யதார்த்தத்திலிருந்து நிகழ்வுகளால் உருவாக்கப்பட்ட கற்பனைக்கதை (பிராப்ளம்ஸ்கி விடுதி மொழிபெயர்ப்பு நாவலை முன்வைத்து) இரா.சசிகலாதேவி

லகின் பல நாடுகளைப்போல பெல்ஜியம் நீண்ட வரலாற்றைக் கொண்டது. பல நூற்றாண்டுகளாக வெவ்வேறு சக்திகளால் கட்டுப்படுத்தப்பட்டாலும், உலகப்போரில் ஜெர்மனி பெல்ஜியத்தை ஆக்கிரமித்தது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

1944 ஆண்டுவரை ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் பெல்ஜியம் இருந்தது. ஜெர்மனியின் தாக்குதலுக்குள்ளாகி போரினால் உருவாகிய அத்தனை துயரங்களிலிருந்தும் வலிகளிலிருந்தும் மீண்டு திரும்பிய தேசத்தில்தான் அகதிகளின் கோரிக்கைகள் மறுக்கப்படுவதும் நிராகரிக்கப்படுவதும் நடக்கிறது.பெல்ஜியத்தில் உள்ள ஆரென்டக் புகலிட மையத்தில், போரினால் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த  வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த மக்களின் ஆன்மாவை புகைப்படக்  கலைஞர் பிபுல்மஸ்லியின் பார்வையில் சொல்லப்பட்ட நாவல் தான் பிராப்ளம்ஸ்கி விடுதி,

மேற்கத்தியச்  சமுதாயத்தைப் பற்றிய ஆச்சரியமான புரிந்துகொள்ள முடியாத உளவியல் காரணிகளை அந்தநிலத்திற்கே உரிய சமூகக்கூறுகளை நாவலில் காணமுடிகின்றது.புகலிட மையத்தில் உள்ள ஆப்ரிக்கர், செச்சினியர் மற்றும் பல்வேறுபட்ட மனிதர்களின் அந்தரங்க உலகத்தில் நிகழும் அத்தனை உரையாடல்களும் நிகழ்கிறது. அவ்விடத்தில் ஆப்பிரிக்க கறுப்பினத்தவருக்கும் செச்சினியர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்படுவது சகஜமான ஒன்றாகவே இருக்கின்றது. இயல்பாகவே செச்சினியர்கள் சுறுசுறுப்பாகவும் இரக்கமற்றவர்களாகவும் இருக்கக்கூடியவர்கள்.அவர்கள் போர்வீரர்களைப்போல இருப்பவர்கள். அந்த மரபான தொடர்ச்சியை அவர்களின் குணநலன்களின் வழியே புரிந்துகொள்ளமுடிகிறது. ஒருவரின் குணநலன்கள் என்பது ஆன்மாவின் குறியீடு. ஆன்மாவின் வழியே ஊடுருவி மனித மனங்களை துயரங்களை வலிகளை, எளிய நிகழ்வுகளால் பகடியால் கதாபாத்திரத்தின் தன்மையோடு புனைந்து அந்தக் கதாபாத்திரத்தின் குரலுக்கு வலுசேர்த்திருக்கிறார் டிமிட்ரி.

“சாதாரண ஒட்டகத்தின் வாழ்வைவிடவும் கேவலமானது இந்தவாழ்வு” என்று சொல்வதின்மூலம் ஆப்பிரிக்க நிலத்தின் முழு சித்திரத்தை நம்மால் உள்வாங்கிக்கொள்ள முடிகிறது. ஆனால் அவர்களுக்கு வாழ்வின்மீது பிடிப்பிருக்கிறது. பிறப்புறுப்பைத் திருத்திக்கொள்ளுதல் பண்பாடு என்று சொல்லும் ஆப்பிரிக்க மக்களின் மூடத்தனமான பழக்கவழக்கங்களை கேள்விக்கு உட்படுத்திவிட்டு மனிதகுலம் பண்பாட்டை விரும்பும் பாலூட்டி என்றும் குறிப்பிடுகிறார். ஒருவகையில் எல்லோரும் அவரவர் நிலையில் முரண்பட்டு இருக்கிறார்கள்.

