பாட்டி சொன்ன கதை ஐசக் பாஷவிஸ் சிங்கர் தமிழாக்கம்- சக்திவேல்

டிரைடல் ஒரு உற்சாகமான விளையாட்டு தான். ஆனால் இரவு நேரமாகி விட்டது, எல்லோரும் படுத்துத் தூங்குங்கள் என்று லியா பாட்டி சொன்னார். உடனே, எங்களுக்குக் கதை சொல்லுங்கள் பாட்டி என்று பேரக்குழந்தைகள் கெஞ்சினார்கள்.

ஒருகாலத்தில் ஒரு அப்பாவுக்கு நான்கு மகன்களும் நான்கு மகள்களும் இருந்தார்கள். பையன்கள் தலை முடியை சீராக வாரி இருந்தார்கள். பெண் பிள்ளைகள் முடியை பின்னல் போட்டுக்கொண்டு இருந்தார்கள். எட்டு பேரையும் வரிசையாக நிற்க வைத்தால் மாடிக்கு படி கட்டியது போல இருந்தார்கள். அன்று ஹனுக்கா பண்டிகை தினம், மாலை மெழுகுவர்த்தி ஏற்றிய பின் எல்லோருக்கும் ஹனுக்காவிற்கான பரிசு பணம் கொடுத்தார்கள். உடனே அவர்கள் எல்லாரும் டிரைடல் ஆட ஆரம்பித்து விட்டார்கள். விளையாட்டின் ருசியில் இரவு வெகுநேரமான பின்னும் தூங்கவில்லை. அம்மாவும் அப்பாவும் வந்து கூப்பிட்டாலும் தூங்கப் போகவில்லை. ஏனெனில் விளையாட்டில் வென்ற குழந்தைகள் மேலும் வெல்லவும் தோற்ற குழந்தைகள் அவர்கள் இழந்ததை வெல்லவும் விரும்பினார்கள். திடீரென்று கதவு தட்டும் சத்தம் கேட்டது. வெளியே முறுக்கு மீசையும் கிருதாவும் வைத்த இளைஞன் ஒருவன் வந்திருந்தான். அவன் மென்மையான நரியின் முடியிலான கம்பளி ஆடையும் இறகு வைத்த தொப்பியும் குதிமுள் கொண்ட உயரமான பூட்ஸ் காலணிகளும் அணிந்திருந்தான். அவன் உடை முழுவதும் பனி மூடி இருந்தது. ஆனாலும் அவன் மகிழ்ச்சியாகவே இருந்தான். பனிப்புயலில் வழி தவறி விட்டிருந்தான். அவர்களிடம் காலை வரை உங்கள் வீட்டில் தங்கிக் கொள்ளட்டுமா என்று கேட்டான்.

அவனது பனிச்சறுக்கு வண்டி வெளியே இருந்தது. அது வளைந்த யானைத் தந்தங்களால் அலங்கரிக்கப்பட்டு, நான்கு வெண்ணிற குதிரைகள் பூட்டப்பட்டு, கடிவாளத்தில் இரத்தின கற்கள் பதிக்கப்பட்டு அழகாக இருந்தது. பையன்கள் குதிரைகளின் சேணத்தைக் கழற்றினார்கள். அப்புறம் குதிரைகளைக் கொண்டு போய் லாயத்தில் அடைத்தார்கள். அவற்றிற்கு வைக்கோலும் புல்லரிசியும் கொடுத்துவிட்டு வந்தார்கள். விருந்தாளிக்கு பசி எடுக்கிறதா என்று கேட்டார்கள். விருந்தாளியான இளைஞன் “ஓநாயைப் போல“ என்றான். அவர்கள் எங்களுடன் டிரைடல் விளையாட வருவீர்களா என்று கேட்டார்கள். அவனோ, “ஓ..தாராளமாக, ஆடலாமே” என்று சொல்லி, டிரைடெல் விளையாட அவர்களுடன் மேஜையில் உட்கார்ந்து கொண்டான்.

