. இன்று அந்த முயற்சிகள் அனைத்தும் ஒரு சிறப்பிதழ் வடிவத்தில் கைகூடி வந்துள்ளது என்று பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. மகிழ்ச்சியுடன் பல்வேறு அனுபவங்களும் இந்த வேலைகளின் ஊடாகக் கிடைத்துள்ளது. அவற்றில் நல்லவையும் இருக்கிறது சற்றேனும் கெட்டதும் இருக்கிறது. இருக்கட்டும் அதில் வருத்தம் ஒன்றுமில்லை.
நீங்கள் என்றேனும் சுடர்விட்டு எரியும் மெழுகுவர்த்தியுடன் உங்கள் வாழ்க்கையின் சில மணிநேரத்தைச் செலவு செய்திருப்பீர்களா என்று எனக்குத் தெரியவில்லை. நான் வாய்ப்புள்ள போதெல்லாம் செய்திருக்கிறேன். அது ஒரு பரவசமான அனுபவம். தன்னை ஒவ்வொரு துளியாகக் கரைத்துக்கொண்டு சுடர்விட்டு எரியும் அதன் ஒளி தரும் பண்பின் மீது எப்போதும் தீராத மயக்கம். இதற்குப் பின்புலமாக அறிவியல் இருந்தாலும் மெழுகுவர்த்தியின் இச் செயல் என்றும் அபூர்வமான ஒரு செயல், அச் செயல் தரும் மயக்கம் என்றும் நம்மைப் பின்தொடரும். அதே மாதிரியான பின் தொடரும் மயக்கம் எனக்கு தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புகளை வாசிக்கும் போது இப்போதும் ஏற்படுகிறது அல்லது என்னை அந்த மயக்கம் பின்தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது.
விளிம்புநிலை மனிதர்கள் மீது உலகில் வேறெந்த எழுத்தாளனும் இவ்வளவு அக்கறை கொண்டு எழுதியிருப்பானா என்று எனக்குத் தெரியவில்லை. தஸ்தயெவ்ஸ்கியின் உலகில் தீமையான மனிதன் என்பவன் ஒருவன் கூட இல்லையே! இதை எப்படி ஏற்க முடியும் தீமை செய்தவன் தீமையான மனிதன் என்று தானே நம்மால் ஏற்றுக்கொள்ள முடியும் என்கிற கேள்வி நமக்கு வந்து போகும். நம்மால் கேள்வி மட்டும் எழுப்பிட இயலும். தஸ்தயெவ்ஸ்கியோ தேடியது அதற்கான விடையை. ஒருவன் தீயவனாக இருந்தாலும் அவனுக்கும் இவ்வுலகில் அன்பும் மீட்சியும் சாத்தியம் என்று தனது எழுத்துகளின் வழியாக அவனால் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிந்தது. தஸ்தயெவ்ஸ்கியின் தீமையான கதாபாத்திரங்கள் கூட ஏதேனும் ஒரு கணத்தில் அன்புக்கும், மீட்சிக்கும் ஏங்குவதை நாம்  அவனின் படைப்புகளின் பல்வேறு பகுதிகளில் வாசிக்க நேரிடும். தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புகளைப் பற்றியும் அவரின் வாழ்க்கையின் முக்கியமான சம்பவங்களைப் பற்றியெல்லாம் நான் இங்கு எதையும் எழுதிவிடப் போவதில்லை. அது முழுக்க முழுக்க இந்தச் சிறப்பிதழின் ஒவ்வொரு படைப்புகளிலும் உங்களுக்கு வாசிக்கக் கிடைக்கும்.