எந்த தேசத்திலிருந்தாலும் மேற்கொண்டிருந்த செயலைக் கைவிட்டு அதிலிருந்து விலகிப்போவதற்கான உபாயங்களை ஒருவகையில் எல்லோருமே தேடிக்கொண்டிருந்தவர்கள்தான். ஆனால் அகதிகளாக அந்தத் தடையைப் பார்த்ததும் தடுமாறிப் போய்விடுகிறார்கள். பின்பு நிதானமாக அவர்கள் உணர்வுகளைச் சமன்படுத்த எத்தனையோ முயற்சிகள் திரும்பத் திரும்ப செய்யவேண்டி இருக்கிறது. துயரமான வாழ்வில் உறங்கவிழைவது உறக்கத்தைத் தைரியமாக எதிர்கொள்வதுதான் அங்கு பெரிய விஷயமாக இருக்கிறது.

உக்கிரைன் நாட்டைச் சேர்ந்தவன் இகார். தொழில்முறை குத்துச்சண்டைவீரன். அவனோடு ஒரே அறையைப் பகிர்ந்துகொள்ளும் பிபுல்மஸ்லி ஒவ்வொரு இரவும் தூக்கத்தைத் தொலைக்க நேரிடுகிறது. அவனுக்கு அவன் செல்ல வேண்டியநாடு மறுக்கப்படலாம் அனுமதியும் வழங்கலாம். ஆனால் ,இறுதியான முடிவு தெரியாதபோதும் விளங்காத புதிராக இகார் இருக்கக் காரணம் அவனுடைய இயல்புக்கு அங்கு அவனால் ஒன்றமுடியவில்லை. இயல்பாகவும் உண்மையாகவும் இருக்கும் ஒருமனிதனைவிட மிகக்கூடுதலான வெறுப்பையும்

கசப்பையும் தன்னுள் தேக்கிவைக்கக் காரணம் அவன் அகதி என்பதால் மட்டும். ஆனால் அதுமட்டுமே அவன் அல்ல.காஷ்மீரைச் சேர்ந்தவன் மக்ஸுத் சொந்தநாட்டில் குரூரமான தாக்குதலை எதிர்கொண்டவன். அவனது அப்பாவின் கண் முன்பே அம்மாவின் சிதைந்த யோனியின் சதைத்துணுக்கை பல்லிடுக்கில் வைத்துக்கொண்டு பீடுநடை போட்டுவருவதை அவனது அப்பா ஏதும் செய்ய முடியாத கையறுநிலையில் பார்த்துக்கொண்டிருப்பதைக் கிளர்ச்சியாளர்கள் ரசிப்பார்கள்.

ஒரு மனிதனைவிட அவன் கண்டிருக்கும் வெற்றி தோல்வியின் மீதான வெறி இதுபோன்ற பழிவாங்குதலைச் செய்துகொண்டே இருக்கத் தூண்டுகிறது .பழங்காலத்திலிருந்து நவீன காலம்வரை வெற்றிபெற்ற வீரர்கள் வல்லுறவு செய்வதை அவர்களின் தவிர்க்க முடியாத உரிமையாகக் கருதுகின்றனர்.

போரில் வல்லுறவு செய்யப்பட்டதற்கான மிகப்பழமையான இலக்கியச்சான்று ஹோமரின் இலியட்டில் உள்ளது.அந்நிலை இன்னும் கூட மாறாதிருப்பது இன்னும் மனிதமனம் மேம்படவில்லை என்பதைக் குறிக்கிறது.

தன்னுடைய நிராதரவான நிலைமை பற்றித் தெளிவாகப் புரிந்துவைத்திருப்பதும் அதேநேரத்தில் அதுபற்றிய சிலசந்தேகங்களுடன் இருப்பதுமான நிலை அவர்கள் விருப்பப்படும் நாடுகளுக்குச் செல்வதற்கான நிறைவேறாத ஆசைகள், சொந்தநாடு திரும்புதலுக்கான விருப்பங்கள், காதல், அகக்கொந்தளிப்பான நிலையிலும் தனது இருத்தலை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் என ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு உந்துதல் இருக்கிறது.

