தாந்தேயின் தரிசனம் ,எலிசபெத் ஹாரிசன் தமிழாக்கம்- தாமரைக்கண்ணன்

“தி டிவைன் காமெடி’ நூலுடன் தாந்தே அலிகியேரி

ன்பு குழந்தைகளே, நான் இப்போது உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போகிறேன். இந்த கதை அறுநூறு வருடங்களாக இங்குச் சொல்லப்பட்டு வருகிறது. இன்றுவரை மக்கள் இந்த கதையைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அறிஞர்களுக்கு இதைப் படிப்பதில் சோர்வு தட்டியதில்லை. தலைசிறந்த ஓவியர்கள், இதற்கு ஓவியங்கள் வரைந்துள்ளனர். சிற்பிகள், இதற்கு ஏற்ற சிற்பங்களைச் செதுக்கியுள்ளனர். இசைக்கலைஞர்கள், இந்த கதைக்கு உகந்த இசைநாடகங்களை இயற்றியுள்ளனர். மதகுருக்கள், இதிலிருந்து சிந்தனைகளைப் பெற்றுப் பல மத உரைகள் எழுதியுள்ளனர்.

இந்த கதையை எழுதியவரின் பெயர் தாந்தே அல்கியேரி. அவர் ஒரு மகத்தான கவிஞர். அவர் தான் இந்த கதையின் நாயகனும். அவர் இந்த கதையை ஒரு பெரிய கவிதை நூலாக எழுதினார். அந்த நூலின் பெயர் ‘தி டிவைன் காமெடி’. அந்த கவிதையை நீங்கள் வளர்ந்த பின் என்றாவது படிக்கலாம். ஆனால் நான் இப்போது என் குழந்தைகளுக்காக இதை ஒரு சிறிய கதையாகச் சொல்லப் போகிறேன். இன்று இக்கதையைப் புரிந்துகொள்ள நீங்கள் சற்று சிரமப்படலாம். ஆனால் நீங்கள் வளரும்தோறும் இக்கதை உங்களுக்குள் வளரும்.

பல வருடங்களுக்கு முன்பு தாந்தே என்பவன் இருந்தான். அவன் தவறுகள் பல செய்தவன். அவன் தன் வீட்டை விட்டு வெளியேறி வெகுதூரத்தில் அலைந்து திரிந்தான். பின் ஒருநாள் பெரிய அடர்காட்டிற்குள் சென்றான். அவன் ஏன் அந்த காட்டிற்குள் சென்றான் என்பதைச் சொல்லவில்லை.

அந்த காட்டினுள் வந்தவன் தூங்கிவிட்டான். தூங்கி விழித்தவன் அக்காட்டிலிருந்து வெளியே செல்ல நினைத்தான். வெளியே செல்வதற்கு அக்காட்டிலிருந்த ஒவ்வொரு பாதையினுள்ளும் சென்று பார்த்தான். எந்த பாதையும் அவன் வெளியே செல்லும் வழியைக் காட்டவில்லை.

காட்டின் மரங்கள் பெரிதாக அடர்ந்து வளர்ந்திருந்தன. அதனால் தாந்தேக்கு வழி கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்தது. ஆனால் காட்டின் ஓர் எல்லையில் மரங்கள் உயரமாகவும், தடிமனாகவும் வளராமல் இருந்தன. ஆகவே அந்த பாதை திறந்த வெளியாக இருந்தது. அதன் வழியாகத் தூரத்திலிருந்த மலை அவன் கண்ணுக்குத் தெரிந்தது. அந்த மலைக்குப் பின்னால் சூரியன் பிரகாசமாக ஒளிர்ந்தது.

“அந்த மலைமீது ஏறினால் வெகுதூரம் வரை பார்க்க முடியும். காட்டிலிருந்து வெளியே செல்வதற்கான வழியைக் கண்டுபிடித்துவிட முடியும்” என தாந்தே நினைத்தான். ஆகவே தைரியமாக மலையை நோக்கி நடந்தான்.

ஆனால் அவன் சிறிது தூரம் சென்றதும் வழியில் சிறுத்தை நின்றது. அது தன்னுடைய கூர்மையான கண்களால் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தது. நடுக்கம் கொண்ட தாந்தே அந்த வழியாக மேலும் செல்லாமல் நின்றான். அவ்வழியாகச் செல்வது ஆபத்து என்பது அவனுக்குப் புரிந்தது. எனவே பதற்றத்துடன் அவசரமாகத் திரும்பி வேறு வழியாகச் செல்லத் துவங்கினான்.

இரண்டாம் பாதையிலும் அவன் சிறிது தூரம் தான் சென்றான். எதிரில் பெரிய சிங்கம் ஒன்று அவனை நோக்கி வந்தபடி இருந்தது. அதனைப் பார்த்தவன் மேலும் பதற்றம் கொண்டான். ஆகவே அவ்வழியையும் தவிர்த்து வேறு பாதையை எடுத்தான். பதற்றத்தில் அவன் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.

இம்முறை தனக்கு முன்னால் வருவதைப் பார்க்காமல் வேகமாக நடந்தான். திடீரென ஒரு ஓநாயின் உறுமல் கேட்டது. கண்களைத் திறந்த போது அவன் எதிரில் அந்த ஓநாய் நின்றது. அது பசிமிகுந்து, மெலிந்து காணப்பட்டது. அது தன் பசிக்கு ஆறேழு மனிதர்களைத் தின்பேன் என்பது போல் அவனைப் பார்த்தது. அதனை அருகில் கண்ட தாந்தே விரைந்து ஓடினான். அவன் ஓடிச் சென்ற காட்டுப்பகுதி சூரிய ஒளி படாத இருண்ட பாதையாக இருந்தது.