அவன் பட்டை இட்டுச் சமைத்த பணியாரங்களைச் சாப்பிட்டு, பழக்கூழுடன் தேநீர் குடித்தான். தனது புகைக்குழாயை உறிஞ்சி சுருள்சுருளாகப் புகையை விட்டான். வெள்ளிக் காசுகளை வைத்து ஆடி தோற்றான். பின்னர் தங்கக் காசுகளை வைத்து ஆடினான். அவற்றையும் இழந்தான். எல்லோருக்கும் டிரைடல் கிம்பெலில் நின்றால், அவனுக்கு எப்போதும் நன் மட்டுமே விழுந்தது. அவன் தோற்றான், உடனே சிரித்தான். மீண்டும் மீண்டும் விளையாடித் தோற்றுப் போனாலும் சிரித்தபடியே இருந்தான். அவன் ஓயினும் மீட் மதுவும் குடித்தான். அவனது பணப்பை முடிவே இல்லாத பாதாள சுரங்கம் போல இருந்தது. நள்ளிரவான பின்னும் தூங்காமல் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். அந்த நேரத்தில் நாய்கள் குரைத்தன, சேவல்கள் கூவின, கோழிகள் கொக்கரித்தன, வாத்துகள் கத்தின.  கொட்டிலில் இருந்த குதிரைகள் கனைத்தும் கால் குளம்புகளால் தரையைத் தட்டியபடியும் இருந்தன.

“இந்த பிராணிகளுக்கு எல்லாம் என்னாயிற்று ?” என்று மூத்த பையன் கேட்டான். இப்படி கேட்டுக்கொண்டே தலையைத் தூக்கியவன், சுவரில் ஒன்பது பேரின் நிழல்கள் விழுவதற்குப் பதிலாய் எட்டு பேரின் நிழல்கள் மட்டுமே இருப்பதைப் பார்த்தான். அந்த புதியவனுக்கு நிழலே இல்லை. இப்போது எல்லாம் தெளிவாகிவிட்டது. சாத்தானுக்கு தான் நிழலிருக்காது. அவர்களின் விருந்தாளி மனிதன் அல்ல, ஒரு பேய். கடிகாரம் பதிமூன்று முறை அடித்தவுடன் புதியவன் யாரென்று யோசித்த சந்தேகமும் தீர்ந்து விட்டது.

குழந்தைகளின் முகம் பயத்தில் உறைந்துவிட்டது. அதைப் பார்த்த புதியவனுக்கு தன் இரகசியம் வெளியான விஷயம் தெரிந்துவிட்டது. உடனே எக்காள ஒலியெழுப்பிச் சிரித்தான். வயிறு வரைக்கும் நாக்கு தொங்க, காதுகளுக்கு மேல் எருமை போலக் கொம்பு முளைத்து, வீட்டு கூரையளவுக்கு உயரமான தன் பெரிய உருவத்தில் சாத்தானாக உருமாறி விட்டான். அவர்கள் பயந்து கத்துவதற்குள் டிரைடல் போல அவர்களது வீட்டைத் தூக்கிச் சுற்ற ஆரம்பித்துவிட்டான். ஹனுக்கா விளக்குகள் அசைந்தாடின. தட்டுகள் எல்லாம் டின் என்ற ஒலியுடன் தரையில் விழுந்து உடைந்தன. அப்போது அவர்களது வீடு புயலில் மாட்டிக்கொண்ட கப்பலாகத் தத்தளித்தது. அந்த நேரத்தில் சாத்தானின் விசில் ஓசை கேட்டு எலிகள் ஓடிவந்தன. சிவப்பு தொப்பியுடன் பச்சை நிற பூட்ஸ் காலணிகள் போட்டு வந்த குட்டிச் சாத்தான்கள் குட்டிக்கரணம் போட்டன. அவர்களின் ஆட்டத்தில் வீடே ஓலமிட்டது. சட்டென்று சாத்தன் தன் பெரிய சிறகுகளை விரித்து ஒன்றுடன் ஒன்று தட்டினான். “கொக்கரக்கோ” மொத்த கூட்டமும் மறைந்துவிட்டது.

தங்கமும் வெள்ளியும் தூசியாய் போயிற்று

துருப்பிடித்த பனியின் பாதையில்

மேஜையின் மேல் இருந்த புதையல் மறைந்து போயிற்று

எஞ்சியது சாத்தானின் நாற்றம் மட்டுமே

குழந்தைகள் தலை முடியெல்லாம் சடை பிடித்தது.

சாத்தானின் அழுக்கு எல்லா இடமும் பரவியிருந்தது

நல்லது, காணாமல் போனான் சாத்தான்

அவனது குதிரைகளுடனும் பனிச்சறுக்கு வண்டியுடனும்

பரிதாபம்! அவமானம்!

ஹனுக்கா இரவும் சாத்தானின் விளையாட்டும்

கடைசி பேரனின் காலுறையைத் தைத்துக்கொண்டே லியா பாட்டி சொன்ன கதை இது தான்.