நான்  வியப்பு கொள்வது தஸ்தயெவ்ஸ்கியின் முழுமையான வாழ்க்கை மீதுதான். தனது வாழ்வின் குழந்தைப் பருவம் முதல் கடைசியாகப் படுக்கையில் மரணித்துக் கொண்டிருக்கும் தருவாய் வரையில் அவன் மெழுகுவர்த்தியின் எரியும் சுடர் போலவே இருந்திருக்கிறான். வலிப்பு நோயுடன், பல்வேறு பொருள் சிக்கலுடன், உறவுகளின் அலைக்கழிப்புடன், சைபீரியா சிறை தண்டனை கொடுமைகளுடன் இவற்றுடன் அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் என்றெல்லாம் அவன் மீது எவ்வளவு இடர்கள். அதே நேரத்தில் அவன் ஒன்றும் தன்னை பூமியில் பிறந்த அற்புதமான மானுடன் என்றெல்லாம் தன்னை கருதிக் கொள்ளவில்லை.  இளம் வயதில் விபச்சாரிகளின் தொடர்பு, மனச்சிதைவுகள், சிக்கலான காதல் உறவுகள், மாபெரும் சூதாடி, வெளிப்படையான யூத வெறுப்பாளன் என்றெல்லாம் அவன்  இவ்வுலகின் அத்தனை கீழ்மைகளுக்கும் தன்னை பழக்கியவன். தனது கீழ்மைகளை ஒருபோதும் அவன் மறைத்துக் கொண்டவனும் இல்லை. கீழ்மைகளைச் செய்தாலும் எந்தக் காலத்திலும் மனிதன்  நேர்மையான மனிதனாக மாறும் வாய்ப்புள்ளது என்று அவன் தன் படைப்புகளின் வழியாக நிரூபிக்க முயன்றவன். தஸ்தயெவ்ஸ்கி படைக்க நினைத்த நேர்மையான கடைசி மனிதன் சாத்தியமா என்றால் சாத்தியம் என்பேன். எல்லாவற்றிற்கும் மேலாக “நீங்கள் உங்களிடம் பொய் கூறாமல் இருங்கள்” என்கிற தஸ்தயெவ்ஸ்கியின் வார்த்தை ஒன்று போதும் உங்களுக்குள் இருக்கும் அந்த நேர்மையான மனிதனை நீங்கள் கண்டறிந்திட, நமது இந்த மொத்த வாழ்வுக்கும் மெழுகுவர்த்தியின் எரியும் சுடர் போலத் தொடர்ந்து பின்னே வந்திட தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புகள் உதவும்.
இன்றைய நவீன மனிதனுக்கு ஆகச்சிறந்த சிக்கலாக இருப்பது அவனே தான், அதிலும் அவனுக்குள் ஒலித்துக் கொண்டேயிருக்கும் அவன் குரலே தான், அறம் என்று எதுவுமில்லாத நவீன வாழ்வின் எல்லைகளைக் கடந்து நவீன மனிதன் வெகு தொலைவிற்கு வந்துவிட்டான். இந்த இக்கட்டான காலத்தில் ஒவ்வொரு நவீன மனிதனுக்கும் தஸ்தயெவ்ஸ்கி நிச்சயம் மெழுகுவர்த்தியாக இருப்பான். அதுமட்டுமல்ல இந்த நூற்றாண்டில் மட்டுமல்ல எந்த நூற்றாண்டிலிருந்தும் அவன் தன் படைப்புகளின் வழியாக ஒரு மெழுகுவர்த்தியாக நின்று எக்காலத்திலும் நவீன மனிதனுக்கு வழிகாட்டியாக இருப்பான் என்று திண்ணமாக நம்புகிறேன். ஏனெனில் மானுடத்தின் அத்தனை கீழ்மைகளுக்கு எதிராக மண்டியிட்டவன் அவன்.
தஸ்தயெவ்ஸ்கியை ஏற்பது மறுப்பது அவரவர் சுய விருப்பம். ஏனெனில் வாழும் போதும் அவன் இதைவிட அதிகமான புறக்கணிப்புகளை மெழுகுவர்த்தியாக நின்று அனுபவித்தவன். மறுப்பவர்களுக்கும் அவனை விமர்சனம் செய்பவர்களுக்கும் சேர்த்துத்தான் அவன் மாபெரும் மானுடக் கனவு ஒன்றைக் கண்டவன்.
அதனால் ஏற்பவர்களுக்கும், மறுப்பவர்களுக்கும், அவனை நோக்கி விமர்சனங்களை எழுப்பும் அத்தனை மானுடர்களுக்கும் எந்த நூற்றாண்டிலும் அணைந்து விடாத மெழுகுவர்த்தியாக அவன் இருப்பான்.