தாந்தே தனது நம்பிக்கைகள் அனைத்தையும் இழந்துவிட்டான். “இந்த பயங்கரமான காட்டிலிருந்து வெளியே செல்ல நான் ஏன் முயல வேண்டும்? சுற்றி எல்லா இடங்களிலும் கொடிய மிருகங்கள் உள்ளன. ஒரு மிருகத்திடமிருந்து தப்பித்தாலும் இன்னொரு மிருகத்திடம் சிக்கிக்கொள்கிறேன். நிச்சயமாக எதாவது ஒரு மிருகம் என்னைக் கொன்று உணவாக்கி விடும். ஆகவே தப்பிக்கும் முயற்சியைக் கைவிட்டுவிடலாம்” என வருந்தினான்.

அச்சமயத்தில் தன்னை நோக்கி ஒருவர் வருவதை தாந்தே கவனித்தான். அந்த மனிதனின் முகம் புன்னகையில் ஒளிர்ந்தது. அது தனக்காக ஒரு நற்செய்தியைக் கொண்டு வருவது போல இருந்தது.

தாந்தே அவரை நோக்கி ஓடினான். “என் மீது கருணை காட்டுங்கள். நீங்கள் யாரென்று எனக்குத் தெரியாது. எனினும் கருணை காட்டுங்கள். மிருகங்கள் என்னைத் துரத்தி வருகின்றன. அவற்றிடம் இருந்து நான் தப்பி ஓடிவந்திருக்கிறேன். இன்னும் என் உடல் பதற்றத்தில் நடுங்கிக்கொண்டு இருப்பதைப் பாருங்கள்.” என தாந்தே அழுதுகொண்டே அப்புதிய மனிதரிடம் கூறினான்.

விர்ஜிலின் வருகை

 புதிய மனிதரின் பெயர் விர்ஜில். அவர் தாந்தேயை தழுவிக்கொண்டார். “நான் உனக்கு உதவி செய்யவே வந்தேன்” எனக் கருணையுடன் கூறினார். ”இங்கிருந்து நான் உன்னை வெளியே அழைத்துச் செல்கிறேன். வெளியே செல்வதற்கு வேறு ஒரு பாதை உள்ளது. நாம் அதில் செல்லாம்” என்றார்.

“அந்த பாதை நிலத்திற்கு அடியில் செல்கிறது. ஆழமான ஒரு பாதாளம் வழியாகச் செல்கிறது. அது மிகவும் இருட்டானது. அங்கு மிகக்கொடிய துர்நாற்றம் வீசும். அந்த பாதையில் நமக்குப் பிடிக்காத பல விஷயங்கள் உள்ளன. அவற்றை நாம் சந்திக்க நேரும். அழுக்குகள் மற்றும் அருவருப்பான கழிவுகள் வழியாக ஊர்ந்து செல்ல வேண்டியிருக்கும். இவற்றை எல்லாம் கடந்து சென்றுவிட்டால் நாம் மீண்டும் ஒளிமிகுந்த ஒரு மலையைக் காணலாம். அந்த மலைமீது ஏறி அதன் உச்சியை அடையலாம். அங்கிருந்து நீ விண்ணுலகம் செல்லலாம். விண்ணுலகம் மிகவும் அழகானது. மகிழ்ச்சி நிரம்பியது. அங்கிருந்து நீ உன் வீட்டிற்குச் செல்ல விரும்பினால் செல்லலாம்” என விர்ஜில் கூறினார்.

இதைக் கேட்ட தாந்தே முதலில் தயங்கினான். அவன் பல மகத்தான நூல்களை வாசித்துள்ளான். எனினும் விர்ஜிலுடன் செல்வதற்குத் தயங்கினான். அப்போது விர்ஜில் தான் இங்கு வந்ததற்கான காரணத்தை தாந்தேயிடம் கூறினார்.

”விண்ணுலகில் பிட்ரைஸ் என்ற தேவதை இருக்கிறாள். நீ காட்டில் தவித்துக் கொண்டிருப்பதை அவள் பார்த்தாள். இங்கிருந்து உன்னைக் காப்பாற்ற வேண்டுமென நினைத்தாள். அதற்கு என்னுடைய உதவியை வேண்டினாள். ஆகவே உன்னை வழிகாட்டி அழைத்துச் செல்ல நான் வந்திருக்கிறேன்” என்றார்.

 

விர்ஜில் மற்றும் தாந்தே

இதைக் கேட்ட தாந்தேயின் இதயத்தில் மகிழ்ச்சி நிரம்பியது. ஏனென்றால் பிட்ரைஸ் தாந்தேயின் காதலி. அவளை விரும்பியதைப் போல வேறு யாரையும் தாந்தே விரும்பியதில்லை.

தாந்தே தைரியம் அடைந்தான். விர்ஜிலிடம் தான் வருவதாகக் கூறினான். விர்ஜிலை ஒரு வழிகாட்டி போல நம்புவதாக உறுதியளித்தான்.

இருவரும் தங்களுடைய ஆபத்தான பயணத்தைத் துவங்கினர். அவர்கள் இருண்ட ஆழமான பாதாளத்திற்குள் நுழைந்தனர். அது ஒரு பிரம்மாண்டமான புனல் வடிவிலிருந்தது. அல்லது ஒரு பிரம்மாண்டமான கூம்பை தலைகீழாகக் கவிழ்த்து வைத்தது போல இருந்தது. அது பூமியின் மேற்பரப்பிலிருந்து அதன் மையப்பகுதி வரைக்கும் சென்றது.

அவர்கள் அதற்குள் நுழைந்தனர். அப்போது வானம் அந்திக் கருக்கல் போல மெல்லிய ஒளி வீசியது. அந்த இடம் மிக விரிந்தும் காற்றோட்டமாகவும் இருந்தது.

