அன்பின் ஒளிர்தல்கள்… ந.பெரியசாமி

விதைகள் தேங்கிக் கிடக்கும் நீர் அல்ல. வழிந்து ஓடிக்கொண்டிருக்கும் நதி. தன்னை புதுப்பித்துக் கொண்டே ஓடும் நிலத்தையும், அதன் விளைவிப்பையும் செழிப்போடு வைத்திருக்கும் தன்மை கொண்டது. நிகழ்ந்து கொண்டிருக்கும் புதுப்புது முயற்சிகள் மொழியை மங்கவிடாது புதுப்பித்துக்கொண்டே இருக்கின்றன.  அதற்கான சாட்சியங்களாகத் தொகுப்புகள் வந்தபடியே. அப்படியானதொரு தொகுப்பாக வந்துள்ளது  சால்ட் பதிப்பகத்தில் கண்டராதித்தனின் ‘ பாடி கூடாரம்’.

சுய கர்வத்தை இழந்து பெறப்படும் சௌகர்யங்கள் அற்பத்தனமானதென வாழும் மனிதர்கள் ‘மனம்’ கவிதையில்.

……..

அற்பனாக

இருந்தாலும்

அருவருப்பு

இல்லாமலா போகும். 

இப்படியாக முடிவுறும் ‘சகிப்பு’ கவிதை  உணர்வுமிக்க மனங்களின் வெளிப்பாடு.

மனித மனம் விசித்திரமானது. எதையும் ஆசைகொள்ளும். எப்படிப்பட்டதையும் தூக்கி எறியும். நம்மை நாமே நொந்துகொள்ளும் அளவிற்குக் கீழானவர்கள் நம்மோடு இருக்கக் கூடும். மதுக்கூட சம்பாஷணையைக் காட்சிப்படுத்தும் ‘டோலாக்’ கவிதை மாந்தர்கள் நம்முடனும் இருந்துகொண்டிருப்பதைக் காட்டிக் கொடுத்திடுகிறது.

ஒரு சம்சாரி

அடுத்தவன் மனைவி மீது

ஆசைப்படலாமா

படக்கூடாதுதான்

பட்டால்

படாத இடத்தில் பட்டாலும்

பட்டும் படாமல்

போக வேண்டியதுதான்”.

தனித்து உருவாவதில்லை, எல்லாவற்றிலும் இருந்தே உருவாகுகின்றன அழுக்குகள். கழுவியோ, துடைத்தோ புற அழுக்கைப் போக்கிடலாம், தூர் எடுக்க முடியாது மண்டிக் கிடக்கும் மன அழுக்கை மொழி காட்சிப்படுத்திவிடுகிறது.

கூட்டமாகப் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளை அரிதாகத்தான் பார்க்கமுடியும். திட்டமிடுவதாலேயே எல்லாமும் கைகூடிவிடுவதில்லை. கவிதைகள் எழுதப்படுவதற்கு முன்னதான மனச் சித்தரிப்புகள் ரசிக்கத்தக்கவை.

பொருத்தமற்ற வாழ்வுக்குப் பதிலாகப் பாடையில் படுத்துக்கொள்ளச் சொல்லும் அறிவுரை பரஞ்சோதிக்கு மட்டுமல்ல.

உடன் வாழும் மனிதர்களின் நாய் பிழைப்பைக் காணச் சகிக்காத வாழ்வின் காட்சி இப்படியாக…

பிறப்பு நாய்பிறப்பு

நாலுபேரைப் பார்த்தால் 

வாலைக் குழைக்காத

கௌரவமென்றால்

நெடு வாழ்க்கையும்

நக்கு தண்ணீர்தான்.

தாய்மைப் பண்பை முழுமையாக உணர்ந்துகொள்ளும் இடம் காடு என்பது மிகையில்லாதது.

“………….

யாருமே இல்லை என்ற நம்பிக்கையில்

மனம்விட்டு அழுதீர்கள்

உங்களைச் சுற்றிலும் இருந்த

மரம் செடி கொடிகள்

வாஞ்சையான தனது கரங்களால்

உங்கள் தலையை கோதிவிடுகிறது

அந்த அன்பினால் ஒளிரும்

காட்டுத்தொகுப்பைப் பார்த்து

பலகாலம் அதிசயத்துக்

கிடந்தன காட்டுவிலங்குகள்.”