“பாட்டி, பாட்டி..இன்னொரு கதை சொல்லுங்க” என குழந்தைகள் கெஞ்சினார்கள். லியா பாட்டி அவர்களை வாரியணைத்து முத்தமிட்டு, “நாளைக்கு ஹனுக்கா விளக்கில் புது மெழுகுவர்த்தி ஏற்றும்போது இன்னொரு கதை சொல்வேனாம்.” என்று சொல்லி பேரக்குழந்தைகளைத் தூங்க வைத்தார்.

 


டிரைடல் என்பது ஹனுக்கா பண்டிகையின் போது ஆடும் விளையாட்டு. நம் ஊரில் தாயம் ஆடுவது போல்.

டிரைடல் என்பது மேலுள்ள படத்தில் காட்டியபடி நான்கு பக்கம் சதுரமாகவும் அடிப்பகுதி மழுங்கலாகவும் இருக்கும். பக்கத்திற்கு ஒன்றாக நான்கு விளையாட்டு குறிகள் பொறிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு குறிக்கும் ஒரு அர்த்தம் உண்டு. விளையாட்டில் ஆடும் எல்லா குழந்தைகளுக்கும் சம அளவில் காசு (வழக்கமாக 15 காசுகள்) கொடுப்பார்கள்.எல்லோருக்கும் நடுவே ஒரு பானையை வைத்து ஆளுக்கு ஒரு காசை பானைக்குள் போட வேண்டும். இப்போது டிரைடலை அதனுடைய முனைக்குச்சியை பிடித்து ஒருவர் பின் ஒருவராக சுற்றிவிட வேண்டும். நன் வந்தால் சுற்றி விட்டவருக்கு எதுவும் கிடையாது.

கிம்பெல் வந்தால் சுற்றி விட்டவருக்கே எல்லா காசுகளும்.

ஹி வந்தால் சுற்றி விட்டவருக்கு பானையில் உள்ள பாதி காசுகள் கிடைக்கும்.

ஷின் வந்தால் சுற்றி விட்டவர் தன் கையில் இருந்து ஒரு காசை பானைக்குள் போட வேண்டும்.

பானை காலியாகும் போதோ அல்லது ஒரே ஒரு காசு மீதமிருக்கும் போதோ மீண்டும் விளையாடுபவர்கள் ஒவ்வொருவரும் ஒரு காசை பானைக்குள் போட வேண்டும். எல்லா காசுகளும் ஒருவரிடமே வந்துவிட்டால் ஒரு சுற்று ஆட்டம் முடிந்தது.

 

ஹனுக்கா என்பது யூதர்களின் புனித பண்டிகையாகும். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் கிரேக்க மன்னன் ஆண்டியோகஸ் யூதர்களின் புனித நகரான ஜெருசலேத்தை கைப்பற்றினான். யூதர்களை கிரேக்க மதத்தை ஏற்குமாறு கட்டாயப்படுத்தினான். கோபம் கொண்டு ஜெருசலேத்தில் இருந்த யூதர்களின் கோவிலை இடித்து தள்ளினான். யூத வீரர்களான மக்கபீஸ் இந்த அநியாயத்தை எதிர்த்து போர் செய்து ஜெருசலேத்தை மீட்டார்கள். வெற்றி பெற்ற பிறகு இடிந்து கிடந்த புனித கோவிலில் ஹனுக்கா மெழுகுவர்த்தியை ஏற்றினார்கள். ஒன்பது தனித்தனி மெழுகுவர்த்திகளை பொருத்தி ஏற்றும் கொத்து விளக்கு தண்டை ஹனுக்கா என்று அழைப்பார்கள். அவர்கள் ஏற்றிய ஹனுக்கா விளக்கானது அணையாமல் ஒன்பது நாட்கள் தொடர்ந்து ஒளி வீசியது. இந்த அற்புதத்தை கொண்டாடுவதே ஹனுக்கா பண்டிகையாகும்.

ஹனுக்கா பண்டிகை நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் வரும். ஒன்பது நாட்கள் அணையாமல் மெழுகுவர்த்தி ஒளிர்ந்த அற்புதத்தை நினைவு கூறுவதற்காக ஒன்பது நாட்கள் ஹனுக்கா பண்டிகை கொண்டாடப்படும். அப்போது வீட்டில் உறவினர்கள் எல்லோரும் ஒன்றாக தங்கி பேசி மகிழ்வார்கள். தினமும் மாலை வீட்டில் ஹனுக்கா விளக்கை ஏற்றுவார்கள். பணியாரம், உருளைக்கிழங்கு வறுவல் என எண்ணெயில் செய்த திண்பண்டங்கள் சமைக்கப்படும். குழந்தைகளும் பெரியவர்களும் சேர்ந்து ட்ரைடல் விளையாடுவார்கள்