அவர்கள் செல்லும் பாதையில் மாபெரும் பாறைகள் இருந்தன. பாதை அவற்றின் வழியாகச் சரிந்து கீழே சென்றது. செல்லச்செல்ல அந்த இடம் இருண்டுகொண்டே வந்தது. பாதை குறுக்கிக்கொண்டே சென்றது. அங்கு வீசிய காற்று அவர்களைத் திணறடித்தது. நம்மால் கற்பனை செய்யக்கூட முடியாத அளவிற்கு மிகக்கொடூரமான துர்நாற்றம் வீசியது. செல்லும்போது சில நேரங்களில் தாந்தே மயக்கம் அடைந்து விழப்போனான். ஆனால் உடனே விர்ஜில் அவனைத் தாங்கிக்கொண்டார்.

அந்த பாதாளத்தில் தாந்தேயும் விர்ஜிலும் பயங்கரமான அனுபவங்களைச் சந்தித்தனர். குழந்தைகளே! அவற்றை நான் இப்போது உங்களுக்குச் சொல்லப்போவதில்லை. நீங்கள் வளர்ந்த பிறகு இந்த நூலைப் படிப்பீர்கள். அப்போது அவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள்.

 

பாதாள உலகத்தின் நுழைவுவாயில்

தங்கள் பயணத்தின் இறுதியில் அவர்கள் பாதாளத்தின் கீழ்ப்பகுதியை அடைந்தனர். அது பூமியின் மையப்பகுதி. உலகிலேயே மிகவும் இருண்ட இடம். அங்கிருந்து மேலே செல்வதற்குச் சிறிய திறப்பு ஒன்று இருந்தது. அது ஒரு குறுகலான சுரங்கப்பாதை.

அதன் வழியாக மேலேறிச் சென்றால் பூமியின் மறுபக்கத்தை அடையலாம். தாந்தேயும் விர்ஜிலும் பூமியின் மேற்பரப்பிற்குச் செல்லவேண்டும் என ஏங்கினர். மீண்டும் சூரிய ஒளியைக் காணவேண்டும் எனத் துடித்தனர். அவர்கள் அந்த சுரங்கப்பாதை வழியாக மேலேறத் துவங்கினர்.

கொள்ளை நோய் தாக்கிய சிறையிலிருந்து தப்பி வருவது போல தாந்தே உணர்ந்தான். அவர்கள் பூமியின் மேற்பரப்பை அடைந்தனர். அப்போது வானில் நான்கு நட்சத்திரங்கள் ஒளிர்ந்துகொண்டிருந்தன. அவர்கள் மேலே வந்தவுடன் இந்த நட்சத்திரங்களைத்தான் முதலில் பார்த்தனர். தூய காற்றை சுவாசித்தனர். இனிமையான ஒளிக்கதிரை உணர்ந்தனர். எங்கு நட்சத்திரங்களைக் காண முடிகிறதோ அங்குதான் தூய காற்றையும் ஒளியும் பெற முடியும் என தாந்தே உணர்ந்தான்.

 

(2)

அது ஈஸ்டர் தினத்தின் காலைப்பொழுது!

தாந்தேயும் விர்ஜிலும் ஒரு தீவில் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் வந்த சுரங்கப்பாதை அவர்களை இங்கு கொண்டுவந்து சேர்த்தது. இந்த தீவின் நடுவில் மிகப்பெரிய ஒரு மலை இருந்தது. தாந்தே காட்டில் இருக்கும்போது பார்த்த ஒளிமிகுந்த மலை இதுதான். மலை உச்சியில் விண்ணுலகம் உள்ளது என்றார் விர்ஜில்.

மனித ஆன்மாக்கள் இந்த மலைவழியாக ஏறி விண்ணுலகம் செல்கின்றன. அதற்கு முன்பு அவை தற்காலிகமாக இந்த தீவிலும் மலையிலும் தங்குகின்றன. தங்கியிருந்து தாங்கள் செய்த பாவங்களைக் கழுவிக் கொள்கின்றன. தங்களைத் தூய்மை செய்துகொள்கின்றன.

விர்ஜில் தாந்தேயும் இந்த மலைமீது ஏறவேண்டும். ஆனால் எந்த வழியாக ஏறுவது என்று இருவருக்கும் தெரியவில்லை. ஆதலால் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துத் திகைத்து நின்றுகொண்டிருந்தனர்.

அப்போது நீண்ட வெள்ளை தாடியுடன் ஒரு முதியவர் வந்தார். அவர் பெயர் கேட்டோ. அவரின் முகம் பிரகாசமாக ஒளிர்ந்தது. அது தாந்தேக்கு சற்று முன்பு பார்த்த நான்கு நட்சத்திரங்களை நினைவுபடுத்தியது. கேட்டோ அந்த மலை மீது ஏற எந்த வழியாகச் செல்லவேண்டும் என்று கூறினார்.

தாந்தேயின் முகத்தில் அழுக்கும் சாம்பலும் படிந்திருந்தன. ஏனென்றால் அவன் கொடூரமான பாதாளம் வழியாக வந்திருக்கிறான். அவற்றைத் தூய்மை செய்யாமல் தாந்தே மலைமீது ஏற முடியாது. விர்ஜில் அதற்கு உதவவேண்டும் எனக் கேட்டோ கூறினார். விர்ஜில் தாந்தேயின் முகத்திலுள்ள அழுக்கையும் சாம்பலையும் கழுவி தூய்மை செய்யவேண்டும் என்றார்.

தாந்தே மிக நீளமான அங்கியை அணிந்திருந்தான். இப்படியே அவன் மலையேறுவது சிரமமாக இருக்கும். அதை இறுக்கிக் கட்டிக்கொண்டால் சிரமமின்றி ஏறலாம் என்றும் கேட்டோ அறிவுறுத்தினார். எளிதாக வளையக்கூடிய நாணல்களைக்கொண்டு அங்கியைக் கட்டிக்கொள்ளுங்கள் என்றார். அந்த நாணல்கள் வளரும் இடத்தையும் கேட்டோ அவர்களுக்குக் காண்பித்தார்.