புறக்கணிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறோம் எனத் தவிப்பவர்களின் சரணாலயமாக இருக்கும் ‘காப்புக்காடு’ கவிதை.

எல்லோருக்கும் வாழ்வதற்கான நியதி இருக்கத்தான் செய்கிறது.

கண்டதைக் காட்சிப்படுத்தலும், காட்சிப்படுத்தப்பட்டதைக் கண்டதுக்குமான அனுபவச் சித்திரம் வேறானதாக இருக்கும். ‘ பேக்கரியில் அமர்ந்திருக்கும் பெண்’ நம்முள் வேறான காட்சிப்படுத்தலைச் செய்திடுகிறது.

“……………

சுற்றிலும் கண்ணாடியிலான ஸ்டால்களுக்குள் அவள் அவ்வளவு

அழகோடு அமர்ந்திருக்கிறாள்.

நான் எழுதும்போதும் அப்படித்தானிருந்தாள்

நீங்கள் வாசிக்கும்போது காட்டில்

தவத்தில் இருக்கும் முனிவரின் பத்தினி கச்சையோடு

குடிசையை பராமரிப்பதாகவும்

வாசலைக் கோலமிட்டு அழகாக்குவது போலவும் வாசிக்கிறீர்கள்

மான்கள் பறவைகள்

புல்லினங்களென இக்கவிதையைவிட மேம்பட்டதாயிருக்கிறது

உங்கள் வாசிப்பு.

‘ எளிமையின் காலம்’ என்பதற்கான சான்றுகளின் அடுக்குகளில் நாமும் ஒளிந்து கிடக்கின்றோம்.

வேதாந்தங்களைப் பேசிக் கொண்டிராமல் வேலையைப் பார் எனக் கூறிடும் ‘ பருவதவர்த்தனம்’ நாம் யார் என்பதை காட்டிடுகிறது.

வள்ளலார் வீதிக்கு வந்தால் நிகழும் மாற்றங்கள் குறித்த சம்பவங்கள் கற்பனையானபோதும் அதிலிருக்கும் உண்மை உருக்கொண்டு நிற்கிறது மீண்டும் வள்ளலாராகவே.

அரைகுறைகளின் நிறைகுடம் மீதான அபிப்ராயம் அரைகுறையாகவே இருப்பது காலத்தின் நியதி.

புறத்திலிருக்கும் வீதியின் காட்சிகள் அகம் நிறைந்த மனையாளின் தலையை வருடச் செய்திடுகிறது.

எழுத்தை மையமிட்டுச் சுழன்றாடிக் கொண்டிருக்கும் வாழ்வின் காட்சியிலிருந்து நாம் தப்பிவிட வேண்டும் என்பதைக் கற்றறியலாம்.

பிராது அறியாது வாழ்பவர்களைக் கண்டு பிராது ஏதுமற்ற அற்புத வாழ்வோடு இருப்பதாகக் கணிப்பதில் இருக்கும் சூது அற்பர்களுக்கானதை உணர்த்தல்.

பவிசு மதிக்கத்தக்கதல்ல. மண்ணுள் புதைக்கப்பட வேண்டியதுதானே.

மனித மனம் ஆசைகளைத் தொடர்ந்து துளிர்க்க வைத்துக்கொண்டிருக்கும் நிலம். குளமாக, குடமாக, நீர்க்குமிழியாக ஆசைகொண்டு, பின் மீன் கொத்தியாக மாறிவிடத் துடிப்பதில் இருக்கும் ரகசியத்தைக் காட்சிப்படுத்துகிறது ‘உடைந்த வாழ்வு’ கவிதை.

மத்தியானத்தில்

நீர்த் தளும்புகிற

குளத்தின் எதிரில்

நின்று கொண்டிருப்பவனுக்கு

குடத்தில் குளத்தை சேகரிக்கும்

பெண்ணின் மீது ஆவல்

பைய உருண்டு திரண்ட

அந்த ஆவல்

வண்ணத்திரட்சியான

நீர்க்குமிழியின் மீது அமர்கிறது.