அந்த எதார்த்தத்தைப் புரிந்துகொண்டு பெல்ஜிய பெண்ணை திருமணம் செய்து கொள்வதுதான் தனது வாழ்வை மேம்படுத்தும் என்று நம்புகிறான் மக்ஸுத்.புகலிடமையத்தில் இருந்துக்கொண்டே திருமணம் செய்துகொள்ள பெல்ஜியப் பெண்ணைத் தேடும் நிகழ்வை நகைச்சுவையாகவும் அதேநேரத்தில் வாழ்வின் மீதான பிடிப்பையும் அங்கு உள்ள ஒவ்வொருவரின் தவிப்பும் கொந்தளிப்பான மனநிலையும் வாழ்தலுக்கான முகாந்திரங்களுடன் இருக்கின்றனர் என்பதைத்தாண்டி அந்தந்த நேரத்து மகிழ்ச்சியைத் தக்கவைக்க முயல்கின்றனர்.

புகலிடமையத்தில் யாரும் மகிழ்ச்சியாக இல்லை. ஆனால் பிரச்சனைகளை எதிர்கொண்டு சராசரி வாழ்க்கையை வாழ்வதற்கான தேடலைக் கண்டடைய முயலும் மனிதர்களின் எளிய முரண்பாடான மனதை யதார்த்தத்தோடும், பகடியாகவும் நுட்பமாகவும் சொல்லி இருக்கிறார் டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட். சிகரெட் அங்கு எல்லா சூழ்நிலைகளிலும் பந்தயப் பொருளாக வைக்கப்படுகிறது. எப்பொழுது பற்றவைத்தாலும் எரியத் தயாராக இருக்கும் சிறிய தீப்பொறி அங்கு பெருநெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது என்பது அங்குவந்து செல்கிறவர்களின் மனநிலை.

2001 செப்டம்பர் 11 நியூயார்க் உலக வர்த்தகமையம் தாக்குதல் அன்று புகலிட மையத்தில் உள்ள முஸ்லீம்கள் அனைவரும் பயத்துடனும் நடுக்கத்துடனும் இருந்திருக்கின்றனர். பெல்ஜியத்தில் உள்ள முஸ்லீம்கள் தீவிரவாதிகளுடன் கூட்டுசேர்ந்திருக்கின்றனர் என்றும் முஸ்லீம்கள் மீதான வலுவான குற்றச்சாட்டுகள் அன்று இருந்தது. இந்தநிலையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோது முஸ்லீம் அகதிகளுக்கு பயஉணர்வு மேலோங்குகிறது. அமெரிக்காவின் ஏகாதிபத்திய அரசியலை டிமிட்ரி மிகக் கச்சிதமாகப் பேசியிருக்கிறார்.

பல்வேறுபட்ட கலாச்சாரத்தைக் கொண்ட மக்களின் குணநலன்களை அந்தந்த நிலத்திற்கே உரிய தனித்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக உள்ள நுட்பமான உள்ளுணர்வுகளை நேர்த்தியாக மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார் லதா அருணாச்சலம். ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒருபின்புலத்தை உருவாக்கி அதனோடு தொடர்புடைய சம்பவங்களைத் தொகுத்திருக்கிறார் டிமிட்ரி. அது அவருடைய பாணியாகக்கூட இருக்கலாம். நாவலோடு தொடர்புடைய சம்பவங்களை மிகச்சரியாகப் புரிந்துகொள்வதற்கு மொழிபெயர்ப்பாளர் மிகுந்த உழைப்பைத் தந்திருக்கிறார். அதுநாவலில் பிரதிபலித்திருக்கிறது.

டிமிட்ரியின் மொழிநடை மிகவும் சிக்கலானது. பகடியாகவும் அதேநேரம் துயரத்தை நெருங்கியும் எழுதி இருக்கிறார். மொழிபெயர்ப்பாளர் கொஞ்சம் பிசகினாலும் நாவலின் தொனி மாறிவிடக் கூடிய தன்மையில்தான் இருக்கிறது. நாவலின் தொனி மாறாமல் மூலப்பிரதிக்கு நேர்செய்து அதே மொழிநடையை மிகச்சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்.

யதார்த்தத்திலிருந்து நிகழ்வுகளால் உருவாக்கப்பட்ட கற்பனைக்கதை பிரப்ளாம்ஸ்கிவிடுதி.

 

நூல்நோக்குப்பார்வை: இரா. சசிகலாதேவி

 

பிராப்ளம்ஸ்கி விடுதி

ஆசிரியர் : டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட்

தமிழில் : லதா அருணாச்சலம்

காலச்சுவடு.