இவ்வாறு கேட்டோ மிகவும் கருணையுடன் நடந்துகொண்டார். இந்த தீவிற்கு பல அன்னிய மனிதர்கள் வருகின்றனர். அவர்கள் அனைவரிடமும் கேட்டோ இப்படித்தான் கருணையுடன் நடந்துகொள்வார் என தாந்தே நினைத்தான். அதனால் தான் கேட்டோவை பார்த்தவுடன் தாந்தேக்கு நான்கு நட்சத்திரங்கள் நினைவுக்கு வந்தன.

தாந்தே தன்னுடைய இறந்த காலத்தை ஞாபகப்படுத்திப் பார்த்தான். எவ்வாறு தன் வீட்டை விட்டு வெளியேறி சுற்றித் திரிந்தேன்; எவ்வாறு திடீரென ஒரு காட்டில் விழித்து எழுந்தேன்; எவ்வாறு மூன்று கொடிய மிருகங்களிடம் மாட்டிக்கொண்டேன் என நினைத்தான்.

பாதாளம் வழியாக வரும் போது தன் மீது எவ்வாறு அழுக்கும் சாம்பலும் படிந்தன; எவ்வாறு பல கொடிய இடர்களிலிருந்து காக்கப்பட்டேன் என்றும் நினைத்தான். இவற்றையெல்லாம் நினைத்த போது தாந்தேயின் கண்களில் கண்ணீர் வடிந்தது.

விர்ஜில் தரையிலிருந்த புல்பரப்பின் மீது அமர்ந்தார். புற்கள் விண்ணிலிருந்து விழுந்த பனித்துளிகளால் ஈரமாக இருந்தன. விர்ஜில் புற்களின் மீது தன் கைகளைப் பரப்பி ஈரமாக்கிக் கொண்டார். பனித்துளிகளின் ஈரத்தைக்கொண்டு தாந்தேயின் முகத்தைக் கழுவினார். தாந்தேயின் கண்களிலிருந்து வடிந்த கண்ணீரும் அவன் முகத்தைத் தூய்மை செய்தது.

 

விர்ஜில் தாந்தேயை தூய்மை செய்கிறார்

 

பிறகு இருவரும் நாணல்கள் வளரும் இடத்திற்குச் சென்றனர். அந்த இடம் கடற்கரைக்கு அருகிலிருந்தது. விர்ஜில் நாணல்களை ஒவ்வொன்றாகப் பிடுங்கினார். பிடுங்கப்பட்ட இடங்களில் உடனே புதிய நாணல் தளிர்கள் முளைத்து வளர்ந்தன.

விர்ஜில் சேகரித்த நாணல்களை வைத்து ஒரு கச்சை செய்தார். அதை தாந்தேயின் இடுப்பில் கட்டி உடையை இறுக்கினார். இப்போது தாந்தே மலையேறுவதற்குத் தயாராகிவிட்டான்.

சூரியன் மெல்ல மேலெழுந்து வந்தான். புறப்படுவதற்கு முன்பு அவர்களிருவரும் கடலைப் பார்த்தனர். அப்போது கடலின் மேல் வெண்ணிற ஒளி ஒன்று அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தது. அந்த ஒளி அருகில் வரவர தாந்தேக்கு வியப்பு கூடியது.

அது பிரகாசமான சிறகுகள் கொண்ட ஒரு அழகிய தேவன். தேவனின் முகம் கதிரவனைப் போல ஒளிவீசியது. அவ்வளவு ஒளியைக் காணமுடியாமல் தாந்தேயின் கண்கள் கூசின. ஆகவே தரையில் மண்டியிட்டு அமர்ந்து பார்வையை நிலத்தின் மீது வைத்தான்.

தேவன் ஒரு சிறிய படகில் வந்துகொண்டிருந்தார். படகு முழுவதும் மனித ஆன்மாக்கள் இருந்தன. தேவனின் ஒளியால் நீர்ப்பரப்பு முழுவதும் மின்னியது. ஆகவே அப்படகு ஒளியில் மிதந்து வருவது போலத் தோன்றியது.

தேவன் துடுப்பை உபயோகித்து படகை இயக்கவில்லை. அவரின் இரு சிறகுகளும் பிரம்மாண்டமாக விரிந்திருந்தன. ஆகவே கண்களுக்குத் தெரியாத ஒரு சக்தி படகைத் தள்ளிக்கொண்டு வருவது போலத் தோன்றியது. படகு கரையை அடைந்தது. அதிலிருந்த மனித ஆன்மாக்களை தேவன் இறக்கிவிட்டார். அவர்களும் மலை மீது ஏறி விண்ணுலகம் செல்ல வந்தவர்களே. அனைவரும் இறங்கிய பின் தேவன் படகுடன் திரும்பிச் சென்றார்.

 

தேவன் திரும்பிச் செல்கிறார்

 

(3)

மலை செங்குத்தாக மிக உயரமாக இருந்தது அதன்மீது செல்லும் பாதை கடினமானது. அப்பாதை மலையைச் சுற்றிச்சுற்றி சுழல் போலச் சென்றது. அது எங்கு சென்று முடிகிறது என்பதை யாராலும் காண முடியவில்லை.

விர்ஜிலும் தாந்தேயும் மலைமீது ஏறத்துவங்கினர். மேலே செல்லச்செல்ல சூரிய ஒளி குறைந்து மாலைப்பொழுது வந்தது. ஆகவே வெகுசீக்கிரத்தில் இருட்டிவிடும் என்பதை அவர்கள் உணர்ந்தனர். இது புதிய இடம். சற்று வினோதமாகவும் இருந்தது. செல்லும் வழியில் பல ஆபத்துகள் உள்ளன. எனவே இந்த வழியாக யாரும் இரவில் பயணிக்கமாட்டார்கள். பயணம் செய்வது பாதுகாப்பற்றது.