கனலி ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி 200-வது ஆண்டுச் சிறப்பிதழை சில பழைய மற்றும் பல்வேறு புதிய ஆக்கங்களின் கூட்டுக் கலவையாக உங்கள் முன்வைக்கிறேன். இது தஸ்தயெவ்ஸ்கியின் 200-வது ஆண்டு இனி வரும் காலங்களில் தஸ்தயெவ்ஸ்கியை முழுவதும் வாசித்து கற்றிட இந்தச் சிறப்பிதழ் யாரவது ஒரு தமிழ் வாசகனுக்கு உதவியது எனில் அதுவே எங்களின் வெற்றி. அதுபோதும் அதைத்தவிர பெரிய கனவுகள் எதுவுமில்லை.
நன்றி நவில்தல். 
கனலியின் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி 200-வது ஆண்டுச் சிறப்பிதழிற்கு இதுவரை காத்திருந்த அனைத்து வாசகர்களுக்கும், இதில் பங்களிப்பு செய்துள்ள அனைத்து எழுத்தாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சிறப்பிதழில் சிறப்பாசிரியர்களாக இருந்து பல்வேறு உதவிகளையும் அளித்த எழுத்தாளர்/மொழிபெயர்ப்பாளர் எம். ஏ.சுசீலா மற்றும் மூத்த வாசகர் வேலூர் பா.லிங்கம் இருவருக்கும்.
கல்குதிரை தஸ்தயெவ்ஸ்கி சிறப்பிதழில் வெளிவராத சில படைப்புகளை அளித்து உதவிய கவிஞர் சுகுமாரனுக்கும் அவற்றை எனக்கு வாங்கித் தந்து உதவிய எழுத்தாளர்/மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமிக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 கல்குதிரைக்கும் எமது முன்னோடிகளில் ஒருவராக இருந்து என்றும் எங்களை மறைமுகமாக இயக்கும் எழுத்தாளர் கோணங்கிக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறப்பிதழிற்காக தஸ்தாயெவ்ஸ்கி ஓவியத்தைச் சிறப்பாக வரைந்து அனுப்பிய ஓவியர் சுந்தரனுக்கும் மனமார்ந்த நன்றி.
சுந்தர ராமசாமி கட்டுரைக்கு அனுமதி அளித்து உதவிய காலச்சுவடு கண்ணனுக்கு மனமார்ந்த நன்றி.
கடைசியாக எப்போதும் என்னுடன் பயணிக்கும் இந்தச்சிறப்பிதழ் உருவாக்கத்தில் பல்வேறு பணிகளில் உதவிய தோழர்கள் மகேஸ்வரன், ஆனந்த் மற்றும் சாருலதா, எழுத்தாளர்/கீதா மதிவாணன் அவர்களுக்கும் எனது அன்புகள். அதைத்தவிர தந்துவிட என்னிடம் எதுவுமில்லை.
நன்றி,
என்றும் அன்புடன்,
க.விக்னேஸ்வரன்.
முக்கியமான குறிப்பு :
ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி என்கிற உச்சரிப்பு, எழுதும் முறை தமிழிலக்கியச் சூழலில் பல்வேறு முறைகளில் பயன்படுத்தப்படுகிறது.
(தஸ்தாயெவ்ஸ்கி
தஸ்தயேவ்ஸ்கி
தோஸ்தோவ்ஸ்கி)
 கனலியின் இச் சிறப்பிதழிலும் அப்படிப்பட்ட பல்வேறு எழுதும் முறைகள் உள்ளது. இதில் கனலி எந்தவிதமான மாற்றங்களையும் செய்யவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். கனலி  என்றும் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி என்கிற வார்த்தையை பின்பற்றும். இதில் நிறைய மாற்றுக் கருத்துகள் இருந்தாலும் தொடர்ந்து பின்பற்றப்படும் பெயர் வழக்குகளில் மாற்றம் செய்வதை நான் தனிப்பட்ட முறையில் விரும்பவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.