ஒரு மீன் கொத்தி அந்த

மத்தியானத்தின் குளத்தில்

தளும்பாத தண்ணீரை

தளும்பும் ஆவலை

ஒரே கொத்தில்

கொத்திச் சென்றது.

பெரியதுகள் ஏதும் தேவையில்லை. சின்னஞ்சிறியது போதும். காலம்காலமாக அப்பிக்கிடக்கும் இருளை அகற்ற கிழிசல் வெளிச்சம் போதும். வீதியை பிரகாசிக்கச் செய்து தினந்தோறும் திருவிழாவுக்கான மனதைத் தரும் ஆதிராவின் அம்மாவை நம் தெருவில் குடியமர்த்துதல்.

“…..

அடி…. ஆதிரா….

 

அம்மாவை வீதிக்கு வரச்சொல்

இவ்வழகை அமுதை

பெருஞ்செல்வத்தை

எங்களுக்கு அளித்தவளை

சீராட்ட வேண்டும்

கொஞ்சம் பூக்களை

தன் பொற்கரங்களால்

எங்கள் மீது தூவட்டும்

நாங்கள் ஆதிராவின் அம்மாவை

காதலிக்கிறோமென்று

உற்சாகமாக ஒருமுறை கூவிக்கொள்கிறோம்.”

‘பாடி கூடாரம்’ கவிதையிலோடும் இரத்தினக் கற்கள் பொதிந்த ஆடையணிந்த பெண்ணோடு  நாமும் ஓடிக்கொண்டிருப்பதைக் காணலாம்.

கொஞ்சம் கொஞ்சமாகச் சேகரமாகும் அவமானத் துளிகளே அனுபவ நதியாவதை வேடிக்கை பார்த்தல்.

மூன்று  இருந்த தனிமையின் தன்மை என்னவாக இருந்திருக்கும் என்பதை அறியத் தருதல்.

நோய்த்தொற்றால் உலகம் மயானமாகிக் கொண்டிருந்த காலத்தில், அரசின் கோமாளித் தனங்களையும்,  மக்களின் மீது அழுத்தம் தந்தபடி இருக்கும் துயரையும்  காலாகாலத்திற்குமான பாசுரமாக்கி உலகளந்தபெருமாளை  உள்ளேயே இருக்க வேண்டுவதின் துயரம் இதுகாறும் மக்கள் மட்டுமல்ல தெய்வமும் காணாததற்கு ‘உதுமான் நான் உலகளந்தப்பெருமாள் பேசுகிறேன்’  போன்ற கவிதைகளே வேர்களாக இருக்கும்.

 

பசி

*

அப்பா இல்லாத

வீட்டில் அம்மாவுடன்

வேறொருவர் இருந்ததைக்

கண்ட அக்காளும், தங்கையும்

அதோ அந்த வேம்படியில்

பசியோடு காத்திருக்கிறார்கள்.

அம்மாவும் அவரும்

எப்போது வெளியே வருவார்களென.

 

அவரவர்கள் பசி அவரவர்களுக்கானதுதானே.

 

பகலே எட்டிப் பார்க்காத

பலி கொடுத்தாள் கிணற்றிலிருந்து

நீர் சேந்திக் கழுவுகிறேன்…

எனத் தொடங்கும் கவிதையுள் நல்லதங்காளை மீண்டும் உயிர்ப்பித்து கதை கூறச் செய்தல்.

நம்மின் ஆதி வாழ்வு ஆங்காங்கே தங்கி நகர்ந்துகொண்டே இருந்தது. காலப்போக்கில் ஓரிடத்தில் நிலையாகக் கூடாரமிட்டு சுயநலத்தோடு வாழத் தொடங்கி பெருக்கமடைந்த கூட்டத்தின் கீழ்மைகள், அது உருவாக்கிய சிதைவுகள், அதிலிருந்து மீண்டு வெளியேற ஒளிர்வுகளைக் கண்டடைதல்கள் என மனக்கூடாரங்களின் சேகரிப்புகளாக இருக்கிறது கண்டராதித்தனின் ‘பாடி கூடாரம்’.