 

விர்ஜிலும் தாந்தேயும் மலையேறுகிறார்கள்

 

இரவில் ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்குவதே நல்லது என விர்ஜில் உணர்ந்தார். அவர்கள் வழியில் ஒரு மனிதனை சந்தித்தனர். அவர் அருகில் பாதுகாப்பான ஒரு சிறிய படுகை இருப்பதாகக் கூறினார். விடியும் வரை அவர்கள் அங்கு தங்கலாம் என்றார்.

படுகையின் பெயர் இளவரசர்களின் படுகை. தாந்தேயும் விர்ஜிலும் அங்கு சென்றனர். அங்கு நுழைந்தவுடன் அதன் அழகால் உடல் சிலிர்த்தனர். உலகிலுள்ள அத்தனை சிறந்த வண்ணங்களையும் ஒரே பூந்தோட்டத்தில் கொட்டிவைத்தால் எப்படி இருக்கும், அப்படி இருந்தது அந்த படுகை. தங்க நிறம், வெள்ளி நிறம், அடர்சிவப்பு, பச்சை, நீலம் என அனைத்து நிறங்களிலும் பூக்கள் அங்கு நிரம்பியிருந்தன. அந்த சமவெளியின் பாதி அழகைக் கூட நாம் வேறு எங்கும் காணமுடியாது.

இனிய வாசனைகள் அங்கு வீசிக்கொண்டிருந்தன. அவற்றை நாம் வேறு எங்கும் சுவாசிக்க முடியாது. அவர்கள் மெதுவாக அமைதியாக அந்தச் சமவெளிக்குள் நுழைந்து ஓய்வெடுத்தனர். மலைக்குப் பின்னால் சூரியன் மறைந்து கொண்டிருந்தது. அவர்களைச் சூழ்ந்து இருள் கவிழ துவங்கியது.

ஒரு இனிமையான பாடலை சில குரல்கள் பாடுவதை தாந்தே கேட்டான். அது விண்ணுலகில் இருக்கும் பிதாவை அவனுக்கு நினைவூட்டியது. தாந்தே வானத்தைப் பார்த்தான். அங்கு நட்சத்திரங்கள் ஒளிவீசி மின்னிக்கொண்டிருந்தன.

அப்போது விண்ணிலிருந்து இரு தேவதைகள் இறங்கி வந்தனர். சற்று மங்கிய மினுமினுப்பான பச்சைநிற அங்கியை அவர்கள் அணிந்திருந்தனர். பிரகாசமான ஒளி அவர்கள் இருவரையும் சூழ்ந்திருந்தது. கையில் நெருப்பு வாளை இருவரும் வைத்திருந்தனர்.

இரு தேவதைகளும் விண்ணிலிருந்து மிக வேகமாக இறங்கி வந்தனர். அவர்கள் வேகத்திற்கு மின்னல் கூட ஈடுகொடுக்க முடியாது என தாந்தே நினைத்தான். ஒரு தேவதை இந்தப் படுகைக்கு மேல் வந்து நின்றது. மற்றொரு தேவதை மலையின் மறுபக்கத்திற்குச் சென்றது.

இரவில் மலையில் தங்கும் பயணிகளை பாதுகாக்க இவர்கள் வந்துள்ளனர். மறுநாள் விடிந்து பயணிகள் புறப்படும் வரை இவர்கள் பயணிகளுக்குக் காவலாக இருப்பார்கள்.

 

இளவரசர்களின் சமவெளி

 

தாந்தே சற்று திரும்பி அமர்ந்தான். அப்போது ஒரு நாகம் அமைதியாக புல்வெளியில் ஊர்ந்து வருவதைப் பார்த்தான். உடனே மேலே இருந்த தேவதை மின்னல் போல கீழே வந்தது. தனது நெருப்பு வாளால் அந்நாகத்தைத் தொட்டது. தொட்டவுடன் நாகம் அதிர்ந்து விரைந்து திரும்பிச் சென்றுவிட்டது.

தேவதைகள் தங்களை நிச்சயமாகப் பாதுகாக்கும் என்பதை தாந்தே கண்டுகொண்டான். ஆகவே அவன் பாதுகாப்பாக மகிழ்ச்சியாக உணர்ந்தான். தேவதைகள் விண்ணுலகிலிருந்து வந்த கருணையின் வடிவங்கள் என நினைத்துக்கொண்டான்.

தாந்தே புல்வெளிமீது படுத்து சீக்கிரம் தூங்கிவிட்டான். தூக்கத்தில் அவன் ஒரு கனவு கண்டான். கனவில் ஒரு நெருப்பு கழுகு அவனைத் தூக்கிக்கொண்டு பறந்து சென்றது.

மறுநாள் காலையில் தாந்தே எழுந்தான். சூரியன் ஒளிர்ந்தது. பறவைகள் பாடிக்கொண்டிருந்தன. அவனைச் சுற்றி மலர்கள் மலர்ந்திருந்தன. ஆனால் இது நேற்று அவன் தங்கிய படுகை அல்ல. வேறு இடம் என்பதைச் சற்றுநேரத்தில் உணர்ந்துகொண்டான்.

தாந்தே எழுந்து நின்று சுற்றிலும் பார்த்தான். அவன் மலையின் மறுபக்கத்தில் இருப்பதை உணர்ந்தான். விர்ஜிலும் உடன் இருந்தார். தான் எப்படி இங்கு வந்தேன் என விர்ஜிலிடம் விசாரித்தான்.

விர்ஜில் “நேற்று இரவு நீ தூங்கும் போது லூசியா என்ற தேவதை வந்தாள். இளவரசர்களின் படுகையிலிருந்து நாம் செல்லவேண்டிய பாதை மிகக்கடினமானது. உதவியில்லாமல் அந்த வழியாகச் செல்லவே முடியாது. ஆகவே விண்ணுலகில் உள்ள இறைவன் உனக்கு உதவி செய்வதற்காக லூசியாவை அனுப்பிவைத்தார். லூசியா உன்னை அவளது கரங்களில் எடுத்துக்கொண்டு பறந்து இங்கு வந்தாள்” என்று பதிலளித்தார்.

 

தேவதை லூசியா தாந்தேயை தூக்கிக்கொண்டு பறந்து செல்கிறாள்

 

(4)

 

தாந்தே தன் முன் ஒரு பெரிய நுழைவாயில் இருப்பதைக் கண்டான். இதுதான் மலைமீது ஏறுவதற்கான உண்மையான வாயில்.

”இந்த வாயிலில் நுழைந்துதான் நாம் செல்லப்போகிறோம். இனி மலை ஏறுவதற்கு மிகச்சிரமமாக இருக்கும். ஏறும்போது சிலசமயங்களில் நீ சோர்ந்து போகலாம். நம்பிக்கை இழக்கலாம். ஆனால் ஏறஏற சிரமம் குறைந்துகொண்டே வரும். ஆகவே உறுதியாக இரு. நீ இதன் உச்சியை அடைந்துவிட்டால் அங்கு உன்னுடைய அன்புக் காதலி பிட்ரைஸை சந்திக்கலாம். அவள் உன்னை இறைவனிடம் அழைத்துச் செல்வாள்” என்று விர்ஜில் தாந்தேயிடம் கூறினார்.

அவர்கள் இருவரும் நுழைவாயிலை நோக்கிச் சென்றனர். அது தனித்துவமான ஒரு வாயில். வாயிலின் முன்பு மூன்று பெரிய படிக்கட்டுகள் இருந்தன. மூன்றும் வெவ்வேறு நிறங்களிலிருந்தன.

நுழைவாயில்

 

முதலாவது படிக்கட்டு பளபளப்பான வெண்ணிற பளிங்குக்கல்லால் ஆனது. ஆகவே அது கண்ணாடி போலப் பிரதிபலித்தது. தாந்தே படி மீது தன் காலை வைத்தான். தன்னுடைய நிஜமான முகம் அதில் பிரதிபலிப்பதைக் கண்டான். அந்த படிக்கட்டு தாந்தே செய்த பாவங்களை அவனுக்குக் காட்டியது. இதன் மூலமாகத் தாந்தே தான் உண்மையில் யார் என்பதை அறிந்துகொண்டான்.

இரண்டாவது படி குறுக்கும் நெடுக்குமாக விரிசலிட்டுக் காணப்பட்டது. கீறல் கீறலாக இருந்தது. அது கருப்பு நிற பளிங்கால் ஆனது. முதல் படியில் தாந்தே தான் யார் என்பதை உணர்ந்துகொண்டான். இரண்டாவது படி எதையும் பிரதிபலிக்காது. ஆகவே இந்த படியில் ஏறியபோது அவனால் தன்னைக் காணமுடியவில்லை. இதன் மூலமாக தாந்தே தான் என்ற அகந்தையை அழித்தான். செய்த பாவங்களுக்காக மன்னிப்பு செலுத்தினான்.

மூன்றாவது படி சிவப்பு நிற பளிங்கால் ஆனது. இது தாந்தேக்கு இரத்தத்தை நினைவுபடுத்தியது. இறைவனின் ரத்தம். இனிமேல் பாவம் செய்யாமல் இருப்பதற்கான உறுதியை மூன்றாவது படி அவனுக்கு அளித்தது.

மூன்று படிகளையும் கடந்து தாந்தே நுழைவாயிலுக்கு வந்தான். அங்கு ஒரு அழகிய தேவன் சிறகுகளுடன் காணப்பட்டார். மூன்றாவது படிமீது தன் கால்களை வைத்து அமர்ந்திருந்தார். அவர் அந்த வாயிலின் காவலர். அவருடைய ஆடைகள் சூரியனைவிட பிரகாசமாக ஒளிர்ந்துகொண்டிருந்தன.

தாந்தேயும் விர்ஜிலும் அவர் அருகில் சென்றனர். தேவன் அவர்களிடம் என்ன வேண்டும் என விசாரித்தார். “நாங்கள் இந்த மலைமீது ஏற விரும்புகிறோம். அதற்கு இந்த வாயிலைக் கடந்து செல்லவேண்டும்.” என அவர்கள் பதிலளித்தனர்.

இதைக்கேட்ட தேவன் அவர்களை நோக்கி எழுந்தார். அவர் கையில் ஒரு வாளை வைத்திருந்தார். வாளின் நுனியை தாந்தேயின் நெற்றியில் வைத்து ஏழு எழுத்துகளை எழுதினார். அந்த ஏழு எழுத்துகளும் என்ன என்பதை தாந்தே அறிந்திருந்தான். அவை அவனுடைய மனதிலிருக்கும் ஏழு தீமைகள்.

 

வாயிலின் காவல் தேவன் தாந்தேயின் நெற்றியில் ஏழு எழுத்துகளைப் பொறிக்கிறார்.

 

பிறகு தேவன் இரு சாவிகளை வெளியே எடுத்தார். ஒன்று தங்க நிறமானது. மற்றொன்று வெள்ளி நிறமானது. அவற்றைக்கொண்டு வாயிலைத் திறந்தார். இருவரும் உள்ளே நுழைந்தனர்.

 

(5)

நுழைந்தவுடன் இறைவனின் துதிபாடல் ஒலித்துக்கொண்டிருப்பதை அவர்கள் கேட்டனர். செல்லும் வழியில் ஒருபக்கம் மலைச்சரிவு. மறுபக்கம் சுவர் போன்ற செங்குத்தான பாறைகள் இருந்தன.

பாறைகள் முழுவதும் பல மனிதர்களுடைய உருவங்கள் அழகாகச் செதுக்கப்பட்டிருந்தன. அவை கருணைமிக்க மனிதர்களின் சித்திரங்கள். அன்பே உருவானவர்கள். எப்போதும் பிறருடைய நலனில் அக்கறை வைத்திருக்கும் மனிதர்கள்.

 

தாந்தே பாறையில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்களைப் பார்க்கிறான்

 

தாந்தே அந்த சிற்பங்களைப் பார்த்துக்கொண்டே சென்றான். அவன் பார்த்ததிலேயே அழகிய உருவங்களாக அவை இருந்தன. “எவ்வளவு அழகு! எவ்வளவு அழகு! நான் எப்படி இவர்களைப் போல ஆவது” என நினைத்துக்கொண்டே சென்றான்.

தாந்தே சற்றுநேரம் கழித்து கீழே குனிந்து பார்த்தான். அவன் நடந்து சென்றுகொண்டிருந்த பாதையிலும் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தன. அவை தங்களைப் பற்றி மட்டுமே சிந்தித்த மனிதர்களின் உருவங்கள். சுயநலமானவர்கள். தற்பெருமைக் கொண்டவர்கள். ”நான் வேறு யாரைப் போல வேண்டுமானாலும் இருக்க விரும்புவேன். ஆனால் நிச்சயம் இவர்களைப் போல இருக்க விரும்பமாட்டேன்” என நினைத்துக்கொண்டான்.

சில நாட்களுக்கு முன்பு தாந்தே தற்பெருமை கொண்டவனாக இருந்தான். சுயநலவாதியாக ஆணவம் கொண்டவனாக இருந்தான். ஆனால் இப்போது அவை எவ்வளவு அருவருப்பானவை என அறிந்துகொண்டான். ”என்னை பாறை சிற்பங்களில் உள்ள அழகிய மனிதர்களைப் போல மாற்று” என இறைவனிடம் வேண்டிக்கொண்டே சென்றான்.

சற்றுநேரம் கழித்து மீண்டும் நிமிர்ந்து நடக்கத் துவங்கினான். அப்போது தன் தோள்களிலிருந்து ஒரு பெரிய சுமை தூக்கி எறியப்பட்டதைப் போல உணர்ந்தான். அவன் விர்ஜிலிடம் திரும்பி என்ன ஆனது என விசாரித்தான். “எந்த எடையை நான் இதுவரை சுமந்து வந்தேன். எதைத் தூக்கியெறிந்தேன்?” என வினவினான்.

விர்ஜில் தாந்தேயின் நெற்றியை நோக்கினார். தாந்தேயும் தனது விரல்களால் நெற்றியைத் தடவினான். ஏழு எழுத்துக்களில் ஒரு எழுத்து அழிந்திருந்தது. ஆறுதான் இருந்தன. விர்ஜில் தாந்தேயை பார்த்துப் புன்னகைத்தார்.

தாந்தேயும் விர்ஜிலும் மலையின் உயரமான பகுதிக்கு வந்துவிட்டனர். அங்கு எந்த சிற்பங்களும் இல்லை. ஆனால் இனிமையான ஓசை இன்னமும் காற்றில் ஒலித்துவந்தது. இனிய குரலில் சிலர் பாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் பிற மனிதர்களுடைய சந்தோசத்திற்காகப் பாடுபவர்கள். பிறருடைய நற்குணங்களைப் பாராட்டுபவர்கள். பொறாமை இல்லாதவர்கள். பிறர் பாராட்டப்படும் போது அவர்களுக்காக மகிழ்பவர்கள்

அவர்களுடைய குரல் கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. அது அவர்களின் இதயத்திலிருந்த அன்பை வெளிக்காட்டியது. தாந்தே விழி மூடி அதைக் கேட்டுக்கொண்டிருந்தான்.

ஆனால் சீக்கிரத்திலேயே அவனுக்குள் வேறு குரல்கள் கேட்கத் துவங்கின. அது பொறாமை கொண்ட மனிதர்களின் குரல். பிற மனிதர்கள் பாராட்டப்பட்டால் கோபம் கொள்பவர்கள். மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் வெறுப்பவர்கள்.

தாந்தே இந்த குரல்களை தனக்குள் கேட்டு மிகவும் பயந்துவிட்டான். மகிழ்ச்சியற்ற இவர்களைப் போல தானும் இருந்துவிடுவேனோ என நினைத்து அஞ்சினான். இவற்றிலிருந்து நான் எப்போது விடுதலை அடையப்போகிறேன் என்று நினைத்தான்.

மீண்டும் இறைவனிடம் வேண்டினான். “பிறருடைய மகிழ்ச்சியில் தானும் மகிழ்பவனாக இருக்க வேண்டும். பிற மனிதர்களுக்கு உதவிசெய்ய வேண்டும். மற்றவர்கள் தனக்குச் செய்யும் உதவியை உணர்ந்துகொள்ள வேண்டும்” என பிரார்த்தனை செய்தான்.

உடனே தன்னிடமிருந்த மற்றொரு சுமை நீங்கியதை உணர்ந்தான். தனது நெற்றியை வருடிப்பார்த்தான். ஐந்து எழுத்துகளே இருந்தன. இரண்டாவது எழுத்தும் மறைந்துவிட்டிருந்தது. இப்போது தாந்தேக்கு மலையேறுவது முன்பைவிட எளிதாக மாறியது.

 

(6)

பாதையின் இடர்மிகுந்த பகுதிக்கு அவர்கள் வந்துவிட்டனர். அங்கிருந்து பாதை மிகவும் கரடுமுரடாகச் சென்றது. பாறைகள் நிரம்பியதாக இருந்தது. ஒரு இடத்தில் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. ஆனால் இவற்றையெல்லாம் கடந்து தாந்தே சென்றுகொண்டிருந்தான்.

 

தாந்தே நெருப்பிற்குள் நுழைந்து செல்கிறான்

 

வழியில் பல இடங்களில் தாந்தே நம்பிக்கை இழந்தான். தளர்வடைந்தான். அப்போது சிலசமயம் காற்றில் வந்த பாடல்கள் அவனை ஊக்கப்படுத்தின. சிலசமயம் எச்சரிக்கைகள் வந்தன. செல்லும் வழியில் மரங்கள் இருந்தன. அவற்றிலிருந்த பழங்களை உணவுக்காகப் பறித்துக்கொண்டான்.

மேலே செல்லச்செல்ல நிலப்பரப்பு விரிந்துகொண்டே சென்றது. அங்கு சூரியன் வினோதமாக நன்கு ஒளிர்ந்தது. தாந்தே அங்கிருந்து கீழே தான் வந்த பாதையை நோக்கினான். வரும்போது அவனை அச்சுறுத்திய பெரிய பாறைகள் இப்போது சிறிய குமிழிகள் போலத் தெரிந்தன. இனி அவற்றை நினைத்து அவன் கவலைகொள்ள வேண்டியதில்லை. தாந்தே புன்னகைத்தான். அவனிடமிருந்த அனைத்து சோர்வுகளும் நீங்கிவிட்டிருந்தன.

மேலே செல்லச்செல்ல தாந்தேயின் நெற்றியிலிருந்த எழுத்துகள் ஒவ்வொன்றாக மறைந்துகொண்டே வந்தன. இப்போது அனைத்து எழுத்துகளும் மறைந்துவிட்டிருந்தன.

எனினும் தாந்தேயின் மனதில் ஒன்று மட்டும் எஞ்சியிருந்தது. தன்னுடைய காதலியான அழகிய பிட்ரைஸை மீண்டும் சந்திக்க வேண்டும் என்ற ஏக்கம்.

 

(7)

இறுதியாக தாந்தேயும் விர்ஜிலும் மலையின் உச்சியிலுள்ள விண்ணுலகை அடைந்தனர். விர்ஜில் சொல்லியது போலவே பிட்ரைஸ் அங்கு இருந்தாள். ஒரு அழகிய தேரில் அவனுக்காகக் காத்துக்கொண்டிருந்தாள்.

பிட்ரைஸ் தேரில் நின்றுகொண்டே தாந்தேயை வரவேற்றாள். இறங்கி தாந்தேயின் அருகில் வந்து அவனின் கரங்களைப் பற்றிக்கொண்டாள். அவனுடன் தேரில் ஏறி விண்ணில் பறந்து சென்றாள்.

 

பிட்ரைஸ் தேரில் இருந்துகொண்டு தாந்தேயை வரவேற்கிறாள்

விண்ணில் செல்லும் போது அவர்கள் பல புனிதர்களைக் கண்டனர். அவர்கள் மேகங்களைக் கடந்து சென்றனர். நட்சத்திரங்களையும் கோள்களையும் கடந்து சென்றனர். பல உலகங்களைக் கடந்து சென்றனர்.

இறுதியாக பிட்ரைஸ் தாந்தேயை இறைவனின் காலடிக்கு அழைத்துச்சென்றாள்!

 

தாந்தேயும் பிட்ரைஸும் விண்ணுலகில் பறந்து செல்கின்றனர். அப்போது இரு புனிதர்களைக் காண்கின்றனர்.

குழந்தைகளே நான் இங்கு கதையை முடித்துக்கொள்கிறேன். என்னுடைய சொற்களைக்கொண்டு தாந்தே அடைந்த தரிசனத்தை நான் உங்களுக்குக் காண்பிக்கமுடியாது.

உங்களுடைய சிறிய இதயங்கள் தவறான சிந்தனைகளிலிருந்து விடுதலை பெறவேண்டும். சுயநலத்திலிருந்து விடுதலை பெறவேண்டும். உங்களுடைய இதயத்தில் மற்றவர்கள் மீதான அன்பை நிரப்புங்கள். தாந்தே அடைந்த தரிசனத்தை ஒருநாள் நீங்களும் அடைவீர்கள்.

தாந்தே இறைவனிடம் சரணடைகிறான்

 


சிறு குறிப்பு:
Divine comedy என்ற கிருஷ்துவ காப்பியம் தாந்தே அலிகியேரியால் எழுதப்பட்டது. இது கிருஷ்துவ, கிரேக்க, ரோம தத்துவங்கள் மற்றும் தரிசனங்களை அடிப்படையாக கொண்டது. இதை எலிசபெத் ஹாரிசன் என்ற அமெரிக்க பள்ளி ஆசிரியர் குழந்தைகளுக்கான சிறு கதையாக சுருக்கி எழுதியுள்ளார். அதன் மொழிபெயர்ப்பு இது. இது மூலத்தின் அப்பட்டமான மொழிபெயர்ப்பு அல்ல. நான் சில இடங்களை நீக்கியுள்ளேன். மற்றும் சில பகுதிகளை Divine comedyல் இருந்து எடுத்து சேர்த்துள்ளேன்.
Divine comedy க்கு பலர் ஓவியங்கள் வரைந்துள்ளனர். அதில் மிக சிறந்தது கவிஞர் வில்லியம் ப்ளேக் வரைந்த ஓவியங்கள். அதில் சிலவற்றை இக்கதையுடன் சேர்த்துள்ளேன். இக்கதையை மொழிபெயர்த்ததற்கான நோக்கமே இந்த ஓவியங்களை இணைத்து ஒரு கதையை உருவாக்க முடியுமா என்று பார்ப்பதற்குத்தான்.
மூல நூலை இங்கு தரவிறக்கிக்கொள்ளலாம்: The Vision of Dante: A story for little children and a talk to their mothers – Free Ebook (gutenberg.org)
வில்லியம் பிளெக்கின் ஓவியங்கள்: The William Blake Archive